கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: October 20, 2023
பார்வையிட்டோர்: 5,965 
 

(2006ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

பிரபல துப்பறியும் இன்ஸ்பெக்டர் சிங் ஒன்பது மணிக்கு ஆபீசில் நுழைந்தார். 

அன்று முக்கியமாக பல விசாரணைகள் நடத்த வேண்டும். 

நினைக்கும்போதே மலைப்பாக இருந்தது. 

நாற்காலியில் அமர்ந்தார். 

திடீரென்று சிங் தமது காலடியில் பூமி நடுங்குவதை உணர்ந்தார். 

ஜன்னல்கள் கிடுகிடுத்தன. கதவுகள் ஆடின. தரை மிடுமிடு என்று சத்தம் இட்டது. 

நிலநடுக்கமாக இருக்கும். 

சிங் தமது பைல்களைப் பிரித்தார். 

போன் அடித்தது. 

கமிஷனர் மதனகோபால் பேசினார். 

ஒரு பெரிய விபத்து நேர்த்திருப்பதாகவும், டேலர்ஸ் ரோட்டில் தம்மைச் சந்திக்கும்படியும் அவசரச் செய்தி கொடுத்தார். 

உடனே எழுந்தார். 

வெளியே விரைந்தார். 

ஜீப்பில் ஏறினார். 

சாலை வந்ததும் இருபுறமும் ஆவலாகப் பார்த்தார்.

கட்டடங்கள் கட்டுக்கோப்புடன் சீராக நின்றன.

ஜீப் பறந்தது. 

ஒருவேளை டேலர்ஸ் சாலையில் மட்டும் ஏதாவது நடந்திருக்குமா? 

வழிகளைக் கவனித்துக் கொண்டு போனார். சுபாஷ் சிலையைத் தாண்டி ஐ. என். ஏ. ரோட்டில் நுழைந்தபோது அவருக்கு மூக்கு வியர்த்தது. 

முன்னால் ஒரு ‘தீயணைப்பு வண்டி’ ‘குய்யோ முறையோ சத்தம் போட்டு ஓடியது. 

அதை அடுத்து ஒரு போலீஸ் வேன் சிட்டாகப் பறந்தது. 

டேலர்ஸ் சாலையை அடைந்ததும்தான் ஒரு திடீர்த் திகில் அவர் மனத்தில் ஏறியது. 

திருப்பத்தில் கூடிய ஏராள ஜனத்திரளை போலீஸ் வேலியிட்டிருந்தது. 

சாலைக்குள் பார்வையை வீச தூரத்தில் ஏற்கனவே வேன்களும், சிப்பந்திகளும் பெரிய அளவில் கூடியிருப்பது தெரிந்தது. 

சாலையின் இருபுறத்திலும் போலீஸார். ஜீப் மெதுவாக ஊர்ந்தது. 

எல்லோரும் சிங்கை ‘ஒரு மாதிரி’ப் பார்வை பார்த்தார்கள். 

இதென்ன புகையா? தூசியா? 

ஜீப் அங்கே கிட்டத்தட்ட நடுமத்தியில் நின்றது.

சிங் குதித்தார். 

அந்த நெடி, அந்தக் கணத்தில் அவரைப் புரிய வைத்தது. 

எல்லோரும் போலீஸ் சிப்பந்திகள்தான்! ஒரே இயக்கமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். 

சிதறிக் கிடக்கும் இடிபாடுகளுக்கு இடையே சிங் எச்சரிக்கையாகக் கால்களை வைத்துச் சென்றார். 

கமிஷனர் முகத்தைச் தேடி அங்குமிங்கும் பார்த்துச் செல்ல, 

திடீர் என்று அந்தக் காட்சி அவரை நிறுத்தியது. வரிசையாக இருந்த பலமாடிக் கட்டிடங்களில் ஒன்றைக் காணவில்லை. 

சட்டென்று தெரிந்த அந்த இடைவெளி வழியே நீலவானமும் ஒரு துணுக்கு மேகமும் மௌனமாகத் தெரிந்தன. 

ஒரு கணம் உடல் சில்லிட்டது. 

ஆகா! இங்கே ஒரு ஐந்து மாடிக் கட்டிடம் நின்று கொண்டிருந்ததே! அதா மறைந்து விட்டது. 

“சிங்!” என்று குரல். 

கமிஷனர் மதனகோபால் ஒரு கும்பலிலிருந்து கழன்று வந்து கொண்டிருந்தார். 

அவசரமாக வந்தார். கவலையாக இருந்தார். 

“சிங்! என்ன நடந்திருக்கு. பார்த்தீங்களா?” என்று பதட்டத்துடன் கேட்டார். 

தொடர்ந்து ‘ஒரு முழு அஞ்சு மாடிக் கட்டிடம் அப்பளமா நொறுங்கிப் போச்சு! குண்டு வெடிச்சிருக்கு!’ 

“ஆ! வெடிகுண்டா ஸார்!” என்று சொல்லி சிங் முகத்தைத் திருப்பி கட்டிடம் இருந்த திசையை நோக்கினார்.

“ஆமாம்! வெடிச்சது கேட்கலையா? பூமியே அதிர்ந்ததே! பூகம்பம் போல்!” 

சிங்குக்குள் அந்தக் கோரத்தின் பரிமாணம் மெல்ல மெல்ல மனத்தில் இறங்கத் தொடங்கியது. 

கட்டிடத்திற்கு மூன்று மைல் தள்ளி இருந்தது அவரது ஆபீஸ். 

அதுவரை அந்த அதிர்ச்சி கேட்குமானால் எவ்வளவு பெரிதாக அது வெடித்திருக்க வேண்டும். 

கட்டிட வெளியை நெருங்கினார்கள். 

தவிடு பொடி ஆகியிருந்தது. இதுவரை பன்னிரெண்டு சடலங்களை எடுத்து விட்டார்கள். 

ஒரு ஸ்ட்ரெச்சர் அப்போது குறுக்கே ஓடியது. 

கட்டிடம் இருந்த இடம் ஒரு குவியலாக இருந்தது. ரோட்டில் சேதாரம் சிதறி இருந்தது. பனியன் தரித்த ஸ்பெஷல் போலீசார், இடிபாடுகளை அவசரமாக அகற்றிக் கொண்டிருந்தார்கள். லாரிகள் அவற்றை அவசரமாக ஏற்றிக் கொண்டிருந்தன. 

சிங் சேதாரங்களின் நடுவில் ததிங்கிணத்தோம் போட்டு நடந்தார். கமிஷனர் தொடர்ந்தார். 

ஒரு பெரிய தூசிப்படலம் அப்படியே ஸ்தம்பமாக நின்றது. 

சுவாசத்தில் நெடித்தது. 

தீ. 

தீயணைப்புக்காரர்கள் அப்போதுதான் ஒரு பெரிய காங்கிரீட் பாளத்தை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். 

அதன் இடுக்கில் கால்கள் அகப்பட்டவன், ‘என்னைக் கொன்னிருங்களேன்! கொன்னிருங்களேன்!’ என்று கத்திக் கொண்டிருந்தான். 

ஒரு யூனிபார்ம் டாக்டர் அவன் அருகில் உட்கார்ந்து பதட்டத்தோடு இஞ்செக்ஷன் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரே இயக்கமாக அங்கே நிவாரண வேலை நடந்து கொண்டிருந்தது. 

டி.வி.காரர்களை அவர் முகத்தில் திருப்பவே, வேண்டாம் என்பது போல் கையைத் தூ தூக்கிக் காண்பித்தார் அவர். 


அந்தப் பெண் அங்கே நின்று அந்தப் பெரிய குவியலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

அவள் கண்களில் இரு வைரத் துண்டுகள் மின்னின. 

சுடிதார் தரித்த அவள், நாகரிகமாக நடந்து கொண்டாள். துக்கத்தை அடக்கி உள்ளே அழுகையை சமப்படுத்திக் கொண்டிருந்தாள். 

சிங் தமது துணை இன்ஸ்பெக்டர் லிங்க்கிடம் அந்த பெண்ணை அழைத்து வரச் சொன்னார். 

மெல்ல கால்களைப் பதித்து அவள் வந்தாள். 

சிங்கையும், அவளது அப்பார்ட்மெண்டாக அன்று காலை வரை இருந்த இடத்தையும் மாறி மாறி பார்த்தாள். 

“இன்ஸ்பெக்டர்!” என்று தாபமாக அழைத்தாள். “எங்க அம்மா உயிரோட இருப்பாங்களா?” என்றாள் விசிப்புடன். 

“எந்தத் தளத்திலே குடியிருந்தீங்க அம்மா?” 

“கீழ்த்தளத்திலே.” 

சிங்குக்குத் தெரியும். அந்தப் பகுதி தவிடு பொடி ஆகிவிட்டது என்று! எனினும் அவளை ஆறுதலாகப் பார்த்து, “உள்ளே நிறைய இடைவெளி இருக்குதம்மா! ஒருவேளை உங்க அம்மா தப்பிச்சிருக்கலாம். உன்பேர் என்னம்மா?” 

“நித்யா!” 

“குட்! அங்கே லிஸ்ட் எடுக்கிறாங்க பாரு! அவங்களைத் தொடர்பு கொண்டுக்க!” திரும்பி அவள் போகும் போது லிங்க்கின் கண்கள் அவள் நடையில் லயித்தன. 

கடந்த ஒரு மணி நேரத்தில் பத்து பேராவது அவரிடம் வந்து போய் விட்டார்கள். 

அவர்களது உறவினர்கள் அந்தப் பெரிய காங்கிரீட் குவியலுக்குள் மாட்டி இருந்தார்கள். 

அவர்களது ஒரே கேள்வி உயிரோடு இருப்பார்களா?

சிங்கினால் என்ன செய்ய முடியும்? 

“கவலைப்படாதீங்க! உள்ளே பல பேர் உயிரோடு இருப்பாங்க! கடவுளை வேண்டிக்குங்க! 

நிச்சயம் தெரியும் சிங்குக்கு. இதுவரையும் சடலங்கள் தான் கிடைத்தன. உயிருடன் யாரும் கிடைக்கவில்லை. 

“லிங்க்!” என்றார். 

“எஸ் ஸார்!” 

“இனிமே யாரையும் இங்கே விடாதே!”

“இல்லை ஸார்!” 

சிங்கின் பார்வை மீண்டும் இருபுற வீடுகளிலும் பட்டது. 

அண்டை வீடுகள் இரண்டிலும் கீழே கீறல் விட்டிருந்தது. 

வெடியின் பாய்ச்சல் அதுவரை போயிருக்கிறது. 

பல குண்டு வெடிப்புகளை பார்த்திருக்கிறார். இவ்வளவு விஸ்தாரமாக எங்கேயும் வெடித்ததில்லை. 

அதுதான் அவருக்குள் கவலை! 

வெடிகுண்டு வெளிநாட்டுச் சரக்காக இருக்கும். உள்ளூர்ச் சரக்காக இராது! 

பெரிய ‘குட குடா’ சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தார். ஐந்து டன் கிரேன் வந்து விட்டது. இனி நிவாரண வேலை விரைவாக நடக்கும். 

“லிங்க்!” 

“எஸ் ஸார்!” 

“ஏதாவது முக்கியமாக கிடைச்சா உடனே எனக்கு போன் செய்யணும்.” 

“எஸ் ஸார்!” 

“சடலம் கிடைச்சாலும் சரி!” 

“ஓ. கே. ஸார்.” 


இரவு சிங்குக்கு உறக்கம் இல்லை. 

முயன்றாலும் அடிக்கடி கனவு வந்தது. 

அடுத்த நாள் பேப்பர்கள் வீறிட்டுக் கத்தப் போகின்றன. 

அதைத் தொடர்ந்து மக்களும் கத்தப் போகிறார்கள். 

இரவு இரண்டு முறை லிங்க் போன் செய்தான். இரண்டு முறையும் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. 

அவை பெரிதும் சிதைந்து போயிருந்தன. அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். 

இரண்டாம் கால் வந்த பிறகு சிங்கின் தூக்கம் போய்விட்டது. 

வெறும் சுழற்சியிலே அப்படியே படுத்திருந்தார். காலையில் எழுந்ததும் வீட்டில் வந்திருந்த பத்திரிகைகளை அவசரமாகப் புரட்டினார். 

அவர் சொன்னபடியே நடந்திருந்தது. 

எல்லாப் பத்திரிகைகளும் கொட்டையாகக் கத்தி இருந்தன. 

முழுதையும் படிப்பதற்கு நேரம் இல்லை. ஆனால் ஏதாவது புதுச் செய்தி தருகிறதா என்று அவசரமாகப் பார்த்தார். எதுவும் தென்படவில்லை. ஒன்பது மணிக்குள் சாப்பாட்டை முடித்து விட்டு ஸ்தலத்துக்கு விரைந்து போனார். 

இரவு பாதி இடிபாடுகளை எடுத்து விட்டார்கள். காலையில் மேலும் நான்கு சடலங்கள் கிடைத்தன. 

தெருவில் ஜன வெள்ளம் மொய்த்தது. ஒரு பெரிய போலீஸ் படை அவர்களை அணை இட்டிருந்தது. 

லிங்க் ஏற்கனவே காத்திருந்தான். இரவு முழுதும் விழித்ததில் கண்கள் வீங்கி இருந்தன. 

“ஏதாவது தடயம்?” என்றார் சிங்! 

“எதுவுமில்லை ஸார். துணுக்குக் காகிதம் விடாமல் இடிபாட்டிலிருந்து பொறுக்கி இருக்கேன்.” 

சிங்கின் பார்வை மெல்ல மறுபக்கம் சென்றது. 

ஒரு சின்னக் கும்பல், அந்த பல்மாடியில் வசித்தவர்களின் உறவினர்கள். கும்பல் மட்டும், சற்று எட்டத்தில் நின்று பார்க்கும்படி அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். 

அவர் பார்வை மீண்டும் அந்த பத்து வயதுப் பெண் மீது விழுந்தது. 

நேற்றே அவளைப் பார்த்து விட்டார். இன்று தமது கையை நீட்டி ஒரு விரலால் அழைத்தார். 

ஒரு மெல்லிய புன்னகை அந்தச் சிறுமியிடம் ஓடிற்று. கால்களை ஊன்றி வைத்து சிங்கை நோக்கி வந்தாள். 

நேற்றைவிட இன்று களைத்திருந்தாள். அவள் கண்களில் இன்னும் தீபமாக ஒரு களை எரிந்தது. 

சிங்கின் முன்னால் உதடுகள் துடிக்க நின்றாள்.

“உங்க பிளாட் எரிஞ்சு போயிருந்ததா?”

“ஆமாம் ஸார்!” 

“அதிலே யார் இருக்காங்க?” 

“அம்மா!” 

“அப்பா இல்லையா.” 

“அப்பா கிடையாது.” 

“நீ வெளியிலே போயிருந்தியா?” 

“ஆமா ஸார்! ஸ்கூலுக்கு!. . . மத்தியானம் வந்தேன். வீடு இடிஞ்சு கிடக்கு.” சிங் மேலே பேசவில்லை. 

இனி பேசினால் சிறுமியின் துக்கத்தைத் தொட வேண்டியிருக்கும். 

இந்தப் பெண் இனி ஒரு அனாதை என்று நினைத்தார். மனசுக்குள் ஒரு பகுதி மெள்ள இளகியது. 

கண்ணில் அதன் கரைவு ஒரு திரை போட்டது. 

“எங்க அப்பா உயிரோடு இருப்பாங்களா ஸார்?” “உங்க ப்ளாட் எந்த மாடி?” 

“கீழ்த்தளம் ஸார்.” 

சிங் பேசவில்லை. கர்ச்சிப்பை எடுத்து முகத்தை வழித்தார். சிறுமி இன்னும் அந்த இடிபாட்டைப் பார்த்தாள். 

“உன் பேரு? 

“லதா!” 

“அப்பா கிடைச்சவுடனே சொல்றேன்!” 

“தாங்க்யூ ஸார்!” 

திரும்பி அவள் நடந்து போனாள். 

ஒரு பெருமூச்சு விட்டுத் திரும்பினார். ‘லிங்க்!’

“எஸ் ஸார்!” 

“லிஸ்ட் தயாரா?” 

“இதோ ஸார்!” 

ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தான். அந்த வீட்டில் இருந்தவர்கள் எல்லோர் பெயரும் அதில் இருந்தன. 

“சில பேரை அடிச்சிருக்கியே?” 

“அவங்க இறந்தாச்சு! சடலம் கிடைச்சுடுத்து.”

“இந்தப் பெண்ணோட ப்ளாட்?” 

“ஒன் ‘ஏ’ ஸார்.” 

“மூர்த்தின்னு போட்டிருக்கு அடிச்சுட்டியே!” 

“இறந்து போயாச்சு. சடலம் கிடைச்சாச்சு!” 

“சொல்லணும். தர்ம சங்கடமா இருக்கு. சோஷியல் வொர்க்கர் யாராவது மூலம் சொல்லணும்னு பார்க்கிறேன்.” 

“யாராவது உறவு இல்லையா?” 

“இல்லை ஸார்.” 

சிங் முகத்தைச் சுருக்கினார். லதாவின் பச்சை முகம் மனத்தில் மெல்லிதாக வந்தது. சுருக்கென்று ஒரு வலி. சிங் கண்ணை இறுக்கினார். 

ஒரு விபத்து எவ்வளவு குடும்பங்களை நிர்க்கதி ஆக்குகிறது? 

வெடிகுண்டு நிபுணர் சிறிது நேரத்தில் வந்தார். முகம் முழுதும் முத்துக்களாக நீர்த்துளிகள். வெய்யில் பட்டு முகம் கருகி இருந்தது. சிங்கைப் பார்த்ததும், “இதைப்போல சமீபத்திலே பார்த்ததில்லை!” என்றார். 

“எதைச் சொல்றீங்க? சந்தாராம்!” 

“இந்த வெடிப்பு!” 

“அப்படியா?” 

“ஆமாம்! முக்கால் காங்கிரீட்டும் பொடியாய் போயிடுத்து பார்த்தீங்களா?” 

“ஆமாம்.” 

“கம்பிங்க திருகியிருக்கிற லட்சணத்தைப் பார்த்தீங்களா?”

“ஆமாம்… “

“இவ்வளவு சக்தி வாய்ந்த குண்டை இங்கே தயாரிச்சுது இல்லை.” 

“பின்னே?” 

“எங்கேயிருந்தாவது திருடிட்டு வந்திருக்கணும்.”

“ஏதாவது பார்ட்ஸ் கிடைச்சதா?” 

“கிடைச்சா உங்ககிட்டே காட்டாம எடுத்துப் போவேனா சிங்!” 

பிறகு கமிஷனரும் இதர உள்துறை அதிகாரிகளும் வந்தார்கள். 

சர்ச்சையாகப் பேசிவிட்டு, சிங்கிடம் அபிப்பிராயத்தைக் கேட்டார்கள். 

“இந்த நிலையில் எதுவுமே சொல்றதுக்கு இல்லை? யார் பிளாட்டிலேயாவது பட்டாசுக் கிடங்கு இருந்தாலும் போச்சு!” என்றார் சிங்!” 

“அப்படி ஏதாவது சந்தேகம் உண்டா?” என்று கேட்டார்கள் அதிகாரிகள். 

“இல்லை இன்னும் விசாரிக்கணும்!” என்றார் சிங். 

சீக்கிரத்தில் எல்லோரும் போன பிறகுதான் அவருக்கு நிம்மதி! 

சிங்குக்கு கூட்டம் உதவாது! 

அதுவும் துப்பறியும் வேலையில் அவருக்குத் தனிமை அதிகம் வேண்டும். 

அதிகாரிகள் போய்விட, சிங் அங்கும் இங்கும் சிறிது கண்களை அலசினார். 

போலீஸ் சிப்பந்திகள் இடிபாடுகளில் கிடைக்கும் பொருள்களைத் தனியாக சேகரித்துக் கொண்டிருந்தார்கள். 

இவைகளில் ஏதாவது தடயம் கிடைத்தால் உண்டு. இல்லாவிடில் விசாரணைகளில் கவனத்தைத் திருப்ப வேண்டியதுதான். 

“ஸார்!” என்று குரல் கேட்டுத் திரும்பினார். 

முந்தைய தினம் பார்த்த இளம் பெண் நின்றாள். அவள் முகத்தில் முன்பு இருந்த புன்னகை அழிந்திருந்தது. கண்களில் ஒரு பொட்டு மழுங்கித் தெரிந்தது. 

“எங்க அம்மா?” என்றாள். 

அவள் தோற்றமும், கேள்வியும் அவரைத் தாக்கின. சற்று திகைத்த சிங், “இன்னும் அவங்க கிடைக்கலியா?” 

“இல்லை ஸார்.” 

சிங் முகவாயை மெதுவாகத் திருப்பினார். 

“ஒருத்தரும் உயிரோடு கிடைக்கலை ஸார்! அவங்க இறந்திருப்பாங்களா?” பரிதாபத்துடன் அந்தப் பெண் கேட்டாள். 

சிங் பார்வையைத் தணித்தார். “எப்போதும் நம்பிக்கை வையம்மா! இன்னும் எடுக்க வேண்டிய இடிபாடுகள் நிறைய இருக்கே!” 

“ஸார்! எனக்கு நல்லாத் தெரியுது. அவங்க இறந்திருப்பாங்க!” 

சிங் பேசவில்லை. 

“அவங்களைக் கூப்பிட்டேன். வராம இருந்துட்டாங்க!” 

சட்டென்று பார்வை சிங் தூக்கினார். “கூப்பிட்டியா?”

“ஆமா ஸார்! வெடிக்கிறதுக்கு முன்னாடி வெளியிலே கூப்பிட்டேன்.” 

“வெடிக்கப் போறது உனக்குத் தெரியுமா?” 

“ஏதோ நடக்கப் போறதுன்னு தெரியும்.” 

“ஏன்? சந்தேகப்படும்படி ஏதாவது நடந்ததா?”

“இல்லை சார். எனக்கு ஊகம்..” 

சிங் அவள் கண்களைப் பார்த்தார். 

“சமயத்திலே ஏதாவது இப்படித் தோணும்!” என்றாள் அவள். 

“ஓ…! பிரமாதம்.” 

“ரைட் ஸார். உங்களுக்குத் தொந்திரவு கொடுக்க விரும்பலை.”திரும்பி நடை போட்டு போனாள். 

“லிங்க்!” 

சற்று தூரத்தில் அவன் கூலி ஆட்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். 

சிங்கைப் பார்த்து ஓடி வந்தான். 

சிங் அதற்குள் பாக்கெட்டிலிருந்து லிஸ்டை எடுத்துப் பிரித்திருந்தார். 

கண்கள் துறுதுறு என்று ஓடின. 

“வெடி வெடிச்ச போது வெளியே போயிருந்தவங்க எல்லோர் மேலேயும் சந்தேகப்பட வேண்டியது! தெரிஞ்சுதா?” 

“எஸ் ஸார்!” 

“இந்தப் பெண்ணு போறாளே யாரு?”

“நித்யா!” 

“அதுக்குள்ளே பெயரை உருப்போட்டுட்டியே..” 

லிங்க் நாக்கால் உதடுகளை வழுக்கினான். 

“அவளை உடனே கண்காணிக்கணும்.” 

“எஸ் ஸார்.” 

“ரெண்டு நாளானாலும் பரவாயில்லை. விடாமல் கவனிக்கணும்.” 

“எஸ் ஸார்!” 

“விடாதே! துரத்திட்டுப்போ!” 

லிங்க் தாவிக்கொண்டு போனான்.

அத்தியாயம்-2

“உனக்கு எப்படித் தெரியும்?” என்றாள் மகேசுவரி.

பள்ளிக்கு அவள் புறப்பட்டிருந்தாள். ஆசிரியையாக இருப்பாள். 

ஆள் குட்டை! 

முகம் சுமாராக இருக்கும். பள்ளிக் குழந்தைகளிடம் கத்திக் கத்தி, சற்று கடூரமாகி இருந்தது. 

ஒரே ஒரு ப்ளஸ் பாயிண்ட்! 

மற்றப்படி அவள் உடம்பைப் பார்த்தால் நல்ல அழகில் அளவுகள் கச்சிதமாக இருக்கும். 

கவர்ச்சியாகக்கூட இருந்தது. 

“உனக்கு எப்படியம்மா ஊகம் வருது?” 

“நான்தான் கடவுளை வேண்டிக்கிறேனே! அவராகத்தான் எனக்கு அந்த ஊகத்தை உண்டு பண்றார்.” 

வீட்டில் உண்டான நகைகள், ரொக்கம் பத்தாயிரம் ரூபாய் எல்லாம் அவள் பெட்டியில் இருந்தன. 

தவிர சில முக்கியத் துணிகளைக்கூட நித்யா எடுத்து வைத்திருந்தாள். 

அப்படிச் செய்யும்போது அத்தை மகேசுவரி பதைத்து விட்டாள். 

திறந்த பெட்டியையும், அவளையும் மாறி மாறிப் பார்த்தாள். 

அவள் அதிசயம் அடங்கவில்லை. 

“ஆமாம் அத்தை! நம்புங்க. இல்லாட்டி நான் மட்டும் வீட்டை விட்டு ஒன்பது மணிக்கே புறப்படுவேனா?”

“அப்போ அம்மாவை ஏன் கூப்பிடலை?” 

“கூப்பிடாம இருப்பேனா? வெளியிலே அவளை இழுத்துட்டே வந்துட்டேன்.” 

“அப்புறம் என்னாச்சு?” 

“உங்களுக்குத்தான் தெரியுமே அவங்க மெல்லத்தானே நடப்பாங்க!” 

“ஆமாம்.” 

“பின்னாடி நடந்து வந்தாங்க. வீட்டை விட்டு வெளியே வந்து தெருவிலே நடந்து வந்தாங்க. நான் அவசரமா முன்னாடி போனேன்.” 

“சரி!” 

“நான் அடுத்த தெருவிலே திரும்பிப் போயிட்டேன். அப்புறம் சாலையிலே திரும்பணும். அம்மா வராங்களான்னு திரும்பிப் பார்த்தேன். எனக்கு அதிசயமாப் போச்சு! அம்மாவைக் காணல்லை.” 

“அப்புறம்?” 

“அவள் மெதுவாக நடந்து வருவான்னு கொஞ்ச நேரம் காத்திருந்தேன். அம்மா வரக் காணலை. நேரம் ஆயிட்டது. பொறுமை இழந்துபோய், நானே திரும்பி வந்தேன்.” 

“அம்மா என்ன ஆனாங்க?” 

“அவங்க என்ன நினைச்சாங்களோ வீட்டுக்குத் திரும்பிப் போயிருக்கணும்.” 

“ஏதாவது விட்டுட்டு வந்திருப்பாங்களா.” 

“அப்படித்தான் இருக்கணும். துண்டு விட்டுட் டாங்கன்னு நினைக்கிறேன். அதுகூட அவங்களுக்கு விடக்கூடாது. திரும்பிப் போயிருக்காங்க! எனக்கு ஒரே வெய்யிலா இருந்திச்சு! என் சிநேகிதி வீடு அதே தெருவிலே இருந்திச்சு! உள்ளே போயிட்டேன்.” 

“அப்புறம்?” 

“ரெண்டாவது நிமிடம் பயங்கரச் சத்தம்! மாடிக் கட்டிடம் நொறுங்கி விழுந்தாச்சு.” 

அவள் குரல் மெல்ல அடைத்தது. கண்ணின் ஓரத்தில் ஒரு சொட்டு பளிர் என்று அடிக்க ஆரம்பித்தது. 

மறுகணம் கைக்குட்டையை எடுத்து அவள் விசிக்க ஆரம்பித்தாள். 

“இந்தா… இந்தா. … நித்யா அழாதே! இது விதி!”

“அத்தை!” என்றாள் நித்யா விசித்துக் கொண்டு, “என் அம்மாவைக் காப்பாத்த முடியலையேன்னு ரொம்ப வருத்தப்படறேன் அத்தை.” 


“அந்தப் பெண் நல்லவள் ஸார்;” என்றான் லிங்க். காலை பத்து மணி இருக்கும். 

வெளியே சூடு மெல்லிதாக ஏறியது. 

சிங் மேசை முன்னால் யோசனை செய்து  கொண்டிருந்தார். 

“லிங்க் வந்துட்டியா?” என்றார். 

“எஸ் ஸார்!” 

“ரொம்ப நாளாச்சே!” 

“ரெண்டு நாள் ஸார்! நான் அந்தப் பெண்ணைத் தொடர்ந்திட்டிருந்தேன்.” 

“ஏதாவது விஷயம் உண்டா?” 

“எதுவுமில்லை ஸார்! எல்லோரையும் போல நித்யா ஒரு குற்றமில்லாத பெண்!” 

சிங் பேசவில்லை. 

“வின்சன் லெதர் கார்ப்பரேஷன்லே வேலை பார்க்கிறா!”

“ஓ!” என்று திரும்பினார். 

“கம்பெனியிலே நல்ல பேரு! நல்லா வேலை செய்யறா!”

“கேரக்டர் எப்படி?” 

“ரொம்ப நல்லவள்னு எல்லோரும் புகழறாங்க.”

சிங் நாற்காலியின் கைப்பிடியைப் பிடித்தார். 

“சரி! அவளுக்கு அந்த ஊகம் எப்படி வந்திச்சு?” 

“அது ஒண்ணுமில்லை சார். திடீர்னு ஏதோ நினைச்சிருக்கிறா. வெளியிலே போயிருக்கிறா. அவ்வளவு தான். அதை அவள் கொஞ்சம் பெரிசுபடுத்திப் பேசறா. அவ்வளவுதான்.” 

சிங் புருவத்தை நெறித்தார். 

“வேறே எதுவும் மர்மம் அல்லது அமானுஷ்யம் இல்லையா?” 

“இல்லை சார். அவளுக்கு ஒரு காதலன் இருக்காப் போல இருக்கு.” 

“அப்படியா? யாரு?”

“தெரியலை. நேரம் கொடுத்தா கண்டுபிடிச்சிடலாம்.” 

சிங் தமது கைகளை நெற்றியில் வைத்தார். கண்களை மூடிக் கொண்டு, “லிங்க்! அதைவிடப் பெரிய சமாச்சாரங்கள் இப்போ வந்திருக்கு. உட்காரு.” 

“எஸ் ஸார்!” 

”நாகசாமின்னு ஒருத்தன் இந்த ப்ளாட்லே இருந்திருக்கான். என். ஆர். நாகசாமி!” 

“எஸ். ஸார்!” 

“தனியாத்தான் இருந்திருக்கான். விசாரிச்சதுலே ஏதோ நடிகர், பாடகர்னு சொல்றாங்க.” 

“எஸ் ஸார்!” 

“யாரிட்டேயும் அதிகமாப் பழகினதில்லை. அவனைப் பற்றி எனக்குச் சந்தேகம் வருது. முதல்லே இந்த விபத்து நேர்ந்தபோது, வீட்டிலே இருந்திருக்கானா இல்லையான்னு தெரியணும்.”

லிங்கின் முகம் தீவிரமாகியது. 

“ஸார். எடுத்த 32 சடலத்திலே ரெண்டு அடையாளம் கண்டுபிடிக்காம இருக்கு!” 

“ரெண்டும் ஆண்தானா?” 

“ஒண்ணு ஆண்! இன்னொன்னு சிதைஞ்சு போய் யாருன்னு தெரியலை.” 

“ரைட்! நாகசாமிக்கு சொந்தக்காரங்க யாரும் வரல்லையா?” 

“ஸார்! மார்ச்சுவரியோட தொடர்பு வச்சிட்டுத்தான் இருக்கேன்! ரெண்டு சடலத்துக்கும் யாரும் சொந்தக்காரங்க வரல்லை!” 

சிங் தமது பால்பாயிண்ட்டை எடுத்துக் கீழே தட்டினார். 

பிறகு சட்டென்று எடுத்து அலமாரி பக்கம் சென்றார். கதவைத் திறந்தார். 

உள்ளே வரிசையாக அட்டை பைல்கள் நின்று கொண்டிருந்தன. 

‘N’ என்று போட்ட பைலை வெளியே எடுத்தார். பக்கங்களைப் புரட்டி மேஜை முன்னால் வந்து அமர்ந்தார். 

“ஆ!” என்றார் அவர். “இந்தா லிங்க்! இங்கே ஒரு சின்ன என்ட்ரி இருக்கு!” 

லிங்க் பார்த்தான். 

“நீ ஒண்ணு செய், லிங்க்! கமிஷனர் ஆபீஸ்லே கம்ப்யூட்டர்லே அவனைப் பற்றிக் கேட்டுட்டு வந்திடு.” 


“12-9-1997 என். ஆர். நாகசாமி. வயது 33. உயரம் 5.6″ இடது காது கீழே ஒரு மச்சம்! மதுரை வட்டாரத்திலே ஆறு திருட்டுக் கேஸ்! திருமங்கலம் ரயில் நிலையத்திலே அவனைப் பிடிக்கப்போன போது துப்பாக்கியை காட்டி மிரட்டியிருக்கிறான். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி பேசத் தெரியும்!” 

“கடைசியா கோவில்பட்டி பெட்ரோல் பாங்கிலே வேலை! ரூ.1,00,000/- யை எடுத்துக்கொண்டு ஓடி விட்டான். கேஸ் பதிவாகி இருக்கிறது. ஆள் அகப்பட்டால் நெல்லை மாவட்ட போலீஸ் அதிகாரிக்குச் செய்தி உடனே அனுப்பவும்!” 

லிங்க் காகிதத்தைத் துண்டித்து எடுத்துக் கொண்டான். 

கமிஷனர் ஆபீசை விட்டு வெளிக் கிளம்பியபோது அவனுக்கு ஆச்சரியம் தந்தது. 

அதற்குள் அந்த வீட்டு லிஸ்டை வைத்து ஒரு சந்தேக ஆசாமியை சிங் சுட்டிக்காட்டி விட்டாரே! 

பத்து நிமிடத்தில் சிங்கிடம் காகிதத்தைக் கொடுத்தான். 

அவர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ‘நான் சொன்னேன் பார்த்தியா?’ என்று காட்டிக் கொள்ளவும் இல்லை. 

“லிங்க்! அந்த ரெண்டு சடலமும் பத்திரமா இருக்கு இல்லே!” 

“மார்ச்சுவரிக் குளிர்லேதான் இருக்கு!” 

“சரி!” 

சிங் மௌனமானார். லிங்க் காத்திருந்தான். அவர் யோசனைக்கு இடம் கொடுத்துவிட்டு அப்பால் உள்ள அறைக்குச் சென்றான். 

போய் உட்கார்ந்திருக்க மாட்டான். “லிங்க்!” என்று குரல் கேட்டுத் திரும்பி வந்தான். 

“தெற்குப் பிராந்திய டி. ஐ. ஜிக்கு இந்தக் கடிதத்தை ஃபாக்ஸில் அனுப்பி, நாகசாமி போட்டோ அவசரமாகத் தேவைன்னு சொல்லு.” . 

“எஸ். ஸார்.” 

“Fax-லே உடனே அனுப்பச் சொல்லு! அவசரம்!”

– தொடரும்…

– காதல் அல்ல காதலி!, முதற் பதிப்பு: 2006, பூம்புகார் பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *