பாங்கிக்கொள்ளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: August 31, 2023
பார்வையிட்டோர்: 5,763 
 

அன்று நகரில் பரபரப்பான விஷயமே பாங்கு கொள்ளைதான். அதுவும் நகரின் மையத்தில் உள்ள ஒரு தெருவுக்குள் அடங்கி இருந்த தனியார் வங்கி ஒன்றில் இரவு பெரும் கொள்ளை நடந்திருக்கிறது. காவல்துறை கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு மற்ற விவரங்களை துப்பு துலக்கி வருகிறார்கள். மோப்ப நாய் பாங்கியிலிருந்து அவர்கள் கிளம்பி நகரின் பேருந்து நிலையம் வரை வந்திருக்கிறார்கள். அதன் பின் எங்கு சென்றார்கள் என்பது தான் மர்மமாக இருக்கிறது.

ஒரு வாரம் ஓடியிருந்தது, காவல் துறை மேலதிகாரி காய்ச்சிக் கொண்டிருந்தார் கொள்ளை நடந்து ஒரு வாரம் ஆயிடுச்சு, எந்த முன்னேற்றமும் இல்லாம இருந்தா எப்படி? இல்லை சார் அன்னைக்கு பாங்குக்குள்ள இருந்த ஒருத்தனை கைரேகை வச்சு பிடிச்சுட்டோம். ஆனா அவனுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை அப்படீங்கறான். மேற்கொண்டு சரியான பதிலும் சொல்ல மாட்டேங்கறான். எங்களுக்கும் அவன் செய்திருக்க வாய்ப்பில்லை அப்படீங்கறது மாதிரிதான் தெரியுது.

எதை வச்சு அப்படி சொல்றீங்க?

சார் அவன் சின்ன சின்ன திருட்டு செய்யறவன், அன்னைக்கு ஏதேச்சையாத்தான் அங்க போனேன்னு சொல்றான், மேற்கொண்டு விசாரணையை நடத்திகிட்டு இருக்கோம்.

சீக்கிரம் இதை முடிச்சு கொடுக்க பாருங்க. ‘யெஸ் சார்’ விரைப்புடன் விடை பெற்றார் அந்த ஏரியா பொறுப்பு போலீஸ் அதிகாரி..

நடு இரவில் ! சிறைச்சாலைக்குள் திடீரென்று அலறல், போட்டு தாக்கு, அந்த குறுகிய அறையில் சுற்றி நின்ற போலீசார் அவனை போட்டு அடி அடி என்று அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். அடி தாங்க முடியாமல் அவன் அலறிய அலறல் நான்கு அரை தள்ளி சிறைக் கைதியாய் செய்யாத குற்றத்திற்கு தண்டனை கொடுத்து விட்டார்களே என்ற மனக் கவலையில் உட்கார்ந்து இருந்த சிவனுக்கு இந்த அலறல் பயத்தை உண்டு பண்ணியது. அதுவும் அவன் அலறிய அலறல் அப்படியே உடலுக்குள் ஐசாய் இறங்கி அவனை அப்பொழுதே மயக்க நிலைக்கு போகுமளவுக்கு கொண்டு போனது.

க்ரீச்…அவன் அறை கதவு திறக்கப்பட்ட சத்தம் கேட்டு இவன் அப்படியே பயத்தில் கண்ணை மட்டும் உயர்த்தி பார்க்க ‘தொப்’ என்று ஒன்று விழுந்ததும் அதிர்ந்து எழுந்தான். வெளியில் நின்றிருந்த இரண்டு காக்கி உடுப்புக்காரர்கள் ஏதோ சொல்லி விட்டு க்ராட்..க்ராட் என்று காலில் இருக்கும் ஷூ தேய நடந்து மறைந்தார்கள்.

இவன் அதிர்ச்சியுடன் விழுந்த உருவம் என்ன்வென்று பார்த்துக்கொண்டிருக்க, இப்பொழுது அந்த உருவம் மெல்ல அசைய ஆரம்பித்தது. இவன் அந்த உருவத்தை பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். மெல்ல கையை அங்கும் இங்கும் ஆட்டி பார்த்த உருவம் தனது உடலை விறைத்து கை கால்களை உதறவும் ஆரம்பித்த்து. படுத்த நிலையில்யே இவனை பார்த்து திரும்பி க்யா… ஹிந்தியில் கேட்க இவன் என்ன பதில் சொல்வது என்று விழித்தான். மீண்டும் அந்த உருவம் அவனிடம் அதே தொனியில் கேட்க இவன் புரியவிலை என்பதை காட்ட தலை அசைத்தான்.

இப்பொழுது நிதானமாய் எழுந்து உட்கார்ந்த உருவம் தனது உடலை கைகளால் தடவி ஒரு சிகரெட்டை எங்கிருந்தோ எடுத்து உதட்டில் வைத்து தரையை அப்படியே தடவி தேடினான். அதை வேடிக்கை பார்த்த சிவன் இரு என்று அவனை சைகை காட்டி விட்டு தரையில் சுவரோரம் ஒட்டி இருந்த தீக்குச்சியை எடுத்து கொடுத்தான். அதை சர்ரென்று தரையில் உரசி ஒரு சிறு தீ பந்தை உருவாக்கியவன் தன் வாயில் இருந்த சிகரெட்டால் அதை முத்தமிட்டான்.

மூச்சை நன்றாக இழுத்து மூச்சை புகையோடு விட்டவன் சாவகாசமாய் தனது பின்புறத்தை தேய்த்தவாறு உட்கார்ந்த நிலையிலேயே அப்படியே சுவரோரம் தன் முதுகை சுவற்றில் சாய்ந்த வாக்கில் பொருத்திக் கொண்டு உட்கார்ந்தான். நீ தமிழா !

அவனின் தெளிவான உச்சரிப்பை கேட்டு அசந்து போன சிவன் இப்பொழுது ஆமாம் என்று வாய் விட்டு சொன்னான். மேலும் இப்ப போலீசுக்காரங்கிட்டே அடிவாங்கி அலறியது நீதானே? சிவனின் கேள்விக்கு பதில் ஒரு மோசமான வார்த்தையாய் அவனிடம் வெளி வர இந்த போலீஸ்காரனுங்க யார் யார் மேல இருக்கற கோபத்தை எல்லாம் நம்மகிட்ட தான காட்டுவானுங்க.. தொண்டையை இறுமி அப்படியே காறி துப்பினான். சிவனுக்கு வயிற்று குமட்டல் எடுத்தது.

அந்த சிகரெட்டின் வெளிச்சத்திலேயே இவனின் அருவருப்பை கண்டு கொண்டவன் ஏன் அசிங்கமா இருக்கா? அப்படி எல்லாம் பாக்கறவனா இருந்தா இந்த மாதிரி ஜெயிலுக்கு வரக்கூடாது தெரிஞ்சுதா? ஒரு பெரும் சிரிப்பு அவனிடம் வெளிப்பட அந்த அமைதியான சிறை வளாகம் இவனின் சிரிப்பை பூதாகரமானதாக செவிகளுக்கு காட்டியது. தட்..தட்..கம்பியை தட்டி வெளியே நின்று கொண்டிருந்த போலீஸ்காரன் ஒருவன் இவர்கள் இருவரையும் கெட்ட வார்த்தையால் திட்டி அமைதியாய் போய் படுங்கடா,சப்தமிட்டு விட்டு சட்டென அகன்றான்.

அதற்குள் இவன் மீண்டும் அந்த போலீஸ்காரனை பார்த்து ஏதோ சொன்னான். அந்த போலீஸ்காரன் நாயே உன்னை அந்த அடி அடிச்சும் உன் வாய் அடங்கலை பாரு. திட்டிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றான்..

சரி இப்ப சொல்லு என்னா கேஸ் உன் மேல மறுபடியும் புகை மூச்சை விட்டவனை பார்த்த சிவன்..ம்..பெருமூச்சு விட்டான்.ச்..ஒரு வித சலிப்பும் அவனிடம் வந்தது. இவனின் சலிப்பும், பெருமூச்சும் புகை பிடித்தவனிடம் எந்த சலனத்தையும் உண்டு பண்ணவில்லை. அப்படியே தன் கடைசி உயிரை விட்டுக்கொண்டிருந்த சிகரெட்டை சுவைப்பதில் ஆர்வமாக இருந்தவன் அது அணைந்தவுடன் அப்படியே தரையில் தேய்த்து அங்கேயே வீசினான்.

சிவன் இப்ப மாட்டுன கேசுல நான் இல்லவே இல்லை, ஆனா என்னை கொண்டு வந்து போட்டுட்டாங்க, சலிப்புடன் சொன்னவனை, அவன் அப்ப உனக்கு ஜெயிலு புதுசில்ல, சிவன் மெல்ல சிரித்தான், இங்க பாரு நான் சின்ன சின்ன கேசுக்கு வந்துட்டு போறவன், இப்ப என்னை பெரிசா போட்டு மாட்ட வச்சுட்டு கிடைச்சதை இவனுங்களே சுருட்டிக்கலாமுன்னு பார்க்கறாங்க.

ஐந்து நிமிடம் அமைதி ! எவ்வளவு பெரிசு? சிவன் தெரியலை, பேசிக்கறதை வச்சு பார்த்தா பெரிய ஐஞ்சு பக்கம் வரும். விட்டேற்றியாய் சொன்னான். ம்..இப்ப அது எங்க? அதுதான் எனக்கும் தெரியலை.

நான் சாதா திருடன், அன்னைக்கு இராத்திரி அந்த பேங்குக்கு போனது வாஸ்தவம்..ஆனா அங்க ஒண்ணுமே இல்லை. இவனுங்க என்னைய கன்னி வச்சு பிடிச்சுட்டு அந்த பணத்தை எங்க வச்சிருக்கேன்னு டார்ச்சர் பண்றானுங்க.

சாதா திருடன்னு சொல்றே? பேங்குல திருட போயிருக்கே, அவன் குரலில் ஒலித்தது கிண்டலா..ஏன் சாதா திருடன் பேங்குக்கு போக கூடாதா? கோபமாய் கேட்டான் சிவன்.

ச்சு..இவனின் கோபத்தை அசட்டையாய் சொன்னவன், எனக்கு இன்னும் மூணு நாள் இருக்கு, நாளைக்கு பார்ப்போம், படு, அவனுங்க அடிச்ச அடி இப்பத்தான் வலி தெரியுது. அப்ப அப்படி அலறினே? சிவனின் கேள்விக்கு

இதெல்லாம் உனக்கு சொன்னாத்தான் புரியணுமா? மெல்ல சிரித்தான். இப்பொழுது அவர்களுக்குள் இறுக்கம் தளர்ந்து நட்பு துளிர்த்தது.

காலை இவர்களின் கணக்கெடுப்பு முடிந்து தட்டை தூக்கிக்கொண்டு போகும் போது அவன் சிவன் காதில் முணு முணுத்தான். இன்னைக்கு என்னைய மாத்தி வேற ரூமுல போட்டுடுவானுங்க..சிவனுக்கு சட்டென்று பிரிவுணர்ச்சி அவனிடம் தோன்றியது, கவலைபடாதே, நான் நாளானக்கி உன் ருமுக்கே வந்திடறேன். அந்த பேங்க் விசயத்தை பேசி முடிச்சிடலாம். சிவன் தலையாட்டுவதற்குள் ஒரு வார்டன் இவனை நோக்கி கையை அசைக்க சட்டென அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.

அந்த இரவில் சிக்ரெட் பிடித்தபடி உட்கார்ந்திருக்கும் அவனை பார்க்க பார்க்க சிவனுக்கு பொறாமையாக இருந்தது. எதற்கும் கவலைபட மாட்டேனெங்கிறான். மெலிந்த உருவம், சட்டென கீழே விழுந்து விடும் தோற்றம், ஆனால் எப்படி அத்தனை அடிகளை வாங்குகிறான். நாம் இந்தளவுக்கு தாக்குதலை சமாளிக்க முடியுமா? கேள்விக்குறி மனசில வர அவர்களின் அடி இவன் மனதுக்குள் பய உருண்டையாய் நெஞ்சை அடைத்த்து.

ம்..சொல்லு..என்ன நடந்துச்சு.? அவனின் கேள்வி சிவனை உசுப்பி எழுப்ப, நான் சின்ன சின்ன திருட்டுக்கு அப்ப அப்ப மாட்டிக்குவேன். பிடிச்சு, அஞ்சாறு மாசம் தீட்டுவாங்க, இப்படித்தான், போயிட்டிருந்துச்சு. ஒரு தெருவுல ரொம்ப நாளா ஒரு வீடு பூட்டியிருந்துச்சு, அதை நோட் பண்ணி வச்சிருந்தேன். அன்னைக்கு இராத்திரி போகலாமுன்னு நினைச்சுகிட்டிருந்தேன். அப்படித்தான் அன்னைக்கு அங்க போனேன். ஆனா..என்னோட துரதிர்ஷ்டம்.. சற்று பெருமூச்சு விட்டவன் வீட்டுக்குள்ள போனா அங்க நான் எடுத்துட்டு போறமாதிரி ஒண்ணுமே இல்லை, என்னடா பண்ணறதுன்னு யோசிச்சுகிட்டிருக்கும் போது நான் புகுந்த வீட்டுக்கு முன்னாடி கார் வந்து நிக்கற மாதிரி சத்தம் கேட்டுச்சு, இரண்டு மூணு பேர் நடந்து வந்து கதவை திறக்கற மாதிர் இருந்துச்சு, இரண்டு பேரு பேசிகிட்டே உள்ளேயும் வந்துட்டாங்க, அவங்களை ஒரு செகண்ட் பாத்தவன் அப்படியே பதுங்கி விருட்டுன்னு பின்னாடி நான் வந்த பின் கதவு வழியா வெளியே வந்தவன், முன்னாடி வழியா போனா மாட்டிக்குவோமுன்னு தெரிஞ்சு பக்கத்து காம்பவுண்டுல ஏறி உள்ளே குதிச்சேன். அப்புறம்தான் ஞாபகம் வந்துச்சு, இது பேங்குதானேன்னு, சரி வந்ததுதான் வந்துட்டோம் பேங்குக்குள்ள ‘தேட்டையை’ போடுவோமுன்னு உள்ளே போனா? அங்க எல்லாம் கலைஞ்சு கிடக்கு. நான் திகைச்சு பார்த்துட்டு எவனோ நமக்கு முன்னால உள்ளே புகுந்துட்டான் போலிருக்குதுன்னு பயந்து மறுபடியும் சுவரேறி குதிச்சு போயிட்டேன்.

ஆனா அங்கிருந்த கேமரா எதுவும் வேலை செய்யாம பண்ணி வச்சிருப்பாங்க போல, கைரேகையை வச்சு பார்த்தப்ப என்னோடதுதான் இங்க இருக்குதே, அதோட ஒத்து போயி என்னைய பிடிச்சு போட்டுட்டாங்க, இனி எப்ப அந்த பணம் கிடைச்சு.. நான் இந்த கேசுல வெளிய வந்து..புலம்பினான்.

ஒரு வாரம் ஓடியிருந்தது, சிவனுக்கு மட்டும் அடிக்கடி அந்த சிகரெட் பிடித்து தன்னோடு சிறைக்குள் உரையாடிக்கொண்டிருந்தவன் ஞாபகம் வரும். என்ன செய்து கொண்டிருக்கிறானோ? அவன் பேரை கூட தெரிஞ்சுக்காம விட்டுட்டோம்.

இப்படி எண்ணிக்கொண்டிருந்தவ்னை வார்டன் உன்னை அழைக்கிறார் என்றவுடன் அவரை பார்க்க விரைந்தான்.

உன்னைய கூட்டிகிட்டு போக போலீஸ் வந்திருக்கு, போலீசா? பயத்துடன் பார்க்க மலையாய் இரண்டு போலீசார் அவனருகில் நின்றனர். பலியாடு போல அவர்களுடன் நடந்து ஜீப்பில் ஏறியவன் எங்கு போகிறோம் என்பது கூட அறியாமல் சிலையாய் உட்கார்ந்திருந்தான். ஒரு கட்டிடத்துக்குள் அவனை அழைத்து சென்றவர்கள் இங்கேயே இரு சொல்லி விட்டு மறைந்தனர். சற்று நேரத்தில் அங்கு வந்தவரை பார்த்தவுடன் இவர் அதிகாரியாய் இருக்க வேண்டும் என்று நினைத்து எழுந்து நின்றான்.

இப்ப நாலைஞ்சு பேரு இங்க வருவாங்க, அவங்களை அடையாளம் மட்டும் காட்டு, இவங்களை அன்னைக்கு பாத்த ஞாபக இருக்கான்னு சொல்லு. வந்து நின்ற நான்கைந்து பேரில் இருவர்களை அன்று பார்த்த ஞாபகம் வந்தது, அவர்கள் போனபின் அந்த அதிகாரியிடம் அவர்கள் இருவரை பார்த்ததாக சொன்னான்.

மூன்று நாட்கள் கழித்து சிவனை விடுதலை என்று அறிவித்து வெளியே அனுப்ப அவனுக்கு அவனையே நம்ப முடியவில்லை. ஆச்சர்யத்துடன் தன்னையே வியப்பாக பார்த்துக்கொண்டவன் எதிரில் ஒரு பெட்டிக்கடையில் தொங்கிய பத்திரிக்கையில் கொட்டை எழுத்தில் “பாங்கியில் கொள்ளை அடித்த பணம் பிடிபட்டது.” குற்ற்வாளிகள் பிடிபட்டனர் என்று போடப்பட்டிருந்தது. ஆர் வமுடன் படித்தவன் வார்டன் அங்கு வேலை செய்ததற்கு கொடுத்த பணத்தில் ஐந்து ரூபாய் செலவழித்து பத்திரிக்கையை வாங்கி படித்து பார்த்தான்.

பாங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் பக்கத்து வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்த மர்மம். இதில் பாங்கில் பணி புரிந்த ஒரு ஊழியரும் உடந்தையா யிருந்ததும் அம்பலம். நீண்ட காலமாய் திட்டமிட்டு பாங்க் அருகில் இருக்கும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரு சிலர் குடியிருந்தனர். பின் அதை பூட்டி விட்டு வெளியூர் சென்றது போல காண்பித்து, உள்ளேயே பதுங்கி காத்திருந்திருக்கின் றனர்.

ஒரு நாள் இரவு பணத்தை கொள்ளை அடித்து பக்கத்து வீட்டில் பதுக்கி விட்டனர். காவல் துறைக்கு கொள்ளை அடித்த பணம் வெளியே கடத்தி செல்லப்பட்டது போல தோற்றத்தை உருவாக்கி திசை திருப்பியிருக்கின்றனர்.

சிவனுக்கு அப்பொழுதுதான் உறைத்தது, அட்டா அவர்கள் வராமல் இருந்திருந்தால் அந்த வீட்டுக்குள் ஒளித்து வைத்திருந்த பணத்தை கண்ணார பார்த்திருக்கலாம்.. ம்..பெருமூச்சுடன் கிளம்பினான்.

ஆனால் சிவனுக்கு ஒரு ஆளின் மேல் கோபம் மட்டும் குறையாமல் இருந்தது. சிறையில் போலீசிடம் அந்த அடி வாங்கி இவனிடம் பேசிக் கொண்டிருந்த ஆளை ஒரு நாள் ஏதேச்சையாக பார்த்த பொழுது யாரோ போலீஸ் ஆபிசரிடம் சிரித்து பேசிக்கொண்டு அவர் கூடவே உட்கார்ந்து காரில் பயணம் செய்ததை பார்த்ததால் !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *