இடமதிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2024
பார்வையிட்டோர்: 290 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

திவான் பகதூர்-சக்கரவர்த்தி ஐயங்காருக்குத் தலைகால் புரியவில்லை. தம்மையும் ஒரு கூட்டத்துக்கு வரும்படி அழைத்து, அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கும்படியாகவும் கேட்டுக் கொண்டார்கள் என்று சொன்னால், அவர் ஏன் மகிழமாட்டார்! 

வெள்ளைக்காரன் என்றைக்குக் கப்பல் ஏறினானோ அன்றைக்கே அவருடைய பெருமையெல்லாம் மலை ஏறிவிட்டது. “நேற்றைய பயல்களெல்லாம் கதர்ச் சட்டை போட்டுண்டு பெரிய மனுஷ்யன்னுட்டு வந்துடறான்கள்” என்பது தான் இப்போதைய அரசியல் தலைவர்களைப் பற்றி அவருடைய தீர்ப்பு. “கண்ய மென்றால் இந்தப் பசங்களுக்குத் தெரியுமா? தண்டவாளத்தைப் பேர்த்தவன்க ளெல்லாம் தண்டல் காரன்களாக மாறிவிட்ட காலமிது……..” என்று இந்த வகையாக உள்வீட்டிலிருந்து உரக்கப் பேசுவார். ‘மதுரை மெயில்’ படிக்கும்போது தான் மேற்கண்டவாறான கருத்துரைகளை அவர் வெளியிடுவார். அவருடைய ‘பழைய’ பிரமுக வாழ்க்கையின் ஆட்டங்க ளெல்லாம் ‘ஆத்துக்காரி’யிடம் அளக்கும் அளப்புக்களோடு ஒடுங்கிவிட்டன. சோம்பேறி நாற்காலியும் ஊஞ்சலும்தான் அவருக்கு அடைக்கலம் தருகின்றன. தம் அறையிலே மாட்டியுள்ள தம்முடைய படத்தையே அவ்வப்போது பார்த்துப் பெருமூச்சு விடுவார். அதைப் பார்த்துக் கொண்டு அசையாமல் ஆடாமல்-வைத்த கண் வாங்காமல்-நின்றுவிடுவதும் உண்டு. அந்தச் சரிகைத் தலைப்பாகை, கரும்பட்டுக் கோட்டு, சரிகை அங்கவஸ்திரம், மெல்லிதாக நெற்றியி னூடே செங்குத்தாக நிற்கும் அந்தச் சிவப்புக் கோடு…. இவையெல்லாம் கதையாய்ப் பழங்கனவாய்ப் போய்விட்டன. இந்தக் கோலத்தைக் காணவேண்டு மென்று அவருக்கே அளவிறந்த வேட்கை. ஆனால், வீட்டுக்குள்ளேயே இந்தக் ‘கோலங்காண்படல’ த்துக்கு இடமிருக்க முடியாதே! முன்னெல்லாம் பொதுக்கூட்டத்துக்குத் தலைமை தாங்குவோரே பணம் செலவழித்துக் கூட்டம் போடுவதுண்டு. அந்த வழக்கமும் இப்போது போக்கொழிந்து விட்டது. 

இந்த நிலையிலேபாவம் ஐயங்கார் அந்தப் படத்தை, ஏதோ நெருக்கடி காரணமாகத் துறவியாகிவிட்ட ஒருவர் தம் பூர்வாசிரமப் படத்தைப் பார்ப்பதுபோல், பார்த்துப் பார்த்து ஏங்குவார்-இது வழக்கம். 

கவர்னர் துரைகளோடு குலுக்கி அலுத்த கரம் இன்று கவனிப்பாரில்லாமல் சோர்ந்து கிடந்தது. ஆங்கிலம் பேசிப் பேசிக் களித்த வாய் இன்று அழைப்பாரில்லாமல் மூடிக்கிடந்தது. பழைய பட்டுக் கோட்டு, பெட்டிக்குள் பூச்சிக்கு விருந்தளித்து வீணாகிக் கிடந்தது. 


பாரதியக் கல்லூரியின் தத்துவக் கழகத் தில் திவான்பகதூர் சக்கரவர்த்தி ஐயங்கார் தலைமை தாங்க ஏற்றுக்கொண்டார். அக்கழகத்தின் செயலாளன் சுந்தரம் வந்து அழைத்தபோது அவரால் நம்பவே முடியவில்லை. 

“என்னையா அழைக்கிறீர்கள் ? நானெல்லாம் பழைய பேச்சாளி. இப்போதைய போக்குக்கும் என் காலப் போக்குக்கும்….” 

“பழமை என்றால் அதற்கொரு தனிச் சிறப்புண்டல்லவா? பெருங்காயம் இருந்த பெட்டி மணத்தை விட்டுவிடுமா? புதுமை வெறியர்களுக்குப் பழமையின் சாரம் சிறிதாவது தெரிந்தாலல்லாமல் வாழ்வில் விமோசனம் ஏற்படாது. அதனால் தாங்கள் மறுக்காமல் கட்டாயம் வந்தேயாக வேண்டும்….” 

“என்னமோ, இந்தக் காலத்துப் பிள்ளைகளில் உன்னைப் போலவும் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காணும்போது….”

“பெரியவாள் அப்படி யெல்லாம் என்னைப் புகழக்கூடாது. தங்களைப் போலொத்த அறிஞர்கள் எங்கள் தத்துவக் கழகத்தில் பேசினால் எவ்வளவோ பயன் உண்டு ..”

“எனக்கென்ன தத்துவம் தெரியும்? அந்த விஷயமே கொஞ்சங்கூடத் தெரியாதே!”- இதைச் சொன்னபோது திவான்பகதூருக்கே கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. “அப் படியா? தத்துவமே தெரியாமல் நீங்கள் எப்படிப் பேசமுடியும்?” என்று கேட்டுவிட்டு, வந்தவன் எழுந்து விர்ரென்று போய்விட்டால் என்ன செய்வது? கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய்விடுமே! 

ஆனால், சுந்தரம் அப்படிப் போய்விடுவதாகத் தெரியவில்லை. 

“தங்களுக்குத் தத்துவம் தெரியாது என்று சொல்லி என்னை ஏமாற்ற முடியுமா? தங்கள் மகள் சுபத்திரை என்னுடன் படிக்கிறார் என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தங்களுக்குத் தத்துவத்தில் விருப்பமும் பயிற்சியும் இல்லாமலா சுபத்திரையைத் தத்துவ வகுப்பில் சேர்த்திருப்பீர்கள்?” 

“அடடே! என் பெண்ணைக்கூட உனக்குத் தெரியுமா? சரி சரி. நான் மாட்டேன் என்றால் இனிமேல் விடவா போகிறாய்?……..ம்ம் அன்றைக்கு யார் பேசப் போகிறார்கள்? பொருள் என்ன ?” 

“இரண்டு மாணவர்கள்தான் பேசுவார்கள். ‘தத்துவமும் சீர்திருத்தமும்’ என்பது பொருள்.” 

இதைக் கேட்டபோது திவான்பகதூருக்குச் சிறிது ஏமாற்றந்தான். யாராவது பெரிய மனிதர் பேசினால் தமக்குப் பெருமையாயிருக்கும். பெரிய மனிதர் யாரும் இல்லை யென்பதற்காக வரமாட்டேன் என்றா சொல்வது? பிறகு இவரை யார் வந்து அழைக்கப் போகிறார்கள்? இருந்தாலும் தம் எண்ணத்தைக் குறிப்பாகச் சொல்லிவிட நினைத்தார் திவான் பகதூர். 

“ஏன், யாராவது ஒரு எம்.எல்.ஏயைப் பிடிக்கக்கூடாதோ? என்னைப் போல ஓய்ந்து கிடக்கிற பேர்வழிகளுக்கு ஏன் தொந்தரவு?” 

சுந்தரம் ஒன்றும் சளைத்துவிட வில்லை. “எம்.எல்.ஏக்களை யெல்லாம் கூப்பிட்டால் எங்களுக்கு ஏதாவது பயன் இருக்கவேண்டாமா?” என்றான். 

“அப்படியானால் அவர்களால் ஏற்படாத பயன் என்னால் ஏற்படும் என்று என்னைப் புகழ்கிறாய், இல்லையா?” 

“முகஸ்துதியா? இல்லவே இல்லை. உண்மை யாகவே தாங்கள் வருவதால் எவ்வளவோ பெரிய பலன் உண்டு..” 

இளைஞர்கள் முன்னுக்குவரவேண்டியதைப் பற்றியும் சமூகம் சீர்திருந்த வேண்டியதைப் பற்றியும் தற்கால இளைஞர்களைவிடப் படுதீவிரமாக நெடு நேரம் பேசினார் ஐயங்கார். இளைஞர்களைப்பற்றி அவர் மிகவும் உயர்வான எண்ணம் கொண்டிருந்தா ரென்று எண்ண வேண்டாம். இளைஞர்க ளென்றாலே தறிதலைகள் என்பது அவருடைய நினைவு. ஐயங்கார் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் சீர்திருத்தம் என்ற சொல்லைக் கூட ஒழித்துவிடுவார். பின் ஏன் சுந்தரத்திடம் அப்படிப் பேசினார் என்று கேட்கிறீர்களா? அதுதான் விசேஷம். சுந்தரம் வரவில்லை யென்றால் பட்டுக் கோட்டுக் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போய் விடாதா? 

‘பட்டுக் கோட்டுக்கு இனிமேல் சுக்கிர தசைதான்’ என்று ஐயங்கார் மனம் எக்களிப் புக் கொண்டது. அதே சமயத்தில் அதே சுக்கிர தசை ஐயங்காரின் குடும்ப வாழ்க்கையை வக்கிர திசையில் இழுத்துச் சென்றுகொண்டிருந்தது. 


“என்ன சுந்தரம்! என் யோசனை எப்படி ? எங்கள் அப்பாவை ஏமாற்ற நான் சொன்ன யுக்திக்கு என்ன பரிசு தருவீர்கள்?” 

“உன் பேர் சுபத்திரையல்லவா? சுபத்திரையை அருச்சுனனோடு அனுப்ப அந்தக் காலத்தில் கண்ணன் என்று ஒருவன் தேவை. இப்போதோ, சுபத்திரையே கண்ணனாகவும் இருக்கிறாள்….” 

“சரிசரி, அப்படீஇ மெதுவாக நீங்கள் அருச்சுனனாக மாறிவிட வேண்டாம்! என்னமோ சொல்வார்களே-ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம்……..” 

“நடக்க முடியாததுபற்றி ஏன் பேசுகிறாய்? நீ என்ன அப்படி ஏமாந்தவளா? என்னை அக்கம் பக்கம் திரும்பக்கூட விடமாட்டாய் போலிருக்கிறதே – அதிருக்கட்டும் உங்கள் அப்பா என்ன பேசுவார்?” 

“என்னத்தைப் பேசுவார்! ஐயோ பாவம்! அந்தக் காலத்தி லெல்லாம் யாராவது எழுதிக் கொடுப்பார்கள். இவர் பெருமையாய்ப் படித்து விட்டு வருவார். இப்போதுமட்டு மென்ன ? நான்தான் எழுதிக்கொடுக்கப் போகிறேன். அவ்வளவுதான் என்று நினைக்க வேண்டாம். ஒரு குறும்பும் செய்யப் போகிறேன். பாருங்கள் வேடிக்கையை…”

-இது தியாகராயநகர்ப் பனகல் பார்க்கில் காற்றுவாக்கில் மிதந்துவந்த உரையாடல். 


‘மாலை ஐந்து மணிக்குக் கூட்டம். திவான் பகதூர் நான்கு மணிக்கெல்லாம் வந்துவிட்டார். “இண்டியன் பங்ச்சுவாலிட்டி என்று வெள்ளைக்காரன்கள் கேலி பண்ணுகிற மாதிரி நாம் நடக்கக் கூடாதல்லவா?” என்று யாரும் கேளாமலே சொல்லிக்கொண்டார். சுபத்திரைக்கும் சுந்தரத்துக்கும் மட்டுமே அவர் ஏன் முன்கூட்டியே வந்துவிட்டார் என்று தெரியும். 

ஐயங்காருக்கு ஒரே கொண்டாட்டம். தம்முடைய வாழ்வின் அந்திக் காலத்தில் மீண்டும் உதய காலத்தின் ஒளியைக் காணமுடியும் என்று நினைத்ததே கிடையாது. எது இயற்கையில் நடவாதோ அது நடப்பது கண்டு அவருக்கு ஒரே வியப்பு. ஆனால், அவர் கண்ட உதயம் வேறு வாழ்க்கையைச் சேர்ந்தது. அது அவருக்குத் தெரியாது. மகிழ்ச்சியின் போதையிலே நிகழ்ச்சிகளை ஆராயும் அறிவு பறந்துவிட்டது. 

கூட்டம் ஒன்றுமில்லை. ஏதோ ஒப்புக்கு என்று சொல்வதுபோல் பத்துப் பேர் கூடியிருந்தார்கள். திவான்பகதூருக்கு அவமானமாகத்தான் இருந்தது. தம்மைப் போல் ஒரு ‘பெரிய’ மனிதன் இவ்வளவு சின்னஞ்சிறு கூட்டத்திலா பேசுவது! இருந்தாலும் அவர் அதை வெளியே காட்டிக்கொள்ள வில்லை. 

“பத்துப் பேராக இருந்தாலும் அறிவிலே சிறந்த உங்களிடையே பேசும் வாய்ப்புக் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கொள்ளுகிறேன். 

உயர்ந்த நிலையினதாகிய தத்துவத்தில் மனம் செலுத்துவது என்றால் எளிய காரியமா? சிலருக்குத்தான் அது முடியும். உலகத்திலேயே சிலர் தான் இருப்பார்கள். அப்படிப்பட்ட பொறுக்கி எடுத்த அறிஞர்களிடையே நான் பேசுகிறேன் என்றால் அதற்கு நான் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்……..” என்று முன்னுரையாகப் பேசிக்கொண்டார். 

‘லேடீஸ் அன் ஜென்ட்டில் மென்’ என்று தொடங்கி மடமட வென்று படித்து முடித்தார். அங்கே இருந்தது ஒரே ஒரு ‘லேடி’ தான் சுபத்திரை. இருந்தாலும் எழுதியபடியே படித்துப் படித்துப் பழக்கமானவர் ; சுபத்திரை எழுதி யிருந்ததைப் படித்துவிட்டார். 


“என்ன சுபத்திரை! இப்படித் தானா’டி என் மானத்தை வாங்குவாய் ? சீர்திருத்தத்தைப் பற்றிய உன் கருத்தை யெல்லாம் என் தலையிலே சுமத்திவிட்டாய்!” 

“அதனால் என்ன’ப்பா? காலத்துக்குத் தக்கபடி மாறிக்கொள்ள வேண்டாமோ? நான் எழுதிக் கொடுத்ததிலே அப்படி என்ன தப்பு இருந்தது?” 

“என்ன தப்பா? எல்லாம் சுத்த அபத்தம். இப்படி யெல்லாம் எழுதினவள் என்னிடத்திலே முன்னாடியே சொல்ல வேண்டாமோ? கலப்பு மணம், கழுதை மணம், மண்ணாங்கட்டி, தெருப் புழுதி-இப்படி என்னென்னவோ இழவெல்லாம் எழுதித் தொலைத்திருந்ததே! எவனாவது பெரிய மனுஷன் கேள்விப்பட்டால் என்னைப் பிராமணன் என்றுகூட மதிக்கமாட்டானே…”

“மண்ணாங்கட்டி, தெருப் புழுதி யெல்லாமா அதிலே இருந்தது? என்னப்பா இது, இப்படிச் சொல்றயே?” 

“பின்னே என்ன’டி? திவான்பகதூர்ப் பட்டத்தைப் பற்றி வேறே என்னென்னவோ எழுதித் தொலைத்திருந்தாய். என்ன பாடுபட்டு வந்த பட்டம் தெரியுமா? தண்டவாளம் பெயர்த்து, தந்திக் கம்பி அறுத்துவந்த பட்ட மென்றா நினைத்தாய்?”

“சேச்சே! இல்லவே இல்லை; தங்கக் கம்பியாய் இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபட்டு, வால்பிடித்து வளைந்து கொடுத்து வாங்கிய பட்டமல்லவா அது ? நியாயந்தான். அது போனால் மனசுக்குக் கஷ்டந்தான்……..” 

“என்ன’டி அது ? என்னையே கேலி பண்ணுகிறாய்?”-இது கூட்டம் முடிந்து வீட்டுக்கு வந்த பின் தந்தையும் மகளும் பேசிக்கொண்டது. 


இன்னொரு நாள் சுந்தரம் திவான் பகதூரிடம் வந்தான். ஐயங்கார் உள் அறையில் இருந்தார். வெளியே வராந்தாவில் இருந்த சுபத்திரையிடம் பேசிக்கொண்டிருந்தான். 

உள்ளே யிருந்த சக்கரவர்த்தியின் காதில் கேட்கும்படியாகவே பேசிக்கொண்டார்கள். 

“சுபத்திரை! உங்களால் ஒரு காரியம் ஆகவேண்டும். ஒய். எம்.என். ஏயில் என் நண்பன் செயலாளனாக இருக்கிறான். அவன் உங்கள் அப்பாவை எப்படியாவது பேச அழைக்க வேண்டுமென்று என் உயிரை வாங்குகிறான். இது சம்பந்தமாக…. “

“மிஸ்டர் சுந்தரம்! எங்கள் அப்பா உங்களைப்போல இளம் பிள்ளையா என்ன? வயசான காலத்திலே இப்படியெல்லாம் அலைய முடியுமா?” 

உள்ளேயிருந்த ஐயங்காருக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. என்னடா’து! இப்படியும் ஓர் அசட்டுப் பெண் உண்டா? பிரசங்கத்துக்கு யாராவது அழைக்கமாட்டார்களா என்று நான் ஏங்கிக் கிடக்கிறதென்ன, இந்தப் பெண் இப்படி உளறுகிறதே !…… என்று உள்ளுக்குள் எண்ணி வெதும்பினார். வெளியே மேலும் பேச்சுத் தொடர்ந்தது— 

“அன்றைக்கு நம் கல்லூரியில் அவர் பேசிய பேச்சு இருக்கிறதே, அடடா! என்ன அருமை, என்ன அருமை! அதைக் கேட்டதனால் தான் என் நண்பன் ஒரேயடியாய் என் உயிரை வாங்குகிறான்.” 

இதைக் கேட்ட பிறகும் திவான்பகதூருக்கு உள்ளே இருக்கமுடியுமா? அவருடைய ‘பெரிய மனுஷத்தனம்’ அவரை வெளியே இழுத்து வந்துவிட்டது. 

‘இந்த அசடு ஏதாவது சொல்லி அந்தப் பையனை அனுப்பிவிட்டால் என்ன ஆவது?’ என்று எண்ணிய எண்ணம் அவரை வெளியே இழுத்து வந்து விட்டது. 

சுந்தரம் பெரிய கும்பிடாகப் போட்டு வைத்தான். பிறகு என்ன? பழைய கதைதான். 

ஐயங்கார் “பட்டுக் கோட்டுக்கு இனிமேல் சுக்கிரதசைதான்” என்று எண்ணிக்கொண்டார். ஆனால் அதே சுக்கிரதசை சுந்தரத்தைச் சுபத்திரையின் அருச்சுனனாக மாற்றிவந்ததை அவர் அறியவில்லை. 

பட்டுக் கோட்டுக்கு அடிக்கடி வேலை ஏற்பட்டது. ஐயங்கார் இன்பபுரிப் பயணத்தில் ஈடுபட்டார். 

சுந்தரம் அடிக்கடி சக்கரவர்த்தி ஐயங்கார் வீட்டுக்கு வந்தான். சக்கரவர்த்திக்குப் பின் வாரீசாக ஆவதற்குரிய ஏற்பாடு ஒழுங்காக அவருக்குத் தெரியாமலே-நடந்துவந்தது. 


சிறிது காலம் சென்றது. ஒரு நாள் சுபத்திரையைக் காணோம். மூன்று நாட்கள் கழிந்தன. 

ஒரு கடிதம் வந்தது. என்ன அதில் இருந்திருக்கும்? தெரியாதா? 

மருமகனோடு மகளை வரவேற்றார்; வேறு வழி இல்லை. 

மறுநாள் செய்தித் தாள்களில் ‘சீர்திருத்தத் திருமணம் ‘ என்ற தலைப்பில் பின்வரும் செய்தி வந்தது: 

திவான்பகதூர் சக்கரவர்த்தி ஐயங்கார் தம் ஒரே மகளான செல்வி சுபத்திரையைச் சந்தான கிருஷ்ண நாயுடுவின் மகன் செல்வன் சுந்தரத்துக்குத் திருமணம் செய்து கொடுத்தார். திவான்பகதூரின் சீர்திருத்த நெறியை எல்லோரும் போற்றுகிறார்கள். 


இரண்டு நாள் கழித்துத் திவான்பகதூர் வீட்டில் ஒரே கூட்டம். மணமக்களுக்குப் பாராட்டுக் கூட்டம் ஏற்பாடாகி யிருந்தது. திவான்பகதூரின் பட்டுக் கோட்டுக்கு மீண்டும் சுக்கிரதசைதான். பாராட்டுக் கூட்டத்தில் மண மக்களை யாரும் பாராட்டியதாகத் தெரியவில்லை. திவான்பகதூரின் பரந்த நோக்கத்தையும் சீர்திருத்த மனப்பாங்கையுமே எல்லோரும் பாராட்டினார்கள். பட்டுக் கோட்டுக்குள் படபடத்துக் கொண்டிருந்த நெஞ்சை அறிந்தவர்கள் யாருமில்லை. சரிகைத் தலைப்பாகைக்குக் கீழ், சரிகை அங்கவஸ்திரத்துக்குமேல் ஒளி வீசிய பற்களையே எல்லோரும் பார்த்தார்கள். 

பந்தலின் ஒரு மூலையில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருந்தார்கள். சீர்திருத்தத் திருமணச் செய்தியை ஒருவன் படித்தான். மற்றவனும் அதைப் பார்ப்பதற்காகப் பத்திரிகையை வாங்கினான். செய்தியைப் படிக்கப் படிக்க அவன் கண்கள் விரிந்தன. 

“என்னடா! இப்படி விழிக்கிறாய்?”

“திவான்பகதூர் வீட்டுச் செய்திக்குப் பக்கத்திலே இன்னொரு செய்தி வந்திருக்கிறது. அதைப் படித்துப் பாரேன்……..” 

அவன் குறிப்பிட்ட செய்தி இதுதான்: 

“திப்பம்பட்டி, ஏப்ரல்…
இவ்வூர்ச் சுப்பண்ணக் கவுண்டரின் தோட்டக்காரனான முனியனின் மகளைக் கடத்திச் சென்றதாகச் செங்கன் என்ற இளைஞனைப் போலீசார் கைது செய்திருக் கிறார்கள். பிரஸ்தாபப் பேர்வழியுடன் முனியன் மகள் வள்ளி ஓடிப்போய் விட்ட தாக இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளி வந்த செய்தி நேயர்களுக்கு நினைவிருக்கலாம்.” 

இதைப் படித்த பிறகு : 

“இதிலே என்ன’டா பெரிய ஆச்சரியத்தைக் கண்டுவிட்டாய்?” 

“இல்லை, திவான்பகதூர் பங்களாவிலே நடந்த காரியந்தானே திப்பம்பட்டிக் குடிசையிலும் நடந்திருக்கிறது! இதைச் சீர்திருத்தம் என்று போற்றுவானேன்? அதை மட்டும் ‘ஓடி விட்டாள்’ என்று சொல்லிப் பழிப்பானேன்?” 

“குறளை நீ படித்ததில்லையா? இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு”

– இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *