சபல மனம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 30, 2023
பார்வையிட்டோர்: 2,135 
 

கருத்தானுக்கு வீடு, காடு, தோட்டம் என ஐந்து தலைமுறைக்கு முன்னவர்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் ஏராளம் இருந்தன. அவரது பெற்றோருக்கு திருமணமாகி பல வருடங்கள் குழந்தையில்லாத நிலையில் கருப்பராயனை வேண்டி பிறந்ததால் கருத்தான் என பெயர் வைத்தனர். 

கருத்தான் நல்ல சிவப்பு நிறத்தில் செல்வச்செழிப்பின் வளம் வனப்பில் மிளிரும் படி வளர்க்கப்பட்டும், படிப்பு மட்டும் ஏறாததால் சிறு வயதிலேயே சம வசதியுள்ள குடும்பத்துப்பெண்ணைத்திருமணம் செய்து வைத்து விட்டனர் அவனது பெற்றோர். மனைவியின் குடும்ப சொத்துக்கள் முழுவதும் தனக்கே சேர வேண்டுமென்ற பேராசையில் மனைவியின் தங்கையையும் தானே மணந்து கொண்டார்.

அனைத்து வேலைகளுக்கும் ஆட்கள் போட்ட நிலையில் வீட்டு வேலைக்கும், தனக்கு கை கால்களைப்பிடித்து விடவும் இளம் வயதுள்ள, மனதுக்குப்பிடித்த சில பெண் வேலைக்காரர்களை அழைத்து வேலை வாங்கிக்கொள்வார். 

வயது அறுபதைத்தாண்டி இரண்டு மனைவியருக்கும் பிறந்த நான்கு குழந்தைகளுக்கும் திருமணமாகிவிட்ட நிலையிலும், இருபத்தைந்து வயது வாலிபரைப்போலவே உடலைப்பேணி வந்தவருக்கு சில சமயம் சபல புத்தி மனதை ஆட்டிப்படைத்து சங்கடத்தை உண்டு பண்ணும்.

இவ்வாறிருக்க ஒரு நாள் மனைவிகள் இருவரும் தங்களது தந்தையின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பிறந்த வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அன்று காலை பிரம்பு சேரில் அமர்ந்து தினசரியை படித்துக்கொண்டிருந்தவருக்கு, வீட்டு வேலைக்கு வந்த பெண் வீட்டைக்கூட்டிக்கொண்டு தனதருகில் உள்ள குப்பைகளைப்பெருக்க வந்த போது தன்னிலை மறந்து, சபலத்தால் அப்பெண்ணின் கையை இறுக்கமாகப்பற்றிட, இதை சற்றும் எதிர் பாராத அப்பெண் பதட்டப்படாமல், அவரது கைககளிலிருந்து விடுபடவும் முயலாமல் “ஏனுங்க முதலாளி என்ற புருசன் உங்க பொண்டாட்டிய இப்படிக்கையைப்புடிச்சா அதுக்கு நீங்க சம்மதிப்பீங்களா…?” என முகத்தில் அறைந்தாற்போல் கேட்ட அந்த ஒரே வார்த்தை, காதில் நெருப்பாய் நுழைந்த அடுத்த நொடி, பாம்புப்புற்றில் கை வைத்தவன் பாம்புக்கடி பட்டதும் இழுக்கும் வேகத்தில், திடீரென தான் ஆசையாய் பற்றியிருந்த அவளது கையை விட்டு சற்று தூரம் விலகி நின்றார்.

“பணத்துக்கு நான் ஆசைப்படறவளா இருந்திருந்தா என்ற அழகுக்கும், வயசுக்கும் இதமாதர நாலு பங்களா வாங்கி கூட்டறதுக்கும், சமைக்கறதுக்கும் நானே வேலைக்கு ஆள் போட்டிருப்பேன். நூறு, எறநூறுக்கு கூலிக்கு வந்து இப்படி குப்பை கூட்டியிருக்க மாட்டேன். ஆடு, மாடு, நாய் மாதர ஆசப்பட்டத நாமளும் செஞ்சம்னா அதுகளுக்கும், மனுசங்களுக்கும் வித்தியாசமில்லாமப்போயிடுங்க முதலாளி. பக்கத்து தோட்டத்துல வெளைஞ்சு நிக்கிற வெள்ளாமைய மேஞ்சு போட ஆசப்படற மாட்டுக்கு மூக்கணாங்கவுறு போட்டு கட்டி வெச்சு நாம போடற தீவனத்த மட்டும் திங்க வெக்கற மாதர, பார்த்தது மேல ஆசப்படற நம்ம மனசையும் அறிவுங்கற மூக்கணாங்கவுத்தப்போட்டு கட்டி வெச்சு கட்டுப்படுத்திப்போடோனுமுங்க. இந்த வயசுல நீங்களே இப்படிப்பண்ணுனா, உங்க புள்ள, பையனும் இதையே தாம் பண்ணுவாங்க” எனக்கூறி விட்டு எதுவுமே நடக்காதது போல் மீண்டும் வீட்டைக்கூட்டினாள்.

‘படிச்சு பட்டம் பல வாங்கியவர்களை விட, படிக்காமலேயே பண்புகளை வளர்த்து வைத்து, பசியில் வாடினாலும், பண்பாடு மாறாமல் வாழ வேண்டும் என மன உறுதியுடன் எண்ணி உழைத்து வாழ்பவளை, தான் தவறாக எண்ணி நடந்து கொண்டதை நினைத்து வருந்தியதோடு, இனி தன் வாழ் நாளில் யாரிடமும் இவ்வாறு நடக்க மாட்டேன்’ என தனக்குத்தானே உறுதிமொழி எடுத்துக்கொண்ட கருத்தான், சற்று முன் கலையாகத்தெரிந்த அவளை ஆசையில் இணங்கும் பெண்ணாக எண்ணி கைகளைப்பிடித்தவர், தற்போது சிலையாகத்தெரிந்த அவளை பூசையில் வணங்கும் தெய்வமாக எண்ணிக்கைகளைக்கூப்பி வணங்கினார்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *