உத்தரவின்றி அள்ளிக்கொள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 26,262 
 

மகள் அழுதுகொண்டே அருகில் வந்தாள்.

“ஏம்மா?, ஏம்மா அழரே, இப்ப விளையாடிக்கிட்டு தானே இருந்தே, எங்கேயாவது அடிபட்டதா?” இதை சொல்லிக்கொண்டே அவளை தடவிக்கொடுத்து அன்பாக கேட்டேன்.

“அண்ணன் அடிச்சிட்டான், அவன் தினமும் அடிக்கிறான்….” இது அவள் கூறி புலம்புவது, தினமும் இரு பிள்ளைகளும் ஒருத்தொருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் டெய்லி அலவான்ஸ் மாதிரி. பெண் பிள்ளை என்றால், நம் குடும்பத்தில் அனைவருக்கும் அலாதி ஆசை. செல்லமும் அதிகமாக இருக்கும்.

“ஏண்டா அடிச்சே பிள்ளையை, சும்மா தானே விளையாடிக்கொண்டிருந்தா…” அண்ணனை விரட்டவில்லை என்றால் மகளுக்கு கோபம், விரட்டிப்பேசினால், மகனுக்கு கோபம். இதைக்கேட்டவுடன், வழக்கம் போல் அவனுக்கு கோபம் வந்தது, “உம்ம்ம்… அவள் என் பிஸ்கெட்டை எடுத்து தின்னா…?” என அவன் ஆக்ரோஷத்துடன் சொல்ல, “இல்லேப்பா, என் பிஸ்கெட்டுன்னு நினைச்சி எடுத்தேன். தெரிந்து வேண்டும் என எடுக்கலேப்பா, அதுக்கு அவன் அடிச்சிட்டான்.” என அவள் பதில் கொடுத்தாள்.

“தினமும் இதே வேலையாபோச்சி, சரி, அழாதே, உன் பிஸ்கெட் பாக்கெட் எங்கே?”
“அதோ .. அங்கே ஸோபா மேல் இருக்கு.” ஸோபா மேல் மகனின் அருகில் ஒரு பிஸ்கெட் பாக்கெட் திறந்தும் மற்றொன்று முழுசாகவும் இருக்கு. பையன், திறந்த பாக்கெட்டிலிருந்து பிஸ்கெட் சாப்பிட்டுக்கொண்டே தன் விளையாட்டில் மும்முரமாக இருக்கின்றான். மகளை செல்லமாக தடவி, கண் துடைத்து சொன்னேன், “சரி, போய் தூர உட்கார், உன் பிஸ்கெட் பாக்கெட் எடுத்துக்கோ. அப்புறம் சாப்பிடறதா இருந்தா, அம்மா கிட்டே கொடுத்து வை.”

“சரிப்பா…” நான் அப்புறம் சாப்பிடறேன்..”

வெளியே கிளம்பிய நான், இந்த சம்பவத்தை நினைத்தபடியே நடந்தேன். சிறிது நேரம் கழித்து, எனக்கு மின்னல் வேகத்தில் மற்றொரு சம்பவம் மனதில் தோன்றியது. பல வருடங்களுக்கு முன், எங்கேயோ இதே மாதிரி நடந்ததைப்பற்றி ஆங்கிலத்தில் படித்திருக்கிறேனே. நின்று யோசிக்க நேரமில்லை. நடந்து கொண்டே சிந்திக்கலானேன். அது ஒரு உண்மை சம்பவம் தான், யாரோ எழுத்து வடிவத்தில் வரைந்திருந்தார். அதை படிக்கும் பொழுது சாதாரணமாக நமது வாழ்கையில் நடக்கும் ஒரு சம்பவமாக தெரிந்தாலும், அதில் ஒரு பாடம் இருந்தது. உண்மையில் கதைகளும் இப்படித்தான் உண்டாகின்றன. ஒரு சிறிய நிகழ்சியை முன்னும் பின்னும் ஜோடித்து, அதை வளர்த்து, சற்று கற்பனை கலந்து, நிஜமும் சேர்த்து. டயலாக் அமைத்தவுடன் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டாகிவிடுகிறது. கதை கற்பனை, இரண்டும் பொய் தானே. நடந்த நிகழ்சியை நூறு சதவீதம் அப்படியே சொல்வது மிகக்கடினம். நாளுக்கு நாள், ஆளுக்கு ஆள் ஒரு நிகழ்சி இடம் மாறும் பொழுது விவரிப்புகள் தாமாகவே மாறிவிடும். ஆகவே அந்த நடந்த நிகழ்சியை ‘கதை’ என்கிறோம். திரித்து சொல்லப்பட்ட உண்மையும் கதையாகிவிடுவதுண்டு. கற்பனை என்பது சுத்தப்பொய். பொய்யைத்தவிர வேறொன்றுமில்லை. நடக்காத ஒன்றை நடந்ததாகவும், பேசாத சொற்களை பேசியதாகவும், ஒருத்தர் செய்யாத காரியத்தை செய்ததாகவும் பொய் சொல்வதும், பழி சுமத்துவதும் ஒன்றே. ஆகவே தான் கதைகள் நிலைத்திருப்பதில்லை. அதன் மையக்கருத்து மாறாமல் இருந்தாலும், கோர்ப்புகள், விவரிப்புகள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். மூல பிரதி ஒன்றும், படித்துக்கொண்டிருப்பதும் எழுதப்படவிருப்பதும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கும். ஆனால், நிஜமான சம்பவங்கள், அப்படியே தான் இருக்கும். இக்காரணத்தினால் தான் “சத்தியமே ஜெயதே” அல்லது “உண்மையே வெல்லும், நிலைத்திருக்கும்” என்கிறோம். அசத்தியம் நிலைக்காமல் அழியும், ஏனெனில் இயற்கையாகவே அசத்தியம் அழியக்கூடியதே. அதற்கு வெற்றி கிடையாது.

அந்தக்கதை கிரேட் பிரிட்டனில் 1972-ம் வருடம் முதற்கொண்டு, புழக்கத்தில் உள்ளதாம். “டௌலாஸ் ஆடம்ஸ்” என்ற பிரபல எழுத்தாளர் 1984-ல் அவர் வெளியிட்ட “ஸோ லாங் அண்ட் தேங்க்ஸ் ஃபார் ஆல் தி ஃபிஷ்” என்ற நாவலில் “பிஸ்கெட் பாக்கெட்” கதையை எழுதி, இது தனக்கு 1976-ம் ஆண்டு கேம்பிரிட்ஜின் ஒரு ஸ்டேஷனில் ஏற்பட்டது என கூறினாலும், மக்கள் அதை எதிர்த்து, இந்த கதை அதற்கு முன்பிருந்தே நாம் அறிவோம் என்றனர்.
சரி, நான் படித்த, நம் சம்பவத்திற்கு வருவோம்…

ஒரு நாள் வெளி நாடு செல்ல ஒரு பயணி மும்பை விமான நிலையத்திற்கு சென்றார். நல்ல வாட்ட சாட்டமானவர். நன்கு படித்தவர், நல்ல உத்தியோகத்தில் இருப்பவர். வரிசையில் நின்று தன் பாஸ்போர்ட், டிக்கெட் கொடுத்து லக்கேஜ் புக் செய்து விட்டார். ஏர் பிரான்ஸ் கௌன்டரில் பாரீஸ் செல்லும் ஃபிலைட்டுக்காக போர்டிங் பாஸ் வாங்கியாகிவிட்டது. அடுத்து, விமான நிலையத்திலேயே அவசர நிமித்தம், கொஞ்சம் கரென்ஸியையும் பேங்கில் மாற்றிக்கொண்டார். சுற்று முற்றும் பார்த்து ஆங்கில செய்தித்தாளையும் வாங்கிக்கொண்டார்.

அதற்கு அடுத்து இம்மிகிரேஷன் செக் செய்ய உள் பகுதிக்குள் சென்று அங்கு கையில் எடுத்துப்போகும் பெட்டியை எக்ஸ்ரே செய்து, மற்ற பொருள்களையும் சோதனையிட்டு, கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் உள்ளதா என்பதை மெட்டல் டிடக்டர் கொண்டு உடலெல்லாம் தடவிப்பார்த்து, கடைசியில் வரும் லௌஞ்ச் என்னும் பயணிகள் காத்திருக்கும் வெய்டிங் ஹாலுக்கும் வந்து விட்டார். அங்கே நான்கு அல்லது ஐந்து விமானங்களில் பயணிக்குப்போகும் அத்தனை பயணிகளும் பல வரிசைகளில் இருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஏர்போர்ட் பக்கம் பெரிய கண்ணாடி சுவர்கள் வழியாக விமானங்கள் நிறுத்தப்பட்டிருப்பது நன்கு தெரிந்தது, சற்று தூரத்தில் நான்கு கதவுகள் மூடப்பட்டு இருந்தன. அதன் வழியாகத்தான் பயணிகள் சென்று தத்தம் விமானங்களில் அமர வேண்டும். விமானம் புறப்படவிருக்கும் 40 நிமிடம் முதல் ஒரு மணி நேரத்திற்கு முன் அறிக்கை மூலம் தெரியப்படுத்தி அதற்கு உரித்தான கதவை திறந்து, பயணிகள் வரிசையாக விமானத்திற்குள் பிரவேசிக்க அனுமதிப்பர்.

நமது பயணியும் ஒரு கண்ணோட்டத்தில் இருக்கை வரிசைகளை ஸ்கேன் செய்து ஒரு ஓரமாக காலியாக இருக்கும் ஒரு நீள் இருக்கையில் அமர்ந்தார். அவர் விமானமோ அல்லது அடுத்த நாடுகளுக்குச்செல்லும் விமானங்களோ ஏறும் கதவுப்பக்கம் வரவில்லை. பயணிகள் அனைவரும் ஆவலுடன் அடிக்கடி கதவையே பார்த்தபடி இருந்தனர். பிள்ளைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக்கொண்டு, இடை இடையே, தாயிடம் சென்று, “மாம், நம் ஃபிலைட் எப்பம்மா வரும், சீக்கிரம் சொல்லுங்க மாம்…” என்று கேட்டுக்கொண்டிருந்தனர். நமது பயணி கால் மீது கால் போட்டபடி இரு கைகளில் செய்தித்தாளை பிடித்து படித்துக்கொண்டே இருந்தார்.

பத்து நிமிடம் கழித்து ஒரு அழகான பெண்மணி, சுமார் 30 வயது இருக்கும், அருமையான உடை உடுத்தி, ஹை ஹீல்ஸ் காலணிகள், இடது தோள் மீது லேடீஸ் பேக் தொங்க அதை இடது கையாலேயே சற்று அமுக்கி பிடித்த வண்ணமும், வலது கையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட், அத்துடன் டிஸ்யு பேப்பர் கொண்டு, ஒய்யாரமாக நடந்து வந்தாள். வரும் பொழுதே இருக்கை வரிசைகளை பார்த்துக்கொண்டு வந்தவள், அனைத்து இருக்கைகளும் நிறைந்து இருந்ததால், கடைசியில் அவர் பார்வை, நம் பயணி அமர்ந்திருந்த நீள் இருக்கை மீது பட்டது. தலையை இங்கும் அங்கும் அசைத்தபடி, சுறுசுறுப்பாக வந்து நம் பயணியின் அருகில் சற்று ஒதுங்கி அமர்ந்து கொண்டாள். அமர்ந்த வேகத்தில் தன் ஹேன்ட் பேக் திறந்து, அதிலிருந்த பல வரிசையான பிரிவுகளை அலசி, தேடி, ஒரு புத்தகத்தை எடுத்தாள்.

லாவகமாக ஒரக்கண்களால் ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்கொண்டனர். புத்தகத்தின் பக்கங்களை மட மட என புரட்டிய அவள் கைகள் ஒரு பக்கத்தில் நின்றன. பட படக்கும் கண்களால் புத்தக பக்கத்தில் வரிசைகளை அலசி, தன் பார்வையை ஒரு வரி மீது நிலை நிறுத்தினாள். பெரு மூச்சு விட்ட அந்த நங்கை அவள் வைத்திருந்த நாவலை ரசித்து வாசிக்கலானாள். வலது கயில் புத்தகத்தை விரித்து சாதுர்யமாக பிடித்து, இடது கையால் அருகில் இருந்த பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து தன் இரு முழங்கால்களால் இருக்க பிடித்து இடது கையால் அதை திறந்தாள். நமது பயணியின் கவனம் அவள் பக்கம் திரும்பியது. பிஸ்கெட் பாக்கெட்டை திறக்க போராடும் அந்த மாதுவின் விசித்திரமான செய்கைகளை கண்டு அவர் புன்னகைத்து ரசித்துக்கொண்டிருந்தார். அழகான பெண், அருமையான, அடக்கமான உடை, அளவுக்கு மீறாத மேக்கப், அகல கண்கள், ஒரு பணக்கார வீட்டுப்பிள்ளை போலும். டிராவல் செய்ய வந்திருப்பாளோ? தனியாக பயணம் செய்கிறாளே, எங்கே போகிறாளோ! என பல எண்ணங்கள் அவர் மனதில் ஓடி ஓய்ந்தன. அவர் பார்வை அவளை படம் பிடித்ததை அவள் கவனிக்கவில்லை. அவர் பிஸ்கெட் பாக்கெட்டை திறந்து கொடுக்கவா என கேட்க முயலும் பொழுது அவள் அதை திறந்து விட்டாள்.

தான் திறந்து வைத்த பிஸ்கெட் பாக்கெட்டிலிருந்து மெதுவாக தன் இடது கையால், ஒரு பிஸ்கெட்டை எடுத்து சிறிது சிறிதாக கடிக்க ஆரம்பித்தாள். வாயை மூடியபடி, தாடையை அசைத்தும் கன்னங்களை விரித்தும் அவள் பிஸ்கெட் உண்ட காட்சி நமது பயணிக்கு அருமையாக தென்பட்டது. அவள் மீதிருந்த பார்வையை நகர்த்தி, அவள் பாராமல் மெதுவாக தானும் ஒரு பிஸ்கெட்டை எடுத்துக்கொண்டார். ஆனால், கடிக்கும் பொழுது ‘படக்’ என்ற சிறு சத்தம் அவள் கவனத்தை திசை மாற்றியது. ஓரக்கண்ணால் நமது பயணியை கவனித்தாள், பின் பிஸ்கெட் பாக்கெட்டை கவனித்தாள். அவர் பிஸ்கெட்டை மீண்டும் கடிக்கவே, அவரை பார்த்து, முகத்தை சுளித்தபடி, தன் பிஸ்கெட் தீர்ந்த உடன், அவள் இன்னொரு பிஸ்கெட் எடுத்தாள். அதைத்தொடர்ந்து, நமது பயணியும் அவளைக்கண்டுகொண்டே சிறிது புன்னகையுடன் தானும் ஒரு பிஸ்கெட்டை எடுத்து கடிக்க ஆரம்பித்தார். அவளுக்கு ஆத்திரமாக இருந்தது. என்ன திருட்டுத்தனம்! சிறிதும் வெட்கம் இல்லாமல், ஒரு காட்டுமிராண்டி போல் பிஹேவ் பண்றானே. ஆளைப்பார்த்தால் டீஸென்டாக இருக்கின்றான், கொஞ்சம் கூட மானம் மரியாதையின் கவலையேபடாத இந்தியனாக இருக்கிறானே. ஒரு வேளை பட்டினியாக இருப்பானோ? யார் இவன், எங்கே போகிறான்? அவள் பல விதமாக யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு அறிக்கை,

“யுவர் அட்டென்ஷன் ப்லீஸ், அனதரமான் சுப்பர்மான் ப்லீஸ் என்டெர் யுவர் ஏர் பஸ் – 747, ஃபார் சௌதி அரேபியா, அனதரமான் சுபர்மான்” . பல முறை அறிக்கை தொடர்ந்தும் அப்படி யாரும் வராததால், அமர்ந்திருந்த இந்தியர், யார் அந்த அனதர் மேன், சூபர் மேனாக இருக்கும் என தம் தலைகளை சொறிந்தபடி ஒருத்தரை மற்றொருவர் பார்த்துக்கொண்டனர். ஏர்லைன்ஸ் ஆள் ஒருவன் இந்தியர்களின் பெயர்களை கேட்டுக்கொண்டு அவர் டிக்கெட்களை சரி பார்த்துக்கொண்டிருந்தான். நமது பயணியின் பக்கம் வரவே, அவர், சர், ஐ ஆம் கோயிங் டு பாரீஸ். ஐ ஆம் நாட் சூபர் மேன், என்றார். கடைசியில் பார்த்தால், தூரத்தில் ஒரு ஆள், அமர்ந்தபடியே உறங்கிக்கொண்டிருந்தான். எழுப்பி கேட்டால், நானில்லை அது என்றான். எங்கே பாஸ்போர்ட் காட்டு என சொல்லி அதை பார்த்து, நீ தானே அனதரமான் சுபர்மான் என வினாவினான், ஃபிலைட் அஸிஸ்டேன்ட். ஐயோ கடவுளே, நான் சுப்பர்மேன் இல்லை, என் பெயர் அனந்த ராமன் சுப்ப ராமன், எங்கே என் ஃபிலைட் என திடுதிப் என்று விமானத்தில் ஏற ஓடினார்.

அது அப்படி இருக்க, மூன்றாவது பிஸ்கெட்டை அப்பெண் எடுத்ததும், அவள் எதிர் பாராத விதமாக நமது பாரீஸ் பயணியும் ஒன்றை எடுத்து கடிக்கலானார். இம்முறை அவளுக்கு கோபத்தால் வியர்த்துக்கொட்டியது. என்ன சொல்வது இந்த ஜன்மத்தை? பேச்சுக்கு என்னிடம் ஒரு வார்த்தையாவது கேட்கிறானா? பிஸ்கெட் கேட்டால், ஒரு பெட்டி வாங்கித்தருவேனே. இப்படி கன்ட்ரி புரூட் மாதிரி, மானம் ரோஷம் இல்லாமல், ஏர் போர்டில் நடந்து கொள்கிறானே! மற்றவர் பொருளை அவர் முன்னிலையிலேயே எடுத்து சாப்பிடுகிறானே, என்ன செய்ய, கேட்கவும் அசிங்கமாக இருக்கிறதே! இப்படியெல்லாம் அவள் மனதில் எத்தனை திட்டு திட்டவேண்டுமோ அதையெல்லாம் செய்தாகி விட்டது. அவளிடம் அவரை கீழ்தரமாக வர்ணிக்கும் வார்த்தைகளும் காலியாகிவிட்டன. அதற்கிடையில் நமது பயணி ஒவ்வொரு பிஸ்கெட்டையும் சுவைத்தபடி அவளுடைய தசாவதார பாவனைகளை கவனித்துக்கொண்டேயிருந்தார். அவளும் ஒன்றும் சொல்ல வில்லை, அவரும் ஒன்றும் கேட்க வில்லை. கடைசியில், ஒரே ஒரு பிஸ்கெட் மட்டும் இருந்தது, நமது பயணி அதை எடுக்கும் போது, வேறு பிஸ்கட் அவளுக்காக இல்லை என்பதை அறிந்து, அதை பேசாமல் அவள் முன் நீட்டினார். அவளுக்கு ஏற்பட்ட ஆத்திரத்திற்கு அளவே இல்லை, நாலாபுறமும் திரும்பி பார்த்தாள், சூழ் நிலையை கெடுப்பானேன் என எண்ணி, வந்த கோபத்தில் எதோ முணுமூணுத்தபடி, லபக் என அவன் கையிலிருந்து அந்த கடைசி பிஸ்கெட்டை பிடுங்கி, தின்று தீர்த்தாள். அவன் மீது ஏற்பட்ட ஆதங்கம், பாவம் அந்த பிஸ்கெட் சுமந்தது. அப்படியே பிஸ்கெட் பாக்கெட்டை ஆளுக்கு பாதி உண்டுகளித்து விட்டனர். கோபத்தில் காலி பாக்கெட் எடுக்காமல், இந்த கூறுகெட்டவனே எடுத்து வீசட்டும் என விட்டுவிட்டாள்.

சிறிது நேரத்தில், லௌட் ஸ்பீகரில் அறிக்கை வாசிக்கப்பட்டது, “யுவர் அட்டென்ஷன் ப்லீஸ், பாரீஸ் செல்லும் ஏர் ஃபிரான்ஸ் பாஸெஞ்சர்கள் கவனிக்க. ஃபிலைட் நம்பர் 1768 போக தயாராக உள்ளது, அனைவரும் விமானத்தில் பிரவேசிக்கவும்.” அறிக்கை கேட்டவுடன் அந்த அருமைப்பெண்மணி தன் புத்தகத்தை மூடி ஹேன்ட் பேக்கில் திணித்துக்கொண்டாள் டிஸ்யூ பேப்பரால் வாயை துடைத்து காலியாக கிடந்த பிஸ்கெட் பாக்கெட்டில் திணித்தாள். நமது பயணியை கோபத்துடனும் குழப்பத்துடனும் முறைத்து பார்த்தாள். அவரோ கண் சிமிட்டி விடையளிப்பதைப்போல் புன்னகைத்தார். அவருக்கு பிரியா விடை பெற்ற மாதிரி இருந்தது. அவள் நிம்மதியற்ற ஒரு வெறுப்பான பார்வையை அவர் மீது செலுத்தி மட மட என தன் விமானத்தில் ஏற கதவுப்பக்கம் சென்று, திரும்பி பாராமல், கூட்டத்தில் மறைந்து விட்டாள்.

ஃபிலைட்குள் ஏறியாகிவிட்டது, ஏர் ஹாஸ்டஸ், அவள் இருக்கையின் நம்பர் பிரகாரம் அவளை வழி நடத்தி அமரச்செய்தாள். அவளுக்கு வந்த ஆத்திரத்தையும் கோபத்தையும் அடக்க ஒரு கிலாஸ் குளிர்ந்த நீரை வரவழைத்து ஒரே மூச்சில் குடித்துவிட்டாள். “மானங்கெட்ட ஜன்மம், இவனெல்லாம், வெளி நாட்டிற்கு பிரயாணம் செய்கிறான், கொஞ்சமும் டீஸென்சியே இல்லை, ஹ்ம்ம் என தலையை வெடுக்கென முறித்துக்கொண்டு அலட்டிக்கொள்வது போல் தோள்களை அசைத்துக்கொண்டாள்.
சரியாக அமர்ந்தபின் சீட் பெல்ட் அடயாளத்தை கண்டவுடன், அதை பொருத்திக்கொண்டு, விட்ட இடத்திலிருந்து நாவலை தொடர்ந்து படித்து, பாரீஸ் வருவதற்குள் முடித்துவிடவேண்டும், என மீண்டும் தன் நாவலை ஹேன்ட் பேக்குக்குள் தேடி எடுக்கும் பொழுது, ஏதோ ஒரு பொருள் அவள் பேக்கிலிருந்து நழுவி, புத்தகத்துடன் வந்து அடுத்த சீட்டில் கீழே விழுந்தது. திகைத்துப்பார்த்த அவளுக்கு ஷாக் அடித்தது போல் ஆனது. அது அவள் வாங்கிய பிஸ்கெட் பாக்கெட் தான். முழுசாக இருந்தது. கையில் எடுத்து பார்த்தாள், நிச்சயமாக அவள் வாங்கியது தான். அப்படின்னா, அவள் சாப்பிட்டது? இது என்ன மர்மமாக இருக்கிறது. “ஒஹ் மை காட், ஒஹ் மை காட்” என ஓலமிட்டாள். “ஹௌ பேட் ஆம் ஐ” ஐ ஏட் ஹிஸ் குகீஸ், மை காட்” ஸ்டில் ஐ ஹேடெட் ஹிம், ஐ கால்ட் ஹிம் கன்ட்ரி ப்ரூட், ஐ கால்ட் ஹிம் ஷேம்லெஸ், நௌ ஐ ஆம் ஷேம்லெஸ், ஐ ஆம் எ ஸ்டுபிட். ஐ ஆம் அ சின்னர், ஒஹ் காட்.”

அவன் பிஸ்கெட்டை நான் தின்னும் பொழுது, அவன் ஒன்றுமே சொல்லவில்லையே, அவன் பாக்கெட்டை அவன் கண் முன்னே என் முழங்கால்களில் இறுக்கி பிடித்து திறந்தேனே. அவன் ஒன்றுமே சொல்லவில்லையே… புன்னகையுடன் அவன் என்னுடன் தன் பிஸ்கெட் ஷேர் செய்தானே. இது என் மூளையா அல்லது, கர்வக்குழியா. அவளுக்கு பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டது. ஃபிலைட் மெதுவாக புறப்பட்டுக்கொண்டிருந்தது. திடீர் என அவளுக்கு ஞாபகம் வந்தது, அவன் பாரீஸ் போகிறேன் என்றானே. அப்படியென்றால், இந்த ஃபிலைட்டில் தான் ஏறி இருக்க வேண்டும். பரபரப்புடன் அவள் கண்கள் அவனை தேடின. ஃபிலைட் ஆகாயத்தில் 35 ஆயிரம் அடிக்கு மேல் பறக்க, சீட் பெல்ட் அடையாளம் மறைந்தது. அனைவரும் சீட் பெல்ட் கழற்றும் சத்தம் கேட்டு, அவளும் ரிலீஸ் ஆனாள். ஃபிலைட் முழுக்க தேட ஆரம்பித்தாள், சோகமாக. தன் முட்டாள்தனத்தின் வேதனையை அவளால் தாங்க முடியவில்லை.

சிறிது நேரத்தில், அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு திரும்பி வந்ததும், நமது பயணி அவளுக்கு இடது பக்க வரிசையில் அமர்ந்திருந்ததை கண்டாள். அவளுக்கு வெட்கமாகவும், கேவலமாகவும் இருந்தது. நேராக எழுந்து அவன் முன் நின்று, அழைத்தாள், ” யூ ஆர் மிஸ்டர்….. நமது பயணி தன் தலையை அவள் பக்கம் திருப்பி, அதே போல் புன்னகைத்தான். அவள் கண்கள் கலங்கின. திஸ் ஈஸ் ஷாஹ், ஷாஜஹான் ஈஸ் மை நேம். வான்ட் டு ஹேவ் ஸம் குகீஸ் ப்லீஸ். இன்னொரு பிஸ்கெட் பாக்கெட்டை அவளிடம் நீட்டினான். அவள் தன் கன்னங்கள் சிவக்க நாணத்தோடு தலை குனிந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *