கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 8, 2023
பார்வையிட்டோர்: 2,534 
 

ஓர் ஊரின் ஆலமரத்தில் வசிக்கும் இரண்டு காகங்களும் தங்களின் அன்றாட செயல் பாடுகளைப்பற்றி பேசிக்கொண்டன. அதில் ஒரு காகம் சிறு தலைக்காகம், இன்னொன்று பெருந்தலைக்காகம்.

“உனக்கென்ன புரட்டாசி பௌர்ணமி முடிஞ்சு அமாவாசை வரைக்கும் பதினைஞ்சு நாளைக்கு வித விதமா விருந்து சாப்பிடற நேரம் மஹாளய பட்சம் மூலமா வந்திருச்சு. செத்துப்போயி அடுத்த பிறப்பெடுக்காம இருக்கற மனுசங்களோட ஆத்மா பிதுர் தேசத்துல இருந்து பதனைஞ்சு நாளைக்கு கூட்டமா வாரிசுகளைப்பார்க்க வந்திருவாங்க. அவங்க அமாவாசை தவிர மத்த நாட்கள்ல சந்திரன்ல இருந்து கெடைக்கிற அமிர்தத்த சாப்பிட்டு வாழ்வாங்களாமா? அமாவாசை நாள்ல சந்திரன் சூரியனோட சேந்துக்கிறதுனால அமிர்தம் கெடைக்காம பூமிக்கு வந்து அவங்க வாரிசுக வைக்கிற பிண்டத்த, சாப்பாட்ட நம்ம காக்காய்க மூலமா சாப்பிட்டு பசியாறி போயிடறாங்க. வெளியூர்ல இருந்து வர்ற மனுசங்க டாக்சி புடிச்சு அவங்க சொந்தக்காரங்க ஊட்டுக்கு போற மாதர, செத்துப்போன மனுசங்க காக்காய்கள டாக்சி மாதர பூமில பயன்படுத்திக்கறாங்க. அதுலயும் முக்கியமா மஹாளய பட்சட்சத்துல உன்ன மாதர சிறு தலை காக்காய் மூலமா அவங்களோட வாரிசுகள பார்த்துட்டு, அவங்க செஞ்சு போடற சாப்பாட்ட பதனஞ்சு நாளைக்கும் சாப்புட்டு போட்டு, ஆசீர்வாதம் பண்ணீட்டு புரட்டாசி அமாவாசை முடிஞ்சு தாம்போவாங்க. மனுச ஆத்மாக்களுக்கு நீங்கதான் ஒடம்பு கொடுக்கப்போறீங்க. அது மூலமா விருந்து சாப்பிடப்போறீங்க. ஒவ்வொரு ஊட்லயும் ராஜ மரியாதையா கெடைக்கப்போகுது. என்னப்போல பெருந்தலை காக்காய்கல சனிக்கிழமைல சனி பகவானும் சரி, அமாவாசைல‌ , மஹாளயபட்சத்துல மனுச ஆத்மாக்களும் சரி, மனுசங்க செத்த வீட்ல கருப்பு, பதனாறும் சரி எதுலயுமே கண்டுக்கறதே இல்லை. உங்களுக்கு முன்ன நாங்க எடுக்க வந்தா வெரட்டியடிப்பாங்க. நீங்க சாப்பிட்ட எச்ச சோத்த வந்து எடுத்த கண்டுக்க மாட்டாங்க. ஏதோ உங்களுக்காக வெக்கிற சாப்பாட்ட நீங்க சாப்பிட்ட மீதத்த தான் சாப்பிடறோம்” என சிறுதலைக்காகத்திடம் பெருந்தலைக்காகம் வருத்தப்பட்டு பேசியது.

“நீ வேற. நான் எதுக்கு சிறுதலைக்காக்காயா பொறந்தேன்னு வருத்தப்படறது உனக்குத்தெரியுமா? நம்மள கடவுள் படைச்சதே கிளிகள் மாதிரி மரத்துல காய்க்கிற பழங்கள திண்ணு வாழத்தான். சில சமயம் உங்க பெருந்தலைகளோட சேர்ந்து காட்டுக்குள்ள செத்துக்கெடக்கிற மிருகங்களோட கறிய சாப்பிட்டிருக்கேன். அத விட ‘தயிர் சாப்பாடு சனிக்கிழமை காகத்துக்கு வெச்சா ஏழரைச்சனி பாதிக்காது’ ன்னு ஜோசியகாரங்க சொல்லறதுனால எந்த வீட்ல பார்த்தாலும் சனிக்கிழமையானா சாப்பாடு வெச்சுட்டு கா… கா…. கா…. ன்னு கூப்பிடறாங்க. கூப்பிடறவங்க மனசு பாதிக்கப்படக்கூடாதுன்னு நாங்களும் போய் சாப்பிடறோம். தயிர் ருசியா இருக்கறதுனால பழ ருசி புடிக்காம தெனமும் போயி நாங்களே கத்தி கேக்கறதுனால சில ஊட்ல தெனமும் ஆக்கற சோத்த வெக்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்படியே போச்சுன்னா வருங்காலத்துல நம்ம வாரிகளுக்கு பழம் திங்கற பழக்கமோ, செத்த மிருகத்தோட பச்சக்கறி திங்கற பழக்கமோ இல்லாம மனுசங்கள நம்பி எப்ப சோறு வெப்பாங்கன்னு காத்துக்கெடக்கற பழக்கம் வந்திருமோன்னு பயமா இருக்குது. அமாவாசைக்கு, திதி வர்ற நாளுக்கு பலகாரத்தோட சோறு கெடைக்கிறதுனால மரத்துப்பக்கமே இப்ப பழந்திங்க வர முடியறதில்லை. நெறைய இனிப்பு சாப்புட்டு, சாப்புட்டு சக்கரை நோயி வந்து ஒரு காலே கெட்டு போன எங்க சிறுதலை காக்கா ஒருத்தன் சின்ன வயசுலயே நேத்து போயே சேர்ந்துட்டான். இந்த மஹாளய பட்சம் பதனைஞ்சு நாள நெனைச்சா எனக்கு ரொம்பவே பயமா இருக்குது. இனிப்பு சாப்புடறதுக்கு தகுந்த மாதர மனுசங்க காத்தால ரோட்ல வாக்கிங் போற மாதர நானும் ஒரு மணி நேரமாச்சு அங்கிட்டும், இங்கிட்டும் பறக்கலாம்னு நெனைச்சிட்டிருக்கறேன்” என பேசியதைக்கேட்டு பெருந்தலைக்காகம் நோயைப்பற்றி கவலைப்படாமல் ‘தங்கள் இனம் என்ன பாவம் செய்தது? இவர்களைப்போல சாப்பிட முடியவிலையே?’ என வருந்தியது.

“நேத்து எனக்கு பக்கத்து கூடுல இருந்த ஒத்தக்காலன் கரண்ட் கம்பில அடிபட்டு செத்துட்டான். எழவுக்கு போயிட்டு பக்கத்து தோட்டத்து வாய்க்கால்ல போற தண்ணீல குளிக்காம வந்து நேத்து ராத்திரி தூக்கமே வரலே. தீட்டுக்கு போனா ராமசாமி கவுண்டரோட ஊரடிவாரத்தோட்டத்து வாய்க்கால்ல போற கெணத்து தண்ணீல கூட்டமா ஒன்னா சேர்ந்து போயி குளிக்கறவங்களோட குளிக்காம கூடுக்கு என்ற அம்மாக்காரி வந்ததில்ல. என்ற அம்மா இருக்கற வரைக்கும் எழவுக்கு போயி எனக்கு பழக்கமில்ல. என்ற அம்மா போன வாரம் குருவிக்கார கொரவனோட வில்லு கல்லு பட்டு செத்துப்போனா. அதனால எழவுக்கு நாம் போக வேண்டியதாப்போச்சு. என்ற அம்மாவோட செத்த பொணத்த பாத்து சித்த கத்தி நம்ம ஜனங்களோட சேர்ந்து அழுது போட்டு வரலாம்னு ஆல மரத்துக்குப்போனா அடிச்சவன் தூக்கி தோள்ல போட்டிருந்த பைக்குள்ள வெச்சிட்டு போயிட்டான். அவம்பின்னால போயி பாத்தா டவுன்ல ஒரு பிரயாணி கடைக்குள்ள பூந்துட்டான்.”

“அப்பறம்…?”

“அப்பறமென்ன கோழிக்கறிக்குள்ள என்ற அம்மாளோட ஒடம்பையும் பொசிக்கி பிரையாணில கலந்திருப்பாங்க. செத்துப்போன நடிகரு விவேக்கு கூட ஒரு சினிமா படத்துல நம்ம பிரையாணிய சாப்புட்டு போட்டு கா… கா…ன்னு தமாசா கத்துவாரு. பிரையாணி கடைக்குள்ள போனவன் வெளில வரும்போது வெறும் பையோட வந்தா வேற என்ன நெனைக்கிறது? வர வர மனுசங்க கூறு கெட்டு குட்டிச்செவுராப்போயிட்டாங்க. நம்மளுக்கெல்லாம் ஒரே அறிவுன்னு சொல்லிப்போட்டு அவுங்களுக்கு மட்டும் ஆறறிவுன்னு சொல்லறவங்க, காலறிவு கூட இல்லாதமாதர தான் வாழறாங்க” என தனது புலம்பலை கொட்டித்தீர்த்தது சிறுதலைக்காகம்.

“உனக்கு விசியம் தெரியாதா? உங்கள அதிகமா ஒருத்தரும் வேட்டையாடறதில்லை. ஏன்னா நீங்க இல்லீன்னா மனுசங்க செத்தா கருப்புக்கு, பதனாறுக்கு, மஹாளய பட்சத்துக்கு திதி குடுக்கறதுக்கு காக்காய் இல்லாம போயிரும்னு போட்டு எதுக்குமே பயன் படாத பெருந்தலைகாக்காய்க எங்களத்தா வில்லுக்கல்லுல அடிச்சுக்கொல்லறாங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னால எனக்கே குறி வெச்சாம்பாரு ஒருத்தன். நான் தப்பிச்சது தம்பிராம்புண்ணியம்னு உன்ற கிட்ட வந்துட்டேன். உன்ற கிட்ட இருந்தா கொல்ல மாட்டாங்கன்னு வந்தா, நீ உங்கொம்மாவையே கொன்னுட்டாங்கன்னு சொல்லறதக்கேட்டதும் பயந்துட்டேன். எங்காவது மலைப்பக்கம் என்ற குடும்பத்தோட பறந்து போயி உசுரோட வாழ்ந்துக்கலாம்னு தோணுது” என பெருந்தலைக்காகம் வருந்தியது.

அப்போது மரத்திலிருந்த காகங்களை வேட்டையாட வந்த மனிதன் பறக்க இயலாத வயதான காகங்களை தனது ஒண்டி வில்லில் குறிவைத்தைப்பார்த்த பெருந்தலைக்காகம், ஆக்ரோசத்துடன் மனிதனைக்குறிவைத்து அவனது கண்களில் ஒன்றை கொத்த, அலறிய மனிதன் அங்கிருந்து பயந்து பாதிக்கப்பட்ட கண்ணில் வெளிப்பட்ட ரத்தத்தை கை வைத்து மூடிய படி ஓடியதைப்பார்த்து ” ஒன்னி மேல் இப்படித்தான் எதிரியைத்தாக்கோணும்” என கோபத்துடன் பெருந்தலைக்காகம் கூறியதைக்கேட்ட சிறுதலைக்காகம், ‘இந்த தைரியம் தனக்கு முன்னமே இருந்திருந்தால் பெத்து வளர்த்த தாயை செந்துப்போகாம காப்பாற்றியிருக்கலாம்’ என நினைத்து கண்கலங்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *