கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: April 27, 2024
பார்வையிட்டோர்: 1,501 
 
 

(1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம்-1 

நாலு ஆள் உயரத்தில் இருந்துதான் அந்தச் சுனையில் இருந்து தண்ணீர் விழுந்தது. ஆனால் தேன் கலந்த அந்தத் தண்ணீரில் குளிப்பது மட்டு மின்றி அதைக் குடிப்பதிலும் சுகம் இருந்தது. சுற்றி லும் வானோங்கிய மரங்கள். கதிரவன் ஒளி புக முடியாமல் இளம் காற்று மெல்லத் தாலாட்டிக் கொண்டிருக்கும் அந்த இடம், பறம்பு மலையின் பாங்கான பகுதிகளில் ஒன்று.

மனது களிக்க. மயங்கிக் குளிக்க மங்கையர் கூடுவது அந்த இடத்திலேதான். மாவடிச் சுனையைத் தெரியாத மங்கையர்கள் பறம்பு மலையிலே இல்லை. பறம்பு மலையின் முன்னூறு கிராமங்களில் இருந்தும் மாவடிச் சுனைக்கு வராத பருவ மங்கையர் இல்லை.

அடவி சூழ்ந்த இடமாதலின் ஆடையின்றிக் குளிப்பதற்கு ஏற்ற பகுதி அது. ஆடையின்றிக் குளிப்பார்கள் ஆரணங்குகள் என்பதாலே, ஆடவர்கள் அங்கே வருவதும் இல்லை. 

அங்கவையின் தோள்களைப் பிடித்துக் கொண்டு சங்கவை நீரில் ஆடினாள். 

மார்பகத்தைச் சேர்த்து முழங்கால்வரை கட்டிய ஒரு முண்டு, மெதுவாக இளகிக் கொடுத்து, மார்பகத்துக் கால்வாய் வழியாக தண்ணீர் ஓடி உடம் பெங்கும் வியாபித்தது. 

அந்தக் குளிர்ச்சியும், அந்த சுகமும் அங்கவையும், சங்கவையும் தினமும் சுவைக்கும் இனிமைகளே. 

சோழ நாட்டுக்குப் போனபோது காவிரியில் ஆடி இருக்கிறார்கள் இருவரும். ஆனால், மாவடிச் சுனையின் இனிமை காவிரியில் இல்லை. 

சலசலவென்று தலையில் தண்ணீர் விழுந்து உடம்பெங்கும் ஓடுகின்ற சுகத்தை, காவிரி நங்கை எப்படித் தர முடியும்! 

காதல் மணவாளன் கட்டித் தழுவுதல் போல் ஓர் ஆனந்தத்தையல்லவா பருவ மங்கையர் அந்தச் சுனையிலே கண்டு களித்திருக்கிறார்கள். 

குளிக்கப் போகும் அங்கவையும், சங்கவையும் அங்கேயே அலங்காரம் செய்து கொண்டு திரும்புவது வழக்கம். அன்றும் அவர்கள் அலங்காரம் செய்து கொண்டிருந்த போது அவசரமாக ஓடி வந்தாள் ஒரு தோழி. 

வேல்கம்பை பூமியில் சொருகி மண்டியிட்டு வணங்கினாள். வேறொன்றுமில்லை, மன்னவர் சோழ மண்டலம் செல்கிறாராம். மக்கள் இருவரையும் அழைத்தேக விரும்புகிறாராம். 

அங்கவையும்,சங்கவையும் அரண்மனைக்குள் நுழைந்த போது, வள்ளல் பாரி பயணத்துக்குத் தயாராக இருந்தான். 

“நேற்று வரைக்கும் அந்தத் திட்டமில்லையே. ஏனப்பா அவசரப் பயணம்?” என்று கேட்டாள், அங்கவை. 

“ஆண்டு தோறும் ஆடிப் பெருக்கு வருகிறது மகளே. ஆயினும் நம்மை அழைத்ததே இல்லை சோழ மன்னவர். யாது பற்றியோ இன்று சாலையில் அழைப்பு விடுத்து மாலைக்குள் வரும்படி கோரியுள்ளார்” என்றார் பாரி. 

சங்கவை சிரித்தாள். “எங்கு யாது நடப்பினும் என் தந்தைக்கு இல்லாத அழைப்பா?” என்ற கேள்வி அந்தச் சிரிப்பில் இருந்தது. 

மன்னனும் மக்களும் புறப்படத் தயாரானபோது பொன்னே விளையும் பறம்பு மலையின் புகழ்பெற்ற தளபதி வானவரையன் நேர்ப்பட்டான். 

“அழைத்ததாகப் பணியாள் சொன்னான்.” 

“ஆம். ஒரு செய்தி! சோழ மண்டலப் பெருங்கோ நம்மை ஆடிப் பெருக்கு விழாவுக்கு அழைத்திருக்கிறார்.” 

“இறைமாட்சிப் பேரரசே! நாளை பறம்பு மலைக்குத் தாங்கள் முடிசூடிய இருபத்தைந்தாவது ஆண்டு. இதுவரை நாம் எந்த ஆண்டிலும் மலைக்கு வெளியே இருந்தது இல்லையே…?” 

“ஆயின் என்ன செய்வது…? அழைத்தார். அழைப்பை மறுத்தால் அதை ஆணவம் என்பார்கள்! ஆண்டும் விலகிச் செல்லாது; ஆடிப்பெருக்கும் விலகிச் செல்லாது. இரண்டில் எதுவெனச் சீர் தூக்கிப் பார்த்தால், இன்னொருவர் அழைப்பை ஏற்பதே உயர் தன்மை!” 

“நல்லது மன்னவா; நானும் வருகிறேன். ஆனால் முடிசூடிய ஆண்டு விழாவை நாம் திரும்பி வந்து கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்து விட்டு வருகிறேன்” என்று கூறி விடைபெற்றுக் கொண்டான் வானவரையன். 

அத்தியாயம்-2 

காவிரி பொங்கிப் பாயும் சோழ மண்டலம். திரும்பிய பக்கமெல்லாம் செந்நெல். அரும்பிய முல்லைப் பூக்கள். ஆனந்த மயிலாடும் நந்தவனங்கள்; ஆலமரங்கள். காணக் காணத் தெவிட்டாத அழகுக் காட்சிகள். 

அந்தச் சோழ மண்டலத்துக்குள்ளே மன்னவன் பாரியின் தேர் ஊர்ந்தது. பாரி, பாரி மகளிர், தளபதி வானவரையன் ஆகியோர் அதிலே வீற்றிருந்தனர். 

மன்னவன் சோழ மண்டலம் ஆயினும் வந்தவன் பாரி என்பதாலே அம்மண்டலம் முழுமையும் தலை தாழ்ந்து அவர்களை வணங்கிற்று. 

“வள்ளல் பாரி வாழ்க” என்ற முழக்கம் எங்கணும் எழுந்தது. உள்ளத்தால் பொய்யாது, உலகத்தார், உள்ளத்துள் எல்லாம் இருந்த மாமன்னன் பாரி அனைவரையும் தானும் தாழ்ந்து வணங்கினான். 

“இதோ அவனே பாரி! இவனே பாரி” என்று மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு அவரைப் பார்க்க விரைந்தனர். 

மாடகூடங்களிலும், மரக்கிளைகளிலும் பெருங் கூட்டம் மொய்த்துக் கிடந்தது. அவர்கள் தேரைத் தொட்டு வணங்குவாரும், சீரைப் பாடி வணங்குவாரும் கணக்கில் அடங்கிலர். 

கோழியூர் எனப்படும் உறந்தை நகரில் வழக்கமான திருவிழா, காலம் கடந்துதான் வரும்; அன்று பாரி வந்தமையால் ஒரு திருவிழாவே நிகழ்ந்தது போல் காட்சியளித்தது. 

ஆங்காங்கு நின்று கொண்டிருந்த படைவீரர்களின் புரவிகள் எல்லாம், அவர்களைப் பின் தொடர்ந்து ஓட ஆரம்பித்தன. 

இவ்வளவு மாபெரிய வரவேற்பு சோழ மண்டலம் எங்கணும் வள்ளல் பாரிக்குக் கிடைத்தது என்பது சோழ மன்னன் கண்டராதித்தனுக்கு எட்டிற்று. அரண்மனை பின் நாற் சுவர்களுக்கு நடுவில் அந்த வேங்கை கம்பீரமாக உலாவிக் கொண்டிருந்தது. வருவோர் எல்லாம் பாரிக்கு வாழ்த்துரைத்து செய்தி கொணர்ந்தனர். சோழ மன்னனுக்கு இது ஏற்கனவே அலுத்துப் போன ஒன்றுதான். 

பாடுகின்ற நாவெல்லாம் பாரியின் புகழையே பாடுவதையும், பேசுகின்ற நாவெல்லாம் அவன் புகழையே பேசுவதையும் கேட்டுக் கேட்டு அலுத்தவன் தான் சோழ மன்னன். சோழ மன்னன் மட்டுமா! சேர மண்டலத்தான், பாண்டிய மண்டலத்தான் அனைவருமே இதில் அலுப்புற்று இருந்தவர்கள் தான். ஆயினும், தனது நாட்டுக்கு விருந்தாளியாக வந்துள்ள ஒருவனை, தான் சிறப்பிக்க வேண்டும் என்ற முறையிலே அவனை எதிர்கொண்டு அழைக்கத் தயாரானான், சோழமன்னன் கண்டராதித்தன். 

வாயில் காப்போர் சுறுசுறுப்பு அடைந்தனர். படை வீரர்கள் நடைபாவாடை விரித்தனர். “வருகிறது பாரியின் தேர், வருகிறது பாரியின் தேர்” என்ற முழக்கம் எங்கும் எழுந்துகொண்டே இருந்தது. 

“உறந்தை நகர் முழுவதும் பாரியின் பக்கம் திரும்பிவிட்டதோ, பாரி படை இல்லாமலே வென்று விட்டானோ” என்ற ஐயம்கூட சோழ மன்னனுக்கு எழுந்தது.

பாரியின் தேர் வாயிலைக் கடந்து கோட்டை மதிலின் உள்ளே நுழையும்போது அந்த வாயிலிலேயே அவனை வரவேற்க சோழ மன்னன் வந்திருந்தான். இது மரபு இல்லைதான்! ஆயினும் பாரியின் உயர் தன்மையை ஒப்பிட்டுப் பார்க்குங்கால் சோழ மன்னன் அல்ல; உலகத்துப் பேரரசர்கள் அனைவரும் வந்து வரவேற்க வேண்டியவர்களே என்றுதான் கூடி இருந்த மக்களுக்குத் தோன்றிற்று. 

அரண்மனை நிலா முற்றத்தில் அரசவை விருந்து. நூற்றுக்கணக்கான அமைச்சர்கள், அவைத் தலைவர்கள் அனைவரும் கூடி இருந்தார்கள். எண் பேராயமும், ஐம்பெரும் குழுவும் அங்கே தவறாமல் வந்திருந்தன. வேறு வேலைகள் காரணமாக வெளியூர் சென்று இருந்தவர்கள் கூட பாரி மன்னன் வருகிறான் என்று கேட்டு ஊர் திரும்பி இருந்தார்கள்.

பாரி மன்னனைக் காணவேண்டும். அவன் பாதம் தொட்டுப் பணியவேண்டும் என்று வந்திருந்த பருவ மங்கையரும், வயதான மாதரும் மிக அதிகமாக இருந்தனர். 

இந்த நெரிசலுக்கு இடையில் சோழமன்னனின் தோற்றம் மிகச் சிறியதாகவே இருந்தது. அந்தச் சிறிய தோற்றத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டியவனாகவே சோழ மன்னன் இருந்தான். 

நிலா முற்றத்தில் விருந்தினர் மட்டுமின்றி, வெளியில் இருந்தும் வந்த பெருந்தனக்காரர்கள் கூட பெருமளவு கூடி இருந்தார்கள். அவர்கள் அனைவரும் “வள்ளல் பாரி வாழ்க! வள்ளல் பாரி வாழ்க!” என்று முழக்கமிட்டார்கள். 

விருந்தின் முன்னம் எழுந்து பாடத் தொடங்கினான், ஒரு புலவன். “மாரி பொய்த்து விட்டது சோழ மண்டலத்திலே என்று நாம் வருந்தினோம்.மாரி பொய்ப்பினும் என்ன, பாரி உள்ளவரை வாரி வழங்குவான்” என்றவன் பாடினான்.

“பாரி, பாரி, பாரி ! இதுதானா எங்கு பார்த்தாலும் பேச்சு?” – சோழ மன்னன் மனது கசந்தே இருந்தது. ஆயினும் சம்பிரதாயங்களுக்காக, ஒப்பு மரபுகளுக்காக அவன் சற்று அமைதியாகவே இருந்தான்.

விருந்திலே அங்கவையும், சங்கவையும் அழகான ஒரு தமிழ்ப் பாடலைப் பாடினார்கள். அந்தத் தமிழ்ப் பாடலுக்கு ஏற்ப சோழ மண்டலத்து நடனகுமாரி ஒருத்தி நாட்டியம் ஆடினாள். 

“அங்கவை, சங்கவை என்று இரண்டு பெண்கள் தங்களுக்கு உண்டு என்பது எனக்குத் தெரியும். அவர்கள் இவ்வளவு அழகாகப் பாடுவார்கள் என்பதனை இன்றுதான் நான் கேட்டேன்” என்றான் சோழ மன்னன்.

“பாடல் என்பது தமிழ் கற்றுத் தந்த ஒரு கலைதான். உவகையில் பாடலும் ஒன்று என்பதனை நாம் நன்றாக அறிவோம். அந்தப் பாடலை என் மக்களும் பயின்று கொள்ள வேண்டும் என்ற ஆசையிலேதான் பயிற்றுவித்தேன். அவர்கள் எங்கும் போய் பாடிப்பிழைக்க வேண்டிய அவசியம் இதுவரையிலே நேர்ந்தது இல்லை. அப்படி ஒன்று நேருமானால் அதற்கு அவர்கள் கூச்சப்பட, வெட்கப்படத் தேவை இல்லை என்பதற்காகவே இதனை அவர்களுக்குக் கற்றுத் தந்தேன்!” என்றான் பாரி.

“பாரியின் மக்களுக்கு அந்த நிலைமை நேருமா? நேராது. அஞ்ச வேண்டிய அவசியமே இல்லையே!” என்றான் சோழ மன்னன். 

“இல்லை. யாருக்கு எது நேரும் என்பது இயற்கை மட்டுமே அறிந்த ஒன்றாகும். இறை உணர்வு உள்ளவர்களுக்குக்கூட தங்களுக்கு என்ன வரப்போகிறது என்பதை உணர்ந்து கொள்ளக் கூடிய சக்தி கிடையாது. ஆகவே எது நேரினும் அதைத் தாங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றலைப் பெண்மக்கள் பெற்றிருக்க வேண்டும் என்றுதான் அவர்களுக்குப் பயிற்றுவித்தேன்” என்றான் பாரி. 

“நல்லது. இன்னும் இரண்டு நாட்கள் இங்கே தங்கி நீங்கள் ஆடிப் பெருக்கில் மூழ்கி எழுந்து பிறகு தான் போக வேண்டும்” என்று உண்மையிலேயே கேட்டுக் கொண்டான், சோழமன்னன். 

பாரிமீது அவனுக்கு அன்பும் ஏற்பட்டது. நாட்டு மக்கள் பக்தி செலுத்துகிறார்களே என்பதால் அதை மதிக்க பெருந்தன்மையும் ஏற்பட்டது. 

“இருந்தே போகிறேன். இந்த விருந்தையும், இந்த மககளுடைய அற்புதமான அன்பையும் கண்ட பிறகு இங்கேயே இருந்து விடலாமா என்று கூட எனக்குத் தோன்றுகிறது. ஆயினும் நாட்டுக்கான கடமைகளும் இருப்பதால்தான் திரும்பிச் செல்ல வேண்டியவனாக இருக்கிறேன். மன்னன் என்ற முறையிலே அல்லாது வணிகன் என்ற முறையிலேயானால் நான் இங்கேயே தங்கிவிடுவதில் பெரும் உற்சாகமடைவேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான், பாரி. 

“நல்லது. தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடம், அமைதியான ஒரு சூழ்நிலையில் காவிரிக் கரையிலேயே அமைந்து உள்ளது. அங்கேயே தாங்கள் தங்கலாம்” என்றான் சோழ மன்னன். 

“மிக்க நன்றி” என்று அவர்கள் விடைபெறும் போது, “தளபதி” என்றழைத்தான் சோழன். 

உடனே தளபதி செங்கணான் அங்கே வந்து நின்றான். வந்து நின்ற தளபதி செங்கணான், மன்னன் உத்தரவிடும் முன்னரே அவர்கள் தங்க விருக்கும் அந்த மண்டபத்தை வருணிக்கத் தொடங்கினான். 

”காவிரியின் சலசல சத்தம், நாணல் காடுகளுக்குள்ளே முயல்களும், மான்களும் ஓடுகின்ற அரவம், தென்றல் காற்றின் இனிய ஓசை, இவற்றைத் தவிர வேறு ஓசையே இல்லாத இடம் அந்த இடம். அதிலே அற்புதமான கருங்கற்களால் கட்டப்பட்டது அந்த மண்டபம். சற்று நேரம் அங்கு சாய்ந்திருந்தால்கூட நாள் முழுதும் தூங்கலாமா என்று தோன்றும். இவ்வளவு கலையழகு படைத்த மண்டபத்தை மன்னவர் தங்களுக்காகவே கட்டியுள்ளார். தாங்கள் அங்கே தான் தங்க இருக்கின்றீர்கள். தங்களுக்கு பணிவிடை செய்வதற்காக நாங்கள் வேறு தோழியரை நியமிக்கவில்லை. என்னுடைய உடன் பிறந்த சகோதரியே தங்களுக்கும், தங்களுடைய மக்களுக்கும் துணையாக இருந்து வருவாள்” என்றான் அவன். 

“மிகவும் நலமே. அவரது பெயர்!” என்று கேட்டாள் அங்கவை. 

“கதலி” என்றான் செங்கணான். 

“ஓ, கதலி. அது தான் தேய்ந்து பிறருக்கு. உதவுகிறது. தன் அங்கம் முழுவதையும் பிறருக்கு உடைமையாக்குவது இந்த கதலி என்கின்ற வாழை ஒன்றே. அதையே பெயராகக் கொண்ட தங்களுடைய உடன் பிறந்தாளை நாங்கள் எங்கள் கூடவே வைத்துக் கொள்வதில் பெருமை அடைகிறோம்” என்றாள் சங்கவை. 

“அவள் நன்றாக தாயம் ஆடுவாள். கற்பனையில் பாடல்கள் இயற்றுவாள். தங்களுக்குப் பொழுது போவதே தெரியாது” என்றான் செங்கணான். 

“அப்படியே ஆகுக! பறம்பு மண்டலத்தில் நாங்கள் இயற்கையையே தோழிகளாகக் கொண்டிருக்கிறோம்! அங்கே எங்களுக்கு பொழுதுபோவது தெரியாது. அந்த இயற்கை மவுனமாகவே எங்களை அணைத்து அன்புகாட்டி, தாலாட்டுப் பாடுகிறது. ஆனால் தங்கள் உடன் பிறந்தாள் அதனைவிட உயர்ந்தவள் என்பதனை எங்களால் உணர முடிகிறது. எவ்வளவு விரைவில் அவளை அனுப்ப முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டு வந்து சேருங்கள்” என்றாள் அங்கவை. 

சோழ மன்னன் சிரித்தான். “பெண்களுக்கு பேச்சுக்கு ஆள் இருந்தால் போதுமே! வாழ்க்கை முழுவதையும் அந்த சுவையிலேயே கழித்து விடுவார்களே” என்றான். 

“தமிழ்த் திறமை உள்ள தோழியர் குறைவாய் உள்ள சூழ்நிலையில் வளர்ந்தவர்கள் அல்லவா! அதனால் சோழ மண்டலத்து தோழியை அவர்கள் பெரிதும் நேசிக்கிறார்கள்” என்றான் வள்ளல் பாரி. 

“ம்! எனக்கு ஒரு மகள் இருந்தால், அவளையே அனுப்பி இருப்பேன். ஆனால் இல்லை! இல்லாதது குறை இல்லை. கதலியை நான் என் மகளாகவே வளர்த்து வந்திருக்கிறேன். அவளை மணம் முடித்துக் கொடுப்பதும் என்னுடைய கடமையாகவே கொண்டு இருக்கிறேன். உங்களோடு அவளை தங்க வைப்பதில் நான் பெருமிதம் அடைகிறேன்” என்றான் சோழன். 

“நாம் புறப்படலாமா” என்றான் செங்கணான். 

“ம்! விரைந்து புறப்படுங்கள்! அங்கே விளக்குகளிலே ஏதேனும் குறையிருந்தாலும் வேறு விதமான வசதிகளில் ஏதேனும் குறையிருந்தாலும் எனக்கு உடனே அறிவியுங்கள். செங்கணான்! நீ நள்ளிரவு வரை அவர்கள் கூட இருந்து விட்டு, பிறகு விடை பெறலாம்! முதல் நாள் அல்லவா!” என்றான் சோழன். 

வள்ளல் பாரியும் பிறரும் அங்கு நிற்கும் வரை சுற்றி நின்றவர்கள் யாவருமே அவ்விடத்தை விட்டு அசையவில்லை. அவர்கள் அனைவருமே வள்ளல் பாரியை இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தார்கள். வள்ளல் பாரி தேரில் ஏறிய பிறகுதான் அந்தக் கூட்டம் கலைந்தது. 

அது வெறும் கூட்டமாகவா கலைந்தது? ஆரவாரத்தோடு பாடல்கள் பாடி, ‘வாழிய பாரி’ என்று முழங்கியவாறே கலைந்தது. அந்தக் கூட்டத்தின் ஆரவாரத்தையும் உற்சாகத்தையும் கண்டு சோழ மன்னன் அப்போதைக்கு ஆத்திரம் அடையவில்லை. 

ஆனால், யாரும் ஆத்திரம் அடையக் கூடிய சூழ்நிலை இதுதான் என்று, ஏனோ அவனுக்குத் தோன்றிற்று.

– தொடரும்…

– பாரிமலைக் கொடி (நாவல்), முதற் பதிப்பு: 1993, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *