மங்களம் பாட்டி சொன்ன கதை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 17,009 
 

அஸ்வினியும் அனிதாவும் வகுப்பறைத் தோழிகள். வீட்டுப் பாடங்களை சேர்ந்தே செய்வதும், படிப்பதுமாக அவர்களுடைய நட்பு மிகுந்து இருந்தது. அதோடு அவர்களுடைய வீடுகளும் பக்கத்துப் பக்கத்தில் இருந்ததால் பள்ளிக்குச் சேர்ந்தே சென்று வந்தனர்.

ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது அஸ்வினிக்கு சில கெட்ட தோழிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவளுக்கு சில கெட்ட பழக்கங்கள் ஏற்பட்டன. பள்ளிப் பாடங்களைப் படிக்காமல் அவர்களுடன் அரட்டை அடிப்பது. வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஊர் சுற்றுவது என்று இருந்தாள். அஸ்வினியின் இந்த மாற்றத்தைக் கண்டு மனம் வருந்தினாள் அனிதா. ‘அவளோடு சேர்ந்தால் எங்கே நாமும் அவளைப் போல் ஆகிவிடுவோமோ?’ என்று பயந்தாள். எனவே அஸ்வினியிடமிருந்து ஒதுங்கி இருக்க ஆரம்பித்தாள் அனிதா.

அஸ்வினி தீய வழிகளில் செல்வது அனிதாவின் பாட்டி மங்களத்துக்கு தெரியவந்தது. சிறுவயதிலிருந்தே அவளுக்கு அஸ்வினியை தெரியும். நல்ல பொண்ணாச்சே! நம்ம பேத்தியின் உயிர் தோழியாயிற்றே என்று வருத்தத்துடன் பாட்டி இதுபற்றி அனிதாவிடம் கேட்டாள்.

அனிதா அலட்சியமாக, ‘இது எனக்கு எப்பயோ தெரியும் பாட்டி. தெரிஞ்சதிலேயிருந்து நான் அவளிடம் பேசறதே இல்லை..” என்றாள்.

‘நீ அவளோட நல்ல தோழிதானே! நீ சொல்லித் திருத்தலாமில்லே..” என்றாள் பாட்டி.

‘போங்க பாட்டி! எனக்கென்ன வம்பு. யார் எப்படிப் போனா எனக்கென்ன? நான் மட்டும் ஒழுங்கா இருந்தா அதுவே போதும்…” என்றாள் அனிதா.

அவளுடைய இந்த எண்ணம் மங்களம் பாட்டிக்கு அதிர்ச்சியை அளித்தது. அவளை அன்புடன் அழைத்து தன் அருகில் உட்காரவைத்தாள்.

‘அனிதா! நான் சொல்லப்போற இந்த சின்னக் கதையைக் கேளு…”

‘கதையா பாட்டி?”

என்று ஆர்வமானாள் அனிதா.

கதையைச் சொல்ல ஆரம்பித்தாள் பாட்டி.

‘நடுக்கடலிலே ஒரு கப்பல் போய்க்கிட்டிருந்தது. அந்தக் கப்பலின் மேல் தளத்தில் வசதியான படித்த பெரிய மனிதர்களும், கீழ்த்தளத்தில் படிக்காத பாமரர்களும் பயணம் செய்தாங்க. அவங்களுக்கு தண்ணீர் தீர்ந்து போச்சின்னா மேல்தளத்தில் போய்த்தான் வாங்கிக்கணும். ஆனா அவங்க நாம ஏன் மேலே போய் வாங்கிவரணும். நாமதான் தண்ணிக்குப் பக்கத்துலேயே இருக்கோமேன்னு நினைச்சி கப்பல்லே ஒரு ஓட்டை போட ஆரம்பிச்சாங்க…”

‘அய்யய்யோ…. ஓட்டை போட்டா, கப்பல்லே தண்ணி வந்திடுமே…” என்று பதைத்தாள் அனிதா.

‘ஆமாம் முழுகத்தான் செய்யும். கீழ இருக்கிறவங்க என்னமோ பண்றாங்க… நமக்கென்ன என்று கப்பலின் மேல் தளத்திலே இருக்கிறவங்க நினைச்சா எல்லோரும் கடலில் மூழ்க வேண்டியதுதான். கீழ இருக்கிறவங்க செய்ற காரியத்தோட விளைவை அவங்களுக்கு எடுத்துச் சொல்லி தடுத்தாத்தானே நல்லது. அதனால யார் என்ன செய்தா நமக்கு என்னன்னு இருக்கக்கூடாது. அவங்களுக்கு சரியான புத்திமதி சொல்லி ஆபத்தைத் தடுக்கணும்..” என்றாள் மங்களம் பாட்டி.

இதனைக் கேட்ட அனிதாவிற்கு தன் செயலையும் சுயநலத்தையும் எண்ணி அவமானமாக இருந்தது.

‘மன்னிச்சிருங்க பாட்டி! நான் முதல்லே அஸ்வினிகிட்டப் போய் பேசி, தீய நண்பர்களிடமிருந்து அவளை மீட்பேன். அவளை திருத்துவேன்…” என்றாள் அனிதா.

பேத்தியின் மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பாட்டி, அவளை உச்சிமுகர்ந்து முத்தம் கொடுத்தாள்.

– எம்.ஜி.விஜயலெஷ்மி கங்காதரன் (அக்டோபர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *