அழகிய வேப்பமரம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 30, 2014
பார்வையிட்டோர்: 20,655 
 

நீண்டு அடர்ந்து வளந்திருக்கும் மரங்களுக்கடியில் துண்டை விரித்து உட்காருகிறேன். புத்தகங்களை இன்று வெளியில் எடுப்பதாக இல்லை. படுத்திருந்து கனவுகாண ஆசை. வானம் தெளிவாக நீலமாகவும் இருக்கிறது. சூரியன் சந்தோசமாக சிரித்துக் கொண்டிருக்கிறான்.

வெய்யிற் காலங்களில் இந்தப்பார்க்கில் எனது மரங்களுக்கடியில் புத்தகங்களைப்பரப்பி உறங்குவதுண்டு . வழமைபோல் இல்லாமல் இன்று மனதை இலகுவாக்கி அண்ணாந்து படுககிறேன். எனது மரத்தின் இலைகள் எனக்கு வானத்தைக்காட்டிவிடாது போட்டிபோட்டு மறைத்துக் கொண்டிருந்தன. தம் அழகைமட்டும் ரசி என்பதுபோல அதிசயமாக இன்று எனது அழகிய வேப்பமரத்தின் நினைவுவந்தது.

எனது அழகான வேப்ப மரமே! நீ இப்போதும் எமது முற்றத்திலதான் நிற்கிறாயா? நீ இருந்தால் என்னை நினைப்பாயா? என்போல் உனக்கும் வயதுகள் கடந்திருக்கும். எத்தனை நாட்கள் உன்னடியில் ஊஞ்சலில் உறங்கியிருப்பேன். என் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் உரமிட்டவள் நீதானே. உன்னில் பழந்தின்ன வரும் பச்சைக்கிளிகளின் மொழிகூட எமக்கு புரியுமே. உனக்குத்தெரியாமல் எந்த ரகசியமும் என்னிடம் இருந்ததில்லை. இப்போ என் வாழ்வில் நீ அறியாத எத்தனை மாற்றங்கள் ரகசியங்கள். உன்னை பார்க்க வேண்டும்போல் இருக்கிறது. என்னை அறியாமல் கண்கள் கலங்கி மனம் சோர்வுற்றது.

என் சோகத்தை கலைக்க அந்தக் கணீரென்ற குரல். எழுந்து உட்கார்ந்தேன். நானிருந்த இடத்திலிருந்து சிறிது தள்ளி சிலரில் ஒருவன் கிற்றார் இசைத்து பாடினான். அவனது குரலும் கிற்றார் இசையும் என்னை அவர்களருகில் போய்நிறுத்தியது. அவர்கள் ‘ஹாய்’ சொன்னார்கள. அவன் பாடிக்கொண்டே இருந்தான் அவர்கள் என்னைத் தம்முடன் உட்காரும்படி கூறினார்கள.; அவன் எந்த தடங்கலும் இன்றி தனது உடல்முழவதையும் அழகாக அசைத்து பாடிக்கொண்டிருந்தான். மற்றவர்கள் என்னிடம் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்தியர்கள் ஆபிரிக்கர்களுடன் கதைக்க மாட்டார்களே. நீ மட்டும் எப்படி என்று வியந்தனர். என் கவனமெல்லாம் அவனில்தான் இருந்தது. ஆபிரிக்கருக்கே இசை சொந்தமானதுபோல் அவர்களின் ஒவ்வொரு அசைவும் இசையினால் படைக்கப்பட்துமாதிரி. அப்படி ஒரு திறமை இவர்களுக்கு. பொறாமையாக இருந்தது. அவன் என்னுடன் கதைப்பதை விரும்பாதவன் போல், ஆனால் எதோ ஒரு
குதூகலத்தில் அவன் குரலை உயர்த்திப் பாடிக் கொண்டிருந்தான். நீங்கள் சொல்வது சரிதான். எம்மவர்களில் அனேகர் மூளை பாவிக்கப்படாமல் துருப்பிடித்து போய்விட்டது. எனது கருத்துப்படி நிறவாதம் மூளையில்லாதவர்கள் ஏற்படுத்தியது. எமது நேரத்தை இவர்களுக்காக வீணாக்க வேண்டுமா? இப்போது திடீரென அவன் பாடுவதை நிறுத்தினான். பல விடயங்கள் பேசினோம். நேரம் போனதே தெரியவிலை. அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டேன். வழிமுழுக்க அந்த பாடகனின் நினைவு. அவனின் கண்கள் றஐனீசின் கண்களை ஞாபகப்படுத்தியது .

சில நாடகளின் பின்’ஹாய்’; என்ற குரலுக்கு திரும்பினோம.; அதே பாடகன்; பதிலுக்குக் ‘ஹாய்’ சொல்லிவிட்டு, அவனை மீண்டும் சந்தித்தும் என்னையுமறியாமல் எனக்குள் இரத்தம் குப்பென்று தலைக்கேறியது. என்னை சமாளித்துக் கொண்டதாக எண்ணி ,என்ன இந்தப்பக்கமென்று அசடு வழிந்தேன். சசிக்கு புரிந்ததுபோல் புன்சிரிப்பெறிந்தாள். அவனுக்கும் எதோ தெரிந்திருக்க வேண்டும் .

அவன் எம்மிடம் விடைபெறும் போது தனது தொலைபேசி எண்ணையும் விலாசத்தையும் என்னிடம் தந்து தனது பிறந்தநாளுக்கு வரும்படி அழைத்தான். உனது நண்பியையும் கூட்டிக்கொண்டு வா என்று செல்லிவிட்டு நடக்க, ஆ இது எனது நண்பி ! ஹலோ. அவன் போய்விட்டான். என்நினைவு இப்போதாவது உனக்கு வந்ததே. என்ன கண்டதும் காதலா ? பார்க்க அழகாகத்தான இருக்கிறான்.

அவனுக்கும் உன்னிடம் ஏதோ… என்றவளை, அப்படி எதுவுமில்லை சும்மா ஒரு இது. அவனின் பெயர்கூட மறந்திருந்தது . என்செய்கை குழந்தைத்தனமாக இருந்தது எனக்கு ஒருமாதிரியாக அவனின் வீட்டை கண்டுபிடித்து உள்ளுக்குச் சென்றோம். அவனை முன்னுக்குக் காணாதது அந்தரமாக இருந்தது.

அவனின் நண்பர்கள் எம்மை வரவேற்றனர் . ஐpம்மி யார் வந்திருக்கிறார்கள் என்றுபாரேன் என்றான் ஒருவன். மற்றவர்கள் தமக்குள் சிரித்தார்கள். சகியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். அவனது வீடு அவனது நாட்டு கலைப் பொருட்களாலும் அவனது ஒவியங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அவன் மீண்டுமொருதடவை என்மனதில் இடம்பிடித்தான். அதன் பின் நாம் அடிக்கடி சந்தித்தொம் . அன்று நல்ல வெய்யில். அந்தப் பாக்கில் நான் எழுதிக்கொண்டிருந்தேன். அவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.

நான் எழுதுவதை நிறுத்தினேன். ஏன் நிறுத்திவிட்டாய்? தொடர்ந்து எழுது சுமி . இந்தக் கவிதையைக் கேள் ஜிம்மி. இதை உனக்காகத்தான் எழுதினேன். ;எனக்காகவா ஆம் ஜிம்மி உனக்காக. நான்கவிதையை வாசித்துக் கொண்டு போனேன். அவன் கண்களை மூடிக்கொண்டு கேட்டுக் கொண்டிருந்தான். நான் முடித்துவிட்டு அவனைப்பார்த்தேன் . அவன் கண்களை திறக்கவில்லை. என்ன நல்லா இல்லையா? அவன் கண்களை மெதுவாக திறந்தான் கண்கள் கலங்கியிருதது . என் கைகளைப் பற்றி இந்தக்கணமே இறந்து விடலாம் போலிருக்கிறது சுமி. அவன் ஆங்கிலம் ஜேர்மன் இரண்டிலும் மாறி மாறி என்னைக் காதலிப்பதாக சொன்னான். அவனை மேலும் பேச விடாது ………….. அன்று நாம் நிறையக்கதைத்து சிரித்து சந்தோசமாக இருந்தோம். எம்மைக் கடந்து சிலர்போனார்கள். நான் அவர்களை சரியாக கவனிக்கவில்லை. எமது நாட்டவர் மாதிரி இருக்கென திரும்பினேன். சந்தேகமில்லை அவர்களேதான். சிறிது தூரம் சென்றதும் ஒருவன் சொன்னான். எங்கட பெட்டை போல கிடக்கு. காப்பிலியோட. மற்றவன் இந்தியனா இருக்கும். இன்னொருத்தன்: வளவையளுக்கு அண்ணன் தம்பி கிடையாதோ. நானென்டால் வெட்டிப்புதைச்சிருப்பன். காப்பிலிகளுடனும் கழுசறைகளுடனும்… எனக்கு கேட்க வேண்டுமென்பதற்காக சிறிது சத்தமாக சொல்லிக்கொண்டு போனான். எதிர்பாராத அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட எனக்கு அவர்களை உதைப்பது போல்பதில் கொடுக்காமல் விட்டதற்கு என்னில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. எனக்கு மேலும் அங்கிருக்கப்பிடிக்கவில்லை.

வா போகலாம் என்றேன். உன் நாட்டவரா? என்தொடர்பாக எதாவது சொன்னார்களா? நான் மௌனமானேன். ஏன் இந்த மடையர்களில் ஆத்திரமடைகிறாய்? இந்த அழகிய நாளை இவர்களால் வீணாக்கவேண்டாம் சுமி. இந்த நாளில் எனக்கு வெறுப்பில்லை ஜிம்மி. இந்த மனிதர்களை நினைக்கத்தான்.. .அவனும் ஆத்திரமடைந்திருந்தான் இருவரும் அங்கிருந்து வெளியே வந்தோம்.

அவர்கள் கடந்து வந்த அந்தப் ‘பாக்கி’ன் வெளிச் சுவரில் வெளிநாட்டவரே வெளியேறு என எழுதி நாசிகளின் அடையாளம் கீறப்பட்டிருந்தது .

– நவமபர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *