மாடி வீடு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2023
பார்வையிட்டோர்: 2,464 
 

‘ஓடி ஓடி பாடு பட்டாலும் மாடி வீடு கட்ட யோகம் வேணும்’ என்பார்கள். அந்த யோகத்தை அடைந்து விட வேண்டும் என்கிற ஆசை மகிளா மனதில் துளிர் விட்டது.

தன் திருமணத்துக்கு பத்து வருடங்களுக்கு முன் ஊரிலுள்ள பூர்வீக நிலத்தை விற்று விட்டு கடனில்லாமல் நகரத்தில் ஐந்தரைசெண்ட் எனப்படும் ஒரு கிரவுண்ட் நிலத்தில் மாமனார் வாங்கிய வீடு. இன்று திருமணமாகி பத்து வருடங்கள் ஓடி விட்டன. இரண்டு குழந்தைகளைப்பெற்றெடுத்து பள்ளிக்கு அனுப்பியாகி விட்டது.

‘இரண்டு பேர் வேலைக்குப்போனாலும் இடம் வாங்கி வீடு கட்டுவது இன்று குதிரைக்கொம்பாகி விட்டது. குழந்தைகளுக்கு உயர் கல்வி செலவு வருவதற்க்குள் மாடியில் இரண்டு அறைகள் கட்டி விட்டால் தான் நல்லது.

கீழ் வீட்டில் உள்ள இரண்டு அறைகளில் ஒன்றில் குழந்தைகளுடன் நான்கு பேராக படுப்பது மிகவும் சிரமமாக இருந்தது. இன்னொரு அறையில் மாமனார், மாமியார் படுக்க வேண்டியுள்ளது. பெண் குழந்தைகள் வயதுக்கு வந்த பின் இப்படி ஓர் அறையில் படுக்க வைப்பது சாத்தியமில்லை’ என சில சமயம் இரவில் உறக்கமின்றி சிந்தனைகள் ஓடும்.

கணவன் மநேசன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெள்ளந்தியாக தனியார் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதும், அவர்கள் கொடுக்கும் குறைந்த சம்பளத்துக்கு நான்கு ஆள் வேலையை ஒரே ஆளாக செய்து விட்டு வந்து இரவில் சோர்வில் உறங்கி விட்டு காலையில் நேரமே கிளம்பி விடுவதும், ஞாயிற்றுக்கிழமை கூட விடுமுறையின்றி வேலைக்கு செல்வதும் என தம்பதியராக தங்களது எதிர்காலத்தைப்பற்றி கலந்து பேசக்கூட நேரம் ஒதுக்காத தன் கணவனின் நிலையை எண்ணி வருந்துவாள் அரசு பத்திரப்பதிவுத்துறையில் கணணி வேலை செய்யும் மகிளா.

பெற்றோரின் குடும்பத்திலும் நான்கு பெண்களுக்கு பின் ஐந்தாவதாகப்பிறந்தவள் மகிளா. தந்தையும் காவலர் வேலையிலிருந்து பணி மூப்பில் வீட்டில் இருக்கும் நிலை. அனைத்து பெண்களுக்கும் திருமணம் முடித்து சீர், சிறப்பு செய்யவே இரண்டு வீட்டில் ஒரு வீட்டை விற்கும் நிலையாகிவிட்டது. தற்போது கடனில்லாமல், வரும் பென்சன் பணத்தில் வாழ்க்கை ஓடுகிறது. அவர்களிடமும் மாடி வீடு கட்ட உதவி கேட்க முடியாது. உடன் வேலை செய்பவர்கள் பலர் மாடி வீடு கட்டி புண்ணியர்ச்சனைக்கு கூப்பிட்டு, அங்கு செல்லும் போதெல்லாம் தாமும் மாடி வீடு கட்டி விட வேண்டுமென நண்பிகளிடம் கூறிக்கொள்வாள்.

சிறிது சேமிப்பு, நகை கடன், தவிர அளவாக வங்கிக்கடன் வாங்கிட திட்டமிட்டு பக்கத்து வீட்டில் வேலை முடித்த கட்டிட மேஸ்திரியை அழைத்து கட்டி முடிக்க ஆகும் செலவைக்கேட்டறிந்தாள்.

“குறைஞ்சது ஒரு சதுரடிக்கு இரண்டாயிரம் செலவாகும். ஆயிரம் சதுரடிக்கு இருபதுலட்சமாகும்” என சொன்னதைக்கேட்டு தலை சுற்றியது.

வங்கிக்கடன் பத்து லட்சம், நகைக்கடன் மூன்று லட்சம், சேமிப்பு இரண்டு லட்சம் என பதினைந்து லட்சத்தில் முடிக்க வேண்டுமெனக்கூறி அதற்க்கேற்ப்ப அளவுகளைக்குறைத்து ஒப்பந்தம் போட்டுக்கொண்டாள்.

கடன் பெறுவதற்க்காக மாமனார் பெயரிலிருந்த வீட்டை தன் பெயருக்கு கிரைய செலவு குறைவாகும் விதத்தில் தானக்கிரையமாக வாங்கிக்கொண்டாள்.

ஒரு வாஸ்து நாளில் பூஜை போடப்பட்டு வீட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டது. தன்னை விட சம்பளம் பாதி குறைவாக வாங்கும் கணவனை மூன்று மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு வீடு கட்டுவதை முன் நின்று பார்க்குமாறு கூறியும் அவரால் ‘முடியாது’ என்பதே ஒரே பதிலானது.

மூன்று மாதங்களில் மேல் கான்கிரீட் போட்டாகி விட்டது. விலை உயர்ந்த தேக்கு மர ஜன்னல்களுக்கு பதிலாக ரெடிமேட் ஜன்னல்களை வாங்கி வைக்கச்சொல்லி விட்டாள். முதல் நுழைவு கதவு மட்டும் குறைந்த விலையாக இருந்தாலும் உறுதியானதாக இருக்கும் படாக் மரத்தில் போட்டுக்கொண்டாள்.

தினமும் வலைத்தளங்களிலும், உறவுகளிடமும் எப்படி குறைந்த செலவில் வீடு கட்டுவது என்பதை பார்ப்பதும், கேட்பதுமாகவே இருப்பாள். போட்ட கணக்குக்கு மேல் போய்விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய நிலையிலிருந்தாள்.

ஒன்பது மாதத்தில் வீட்டு வேலை முடிந்தாலும், காது கம்மல் கூட கவரிங் போடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டு விட்டது மாடி வீடு.

ஆசையாக தான் முதன்முதலாக வாங்கிய ஸ்கூட்டியைக்கூட விற்க்க வேண்டியதாயிற்று. அலைச்சல் கூடியதால் முகமும் வாடியது. எழுபது கிலோ உடல் அறுபது காட்டியது. 

முன்பெல்லாம் மாதம் ஒருமுறை ஜவுளிக்கடை, உயர்தர ஹோட்டல், சினிமா என குழந்தைகளை அழைத்துச்செல்வதும், அடிக்கடி விடுமுறை தினங்களில் சுற்றுலா செல்வதுமாக இருந்தவள், முதல் நாள் வைத்த குழம்பை மறு நாள் உபயோகிக்க விரும்பாதவள், தற்போது முதல் நாள் மீதமாகும் உணவை புளி கரைத்து வைத்து மறுநாள் தாளித்து உண்பதும், குழந்தைகளிடத்தில் கஞ்சியும், பழைய சோறும் உடலுக்கு நல்லது என சொல்லும் வளைத்தள வீடியோக்களைக்காட்டி அதை உண்ண வைப்பதும், கிழிந்த துணிகளைத்தைத்து அணிவதுமென வாழ்க்கை முறையே மாறியிருந்தது.

மாடி வீட்டில் படுத்துறங்கியும் கடனை நினைத்ததால் தற்போதும் உறக்கம் தொலைத்தாள். இருந்தாலும் வீட்டுத்தேவை பூர்த்தியானதில் சிறு மனநிறைவும் ஏற்படவே செய்தது. நடுத்தரக்குடும்பத்தில் பிறந்து விட்டால் ஒன்றை இழந்து தான் இன்னொன்றைப்பெற முடியும் என்ற சொல் கட்டாயமாகிவிட்டதாக எண்ணி மனதை சாந்தப்படுத்திக்கொண்டாள்.

‘உலகில் பலர் யோசிக்காமல் பணத்தை செலவழித்து ஆடம்பரத்தேவைக்கு அரண்மனை போன்ற வீடு கட்டி வாழும் நிலையில் தன் போன்ற படித்து வேலைக்குச்சென்று வாழ்பவர்களால் தேவைக்கு ஒரு வீடு கட்டி, அதற்க்காக‌ வாங்கும் கடன் கட்டுவற்க்கே வாழும் காலம் முழுவதையும் இழக்க வேண்டியுள்ளதே’ என தனது நிலை கொண்ட அனைவரின் நிலைகளையும் அறிந்த போது, ‘சமுதாயக்கட்டமைப்பு முறை அனைவருக்கும் தேவையான அனைத்தும் எளிதில் கிடைக்கும் வகையில் அமைந்திருக்கவில்லை’ என்பதை எண்ணிய போது அவளது மனம் தற்போதைய கடிமான வாழ்வின் நிலையால் மகிழ்ச்சிகொள்ள மறுத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *