மை லிட்டில் ரெட் வேகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 30, 2023
பார்வையிட்டோர்: 2,038 
 

(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாற்றுடைகளைத் தோளில் போட்டுக்கொண்டு துவாலையும் கையுமாகக் குளிக்கக் கிளம்பிக் கொண்டிருந்தார் பானுமதி. அவரது கணவர் சுந்தர் ‘ஜெயா பிளஸ்’ செய்தி பார்த்துக் கொண்டிருந்தார். 

செய்திகள் வாசிப்பவர், கட்சியின் இளைஞர் பாசறையைச் சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் இறந்ததாகவும், முதலமைச்சர் அவர் குடும்பத்திற்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகை வழங்கியதாகவும், கட்சி அன்பர்கள் பயணம் செய்யும்பொழுது இனிமேல் மிகவும் கவனத்துடன் இருக்குமாறு முதலமைச்சர் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதாகவும் அறிவித்துக் கொண்டிருந்தார். 

பேரன் ரவி ஹைசேரில் உட்கார்ந்து அதன் ட்ரேயில் பரப்பியிருந்த ஹனி நட் சீரியோஸ்ஸை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.மருமகள் கீதா மாடிப்படிக்கு அடியில் உள்ள க்லோசெட்டில் இருந்து சில அட்டைப் பெட்டிகளை வெளியில் எடுத்து அவற்றில் உள்ளவற்றைப் பரிசோதித்துக் கொண்டிருந்தாள். 

“இப்போ எதுக்கு இதக் கடை வைக்கிற கீதா?” என்று அவற்றை அருகில் வந்து பார்வையிட்ட வண்ணம் கேட்டார் பானுமதி. 

“ரெண்டு நாள் முன்னால கேன்சர் ரிசெர்ச் செய்யிற நிறுவன ஆளுங்க வந்து பழசை நன்கொடையாக் கேட்டு வாசல்கதவில ஒரு பெரிய பிளாஸ்டிக் பை வச்சாங்க அத்தை. இன்னைக்கு அவங்க வண்டில வந்து கொடுக்கிறத சேகரிச்சிட்டுப் போவாங்க. நமக்குத் தேவையில்லாத பொருளையெல்லாம் நடைபாதையில் மூட்டை கட்டிப் போட்டால் எடுத்திட்டுப் போவாங்க.” 

“நல்ல காரியம்தான், நமக்கு உபயோகப்படாதது யாருக்காவது உபயோகமா இருந்தாச் சரி, இவ்ளோ பெரிய பணக்கார நாடான அமெரிக்காவில ஆராய்ச்சி செய்ய அரசாங்கமே பணம் கொடுக்காதா? இப்படிப் பழசு பண்டத்த சேகரிச்சு வித்து, காசாக்கி ஆராய்ச்சி செய்யிற அளவுக்கு மோசமான நிலைமையா?” என்று சொல்லிக் குளியலறைக் கதவைச் சார்த்திக் கொண்டார் பானுமதி. 

“பிளேன தூக்கிட்டுப் போய் அடுத்த நாட்டோட சண்டைக்குப் போகச் சொல்லு, உடனே செய்வாங்க, அதுக்கு மட்டியும் பணம் எங்கிருந்துதான் வருதோ?” என்றார் எரிச்சல் மிகுந்த குரலில் சுந்தர். 

அதைக் கேட்டுச் சிரித்தவண்ணம், அளவில் சிறியதாகிப் போன மகன், மகளின் உடைகளையும், காலணிகளையும், பொம்மைகளையும் எடுத்து, அவற்றில் சேதம் ஆகாமலும் மிகவும் பழையதாகத் தோற்றமளிக்காதவற்றையும் தேர்ந்தெடுத்து அட்டைப் பெட்டிகளில் நிரப்பிக் கொண்டிருந்தாள் கீதா. 

கார் காரேஜின் கதவைத் திறந்து, அதன் வழியாக அப்பெட்டிகளைக் கொண்டு சென்று வீட்டின் முன் உள்ள நடைபாதையில் வைத்தாள். நன்கொடை கேட்ட நிறுவனம் விட்டுச் சென்ற பிங் கலர் பையையும் அதன் மேல் அடையாளத்திற்காகக் கட்டி வைத்தாள். குளித்த பின்பு ஈரத் தலையைத் துவட்டியவாறு வாசலுக்கு வந்த பானுமதி “பொம்மையெல்லாம் கூடவா எடுத்துப்பாங்க?’ என்றார். 

“ஓ, எடுத்துப்பாங்களே” 

“அப்ப இதையும் அதோடபோட்டுடு” என்று கீதாவின் பதிலுக்குக் காத்திராமல், கார் காரேஜில் கிடந்த அவளது பேத்தி ராதிகாவின் ரெட்வேகனைத் தரதரவென இழுத்துச் சென்று நடை பாதையில் மற்றப் பெட்டிகளுக்கருகில் விட்டு விட்டு வந்தார். 

குழந்தை ரவியைத் தோளில் தூக்கிக் கொண்டு வெளியில் வந்த சுந்தர், கீதாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்து, “பானு என்ன இது? ராதிகா அழாதா? திருப்பி எடுத்திட்டு வா” என்றார். 

இதற்குள் தன்னைச் சமாளித்துக் கொண்ட கீதா, “பரவாயில்லை மாமா, அவளும் கொஞ்சம் பெரிய பொண்ணா வளந்திட்டால்ல, காணாமப் போனாக் கொஞ்சம் தேடுவா, அழுவா, அப்புறம் மறந்திடுவா. அப்படியே அழுது அடம் பிடிச்சாலும், அது பழசாயிடுச்சி கிறிஸ்துமஸ் கிஃப்ட்டா வேற வாங்கிக்கலான்னு சொல்லிடலாம்” என்றாள். 

பானுமதியும் சுந்தரும் கோடையில் அமெரிக்காவின் தட்பவெப்பம் நன்றாக இருக்கும் காலமாகப் பார்த்து மகன் பரணியுடன் அமெரிக்காவில் தங்க வந்திருந்தார்கள். இதோ இன்று நவம்பர் முதல் தேதி, செப்டெம்பரில் துவங்கிய குளிர் வர வர அதிகமாகிக் கொண்டிருந்தது. அடுத்த வாரம் கிளம்பி விடுவார்கள். தீபாவளிக்கு இந்தியாவில் இருப்பார்கள். பேரன் பேத்திகளுடன் விளையாடியதில் நாட்கள் ஓடியதே தெரியவில்லை. 

பானுமதிக்கு உலக மகா எரிச்சல் தருவது பேத்தியின் அந்த ரெட்வேகன் பொம்மைதான். இதெல்லாம் என்ன பொம்மைன்னு நீ வாங்கிக் கொடுத்தே என்று மகனிடம் முடைவார். ராதிகாவிற்கு மிகவும் விருப்பமான பொம்மை அவளது அந்தச் சிவப்பு நிற சக்கரங்கள் கொண்ட, நீண்ட கைப்பிடியுடன் இருக்கும் ரெட் வேகன்தான். 

வீட்டிற்குள் அவளது பொம்மைகளை வேகனில் நிரப்பி வைத்திருப்பாள். வெளியில் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடப் போனால் அதில் அவளது “டெட்டி” கரடிப் பொம்மையையும், “டாமி” பூனைப் பொம்மையையும், “மிக்கி மவுஸ்” பொம்மையையும், “ஸ்னூப்பி” நாய் பொம்மையையும் வைத்துச் சவாரி அழைத்துப் போவாள். 

கடற்கரைக்கு விளையாடப் போனாலும் மணல் வீடு கட்டும் பிளாஸ்டிக் உபகரணங்கள் அதில் வைத்துத்தான் இழுக்கப்பட்டு வரும். தபால் பெட்டியில் இருந்து தபால்களைச் சேகரித்து வேகனில் வைத்துத்தான் இழுத்து வருவாள். கடைக்குப் போய் வந்தால், கார் ட்ரங்க்கில் இருந்து சாமான்கள் நிரம்பிய பைகளை அதில் வைத்து இழுத்து வந்து அப்பாவிற்கு உதவி செய்வாள். ஒரு நாள் தம்பி ரவியை வேகனில் வைத்து வீட்டிற்குள் அங்கும் இங்கும் இழுத்து அவள் விளையாடிய பொழுதுதான் எரிச்சல் தாளாமல், கோபம் தலைக்கேறி பானு அவளை அடிக்கவே போய்விட்டார். பிறகு இந்த நாட்டில் இதெல்லாம் செய்தால் கம்பியை எண்ண வேண்டும், வந்த இடத்தில் ஏன் பொல்லாப்பு என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். 

“நம்ம ஊர்ல முடமானவங்களத்தான் இந்த மாதிரி வச்சு இழுத்துக்கிட்டுப் போய்ப் பிச்சை கேக்கிறதப் பார்த்திருக்கேன். பார்க்கவே சகிக்கல, முதல்ல புள்ளைய வண்டில இருந்து தூக்கு” என்று கீதாவிடம் சீறி விழுந்தார். 

நேற்று அக்டோபர் 31 என்று “ஹாலோவின்” (Haloween) கொண்டாடினார்கள் அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள்.  இருட்டிய பிறகு ராதிகாவும் கோமாளி போல உடை உடுத்திக் கொண்டு, கையில் ஆரஞ்சு வண்ணப் பிளாஸ்டிக்கில் கோர முக வடிவம் வரைந்த பூசணிக்காய் பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள். பெரியவர்கள் யாராவது சிறுவர்களுடன் துணைக்குப் போகவேண்டும் என்பதால் பரணியும் கிளம்பினான். 

ஏற்கனவே பேத்தியின் கோமாளி உடையைப் பார்த்துப் பொருமிக் கொண்டிருந்தார் பானு. “நம்மூரில் நவராத்திரிக்கு என்ன அழகாகக் குழந்தைகளை அலங்கரிப்பார்கள், இங்கே பார்த்தால், கோமாளியாம், பேயாம், பிசாசாம், சூனியக்காரியாம் என்ன ஒரு அலங்காரம்? என்ன ஒரு கேவலமான ரசனை? ச்சே…” என்று திட்டிக் கொண்டிருந்தார்.போதாக்குறைக்கு மகனும் உடன் கிளம்ப “நீ எங்கே கிளம்புற?” என்று விரட்டினார். 

“இல்லம்மா, வந்து. நான் துணைக்குப் போகணும்மா…” என்று வார்த்தைகளை மென்று முழுங்கினான் பரணி. 

“அப்பாவும் பொண்ணுமாச் சேர்ந்து வீடு வீடாய்ப் போய் மிட்டாய்ப் பிச்சை வாங்கப் போநீங்களா? நாடு விட்டு நாடு வந்து, அமெரிக்கா வந்து மிட்டாய்ப் பிச்சை எடுக்கணும்னு தலையெழுத்தா? சரி, சரி என்னவோ செய்,நீயாச்சு,உன் பொண்ணாச்சு. ஆனா, இதையெல்லாம் பெருமைன்னு மட்டும் நினைச்சி படம் எடுத்து ஃபேஸ்புக்கிலப் போட்டு என் மானத்த வாங்காத?” என்று திட்டி அனுப்பினார். ராதிகா பூசணிக்காய்ப் பாத்திரத்தை வேகனில் வைத்து இழுத்துக் கொண்டு சென்றாள். இருக்கட்டும் இந்தப் பொம்மையை ஒழிச்சுக் கட்டிட்டுத்தான் மறுவேலை என்று மனத்திற்குள் கருவி கொண்டார். இப்பொழுது அதனைச் செயலிலும் காட்டி விட்டார். 

பானுமதியும் சுந்தரும் வீட்டைச் சுற்றி உள்ள பகுதிகளில் வழக்கம் போல வாக்கிங் சென்றுவரக் கிளம்பி விட்டார்கள். நேரம் காலைப் பத்து மணிபோல இருக்கும், அப்பொழுது தொலைபேசி வந்தது. கீதா எடுத்துப் பேசினாள் அழைப்பு ராதிகாவின் பள்ளியிலிருந்து. ராதிகா பள்ளியில் வாந்தி எடுத்ததால், பள்ளி நர்ஸ் அவளை உடனே வந்து அழைத்துப் போகச் சொன்னார். கீதா பதட்டத்துடன் பரணியின் கைபேசி எண்ணை அழைத்தாள், 

வழக்கம் போலப் பதில் இல்லை. உடனே கூப்பிடுங்கள் என்று செய்தி வைத்தாள். 

ரவிக்கு அவசர அவசரமாக டயாப்பர் மாற்றி காரின் பின்னிருக்கையில் குழந்தையின் கார் சீட்டில் பெல்ட் போட்டுக் கட்டி வைத்தாள். அவன் அழ ஆரம்பிக்கவும் அவனது பாசிஃபயரை மறந்து விட்டது நினைவு வந்தது: 

மீண்டும் உள்ளே ஓடினாள். ராதிகாவிற்கு ஏன் இப்படி உடம்பு சரியில்லாமல் போனது என்ற குழப்பத்தில் அவளால் சரிவரச் சிந்திக்க முடியவில்லை. அவசரத்திற்குத் தொடர்பு கொள்ள முடியாத பரணியின் மீதும் எரிச்சல் வந்தது. 

அவள் காரை ரிவர்ஸ் கியரில் போட்டுக் கேரேஜுக்கு வெளியில் கொண்டு வரும்பொழுது பானுவும் சுந்தரும் வீடு திரும்பிக்கொண்டிருப்பது தெரிந்தது.கீதாவும் குழந்தையும் வெளியில் கிளம்பத் தயாராக இருப்பதைப் பார்த்து அவர்கள் நடையை எட்டிப் போட்டுக் காரை அடைந்தார்கள். 

காரணம் தெரிந்தும், ஐயையோ, என்னாச்சு? நாங்களும் வருகிறோம் என்று காரில் ஏறிக் கொண்டார்கள். 

அந்நேரத்தில் பள்ளிக்கும் வேலைக்கும் செல்பவர்களின் கூட்டம் குறைந்து சாலைச் சிறிது அமைதியாக இருந்தது. 

“காலையில் ராதிகா நல்லாத்தானே இருந்தது, பரணி ஸ்கூல்ல விடறப்போ எப்படி இருந்துச்சாம்?”

“தெரியல அத்தை, அவரோட பேச முடியல, உடனே கூப்பிடச் சொல்லி மெசேஜ் வச்சிருக்கேன்.”

“எல்லாம், ஹாலோவீன், ஹாலோவீன் அப்படின்னு ஆட்டம் போட்டு, கண்ட கண்ட மிட்டாயப் படுக்கப் போறதுக்கு முன்னால கணக்கு வழக்கில்லாம தின்ன வேண்டியது. அப்புறம் உடம்பக் கெடுத்துக்க வேண்டியது. சொன்னா யார் கேக்கிறாங்க, இன்னைக்குப் பரணி வீட்டுக்கு வரட்டும், அவன உண்டு இல்லன்னு ஆக்கிடுறேன்.” 

பானு சொல்வதிலும் உண்மை இருக்கலாம் என்பதால் சுந்தரும் கீதாவும் அமைதியாக இருந்தார்கள். 

அவர்கள் பள்ளிக்குச் சென்றபொழுது மணி பதினொன்றுதான் என்றாலும், காலை நேர பகுதி நேர அரைநாள் கிண்டர்கார்ட்டன் வகுப்புகள் முடியும் நேரம் என்பதால் பார்க்கிங் பகுதியில் கார்களுடன் பெற்றோர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. இடம் தேடிக் காரை நிறுத்திவிட்டு, ரவியைக் காரில் பானுவுடனும், சுந்தருடனும் விட்டு விட்டு பிரின்ஸ்பால் அறையை நோக்கி விரைந்தாள் கீதா. சில வகுப்புகளுக்கு மட்டும் மதிய உணவு நேரம் ஆரம்பித்து அந்த மாணவர்கள் கேஃப்டீரியாவிற்குச் சென்று கொண்டிருந்தார்கள். 

பள்ளி அலுவலகத்தில் ஸ்கூல் நர்ஸ்ஸின் அறைக்கு வழி சொன்னார்கள். கீதா அங்குச் சென்றபொழுது ஒரு ஓரமான நாற்காலியில் ராதிகா உட்கார்ந்திருந்தாள். சோர்ந்திருந்தாலும் அவள் சரியான நிலையில் இருப்பதைப் பார்த்து கீதாவின் மனத்திற்கு நிம்மதி ஏற்பட்டது. 

அவளை வரவேற்ற நர்ஸ், “ராதிகா சரியாகத்தான் இருக்கிறாள், எனக்கு அவள் உணவில் சந்தேகம், வேறு வகையான உணவு எதுவும் கொடுத்தீர்களா? அடுத்தவர்கள் கொடுத்த ஹாலோவீன் மிட்டாய்களை நன்கு பரிசோதித்துவிட்டுத்தானே உண்ண அனுமதித்தீர்கள்? உங்கள் வீட்டுக்கருகில் உள்ள வேறு ஏதாவது குழந்தைகளுக்கும் இப்படி ஏதாவது நடந்ததாகத் தெரிந்தால் உடனே போலீசுக்குத் தகவல் கொடுங்கள். மிட்டாய்களில் நச்சுக் கலக்கும் ஏதாவது கிறுக்கர்களின் சதி வேலையாக இருக்கக்கூடும். வீட்டிற்கு அழைத்துப் போய் ஓய்வு கொடுங்கள். மீண்டும் வாந்தி எடுத்தால் டாக்டரிடம் அழைத்துப் போங்கள்” என்று ஆலோசனைக் கூறினார். 

காரின் பின்னிருக்கையில் ராதிகா பாட்டியின் மடியில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள். தாத்தாவும் பாட்டியும் கவலை நிறைந்த முகத்துடன் அவளது கழுத்தையும் நெற்றியையும் தொட்டுத் தொட்டுக் காய்ச்சல் ஏதும் அடிக்கிறதா என்று பார்த்தார்கள். வீட்டிற்குக் காரைக் கிளப்பும் நேரத்தில் பரணியிடம் இருந்து அழைப்பு வந்தது. 

கீதா அவனுக்கு நிலைமையைச் சொல்லி அவன் வரத் தேவையில்லை, தேவை ஏற்பட்டால் டாக்டரிடமும் அழைத்துச் செல்கிறேன் என்று கூறினாள். 

காரில் வீடு திரும்பும் பொழுது அனைவரும் அமைதியாக இருந்தார்கள். வீடு இருக்கும் சாலைக்குக் காரைத் திருப்பிய பொழுது கீதாவிற்குப் பகீரென்றது. நன்கொடை கேட்டவர்கள் இன்னமும் வந்து நடைபாதையில் வைத்திருந்த பொருட்களைச் சேகரித்துக் கொள்ளவில்லை. கிளம்பிய அவசரத்தில் அதைப் பற்றிய நினைவே இருந்திருக்கவில்லை. கீதா பின்னால் திரும்பி பானுவிடம் கண்ணால் ரெட் வேகனைக் காட்டி ஜாடை செய்தாள். 

பானு, மடியில் படுத்திருந்த ராதிகா தனது தலையைத் தூக்கிவிடாதவாறு அழுத்திக் கொண்டாள். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, எதிரில் வந்த கார் ஒன்று ஒருவீட்டின் காரேஜில் இருந்து சரியாகக் கவனிக்காமல் பின்னோக்கி வந்த காருடன் மோதலைத் தவிர்க்கப் போட்ட சடன் ப்ரேக்கின் ஒலியும், டயர் கிறீச்சிடும் ஒலியும், விபத்தைத் தவிர்த்த கார்காரர் எழுப்பிய எரிச்சல் நிறைந்த கார் ஹாரன் ஒலியும் அவர்கள் திட்டத்தைத் தவிடு பொடியாக்கியது. 

ராதிகா தலையைத் தூக்கிப் பார்த்து விட்டாள். அவளது ரெட் வேகன் மற்ற நடைபாதைப் பொருட்களுடன் இருப்பதையும் பார்த்து விட்டாள். 

“மாம் ஹவ் குட் யு டு திஸ்?” என்றவள் கேள்வியை முடிக்கும் முன் அழத் தொடங்கினாள். 

காரை சாலையில் இருந்து திருப்பிக் கேரஜில் கொண்டு நிறுத்தும் வரை நிலைகொள்ளாமல் இருந்தவள். கார் நின்றவுடன் கதவைத் திறந்து, குதித்து உடனே நடைபாதையை நோக்கி வேகமாக ஓடினாள். குற்ற உணர்ச்சியுடன் தாத்தா, பாட்டி, அம்மா அனைவரும் அவளைத் தொடர்ந்தார்கள். ஆனால் விரைந்து ஓடிய ராதிகா சடாரென நின்றுவிட்டாள். 

அழுக்காடை அணிந்து “ஹோம்லெஸ், வில் வொர்க் ஃபார் ஃ புட்” என்று எழுதிய அட்டையைக் கையில் வைத்திருந்த ஒரு வயதான ஆள் ராதிகாவின் ரெட் வேகன் அருகில் நின்றிருந்தார். தோளில் சுமந்திருந்த அவரது உடைமைகள் நிறைந்த மூட்டையை ரெட் வேகனில் இறக்கி வைத்து இழுக்க ஆரம்பித்தவர் வேகமாக ஓடி வந்திருந்த ராதிகாவின் காலடி ஓசையால் திரும்பினார். அது அவளது வேகன் என்பது அவருக்குச் சட்டெனப் புரிந்துவிட்டது. 

‘சாரி யங் லேடி, ஐ தாட் யு லெஃப்ட் திஸ் வேகன் அஸ் எ டோனஷன், ஃபார்கிவ் மீ. பை தி வே ஐ ஆம் ஜோயி” 

“நைஸ் டு மீட் யு மிஸ்டர் ஜோயி, நெவெர் மைண்ட். ஐ ஜஸ்ட் காட் ஃபெட் அப் வித் தட் டாய் ஆல்ரெடி. ஐ தின்க் தட்ஸ் வொய் மை மாம் லெப்ஃட் தட் அஸ் எ டொனேஷன் ஃபார் தி குட் வில் பீப்பிள் பட், இஃப் யூ லைக் யூ கேன் ஹேவ் இட்” 

தனது உடைமை நிறைந்த மூட்டையை வைத்திருந்த வேகனை இழுத்துக் கொண்டு நகர்ந்த ஜோயி திரும்பிப் பார்த்து, “பை தி வே, சைல்ட். டூ யூ நோ தி மீனிங் ஆஃப் தி சேயிங்?… இட்ஸ் யுவர் லிட்டில் ரெட் வேகன், அண்ட் யூ ஹாவ் டு புல் இட்?” 

“அஃப் கோர்ஸ், ஜோயி, ஐ நோ இட். இட் மீன்ஸ் எவெரி ஒன் மஸ்ட் பி அக்கவுண்ட்டபிள் ஃபார் தேர் ஒன் ஆக்க்ஷன்ஸ்” 

“யூ ஆர் எ ஸ்மார்ட் கிட், தேங்க் யூ. மே காட் ப்ளஸ் யூ மை ஸ்வீட்டி,பை…பை”

“பை…பை…ஜோயி”

– அனிச்ச மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2013, கௌதம் பதிப்பகம், சென்னை.

நன்றி: http://www.FreeTamilEbooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *