அய்யோடா

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: June 13, 2013
பார்வையிட்டோர்: 53,019 
 

இரை தின்ற மலைப்பாம்பு போல இருளில் அந்த நெடுஞ்சாலை அவர்கள் எதிரே நீஈஈளமாக வளைந்து வளைந்து போய்க்கொண்டு இருந்தது. காரின் ஜன்னல் கண்ணாடிகள் ஏற்றப் பட்டு இருந்தபோதும் வெளியே சீறும் காற்றின் இரைச்சலும் சடசடவென்று விழும் மழைத்தாரைகளின் ஓசையும் உள்ளே இருப்பவர்களின் எலும்பு வரை புகுந்து சில்லிட வைத்தது.

“ஷ்யாம்.. கிளைமேட் திடீர்னு ரொம்ப மோசமா ஆயிருச்சே ?”

“யெஸ் ப்ரீத்தி.. நீ சொல்றது சரிதான். பட்.. இப்போ திரும்பிப் போகவும் முடியாது. எப்படியாவது நேரே போறதைத் தவிர வேற வழியே இல்லை” என்றபடி ஷ்யாம் மீண்டும் கையிலிருந்த செல்போனின் பட்டனை அழுத்தி காதில் வைத்துக் கொண்டான். எந்த விதமான ஒலியும் கேட்கவில்லை.

“ஷிட்… சிக்னல் இருக்குதா இல்லையா அப்படின்னு கூட தெரியலயே என் சிஸ்டர்”

கார் கல்யாண ஊர்வலம் போவது போல மிகவும் மெதுவாக ஊர்ந்து கொண்டு போனது.

“இன்னும் எவ்வளவு தூரம் போகணும் ?”

மழைத் தாரைகள் இரும்புக் கம்பிகள் போல முன் கண்ணாடியில் விழ அதைத் துடைக்க வைப்பர்கள் மூச்சு முட்டியபடி உழைத்துக் கொண்டு இருந்தன. ஹெட் லைட் வெளிச்சத்தில் பாதை ஓரமாக தெரிந்த கல்லில் “ராஜகிரி 18 கி.மீ” என்ற எழுத்துக்கள் தெரிய கார் ஒரு குலுக்கலுடன் நின்று போனது.

மீண்டும் மீண்டும் ஷ்யாம் அதற்கு உயிர் கொடுக்க முயற்சிக்க எதுவும் பலனில்லாமல் போக அந்த இருளில் வெளியே கொட்டும் மழையின் சத்தம் மட்டும் பின்னணியாக இருவரும் மௌனமாக அப்படியே உட்கார்ந்திருந்தனர்.

யார் இவர்கள் ? எங்கே போகிறார்கள் ? இந்தக் கேள்விகளுக்கான விடையை அடுத்த பத்தியில் காணவும்.

ஒரு பெரிய மல்டிநேஷனல் கம்பெனியின் பொது மேலாளரான விஸ்வநாதனின் புத்திரச் செல்வங்கள்தான் இவர்கள். படிப்பு, வேலை இவையே வாழ்க்கையின் முக்கியமான விஷயங்கள் என்று நினைத்துக் கொண்டு அதிலேயே எப்போதும் அழுந்திக் கிடப்பவர்கள். ஷ்யாம் ஒரு கார் டயர் கம்பெனியின் மார்க்கெட்டிங் மானேஜர். ப்ரீத்தி மேனேஜ்மெண்ட் கன்சல்டண்டாக ஒரு பெரிய நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டு இருந்தாள். அவள் திறமையைக் கண்டு கொண்ட அந்த நிறுவனம் அவளை வெளி நாடுகளுக்கு அனுப்பி அதிக லாபம் கண்டிருந்ததால் அவள் ஒரு நாள் விடுமுறை கேட்டாலும் உடனே அவள் சம்பளத்தை உயர்த்தி விட்டு லீவை கான்சல் செய்து கொண்டு தொழில் நடத்தி லாபம் ஈட்டிக் கொண்டு இருந்தது.

செய்யும் தொழிலே தெய்வம் என்று இருந்த அவர்களுக்கு இப்போதுதான் தொழில் மட்டுமே எல்லாமும் இல்லை என்று புரிந்திருந்தது. இந்தப் பயணம் எதற்காக என்று தெரிந்தால் உங்களுக்கு கோபமும் சிரிப்பும் வரலாம். நாளை விடியற்காலையில் ராஜகிரி ஜமீந்தார் ஜம்புலிங்கத்தின் மகன் விக்னேஷுக்கும் ப்ரீத்திக்கும் நிச்சயதார்த்தம். அவர்களின் பெற்றோரும் மற்றவர்களும் முன்னாலேயே போய்விட ஒரே நாள் மட்டுமே லீவு கிடைத்ததால் ப்ரீத்தி முந்திய நாள் மாலை வந்து சேருவதாக சொல்லி இருந்தாள். மணப்பெண் தனியாக பிரயாணம் செய்ய வேண்டாம் என்று ஷ்யாமை அவளுடன் கிளம்பி காரிலேயே வந்து சேரச் சொல்லி விட்டு அவர்களின் அம்மாவும் அப்பாவும் ராஜகிரிக்கு கிளம்பி விட்டார்கள்.

வெறும் மூன்று மணி நேர பயணம்தானே என்ற அலட்சியத்துடன் கிளம்பிய இவர்கள் இருவரும் கிளம்பிய இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு மாறிய இயற்கையின் சீற்றத்தால் வழியில் மாட்டிக் கொண்டு திருதிருவென்று விழித்தபடி காருக்குள் இருந்தார்கள். ஜமீந்தார் வீட்டு நிச்சயதார்த்தம் என்பதால் வழியில் நிறைய போக்குவரத்து இருக்கும் என்று நினைத்தவர்களுக்கு மெயின் ரோடில் ராஜகிரிக்கு செல்லும் பாதையை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் ஒருவரிடம் வழி கேட்க மெயின் ரோடிலிருந்து ஜமீந்தார் பங்களாவுக்கு செல்லும் சாலை இருபது கிலோ மீட்டர் அளவுக்கு உள்ளே செல்லும் என்றும் ஒரு சிறிய குன்றை சுற்றிக் கொண்டு சென்றால் அதன் பின்புறச் சரிவில்தான் பங்களா இருக்கிறது என்றும் அவன் சொன்னான்.

ஒரு இடத்தில் மெயின் ரோடிலிருந்து பிரிந்த ஒரு சாலையில் இருந்த ஒரு ஆர்ச்சில் பெரிய பேனர் கட்டி நிச்சயதார்த்ததிற்கு வருக வருக என்ற வாசகங்களும் விக்னேஷ், ப்ரீத்தியின் படங்களுடன் கூடிய சுவரொட்டிகளுமாக தோரணங்களுடன் வண்ண விளக்குகளும் மின்ன ஜொலித்துக் கொண்டு இருந்தது. அங்கே ஒரு டீக்கடை மட்டுமே இருந்தது.

ஷ்யாம் அந்த வளைவின் வழியாக காரைத் திருப்பினான். டீக்கடையில் இருந்த ஆள் கையை நீட்டி ஏதோ சொல்ல வந்தது போல இருந்தது. ஆனால் ஷ்யாம் நிறுத்தாமல் ஓட்டி வந்து விட்டான். கொஞ்ச தூரத்துக்கு சாலை ஒழுங்காக இருந்தது. ஆனால் அதன் பின் சாலையின் இரு புறமும் அடர்ந்த மரங்கள் மட்டுமே இருக்க சாலையும் கரடுமுரடாக மாறியது. மெயின் ரோடிலிருந்த வளைவைத் தாண்டி ராஜகிரியை நோக்கி அவர்கள் கார் சற்று தூரம் சென்றதுமே வானம் இருட்டிக் கொண்டு வந்து சில நிமிடங்களில் பேய் மழை கொட்ட ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்பு வரை நீலமாக இருந்த வானம் கருங்கும்மென்று மாறி காற்றும் மழையுமாக சீறுவதை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. மின்னலும் இடியும் கண்ணையும் காதையும் பயமுறுத்தின.

இப்போது காரும் நின்று விட்டதால் எப்படியாவது மெதுவாக ஓட்டிக் கொண்டு ஜமீன் பங்களாவுக்குப் போய் சேர்ந்து விடலாம் என்ற ஆசையும் நிராசையாகிப் போனது.

“ஷ்யாம்.. என்ன செய்யலாம் ? செல்போனும் வேலை செய்யலை. இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே இருக்க முடியும் ? இந்த மழை நின்றால்தான் யாராவது வரவங்க போறவங்க கிட்டே உதவி கேட்கலாம். ஆனா… ”

அவள் பேச்சை தடுத்தபடி ஒரு இடி இடித்தது. கார் தடதடவென்று ஆடியது. ஃப்ளாஷ் லைட் போல ஒரு மின்னல் வெட்டு. மீண்டும் ஒரு இடி.

“ப்ரீத்தி.. இந்த வெதர்ல இப்படி ஒரு இடத்துல நின்னு போன காருக்குள்ள சும்மா உட்கார்ந்துகிட்டு இருக்குறது சரியா தப்பா அப்படின்னு எனக்கு தெரியல. லெட் மீ கெட் டவுன் அண்ட் சீ. பக்கத்துல ஏதாச்சும் ஹெல்ப் கிடைக்குமான்னு பாக்கலாம்” சொன்னபடி ஷ்யாம் காரின் பின்சீட்டில் இருந்த பையை இழுத்து திறந்து அதிலிருந்து ஒரு பிளேசரை எடுத்து மாட்டிக் கொண்டு டிரவர் சீட்டிலிருந்து காரின் கதவைத் திறந்து கொண்டு இறங்கினான். அடுத்த நிமிடம் “அம்மா….” என்ற சத்தத்துடன் சரிந்தான்.

“ஷ்யாம்.. ஷ்யாம்.. என்ன ஆச்சு ?” ப்ரீத்தி பதற்றத்துடன் அவன் புறமாக சீட்டில் நகர்ந்து போக அவன் “கீழே ஏதோ பள்ளம். கால் சறுக்கி விட்டிடிச்சு.” என்றபடி எழ முயற்சித்தான். ஆனால் முடியவில்லை.

“ப்ரீத்தி.. ரொம்ப வலிக்குது. அந்த டார்ச் லைட்டை எடுத்து ஆன் செஞ்சு பாரு. அதை எடுத்துக்காம சட்டுனு இறங்கியது என் தப்புதான்”

ப்ரீத்தி அடித்த விளக்கின் ஒளியில் அவன் கால் ஒரு சிறு பள்ளத்தில் சேற்றில் சிக்கி மடங்கி இருந்தது தெரிந்தது. மெல்ல அதைத் திருப்பி எடுத்தான். சோதித்தபோது கீறலோ ரத்தமோ இல்லை. ஆனால் சுளுக்கி இருக்கலாம் என்று தோன்றியது. காலை ஊன்ற முயலும்போது வலியால் அவன் முகம் கோணியது.

“ஷ்யாம். பேசாமல் காரிலே உட்காரு. மழை நின்னதும் ஏதாச்சும் செய்யலாம்” என்றபோதுதான் சட்டென்று பக்கத்தில் இருந்த சிறிய மேட்டுச் சரிவில் தெரிந்த ஒரு விளக்கு ஒளி அவள் பேச்சை சட்டென்று நிறுத்தியது.

“ஷ்யாம்.. அதோ பாரு. ஏதோ லைட் தெரியுது. வீடு போல இருக்குது. உன்னாலே நடக்க முடியாட்டி நீ இங்கேயே இரு. நான் போய் ஏதாவது ஹெல்ப் கிடைக்குமா என்று பார்க்கிறேன்”

அதற்கு ஷ்யாம் பதில் சொல்லும் முன் ஒரு உருவம் கையில் ஆடும் லாந்தர் விளக்குடன் சட்டென்று அவர்கள் முன் வந்தது. ப்ரீத்தி பயத்தில் ஒரு கணம் உறைந்து போனாள். காரின் உள்விளக்கைப் போட்டுவிட்டு டார்ச்சையும் அடித்தாள். வந்த உருவம் ஒரு சாக்குத் துணியை போர்த்திக் கொண்டு இருந்தது. அது ஒரு வயதான கிழவி என்று தெரிந்தது.

“என்ன ஆச்சு கண்ணுங்களா ? வண்டி நின்னு போச்சா ? ” என்று சகஜமாக கேட்டாள்.

அவள் குரலைக் கேட்டதும் லேசாக மூச்சு விட்ட ப்ரீத்தி “ஆமாம் பாட்டி.. இங்கே யாரும் மெகானிக் இருக்காங்களா ?” என்றாள்.

“காரு ரிப்பேரு எல்லாம் மெயின் ரோடுலதான் செய்வாங்க. அதுவும் இன்னைக்கும் நாளைக்கும் யாரும் இருக்க மாட்டாங்கம்மா”

“ஏன் ? என்ன விஷயம் ?”

“ராஜகிரி ஜமீந்தார் பையனுக்கு நாளைக்கு நிச்சயம். அதுக்காக எல்லாரும் ஜமீனுக்கு போயிட்டாங்கம்மா.”

ப்ரீத்தியும் ஷ்யாமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“பாட்டி… நாங்களும் அதுக்குதான் வந்திருக்கோம்”

“அது சரி.. ஆனா இந்த வழியா ஏன் வந்தீங்க ? மெயின் ரோடுல இன்னும் நேரா போயிருந்தா நாலு கிலோ மீட்டருக்கு அப்புறம் நல்ல ரோடு வருமே ”

“என்னது ? எங்களுக்கு தெரியாதே ? இந்த வழின்னு நெனச்சுகிட்டு இல்லே வந்துட்டோம்”

“அதனாலே பரவாயில்லே கண்ணுங்களா ! ஆனா இந்த வழியிலே பாதை அவ்வளவு நல்லா இருக்காது. அதுவும் இந்த மழையிலே ரொம்ப சிரமப்படும்”

“பாட்டி.. நாங்க எப்படியாச்சும் போய்ச் சேரணும். ஏன்னா.. இவ என் தங்கச்சி.. நாளைக்கு உங்க ஜமீந்தார் வீட்டுக்கு மருமகளாகப் போற பொண்ணு”

பாட்டியின் கண்கள் விரிந்தது வெளிச்சத்தில் தெரிந்தது.

“அட என் ராசா ! இதுதான் இளைய ராணியம்மாவா ? நல்லா இருங்கம்மா.. சரி.. இப்போதைக்கு என் குடிசையிலே வந்து தங்கிக்குங்க. அப்பாலே என்ன செய்யலாமுன்னு பார்க்கலாம். இந்த மழையிலே இங்ங்னே நடு ரோட்டிலே இருக்க வேணாம்”

காலை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கத்தி மேல் நடப்பது போலிருக்க ஷ்யாம், ப்ரீத்தியின் தோளில் கையை வைத்துத் தாங்கியபடி காரைப் பூட்டி விட்டு பாட்டியின் பின்னால் நடந்து சென்று அந்த மேட்டில் இருந்த சின்ன குடிசையை அடைந்தான்.

“ஷ்யாம்.. உன் நிலைமையில் நீ நடக்காமல் இருப்பதே நல்லது. ஒருவேளை இங்கிருநது ஜமீன் பங்களாவுக்கு நடந்து போக முடியும் அப்படின்னா நான் மெதுவாக போய் ஏதாச்சும் ஹெல்ப் அனுப்பி வைக்கவா?”

பாட்டி அவர்கள் உட்கார ஒரு கோணியை விரித்து விட்டு “அம்மாடி.. நீ சொல்லுறது நல்ல உபாயம்தான் . என் வீட்டிலேயும் இப்போ உதவிக்கு யாருமில்ல. என் துணைக்கு என் பேத்தி மட்டும்தான் இருக்குறா. உங்க அண்ணன் இங்கே இருக்கட்டும். என் பேத்திக்கு குறுக்கு வழி தெரியும். ஒரு மணி நேரத்துல உன்னை ஜமீன் பங்களாவுல சேர்த்து விடும். அங்கிட்டு போய் யாரையாச்சும் உதவிக்கு அனுப்பு” என்றாள்

“கிரேட்… அதுதான் நல்ல ஐடியா ஷ்யாம். யூ டேக் ரெஸ்ட்” என்றபடி ப்ரீத்தி எழுந்திருக்க பாட்டி உள்பக்கமாக திரும்பி “மோகினி .. மோகினி..” என்று அழைத்தாள்.

பௌர்ணமி இரவில் முழு நிலவு வரும் பார்த்ததுண்டு. ஆனால் அமாவாசை அன்று, கரு மேகம் சூழ்ந்த இரவில், திடீரென்று முழு நிலவு உதித்தால் எப்படி இருக்கும் ?

மோகினி என்ற அந்தப் பெண்ணுக்கு பதினெட்டு வயது இருக்கலாம். பாவாடையும் ஆண்கள் அணியும் சட்டையும் போட்டிருந்தாள். தோளின் மீதாக சரிந்து விழுந்த தலைமுடி ஹோகேனக்கல் அருவியை நினைவு படுத்தியது. தருமபுரியின் மாம்பழம் போல லேசாக சிவந்து தெரிந்த கன்னக் கதுப்புகளும், ஹோசூரின் ஆர்க்கிட் மலர்கள் போல சுழிக்கும்போது வடிவம் மாறும் இதழகளுமாக அவள் வந்தபோது ஷ்யாமுக்கு ப்ரீத்திக்கு காலில் சுளுக்கு வந்திருக்கக் கூடாதா தான் அவளுடன் பங்களாவுக்கு போயிருக்கலாமே என்ற எண்ணம் கூட ஏற்பட்டது.

எப்படி இவள் எந்த சினிமா டைரக்டர் கண்ணிலும் படாமல் தப்பி இருக்கிறாள் என்று நினைத்தபடி இருந்த ப்ரீத்தியை “கண்ணு.. இது என் பேத்தி மோகினி… உன்னை சாக்கிரதையா ஜமீன் பங்களாவுல கொண்டு விட்டு வருவா” என்ற பாட்டியின் குரல் தன்னிலைக்கு கொண்டு வந்தது.

“ஹாய் மோகினி” என்றவளைப் பார்த்து மோகினி “வணக்கமுங்க” என்று கூறிவிட்டு பிறகு தன் மார்பில் தொங்கிக் கொண்டு இருந்த சங்கிலியை எடுத்து உதடுகளில் வைத்துப் பிடித்துக் கொண்டு மோகனமாய் சிரித்தபடி “அய்யோடா” என்றாள்.

“என்ன ஆச்சு ? ஏன் அப்படி சொல்லுறே ? ” என்று ப்ரீத்தி திகைப்புடன் பார்க்க பாட்டி “அவ எப்பவும் அப்படித்தாங்க, அய்யோடான்னு சொல்லிக்கிட்டே இருப்பா. நீங்க கிளம்புங்க. மோகினி.. பாத்து பத்திரமா கூட்டிகிட்டு போ. காட்டாத்துல வெள்ளம் இருக்கப் போவுது” என்றாள்.

ஷ்யாம் பதற்றத்துடன் “என்னது காட்டாறா ? வெள்ளமா ? அப்படின்னா இங்கேயே இரு ப்ரீத்தி. எங்கேயும் போக வேணாம்” என்றான்.

“பயப்படாதே கண்ணு. சாதாரண நாளுங்களிலே அதுல தண்ணியே இருக்காது. இப்போ மழை பெய்யுறதாலே ஒரு வேளை தண்ணி இருந்தா சாக்கிரதையா தாண்ட சொல்லுறேன். அவ்வளவுதான்”

“நீ தைரியமா இரு ஷ்யாம். நான் போய் பங்களாவிலே சொல்லி அங்கிருந்து மோகினியுடனேயே ஆளுங்களை அனுப்பி வைக்கிறேன். அம்மா ரொம்ப கவலைப் பட்டுகிட்டு இருப்பாங்க. எதுக்கும் நீ அப்பப்போ செல்போன்ல அவங்களை காண்டாக்ட் பண்ண டிரை செஞ்சுகிட்டே இரு”

ஷ்யாம் தலையசைக்க மோகினி ஒரு சாக்கை எடுத்து தன் தலைமேல் போட்டுக் கொண்டாள்.

“ஐயம் நாட் டேக்கிங் எனி லக்கேஜ் வித் மீ ஷ்யாம்” என்றபடி ப்ரீத்தி அங்கிருந்த பிளேசரை மட்டும் எடுத்துப் போர்த்திக் கொண்டாள்.

“வரேன் பாட்டி. ரொம்ப நன்றி. ஆளுங்களை அனுப்பறேன். மழை நின்னதும் நீங்களும் கிளம்பி வந்திடுங்க” என்றபடி மழையில் சென்ற மோகினியை பின் தொடர்ந்தாள் ப்ரீத்தி. குடிசைக்கு வெளியே மழை மெதுவாக பெய்து கொண்டே இருந்தாலும் டார்ச் விளக்கின் ஒளியில் மோகினி செல்வதை கவனித்தபடியே ப்ரீத்தி அவளைப் பின் தொடர்ந்தாள். அருகிலிருந்த மேட்டின் மீது ஏறி இறங்கியதும் மழை சட்டென்று குறைந்து தூறலாக ஆனது. கம்பளிப் போர்வையாக போர்த்தியிருந்த இருட்டு அது மாலை நேரம் என்பதையே மறைத்திருந்தது. ஆனாலும் ப்ரீத்திக்கு மோகினி மங்கலான வெளிச்சத்தில் ஒரு தேவதை போலவே தோன்றினாள்.

“ராணிம்மா.. என் கையைப் பிடிச்சுக்குங்க. இல்லாட்டி சறுக்கி விட்டுடும்” என்று மோகினி நீட்டிய கையை ப்ரீத்தி பிடித்துக் கொண்டபோது ஏனோ மெல்ல பெருமூச்சு ஒன்று வெளியேறியது.

அவளைப் பார்த்தபடியே அருகில் நடந்த மோகினி “என்னம்மா அப்படி பாக்குறீங்க ?” என்றாள். பிறகு தன் மார்பில் தொங்கிக் கொண்டு இருந்த சங்கிலியை எடுத்து உதடுகளில் வைத்துப் பிடித்துக் கொண்டு மோகனமாய் சிரித்தபடி “அய்யோடா” என்றாள்.

“மோகினி.. நீ எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா ? யாராவது சினிமாக்காரங்க பார்த்தா உடனே உன்னை ஹீரோயினா ஆக்கிடுவாங்க ”

“போங்கம்மா.. என்னைக் கிண்டல் செய்யுறீங்க. நீங்கதான் அழகா இருக்கீங்க. நானெல்லாம் சும்மா காட்டுல முளைச்ச செடி”

“அப்படி சொல்லாதே மோகினி. காட்டுல இருக்குற செடிங்கதான் செழிப்பா இருக்கும்.” ப்ரீத்தியின் மனதுக்குள் ஷ்யாம் மோகினியைப் பார்த்த பார்வை நினைவுக்கு வந்தது. பார்த்ததுமே மயங்க வைக்கும் அழகுதான். ஆனால் அப்பா, அம்மாவின் மனதைக் கவருமா ?

இருவரும் மௌனனமாக அந்த மங்கிய இருட்டில் லேசாக நீர் சலசலத்து ஓடிய பாதைகளிலும், சின்னச் சின்ன பாறைகளிலுமாக தாண்டி நடந்தனர். எத்தனை நேரமானது என்று தெரியாமல் போனது. இது போல மழை பெய்யக் கூடும் என்பதெல்லாம் அறியாதவளாக இருந்ததால் தொளதொளப்பான காபூலி பைஜாமாவும் குர்த்தாவும் அணிந்து வந்திருந்ததால் அவள் உடைக்குள் புகுந்த காற்று அவள் மயிர்க்கால்களை வருடி மயிர்க்கூச்செடுக்க வைத்தது. அந்தக் குளிரிலும் மோகினியின் கைகள் வெதுவெதுப்பாக இருந்தன.

மீண்டும் அவளை அறியாமல் பயத்துடன் மோகினியின் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டபோது திடீரென்று எதிரில் தூரத்தில் இரண்டு ஒளிவட்டங்கள் தணல் போல ஜொலித்தன.

“ராணிம்மா.. நரி ஒண்ணு நிக்குது”

ப்ரீத்தியின் உடல் நடுங்கியது.

“அய்யோ.. என்ன செய்யுறது ?”

“இன்னும் கொஞ்சம் தூரம்தாம்மா. இதோ காட்டாறு வந்திடிச்சு. அதைத் தாண்டி நேரே நடந்தா பங்களா வந்திடும். இப்போ தாண்டுறது கொஞ்சம் ஆபத்து. அது விலகிப்போனதும் போயிடுவோம். ஆனா நரி நகர்ந்து போகுற வரைக்கும் என்ன செய்யுறது ?”

நகரங்களிலேயே வசித்த ப்ரீத்திக்கு நரி என்றால் ஒரு தந்திரமான மிருகம் என்று மட்டுமே தெரியும். அதன் குணாதிசயங்கள் பற்றி அவள் அறிந்ததில்லை. எனவே உடலெல்லாம் வியர்க்க வாய் உலர பயத்துடன் நின்றாள்.

“சரிம்மா.. இங்கே ஒரு சின்ன குகை இருக்கு. அதிலே ஒரு பத்து நிமிஷம் இருக்கலாம். அதுக்குள்ள நரி போயிடும். நாமளும் போயிடலாம்”

ப்ரீத்தி மோகினி இழுத்துச் சென்ற வழியே சென்று ஒரு பெரிய கற்பாறையின் பின்புறமிருந்த சிறிய பிளவு போன்ற துவாரத்தில் நுழைந்தாள். வெளியே மங்கலான வெளிச்சம் தெரிந்தும் உள்ளே கும்மிருட்டாக இருந்தது.

“ஒண்ணுமே தெரியலியே மோகினி. வேற ஏதாச்சும் மிருகம் இருந்தா ?”

“பயப்படாதீங்கம்மா.. நெருப்பு பத்த வைக்கலாம்”

அடுத்த நொடி ஒரு தீக்குச்சி உரசும் சத்தமும் அதைத் தொடர்ந்து ஒரு இடத்தில் நெருப்பு ஜ்வாலையும் தெரிந்தது. ஒரு நிமிடத்தில் சில காய்ந்த கட்டைகளும், வைக்கோலுமாக ஒரு சிறிய தீக்குண்டம் போல எரிய அந்த சிறிய குகையின் உட்புறம் அவர்கள் கண்ணுக்கு நன்றாகத் தெரிந்தது. தரை எல்லாம் சுத்தமாக இருக்க ஒரு பக்க சுவரில் விக்னேஷ்-ப்ரீத்தி இருவருடைய நிச்சயதார்த்த சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதைக் கண்டு ப்ரீத்தி திகைத்துப் போய் “இங்கே யாரு ஒட்டி வச்சிருக்காங்க ?” என்றாள்.

“என்னம்மா அப்படி கேக்குறீங்க ? இளையராஜா கல்யாணத்தை எதிர்பார்த்து இந்த ஜமீனே காத்துகிட்டு இருக்குதே ?” என்ற மோகினி “இந்த குகைக்கு ஒரு கதை கூட இருக்குதும்மா” என்றாள்

ஆர்வத்துடன் அவளைப் பார்த்து “என்ன கதை அது ?” என்றாள்.

“இந்த காட்டாறு எப்பவும் காஞ்சுதான் கெடக்கும். எப்பவாச்சும் திடீர்னு வெள்ளம் வரும். அதோ அந்தப் பக்கம் ஒரு ஏரி இருக்குது. கொக்கு சுட வரவங்க மழை ஏதுனாச்சும் வந்திட்டா இந்த குகையிலே ஒதுங்குவாங்க. ஆத்துக்கு அந்தக்கரையிலேதான் ராஜ்கிரி ஜமீன் பங்களா இருக்குது. ஒரு சமயம் அங்கிருந்து வேட்டையாட வந்த ஒருத்தருக்கும் இங்கே புல்லு வெட்டிகிட்டு இருந்த ஒரு பொண்ணுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு போயி நல்லா பழகிட்டாங்க. அந்த விசயம் யாருக்கும் தெரியாமலே இருந்திச்சு. அதுக்கு பொறவு அவங்க எப்பவும் இந்த குகையிலேதான் தினமும் சந்திச்சு பேசி பழகுவாங்களாம்.”

“வாவ்.. வெரி நைஸ்.. அப்புறம் ? ”

“போங்க ராணிம்மா. எனக்கு வெக்கமா இருக்குது ?”

மோகினி முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு சிரித்தாள். பிறகு தன் மார்பில் தொங்கிக் கொண்டு இருந்த சங்கிலியை எடுத்து உதடுகளில் வைத்துப் பிடித்துக் கொண்டு மோகனமாய் சிரித்தபடி “அய்யோடா” என்றாள்.

“சொல்லு சொல்லு”

“அப்படி ஒரு நாள் அவ்ங்க இங்கே இருக்கையிலே திடீர்னு மின்னல் இடியோட நல்ல மழை வந்திரிச்சு. அப்புறம் அன்னைக்கு இந்த காட்டாத்துல வெள்ளம் வந்திரிச்சு. அந்த மனுசனுக்கு எப்படியாச்சும் ஆத்தைக் கடந்து போயே தீர வேண்டிய கட்டாயம் இருந்திச்சு. அதனாலே தண்ணியிலே எறங்கிட்டாரு. ஆனா வெள்ளம் இழுத்துக்கிட்டு போக ஆரம்பிச்சது. அதனாலே அந்த பொண்ணு தண்ணியிலே குதிச்சு எப்படியோ அவரை எதிர்க்கரையிலே இழுத்து விட்டு அவ மட்டும் தண்ணியோட போயிட்டா”

ப்ரீத்தியின் மனம் லேசாக பாரமானது.

“அன்னையிலிருந்து இந்த குகை பக்கம் யாரும் அதிகம் வரதில்லை”

“அப்போ இந்த போஸ்டர் எல்லாம் எப்படி வந்திச்சு ? யாரு ஒட்டினாங்க ? ”

மோகினி முத்துப் பல தெரிய புன்னகை செய்தபடி ” நா மட்டும் இந்தப் பக்கமா வந்தா இங்கே வருவேன்மா.. இதெல்லாம் நாந்தான் ஒட்டி வச்சேன்” என்றாள்.

ப்ரீத்தி அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்க மோகினி”குளிருக்கு இதமா இந்த நெருப்பு சூடா இருக்குது.. அப்படியே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்கம்ம” என்றாள்.

கீழே கிடந்த பழைய பேப்பரின் மேல் அம்ர்ந்த ப்ரீத்தி உடல் தளர்வதை உணர்ந்தாள். வெளியே பெய்த மழையின் சப்தம் தாலாட்டாக ஒலிக்க ப்ரீத்தியின் கண்கள் மெதுவே செருகிக் கொண்டன. இமைகள் மூடிக்கொள்ள இதமான உறக்கத்தில் மூழ்கிப் போனாள்.

ப்ரீத்தி மெல்ல கண் விழித்தபோது மோகினியைக் காணவில்லை. எரிந்து கொண்டிருந்த தீ அணைந்து கங்குகளின் வெளிச்சம் மட்டுமே தெரிந்தது. மெல்ல எழுந்து குகையை விட்டு வெளியே வந்தாள். மங்கிய வெளிச்சத்தில் லேசான சிலுசிலுப்புடன் வீசிக் கொண்டிருந்த மாலைக் காற்றில் சற்று தூரத்தில் இருந்த சரிவில் தெரிந்த காட்டாற்றில் தண்ணீர் எதுவும் இல்லாதது தெரிந்தது. :மெதுவாக ஆற்றங்கரையிய நோக்கி அவள் நடந்த போது அருகிலிருந்த மரத்தடியில் இருந்த நரி கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கி பதுங்கிக் கொண்டது.

ஆற்றைக் கடந்து மேடு ஏறி பாதையில் திரும்பியபோது வரிசையாக நின்ற கார்களும், எதிரில் தெரிந்த பளீரென்ற விளக்கொளியும் அவள் ஜமீன் பங்களாவை அடைந்து விட்டாள் என்று காட்டியது. அவள் மீண்டும் திரும்பி ஆற்றின் பக்கம் தன் பார்வையை ஓட விட்டாள். இப்போது அந்த நரியின் கண்கள் அரையிருட்டில் மின்னுவது தெரிந்தது. அவள் பார்த்ததும் அதன் பிரஷ் போன்ற வாலைச் சுழற்றியபடி அது பாய்ந்து ஓடி மறைந்தது.

ப்ரீத்தி பங்களாவை நோக்கி நடந்தாள்.

************************

சற்றே தூக்கக் கலக்கமாக இருப்பது போன்ற உணர்விலிருந்து தலையை உலுக்கி வெளியே வந்தான் ஷ்யாம். மங்கலான வெளிச்சத்தில் பாட்டி ஒரு சின்ன கிண்ணத்தில் ஏதோ எண்ணெயை எடுத்து வந்திருந்தாள்.

“காலை காட்டு கண்ணு. சின்ன சுளுக்கா இருந்தா ஒரு நொடியிலே சரியாயிடும்”

அவன் நம்பிக்கை இல்லாமல் காலை நீட்ட பாட்டி எண்ணெயை விட்டு வழித்து காலைத் திருப்பினாள். “டொக்” என்ற சத்தமும் ஒரு சின்ன கம்பினால் லேசாக அடிப்பது போன்ற வலியும் தோன்ற ஷ்யாம் “அம்மா..” என்று கத்தி விட்டான். ஆனால் அடுத்த நிமிடமே பாட்டி அவன் காலை திருப்பி திருப்பிக் காட்ட அது வலிக்காதது கண்டு திகைத்துப் போனான்.

“பாட்டி.. யூ ஆர் கிரேட்.. சுப்பர்ப்” என்றபடி எழுந்து நின்றவன் காலில் எந்த வலியுமே இல்லை. வெளியே இருந்தும் எந்த சத்தமும் கேட்கவில்லை. அந்த மௌனம் என்னவோ போல மனதில் தோன்ற அவன் குடிசையின் கதவைத் திறந்தான்.

மழை சுத்தமாக நின்று போயிருந்தது. இருட்டும் குறைந்திருக்க மாலையும் இரவும் சேரும் அந்தியின் சாம்பல் வண்ணம் எல்லா இடங்களிலும் பரவிக் கிடந்தது.

“அடடா.. இப்படி சட்டுனு மழை நின்னு போகும்னு தெரிஞ்சிருந்தா ப்ரீத்தியை போகவே விட்டிருக்க மாட்டேன்”

“காரு வேலை பாக்குதான்னு பாக்கணுமே கண்ணு ?”

“யெஸ் யெஸ்” என்றபடி சட்டென்று தன்னை மறந்தவனாக ஷ்யாம் வேகமாக இறங்கி காரில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தான். எந்த தடையும் இல்லாமல் இஞ்ஜின் “உர்ர்ர்” என்று சத்தம் கொடுத்தது. அவன் முகத்தில் ஆனந்தம்.

காரிலிருந்து எட்டிப் பார்த்து பாட்டியிடம் “பாட்டி.. கார் ஸ்டார்ட் ஆயிடிச்சு. நான் மெதுவா கிளம்பி பங்களா போயிடுவேன். அங்கிருந்து ஆளுங்க யாராச்சும் வந்தா சொல்லிடுங்க. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி” என்று சொல்லியபடியே காரை நகர்த்தினான். சற்று தூரம் போனபிறகுதான் ப்ரீத்தி பாட்டியையும் வரச்சொல்லி அழைத்திருந்தது நினைவுக்கு வந்தது. அதனால் அவளையும் அழைத்துக் கொண்டு போகலாமோ என்று நினைத்த்படி மெதுவாக ரிவர்ஸ் எடுத்து வந்து நிறுத்திவிட்டு ஜன்னல் வழியாக பார்த்தவன் உறைந்து போனான்.

அவன் கண்ணுக்கு எட்டிய வரை அந்த மேட்டில் எந்த குடிசையும் தென்படவில்லை. படபடக்கும் இதயத்தை சமாதானப் படுத்தியபடியே இறங்கி ந்டந்து போனான். அந்த குடிசை இருந்த இடத்தில் நொறுங்கி கிடந்த பானைகளும், சில மூங்கில் கம்புகளும், மழையில் நனைந்து அழுகிய ஓலைகளும் மட்டுமே இருந்தன.

“பாட்டி.. பாட்டி”

அவன் குரலுக்கு ஊதல் காற்றின் மெல்லிய ரீங்காரம் மட்டுமே பதிலாக கிடைத்தது. உடம்பெல்லாம் ஏதோ பனியால் செய்த விரல்கள் வருடுவது போலத் தோன்ற “ப்ரீத்தி.. ” என்று உச்சரித்தவன் மனதுக்குள் நடுக்கம் தோன்ற பாய்ந்து சென்று காரில் ஏறிக் கிளப்பினான். சற்று தூரம் சென்றதுமே மங்கிய மாலை வெளிச்சத்தில் அந்த பாதை ஒரு சாலையுடன் இணைவது தெரிந்தது. அதிலே சில வண்டிகள் செல்வதும் தெரிந்தது. அந்த சந்திப்பில் ஒரு நிமிடம் நிறுத்தியபோதுதான் அங்கே மழை பெய்த சுவடே இல்லை என்பதும் தெரிந்தது.

வலது புறம் செல்லும் சாலையின் ஓரத்தில் “ராஜகிரி 18 கி.மீ” என்ற பலகை தெரிந்தது. ஏற்கனவே குடிசை அருகிலேயே அதே தூரத்தை பலகை காட்டியது நினைவுக்கு வர தான் வந்த பாதையை திரும்பிப் பார்த்தவனின் மூச்சு மறுபடி நின்று போனது போலாயிற்று. அவனுக்குப் பின்னே எந்த சாலையோ பாதையோ இல்லை. அவன் வந்த வழியைக் காணவே இல்லை. வெறும் புதர்கள் மட்டுமே அடர்ந்து கிடந்தன.

நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைக்கவும் மறந்து காரைக் கிளப்பிக் கொண்டு புயல் வேகத்தில் ராஜகிரியை நோக்கி விரைந்தான்.

சிறிய குன்றின் சரிவில் அழகாக வண்ண விளக்குகளாலும், கொடிகள், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜமீன் பங்களா அழகாக மின்னிக் கொண்டு இருந்தது. அவன் கார் அம்பு போல பாய்ந்து நின்றதும் அதே வேகத்தில் ஷ்யாம் இறங்கி ஓடினான்.

“என்ன ஷ்யாம் ? ஏன் இப்படி ஓடி வரே ?” என்றபடி அவன் அப்பா எதிரில் வந்தார்.

“டாட்.. ப்ரீத்தி.. ப்ரீத்தி”

“எதுக்கு இப்படி மூச்சு வாங்குறே ? ரிலாக்ஸ்.. ப்ரீத்தி வந்ததுமே சொல்லிட்டா. நீ கார் ரிப்பேராகி வழியிலே நிக்கிறதையும் அதை சரி செஞ்சு எடுத்துகிட்டு வந்துடுவே அப்படிங்கறதையும். சோ.. டோண்ட் வொர்ரி.. ”

அவர் பேசுமுன் ஜமீந்தார் ஜம்புலிங்கமே அங்கு வந்தார்.

“வாங்க தம்பி. மன்னிச்சுக்குங்க. இப்போதான் மெகானிக்கை அனுப்ப ஏற்பாடு செஞ்சேன். அதுக்குள்ள நீங்களே வந்து சேர்ந்துட்டீங்க”

ஷ்யாம் கொஞ்சம் அமைதியானான்.

“ஓகே.. டாட்.. நான் கொஞ்சம் ரிஃப்ரெஷ் செஞ்சுகிட்டு வரேன்” என்றதும் ஜமீந்தார் “டேய் வேலு.. தம்பியுடைய லக்கேஜ் எல்லாம் காரிலே இருந்து எடுத்து ரூமுக்கு கொண்டு போ” என்றார்.

சற்றே நகர்ந்து போனபோது எதிரில் அம்மாவுடனும் வேறு இரண்டு பெண்களுடனும் ப்ரீத்தி வருவது தெரிந்தது. சற்றே பரபரப்புடன் அவளை நெருங்கினான்.

“ப்ரீத்தி..”

அவள் சிரித்துக் கொண்டே “நீ என்ன சொல்லப் போறேன்னு தெரியும் ஷ்யாம். இங்கே வந்ததும் நானும் அதைப் பத்தி எல்லாம் கேள்விப்பட்டேன். அதெல்லாம் ஒரு பெரிய கதை. நிதானமா அப்புறமா பேசலாம். நத்திங் டு வொர்ரி” என்றாள்.

அவள் முகத்தில் தெரிந்த புன்னகையைப் பார்த்ததும் சமாதானமாகிப் போன மனதுடன் ஷ்யாம் நகர சற்று தள்ளி நின்ற இருவர் பேசியது காதில் கேட்டது.

“ம்ம்.. அன்னைக்கு வெள்ளத்துல மாட்டிகிட்டபோது அந்த பொண்ணு காப்பாத்தாம போயிருந்தா சின்ன ஜமீந்தார் உசிரு இத்தனை நேரம் இல்லாம போயிருக்கும். பாவம் ! அது போய் சேர்ந்திடுச்சு. அதோட பாட்டியும் காணாம போயிடுச்சு. அப்போதிலிருந்து மனசு வெறுத்து கிடந்த சின்னவர் இப்போவாச்சும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாரே. அதுவரைக்கும் ஜமீன் குடும்பத்தில் சந்தோஷம் வந்து சேர்ந்துச்சு. எல்லாமே நல்லதுக்குதான்.”

தன்னையும் அறியாமல் ஷ்யாம் திரும்பிப் பார்த்தபோது ப்ரீத்தியை அவன் அம்மா யாரோ ஒரு பெரிய மனிதரின் மனைவியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்க அவள் புன்னகையுடன் அவர்களை நோக்கி “நைஸ் டு மீட் யூ” என்றபடி கை குலுக்கிக் கொண்டு இருந்தாள்.

ஷ்யாம் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் திரும்பி நடந்தான்.

ப்ரீத்தி அவன் போவதைப் பார்த்தாள். பிறகு தன் மார்பில் தொங்கிக் கொண்டு இருந்த சங்கிலியை எடுத்து உதடுகளில் வைத்துப் பிடித்துக் கொண்டு மோகனமாய் சிரித்தபடி “அய்யோடா” என்றாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “அய்யோடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *