கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 29, 2024
பார்வையிட்டோர்: 4,088 
 

செல்போன் இருக்கே அது எதுக்குத் தெரியுமா? ஒரு ஆத்திர அவசரத்துக்குத்தான் பயன்படுத்தணும். சும்மா படுத்தறதுக்குப் பயன்படுத்தக் கூடாதுன்னு எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியலை.

அன்றைக்கு நடந்ததை இப்ப நினைச்சாலும் சிரிப்புத்தான் வருது.

புதிதாய்க் கல்யாணமான அவங்களுக்கு நடக்கிறது எல்லாமே புதுமையாயும் புதிராய்த்தானே இருக்கும். இருந்தது. குழந்தை பிறந்து அந்தக் குழந்தையின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் அந்த வீட்டில் புத்துணர்ச்சியைக் கரை புரண்டு ஓடச்செய்தது. குழந்தை ‘ங்உ’ சொல்வதிலிருந்து வாயைத் திறந்து குதப்புவதுவரை ஒரே குதூகலத்தைத் தந்தது. அதெல்லாம் சரிதான். ஆனால், அடுத்து நடந்ததுதான் கொடுமை!.

குழந்தை எப்போது குப்புற விழும் என்று காத்திருந்தார்கள். அன்று அசோக் வாரச் சந்தைக்கு கறிகாய் வாங்க டூவீலரில் சென்றிருந்தான். மாலை ஆறுமணிக்கு மேல் போனால், சந்தையில் கூட்டம் அதிகமிருந்தாலும் வியாபாரிகள் மூட்டை கட்டும் மோகத்தில் வந்த வரை லாபமென விலை குறைத்து விற்பார்கள் என்பதாலும் வேலைக்குச் சென்று திரும்பும்போது அப்படியே காய்கறி வாங்கி வந்துவிட்டால் ஒரு வாரத்திற்கு பிரச்சனை இல்லை என்பதாலும் அனைவரும் மாலை நேரமே சந்தைக்குப் போவது வழக்கம். அசோக் காய்கறி வாங்கித் திரும்பினான். வீட்டு வாசல்வரை வந்துவிட்டான் . போன் அடித்தது. யார்னு பார்த்தான். மனைவிதான்..எடுத்து ‘ஹலோ…’ என்றான்.

‘ஏங்க எங்க இருக்கீங்க? தம்பி குப்புற விழுந்துட்டான். வாசற்படியில் தேங்காய் உடைக்கணும்ல..?!’ என்றாள். மகிழ்ச்சியில் வண்டியை சைடு ஸ்டாண்டு போட்டு பார்க் பண்ணிக் கொண்டே அசோக்…’இதோ வாசல்லதான் இருக்கேன்.’ என்றான்.

‘சீக்கிரம் வாங்க.!. சந்தைல தேங்காய் வாங்கினீங்க தானே? நல்ல முத்தல் காயா ஒன்றை எடுத்துட்டு வந்து திருஷ்டி சுத்தி சீக்கிரம் படில உடைங்க!’ என்று உசுப்பேத்த, உற்சாகத்தில் வண்டி சைடு ஸ்டாண்டை சரியாப் போட்டேனானே தெரியாம தேங்காயை காய்கறிப் பையில் தேடி எடுத்துட்டு வாசற்படி தாவி ஏற, கால் வழுக்கித் தடுமாறி தலைகுப்புற விழ, தேங்காய் நாலெட்டு தாண்டி விழுந்து உருண்டது. அசோக் படியில் முட்டி உருள, தலை ‘ஈடு தேங்காயாக’ இரண்டுபட்டது. பிடிக்கப் போன போலீஸை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப ஓட முயன்றபோது விழுந்து காலில் காயம் பட்டதுன்னு டீவில காட்டுவாங்களே குற்றவாளிகள் படம். அதுமாதிரி அச்சோ பாவம் அசோக் கால் கட்டோடு கிடந்தான். குப்புற விழுந்த குழந்தைக்கு தேங்காய் உடைக்க விரைந்தவன் தலை தேங்காயானதுதான் மிச்சம், அவன் மனைவி கொஞ்சம் உள்ள வந்ததும் குப்புற விழுந்த சந்தோஷத்தைச் சொல்லியிருக்கலாம்தான். ஆனால் விதி யாரை விட்டது??!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *