குனிஞ்சு குனிஞ்சு குட்டீட்டானே…?!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 11, 2024
பார்வையிட்டோர்: 2,898 
 
 

‘குனியக் குனியத்தான் குட்டுவாங்கன்னு’ கேள்விப்பட்டிருக்கோம். துரத்துற நாய் ஓடறவரைக்கும்தான் துரத்திட்டுவரும் திரும்பி நின்னா அது திரும்பி ஓடிடும்னு நம்பிக்கை தர்ற எத்தனையோ வாசகங்களைக் கேள்விப்பட்டிருக்கோம். வாழ்க்கை பயந்தவனைத்தான் பயன்படுத்திக்குது. அவன் மூலம்தான் பாடம் கத்துக் கொடுக்குது. ஆனால், அல்ப சில பேருக்கு, பயந்தா மாதிரியான அல்ப சிலர் மூலமும் மற்றவங்களுக்குப் பாடம் நடத்துவது உண்டு.

‘மீல்ஸுக்கு டோக்கன் வாங்கணுமா?’ கேஷ் கவுண்டரில் கேட்க,

‘ஆமாம். நூற்று முப்பது!’ என்றதும் ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டி ‘ரெண்டு’ வாங்கி மீதி இரு நூற்று நாற்பது மீதம் வாங்கி ஆளில்லா டேபிளா பார்த்து உட்கார்ந்தோம்.

வாட்டர்பாய் தண்ணீர் வைக்கையில் ஒரு டம்ளருக்குள் உற்று உற்று பார்த்துவிட்டுத் தண்ணீர் வார்க்க, சந்தேகம் வந்தது. ‘என்ன உள்ள தூசி இருக்கா? வேறு டம்ளர் கொடு!’ மிரட்ட, அவன் ‘இல்லை சும்மா பார்த்தேன்!’ என்று சொல்லி மாற்றுத் தம்ளர் தண்ணீர் வைத்துவிட்டுப் போனான். அவனைக் கலாய்க்காம கவனமா இருந்திருக்கலாம்.

இலை போட்டு கூட்டு கறிகாய் வைத்தான். பொரியல் சுவைக்க வித்யாசமாய் இருக்கவே, ‘இது என்ன பொரியல்?’ கேட்டேன்.

‘உருளைக்கிழங்குதான்!’ சொல்லிவிட்டு பாயசம், தயிர் உப்பு ஊறுகாய் வைத்தான். சாப்பிட ஆரம்பித்தும் பக்கத்தில் நின்ற சர்வர், குனிந்தான் குனிந்தான் என் இடுப்புவரைக் குனிந்து ‘வடை வைக்கட்டுமா?!’ என்றான். அவன் பணிவு நமக்கு பந்தா தர…’ம்ம்ம்ம்!’ என்றதும் எனக்கும் வைத்து எதிரிலைக்கும் வைத்தான். அதே குனிவு…! அதே பணிவு!!. வடை வைக்கத்தான் குனியறான் என்று நினைத்தது தப்பு!… தலையில் கொட்டு வைக்கக் குனிஞ்சிருக்கான் என்பது கடைசியில்தான் கண்ணில் பட்டது. பில் வைக்கும் புத்தகம் டேபிளில் வைத்தான்…

‘டிப்ஸ்’சுக்காயிருக்கும் என்று பார்த்தால் உள்ளே நாற்பத்து ரெண்டு ரூபாய்க்கு ஒரு பில். வடை ஃபிரீன்னு நெனைச்சேன்.

‘பாவிகளா… குனிஞ்சு குனிஞ்சு குட்டீட்டீங்களே??!! ஒரு பருப்பு வடை இருபத்தோரு ரூபாயா?

தண்ணி மாத்தச் சொன்னதுக்கு தண்டணையா? என்ன பொரியல்னு விசாரிச்சதுக்கு வெனையா?

குனிஞ்சு குனிஞ்சு வடை வைக்கட்டுமானது வெத்து பந்தாவுக்கு வெதை வெதைச்சதே..?! அவன் செஞ்ச வடையை வைக்கலை!! செய்வினை வச்சுட்டான். ‘

எடுக்கறேன்…! எடுக்கறேன்..! செய்வினையை எடுக்கறேன்னு, வேற வழியில்லாம வச்ச பில்லை எடுத்து, பே பண்ணீட்டு வந்து சேர்ந்தோம்.

‘யாராவது ரொம்ப குனிஞ்சா சந்தோஷப்படாதீங்க…! சாந்தி முகூர்த்தத்துல அப்படித்தானே அன்னைக்குச் சந்தோஷப்பட்டுட்டு… இப்ப சங்கடப்ப்டறோம்???!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *