கல்லும் கனியாகும்…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 7,317 
 

இதழ்களில் புன்சிரிப்பு நெளிய இமை மூடி அரைத் தூக்கத்திலிருந்தாள் ஜுனைதா. வில்லாய் வளைந்திருந்த புருவங்களுக்கிடையே புரண்டு கொண்டிருந்த அந்த சுருள் சுருளான முடிக்கற்றை இமைகளை வருடிக் கொடுப்பதுபோல் ஒரு சுகம்.

அந்த மூன்றாம் மாடி அறைச் சன்னல் வழியே மெல்ல மெல்ல நுழைந்த பூங்காற்று ஜுனைதாவின் தங்க நிற மேனியின் ஸ்பரிசத்தை விரும்பியதுபோல் அவள் உடலை லேசாய்த் தடவிக் கொண்டிருந்தது.

எங்கே இன்னும் இக்பாலைக் காணோம்?

“”பாம்… பாம்” அடடே.. அவனுக்கு வயது நூறு. இதோ அவனது வயலட் நிற பிளைமவுத் கார் தரையில் மிதந்து வந்து போர்டிகோவில் நுழைகிறது. கார் கதவு சாத்தப்படும் ஒலியைத் தொடர்ந்து மெல்லிய அத்தர் மணம் அந்த முன்கட்டு ஹால் முழுக்க நிறைந்து பரவுகிறது.

கல்லும் கனியாகும்கழுத்தில் மாட்டிய ஸ்டெதஸ் கோப்பைக் கழற்றிக் கையில் பிடித்துச் சுழற்றிக் கொண்டே முதல் மாடிப்படிகளில் உற்சாகத்தோடு ஏறி வருகிறான். வீட்டினுள் அவன் நுழைந்ததுமே கூடத்திலும் தாழ்வாரத்திலும் முற்றத்திலும் குழுமியிருந்த அந்த ஜனத்திரள் ஒருசேர எழுந்து நிற்கிறது. இக்பாலைக் கண்டதுமே அனைவரின் நாவும் இதையே கூறி அசைகின்றன.

“”புண்ணியவான்… புள்ளைக் குட்டிகளோடு நல்லா இருக்கணும்”

இந்த மரியாதை, புகழ்ச்சிகளைச் சிறிதும் எதிர்பார்க்காமல் தன்பாட்டுக்கு மாடிப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தான்.

முதல் மாடிக் கட்டுக்குள் நுழைந்ததுமே அவன் தகப்பனார் ஷூக்கூர் ஹாஜியார் கூக்குரலிட ஆரம்பித்தார்.

“”சொன்னா கேட்கிறானா? இந்த பாழும் பாளையங்களைக் கொண்டாந்து, வூட்டுக்குள்ளே வெச்சா வூடு முஸீபத்துப் பிடிச்சுடுமே. பெரிய எழவாப் போச்சு. கண்டதையும் தின்னுட்டு காக்கா கூட்டம் மாதிரி கத்துறானுங்க. சமூக சேவை… செய்றாராம் சமூக சேவை”

அமைதி குலையாமல் பதில் சொன்னான் இக்பால். “”இந்த சின்னஞ்சிறு உதவியைக்கூட செய்ய முன்வரலேன்னா.. நீங்க ஹாஜின்னு சொல்லிக்கிறதுக்கே வெட்கப்படணும் வாப்பா”

“”அப்போ ஊர்லே உள்ள ஹாஜியாரெல்லாம் அவனவன் வூட்லே இதை மாதிரி ஏழை பாழைங்களைக் கொண்டு வந்து அடைச்சு வச்சி மாரடிக்கணும்கிறியா?”

“”அப்படினா இப்போ நான் செஞ்சிருக்கிற வேலை பாவம்னு சொல்றீங்களா?”

“”நோ…நோ… ஐ ஹாவ் நோ அப்ஜக்ஷன்” என்று ஆங்கிலத்தில் சொல்லித் தொடர்ந்தார் ஹாஜியார். “”இதுவால வர்ற தொல்லையை யார் தாங்கிக்கிறது?”

இதைக் கூறிய பிறகு மெல்லிய குரலில் அவனருகே வந்து சொன்னார்:

“”சோஷியல் வெல்ஃபர்ங்கிறதெல்லாம் வாயளவிலே ஃபார்மலிட்டியாக வச்சிக்கணும் இக்பால், அதையெல்லாம் முழுசா செஞ்சு நடைமுறைப்படுத்தணும்னு நினைக்கிறதவிட பைத்தியக்காரத்தனம் வேறே ஒண்ணும் இல்ல”

முக்கால்வாசிக்கும் மேல் எறிந்துவிட்ட சாம்பலை அவரது விரலிடுக்கிலிருந்த சிகரெட்டிலிருந்து குப்பைக் கூடையில் தட்டிவிட்டு ஆழ்ந்த இழுப்புக்குப் பின் அந்த கால்வாசித் துண்டை ஆஸ்ட்ரேயில் நெரித்துத் தூக்கி எறிந்துவிட்டு ஏதோ ஓர் ஆழமான உண்மையை மகனிடம் தெரிவித்துவிட்டோம் என்ற நிறைவு கலந்த திமிருடன் மேல் நோக்கி புகையை ஊதினார்.

அவரது உள்ளத்தில் கடுகளவாக ஒட்டியிருந்த மனிதாபிமானமும் சேர்ந்து அந்தப் புகையுடன் வெளியேறிச் சுழன்று மறைந்தது.

“”உங்களை மாதிரி சதாகாலமும் சுயநலம் பித்துப் பிடிச்சு பணத்திமிரோட திரிகிற ஈவிரக்கமில்லாத பார்மாலிட்டி ஹாஜியார்களை எல்லாம் என்னா செய்யணும் தெரியுமா? உசிரோட நெருப்பில் போடணும்”

இக்பாலின் கண்கள் கனலாகக் கனன்றன. தன்னைப் பெற்றவர் என்ற உணர்வு கூட சிறிதும் தோன்றாத மனநிலையில் சொற்களைத் தொடுத்து ஈட்டியாக்கி அவர் நெஞ்சில் பாய்ச்சிவிட்டு அவரது பரிதாபமான உள்ளத் துடிப்பைக் கூட சிறிதும் ஏறிட்டுப் பார்க்காமல் இரண்டாம் மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருந்தான் இக்பால்.

இப்போது அவன் ஹாஜியாரின் தலை உயரத்துக்கு மேலுள்ள படிக்கட்டுகளில் ஏறிவந்து கொண்டிருக்கிறான். ஆம்… அவன் தன் சொல்லையும் செயலையும் இணைத்துக் காட்டி அவ்வூரின் மனிதாபிமானத்தின் மகத்துவமிக்க முன்னுதாரணமாகி தன் தந்தையின் குணங்களிலிருந்தும் மேலேறிக் கொண்டு தானிருந்தான்.

ஹாஜியாரின் கோபத்துக்குக் காரணம்தான் என்ன?

தொடர்ந்து கொட்டிய ஒருவார அடைமழையினால் அந்தப் பட்டக்கால் தெருவெங்கும் தண்ணீர் ஆறாகப் பெருகிவிட்டது. மற்றெல்லாத் தெருக்களையும்விட பட்டக்கால் தெரு கொஞ்சம் பள்ளம். வடிகால் தண்ணீர் பூராவும் அந்தச் சின்னஞ்சிறு சந்து விழியே நுழைந்துதான் ஆற்றில் கலக்கும்.

காற்றின் சீற்றமும் கனமான மழைநீரும் சேர்ந்து பட்டக்கால் தெருவைப் பதம் பார்த்துவிட்டதில் பந்தாடப்பட்டவர்கள் அந்த குடிசைவாசிகள்.

மித மிஞ்சிய தண்ணீர் தேக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாத இருமருங்கிலுமிருந்த குடிசைச் சுவர்கள் நீரில் கரைய ஆரம்பித்துவிட்டன. இருக்கிற இடமும் நீரில் கரைந்தால் அந்த இல்லாத ஏழைகள், எங்கே போவார்கள்? என்ன செய்வார்கள்? பாவம்!

வேறெங்கும் தற்காலிகமாய்க் குடியேறவும் வாய்ப்பு இல்லை. இவர்களின் தவிப்பை முன்பொரு தடவை நேரில் பார்த்துவிட்ட டாக்டர் இக்பால் இம்முறையும் பேசாமலிருக்க முடியாமல்தான் அந்த மகத்தான காரியத்தைச் செய்தான்.

விளையாட்டுத் திடல் போன்ற தம் மூன்றுமாடி வீட்டின் முன்கட்டுப் போர்ஷனை மட்டும் காலி செய்து அனைவரையும் அங்கே தற்காலிகமாகத் தங்கிக் கொள்ள அனுமதித்தான்.

முதலில் கடுமையாக எதிர்த்துத் தோற்றுப் போய் எப்படியோ மூன்று நாட்கள் தாக்குப் பிடித்துவிட்டார் ஹாஜியார்.

அவரது சிங்கப்பூர் பிஸினஸில் கிடைத்த லாபத் தொகையில் ஒரு பகுதி அந்த மிகப் பெரிய வீடு. டாக்டர் இக்பால் அவருக்கு ஒரே மகன். மூன்று வருடங்களுக்கு முன்பு மனைவி காலமான பின்பு சமையலுக்கென்று ஒரு மலையாளி.

இப்போதுதான் அங்கு ஒரு பெண்ணின் கரம் பானை பிடித்திருக்கிறது. அவள்தான் மருமகள் ஜுனைதா. மகனின் சொல்லடி வலி பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்த கோபம் உச்ச நிலையடைந்து தானாய்த் தணிந்த பின் உடலும் உள்ளமும் சோர்ந்து போய் வெல்வெட் மெத்தை மேல் சாய்ந்து கொண்டார் அவர்.

குளிரின் குரூர அணைப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் கைகால்களைச் சுருட்டிக் கொண்டு முதல் கட்டு மக்கள் அனைவரும் நடுங்கும் உடலோடு உறங்க ஆரம்பித்திருந்த நேரம் அது.

மூன்றாம் மாடியிலுள்ள தனது அறையில் நுழைந்தான் இக்பால். டாக்டர் உடைகளைக் களைந்து கைலியை உடுத்திக் கொண்டு டவலை மேலுக்குப் போர்த்திய பின் ஜுனைதாவின் அருகே வந்து மெல்ல எழுப்பினான்.

“”இன்னிக்கு ரொம்ப லேட்டாயிடுச்சேன்னு கோபமா? எல்லாம் உன் மாமனார் பண்ணின வேலையாலதான்” என்றவனின் முகத்தைக் கைகளில் தாங்கி விழி உயர்த்திப் பார்த்தபடி கட்டிலிலிருந்து எழுந்தாள்.

அருகிலிருந்த டீப்பாயை இழுத்துப் போட்டு பீரோவைத் திறந்து பிஸ்கெட் பாக்கெட்டையும் நறுக்கின ஆப்பிள் பழத்துண்டுகளையும் கொண்டு வந்து தட்டில் வைத்துவிட்டு, ஃபிளாஸ்கிலிருந்த சூடான பாலைத் தம்ளரில் ஊற்றி ஆற்றியபடியே சொன்னாள்.

“”என்னங்க… உங்களுக்கு ஏன் இந்த பிடிவாதம்? மாமா சொல்ற மாதிரியே அவங்க மனது கோணாமல் நடந்துக்க வேண்டியதுதானே”

“”நானும் பொறுமையா எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கேட்கமாட்டேங்கறாரு. பாவங்கற மாதிரி நினைக்கிறாரு. ஹாஜியார்னு பேர் மட்டும் போதுமா? நடைமுறையிலும் அந்த புனித பயணத்தின் நோக்கம் பிரதிபலிக்க வேண்டாமா? நீயே சொல்லேன். இப்ப நான் செஞ்சிருக்கிற காரியம் தப்புங்கிறீயா?”

“”அந்த ஜனங்கள் போடுற கூச்சலும் அவங்களோட இரைச்சலும்தான் மாமாவுக்குப் பிடிக்கல்லே” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் ஜுனைதா.

“”உஷ்… சிரிக்காதே ஜுனைதா… இல்லாத கொடுமைதானே அவங்களை நமக்கு முன்னாடி சிரிப்புக்கிடமா மாத்திருக்கு? அதே கொடுமை நம்மையும் தாக்க அதிக நேரமாகுமா? அதை நெனைச்சுப் பாரு”

“”எனக்கு இந்த பிலாஸபியெல்லாம் புரியாது. முதல்ல நீங்க சாப்பிடுங்க. கிறுகிறுன்னு மயக்கம் வருது”

நிறைமாதக் கர்ப்பிணியான ஜுனைதா ஏ.ஸி.மெஷினில் சூடான பகுதிக் காற்றை ஆன் செய்துவிட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டாள். சிந்திக்கிற தோரணையும் சிறிதே இரக்க முகபாவமும் ஒரு சேர கணவன் முகத்தையே கண் மலரப் பார்த்தபடியே இருந்தாள்.

“”இதெல்லாம் உனக்குப் புரியாதுதான். ஏன்னா நீ செல்லமா செல்வச் செழிப்பிலே வளர்ந்தவள். இப்போ உனக்கு மயக்கம் வர்ற மாதிரிதான் உன் மாமாவுக்கும் மயக்கமும் மண்டைக் கனமும் சேர்ந்து வந்து தொலைக்குது ”

ஒரு லட்சிய புருஷனைத் துணையாக்கித் தந்த இறைவனை நெஞ்சுக்குள் பூரித்து வாழ்த்தும் முகவிலாசம் அவள் விழி வழியே சுடர்விட்டது. சாப்பிட மனமின்றியே தூங்கிப் போனான் இக்பால். வெள்ளம் வடிந்த மறுநாளே இக்பாலிடம் இதயம் திறந்த ஸலாமும் கண்ணீரும் தளும்ப பிரியா விடை பெற்றார்கள் அந்த ஏழை மக்கள்.

அவர்கள் ஒவ்வொருவராக வந்து ஷுக்கூர் ஹாஜியாரிடமும் விடை பெற்றார்கள். அவர் கையைப் பற்றிக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்கள்.

தம்மால் இத்தனை நாளும் வெறுக்கப்பட்டுவந்த அந்த மக்களின் செயல் ஹாஜியாரை என்னமோ செய்தது. உணர்ச்சிவசப்படுவதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

எல்லாரும் புறப்பட்டுப் போன பின்பு, தம் மகனின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்களில் நீர் துளிர்க்கச் சொன்னார் ஹாஜியார்.

“”உன்னைப் படிக்க வச்சு டாக்டராக்கினால் நீ பல மடங்கு பணம் சம்பாதிச்சு லட்சாதிபதியாக வாழ்வேன்னு நான் நினைச்சிருந்தேன். ஆனால் நீ பலருடைய உடல் பிணிகளை மாத்திரமல்ல, என் மாதிரி சுயநலமிகளின் ஆணவப் பிணிகளையே அன்புங்கிற ஆயுதத்தாலே ஆபரேஷன் செய்யற லட்சியவாதியா உயர்ந்திருக்கே இக்பால்… உன்னைப் பெற்றதுக்காக இப்போதுதான் உண்மையாகவே சந்தோஷப்படறேன்”

கண்ணீர் கன்னத்தில் மழையாக இறங்க இதயத்தால் பேசினார் ஹாஜியார்.

– அன்வர் (ஜூலை 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *