கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 11,850 
 

பாபு செத்துப்போய் இரண்டு மாசம் முடிஞ்சுப் போச்சு. வர்ற ஞாயிற்றுக்கிழமை ஆக்கிப் படைச்சு மூணாம் மாசம் கும்பிட்டுட்டு அப்படியே அவம் பொண்டாட்டிய என்ன பண்ணலாம்னு முடிவு கட்டணும், வந்துடுடா” – இரண்டு நாட்களுக்கு முன்பாகவே சித்தப்பா தொலைபேசியில் என்னை விளித்திருந்தார்.

கிராமங்களில் இருந்து வரும் அழைப்புகள் எப்பொழுதுமே எனக்குப் பிரியமானவைகளாக இருக்கும். கிராமத்துக் கதைகளை யாராவது பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில் கூட சூழல் மறந்து மனக்கிளர்ச்சியுடன் அவற்றை கேட்டுக் கொண்டிருப்பேன். ஆதலினால் திருவிழா, கல்யாணம், கருமாதி போன்ற எந்த நிகழ்வாக இருந்தாலும் அழைப்புக்கு மரியாதை கொடுத்து பிள்ளைகள் புடை சூழ குடும்பத்துடன் போய் வருவதை நான் வழக்கமாக்கி வைத்திருந்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக நீடித்திருக்கும் உறவினர்களின் தொடர்பை என் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக அழைத்துச் செல்ல இதுபோன்ற பயணங்கள் உதவும் என்பது என் நம்பிக்கை.

தீர்ப்புகிராமங்களுக்கே சொந்தமான சாணம் பூசிக்கொண்ட தெருக்கள், சில்லென ஓடும் கால்வாய்த் தண்ணீர், முகம் கழுவி தலை கோதும் வரப்புகளில் வீசும் தூய்மையான காற்று, பரவசமூட்டும் பட்டாம்பூச்சிகள், பறவைகளின் பேச்சொலிகள், மண்வாசனை கமழும் உறவினர்கள், கழனிகளில் உலாவும் மின்மினிகள் என விரிந்திருக்கும் காட்சிக் கவிதைகளைக் காண வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நான் ஓடோடி வருவேன் என்பது சித்தப்பாவுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், சோகம் ததும்பும் இந்த அழைப்பில்கூட அவருடைய எள்ளல் துள்ளியதை என்னால் உணர முடிந்தது.

கல்யாணம், காதுகுத்தல் போன்ற மகிழ்வான விசேஷங்களும் கிராமத்து எல்லைகளிலுள்ள பெரிய ஊர்களின் மண்டபங்களில் அமோகமாக நடத்தப்பட்டுவிடுவதால் ஊருக்குள் பிரவேசித்து உறவினருடன் அளவளாவும் வாய்ப்பு இப்பொழுதெல்லம் எனக்கு அபூர்வமாகி வருகிறது. ஓராண்டுக்கு மேலான நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சமீபத்தில் பாபுவின் துர்மரணத்திற்குப் போய் அழுதுவிட்டு வந்ததுதான் என் கடைசிப் பிரயாணமாக முடிந்திருந்தது.

பாபுவின் அகால மரணத்திற்குப் பின் கேள்விக் குறியாக நிற்கும் இளம் விதவை மீனாவின் எதிர்காலம் குறித்து கடைசியாக எடுக்கப்பட இருக்கும் முடிவு என்னவாக இருக்கும்? சித்தப்பாவின் தலைமையை கொண்டாடும் கிராமத்துப் பெரிசுகள் என்ன முடிவுகட்டப் போகிறார்கள்? உதிரப்போகும் அவர்களுடைய வார்த்தைகள் மீனாவின் வாழ்க்கையை குணப்படுத்தப் போகின்றனவா? இரணப்படுத்தி சீரழிக்கப் போகின்றனவா? கடந்த இரண்டு மாதங்களாக மீனாவின் வாழ்க்கைப் பயணம் குறித்த இந்த கேள்விகள் இடைவிடாமல் என் இதயத்தில் படபடவென அடித்துக் கொண்டிருக்கின்றன. தீர்க்கமான ஓர் இறுதி முடிவை எடுக்க முடியாமல் நானும் என் மனைவியும் தவித்துக் கொண்டிருந்த வேளையில்தான் என் சித்தப்பா முடிவு கட்ட வேண்டும் என அழைத்திருக்கிறார். அதிகாரமும் கட்டளையிடலுமான அழைப்பாக தெரிந்தாலும் அது என்னை சற்று ஆறுதல் படுத்துவதாகவே இருந்தது.

குடும்பம், வேலை, பிள்ளைகளின் படிப்பு போன்ற அட்டவணை நிகழ்வுகளுக்கு இடையில் கிராமத்து வாசனையை நுகர்ந்து அனுபவிக்கும் ஆவலும் என்னோடு ஆனந்தமாக கைகோர்த்துக் கொண்டது. சித்தப்பாவின் அழைப்பிற்கிணங்க நானும் என் மனைவியும் நகரத்தைத் தாண்டி கிராமத் தீவிற்குச் சென்று வரலாமென முடிவெடுத்தோம். நீண்டு வளர்ந்த பயணத்தில் மீனா குறித்த யோசனைகள் சாலையோர மரங்களைப் போல என் இமைக் கம்பிகளில் ஓடிக்கொண்டிருந்தன.

மீனா, வறுமையின் கொடுமையால் பன்னிரண்டாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர முடியாமல் சபிக்கப்பட்ட ஒரு கிராமத்துப்பெண். கல்யாணம் செய்துகொண்டால் ஆம்படையான் வீட்டில் தினமும் நெல்லுச்சோறு கிடைக்குமென்று தாய் மற்றும் உறவினர்கள் மூளைச்சலவை செய்து அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார்களாம். புரியாத வயதில் திருமண விருந்துக்காக அவள் தன் கணவன் பாபுவுடன் என் வீட்டிற்கு வந்தபொழுது சொல்லியிருக்கிறாள். தாய்மை என்ற இலக்கையும் இருபத்தி இரண்டு வயதிற்குள்ளாகவே கடந்து அடுத்த ஆண்டிலேயே பூவும் பொட்டுமிழந்தவளாய் விதவைப் பட்டமேந்தி மீண்டும் ஒருமுறை சபிக்கப் பட்டிருக்கிறாள். வறுமை அவளுக்கு இழைத்த கொடுமையை நினைக்கும் போதெல்லாம் என் கண்களில் நீர் துளிர்க்கும்.

பாபு எனக்கு தம்பி முறை. என்னைக் காட்டிலும் பத்து வயது இளையவன். சுருள் முடியும் கருகரு மீசையும் அவனது சிறப்புகள். ஊர் பெரும்தனக்காரர் குடும்பத்துக்குச் செல்லமான ஒரே வாரிசு..

சித்தியும், சித்தப்பாவும் பாபுவை மிகமிகச் செல்லமாக வளர்த்தார்கள். ஒரே மகன் என்ற தனித்தகுதியின் காரணத்தால் இம்மியளவும் கண்டிப்பு இல்லாமல் அவன் வளர்ந்தான். இதனால் அடமும் பிடிவாதமும் பாபுவின் கூடவே வளர்ந்தன. பிள்ளையை நொடியும் பிரிந்திருக்க மனமின்றி உள்ளூரிலேயே அவனைப் படிக்க வைத்தார்கள். முதல் வகுப்பில் மிக நன்றாகப் படிக்கத் தொடங்கிய அவன் பன்னிரண்டாம் வகுப்பை தட்டுத் தடுமாறி படித்து முடித்தான். அவன் படித்த படிப்பிற்கு எந்த வேலையும் அவனைத் தேடி வரவில்லை. அவனும் எந்த வேலையையும் தேடிப் போகவில்லை. இருக்கிற ஏழு ஏக்கர் சொத்தையும் இரண்டு வீடுகளையும் காப்பாற்றி வைத்துக் கொள்ள படித்து முடித்த படிப்பே போதுமானது என்று சித்தியும் சித்தப்பாவும் திருப்திப் பட்டுக் கொண்டார்கள்.

ஆண்டைவீடும் ஏழு ஏக்கர் நிலமும் முதலான மயக்கமூட்டும் வார்த்தைகளால் சித்தப்பா விரித்த வலையில் மீனாவின் ஏழை பெற்றோர் சிக்கினார்கள். பாபு – மீனா திருமணம் இனிதே நடந்துவிட்டது. உருக்கமான பார்வையாளனாக என்னால் அப்போதைக்கு அவர்களை வாழ்த்த மட்டுமே முடிந்தது.

சிறு வயது முதலே பாபுவுக்கு பயணங்கள் போவது மிகவும் பிடிக்கும். சைக்கிள் என்றாலும் மோட்டார் சைக்கிள் என்றாலும் காற்றைப் போல் கிராமத்துச் சாலையில் புழுதி பறக்க வேகமாகப் பறக்க வேண்டும் என்பான். இவனது இரு சக்கர வாகன வேட்கை சித்தப்பாவை அச்சமூட்டியது. கல்யாணம் செய்துகொண்டால் மாமியார் வீட்டில் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருவார்கள் என்று விளையாட்டாகச் சொல்லிப் பார்த்தார். அதனால் அவன் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தான். இளம் மனைவி மீனாவுடன் தேன்நிலவு உட்பட இருசக்கர வாகனத்திலேயே உல்லாசமாக பயணம் போய்விட்டு வந்தான் என்பதோடு பாபுவின் மோட்டார் சைக்கிள் ஆசை முடிவுக்கு வந்தது.

விளையாட்டுத்தனமாக மது அருந்த ஆரம்பித்த அவன் ஒரு கட்டத்தில் மதுவுக்கே அடிமையானான். குடி குடியைக் கெடுக்கும், குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு போன்ற விவேகமான வாசகங்கள் விளையாட்டுத்தனமாகக் கூட அவனுக்குள் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தி விடவில்லை. திருமணத்திற்குப் பின் போதையைத்தான் அவன் படித்தான். மதுவைப் பற்றியே மீனாவிடம் பேசினான். தனக்குத் தானே சிரித்தான். தள்ளாடி நடந்தான், கடைகளுக்கு ஓடினான். சாலைகளில் விழுந்தான். அவன் குடிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதில் சில நண்பர்கள் மிகக்கவனமாக இருந்து சம்பாதித்தார்கள். தினந்தினம் அவனுடைய வாழ்க்கைப் பயணம் மதுவும் மதுவைச் சார்ந்த நண்பர்களுமாய் முடிந்து போயிற்று. இருபத்தியேழு வயதிலேயே மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரை விட்டான். பிறர் சிரிக்க வாழ்ந்தது மட்டுமே அவன் தன் தந்தைக்கு ஆற்றிய உதவியானது.

நாங்கள் பயணித்த பேருந்து ஊருக்குள் நுழைந்த நொடியில் வீட்டுக்கள் இருந்த சிறுவர்கள் சாலைக்கு ஓடிவந்தார்கள். அவர்கள் முகங்களில் சிரிப்புகள் அரும்பியிருந்தன.கண்களும் பிரகாசமாய் முகம் எதிர் நோக்கி ஏமாந்தன. விழிப்பு நிலை வரப்பெற்று நாங்கள் கீழே இறங்கி, பேருந்து புறப்படும் வரை காத்திருந்த அவர்கள் பேருந்தாகவே சிறிது தூரம் ஓடித் திரும்பினார்கள்.

கிராமத்திற்குள் ஆடிக்கொருதரமும் அமாவாசைக்கொருதரமுமாக வருபவனாக நானிருந்தாலும், உறவினர்கள் இன்னமும் என்னை அந்நியனாக நினைக்கவில்லை என்பதை வழிநெடுகக் காண முடிந்தது. “”வாடா கண்ணு , இப்போதான் வருவதா? இது யாரு உன் சம்சாரமா? பிள்ளைகளைக் கூட்டியாரலையா?” என்பதான அவர்களின் விசாரணைகளுக்குப் பின்னால் ரகசியமாக பொதிந்திருக்கும் அன்பை நகரத்துத் தெருக்களில் ஆயிரம் முறை நடையாய் நடந்தாலும் வாங்க முடியாது. மகிழ்ச்சியான மனநிலையுடன் கேட்டவருக்கெல்லாம் உரிய பதிலைச் சொல்லி சமாதானப்படுத்திக் கொண்டே சித்தப்பாவின் வீட்டுக்குள் நுழைந்தோம்.

பரிச்சயமான ஆண் பெண் முகங்கள் நிறையப் பேர் ஏற்கனவே வந்து சேர்ந்து விட்டிருந்தார்கள். வீட்டினுள் நுழைந்ததும் அண்ணி, அக்கா போன்ற பாசமான அழைப்புகளுக்குள் என் மனைவி வழக்கம் போல கரைந்து காணாமல் போனாள். சிறார்கள் கவலை மறந்து வீட்டுக்குள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். செத்துப்போன பாபுவின் இரண்டு வயது பையனும் அவர்களுடன் சேர்ந்து ஓடுவதும் பின்னர் விழுந்து சிரித்தபடி எழுவதுமாக இருந்தான். சமையல் அறையில் சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது. சித்தப்பா சமையல்காரருடன் பருப்பு வடை சுடுவதின் நுணுக்கம் குறித்து அளவளாவி புழங்கிக் கொண்டிருந்தார்.

தனித்து விடப்பட்டதாக நினைத்துக் கொண்ட நான் உட்கார ஏதுவாக இடம் தேடிக்கொண்டிருக்கையில், வாடா என் பெரிய புள்ள, எப்படிடா இருக்க என்று கேட்டபடி முறத்தில் வேர்கடலையை தோலுரித்து ஆய்ந்தபடி சித்தி எதிர்ப்பட்டாள். சற்றுமுன் தம்பியின் புகைப்படத்தின் முன்னால் உட்கார்ந்து ஒப்பாரி வைத்து அழுதிருப்பாள் போலத் தோன்றியது. கண்களின் ஓரம் கண்ணீர்த்துளிகளின் மிச்சம் இன்னும் காயாமல் இருந்தது. மெல்லிய தேகத்தில் சீவப்படாத தலை முடியின் ஒழுங்கின்மை சித்தியைக் கோட்டோவிய கிராமத்துத் தாயாக அடையாளம் காட்டியது.

என்னைக் கண்டதும் மீண்டும் ஒரு பாட்டம் அழ ஆரம்பித்து விடுவாளோ? என்ற ஐயத்துடன், “”நல்லாயிருக்கேன் சித்தி” என்று அவள் முகம் பார்த்து சுருக்கமாக முடித்துக்கொள்ள முற்பட்டேன். சித்தி அடுத்த வார்த்தையை யோசிக்கும் முன்பாக மனசு கேட்காமல், “”ஆமா, மீனா எங்க சித்தி?” என்றேன் சாதாரணமாக.

“”அந்த மூதேவியாடா புருஷனை வாரிப்போட்டுட்டு மேலாண்ட ரூமுக்குள்ள முடங்கி நடிச்சிக்கிட்டு இருக்கா, போய் பாருடா” மீனாவுக்கு அருகாமையும் ஆறுதலுமாய் இருக்கவேண்டிய சித்தியின் வாயிலிருந்து இப்படியாக அமில வார்த்தைகள் தாறுமாறாய் தெரித்தன. நான் அதிர்ந்து போனேன். என் உடலும் உள்ளமும் பதறியது. பெண்ணியவாதியும் மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் ஆர்வமும் கொண்டவளுமாகிய என் மனைவி அங்கு இல்லாமல் போனது ஒருவிதத்தில் எனக்கு நல்லதாகப் போயிற்று. அந்தச் சூழலில் ஒரு யுத்தம் ஆரம்பமாவது தவிர்க்கப்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதல்..

அறைக்குள் சுருண்டு படுத்திருக்கும் மீனாவைப் பார்க்கப் போகும் முடிவை மாற்றிக் கொண்டு மௌனமாக வீட்டுக்கு வெளிப்புறமாக வந்தேன்.

ஷாமியானாவுக்கு கீழே பிளாஸ்டிக் சேர்களில் மீனாவின் உறவினர்கள் புதியதாக முளைத்து உட்கார்ந்திருந்தனர். புதிய மனிதர்களைக் கண்டதும் மனசுக்கு சற்று புத்துணர்ச்சி உண்டாவது போல தோன்றியது. பங்காளிகளும் சில முக்கியஸ்தர்களும் இரண்டு பக்க திண்ணைகளிலும் உரிமையோடு ஆக்கிரமித்திருந்தனர். மீனாவின் அப்பா சாமிநாதன் முகத்தில் சோகமும் தாடியும் குடிகொண்டிருந்தன. மருமகன் இறப்புக்குப் பின்னர் அவர் நடைபிணமாகத்தான் இன்னும் உலவிக்கொண்டிருப்பதாக புதியவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.

“”நல்லவேலையா ஊருக்கே ஞாயம் சொல்லுற ஆண்டை வீட்டுல சாமிநாதன் பொண்ணக் கொடுத்துட்டான். ஆண்டை, வாத்யாராச்சே எல்லாம் கரீட்டா செய்வார் பாரு” என்று மற்றொருவர் என் சித்தப்பாவை முன்வைத்து உரையாடலை தொடர்ந்து கொண்டிருந்தார்.

உரையாடலைத் தொடர்ந்து கேட்கும் ஆர்வத்தில் அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்தேன். பக்கவாட்டு ஜன்னல் வழியாக சமையலறையின் கதவு தெரிந்தது. சமையல்காரர் அடுப்புக்குள் இருந்த விறகை வெளியே இழுத்து தண்ணீர் தெளித்து அணைத்துக் கொண்டிருந்தார். சமையல் வேலைகள் முடிந்து விட்டன போலும், சித்தப்பா எழுந்து நின்று மடித்துக்கட்டியிருந்த வேட்டியை பிரித்துவிடுவது தெரிந்தது..

“”சாமிநாதா, உங்க ஆளுங்க எல்லாம் வந்தாச்சா படையல் போட்டுக் கும்புட்ரலாமா? என்ன சொல்லுறீங்க?” என்று கேட்டுக்கொண்டே சித்தப்பா ஷாமியானவுக்குள் மீனாவுடைய அப்பா இருக்குமிடம் நோக்கி வந்தார். மேலோட்டமாக சித்தப்பாவின் பேச்சைக் கேட்டால் பூக்களின் மணம் கேட்பவர் நெஞ்சில் நிரம்பும். ஆனால் அதையே ஆழ்ந்து அலசினால் அதிகார முட்களின் குத்தல்கள் தெரியும்.

“”ஆமாம் கும்புடலாம்யா” என்று சம்மதம் சொன்னபடி மரியாதை நிமித்தமாக சட்டென நாற்காலியிலிருந்து எழுந்துகொண்டார் சம்மந்தி சாமிநாதன்.

பாபுவின் பெரிய புகைப்படத்துக்குமுன் காமாட்சியம்மன் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அவனது உடைகள் மற்றும் உடைமைகள் யாவும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. புதியதாக வாங்கிய மதுபாட்டில், ஊறுகாய் பாட்டில், பைக் சாவி, கூலிங்கிளாஸ், மொபைல், தோல்பெல்ட், புத்தம்புதிய பத்துரூபாய் நோட்டுக்கட்டு முதலான அவனுக்கு பிடித்த சமாச்சாரங்கள் அத்தனையும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. மூன்று இலைகளில் படையல் போடப்பட்டிருந்தது. வாழைப்பழத்தில் சொருகி வைக்கப்பட்டிருந்த ஊதுவத்திகளின் நறுமணம் மெல்ல மெல்ல அந்த அறையை முழுவதுமாக நிரப்பிக்கொண்டிருந்தது.

“”மீனா….. வாம்மா வந்து கற்புரம் ஏத்திக் கும்பிடுமா. எங்களுக்கெல்லாம் செய்ய வேண்டியவன், அவன் போய்ச்சேர்ந்துட்டான். வயசுல சின்னவனை நாங்க எல்லாம் கும்பிடக்கூடாது” சித்தப்பாவின் குரல் உடைந்து வார்த்தைகள் குழறின. கண்கள் கலங்கின.

“”என்னயப் பெத்த ராசா… என்னய விட்டுட்டு போயிட்டயேடா ஆ..ஆ.. .. என் செல்லம்…” சித்தியின் குரல் ஓங்கி ஒலித்தது.

உணர்ச்சி வேகத்தில் வெளிப்பட்ட சித்தியின் ஒப்பாரி எல்லோருடைய கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.சித்தப்பா சித்தியை மெல்ல இழுத்து ஆறுதலுக்காக மார்பில் சாய்த்துக் கொண்டார்.

மீனா துவண்ட நடையில் வந்து கற்பூரமேற்றினாள். கண்ணீர் அவள் கண்களில் மாலை மாலையாக வழிந்து கொண்டிருந்தது. ஏந்திய கைகளுடன் சிறிதுநேரம் அவள் மௌனமாக நின்றாள்.அழுதழுது உதடுகளும் நாவும் வறண்டு போயிருக்க வேண்டும். அவளுடைய துயரம் சக்தி வாய்ந்த மௌனமாக வெளிப்பட்டது.

“” வாடா குட்டி வந்து அப்பாவை கும்பிட்டுக்கோ” இரண்டு வயது பாலகனை கும்பிடவைத்தார்கள். சாஷ்டாங்கமாக அவனை கீழேபடுக்க வைத்தார்கள்.

மொட்டைமாடியில் கா…கா.. கா.. வென சித்தி காகங்களை அழைக்கும் சப்தம் சாளரங்களின் வழியாக காற்று போல உள்ளே புகுந்தது. நிசப்தம் விலகி கும்பிட்ட அறைக்கு வெளியே படிப்படியாக பேச்சு சப்தம் அதிகரித்து சாப்பிட்டு முடித்தோம்..

“”குடித்தனக்காரனெல்லாம் ஊட்டெ காட்டெ அப்படியப்படியே போட்டுட்டு வந்துருப்பாங்க. வாத்யாரய்யா சீக்கிரம் பேசி ஒரு முடிவுக்கு வாங்க” வயதில் முதியவராக இருந்த பெரியவர் பஞ்சாயத்தை துவக்கி வைத்தார். நான் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தேன்.கதவோடு கதவாக நின்று கொண்டிருக்கும் மீனாவுடன் என் மனைவியும் நின்று கொண்டிருந்தாள்.

“”சாமிநாதா, பாவிப்பைய மண்ணுக்குள்ளப் போய்ச் சேர்ந்துட்டான். விதவையா நிக்குறவ சின்னப் பொண்ணு.. உம்பொண்ண என்ன செய்யலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கீங்க? அது எதுவா இருந்தாலும் பத்துபேர் முன்னால இங்க சொல்லிப்புடு பேசி முடிச்சிக்கலாம்” சித்தப்பா தனக்கே உரியபாணியில் தன்னுடைய வேண்டுகோளை முன் வைத்தார்.

கூட்டத்தில் நிசப்தம் நிலவியது. இழப்பை, துக்கத்தை, அழுகையை எளிதாக கடந்துவிட முடியாமல் மௌனம் நேரத்தைத் தின்று கொண்டிருந்தது. தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவன் போல நான் ரகசியமாக ஓரக்கண்ணால் என் மனைவியை நோக்கினேன். அவள் மீனாவையும் அவளுடைய அம்மாவையும் நேரடியாகப் பார்த்தபடியிருந்தாள். மீனாவின் உறவினர்கள் எவரும் வார்த்தைகளை எளிதில் அவிழ்க்காமல் நின்றனர்.

“”விசனப்பட்டு எதுவும் ஆகப்போறதில்லை. சாமிநாதா, எதாவது பேசுப்பா” பஞ்சாயத்தைத் துவக்கிய பெருசு மீண்டும் பேசினார்.

“”எம் பொண்ணும் பேரனும் உங்க வீட்டு சொத்து.பெரியவங்க நீங்கல்லாம் சேர்ந்து என்ன சொன்னாலும் நாங்க கட்டுப்படுறோம்” மீனாவோட அப்பா தயக்கத்துடன் வாய் திறந்து சொல்லிவிட்டு மீண்டும் தலையை குனிந்து கொண்டார்.

“”வாத்யாரே நல்லது கெட்டது நாலும் தெரிஞ்சவர் நீங்க. ஊருக்கெல்லாம் நியாயம் சொல்லுற பெரிய மனுஷன். உங்க அபிப்ராயம் என்ன பட்னு சொல்லுங்க” என்று மற்றொரு பெரியவர் சித்தப்பாவை துரிதப்படுத்தினார்.

குரலை கனைத்துக் கொண்டு சித்தப்பா பேச ஆரம்பித்தார்.

“”குழந்தை எங்க வீட்டு வாரிசு. இந்த வீடு அவனுக்குத்தான் சொந்தம். ஏழு ஏக்கரா நெலம் கிடக்கு. பால் மாடு ரெண்டு இருக்கு. ஒத்தாசைக்கு நாங்க இரண்டு பேர் இருக்கோம். அம்மாவும் புள்ளயும் வந்து மகராசனா இங்க இருக்கட்டும்”

கூட்டத்தில் நிசப்தம் நிலவியது.

“”புள்ளைய எங்ககிட்ட விட்டுட்டு பொண்ணு அம்மா வீட்டுக்குப் போகறது இன்னொரு வழி. தாய் வீட்டுக்குப் போய் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழறத நாங்க தடுக்கல்ல. பேரன நாங்க வளத்துக்கறோம். ரெண்டுல எதுக்கு சம்மதம்னு சொல்லிட்டா அவங்கவங்க போயிக்கிட்டே இருக்கலாம்” சித்தப்பா சாமர்த்தியமாக குழந்தையையும் தாயையும் நிரந்தரமாக பிரித்துவிட நினைப்பது எனக்குப் புரிந்தது..

“”இது தான்யா வாத்யார்ங்கறது. தெளிவா சொல்லிப்போட்டாரு பாருங்க சாமிநாதா, மீனா… முடிவு பண்ணவேண்டியது நீங்கதான்” வழக்கு முடிந்து தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது போன்ற சந்தோஷத்தில் முதலில் பேசிய பெருசு சித்தப்பாவைக் கொண்டாடியது.

“”ஏய் உம்மணாம் மூஞ்சிப் பொண்ணே, தூலம் மாதிரி நிக்காத எதுனா வாயத் தொறந்து சொல்லு” நிசப்தத்தை கிழித்துக்கொண்டு சித்தியின் வார்த்தைகள் மீனாவை நோக்கி சீறி பாய்ந்தன.

“”பத்துபேர் முன்னாடியே இந்தம்மா இப்படிப் பொண்ண ஏசுதே, வாழ்க்கை பூரா இப்படியே ஓயாம முணுமுணுத்துகிட்டே இருந்தா.. எம்பொண்ணு இன்னாங்க பண்ணும்?” மகள் தவிக்கும் தவிப்பை தாங்க முடியாமல் மீனாவின் அம்மா வார்த்தைகளை கொட்டிவிட்டு தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள்.

“”நீ அழாதமா” அணை உடைத்த வெள்ளம் போல மீனா தன் தாயின் கண்களை துடைத்துவிட்டு சபையின் முன்னால் வந்து நின்றாள்.

“”வெதவைக்கு இப்போ சுலபமா வேலை கிடைக்கும். என்னைய டீச்சர் டிரெய்னிங் படிக்க வைங்க, நான் இங்கனயே இருக்கேன்” என்றாள் மீனா.

“”உனக்கு யாரும்மா கூடவே காவல் இருக்கிறது?” சித்தப்பாவின் குரலில் கிண்டல்.

“”உங்க அப்பங் கிட்ட துட்டு ஏது படிக்கவைக்க?” எக்காளமிட்டது சித்தியின் குரல்.

“”அப்போ இந்தக் குழந்தைய யாரு பாத்துக்கறது….” மீண்டும் சித்தப்பாவின் குரல்.

“”நீ உங்க அம்மா வீட்டுக்குப் போய் படிச்சு கிழி. புள்ளய கிள்ளய தேடிக்கிட்டு இந்த வீட்டு வாசலை மிதிக்காத” சிறகுகள் முறிக்கப்பட்ட அவள் மீது சித்தி தனது கடைசி ஆயுதத்தையும் வீசினாள்.

அவர்களின் கூக்குரலை சற்றும் பொருட்படுத்தாத மீனா, தன் பிள்ளையைத் தூக்கி அவன் கன்னங்களில் இரண்டு முத்தங்களை வைத்தாள்.

“”இவன்தான் இந்த வீட்டுக்கு வாரிசு. நான் படிச்சு முடிச்சுட்டு வர்றவரைக்கும் பத்திரமாப் பார்த்துக்கோங்க” என்று குழந்தையை என் மடியில் உட்காரவைத்துவிட்டு தன் தாயின் விரலைப் பிடித்து இழுத்துக் கொண்டு மீனா நடக்கத் தொடங்கினாள்.

தூரத்திலிருந்த என் மனைவி புன்னகையுடன் இரண்டு கட்டை விரல்களையும் உயர்த்திக் காட்டினாள்.

– ஜூன் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *