கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 29, 2024
பார்வையிட்டோர்: 3,425 
 

(2002ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம்-5

கண்ணீர், தலையணையை நனைக்க, சத்தம் வராமல் அழுதாள், அஸ்வினி.

‘இப்போது நான் என்ன செய்யப் போறேன்? அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார். அவருடைய உடல் நிலை அவருக்கு பயத்தை உண்டாக்கிவிட்டது. என்ன காரணத்தைச் சொல்லித் தடுத்தாலும் கேட்கும் நிலையில் அப்பா இல்லை. அவர் நிலையில் யார் இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள். எப்படியும் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் அம்மாவும் அப்பாவும் தீவிரமாய் இருக்கிறார்கள். 

அப்படியானால் பரத்? மனசுக்குள் காதலால் அரித்துக் கொண்டிருக்கிற அவரை எப்படி மறக்க முடியும்? அவரைச் சந்தித்துப் பேசலாமா? என்னவென்று பேசுவது?” 

‘வீட்டில் வரன் பார்க்கிறார்கள் என்று கூறலாமா? சே. ‘பார்க்கட்டுமே… அதற்கென்ன?’ என்று பதில் கூறிவிட்டால்? நான் ஏன் எதிர்மறையாகவே யோசிக்கிறேன்? அவர் என்னைப் பார்த்த பார்வையிலேயே காதல் தெரிந்ததே!’ 

‘சிலர் சாதாரணமாகப் பார்ப்பதே காதல் ததும்பத்தான் இருக்கும். அதைக்காதல் என்று எடுத்துக்கொள்ள முடியாதே! அப்படி பரத் என்னைக் காதலித்தால் தைரியமாய் ‘ஐ லவ் யூ’ என்று கூறியிருப்பாரே!’

‘மண்டு! நீ அழகாயிருக்கிற ஒரே காரணத்திற்காக ஒரு கோடீஸ்வரன் காதலித்து விடுவானா? அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்துவரும். அவன் நினைத்தால் பேரழகியாய் மனைவியைத் தேர்வு செய்வானே?’

‘அவ்வளவு ஏன்? என்னைவிட அமுதா அழகிதான். பணக்காரப் பெண். சொந்த அத்தைப் பெண். அவளை விட்டுவிட்டு என்னைக் காதலிப்பானா என்ன? இது என் அதீத கற்பனையோ? என்னைப் போன்ற நடுத்தரக் குடும்பத்து இளம் பெண்கள், ராஜகுமாரன் குதிரையில் வந்து தன்னைக் கவர்ந்து சென்று மணமுடிப்பான் என்று காணும் அதே கனவை நானும் காண்கிறேனோ?’

‘இல்லை… பரத் உன்னை நேசிக்கிறார் என்று இதய மூலையில் ஏதோ ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறதே… ஏன்?’ 

ஒரே பெண்ணின் மனதை இன்னொரு பெண்தான் அறிவாள். அதிலும் அமுதா என் உயிர்த்தோழி. என் மனதைப் பற்றி அவளைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்? பரத் அன்று கல்லூரிக்கே பார்க்க வந்ததை புரிந்துகொண்டவளாயிற்றே? அவளிடம் சொன்னால்… ஏதாவது ஆலோசனை கூறுவாள். பரத்திடம் பேசுவாள். ஆனால், அவள் இப்போது இங்கில்லையே! 

ஏதோ வேண்டுதல் என்று கூறிக் குடும்பத்துடன் ஆலய தரிசனம் செய்யப் புறப்பட்டுப் போய் பத்து நாள் ஆகிறது. திரும்பி வர இன்னும் ஒரு வாரமாகும். 

‘வந்து… உன்னிடம் ஒரு விசயம் சொல்லணும். மர்மமாய் இருக்கட்டும் என்றுதான் சொல்லாமல் மறைத்தேன். தெரிந்தால் ரொம்ப ஆனந்தப்படுவாய்’ என்று கூறிவிட்டுச் சென்றவள், இன்னும் வரவில்லை. அவள் இருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். ஒரு வழியும் புலப்படவில்லையே! என்ன செய்யப் போகிறேன்?’

அந்தப் பேதையின் நெஞ்சம் அரற்றிக்கொண்டே இருந்தது.


சென்னையின் நவீன மருத்துவமனை. 

ஆபரேஷன் தியேட்டர் வாசலில் நிலைகொள்ளாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார், தயாளன்.

என்ன நடக்குமோ,ஏது நடக்குமோ என்கிற பதற்றத்திலேயே உடல் முழுக்க வியர்த்து வழிந்தது. 

நகரத்தின் மிக முக்கியப் புள்ளி; ஐந்து ஆண்டுக்கு முன் கார் விபத்தில் தன் மனைவியையும் மூத்த மகன் மகேந்திரனையும் பறிகொடுத்தவர். 

இப்போது மறுபடியும் விபத்து, இளைய மகன் கோபி. எல்லா விசயத்திலும் வேகம். எண்பதுக்குக் குறையாமல்தான் கார் ஓட்டுவான். தயாளன் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டார். 

கேட்டால்தானே? 

அவர் பயந்ததுபோல்தான் நடந்துவிட்டது. 

லாரி மீது கார் மோதி, அப்பளமாய் நொறுங்கி… கண்ணாடி சில்லுகள் மார்பிலும், வயிற்றிலும், இடுப்பிலுமாய்க் குத்திக் கிழித்து… அதற்கான அறுவை சிகிச்சைதான் நடந்து கொண்டிருந்தது. 

தயாளனுக்கு இதயம் பலகீனமாய் இருந்தது. அதனால் ஓராண்டுக்கு முன்பே கம்பெனி பொறுப்புகளைக் கோபியிடம் ஒப்படைத்துவிட்டார். முன்பைவிட உடம்பு ரொம்பவே தளர்ந்துவிட்டிருந்தது. 

அலுவலக மேலாளர் சித்தரஞ்சன்தான் அவரைத் தேற்றினார். 

“ஒண்ணும் ஆகாது சார்… கவலைப்படாதீங்க…” 

“எப்படி சித்தரஞ்சன்? எப்படி கவலைப்படாம இருக்க முடியும்? என் மனைவியையும். பெரிய மகனையும் விபத்திலே பறிகொடுத்திட்டேன். எங்கே கோபியையும் பறிகொடுத்திடுவேனோன்னு பயமாயிருக்கு!” 

“அப்படியெல்லாம் எதுவும் ஆகாது சார்! தலையிலே அடிபட்டிருந்தாதான் பிரச்சினையே! கடவுள் புண்ணியத் திலே தலையிலே அடிபடலே. வயித்திலேதான் கண்ணாடி சில்லுகள் நிறைய குத்திக் கிழிச்சிருக்குன்னு சொன்னாங்க… அதை எல்லாம் அப்புறப்படுத்தத்தான் ஆபரேஷன் நடக்குது. மத்தபடி எந்த ஆபத்தும் இல்லேன்னு டாக்டர் சொல்லிட்டார். ரத்தம் நிறைய வெளியேறிடுச்சு. தேவையான ரத்தத்துக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. நீங்க கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக்காதீங்க…” பரிவாய், ஆறுதலாய் அவர் சொன்ன வார்த்தைகள், தயாளனை ஓரளவு ஆசுவாசப்படுத்தின. 

இருக்கையில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக்கொண்டு இஷ்ட தெய்வங்களை எல்லாம் வணங்கினார். மேலும் ஒரு மணி நேரம் கடந்தது. ஆபரேஷன் தியேட்டர் கதவு திறந்தது 

களைத்த முகத்துடன் மருத்துவர்கள் ஒருவர்பின் ஒருவராக வெளியே வர தயாளன். ஆர்வமுடன் அவர்களை நோக்கி வந்தார்.

“டாக்டர்…. என் மகன்…” 

“ஆபரேஷன் வெற்றிகரமா முடிஞ்சிடுச்சு. கவலைப் படாதீங்க தயாளன்!” தலைமை மருத்துவர் சீனிவாசன் அவர் நோளில் ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தார். 

“நன்றி டாக்டர்… ரொம்ப நன்றி! என் பிள்ளையை நான் பார்க்கலாமா?” அவர் முகத்தில் நிம்மதி படர்ந்தது. 

மருத்துவர் வெங்கட் அவர் அருகில் வந்தார். 

வெங்கட், கோபியின் கல்லூரித் தோழர் என்பதால் தயாளனுக்கு நன்கு பரிச்சயம். 

“இல்ல… இல்ல சார்! கோபிக்கு நினைவு திரும்ப இரண்டு மணி நேரமாகும். அதுவரைக்கும் பார்க்க அனுமதியில்லை. அதுவரை காத்திருங்க….” 

தயாளன் பதில் கூறாமல் மவுனமானார். 

சீனிவாசன் வெங்கட்டைப் பார்த்துக் கண்களால் சமிஞ்ஞை செய்தார். 

புரிந்துகொண்டவராய் மெல்லதலையசைத்தார், வெங்கட்.

சீனிவாசன், தன் அறையை நோக்கி நடந்தார். வெங்கட், தயாளனின் தோளில் கை வைத்தார். 

“சார்!” 

“என்னப்பா?” 

“தலைமை டாக்டர் உங்ககிட்டே ஒரு முக்கியமான விசயம் பேசணும்னு சொன்னார். வாங்க!” 

“எ…என்ன விசயம்?” சட்டென அவரின் முகம் கலவரத்திற்கு மாறியது. 

“நீங்க பயப்படுறமாதிரி எதுவுமில்லே… இனிமேல் கோபிக்கு எந்த மாதிரி சிகிச்சை தரணும்னு பேசுறதுக்குதான்!”

“ஒரு நிமிசத்திலே பயந்துட்டேன், வெங்கட். வாப்பா போகலாம். சித்தரஞ்சன் நீங்களும் வாங்க!” 

“அவர் அவசியமில்லே… நீங்க மட்டும் வந்தா போதும்!” தயாளன் ஒருமாதிரி பார்த்தபடி பின்தொடர்ந்தார். 

“உக்காருங்க தயாளன்…” என்ற சீனிவாசன், சிறிது நேர தயக்கத்திற்குப் பின் பேசினார். 

அவர் கூறியவற்றைக் கேட்டுத் துடிதுடித்தார், தயாளன்.

அரை மணி நேரம் ஓடியது. 

மனம் கனக்க, கண்களை மூடி தலைகவிழ்ந்து அமர்ந்திருந் தார், தயாளன். 

வெங்கட் ஆறுதலாய் அவர் கையைப் பற்றினார். 

“நீங்களே இப்படி உடைஞ்சு போயிட்டா எப்படி சார்? அப்புறம் கோபிக்கு எப்படி ஆறுதல் சொல்லுவீங்க?” 

“கோபிக்கு ஆறுதல் சொல்றதா? ஐயோ… என்னால அது முடியாது. விசயம் இப்படிப்பட்டதுன்னு தெரிஞ்சா உயிரையே விட்ருவானே? நீங்க சொன்னது தாங்கிக்க கூடிய விசயமா? வெங்கட்… என் குடும்பத்தில் மட்டும் அடுக்கடுக்கா ஏனிந்தச் சோதனை?” அவர் முதுகு குலுங்கியது. 

“தயவுசெஞ்சு அழாதீங்க ! நடக்க வேண்டியதைப் பாருங்க” என்றார், சீனிவாசன். 

“உங்களால முடியலேன்னா… நான் கோபிகிட்டே இதமா இந்த விசயத்தைச் சொல்லட்டுமா?” 

“வேணாம் வெங்கட்…. அவனுக்கு இந்த விசயமே  தெரியக்கூடாது!” 

“இல்லே சார்! கோபிக்கு இந்த விசயம் தெரியுறது நல்லதுன்னு நினைக்கிறேன்.”

“எப்படி வெங்கட்? தாங்கிக்கிற விசயமா இது? வேணாம். என் பிள்ளைக்கு இது தெரியவேகூடாது”. 

“பிறகெப்படி?” 

“என் பிள்ளையோட மகிழ்ச்சிதான் எனக்கு முக்கியம். அவனுக்காகத்தான் நான் வாழுறேன். எனக்குள்ளே அவளைப் பற்றி நிறைய கனவுகள் இருக்கு. நாலு பேரைப் போல அவனும் கல்யாணம் பண்ணிக்கிட்டு…” 

“இந்த நிலைமையிலே கோபிக்குக் கல்யாணமா?” வெங்கட் முகம் அதிர்ச்சியாய் மாறியது. 

“புரியுது. ஒரு பொண்ணோட வாழ்க்கையிலே விளையாடணுமான்னு கேட்கப் போறே! அப்படித்தானே? ஆமாம். விளையாடத்தான் போறேன். என் பிள்ளையோட வாழ்க்கையிலே அந்தக் கடவுள் விளையாடலே? என் வம்சமே இல்லாம போகப்போகுதே… அதைவிடவா இது பெரிசு? இருக்கிறவரைக்கும் கோபி ஆனந்தமா இருந்துட்டுப் போகட்டுமே!” 

“எத்தனை நாளைக்கு மறைக்க முடியும் சார்? கோபி, வேறு டாக்டரைப் பார்த்தால் உண்மை தெரிஞ்சிடுமே…” 

“அதைப் பிறகு பார்த்துக்கலாம். நான் சமாளிச்சுக்கிறேன். ஆனா, தயவு செய்து இந்த விசயத்தைக் கோபிக்கோ, மத்தவங்களுக்கோ தெரியாம பார்த்துக்கிறது..” 

“எங்க பொறுப்பு! கவலைப்படாம போய்வாங்க சார்! டாக்டர் தொழிலுங்கிறது கத்தியை எடுத்துச் சதையை அனுத்துக் கூறு போடறதுதான். அதனால மனிதாபிமானம் இல்லாம போயிடாது. உங்க உணர்வுகளைப் புரிஞ்சு மதிப்பளிக்கிற மனுசங்கதான் நாங்களும்!” என்றார், சீனிவாசன். 

“நன்றி டாக்டர்!” நெடியதொரு பெருமூச்சுடன் எழுந்தார், தயாளன். 

அத்தியாயம்-6

கோபி, தேறி எழுந்து நடமாடினான். 

மகனைப் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சு, பாறாங் கல்லாய்க் கனத்தது. என்றாலும் அவன் எதிரே தன் வேதனையை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நடந்தார், தந்தை தயாளன். 

“நாளையிலேருந்து நான் ஆபிசுக்குப் போகலாம்னு இருக்கேன்ப்பா” என்றான், கோபி. 

வேலைக்காரி கொண்டுவந்த ஆப்பிள் பழச்சாற்றை வாங்கி மகனிடம் கொடுத்தவர், “ஏன் கோபி? அதற்கு என்ன அவசரம்? இன்னும் ஒரு மாசம் போகட்டுமே!” 

“இல்லப்பா! வீட்லே ரொம்ப போரடிக்குது. மூணு மாசம் படுக்கை வாசம். இதுக்கு மேலேயும் தாங்காது. இப்ப நான் ரொம்ப நல்லாயிருக்கேன்… பாவம், நீங்கதான் சோர்வாயிட்டீங்க… அம்மா இருந்திருந்தால்கூட உங்க அளவுக்கு என்னைக் கவனிச்சிருப்பாங்களாங்கிறது சந்தேகம்தான்! நீங்களும் இதய நோயாளி… உங்களுக்கும் ஓய்வு தேவை!” 

“நான் உனக்காகத்தானே வாழ்ந்துக்கிட்டிருக்கேன், கோபி. உனக்கு ஒண்ணுன்னா என்னால தாங்கிக்க முடியாதுப்பா!” தழுதழுத்தார். 

“நான்தான் நல்லாயிட்டேனேப்பா…. ஏன் கவலைப்படுறீங்க….!” என்றான், இதமான குரலில்.

“கோபி!” 

“என்னப்பா….?” 

“உன்னைப் பக்கத்திலே இருந்து கவனிச்சுக்க ஒரு பொண்ணு அவசியம்!”

“நர்சு நியமிக்கப் போறீங்களா? எனக்கு ஒண்ணும் இல்லப்பா!” 

“நான் நர்சைச் சொல்லலே!” 

“பின்னே…?” 

“உனக்கொரு மனைவியை!” 

“என்னப்பா சொல்றீங்க…?” 

“ஆமாம் கோபி… இப்ப உனக்கொரு துணை அவசியம். இந்தக் குடும்பத்துக்கு ஒரு மகாலட்சுமி வேணும். நம்மளை மாதிரி வசதியான வீட்டுப் பொண்ணுங்க தொட்டதுக் கெல்லாம் வேலைக்காரங்களை வச்சுக்கிட்டு கணவனோட அன்பை முழுசா அனுபவிக்கத் தெரியாம நடந்துக்கிறாங்க… அதனால், ஒரு ஏழைப் பொண்ணுதான் உனக்கு மனைவியா வரணும்னு ஆசைப்படுறேன். தரகர்கிட்டேயும் பொண்ணு பார்க்கச் சொல்லிட்டேன். நீ என்ன சொல்றே கோபி?” 

“உங்களை மீறி நான் எந்த முடிவும் எடுக்கமாட்டேன்ப்பா! என் கல்யாணம் உங்க விருப்பப்படி நடக்கணும்னுதான் காதல், கத்திரிக்காய்னு எதிலும் மாட்டாம இருக்கேன். ஆனா, ஏழைப் பொண்ணுதான் மருமகளா வரணும்னு ஆசைப்படுறீங்களே… உங்களுக்குப் பெரிய மனசுப்பா!” 

“அவகிட்டேதான்ப்பா… அன்பு நிறைய இருக்கும். பிரச்சினை அது இதுன்னு வந்தால்கூட  வாயைத் திறக்கமாட்டா!” 

“என்ன பிரச்சினை வரும்?” 

“அ..அது… ஒண்ணுமில்லே… சும்மா பேச்சுக்குச் சொன்னேன்!” சமாளித்தார். 


தரகர் பணிவாய்ச் சில படங்களை நீட்ட, வாங்கிப் பார்த்தார், தயாளன். பக்கத்தில் கோபியும் அமர்ந்திருந்தான். 

“நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்கக்கூடாது. மாப்பிள்ளையோட படத்தைப் பார்த்ததும் ஏகப்பட்ட பணக்காரவீட்டு வரனெல்லாம். ‘இங்கேயே முடிச்சிருப்பா’ன்னு போட்டி போடுறாங்க. ஆனா, ஏழைப் பொண்ணு தான் வேணுமின்னு நீங்க பிடிவாதமா இருக்கிறதுதான் ஆச்சரியமாயிருக்கு!” 

“இதிலென்ன ஆச்சரியம்? பணக்கார சம்பந்தம்தான் வேணும்னா உன் உதவியே. எனக்குத் தேவையில்லை. ஒரு போன் பண்ணினாலே போதும். என் வட்டாரத்துல ஏகப்பட்ட வரன் இருக்கும். பணம் என்கிட்டே நிறைய இருக்கு. அடக்கமா, பணிவா ஒரு ஏழைப் பெண் என் மருமகளா வரணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு? அட…இந்தப் பொண்ணு நல்லாயிருக்கே?” படங்களை பார்த்துக் கொண்டே பேசியவரின் முகம், அந்தப் படத்தைப் பார்த்ததும் பிரகாசமானது. 

“கோபி, இந்தப் படத்தைப் பார்… பிடிச்சிருக்கா”. 

வாங்கிப் பார்த்தவனுக்கு பார்த்ததுமே பிடித்துப்போனது.

“பிடிச்சிருக்குப்பா” 

“அப்ப சரி,தரகரே… இந்தப் பொண்ணோட குடும்பத்தைப் பத்தி…!” 

“பேரு அஸ்வினிங்க… படிச்சுக்கிட்டிருக்கு…” என்று விளக்கமாய்ச் சொன்னார். 

தயாளனுக்கு அவர் சொன்ன தகவல் திருப்தியாய் இருந்தது.

“இந்த இடத்தையே முடிச்சிடு!” 


கல்லுரிக்குக் கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருந்த அஸ்வினியிடம் வந்தாள், செண்பகம். 

மகளின் முகத்தை திருஷ்டி கழித்து சொடக்கிட்டாள்.

“என்னம்மா?” ஆச்சரியமாய் பார்த்தாள், அஸ்வினி.

“போன பிறவியில் நீ பெரிய புண்ணியம் பண்ணி இருக்கே… இல்லேன்னா வீடு தேடி ராஜ வாழ்க்கை வருமா?”

“என்ன சொல்றே நீ?” 

“ஒரு பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையுறது சாதாரண விசயமா? குமாஸ்தா வேலை செய்யுற வரன்கூட ஆயிரத்தெட்டு நிபந்தனை போட்டு, இல்லாத அலம்பல் பண்ணி, அது இதுன்னு கேட்டு பொண்ணைப் பெத்தவங்களை மொட்டை அடிக்கிற இந்தக் காலத்துல… பெரிய பணக்கார வீட்டுச் சம்பந்தம் வீடு தேடிவருதுன்னா சும்மாவா?” என்றபடி தயாளனின் பெருமையை, கோபியின் அழகை, குணத்தை வர்ணித்தாள், செண்பகம். 

அஸ்வினிக்குத் தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. 

“படத்தைப் பாருடி! நடிகர் விக்ரம் மாதிரியில்லே? உங்கப்பாவுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. அவர் கால் தரையிலே படலே” அளவுக்குமீறிய மகிழ்ச்சியில் செண்பகம். பேசிக்கொண்டே போக… 

தத்தளித்தாள், அஸ்வினி. 

அந்தப் படத்தை ஏறிட்டுப் பார்க்கக்கூட அவளால் முடியவில்லை. அம்மாவிடம் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் தடுமாறினாள். 

‘கல்யாணத்திற்கு இப்ப என்ன அவசரம்?’ என்று கேட்டுத் தள்ளிவைக்க முடியாது.

சூழ்நிலை அப்படி! 

முடிவு செய்துவிட்டார்கள். மாறுவது… மாற்றுவதுகடினம். ஆனால், என்னால் பரத்தை மறக்கமுடியாதே! அவருடன் கற்பனையில் நடத்திய வாழ்க்கையெல்லாம் கானல் நீர்தானா? இந்த மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்று தவிர்த்தாலும், வீட்டார் விடப்போவதில்லை. கற்பனையில் கூட நினைத்துப் பார்க்கமுடியாத பெரிய இடத்துச் சம்பந்தம். என்னைக் கட்டிப்போட்டாவது கல்யாணம் பண்ணி வைத்துவிடுவார்கள். 

தயாளன்- பிரபலமான தொழிலதிபர். 

‘அவ்வளவு பெரிய மனிதர், ஒரு மூலையில் மாதச் சம்பளக்காரருக்கு மகளாய்ப் பிறந்து, கணக்குப் போட்டுக் குடும்பம் நடத்தும் சாதாரண வீட்டில் பிறந்த என்னை, ஏன் இன் மாளிகைக்கு மருமகளாய்த் தேர்வு செய்தார்?’ 

அஸ்வினிக்குப் புரியவில்லை. 

“மாமி…” என்றபடி மான்குட்டியாய் ஓடிவந்தாள், அமுதா.

“வாம்மா அமுதா,” 

“என்ன மாமி, ரொம்ப மகிழ்ச்சியா இருக்கீங்க போல…”

“ஆமாம்மா… கடவுள் எங்களை ஒருபக்கம் சோதிச்சாலும், இன்னொரு பக்கம் நல்லது பண்றார். அஸ்வினிக்குக் கல்யாணம் முடிவாயிடுச்சும்மா. மாப்பிள்ளை ரொம்ப பெரிய இடம்..” 

“உண்மையாவா சொல்றீங்க?” உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்தாள். 

“ஆமாம்மா. இதுதான் மாப்பிள்ளையோட படம்! பேரு கோபி!” 

“காட்டுங்க!” ஆர்வமாய் வாங்கிப் பார்த்தவள், அசந்து போனாள். 

“வாவ்! சூப்பர்! மாப்பிள்ளை வெளியூரா? உள்ளூரா?”

“இதே ஊர்தான்!” 

“ஓ… ரொம்ப நல்லது!” என்றவள், அஸ்வினியைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டாள். 

“வாழ்த்துகள் அஸ்வினி! கோபி ரொம்ப அழகா இருக்காரு. உனக்கு ஏத்த ஜோடி. கல்யாணம் நம்மளைப் பிரிச்சிடுமோன்னு ரொம்ப பயந்துகிட்டிருந்தேன். ஆனா, நம்மளை யாராலும் பிரிக்க முடியாது. எனக்கும் கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க. எனக்குப் பார்த்திருக்கிறமாப்பிள்ளையும் இதே ஊர்தாள்!” 

“மெய்யாவா? யார் அந்த அதிருஷ்டசாலி?” 

“உடனே சொல்லிட்டா எப்படி? அப்புறமா சொல்றேன். நிச்சயதார்த்தம் ஆனதும் முதல் வேலையா நம்ம மாப்பிள்ளைகள் ரெண்டு பேரையும் அறிமுகப்படுத்தி வச்சு நண்பர்களாக்கிடணும்!” 

அஸ்வினிக்குக் குழப்பமாக இருந்தது.

‘என் கல்யாண விசயம் கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடையாமல் துள்ளிக் குதிக்கிறாளே ! பரத் அன்று என்னைக் கல்லூரியில் பார்க்க வந்ததை, தன் காதலியைப் பார்க்க வந்தார் என்று யூகித்துச் சொன்னாளே! பிறகெதற்கு இந்த வரனை வரவேற்றுப் பேசுகிறாள்? ஊகூம்… இனியும் வாயை மூடிக்கொண்டிருப்பதில் பயனில்லை. இன்று எப்படியாவது பரத்தைப் பற்றி இவளிடம் பேசிவிட வேண்டும். அல்லது பரத்திடமாவது பேசவேண்டும். அவன் மனதில் நான் இருக்கிறேனா என்பதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். 

முடிவு செய்தாள். 


இருவரும் கல்லூரிக்குப் புறப்பட்டனர். 

எதிர்க்காற்றில் பரபரத்த கூந்தல் கற்றைகளை லாவகமாக ஒதுக்கிக்கொண்டாள், அஸ்வினி. 

“உனக்குக் கல்யாணம் முடிவான விசயத்தை இவ்வளவு நாளா ஏன் சொல்லலே அமுதா?” 

“இன்னும் முழுசா முடிவு பண்ணலே. ஆனா, கிட்டத்தட்ட முடிவான விசயம்தான்!” 

“வீட்டுல முடிவுபண்ணினதா? இல்ல… எனக்கே தெரியாம காதல் ஏதாவது?’ 

“கிட்டத்தட்ட ரெண்டும்தான்!” 

“அடிப்பாவி. உன் காதலைக்கூட என்கிட்டே மறைச்சிட்டியா?” 

“மறைக்கணும்னு இல்லே. எனக்கே அதிலே குழப்பமா இருந்தது. அவர் பக்கத்துலேயும் சம்மதம்னு அறிகுறி தெரிஞ்ச பிறகுதான் நிம்மதியாச்சு. எனக்கு அவரைப் பிடிச்சிருந்தது ஒருபக்கம் என்றாலும், எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணணும்னு பெரியவங்க முன்னாடியே முடிவு பண்ணிட்டாங்க!” 

“நீ யாரைச் சொல்றே?” அஸ்வினிக்குள் பதற்றம் உருவானது. 

“மன்னிச்சிடு…. அது ரகசியம்” என்றவள் வேறு சாலையில் வண்டியைத் திருப்பினாள். 

“எங்கே போறே?” 

“பரத் ஆபீசுக்கு!” 

“ஏன்?” 

“எல்லாம் காரணமாத்தான்! உன்னைப் பற்றி அவர் கிட்டே சொல்லணும். பெரிய இடத்துச் சம்பந்தம் கிடைச்சும் உன் முகத்திலே சிரிப்பு இல்லே. அதுக்கு என்ன காரணம்னு எனக்கு மட்டும்தானே தெரியும்? பரத்கிட்டே பேசி நல்ல பதிலை வாங்கித் தர்றேன் வா!” என்றாள். 

அதுவரை இருந்த கலக்கமெல்லாம் அகல… ‘குப்’பென மலர்ந்தாள், அஸ்வினி.

– தொடரும்…

– மாலை மயக்கம் (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 2002, ராணி முத்து, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *