கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் கிரைம்
கதைப்பதிவு: January 30, 2024
பார்வையிட்டோர்: 13,767 
 

(1992ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30

அத்தியாயம்-21

இவ்வாறு நான் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே சித்தய்யன் என்னை நெருங்கி விட்டார். என்னை நெருங்கியதும் அவர் என்னை நிமிர்ந்து பார்த்தார். எதிர்கால முதலாளி என்ற நினைப்பிலே எனக்கு வணக்கம் செலுத்தினார் அந்த வணக்கத்தில் மாமூலான மரியாதை இருந்ததே அல்லாமல். உண்மையான மதிப்பில்லை. ராமலிங்கத்தின் மகள் சீதாவின் மனத்தைத் திடீரென்று தோன்றிக் கவர்ந்த காதலன் என்று சித்தய்யன் நினைக்கிறாரோ? காதல் காரணமாகத் தன் மகளை யாரோ முன்பின் தெரியாத லாரி டிரைவருக்கு இழந்தவர், ராமலிங்கத்தைத் தன் நிலையில்தானே வைத்துப் பார்ப்பார்? சித்தய்யன் கண்களில் காதலே ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகவும், நானும் ஒரு குற்றவாளியாகவும் தோன்றுவதில் என்ன ஆச்சரியம்! 

உடனே அவரை வலுவில் நிறுத்திச் சில வார்த்தைகள் பேசி அவருடைய நன்மதிப்பைப் பெற வேண்டுமென்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. “ஐயா! நீங்கள் உங்கள் உடலைக் கவனித்துக் கொள்ளவேண்டும்” என்று உபசார வார்த்தை சொன்னேன். 

அவர் அதற்கு எந்தவித பதிலும் சொல்லவில்லை. சோகமாகப் புன்னகை செய்தார். பக்கத்திலிருந்த சிமெண்ட் பெஞ்சைக் காட்டி, “உட்காருங்கள் சித்தய்யா!” என்றேன். 

“பரவாயில்லை.” என்று சொல்லி நின்று கொண்டே இருந்தார். 

முதலாளிக்கு முன்னால் உட்காருவது தவறு என்ற முறையை எனக்கு எடுத்துக் காட்டினார். அவரிடம் என்ன பேசுவது என்றே தோன்றவில்லை. நானும் மௌனமாய் இருந்தேன். அவரும் தலை குனிந்தபடி மௌனமாய் இருந்தார். திடீரென்று எனக்கொரு எண்ணம் தோன்றியது. “என்ன மிஸ்டர் சித்தய்யன். நீங்கள் முப்பது வருஷமாய் இந்த எஸ்டேட்டில் வேலை செய்பவர் அல்லவா?”

சித்தய்யன், “ஆம்.” என்றார்.  

“இந்த மல்லிகைத் தோட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

சித்தய்யன் உடனே பதில் சொல்லவில்லை. என்னை உற்றுப் பார்த்துவிட்டு, “எதற்குக் கேட் கிறீர்கள்? அந்த வீட்டை வாங்கப் போறீங்களா?” என்று கேட்டார். 

அவர் கேள்வி கேட்ட விதத்தில் ஒரு பயம் தொனித்தது. ”ஏன், நம் பங்களாவின் அருகில் இருக்கிறது. வாங்கினால் என்ன?” என்றேன். 

சித்தய்யன். “வேண்டாம் எஜமான். அந்தப் பங்களா ராசியில்லை. அதில் வாழ்ந்தவர்கள் யாருமே சரியாக இல்லைங்க. அது மட்டுமில்லை…” என்று சொல்லி விட்டு வாக்கியத்தை முடிக்காமலே விட்டார். 

நான் உடனே ”என்னங்க. ஏதோ சொல்ல வந்தீங்க, பாதியிலேயே நிறுத்திட்டீங்களே?” என்று கேட்டேன். சித்தய்யன் தனக்குப் புரியாத, பிடிக்காத விஷயத்தைப் பேச முற்படுபவர் போல ஒரு வினாடி தயங்கினார். பிறகு சமாளித்துக் கொண்டு பின்வரும் விளக்கத்தையும் கொடுத்தார். “அந்த வீட்டைக் கட்டின மல்லிகை அம்மாள் முடிவைப் பற்றி பலவிதமாகப் பேசறாங்க ஸார். சில பேர் திருச்சியிலே காவிரியிலே விழுந்துட்டாங்க என்று சொல்றாங்க. சிலபேர் திருச்சியிலேயிருந்து திரும்பி வந்து இங்கே எங்கோ பாறையில் இருந்து விழுந்துட்ட தாகச் சொல்றாங்க. அந்த அம்மா இங்கிருந்தப்போ கூட யாரும் அந்த வீட்டுக்குப் போக மாட்டாங்க. மலையாள மந்திரவாதி ஒருத்தன் கூடவே இருந்துகிட்டிருந்தான். அப்புறம் பர்மாவிலிருந்து ஓர் ஆள் வந்திருந்தான். அவன் அந்த அம்மாவைத் தன் இஷ்டப்படி ஆட்டி வைத்தானுங்க!” 

நான், “அந்த மல்லிகையம்மாளுக்குப் புருஷன் இல்லீங்களா?” என்று கேட்டேன். 

“புருஷன் கோயமுத்தூரிலேயே இருந்தார். இந்த அம்மா அவரை விட்டுச் சின்ன வயதிலேயே பிரிஞ்சு வந்துட்டாங்க. அந்த அம்மாள் சாகறத்துக்கு முந்தி, யாரோ ஒரு போட்டோகிராபராம் – அவர் மேலே அந்த அம்மா உயிரையே வச்சிருந்தாங்களாம். அவரோட தான் திருச்சிக்குப் போனாங்களாம். ஆனால் அவரு அந்தம்மாளைத் திருச்சி ஸ்டேஷனிலேயே விட்டுட்டுப் போயிட்டாராம்”. 

போட்டோகிராபர் என்றதும், எனக்கு என் தந்தையின் ஞாபகம் வந்தது. ஆனால் என் தந்தையின் லீலா வினோதங்களில் ஊட்டி இடம் பெற்றதாகத் தெரியவில்லை. ஆகையால் சித்தய்யனை மேலே துருவிக் கேட்டேன். “மல்லிகை அம்மாள்தான் இறந்து போயிட்டாங்களே. இப்ப மேஜர்தானே இருக்காரு? அவர் நல்லாத்தானே இருக்கார்? அந்த வீட்டை வாங்கறதிலே என்ன தப்பு?”

சித்தய்யன் சிறிது நேரம் திகைத்தார். பிறகு “மல்விகையம்மா செத்தப்புறம் அந்த வீடு மூன்று வருஷம் பூட்டியே இருந்ததுங்க. ஆனால் கூலியாட்கள் பூட்டின வீட்டிலே ராத்திரி விளக்கு எரிஞ்சதாகச் சொன்னாங்க. மேஜர் வந்தப்புறம் கூட வேலைக்காரங்க யாருமே அவர் வீட்டிலே ராத்திரி வேளையிலே தங்கறதில்லீங்க. அந்த மேஜரு எப்படித்தான் தனியா இருக்காரோ தெரியலை,” என்றார். 

நான் உடனே, “மேஜர் தனியா இல்லையே! அவர் மகளோடு தான் இருக்கார்.” என்றேன். 

உடனே சித்தய்யன், “மகளா? நான் அவர் மகளைப் பார்த்ததில்லீங்க. ஒருவேளை இப்போ சமீபத்திலே வந்தாங்களோ என்னமோ!” என்றார். 

அதற்குமேல் நான் சித்தய்யனிடம் ஒன்றும் பேசவில்லை. நேரே வீட்டிற்கு வந்தேன், சிந்தனையில் ஆழ்ந்தபடி. சித்ரா பௌர்ணமியன்று காவிரிக் கரையில்தான் எனக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்பட்டது. அதற்கப்புறம் தொடர்ந்து எனக்கு இம்மாதிரி அனுபவங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. எனக்குள்ளே இரண்டு பகுதிகள் இருப்பதை உணர்ந்தேன். இரு பகுதி என்னையும் மீறி எங்கோ இழுப்பதை உணர்ந்தேன். நான் நானாகவே வாழ வேண்டுமானால், ஊட்டி, திருச்சி இரண்டு ஊர்களையும் மறக்க வேண்டும் என்று தோன்றியது. 

ராமலிங்கம் சென்னையிலே வீடு பார்த்துவிட்டார் என்பதிலே எனக்குப் பெரிய நிம்மதி ஏற்பட்டது. ராமநாதன் ராமலிங்கத்தினிடமிருந்து வந்த தந்தியைக் காட்டினான். அதில் அவர் சீதாவோடும், என் தாயாரோடும் சென்னை வந்து சேர்ந்துவிட்ட விவரத்தைக் குறித்திருந்தார். அந்தத் தந்தியைப் பார்த்ததும் எனக்கு உடனே சென்னைக்குப் போக வேண்டும் என்ற ஆவல் மறுபடியும் என் மனத்தில் தலை தூக்கியது. நான் ராமநாதனிடம், “கார் இல்லாவிட்டால் என்ன? எனக்கு அம்மாவைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. இன்று காலை ரயிலிலேயே போய்விடலாம் என்று பார்க்கிறேன்,” என்று கூறினேன். 

ராமநாதன் லேசாகச் சிரித்தபடி, “உண்மையிலேயே நீ அம்மாவைப் பார்க்கவா துடிக்கிறாய்? சரி, இங்கு இருக்க உனக்குப் பிடிக்கவில்லை என்றால், நீ ரயிலில் போய் விடு. நான் இரண்டுநாள் கழித்துத் தான் புறப்படப் போகிறேன்.” என்றான். 

எனக்கு விடுமுறைக்குப் பள்ளிக்கூடம் மூடும் நாளன்று குழந்தைகளுக்கு ஏற்படும் குதூகலம் ஏற்பட்டது. உடனே ஆளனுப்பி, சென்னைக்கு முதலாவது வகுப்பில் டிக்கெட் வாங்க ஏற்பாடு செய்தேன். நான் புறப்படுவதற்குள் மேஜர் மாயநாதன் வராமல் இருக்கவேண்டுமே என்று ஆண்டவனை வேண்டிச் சென்றேன். சிறையிலிருந்து தப்பிவிடத் திட்டமிட்டிருக்கும் கைதியைப் போல ரகசியமாக என் சாமான்களை எடுத்து வைத்தேன். 

ராமநாதன் ஊட்டி ஸ்டேஷனுக்கு வந்து என்னை வழி அனுப்பி வைத்தான். ரயில் ஊட்டியை விட்டு நகர்ந்ததும் நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். 

அன்றிரவு ரயிலில் அயர்ந்து தூங்கியதைப் போல் நான் ஒரு வருஷத்தில் தூங்கினதே இல்லை. விடிந்து ரயில் சென்னை சென்ட்ரல் ஸ்டே ஷன் வந்ததே எனக்குத் தெரியாது. பிரயாணிகள் சாமான்களை நகர்த்தும் ஓசையில் விழித்துக் கொண்டேன். பெட்டியை அவசர அவசரமாகச் சுருட்டி வைத்து விட்டுச் சாமான்களைப் போர்ட்டரிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். 

சுளீரென்று அடிக்கும் காலை வெய்யிலில் சென்னை நகரம் வெப்பமாக இருந்தபோதிலும், எனக்கு ஊட்டியை விடச் சென்னை எவ்வளவோ மடங்கு பரவாயில்லை என்று தோன்றியது. திக்கு தெரியாத சமுத்திரத்தில் தத்தளிக்கும் மாலுமி நிலப்பரப்பைப் பார்த்ததும் அடையும் ஆனந்தத்தை வெளியே வந்ததும் அடைந்தேன். 

சென்னை ஒரு பொன்னகரம். இந்தப் பொன்னகரத்தில் என் தங்க மேனி சீதா இருக்கிறாள். இன்னும் சில வினாடிகளில் நான் அவளைப் பார்க்கப் போகிறேன் என்ற மகிழ்ச்சியில் துள்ளு நடை போட்டுப் போர்ட்டரின் பின்னால் நடந்தேன். போர்ட்டர் என் சாமான்களைக் கொண்டு போய் டாக்ஸியில் வைத்தான். அவனுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு டாக்ஸி டிரைவரிடம் ராமலிங்கத்தின் விலாசத்தைச் சொல்லி ஓட்டச் சொன்னேன். டாக்ஸி சென்டிரலை விட்டு நகர்ந்து ஜெனரல் ஆஸ்பத்திரி அருகில் சாலையில் திரும்பியது. 

அப்பொழுது எங்கள் டாக்ஸி யைத் தாண்டி வேகமாக ஒரு கார் சென்றது. அந்தக் காரின் பின் சீட்டிலிருந்து ஒரு உருவம் திரும்பி நான் ஏறிவரும் டாக்ஸியைப் பார்த்தது. அது ஆனந்தியேதான்! அந்தக் காரில் சென்று கொண்டிருந்தாள். அதே வெளுப்பான முகம். அதே கறுத்த கண்கள். ரத்தச் சிவப்பான உதடுகள். அந்த ரத்தச் சிவப்பான உதடுகள் விரிந்து என்னைப் பார்த்துச் சிரித்தன. அடுத்த வினாடியே அந்தக் கார் வேகமாகச் சென்று மறைந்தது. என் புலன்கள் அப்படியே கலங்கி விட்டன. 


ஜட்ஜ் மணிவாசகம், திலீபனின் டயரியைப் படிப்பதை நிறுத்தச் சொன்னார். அதோடு அன்று விசாரணையை நிறுத்திக் கொண்டு மறுநாள் திலீபன் டயரியை மறுபடியும் படிப்பது என்று தீர்மானித்தார். பிராசிகூடர், ராமநாதன் தரப்பு வக்கீல் மற்றக் கோர்ட் சிப்பந்திகள் எல்லோரும் திகைப்போடு காணப்பட்டனர். 

பிராசிகூடர், “ஸ்ட்ரேஞ்ச் கேஸ்! ஸ்ட்ரேஞ்ச் டயரி!” என்று சொன்னார். 

ஜட்ஜ் மணிவாசகம் பின்பு குழப்பத்தோடு ராமநாதனைப் பார்த்துவிட்டு, “இந்த டயரியைப் படிக்கும்போது இது உண்மையிலேயே நடந்ததா, அப்படி நடந்திருந்தால் நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது”, என்று சொன்னார். 

மாலை மணி ஐந்து அடித்தது. எல்லோரும் எழுந்து சென்றனர். ராமனாதனும், போலீஸ் வானுக்கு அழைத்துச் செல்லப்பட்டான். 


மணிவாசகம் வீடு சென்றதும் ராமநாதன் கேஸ் விவரங்களை யோசனை செய்தார். 

அவருடைய மனத்தில் கடந்த கால விஷயங்கள் எல்லாம் திரைப்படத் திரையில் நிகழும் காட்சிகள் போல் தெளிவாகத் தெரிந்தன. 

ஒருநாள் நள்ளிரவில் ராமநாதன் திலீபன் வைக்கப்பட்டிருக்கும் டாக்டர் ஷண்முகசுந்தரம் மருத்துவமனைக்குச் சென்றான். அங்கு திலீபனைச் சுடுகிறான். திலீபன் வாழாமலும் சாகாமலும் குற்றுயிராய்க் கிடக்கிறான். ராமநாதன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகிறான். அவன் ரகசிய விசாரணையில் கொடுத்த வாக்குமூலப்படி: ராமநாதனின் தந்தை இறந்தது; அதன் பின்பு திலீபனும் அவன் தாயும் திருச்சியிலுள்ள ராமலிங்கம் வீட்டிற்கு வந்து லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நகைகளைத் திருப்பித் தந்தது; ராமலிங்கம் மீனாட்சியம்மாளையும் திலீபனையும் அந்த வீட்டிலேயே தங்கும்படி வேண்டிக் கொண்டது; திலீபனிடம் பல திறப்பட்ட திறமைகள் இருந்தும் அவன் ஒருவாறு ஒதுங்கியே வாழ்ந்து வந்தது; திலீபனின் அசாதாரண திறமைகள்; அவனது புதைமனது ஆராய்ச்சி; ஹிப்னாடிசம் போன்ற விபரீத விஷயங்களில் உள்ள பற்று இவைகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தார். இதுவரையில் ஜட்ஜ் மணிவாசகத்திற்கு விஷயங்கள் எல்லாம் நம்பும்படியாகவே இருந்தன. ஆனால் அடுத்தபடியாக திலீபன் டைரியில் குறிக்கப்பட்டிருந்த விஷயங்களைத்தான் அவரால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. 

சித்ரா பௌர்ணமியன்று காவேரிக் கரையில் திலீபன் கண்ட காட்சி, திலீபன் அடிக்கடி தன் டைரியில் குறிப்பிடும் தோற்றங்கள், மல்லிகைப் பூ மணம், இவற்றையெல்லாம் சித்தம் குழம்பியவன் கிறுக்கி வைத்த பிதற்றல் என்று தள்ளுவதா அல்லது புரியாத ஒரு துறையில் ஆவி ஆராய்ச்சி செய்த ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என்று கொள்வதா என்று ஜட்ஜுக்குப் புரியவில்லை. 

உடனே தன்னுடைய புத்தகசாலையில் உள்ள ஸா ஆலிவர் லாட் போன்ற அறிவாளிகள், மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை பற்றி எழுதிய புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். படித்துக் கொண்டே இருந்தவர் மணி இரண்டடித்ததும்தான், தான் இன்னும் தூங்கவில்லை என்பதை உணர்ந்தார். 

திடீரென்று அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. உடனடியாக, இந்தக் கேஸில் உள்ள விஷயங்களில் நெருங்கிய சம்பந்தம் கொண்டவர் இருவர், அதாவது மேஜர் மாயநாதனும், ஆனந்தியும். அவர்கள் இருவரும்தான் திலீபன் டைரியில் குறிக்கப்பட்டிருக்கும் நம்ப முடியாத நிகழ்ச்சிகளின் மத்திய பாத்திரங்கள். அவர்களின் வாக்குமூலம் இல்லாமல் திலீபனின் டைரியை ஒரு சாட்சியாகக் கருதுவதே ஆபத்தாக முடியும் என்ற எண்ணம் ஜட்ஜ் மணிவாசகம் பிள்ளையின் மனத்தில் உதித்தது. 

ஜட்ஜ் மணிவாசகம் ராமநாதன் கேஸ் விஷயமாக நியமிக்கப் பட்டிருந்த பிராசிகூடருக்கு டெலிபோன் செய்தார். சற்று தாமதமான பின்புதான் பிராசிகூடர் டெலிபோனில் கிடைத்தார். 

ஜட்ஜ், “சென்னையில் மேஜர் மாயநாதன் தங்கியிருக்கும் வீட்டைச் சோதனை இட்டீர்களா?” என்று கேட்டார். 

ராமநாதன் வீட்டில் டைரி கிடைத்த உடனேயே இன்ஸ்பெக்டர் சென்று சோதனை இட்டதாகவும், மேஜர் மாயநாதனோ, ஆனந்தியோ எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றும் பிராசிகூடர் டெலிபோனில் பதிலளித்தார். 

ஜட்ஜ் மறுமுறை அந்த வீட்டைச் சோதனையிட்டு அதில் உள்ள ஒரு வீணையைக் கோர்ட்டுக்கு எடுத்து வரும்படி கட்டளையிட்டார். பிராசிகூடர் உத்தரவுப்படி செய்வதாக ஒப்புக் கொண்டதும் ஜட்ஜ் மணிவாசகம் படுக்கச் சென்றார். 

அத்தியாயம்-22

பிராசிக்யூடர், பாஸ்கர் என்ற இன்ஸ்பெக்டரையும். கான்ஸ்டபிள்களையும் அடையாறு எலியட்ஸ் பீச்சுக்குப் போகும் வழியிலுள்ள மேஜர் மாயநாதன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். 

இதே நேரத்தில் டாக்டர் சண்முக சுந்தரம் மருத்துவமனையில் திலீபன் படுத்திருக்கும் அறையில் டாக்டர் உட்கார்ந்திருந்தார். திலீபன் கண்களை மூடிப் படுத்திருந்தான். அவன் மூச்சு லேசாக வந்து போய்க் கொண்டிருந்தது. அவனுடைய இதயம் மெள்ள வேலை செய்தபடி இருந் தது. அது கூட எப்போது நின்று விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஆனால் இதே நிலையில்தான் திலீபன் இதயம் கடந்த பல நாட்களாகவே இருந்து வந்தது. ஆனால் அது நிற்கவே இல்லை. ஒவ்வொரு நாளும் சண்முக சுந்தரம் திலீபனின் மரணத்தைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அது ஏற்படவில்லை. திலீபன் தேகம் குணமடையவு மில்லை. 

இந்த விசித்திர நிலையைக் காட்டி அபிப்பிராயம் தெரிந்து கொள்ள சிறந்த தேர்ந்த டாக்டர் நண்பர்களை அழைத்து வந்தார். அவர்களும் திலீபனின் தேகத்தைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு ஆச்சரியமே அடைந்தனர். வைத்தியப் படிப்புக்கே இது புரியாத புதிராக இருக்கிறது என்றனர். திலீபனின் அழகிய முகத்தில் தாடி வளர்ந்தபடி இருந்தது. செயற்கை முறையிலே செலுத்திய உணவு ஓரளவு ஜீரணிக்கப்பட்டது. ஆனால் உடல் குணமாகவில்லை. 

டாக்டர் சண்முகசுந்தரத்தின் நண்பரான டாக்டர் நடராஜன் ஒரு பெரிய மருத்துவ நிபுணர். அவர் படுத்திருக்கும் திலீபனைக் கூர்ந்து கவனித்துவிட்டுப் பின்வரும் திகைப்பூட்டும் வாக்கியங்களைக் கூறினார். 

“பார்ப்பதற்கு இவன் உடல் அயர்ந்து படுத்திருப்பது போல் தெரிந்தாலும், இது விழிப்போடுதான் இருக்கிறது என்று தோன்றுகிறது. ஏதோ தக்க காரணத்தோடுதான் இவன் உடல் இந்த மயக்க நிலையில் இருக்கிறது. ஒருவேளை உடலுக்குள் இருக்கும் சக்தி எந்த நிகழ்ச்சிக்கோ, யாருடைய வருகைக்கோ காத்திருக்கலாம்,” என்று கூறி நிறுத்தினார் நடராஜன். 

ஒரு யோசனை தோன்றியது. உடனே டாக்டர் சண்முகசுந்தரத்தை அப்புறம் அழைத்துச் சென்று, அவர் காதில் ஏதோ விஷயங்களைக் கூறி விட்டு ஒரு துப்பாக்கியுடன் திலீபனின் அறைக்குள் நுழைந்தார். பிறகு டாக்டர் சண்முக சுந்தரத்தைப் பார்த்துப் பின்வரும் வாக்கியங்களை சத்தம் போட்டுச் சொன்னார். 

“என்ன டாக்டர்! எத்தனை நாள் இந்த உடலைக் கட்டிக் காக்கப் போகிறீர்கள்? இவனை இப்போதே தலையில் குறிபார்த்துச் சுட்டுவிட்டால் என்ன? மூளை சிதறிய பிறகு, ஆவி எப்படி உடலில் தங்க முடியும்?” என்று சொல்லிவிட்டுத் துப்பாக்கியைப் படுத்திருக்கும் தலைநோக்கிக் கொண்டு சென்றார். 

துப்பாக்கி திலீபனின் தலையில் பட்டதுதான் தாமதம், அவன் கைகள் பாயந்து வந்து, அதைத் தடுத்தன. அடுத்த வினாடி தொய்ந்து விழுந்தன ஆனால் கண்கள் திறக்கவில்லை. உடல் அசையவில்லை. 

டாக்டர் சண்முக சுந்தரமும், டாக்டர் நடராஜனு ம் ஆச்சரியமடைந்தனர் டாக்டர் நடராஜன் சண்முகசுந்தரத்தை வெளியே அழைத்து வந்து, கதவைத் தாளிட்டுப் பூட்டினார் 

பிறகு, “உங்கள் பேஷன்ட்டினுள் ஏதோ ஒன்று இருக்கிறது. அது நம் எண்ணங்களைப் புரிந்து கொள்கிறது- புலன்களின் உதவி இல்லாமல். திலீபன் கண் கொண்டு பார்க்க வில்லை. காது கொண்டு கேட்க வில்லை. ஆனால் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்கிறான். ஆகையால் இந்த உடல் ஆபத்தானது. உடலுக்குள் இருக்கும் அந்த அறிவு, அந்தச் சக்திதான் உடலின் மூளைக்கு ஆபத்து வரக்கூடாது என்று பயப்படுகிறது. மூளையிடம் துப்பாக்கி போனதும், என் கையைத் தடுத்தது. இவ்வளவு சக்தியுள்ள அந்தப் பொருள் – அதைப் ‘பொருள்’ என்று சொல்வதா, இல்லை,ஒளி என்று சொல்வதா, அல்லது ஆவி என்பதா? ஏதோ ஒன்று! அது நினைத்தால் திலீபனின் உடலுக்குச் சீக்கிரமே பலத்தைக் கொடுத்து. அவனை எழுந்து உட்காரச் செய்யலாம். ஏன் அது செய்யவில்லை?” என்று சொல்லி விட்டு, சிந்தித்தபடி இருந்தார். 

அடுத்து ஒரு யோசனை தோன்றியது. “டாக்டர் சண்முகம்! சுடப்பட்ட பின், திலீபனைத் தேடி யாராவது இங்கு வந்தார்களா? யாராவது அவனை நெருங்கத் துடித்தார்களா?’ என்று கேட்டார் அதற்கு டாக்டர் சண்முக சுந்தரம், “ஆம். நான் கோர்ட்டில் சாட்சி சொல்லப் போயிருக்கும்போது, யாரோ ஒரு பெண் திலீபனின் மனைவி என்று கூறிக்கொண்டு. நர்ஸ் காந்தாலிடம் வந்து, பூட்டப் பட்டிருக்கும் அறைக்குள் நுழைய வேண்டுமென்று துடியாய்த் துடித்தாளாம். நர்ஸ் காந்தா அவளை அனுமதிக்க மறுத்தாளாம். அப்போது அந்தப் பெண் அறையின் சாவியைக் காந்தாவிடமிருந்து பறிக்க முயற்சித்தாளாம்,” என்று கூறினார். 

“அப்புறம் என்ன நடந்தது டாக்டர்?” என்று நடராஜன் ஆவலுடன் கேட்டார். 

“அப்புறம், திலீபனின் குரல் அறையிலிருந்து கேட்டதாம். ‘ஆனந்தி! ஆனந்தி!’ என்று அழைத்ததும் அந்தப் பெண், ‘நான் ஆனந்தி அல்ல, நான் ஆனந்தி அல்ல’, என்று சொன்னாளாம். உடனே அறையினுள்ளிருந்து வந்த திலீபன் குரல், ‘என் உடல், பொருள், ஆவி அல்லவா?’ என்றதாம். உடனே அந்தப் பெண் ஓடிவிட்டாளாம்.” என்று டாக்டர் சண்முகசுந்தரம் கூறி முடித்தார். 

இதைக் கேட்ட டாக்டர் நடராஜன், ”நான் நினைத்தது சரி. அன்று ஆனந்தி என்றவள் உள்ளே நுழைய முயற்சிக்கும்போது திலீபன் பேசியிருக்கிறான். நான் துப்பாக்கியைத் தலையின் பக்கம் கொண்டு போனபோது, கை கொண்டு தடுத்திருக்கிறான். மற்றப் பொழுது அவன் உணர்வற்ற சவம்போல் கிடக்கிறான். இதில் பெரிய மர்மம் இருக்கிறது. ஆகையால் வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுப்பாதீர்கள். இவனை ஜாக்கிரதையாகப் பாதுகாத்து வாருங்கள். நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் திரும்பி வருகிறேன்”, என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். 


இதே சமயத்தில் இன்ஸ்பெக்டரும் சில போலீஸ் கான்ஸ்டபிள்களும் பூட்டப்பட்டிருக்கும் மேஜர் மாயநாதன் வீட்டினுள் நுழைந்தனர். 

ஒவ்வொரு அறையாகத் தேடினர். மேஜரோ, ஆனந்தியோ அங்கில்லை. அந்த விசித்திர வீணையும் அங்கு காணப்படவில்லை. ஏமாற்றத்துடன் இன்ஸ்பெக்டரும். கான்ஸ்டபிள்களும் அந்த வீட்டை விட்டு வெளியேறப் போகும்போது, ஒரு விஷயம் இன்ஸ்பெக்டரின் கவனத்துக்கு வந்தது. அதாவது, புகையிலை எரியும் வாசனை இன்ஸ்பெக்டரின் நாசியில் பட்டது. உடனே இன்ஸ்பெக்டர், அறையில் ஒரு மூலையில் ஒரு சுருட்டு கிடப்பதைப் பார்த்தார். அந்தச் சுருட்டின் ஓரத்தில் இன்னமும் நெருப்பு லேசாக எரிந்து கொண்டிருந்தது. இன்ஸ்பெக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. 

இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிள்களும் நுழையும்போது, யாரோ அந்த அறையில் சுருட்டுப் பிடித்தபடி இருந்திருக்க வேண்டும். போலீசாரின் வருகையை உணர்ந்தவுடன் அந்த நபர் சுருட்டை வீசி எறிந்துவிட்டு மறைந்திருக்க வேண்டும். 

பூட்டியிருந்த வீட்டில் எப்படி யாரும் நுழைந்திருக்க முடியும்? மறுபடி எப்படி வெளியேறி இருக்க முடியும்? வீணையை எடுத்துக்கொண்டு எப்படிப் போயிருக்க முடியும்? போன முறை வந்தபோது வீணை அங்கு இருந்ததை அவர் பார்த்திருந்தார். ஆனால் அப்போது இன்ஸ்பெக்டர் அதற்கு அவ்வளவு மதிப்பு தர வில்லை. மறுமுறை அந்த வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் சோதனையிட்டார். ரகசியமான மறைவிடங்களோ, ரகசியப் பாதைகளோ இருக்க நியாயமில்லை. பூட்டிய வீட்டுக்குள் ஒரு முறை வந்தவர்கள் மறுமுறையும் வரலாம் என்று நினைத்தார். அந்த வீட்டுக்குச் சாதாரண உடையோடு இருப்பவரைக் காவல் போடுவதுதான் சரி என்ற முடிவுக்கு வந்தார். 

அந்த முடிவின்படி, அனுபவம் நிறைந்த இரண்டு கான்ஸ்டபிள்களை அந்த வீட்டைக் கண்காணிக்கும்படி ஏற்பாடு செய்தார். ஒருவர் வெளியே இருந்து கண்காணிப்பது என்றும், மற்றவர் உடபுறம் இருந்து கவனிப்பது என்றும் முடிவு செய்யப் பட்டது. 


மேஜர் மாயநாதன் வீட்டில் போலீசார் வேட்டையாடிக் கொண்டிருக்கும்போதே, சென்னைத் தெருவிலே மேஜர் மாயநாதன், ஆனந்தி என்ற பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தார். 

எழும்பூர் ஸ்டேஷனில் ரயில் ஏறித் தாம்பரம் சென்று விட்டால் நிம்மதி கிடைக்கும் என்று நினைத்து அவசர அவசரமாக, தாம்பரம் செல்லும் எலக்ட்ரிக் வண்டியில் ஏறினாள் ஆனந்தி. 

மணி காலை ஐந்து, அந்த மின்சார வண்டியின் முதலாவது வகுப்பில் ஏறி ஒரு மூலையில் அமர்ந்தாள். பகல் பூராவும், இரவின் பெரும் பகுதியும் நடந்து நடந்து, ஓடி ஓடிக் களைத்துப் போனதால், நகரும் ரயில் வண்டியிலாவது நாம் தொடரப்படமாட்டோம் என்ற நிம்மதியில் கண்களை மூடினாள். உடலின் உழைப்பிற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? அவள் எங்கு போய் மறைந்தாலும் மேஜர் அங்கு வந்து விடுகிறார். 

இத்தனை காலமும் அவள் நகர்ந்து கொண்டே இருப்பதால் தான் அவரிடமிருந்து தப்ப முடிந்திருக்கிறது. எலக்ட்ரிக் வண்டியில் பலமுறை ஏறி எழும்பூருக்கும், பீச்சுக்குமிடையே குறுக்கும், நெடுக்குமாகச் சென்றிருக்கிறாள். அவள் கையிலிருந்த சிறிதளவு பணமும் தீர்ந்துவிட்டது. இனி என்ன செய் வது? போலீஸ் நாயின் மோப்பத்திலிருந்து தப்பலாம். ஆனால் மேஜரிடமிருந்து எப்படித் தப்புவது? ‘மேஜரோ என் மனத்தைத் தொடர்ந்து அதன் மூலமாக என்னைத் தொடர்கிறார். நான் எந்த இடத்திற்குப் போக வேண்டுமென்று நினைக்கிறேனோ, அங்கு அவர் எனக்கு முன்பே வருகிறார் போகும் இடங்களைப் பற்றிச் சிந்திக்காமலே பல இடங்கள் சுற்றுவதால்தான் இதுவரை அவரிடமிருந்து தப்ப முடிந்து. சிந்தாரிப் பேட்டை போக வேண்டுமென்றால் மைலாப்பூர் என்று நினைத்துக் கொள்கிறேன். இம்மாதிரிச் சுற்றுவதற்கும் ஒரு முடிவு வேண்டுமல்லவா?’ என்று நினைத்தாள். 

நினைத்தபடியே களைப்பின் மிகுதியால் கண்களை மூடினாள். விடாமல் தொடர்ந்து திரிந்ததால் உடல் அயர்ந்து, தூக்கத்தைத் தந்தது. ஓரளவு இளைப்பாறியதால் ஆனந்தியின் உடலுக்குப் புது உணர்வும், உற்சாகமும் ஏற்பட்டன. இன்னும் சில மணிகள் மேஜரின் பிடிப்பிலிருந்து தப்பலாம். அசராமல் சிந்தியாமல் ஓடிக் கொண்டே இருக்கலாம். என்று நினைத்தாள். 

வண்டி பல்லாவரத்தைத் தாண்டிக் கொண்டிருந்தது. திடீரென்று அவளுக்குத் தோன்றியது ஒரு யோசனை. ‘இப்படி ஓடிக் கொண்டே இருக்க முடியாது. ஊரை விட்டு ஓடலாம். ஆளைவிட்டு ஓடலாம். நம் மனத்தை விட்டு நாம் எப்படி ஓடுவது? மனத்தைவிட்டு ஓடாத வரையில் மேஜரிடமிருந்து தப்பவே வழி இல்லை. ஆகையால் போலீசாரிடம் சரணடைந்து லாக்கப்பிற்குள் செல்வதுதான் சரி’, என்று நினைத்தாள் 

இவ்வாறு நினைத்து முடித்த மறுகணமே, அந்த மின்சார வண்டியின் கடகட சத்தத்தின் இடையே ஒரு புது ஒலி கிளம்பியது. 

அது ஒரு வீணையின் நாதம். அந்த வீணையின் நாதத்தைக் கேட்டதும், ஆனந்தியின் முகம் கலவரம் அடைந்தது. அவள் மரணத்தைப் பார்த்தவள் போல் கண்களை அகல விரித்து எதிரே நோக்கினாள். தனிமை நிறைந்த அந்த முதலாவது வகுப்பு வண்டியில் மேஜர் மாயநாதன் வீணை வாசித்துக் கொண்டிருந்தார். அவர் கண்கள் ஆனந்தியை விறைத்துப் பார்த்தபடி இருந்தன. 

ஆனந்தி மெள்ள எழுந்து மேஜரை நோக்கி நடந்தாள். அவள் அங்க அசைவுகளில் இப்பொழுது சுய உணர்வு இல்லை. பொம்மை போல் நடந்தாள். மேஜர் அவளைப் பார்த்துச் சிரித்தார். “என்ன ஆனந்தி பாவம்! வெகுதூரம் ஓடி, ஓடிக் களைத்துவிட்டாய். அமைதியான நிம்மதியான இடத்திற்குச் செல்வோம்”, என்றார். 

“ஆனந்தி என்று என்னைக் கூப்பிடாதீர்கள், தயவு செய்து. என்னை அப்படி அழைக்காதீர்கள்”, என்றாள் ஆனந்தி. 

மேஜர் சிரித்துக் கொண்டார். பிறகு ஒரு குரூரமான குரலில், “ஆனந்தி என்று உன்னைச் சில நாட்களுக்குத்தானே அழைக்கப் போகிறேன். அப்புறம் உன்னை, யாரும் எந்தப் பெயரிலும் அழைக்க மாட்டார்கள்,” என்று ‘உன்னை’ என்ற வார்த்தையை அழுத்தியும் சொன்னார். 

“ஐயோ,” என்று அலறினாள் ஆனந்தி. 

அந்த அலறல் ஆண் குரலா, பெண் குரலா என்று சொல்ல முடியாதவாறு இருந்தது. உடனே ஆனந்தி, “அடையார் வீட்டிற்கா” என்றாள். மேஜர் ஒரு புன்சிரிப்பு டன், ”அடையார் வீடு போலீசாரிடம் இப்பொழுது இருக்கிறது. நாம் வேறு இடம் செல்கிறோம்”, என்றார். 

ரயில் வண்டி தாம்பரம் வந்து நின்றது. மேஜரும் ஆனந்தியும் ரயிலைவிட்டு இறங்கி தியாகராய நகர் செல்லும் வண்டியில் ஏறினார்கள். ஆனந்தி எந்தவித மறுப்புமில்லாமல் மேஜரைத் தொடர்ந்தாள். 

அத்தியாயம்-23

அதிகாலை வேளையிலே, கையிலே வீணையோடு திடீரென்று தோன்றிய மேஜர், ஆனந்தியை அழைத்துக் கொண்டு மறைந்தார். அவருக்காக, அடையாறில் காத்துக் காத்து அலுத்துப் போயினர் போலீசார். மறுநாள் கோர்ட்டில் ராமனாதன் வழக்கு ரகசிய விசாரணை தொடங்கியதும் ஜட்ஜ் மணிவாசகம் பிராஸிக்யூட்டரைப் பார்த்துப் போலீஸ் இன்ஸ்பெக்டரை அழைக்கும்படி கூறினார். 

இன்ஸ்பெக்டர். இரவு தான் பூட்டப்பட்ட மேஜர் வீட்டுக்குச் சென்றதாகவும் அங்கு யாரும் இல்லை என்றும் கூறினார். ஜட்ஜ் மணிவாசகம், “அந்த வீணையைக் கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். 

அதற்கு இன்ஸ்பெக்டர், “அந்த வீணையும் முதல் தடவை சோதனை போட்டபோது அங்கு இருந்தது. ஆனால் இப்போது இல்லை”, என்றார். 

உடனே பிராஸிக்யூட்டர், “கௌரவமிக்க நீதிபதியவர்களே! அந்த வீணை அவ்வளவு முக்கியம் என்று கருதுகிறீர்களா?” என்று கேட்டார். 

ஜட்ஜ் சிரித்தபடி, “இதுவரை நாம் படித்த திலீபனின் டைரி கூறும் கதைப்படி மேஜர் மாயநாதன் குடும்பத்தில், அவர். ஆனந்தி, அந்த வீணை மூன்றுமே முக்கியமான நபர்களாகத் தெரியவில்லையா?” என்று கேட்டார். 

அப்போது ராமனாதன், வீணையைப் பற்றி ஏதோ கூற வாயெடுக்க, ஜட்ஜ் மணிவாசகம் அவனைச் சைகை செய்து தடுத்தார். பிறகு ஜட்ஜ், “ராமனாதன், விசாரணைப்படி திலீபன் டைரியை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து படிப்போம்.” என்றார். 

அதைக் கேட்ட ராமனாதன் மறுபடியும் ஆத்திரத்தோடு குறுக்கிட்டு, “கௌரவமிக்க நீதிபதியவர்களே! எப்படியாவது அந்த ஆனந்தி, மேஜர், அந்த வீணை மூன்றையும் போலீசார் தேடிப் பிடித்தாக வேண்டும். அதனால் எவ்வளவோ தீமைகளைத் தடுக்கலாம்.” என்று சொன்னான். 

ஜட்ஜ் மணிவாசகம் அவனை முறைத்துப் பார்த்தார். அதேபோல் தான் பிராஸிக்யூட்டரும், ராமனாதன் தரப்பு வக்கீலும் ராமனாதனை முறைத்துப் பார்த்தனர். விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் ஒரு கைதி, நீதிபதிக்கு அவருடைய கடமைகள் பற்றி ஆலோசனை சொல்வது தவறு என்பதை உடனே உணர்ந்தான் ராமனாதன். 

உடனே மன்னிப்புக் கோருவது போன்ற முகபாவத்தோடு, ராமனாதன் தலையைக் கவிழ்த்துக் கொண்டான், நீதிபதியவர்களின் முகத்தில் இருந்த கடுகடுப்பும் மறைந்தது. நீதிபதி ஒரு வினாடி யோசித்தார். தன் கை நகத்தை ஒரு முறை லேசாகக் கடித்துத் துப்பினார். உடனே பிராஸிக்யூட்டரைப் பார்த்தார். அவரிடம், “இந்த வழக்கே ஒரு விசித்திரமான வழக்காக இருக்கிறது. இதில் வரும் சாட்சியங்களை, தர சாட்சியங்களின் அனுசரணை இல்லாமல் ஒப்புக் கொள்வது கடினம். ஆகையால் போலீசார் எல்லாப் போலீஸ் ஸ்டேஷன்களையும் ‘அலர்ட்’ செய்தாவது, மேஜர், ஆனந்தி, அந்த வீணை மூன்றையும் எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும்.” என்று கூறி முடித்தார். 

இன்ஸ்பெக்டரும் ஆக வேண்டிய காரியங்களைச் செய்வதாகக் கூறி விட்டு, வெளியேறும்போது, மறுபடியும் ராமனாதன் குறுக்கிட்டான். “கௌரவமிக்க நீதிபதியவர்களே! திலீபன் வைக்கப்பட்டிருக்கும் ஆஸ்பத்திரியில் மேஜர் நுழையாதபடி பாதுகாக்க வேண்டும். ஆஸ்பத்திரியிலும் போலீஸ் பாதுகாப்பு இருக்க வேண்டும். தயவு செய்து அதை உடனே கவனியுங்கள்”, என்று அழுத்தமாகச் சொன்னான். 

நீதிபதியின் முகம் ஆத்திரத்தால் சிவந்தது. தன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, “நீதிமன்றத்தின் கடமைகளைப் பற்றி ஒரு கைதியிடம் கற்றுக் கொள்ளும் தேவை, நீதிமன்றத்துக்கு இன்னும் ஏற்படவில்லை. இனிமேலும் ஏற்படாது”, என்ற கூறிவிட்டுத் திலீபன் டைரியை இதுவரை உரக்கப் படித்து வந்த பெஞ்சு கிளார்க்கை நோக்கினார். 

அந்தக் கிளார்க், டைரியை எடுத்துத் தனக்கென்றே உரித்தான வெண்கல நாதத்தோடு படிக்க ஆரம்பித்தார். டைரியை மேற்கொண்டு படிக்க ஆரம்பிக்கு முன்பு, எந்த இடத்தில் நிறுத்தினோம் என்பது பற்றிச் சுருக்கம் தந்தார். 

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனை விட்டு இறங்கியதும் டாக்ஸியில் செல்லும்போது, திலீபனைத் தாண்டிச் சென்ற டாக்ஸியில் ஆனந்தி இருப்பதைப் பார்த்த திலீபன் கலவரம் அடைந்தான் என்று கூறிவிட்டு. திலீபன் டைரியை பெஞ்சு கிளார்க் மறுபடியும் தொடர்ந்து படிக்கலானார். 

“எவ்வளவோ மனநிம்மதியுடன் சென்னைக்குத் திரும்பிய நான், ஆனந்தியின் முகத்தைப் பார்த்தபின், மறுபடியும் கவலை அடைந்தேன். எனக்கு ஏற்பட்ட விசித்திரமான வேதனை தரும் அனுபவங்கள் எல்லாம் திருச்சியிலும் உதகமண்டலத்திலும்தான் ஏற்பட்டன. 

சென்னை நகரத்திலே வளர்ந்து உருவானவன் நான். சென்னையில், சிந்தாதிரிப்பேட்டையில், என் தந்தையோடு நான் வாழ்ந்தபோது, இம்மாதிரிப் புரியாத, திடுக்கிடும்படியான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டதே கிடையாது. 

வறுமையின் கொடுமையும், தாயின் கண்ணீரும், தந்தையின் தவறான நடத்தையும் எனக்குத் துன்பம் அளித்ததாயினும், அவைகள் வழக்கமாக மனிதன் சந்திக்கும் மாமூல் துன்பங்களே. ஆனால் இன்றோ, நான் செல்வந்தர்களின் உறவைச் சம்பாதித்துவிட்டேன். தங்கப்பதுமை சீதா, எனக்காக. காத்துத் தவம் கிடக்கிறாள். இருந்த போதிலும் என் அறிவும், உணர்ச்சிகளும் என்னுடையதாக இல்லாமல் யாருடைய ஆதிக்கத்திலோ நின்று இயங்கின. அடுத்த நிமிடம் நான் என்ன செய்வேன், எந்த விதமாக நடந்து கொள்வேன் என்று எனக்கே தெரியவில்லை. பூராவும் பித்தம் பிடித்தவனின் நிலை. எவ்வளவோ இன்பமான நிலை. ஏனென்றால், பைத்தியத்துக்கு, தான் பைத்தியம் என்றே தெரியாது. அது வாழும் உலகமே வேறு. ஆனால் பகுத்தறிவோடு வாழ்ந்து கொண்டிருப்பவன், தன்னுடைய உணர்வுகள் திடீர் திடீர் என்று தன்னைவிட்டு நழுவுவதை உணர்ந்து கொண்டே வாழ்வது ஒரு பயங்கரமான நிலை அல்லவா? 

ஸ்டீவன்ஸன் எழுதிய ‘டாக்டர் ஜெக்கிலும், மிஸ்டர் ஹைடும்’ என்ற நாவலில் வரும் டாக்டர் ஜெக்கில் என்பவர், எப்போது உருவம் மாறி பண்பில் மிருகமாக, அரக்கனாக மாறுவார் என்பது அவருக்கே தெரியாது. உருமாறிய நிலையில் அவர் என்ன செய்வார் என்பதும் அவருக்குத் தெரியும். ஆனால் அந்த மாற்றத்தைத் தடுக்க அவரால் முடியாது. அந்த டாக்டர் ஜெக்கிலின் மனம் எப்படித் தவியாகத் தவித்ததோ, அவ்வாறு தவித்தேன் நான். 

உடல் என்ற சொந்த வீட்டை யாரோ ஒரு முன்பின் தெரியாத ஒருவனுக்குக்குடக்கூலிக்கு விட்டு விட்டு, அதே வீட்டில் சிறிய அறையில், சிறை வைக்கப்பட்டு வாழ்பவனைப்போல் இருந்தது என்னுடைய நிலை. இவ்வாறு கலங்கிய மனத்தோடு தியாகராய நகரில் உள்ள ஒதுக்குபுறமான பங்களாவை அடைந்தேன். என் வருகையைச் சற்றும் எதிர்பாராத ராமலிங்கமும், என் தாயும் ஆச்சரியம் அடைந்தனர். 

ராமனாதன் இல்லாமல், தனியாக வந்த என்னைப் பார்த்த ராமலிங்கம், கலவரம் அடைந்தார். எனக்கும் ராமனாதனுக்கும் சச்சரவு ஏற்பட்டிருக்குமோ! அதன் காரணமாக நான் திடீரென்று உதகமண்டலத்தை விட்டுப் புறப்பட்டு வந்திருப்பேனோ என்று நினைத்தாரோ என்னவோ? 

ராமலிங்கம் என்னை ஒருவிதமாகப் பார்த்தார். “உதகமண்டலத்துக்கு நான் இதுவரை சென்றதில்லை யாதலால் குளிர் எனக்கு ஒத்தும் கொள்ளவில்லை. அதனால் உடனே புறப்பட்டு வந்து விட்டேன். ராமனாதன் இன்னும் சில நாட்களில் வருவான்”, என்று ஒரு பொய்யைச் சொல்லி வைத்தேன். 

ராமலிங்கம் முதலில் நம்பவில்லை. அன்று பிற்பகல் ராமனாதன் அவரோடு டெலிபோன் மூலம் பேசிய பிறகுதான் ராமலிங்கம் ஓரளவு அமைதி அடைந்தார். 

சீதாவுக்கு நான் திரும்பியதில் எல்லையில்லாத மகிழ்ச்சி என்பதை அவள் முகமே வெளிப்படுத்தியது. ஆனால் சீதா, தனிமையில் என்னை நெருங்கிப் பேசவோ. என்னோடு பழகவோ சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. எப்போதும் என் தாயோடு அமர்ந்தபடி இருந்தாள். நானோ, ஒவ்வொரு நிமிடத்தையும் சீதாவோடு கழிக்கத் துடித்தேன். உதகமண்டலத்தில் நான் இழந்த சித்தத்தைத் திரும்பப் பெற, சீதாதான் சரியான மருந்து என்று நினைத்தேன். ஆனால் சீதாவோ நாணத்தோடு என்னை விட்டு ஒதுங்கி ஒதுங்கிச் சென்றாள். கல்யாணம் தான் சீக்கிரமே நிகழப்போகிறதே. அதற்குள் என்ன அவசரம் என்று நினைத்தாள் போலும்! 

சீதாவுக்கு என்னுடைய உண்மை நிலை தெரியவில்லை. சீதாவின் அன்பு, சீதாவின் நினைவு, சீதாவினால் ஏற்படும் இன்ப உணர்ச்சிகள் இவைகளால் என் மனத்தை நிரப்பத் துடியாகத் துடித்தேன். என் மனத்தைக் காலியாக வைத்திருந்தால் அதில் வேறு நினைவுகள், பிடிப்புகள் நுழைந்து என்னை எங்காவது இழுத்துச் சென்று விட்டால்…. என்ற பயம் எனக்கு இருந்தது. 

சென்னைக்கு வந்த பின்பும், எனக்கு இரவு வேளைகளில் பலவிதப் பொருத்தமில்லாத கனவுகளும் பிரமைத் தோற்றங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. தினமும் உடலை வருத்தித் தேகப் பயிற்சி செய்து, உடலுக்குக் களைப்பை ஏற்படுத்தி, அந்தக் களைப்பில் அயர்ந்து தூங்கினேன். 

அற்புதமான இலக்கியப் புத்தகங்களைப் படித்து, சொல் நயத்திலும், பொருள் நயத்திலும் மனத்தை ஈடுபடுத்தினேன். நான் என்ன செய்தும், சொல்லுக்கடங்காப் பிள்ளை போல் என் மனம் எங்கோ திரிய முயலுவதை உணர்ந்தேன். 

மனத்தைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பதஞ்சலியின் யோக சூத்திர நூல் வகைகளைப் படித்தேன். சத்வ உணவுதான் சித்தத்தை ஒரு நிலைப்படுத்தும் என்பதைப் பற்றி உணர்ந்ததும், என் உணவையும் குறைத்தேன். நெல்லிக் காய், பாகற்காய், பால், பழம் இப்படிச் சாப்பிட்டு வந்தேன். பூட்டிய அறையில் உட்கார்ந்து, பிராணா யாமம் தியானம் முதலியன செய்து பார்த்தேன். இரண்டு நாட்களில், உடல் இளைத்து மனம் ஓரளவு லயப் பட்டது. 

என்னுடைய விபரீத சோதனைகள் என் தாய்க்கும் சீதாவுக்கும் கவலையைக் கொடுத்தன. “டேய் திலீபா! என்னடா. சந்நியாசியாகப் போகிறாயா? நெல்லிக்காயும், பாகற்காயும் தின்கிறே! கல்யாணம் காத்துக் கிடக்கு. நீயோ மூக்கைப் பிடிச்சுக் கிட்டு ரூமுக்குள்ளளேயே உட்கார்ந்திருந்தா. என்னடா அர்த்தம்?” என்று கூறும் என் அம்மாவிடம், ‘என் நினைவுகளோடு நான் போராடி வருகிறேன்’, என்று எப்படிச் சொல்வது? எனக்கே சரியாக விளங்காத தன் நிலையை, என் தாய்க்கு எப்படி விளங்குவது? சீதா மட்டும் என்னிடம் சகஜமாகப் பழகி இருந்தால்? சீதாவிடம்தான் நான் எப்படி மேஜர் மாயநாதனைப் பற்றிச் சொல்வது? ஆனந்தியின் சந்திப்பைப் பற்றிச் சொல்வது? அவள் காதல் உள்ளத்தில் பொறாமை உணர்ச்சி இல்லாமலா இருக்கும்? இதைச் சொல்லி இன்னும் ஏதாவது விபரீதங்கள் நிகழ்ந்துவிட்டால் என்னுடைய நடத்தையைப் பற்றிச் சந்தேகங்களைக் கல்யாணத்துக்கு முன்னால் நானே என் எதிர்கால மனைவியிடம் ஏற்படுத்துவதா? 

பதஞ்சலி யோக சூத்ர வழிப் படி நான் வாழ்ந்தபோது. எனக்கு ஓரளவு அமைதி இருந்தது. ஆனால் தாயின் வற்புறுத்தலின் பேரில் என் உணவுத் திட்டத்தை நான் மாற்றிக் கொள்ள வேண்டயிருந்தது. காலையில் வெண்ணெய், தயிர், மிளகாய்ப் பொடியுடன் இட்லி சாப்பிட ஆரம்பித்தேன். 

சீதா மிகக் குதூகலத்தோடு எனக்குப் பரிமாறினாள். நடுப்பகல், ஐந்து விதக் காய்கறிகளுடன் சாப்பாடு. மாலை பாதாம் அல்வாவோடு டிபன். உணவில் ஏற்பட்ட திடீர் மாறுதலின்போதுதான் எனக்கு, மனத்துக்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு விளங்கியது. பால், நெல்லிக்காயோடு வாழ்ந்தபோது என் மனம் அலை ஓய்ந்துபோன ஆழமான கடல் போல் சலனம் இல்லாமல் இருந்தது. காரசாரமான உணவு உடலில் சேர்ந்த பின்பு, என் எண்ணங்களே மாறின. சீதாவைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அவளை இறுக்கி அணைக்க வேண்டுமென்ற அசுரத்தனமான ஆசை ஏற்பட்டது. 

அவளது ஒவ்வோர் அங்க அசைவும் என்னுடைய உள்ளத்தில் ஓர் எரிமலையை வெடிக்கச் செய்தது. முன்பெல்லாம் அவளிடம் எனக்குப் பரிவு உண்டு. ஒருவித இரக்கம் உண்டு. அதோடு அவள்மீது ஓர் ஆசையும் உண்டு. இப்போது எனக்கு ஆசை மட்டும்தான் மிஞ்சியது. அதுவும் எப்படிப்பட்ட ஆசை? 

அவளுடைய பளபளப்பான உடலை முரட்டுத்தனமாக அடைந்து துன்புறுத்த வேண்டுமென்ற ஆசை. காதலில் ஆசையும் உண்டு. இரக்கமும் உண்டு. காமத்தில் இரக்கத்திற்கு இடமே கிடையாது. வெறும் ஆசை வெறிதான் உண்டு என்பதை உணர்ந்தேன். வெறி அல்லது அசுரத்தனமோ எப்படியிருந்த போதிலும், சீதா அருகில் இருக்கும்போது எனக்குக் குழப்பம் இல்லை. ஆனந்தி, மேஜரைப் பற்றிய நினைவே ஏற்படவில்லை. சீதா இருக்குமிடத்தில், எந்த அசுத்தமான சக்தியும் என்னை நெருங்காது என்ற துணிவு எனக்கு ஏற்பட்டது. 

இந்த உண்மையை நிரூபிப்பது. போல் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. கிருத்திகையன்று என் தாய், சீதா, நான் மூவரும் சென்னையில் கந்தசாமிக் கோவிலுக்குச் சென்றோம். முருகன் சந்நிதியில், அந்தக் கந்த கோட்டத்துள், நான் கந்த சஷ்டிக் கவசத்தை உருக்கமாகப் படித்தேன். கந்தசஷ்டிக் கவசம், மனநோய்கள், தேக நோய்கள், பில்லி, சூன்யம் போன்ற தொந்தரவுகளைப் போக்கும் பெரிய மந்திரம் என்று சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள ஒரு பெரியவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். 

இம்மாதிரி விஷயங்களில் நம்பிக்கை அதிகம் இல்லாதவனாயினும். உதகமண்டலத்தில் ஏற்பட்ட அனுபவத்துக்குப் பின்பும், தினசரி இரவு தோன்றும் கனவுகளாலும் கலங்கிப் போயிருந்த எனக்கு. எந்தவித நம்பிக்கையும் நன்னம்பிக்கையாகவே இருந்தது. கந்தசாமி கோயிலில் அர்ச்சனையை முடித்துவிட்டு நானும் சீதாவும் எங்கள் காரை நிறுத்தியிருக்கும் இடத்தை நோக்கி வந்தோம். 

கார் நிறுத்தியிருந்த இடத்தை ஒட்டியபடி ஒரு சிறு வளையல் கடை இருந்தது. அந்தக் கடை முன்னால் பெண்கள் சிலர் நின்று கொண்டு, சவுரி வாங்கியபடி இருந்தனர். அந்தப் பெண்கள் குழுவில் சற்று உயரமாகவும் வெளுப்பாகவும் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். 

அவள் சட்டெனத் திரும்பி என்னையும் சீதாவையும் பார்த்தாள். நான் அப்படியே திகைத்து நின்றேன். அதே வெளுத்த முகம், கறுத்த கண்கள். ரத்தச் சிவப்பான உதடுகள்! ஆம்! ஆனந்தி நின்று, எங்களை கவனித்துக் கொண்டிருந்தாள். 

அத்தியாயம்-24

ஆனால் அவள் என்னை அறிந்து கொண்டவள்போல் நடந்து கொள்ளவே இல்லை. அவள் பார்வை பூராவும் சீதாவின் மேல் நின்றது. சீதா கறுப்புச் சேலை அணிந்திருந்தாள். கறுப்பு ரவிக்கையும் போட்டிருந்தாள். சிவந்த உடலின் அழகைக் கறுப்புச் சேலை, ரவிக்கை அழகு படுத்துவதுபோல் எதுவும் அழகு படுத்துவது இல்லை. 

ஆனந்தியின் கண்களில் தோன்றிய குரூரம், அவளுக்குச் சீதாவின் மீது ஏற்பட்ட வெறுப்பைத் தெளிவாகக் காட்டியது. 

சீதா அழகாக இருப்பது அவளுடைய மன்னிக்க முடியாத குற்றம் என்று நினைப்பவள் போல் ஆனந்தி சீதாவைப் பார்த்தாள். அதே சமயத்தில் என் மனம், ஆனந்தியைத் துச்சமாக நினைப்பதை உணர்ந்தேன். சீதாவையும் ஆனந்தியையும் ஒன் றாகப் பார்த்தது ஒரு விதத்தில் நல் லது என்றே நினைத்தேன். இருவரை யும் ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் பார்க் கும் வாய்ப்பு கிடைத்தது அல்லவா? ஆனந்தியின் முன்பு சீதாவைப் பார்த்த போதும், என் மனம் சீதாவை நோக்கியே ஓடியது. ஆனந்தியின் அமானுஷ்யமான கண்களின் சக்தி என்னைச் சிறிது கலக்கியதேயல்லா மல், என்னை ஆட்கொள்ளவில்லை. எனக்குச் சீதாவின் மீதுள்ள அன்பை. ஆசையை, எந்தச் சக்தியும் அசைக்க முடியாது என்பதை நான் நன்றாக உணர்ந்தேன். 

நான் ஒரு கோழையல்ல என்று கம்பீரமான பார்வையில் ஆனந்தியின் கண்களைப் பயமில்லாமல் சந்தித்தேன். ஆனந்தி புன்முறுவலோடு என்னைப் பார்த்தாள். ‘நீ என்னுடையவன் உன்னை நான் விடப்போவது இல்லை,’ என்று தன்னுடைய உரிமையை உணர்த்தும் வெற்றிப் புன்னகையாக இருந்தது அது. “என்ன அத்தான்! திகைச்சு நிக்கறீங்க? காரிலே ஏறுங்கள், வீட்டுக்குப் போகலாம்.” என்ற சீதாவின் பேச்சு, என்னைச் சுயஉணர்வுக்குக் கொண்டு வந்தது. காரில் ஏறி உட்கார்ந்தேன். 

என் தாயும் என்னைப் பின் தொடர்ந்து வந்து உட்கார்ந்தார். கார் நகர்ந்தது. பின்புறம் திரும்பிப் பார்த்தேன். ஆனந்தி கடையில் நின்றபடி என்னைப் பார்த்து அமைதியாகச் சிரித்துக் கொண்டிருந்தாள். காரிலே பின் சீட்டுக்கும், பின்புறக் கண்ணாடிக்கும் இடையே உள்ள சாமான்கள் வைக்கும் இடைவெளியில் அப்போது மலர்ந்த மல்லிகைப் பூச்சரம் கிடைத்தது. 

அந்த மல்லிகைப் பூச்சரத்தை அங்கு சீதா வைத்திருக்க முடியாது. ஏனென்றால் அவள் தலை நிறையக் கதம்பம் இருந்தது. என் தாயோ, பூவையும் மஞ்சளையும் இழந்தவள். ஒருவேளை ஆனந்தி அந்த மல்லிகைப் பூச்சரத்தை, நாங்கள் கோவிலில் இருந்தபோது எறிந்திருப்பாளோ! உடனே என் நினைவுக்குக் குணசீலம் கோவிலில் அந்தப் பைத்தியக்காரி சொன்னது ஞாபகம் வந்தது. “மல்லிகைப் பூவின் மணம் உன்னை என்றுமே விடாது”,என்று சொன்ன அவள் வார்த்தைகள் ஒலித்தன என் காதுகளில். அந்த மல்லிகைப் பூச்சரத்தை வெறுப்போடும் பீதியோடும் பார்த்தேன். 

அதே வினாடியில் சீதா, “எப்போ அத்தான், மல்லிகைப் பூ வாங்கினீங்க? எனக்காகத்தான் வாங்கினீங்களா?” என்று சொல்லி, அதைக் கூந்தலில் அணிந்து கொண்டாள். நான் உடனே அதைப் பிடுங்கி வெளியே எறிந்தேன். சீதா என்னை ஆச்சரியத்தோடும், ஏமாற்றத்தோடும் பார்த்தாள். 

“மல்லிகைப் பூ வேண்டாம் சீதா. அது எனக்குக் கொஞ்சமும் பிடிப்பதில்லை,” என்று சொல்லி மழுப்பினேன். பூவைத்தான் வீசி எறிந்தேன். அதன் மணம் காரிலிருந்து விலகவே இல்லை.


கந்தசாமி கோவிலிலிருந்து திரும்புகையில், காரினுள் சூழ்ந்திருந்த மல்லிகைப் பூ மணம் என்னை மறுபடியும் கவலைக்குள்ளாக்கியது. 

சீதாவின் பரிசுத்தமான அன்பு, சீதாவின் மீது எனக்கிருந்த ஆசை – என் மனத்தைக் குழப்பமற்ற நேர் பாதையில் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதே நம்பிக்கையில் நான் வீடு வந்து சேர்ந்தேன். வீடு வரும் வரையில் நான் யாருடனும் ஒன்றுமே பேசவில்லை. 

நான் ஏறிவந்த கார், சென்ட்ரல் ஸ்டேஷன், மவுண்ட் ரோடு, ரவுண்ட்டாணா வழியாகச் சென்றது. அப்போது மாலை நேரமாதலால், போக்குவரத்து நெருக்கடி காரணமாகச் சில இடங்களில் கார் நின்று நின்று நகர்ந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் திரள் திரளாகத் திருவிழாவுக்குச் செல்வது போல் நடமாடிக் கொண்டிருந்தனர். மவுண்ட்ரோடில், மாலை வேளையில் தினமும் திருவிழாதானே! 

அவ்வளவு ஆயிரம் மக்கள் நடுவிலும், நான் ஒரு தனியனாக இருந்தேன். அந்த மக்கள் கூட்டத்தில் ஒவ்வொருவரும் ஒருவித பயத்தால் உந்தப்பட்டுத்தான் சென்று கொண்டு இருப்பார்கள். மறுநாள் காலை பலசரக்குக் கடைக்காரன் பணம் கேட்க வரும்போது எப்படிச் சமாளிப்பது என்று பயந்து செல்லும் குமாஸ்தா; நாளைக்கு வட்டித் தவணை வந்துவிட்டதே. அதைக் கட்டவேண்டுமே என்று பயந்தபடி காரில் உட்கார்ந்திருந்தும் கவலையிலே ஊர்ந்து செல்லும் வியாபாரி; இப்படிப் பலவிதக் கவலைகளோடு நகர்ந்து செல்லும் மக்கள்! ஆனால் எல்லோருடைய முகத்திலும் ஒரு புன்னகை – ரெடிமேட் புன்னகை. உள்ளத்தில் உறையும் பயத்தையும் கவலையையும் மறைக்க, உள்ளொன்று வைத்துப் புறமொன்று காட்டுவது தானே நாகரிகம்? அதனால்தான் எல்லோரும் சிரிக்கின்றனர். தினசரி பேப்பரைத் திறந்தால், பக்கத்துக்குப் பக்கம் என்ன காண்கிறோம்? விளம்பர முன்னணியில் இருக்கும் பிரமுகர்களின் புன்முறுவல் நிறைந்த படங்கள்! சிரிக்கும் சினிமா நட்சத்திரம்! அவள் உள்ளம் எரிந்து கொண்டிருக்கும்; அவள் கண்கள் தூக்க மாத்திரைகளை எண்ணிக் கொண்டிருக்கும். ஆனால் அவள் முகத்திலோ, புன்சிரிப்புத் தவழும். இன்னொரு இடத்திலே வாய் திறந்து சிரிக்கும் மந்திரியின் படம் இருக்கும். அரிசிக்கும் சர்க்கரைக்கும் மக்களது மைல் நீளக் கியூ வரிசைகளின் காட்சியும், அடுத்த தேர்தலைப் பற்றிய பீதியும் அவர் மனத்தில் சூழ்ந்து சுற்றிக் கொண்டே இருந்தாலும், வாய் திறந்த சிரிப்போடுதான் படத்திலே காட்சி அளிப்பார். டோக்கியோவிலிருந்து நியூயார்க் வரையிலும் உள்ள பிரமுகர்கள் எல்லோரும் சிரித்தபடிதான் செய்தித்தாள்களில் காட்சியளிக்கின்றனர். ஆனால் இன்றைய உலகத்தில் உண்மையில் யாரால் வாய் திறந்து மனம் விட்டுச் சிரிக்க முடிகிறது – குழந்தையையும், முற்றும் துறந்த ஞானியையும் தவிர? 

நான் விரும்பும். என்னை விரும்பும் அழகோவியம் சீதா, என் அருகிலிருந்தும் நான் சிரிப்பை இழந்து சிந்தித்தபடி இருந்தேன். உள்ளத்தில் காதல் களிநடம் புரியும்போது வெறும் சிந்தனைக்கு இடம் ஏது? சிந்திக்காமல், சிரித்துச் செயல்பட்டு நிற்கும் போதை நிலையல்லவா காதல்! அந்த நிலையில் நான் உம்மென்று நீண்ட முகத்தோடு நிற்பது பொருத்தமில்லையல்லவா? 

அன்றிரவு சாப்பிடுமுன் சீதாவின் தந்தை ராமலிங்கம் கல்யாணத்துக்காக வாங்கியிருந்த ஜவுளி வகைகளையெல்லாம் எடுத்துவந்து எனக்குக் காட்டினார். மாப்பிள்ளை அழைப்புக்கு வாங்கிய உடை, முகூர்த்தத்துக்கு நான் அணிந்து கொள்ள என்று அவர் வாங்கிய அகல ஜரிகைப் பட்டு வேஷ்டி – எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார். 

என் தாயின் முகம், சந்தோஷத்தால் விம்மி வெடித்துவிடும் போல் இருந்தது. வறண்ட நீரில்லாப் பாலைவனத்தில் நீண்ட நாள் பயணம் செய்து களைத்துப் போன யாத்ரீகன் நீர்நிலைகள் நிறைந்த. ஈச்சமரம் சூழ்ந்த சோலையை அடைந்த நிலையில் என் தாய் இருந்தாள். பல வருடங்கள் கண்ணீரிலே செலவழித்தவள், எதிர்காலத்தை ஒரு திசையில்லாத கும்மிருட்டாக எண்ணியவளுக்கு, தன் ஒரே மகனின் திருமணம் இவ்வளவு சிறப்பாக அமையப் போவது குறித்துச் சந்தோஷம் இருக்காதா? 

சீதாவோ என்னுடைய திருமண உடைகளைப் பார்க்கும்போது அவள் மனக் கண்ணாலே எங்கள் கல்யாணத்தையே கண்டாள் என்றே தோன்றியது. சீதாவின் கண்களில் ஒரு தெய்வீக ஒளியே வீசியது. 

அடுத்தபடி, ராமலிங்கம். சீதாவுக்கென்று வாங்கிய விதம்விதமான புடவைகளை எடுத்துப் பிரித்துக் காட்டினார். ஆண்டவன் படைப்பிலுள்ள அவ்வளவு வர்ணங்களிலும், ரக ரகமாகப் புடவைகள் பிரகாசித்தன. திருமணத்தின் ஒவ்வொரு கட்டத்துக்கென்று வாங்கிய ஒவ்வொரு புடவையையும் எடுத்து என் முன்னால் விரித்தார். ஒரு சிறு பிள்ளை, தன்னுடைய விளையாட்டுச் சாமான்களை மற்றச் சிறுவர்களுக்குக் காட்டுவதிலுள்ள உற்சாகம், முதியவர் ராமலிங்கத்தின் வார்த்தைகளில் தொனித்தது. 

பல வண்ணச் சேலைகள் விரிக் கப்பட்டு ஒரு சேலைக் கண்காட்சி போல் இருந்த அந்த அறையில் நான் பிரமித்து உட்கார்ந்திருந்தேன். திகைப்பைத் தவிர, வேறு எந்தவித உணர்வும் எனக்கு இல்லை. எவ்வளவு ஆயிரம் ரூபாய்கள் சேவை உருவமாகப் பரப்பப்பட்டிருக்கின்றன! முழுதாக ஓர் ஆயிரம் ரூபாய் என்னால் சம்பாதிக்க முடியுமா என்று நினைத்தேன். அப்படியே மனம் குன்றிப் போனேன். எல்லா அட்டைப் பெட்டிகளையும் திறந்து அதிலுள்ள ஜவுளிகளை எடுத்துக் காட்டிவிட்டார். ஆனால் ஓர் அட்டைப் பெட்டி மட்டும் திறக்கப்படாமல் ராமலிங்கத்தின் அருகில் இருந்தது. 

ராமலிங்கம் அந்தப் பெட்டியை எடுத்ததும் சற்றுத் தயங்கினார். பிறகு அந்தப் பெட்டியையும் திறந்தார். அதனுள்ளிருந்த சேலையையும் எடுத்துப் பிரித்துப் போட்டார். வெண்மை நிறமான பட்டு. நடுநடுவே ஜரிகைப் பூக்கள். உடலை மூடாது மூடும் சேலை அது! அவ்வளவு மெல்லியதாக இருந்தது அது. அந்தச் சேலையில் சீதாவின் பளப்பான கொழுகொழுவென்று வளர்ந்த உடலைப் பொருத்திக் கற்பனை செய்து பார்த்தேன். என் ரத்த ஓட்டம் சற்று வேகமாக ஓட ஆரம்பித்தது. அதே சமயத்தில் சீதா ஒரு வெகுளித் தன்மையோடு. ஓர் அசட்டுக் கேள்வியைத் தந்தையிடம் கேட்டாள். “இந்தப் புடவை பிரமாதமாயிருக்கிறது. இது எதுக்கப்பா? ரிஸப்ஷனுக்கா? அதுக்குத்தான் மஞ்சள் கலரிலே ஒன்று வாங்கி இருக்கிங்களே!” 

ராமலிங்கம் உடனே பதில் சொல்லவில்லை. தரையைப் பார்த்த படி, ”இது… இது… இது… முதல் இரவின்போது அணிந்து கொள்வதற்கு. சீதா!” என்று சொல்லி விட்டுக் கூச்சத்தோடு புடவைகளை எடுத்து அடுக்கி வைக்க ஆரம்பித்தார். ஒருவரும் பேசவில்லை. அறையில் நிசப்தம் நிலவியது. தந்தையின் பதிலைக் கேட்டவுடன் சீதா மின்னல் வேகத்தில் என்னை ஒரு முறை பார்த்தாள். அவள் பார்வையில் நாணமும் மகிழ்ச்சியும் நிறைந்த குழப்பம் தெரிந்தது. உடனே தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். 

என் தாய் மெள்ள இடத்தை விட்டு நகர ஆரம்பித்தாள். ஏதோ நடக்கக்கூடாத ஒன்று நிகழ்ந்துவிட்டதுபோல் எல்லோரும் இருந்தோம். 

சிந்தித்தபடியே நான் இரவு உணவு சாப்பிடப் போனேன். சாப்பிடும்போது கூடக் கல்யாண விஷயமாகவே, ராமலிங்கம் என் தாயோடு பேசியபடி இருந்தார். யாரைச் சங்கீதக் கச்சேரிகளுக்கு அமர்த்துவது. எப்படி விருந்தைச் சிறப்பாக நடத்துவது போன்ற மகிழ்ச்சி தரும் பேச்சிலே தன்னை மறந்திருந்தார் ராமலிங்கம். ஆனால் எனக்கு மட்டும் கல்யாணம் என்ற என் எதிர்காலத்தை நோக்கும்போது ஒரு பயம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. என்னுள் இருந்த ஒன்று என் புற மகிழ்ச்சியைக் கண்டு எள்ளி நகையாடுவதுபோல் தோன்றியது. 

சாப்பிட்டவுடன் எழுந்து என் அறைக்குப் போய்ப் படுத்துக் கொண்டேன். கண்களை மூடிக் கொண்டு நித்திரையை அழைத்தேன். நித்திரை வரவில்லை. அதற்குப் பதிலாக நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. கந்தசாமி கோயில் வளையல் கடையில் நின்ற ஆனந்தியின் புன்முறுவல், அவளுடைய வெற்றி நிறைந்த பார்வையின் அர்த்தம் என்னவாக இருக்க முடியும்? ஒரு பெண் – ஆனந்தி – என்னை என்ன செய்ய இருக்கிறாள்? நான் எங்கோ இருக்கிறேன். ஏன் பயப்பட வேண்டும்? தூரம் அவளைத் தடுக்குமா? அறையின் கதவுகளை மூடுவதால் ஆனந்தியை என் மனத்திலிருந்து மூடிவிட முடியுமா? 

‘முடியாது. முடியவே முடியாது! உன்னால் முடியவே முடியாது.’ என்ற குரல்கள் எழுந்து என் காதுகளில் ஒலித்தன. பித்துப் பிடித் தவன் போல் என் காதுகளை விரல்களால் மூடிக் கொண்டேன்: பின்பும், ‘நீ என்னை மறக்க முடியாது. உன் உடல் பொருள் ஆவி நான். உன் உடல் பொருள் ஆவி. நான்!’ என்ற ஆனந்தியின் குரல் போன்ற ஒன்று என் மனத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. 

அந்தக் குரலோடு திணறிய படி படுக்கையில் புரண்டேன். அப்போது அறைக்கதவு திறந்தது. அறையின் மின்சார விளக்கு திடீரென்று எரிந்தது. இருள் மறைந்தது. சீதா எதிரே பால் டம்ளருடன் நின்றாள். சீதாவை நான் பார்த்ததும் என் மனத்தில் ஊளையிட்ட ஆனந்தியின் குரல்கள் மறைந்தன. திடீரென்று எனக்கு நிம்மதி ஏற்பட்டது. ஆனந்தியின் நினைவு என் சிந்தையில் இருந்து. நீரிலே உப்பு மறைவதுபோல் மறைந்தது. உண்மையில் உப்பு, நீரில் மறைகிறதா ? இல்லை. நீரில், உப்பின் உருவம்தானே மறைகிறது! ஆனால் உப்பின் சுவை இருக்கத்தானே செய்கிறது. அதுபோலத்தான் சீதா அருகில் இருக்கும்போது ஆனந்தி உருமாறி ஒளிந்துவிடுகிறாள். சீதா என் பார்வையிலிருந்து சென்றபின், மறுபடியும் ஆனந்தி தோன்றுவாளா? உப்புக் கலந்த நீரைத் தீயிலே காய்ச்சிய பின், மறுபடியும் உப்பு தோன்றத்தானே செய்கிறது! சீதாவும் நானும் ஒன்றாகி விட்டால், சீதாவே எனக்கு எல்லாம் ஆகி விட்டால். ஆனந்தி மறையத்தானே வேண்டும்? ஆற்று வெள்ளத்திலே பிடி உப்பைக் கரைத்தால், உப்பின் சுவை தெரியுமா? திருமணம்வரை காத்திருப்பானேன்? இன்றே நான் சீதாவோடு கலந்துவிட்டால், அந்த இன்பத்தின் நினைவு, ஆனந்தியின் நினைவை விரட்டி விடாதா என்று நினைத்தேன். 

“அத்தான்! பாலைச் சாப் பிடுங்கள்”, என்று சொல்லி, தன் தந்தக் கைகளால் நீட்டினாள் சீதா.

அத்தியாயம்-25 

பாலை வாங்கும் பாவனையில் அவள் கையைப் பற்றினேன். சீதா வெட்கத்தோடு கையை விலக்கிக் கொண்டாள். பாலை மடக்கென்று குடித்துவிட்டு, அந்த வெள்ளி டம்ளரை அவளிடம் திரும்பக் கொடுத்தேன். சீதா விழிக் கோணத்திலே சிரித்தபடி, வெள்ளி டம்ளரை வாங்கக் கை நீட்டினாள். சடக்கென்று அவள் கையைப் பற்றி, அவளை என்னை நோக்கி பலம் கொண்ட மட்டும் இழுத்தேன்.நான் இழுத்த வேகத்தில், சீதா படுக்கையில் அமர்ந்திருந்த என் மடிமீது விழுந்தாள். என் பிடியில், நீரிலிருந்து எடுத்துப் போடப்பட்ட மீன் துள்ளுவதுபோல் துள்ளித் திணறினாள். 

“வேண்டாம் அத்தான்! வேண்டாம். பொறுங்கள்!”

‘நான் படும் வேதனை உனக்குப் புரியாது சீதா! ஆனந்தி என்ற உயிர் குடிக்கும் விஷத்தைப் போக்க நீ ஒரு மாற்று மருந்து. அதனால் தான் ஒரு முரடனைப் போல் இன்று உன்னை அடையத் துடிக்கிறேன்’ என்று அவளுக்கு நான் வெளிப்படையாக விளக்கம் தர முடியவில்லையே? என்ன செய்வேன்! 

என்னைப் பச்சாதாபத்தோடு பார்த்தபடி சீதா. ”அத்தான்! உங்கள் வேதனை எனக்குப் புரியாமல் இல்லை. ஆனால்… ஆனால்… எதற்கும் வரைமுறை வேண்டாமா?” என்று சொல்லி, என்னை விட்டு நகர முயன்றாள். என் கரங்கள் அவளுக்கு விடுதலை அளிக்க மறுத்தன. சீதாவின் கண்கள் பரிதாபமாக என் கண்களைப் பார்த்தன. என் கண்களில் இரக்கத்தை அவள் பார்த்திருக்க முடியாது. 

அவள் உதடுகள். “வேண்டாம்! வேண்டாம்!” என்று ஈனக் குரலில் கூறியபடியே இருந்தன அவள் கடைசி முறையாகக் கூறிய, ”வேண்டாம்!” என்ற மறுப்பு வார்த்தை அரைகுறையாக ஒலியற்று முடிந்தது. 

சீதா படுக்கையைவிட்டு எழுந்து விலகி நின்றாள். 

நான் துடிப்போடு எழுந்தேன். ”சீதா! நான் சொல்வதைக் கேள். என்னைப் பொறுத்தவரையில் இது வெறும் உடல் இன்பம் மட்டுமல்ல. இந்த இன்பம் ஒரு மருந்து. என் மனத்திலே மிதக்கும் பல விஷயங்களை முறிக்க உபயோகிக்கும் மாற்று மருந்து. என் உள்ளத்திலே ஊசலாடும் பல பேய்களை விரட்ட உதவும் ஒரு ரக்ஷை. ஒரு தாயத்து. இன்று இரவு என்னை விட்டுப் பிரியாதே சீதா!” என்று கெஞ்சினேன். 

என்னுடைய மனப்போராட் டங்களைப் பற்றி எதுவும் உணராத சீதாவுக்கு அவளை இரவு அங்கு தங்கும்படி நான் கோரியதன் அவசியம் புரியவில்லை. என் வேண்டுகோள் அவளுக்கு ஒருவித பீதியையும், வெறுப்பையும் தந்தது. என்னை அவள் ஒரு மிருகம் என்று நினைத்தாள் போலும் என்னை லட்சியம் செய்யாமல் அறையை விட்டு வெளியே சென்றாள். ஏமாற்றத்தோடு படுக்கையில் படுத்துத் தூங்கிவிட்டேன். 

விடிந்து நான் எழுந்திருக்க வெகு நேரம் ஆகியது. கனவில்லாமல், அயர்ந்து தூங்கியதனால் புதுவித பலத்தோடு எழுந்தேன். அன்று பகல் பூராவும் சீதாவைப் பார்க்கவில்லை நான். அவளுடைய சென்னை சினேகிதிகளைப் பார்க்கப் போயிருப்பதாக என் தாய் சொன்னாள். 

பிற்பகல் நான் டிபன் சாப்பிட வந்தபோது சீதா வீட்டில் இருந்தாள். என்னைப் பார்த்ததும் அவள் முகம் வெட்கத்தால் சிவந்தது. என் தாய் எனக்கு டிபன் பரிமாற சீதா அனுமதிக்கவில்லை. அவளே தட்டை எடுத்துக்கொண்டு வந்து எனக்குக் கொடுத்தாள். காப்பியையும் எடுத்துக் கொண்டு வந்து என் முன்னாலே வைத்தாள். முதல் நாள் இரவு என் விருப்பத்தை மறுத்ததற்கு மன்னிப்புக் கேட்கும் முறையில் நடந்து கொண்டாள். சதா சிரித்தபடி இருந்தது அவள் முகம். என் தாய் அறையை விட்டுச் சென்றதும், சீதா என் அருகில் வந்து, “என் மீது கோபமா?” என்று செல்லமாகக் கேட்டாள். 

“உன் மீதல்ல கோபம். எனக்கு என் மீதுதான் கோபம் சீதா. என்னை மன்னித்துவிடு,” என்றேன். “இதோ மன்னித்து விட்டேன்”, என்று சொல்லிய சீதா குறும்புத்தனமாகச் சிரித்துவிட்டுச் சென்றாள். 

நான் என்னையே மறந்து மகிழ்ச்சியோடு உலாவ வெளியே சென்றேன். தியாகராய நகர் பனகல் பார்க்கில் நான் உட்கார்ந்திருந்த பெஞ்சின் ஒரு மூலையில் ஆனந்தி வந்து உட்கார்ந்ததை முதலில் நான் கவனிக்கவில்லை. 

திரும்பி அவளை நான் பார்த்ததும் அவள் சிரித்தாள். ஆனால் இன்று எனக்கு அவளிடம் பயம் இல்லை. 

“ஆனந்தி! உங்கப்பா சென்னைக்கு வந்திருக்கிறாரா?” என்று கேட்டேன். 

அவள், “இன்றுதான் வந்தார்.” என்று சொல்லிவிட்டு என்ன அவளுடைய கறுத்த விழிகளால் உற்று நோக்கினாள். நானும் அவள் விழிகளைப் பயமில்லாது நேராகப் பார்த்தேன். 

“ஆனந்தி! நீ என்னை வெல்ல முடியாது. உன்னுடைய கண்களின் காந்த சக்தி இன்று என்னை ஒன்றும் செய்ய முடியாது. வேறொருத்தி என்னை முற்றிலும் கவர்ந்து விட்டாள்”, என்று பெருமிதத்தோடு சொன்னேன். 

ஆனந்தி எழுந்தாள். மெள்ள என்னை நெருங்கி வந்தாள். என்னை ஒரு வினாடி உற்றுப் பார்த்துவிட்டு என் முகத்தை ஒருமுறை அன்போடு தடவினாள். என் மெய் சிலிர்த்தது. “சீதா உங்களைக் கவர்ந்துவிட்டாள். உண்மைதான். ஆனால் அவள் உங்களை முற்றிலும் கவரவில்லை. நீங்கள் இன்னும் பிரம்மசாரிதான். நேற்று மட்டும் சீதா உங்களைப் பூராவும் அடைந்திருந்தால், எனக்கு இடம் இல்லாமலே போயிருக்கும். ஆனால் அவள் பைத்தியக்காரி. நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டாள். மிஸ்டர் திலீபன்! என்னை விட்டு நீங்கள் தப்பவே முடியாது!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தபடியே சென்றுவிட்டாள். 

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நேற்றிரவு தனிமையில் என் அறையில் நிகழ்ந்தது ஆனந்திக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்? அவள் இறுதியாகக் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் என்ன? அப்படியே சிந்தனையில் ஆழ்ந்தபடி அசையாமல் அமர்ந்து விட்டேன். 


ஆனந்தி பார்க்கை விட்டுச் சென்றபின் எவ்வளவு நேரம் நான் அசைவற்றுச் சிந்தனையில் தோய்ந்திருந்தேன் என்று எனக்குத் தெரியாது. அவள் பேச்சில் தோன்றிய இரண்டு கருத்துக்கள் எனக்கு நடுக்கத்தைக் கொடுத்தன. “நீங்கள் இன்னும் பிரம்மசாரிதான். சீதா மட்டும் உங்களைப் பூராவும் அடைந்திருந்தால் எனக்கு இடம் இல்லாமலே போயிருக்கும். அவள் நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டாள். திலீபன்! இனிமேல் நீங்கள் என்னிடமிருந்து தப்பவே முடியாது.” 

என்ன விபரீதமான நிலை என் நிலை! சீதாவிடம் இதைப்பற்றி எப்படிச் சொல்வது? என்ன ஆனாலும் சரி. இன்று இரவு என் பிரம்மசரியத்தை முடித்து விடுவது. என் மனத்தில் ஆனந்திக்கு இடமில்லாமல் செய்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன். கல்யாணமாகுமுன் கலவியா? தவறல்லவா? தவறுதான்! அந்தத் தவறே என்னை வந்தடைந்து என்னை விழுங்கக் காத்திருக்கும் ஒரு நோய்க்கு வைத்தியமாகும்போது… புரியாத, விளங்காத ஆனந்தியிடமிருந்து என்னைக் காக்கும் மூலிகை அல்லவா! 

கடவுளே, எனக்கு வந்திருக்கும். சோதனை யாருக்குமே, என் விரோதிக்குக்கூட ஏற்படக் கூடாது. 

பணமில்லாமல் வறுமையில் வாடலாம். ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம். அதெல்லாம் கூடக் கொடுமையல்ல. ஆனால் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சக்தியால் துரத்தப்பட்டு, எந்த நிமிஷத்தில் மனத்தையும் சித்தத்தையும் இழந்து விடக் கூடும் என்ற பீதியோடு வாழும் அனுபவம் என்னைத் தவிர யாருக்குமே ஏற்பட்டிருக்காது என்று திட்டவட்டமாகச் சொல்லுவேன். 

மாலை இருள் மெல்லச் சூழ ஆரம்பித்தது. நான் மெல்ல நடந்து வீட்டை அடைந்தேன். வீட்டில் என் தாய், ராமநாதன் உதகமண்டலதிலிருந்து அனுப்பியிருந்த தந்தியை காட்டினாள். 

ராமநாதன் மறுநாள் காலை நீலகிரி எக்ஸ்பிரஸில் சென்னை வருவதாகக் குறிப்பிட்டிருந்தான். எனக்கு, அதைக் கேட்க ஆறுதலாய் இருந்தது. 

அண்ணா ராமநாதன் அருகில் இருந்தால் ஒரு தெம்பு ஏற்படும். அதே சமயம் ஆனந்தியைப் பற்றிய பயமும் மூண்டது. அன்றிரவு நாங்கள் சாப்பிடும்போது, உதகமண்டலம் மானருவி எஸ்டேட்டைப் பற்றிய பேச்சு எழுந்தது. பெரியவர் ராமலிங்கம் அந்த எஸ்டேட்டைப் பற்றியும், அதன் வளங்களைப் பற்றியும் பேசிக்கொண்டே வந்தவர், மல்லிகைத் தோட்டம் பங்களாவைப் பற்றியும் பேச ஆரம்பித்தார். 

நான் மேஜர் மாயநாதனைப் பற்றிச் சந்தேகம் ஏற்படாத வகையில் விசாரித்தேன். ராமலிங்கம், “எனக்கு மேஜர் மாயநாதனைப் பற்றி ஒன்றுமே புரியவில்லை. அவன் நல்லவனா கெட்டவனா என்று சொல்ல முடியவில்லை. எஸ்டேட் தொழிலாளிகள், இரவு வேளையில் அவன் வீட்டில் பாட்டும் கூத்தும் நடப்பதாகச் சொல்கின்றனர். அவன் வீட்டுப் பக்கம் போகவே பயப்படுவார்கள். ஆனால், மேஜர் அந்த வீட்டை வாங்குமுன்பே அந்த வீட்டைப் பற்றி இம்மாதிரி வதந்திகள் வருவதுண்டு. அதற்கும் பாவம் தனி மனிதன் மேஜர் என்ன செய்வார்”, என்று நிறுத்தினார். 

“மேஜர் தனி மனிதன் இல்லை. அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள்”, என்றேன். 

ராமலிங்கம் ஆச்சரியத்துடன், “மேஜருக்கு மகளா…? இருக்க முடியாதே! அந்த வீட்டை வாங்கும் போது அவர் தனி மனிதன், குடும்பமே கிடையாது என்று சொன் னாரே”. என்றார். 

“நானும் அண்ணா ராமநாதனும் அவர் வீட்டுக்கு டீ சாப்பிடப் போயிருந்தோம். அப்போது மேஜரே தன்னுடைய மகளை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.” என்று சொன்னேன். 

மேஜரின் மகளைப் பற்றி நான் பேசியதும், சீதா என்னை ஒருமாதிரியாகப் பார்த்தாள். அவள் பார்த்த பார்வையிலிருந்து, நான் அவளிடம் ஆனந்தியைப் பற்றியும், என் மனத்தின் குழப்பத்தையும் பற்றியும் பேசுவதே தவறாக முடியும் என்று உணர்ந்தேன். 

ராமலிங்கம், “நீங்கள் இருவரும் அந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறீர்களா?” என்றார். 

“மேஜர் வருந்தி வருந்தி அழைத்தார். போனோம். ஏன். போகக்கூடாதா?”

“தவறு ஒன்றுமில்லை. நான் உதகமண்டலத்துக்கு சீசனுக்குப் போயிருந்தபோது மேஜர் என்னையும் அழைத்திருக்கிறார். ஆனால் எனக்குத்தான் அங்கு செல்லப் பிடிக்கவில்லை. அதற்குத் தக்க காரணம் உண்டு. வெகுநாளைக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சிதான் காரணம். ஆனால் அப்போது மேஜர் அங்கு இல்லை. மல்லிகை அம்மாள்தான் வீட்டில் இருந்தாள்,” என்று சொல்லிவிட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டார். 

அவர் முகம், பழைய நினைவுகளின் துக்கத்தைப் பிரதிபலித்தது போல் தோன்றியது. 

அது என்ன நிகழ்ச்சியாயிருக்கும் என்று என் மனம் நினைத்தது. என் நினைப்பையே வார்த்தைகளால் வெளியிட்டாள் சீதா. 

“அது என்ன நிகழ்ச்சியப்பா?”  

ராமலிங்கம் பதில் சொல்ல முதலில் தயங்கினார். பிறகு சமாளித்துக் கொண்டு “சீதா, உன் அத்தை சபாபதியோடு வாழ்ந்த போது நடந்தது. ராமநாதன் அப்போது சிறு குழந்தை. துக்கத்தால் மெலிந்து போயிருந்த உன் அத்தையை உடல் நலம் பெறுவதற்காக நான் உதகமண்டலத்துக்கு அழைத்துப் போனேன். உன் அத்தையின் கணவன், திலீபனின் தந்தை சபாபதியும்கூட வந்திருந்தார். 

அப்போது மல்லிகையம்மாள் உன் அத்தையோடு பேசிக் பழக தினம் அங்கு வருவாள். உன் அத்தைக்கு உன் போலச் சங்கீதம் என்றால் உயிர். அந்த மல்லிகையம்மாளும் நன்றாகப் பாடுவாள். உன் அத்தையும் அந்த வீட்டுக்கு அடிக்கடி போய் வருவாள். ஒரு நாள் இரவு திடீரென்று உன் அத்தை அந்த வீட்டிலிருந்து அழுதுகொண்டே திரும்பினாள். நான் எவ்வளவு மன்றாடிக் கேட்டும் உன் அத்தை காரணத்தைச் சொல்லவில்லை. அந்த மல்லிகையம்மாள் ஒரு மானங்கெட்டவள். ஊருக்கு உடனே போவோம் அண்ணா, என்று வற்புறுத்தினாள். 

“மல்லிகையம்மாளுக்கும் சபாபதிக்குமிடையே தொடர்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அதை உன் அத்தை பார்த்திருக்க வேண்டும் என்று வெகு நாள் கழித்து உணர்ந்துகொண்டேன். உதகமண்டலத்திலிருந்து சென்னை திரும்பிய சில நாட்களில் உன் அத்தை மனம் உடைந்து இறந்துவிட்டாள். 

“என் சகோதரி இறந்த பின்பு எனக்கு ‘மல்லிகைத் தோட்டம்’ பங்களாவைப் பார்க்கவும் பெரிய வேதனையாக இருந்தது. இப்போது அந்தக் கேவலமான விஷயத்தைப் பற்றிப் பேசவும் வெட்கமாக இருக்கிறது.” 

இந்தக் கதையை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த என் தாய் பெருமூச்சு விட்டுப் பின்வரும் விஷயத்தைக் கூறினாள். திலீபனின் அப்பா அடிக்கடி ஊட்டிக்குச் சென்று விடுவார். இப்போதுதான் காரணம் புரிகிறது. நான் ஒவ்வொரு முறையும் அவர் ஊட்டிக்குக் கிளம்பும்போது அவரைக் காரணம் கேட்பேன். என்னை அவர் அடிப்பார். திட்டுவார். ஒரு தடவை அவர், வெளியூர் சென்று திரும்பியபோது, கலக்கத்தோடு காணப்பட்டார். நான் அவரை, ‘மறுபடியும் எப்போது ஊட்டிக்குப் போகப் போகிறீர்கள்?’ என்று குத்தலாகக் கேட்டேன். அவர் பயங்கரமாகச் சிரித்தார். ஒருவேளை குடித்திருப்பாரோ என்றுகூட நினைத்தேன். அவர் உடனே, ‘கவலைப்படாதே மீனாட்சி. இனிமேல் ஊட்டிப் பயணம் கிடையாது. ஊட்டிக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டேன். காவேரிக் கரையில் என் பழைய வாழ்வுக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டேன்’, என்றார். அப்புறம் சாகும் வரையிலும் ஊட்டிப் பக்கமே செல்லவில்லை. ஆனால் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன் மல்லிகைப் பூவைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காது. அதைப் பார்த்தால் உடனே சத்தம் போடுவார்,” என்று சொல்லி என் தாய் நிறுத்தினாள். 

இதைக் கேட்டதும் எனக்கு ஊட்டியில் முதல் நாள் இரவு கண்ட கனவு ஞாபகத்துக்கு வந்தது. அந்தக் கனவில் என் தந்தை என்னைச் சாட்டையால் அடித்து மல்லிகைத் தோட்டத்துக்கு அழைத்துப் போவதும், அங்கு நான் அவருடைய சாட்டையைப் பிடுங்கி, அவரை விரட்டிக் கொண்டு செல்வதும் அவர் நேராகத் திருச்சி தில்லைநாயகம் படித்துறையை அடுத்த அரசமரத்தடிக்குச் செல்வதும் எனக்கு ஞாபகம் வந்தது. 

அதே அரசமரத்தடியில் உள்ள படித்துறையில்தான் ராமநாதன் என் தந்தையின் அஸ்தியைக் கரைத்து ஈமக் கடன்களைச் செய்ததாகச் சொன்னதும், எனக்கு நினைவுக்கு வந்தது.

– தொடரும்…

– உடல் பொருள் ஆனந்தி, குமுதம் வார இதழில் (29-10-1992 முதல்) வெளியான தொடர்கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *