கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 27, 2024
பார்வையிட்டோர்: 10,849 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

வன்னிப் பெருநிலம் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.

துப்பாக்கி வேட்டுக்குப் பயந்து பங்கர்களிலும் பதுங்கு குழிகளிலும் வாழ்வதனைவிட அண்மைக்கால நிவாரண வெட்டு அந்த மக்களுக்கு துன்பச் சுமையாக மாறியிருந்தது.

உணவு மருந்து எரிபொருள்…. பொருட்களின் தடைவிதிப்பு மக்களை நோக்கிய கனரக ஆயுதங்களாக மாறியிருந்தன.

குண்டு வீச்சுக்கும் செல்லடிக்கும் – துப்பாக்கி வேட்டுக்கும் தப்பித்து வாழப் பழகிக்கொண்ட மக்களுக்குப் பசிக்குத் தப்ப முடியவில்லை. பசிக் கொடுமையில் அங்கு வாழும் பல்லாயிரம் வயிறுகளும் ஓயாது அழுது கொண்டேயிருந்தன.

அந்தப் பசிக் கொடுமைக்கு சண்முகத்தின் குடும்பமும் விதிவிலக்கல்ல.

அதிகாலையில் எழுந்து ஏதாவது உணவு கிடைக்காதா என்று நம்பாசையுடன் வெளியே சென்ற சண்முகம் இன்னும் வீடு திருப்பவில்லை.

அவன் ஏதாவது கொண்டு வரமாட்டானா என்ற ஏக்கத்துடன் தெருவைப் பார்த்தபடி வாசலிலேயே குந்தியிருக்கிறாள் கனகம்.

அவல வாழ்வை எண்ணி எண்ணி இரவு முழுவதும் அழுதிருக்கவேண்டும். கண்கள் சிவந்து வீங்கிப்போயிருந்தன.

அதைவிட –

நேற்று முழுவதும் குடலினுள் ஒன்றும் இறங்காததால் ஏற்பட்ட பட்டினியால் இரவு முழுவதும் தூக்கம் வர மறுத்தது.

பிள்ளைகள் இரண்டு பேரும் மருத மரம் ஒன்றின் கீழே நின்று கெற்றப் போலினால் குருவிகளை இலக்கு வைத்து அடித்துக் கொண்டிருந்தனர்.

மூத்தவன் சங்கருக்கு ஆறு வயது. இளையவன் கமலனுக்கு நாலு வயது. ஆனால் வயதைத் தாண்டிய வளர்ச்சி. பிள்ளைகளைப் பார்க்கப் பாரிதாபமாக இருந்தது.

ஒரு நேரச் சாப்பாட்டிற்கே வழியில்லை! திண்டாட்டம்!

நேற்று மதியம் குடித்த குறுணல் அரிசிக் கஞ்சித் தண்ணீர். பாவம், பிஞ்சுக் குடல்கள்! வெறும் வயிறு!

வாழும் வளரும் பிள்ளைகளுக்கு ஒரு பிடிசோறு ஒழுங்காகக் கொடுக்க முடியவில்லையே! தமிழனின் தலைவிதியை நினைத்து மனம் அழுதது.

இதனைவிட…..

கல்விக் கூடங்கள் விமானக்குண்டு வீச்சுக்கு இரையானதால் பிள்ளைகளின் படிப்பு ஆணிவேர் அறுக்கப்பட்ட இளங்கன்றாக மாறியிருந்தது.

இந்த நிலை தொடர்ந்தால்……

இன்று கெற்றப்போலால் குருவிகளுக்கு இலக்கு வைக்கும் பிள்ளைகள் நாளை…..

மீண்டும் யாழ்ப்பாணத்திற்கே திரும்பிப்போய் விடலாம் என்று கூட நினைத்தாள்.

மனித வேள்வியின் ஓலங்கள்!

செம்மணிப் புதைகுழிகள்!

உயிருடன் எரியும் உடமைகள்! வதந்திகள்!

நொடிப் பொழுதில் அந்த எண்ணமே கருகிப்போனது.

அவர்களுடைய குடும்பம் வறுமையானது அல்ல. போரும் இடப்பெயர்வுகளும் அவர்களை வறுமையாக்கியது வறுமையாக்கப்பட்டார்கள். அவளுக்கும் பசி குடலைப் பிய்த்தது. சிறுகுடலைப் பெருங்குடல் விழுங்குவது போல உணர்வு.

இன்னும் சில மாதங்களில் யுத்த பூமியை எட்டிப் பார்க்க வயிற்றுக்குள் இருக்கும் பிஞ்சுக்காவது சாப்பிட்டே ஆகவேண்டும்.

குசினிக்குள் ஏதாவது சாப்பாட்டுச் சாமான்கள் இருக்காதா என்ற நப்பாசையில் எழுந்தாள். எழும்ப முடியவில்லை. பசிக்களை! உடல் தள்ளாடியது.

மெதுவாக எழுந்து குசினிக்குள் சென்றாள். அவளுடைய கண்கள் குசினியை மேய்ந்தன.

எங்கும் வெறுமை!

தேநீர் குடிப்பதற்காகவாவது ஒரு சர்க்கரைத்துண்டு கிடைக்காதா? கண்கள் அணு அணுவாகத் துளாவின.

ஏமாற்றமே கிடைத்தது.

“அம்மா பசிக்குது…..”

கூரிய அம்பாக மூத்த மகனுடைய வார்த்தைகள் பாய்ந்தன.

திரும்பினாள்

அருகே இளையவன்

“அம்மா பசிக்குது……”

அதே வார்த்தைகள்.

அவளால் வாய்திறந்து பேச முடியவில்லை. வார்த்தைகள் தொண்டைக்குள் கலந்தன.

சிக்கி நின்றன. பெருமூச்சுகள் காற்றோடு கலந்தன.

“என்னம்மா….. பசிக்குது…..”

இது இளைய மகனின் துயரக்குரல்.

“அச்சாக்குஞ்சுகள்…. கொஞ்சம் பொறுங்கோ. பொறுங்கோ. அப்பா இப்ப வந்திடுவார்…..”

இந்த வார்த்தைகளை மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது.

“சாப்பாடு கொண்டு வருவாராம்மா…..”

“ஓம், கொண்டு வருவார்…. வெளியில போய்க் கொஞ்ச நேரம் விளையாடுங்கோ….”

நம்பிக்கையுடன் இருவரும் தலையை ஆட்டியபடி வெளியே போகிறார்கள்.

எத்தனை நாட்களுக்கு…. எத்தனை தடவைகள்…. இதே சொற்கள். வேதனைகளை ஜீரணிக்க முடியவில்லை.

கண்களில் வடிந்த நீரைப் புறங்கையினால் துடைத்தபடி மீண்டும் வாசலிலே குந்திக்கொண்டாள்.

அவளுடைய பார்வைகள் தெருவை வெறித்துக் கொண்டிருந்தன. நேரம் பத்து மணியைத் தாண்டி விட்டது.

இன்னும் சண்முகம் வரவில்லை. நேரம் செல்லச் செல்ல இன்றைக்கு எப்படியாவது உணவு லொறி வரும். நிவாரண அரிசி கிடைக்கும். கிடைக்கும் அந்தக் கொஞ்ச அரிசியைக் கொண்டு ஆற்றாப் பசிக்கொடுமைக்கு ஒரு கஞ்சித் தண்ணியாவது குடிக்கலாம் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டிருந்தது.

இன்று உணவு லொறி வராமல் விட்டால்…. மூளை ‘புகாரா’ விமானத்தின் வேகத்தில் செயற்பட்டது.

அரசாங்கங்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஒரு கிலோ கோதுமை மா நாற்பது ரூபா. ஒரு இறாத்தல் பாண் பதினைந்து ரூபா. இது –

வன்னிப் பெருநிலப் பரப்பில் வாழும் மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் பொருளாதாரச் சுமை.

பொருளாதாரச்சுமை அழுத்திக் கொண்டு கனத்துப் போய்க் கிடக்கும் பொழுது அவளால் என்னதான் செய்யமுடியும்…

தொலைவில் சண்முகம் வருவது தெளிவாகத் தெரிகிறது.

தூரத்தில் வரும்பொழுதே அவனை அவளுடைய கண்கள் ஆராய்கின்றன.

தோள்களின் வெறுமையையும் கைகளின் சோர்வையும் தளர்ந்த நடையிலிருந்தே புரிந்து கொள்கிறாள்.

நம்பிக்கை சிதைந்து…… இதயம் அறுந்து நரம்பில் தொங்குவது போல உணர்வு…….

எத்தனை நாளைக்குத்தான் இந்த அவல வாழ்க்கை. யுத்தமும் இடம் பெயர்வும் – அகதி நிலையும்.

அகதிகளை அதிகமாக உற்பத்தி செய்யும் நாட்டில் பிறந்தது அவர்களின் தலைவிதி.

அவனோ அவளோ எதுவுமே பேசவில்லை. சோர்வினால் அவனும் வாசலிலே குந்திக்கொண்டான்.

இருவருடைய கண்களும் இமைக்க மறந்துபோய் நின்றன. சிவந்த விழிக்குள் வந்த கண்ணீர் எட்ட நின்று பார்த்தது. வேதனைகளால் உதடுகள் துடித்தன.

அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. கண்களில் மட்டும் உயிரை வைத்துக் கொண்டு எலும்புக்கூடாய் மாறியிருந்தன.

அவனுந்தான் என்ன செய்வான்….. அவனுடைய இரைப்பையிலும் வெறுமையின் வெக்கை.

அவனை இந்த அவல நிலைக்குத் தள்ளிவிட்டது.

அரவணைக்க அழகான மனைவி… அன்பான இரு குழந்தைகள்….. சொந்தங்கள்…… உறவுகள்…… சுதந்திர பூமி…. பழகிய மண்…. யாழ்ப்பாணத்தில் எவ்வளவு சந்தோசமாக இருந்தான்.

ஒரு நாள்…..

அதிகாலைப் பொழுதில் திடீரென வானில் முளைத்த விமானங்கள் குண்டுகளைப் பீச்சின…. ஹெலிகள் பறந்து பறந்து துப்பாக்கி ரவைகளைக் கக்கின… கவச வாகனங்களின் இரும்புக் குழிகளிலிருந்து புறப்பட்ட குண்டுகள் சீறிப் பாய்ந்தன…. எங்கும் மரண ஓலம்…. நகரம் நிறைந்த புகைமண்டலம்….. சுதந்திர பூமி மரணங்கள் மலிந்த பூமியாக மாறிக் கிடக்கிற நகருக்குள் ஆமிக்காரன் புகுந்து விட்டான் என்று கூறிக்கொண்டு கொலைக்களத்திலிருந்து தப்பிய மாடுகள் கதறி ஓடுவது போல உடமைகளை எடுத்தது பாதி எடுக்காதது பாதியாக…. சொத்து சுகங்களை இழந்து சனங்கள் சிதறியடித்து ஓடிக்கொண்டிருந்தனர்.

சண்முகம் செய்வதறியாது திகைத்துப்போய் நின்றான்.

தொலைவிலிருந்து வந்த அந்நிய பாஷைகளில் அதட்டல் ஓசைகள் செவிப் பறைகளில் வந்து முட்டி மோதி நிற்கின்றன.

இன்னும் தாமதிப்பதில் பயனில்லை!

இங்கிருந்து தப்பினால் போதும் என்ற எண்ணத்தில் மனைவியையும் குழந்தைகளையும் கையில் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினான்.

உயிர் மட்டும் மிஞ்சியது…..!

அவன் எங்கே ஓடுகிறான் என்று அவனுக்கே தெரியாது. சனங்கள் ஓடும் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் திசைகளிலே….. கால் போன போக்கிலே ஓடினான். காடுகளையும் முட்புதர்களையும் கடந்து ஓடினான்…. இறுதியில் வள்ளத்தில் ஏறி…. கடலலையுடன் போராடி…கிளாலிக் கடலைத்தாண்டி.. மரணத்தால் துரத்தப்பட்ட மனிதனாக கிளிநொச்சியை அடைந்தான்.

“என்னவாம் அப்பா’

அமைதியைக் கலைப்பதற்காக கனகமே கேட்டாள்.

“பிச்சை போடுறது போல போடுற நாலு அரிசிக்கு நாயாக அலையிற விட…. நாலு பேரும் நஞ்சைக் குடிச்சிற்றுச் செத்துப்போயிடலாம்….எத்தின நாளைக்குத்தான் இப்படிப் பேயா அலையிறது…..”

விரக்தியின் விளிம்பிலிருந்து அவனுடைய வார்த்தைகள் வெளிவந்தன.

“இந்த எச்சில் கஞ்சியைக் குடிக்கிறதவிட நஞ்சைக் குடிக்கலாம்தான்…. ஆனா…. பிள்ளைகள்…. அவர்களுக்காவது வாழ்ந்துதான் ஆக வேண்டும்!”

“கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லுங்கோவன்”

“வன்னிக்குச் சாமான் அனுப்பக் கூடாது என்று ஓடராம். இனிச் சாமானே வராதாம்…..”

கணவனின் மனநிலை அவளுக்குப் புரிந்தது.

“ஆரைக் குறைசொல்லி என்ன பிரயோசனம்!”

தந்தையின் குரல் கேட்ட பிள்ளைகள் இரண்டு பேரும், “அப்பா வந்திட்டார்…. அப்பா வந்திட்டார்…” என்று கூறியபடி ஒருவரையொருவர் முந்தியடித்து ஓடி வந்து தந்தையின் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டனர்.

அவர்கள் போட்டி போட்டு ஓடிக் கொண்டு வந்த வேகம்…. அப்பாவின் மீது கொண்ட பாச உணர்வைவிட… வயிற்றில் உள்ள பசி உணர்வே…..! சாப்பாடு ஏதாவது கொண்டு வந்திருப்பாரா என்ற ஆவல்…..!

“சாப்பாடு ஒன்றும் கொண்டு வரவில்லையா அப்பா”

முத்தமகன் கேட்கிறான்.

அவர் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்கின்றார்.

“அப்பா….. பசிக்குதே….!”

இளையவன் தந்தையின் நாடியைத் தடவியபடி கேட்கிறான்.

“நேற்று மத்தியானம் சாப்பிட்ட கஞ்சிக்குப் பிறகு ஒன்றும் சாப்பிடவில்லையப்பா…”

“சாப்பிடுறத்திற்கு ஒண்டுமில்லையப்பா….”

பிள்ளைகளின் வார்த்தைகள் நெஞ்சில் செல்லடியை விடப் பேரிடியாக இருந்தன.

இடம் பெயர்ந்தவர்களுக்கான அகதி நிவாரணம் இனிக் கிடைக்காது என்பதனை இந்தக் குழந்தைகளுக்கு எப்படிச் சொல்ல முடியும். சொன்னாலும் இந்தப் பச்சைக் குழந்தைகளுக்குப் புரியுமா என்ன….!

இலங்கையின் இதயம் போல இருக்கும் மக்கள் மீது இதயம் இல்லாதவர்களுக்குக் கோபம் என்று சொன்னால் இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்குப் புரியுமா….!

யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று தடை செய்திருப்பது சிறுவர்களின் எதிர்காலம் பாழடிக்கப் படாமல் இருக்கத்தான். அப்படியானால் சிறுவர்களுக்கான நிவாரணமும் போகக் கூடாது என்று தடை செய்து சிறுவர்களைப் பட்டினி போட்டுக் கொல்வது எந்த வகையில் நியாயமானது….!

56இல் ஓடிய இரத்தக்கறை இன்னும் காய்ந்து விடாமல் தொடர்ந்து கசிந்து கொண்டேயிருப்பது போல பெற்றோர்களின் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்ததேயொழிய பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

தன்னம்பிக்கையும் துணிவுந்தானே ஏழைகளின் ஆயுதம்.

ஒரு இறாத்தல் பாண் பதினைந்து ரூபா. ஒரு கோழி முட்டை பதினைந்து ரூபா. முந்தநாள் முட்டை போட்ட கோழி இண்டைக்கு கட்டாயம் முட்டை போடும். அந்த முட்டை டொக்டரின் வீட்டில கொடுத்து காசு வாங்கினால் ஒரு இறாத்தல் பாண் வாங்கலாம். ஒரு இறாத்தல் பாண் வாங்கி ஒருவாறு இன்றைய சாப்பாட்டைச் சமாளிக்கலாம்.

நாகமணி வாத்தியார் நாலாம் வகுப்பில் சொல்லிக் கொடுத்த மனக்கணக்குப் பாடம் இப்பொழுதுதான் கனகத்திற்குப் பிரயோசனப்பட்டது.

“கொஞ்சம் பொறுங்கோ…! இப்ப ஒரு கோழி முட்டை போடும்…. அந்த முட்டையை வித்துப் போட்டுப் பாண் வாங்கித் தாரன்…”

“இண்டைக்கு எந்தக் கோழி முட்டை போடுமம்மா!”

“கறுப்புப் புள்ளிக் கோழி”

“உண்மையா இண்டைக்குப் போடுமேம்மா…”

நம்பிக்கை இழந்தவர்களாக இருவரும் கேட்கின்றனர்.

“ஓம், கட்டாயம் போடும்….”

“சரி”

தலையை அசைத்தபடி இருவரும் போகிறார்கள்.

“அண்ணா, அந்தப் புள்ளிக் கோழி எங்க போயிருக்கும்….”

“அது குப்பை மேட்டிலதான் நிற்கும்…. வா போய்ப் பாப்பம்….!”

“அந்தா நிக்குதண்ணா அந்தப் புள்ளிக் கோழி”

குப்பை மேட்டில் கோழி குப்பையைக் கிளறிக் கொண்டு நிற்கின்றது.

இருவரும் குப்பை மேட்டிற்கு அருகில் நின்று கோழியையே பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். இம்… நேரம் போனதேயொழிய கோழி முட்டை போடுவதாக இல்லை. குப்பை மேட்டில் மேய்ந்து கொண்டேயிருந்தது.

“அண்ணா இண்டைக்குக் கோழி முட்டை போடாது போல கிடக்குது”. அலுத்துக் கொண்ட இளையவன்.

“அம்மாட்டப் போய்ச் சொல்லுவம்….”

இருவரும் அம்மாவிடம் புறப்படுகிறார்கள்.

“அண்ணா நீ வராத. நான் அம்மாட்டப் போய்ச் சொல்லுறன். நீ இதில் நில்லு. நாம அங்கால போக…. கோழி எங்கயும் போய் முட்டையைப் போட்டிரும்……”

இளையவன் தாயிடம் ஓடுகின்றான்.

“அம்மா, இன்னும் கோழி முட்டை போடயில்லையே. இண்டைக்கு முட்டை போடாது போல கிடக்குது….”

“இண்டைக்கு கட்டாயம் முட்டை போடும்….”

மீண்டும் சந்தோசத்துடன் துள்ளிக் குதித்துக் கொண்டு அண்ணனிடம் ஓடுகின்றான்.

கோழி குப்பை மேட்டிலேயே நிற்கிறது.

“இண்டைக்குக் கட்டாயம் போடுமாம் அண்ணா…”

இருவரும் பார்த்துக் கொண்டே நிற்கின்றார்கள்.

இருவருக்கும் கால் கடுக்க அதிலேயே இருவரும் குந்திக் கொண்டார்கள்.

குப்பை மேட்டில் மேய்ந்து கொண்டிருந்த கோழி மெல்ல மெல்லக் கேரிய படி நகர ஆரம்பித்தது.

கோழி நகர நகர நகர நகர இருவரும் கோழிக்குப் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தார்கள்.

கோழி வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவர்களும் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள்.

இருவரும் கோழிக்குப் பின்னாலேயே திரிவதைக் கண்ட தாய் “டேய், கோழியைத் துரத்தாதங்கடா… கோழியைத் துரத்தினால் முட்டை போடாது…” சத்தம் போட்டாள்.

அவ்வார்த்தைகளை அவர்கள் கேட்பதாக இல்லை. அது போகுமிடமெல்லாம் போனார்கள்.

அங்கும் இங்கும் தத்தித் தத்திப் பாய்ந்து திரிந்து இறுதியில் முட்டை போடுவதற்கென வைக்கப்பட்டிருந்த ‘பக்கீஸ்’ பெட்டியின் மேலே பாய்ந்தது.

இருவரும் அடைந்த சந்தோசத்திற்கு அளவேயில்லை.

“முட்ட போடப்போகுது….. முட்ட போடப் போகுது….” இருவரும் துள்ளிக் குதித்தார்கள்.

கோழி பக்கீஸ் பெட்டியினுள் படுத்துக் கொண்டது.

இருவரும் அடிக்கடி பெட்டியை எட்டிப் பார்த்தார்கள். கோழி அப்படியே படுத்துக் கிடந்தது.

“அண்ணா…. முட்டை போட்டுட்டா எண்டு பாக்கட்டா” பொறுமையிழந்தவனாக கோழியின் வாலில் பிடித்துத் தூக்கிப் பார்த்தான்.

இன்னும் முட்டை போடவில்லை.

ஆள்மாறி ஆள் அடிக்கொரு தடவை கோழியின் வாலைப் பிடித்துத் தூக்கிப் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள்.

முட்டை போடவில்லை. கோழி படுத்துக் கொண்டேயிருந்தது.

நீண்ட நேரத்தின் பின்பு –

கோழி மெதுவாக எழுந்து நின்றது.

சந்தோசத்தின் உச்சிக்கே போய் விட்டார்கள்.

முட்ட போடாதா …. முட்ட போடாதா… இருவரும் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே நின்றார்கள்.

“போடப் போகுது… போடப் போகுது…” இருவரும் முணுமுணுத்துக் கொண்டேயிருந்தார்கள்.

கோழி முக்கி… முனக… முட்டை வெளியே வந்து வீழ்ந்தது….

முட்டை வழுவழுப்பான ஈரம் காயாமல் உமி ஒட்டிப்போய்க் கிடந்தது.

முட்டையைக் கண்ட சந்தோசத்தில் “அம்மா முட்டை போட்டிட்டு…அம்மா முட்டை போட்டிட்டு…” என்று முட்டையைத் தூக்கியபடி இளையவன் தாயிடம் ஓடினான்.

“தாடா…. தாடா….” என்றபடி பறிப்பதற்காக மூத்தவன் பின்னால் ஓடினான்.

முட்டையைத் தூக்கிக் கொண்டு ஓடி வருவதைக் கண்ட தாய், “கவனமடா…. கவனமடா…” என்று கத்தினாள்.

அதற்கிடையில் –

கையிலிருந்து முட்டை நழுவியது.

(கனடா தமிழர் செந்தாமரை பத்திரிகை சர்வதேச ரீதியில் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசினைப் பெற்றுக்கொண்ட சிறுகதை)

– ஞானம் 2001.11

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *