சொல்ல மறந்த கதை…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 2, 2013
பார்வையிட்டோர்: 14,080 
 

பேருந்து தன் வேகத்தை குறைத்து கல்யாண ஊர்வலம் போல நகர்ந்து அந்த ரோட்டோர சுமாரான ஹோட்டலின் முன் நின்றது.“ டீ, டிபன் சாப்பிடறவங்க எல்லாம் இங்க முடிச்சிக்கலாம்… வண்டி இங்க இருபது நிமிஷம் நிக்கும்…” கண்டக்ட்டர் குரல் கொடுத்தார்.

அதுவரை மில்டனின் கவிதைகளில் மூழ்கியிருந்த ருத்ரா புத்தகத்தை மூடி ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். ஹோட்டல் ஒன்றும் ஹைஜீனிக்காக தெரியவில்லை.. பசிக்கு பிஸ்கெட் டீ மட்டும் எடுத்து கொண்டு ஒரு வழியாக கோவை போய் சாப்பிடலாமா என யோசித்தான்

பக்கத்திலிருந்த பெரியவர் , “ என்ன தம்பி யோசிக்கிறிங்க.. இந்த ஓட்டல்லதான் கண்டக்டர், டிரைவருக்கு கமிஷன்.. அதான் எப்பவும் இங்க கொண்டு வந்து நிப்பாட்டுவாங்க.. இன்னும் நாலு மணி நேரமிருக்கு என்னால் பசி தாங்க முடியாது…. எதையோ சாப்பிட்டுதான ஆகனும்…? முணு முணுத்து கொண்டே இறங்கினார்.

ஒவ்வொருவராய் இறங்கி கொண்டிருந்தார்கள்.

“ டாடி எனக்கு ஜூஸ் வேணும்… “ அடம் பிடித்த அந்த குழந்தையை “ சனியனே.. இப்பதான சளி பிடிச்சி நல்லானது..திரும்பவும் ஜூஸ் கேட்கிறே..?” முதுகில் வைத்தாள்.

சே.. என்ன பெண் இவள் குழந்தையிடம் பொறுமை இல்லாமல்.. உடம்புக்கு ஆகாது அப்புறமா வாங்கி தர்றேன்னு குழந்தைக்கு பக்குவமா எடுத்து சொல்ல மாட்டாளா..? இவளும் சுபா மாதிரிதான் இருக்கா..எதற்கெடுத்தாலும் பொறுமை இல்லாமல் கத்துவது.பெரும்பாலும் அவன் குழந்தைகள் இரண்டும் அவனையே சுற்றி சுற்றி வரும்.“ ஆமா நான் எவ்வளவுதான் செஞ்சு போட்டாலும் இதுங்களுக்கு அப்பாவாம்… அப்பா..” பொருமித்தள்ளுவாள்.
“ சுபா.. குழந்தைகளோடு குழந்தையா பழகினாதானே? எப்பவும் உன் விருப்ப படிதான் அதுங்க நடக்கனும்னு சும்மா திட்டிகிட்டே இருந்தா… அதான் நான் எப்ப வருவேன்னு காத்திருக்குதுங்க…”

அவளை மாற்ற முடியவில்லை. சரி எதற்கு வெளியில் வந்தும் சும்மா
எதையெல்லாமோ நினைத்துக் கொண்டு.. பஸ்ஸை விட்டு இறங்கி டீ குடித்தவாறே மெல்ல பார்வையை அலைய விட்டான்.காற்றில் பட படத்த கூந்தலை ஒற்றைவிரலால் தள்ளி எட்டி பார்த்து கொண்டிருந்த அவள்..நேகாவேதான். இவ்வளவு நேரம் கூடவே பயணித்திருக்கிறாள்.. இவனும் பார்க்கவில்லை..அவளும் பார்க்காமல் போயிருக்கிறாள்.அந்த பாடாவதி ஹோட்டலுக்கு நன்றி சொல்லி விட்டு அவசரமாக பேருந்துக்குள் ஏறினான்.

“.. நேகா..”

பரிச்சயமான அந்த குரலில் நிமிர்ந்தவள் அதிசயித்து போனாள்.

“ருத்ரா.. நீங்க எப்படி இங்க… ஆச்சரியமா இருக்கு…? முகம் மலர்ந்தாள்.

“ நான் ஆபிஸ் வேலையா கோவை வரை போய்ட்டிருக்கேன்.. நீ..? பக்கத்தில் பார்வையை தேட விட்டவாறே..கேட்டான்.

“ அவர் வரலை.. சொந்தக்காரங்க கல்யாணம் அதான் அம்மா வீட்டுக்கு வந்துட்டு திரும்பி போய்ட்டிருக்கேன்.

நாம பார்த்து ஒரு ஆறெழு வருஷமாவது ஆயிருக்கும்ல.. பிரபாகர் யு.எஸ் போனதிலர்ந்து நான் அவங்க வீட்டுக்கு போறதில்ல..

“ எல்லாரும் ஏறியாச்சா… வண்டி எடுக்கலாமா..கண்டக்ட்டர் விசில் ஊதியதும்..

ஒரு நிமிஷம் .. தன் சீட்டுக்கு போனவன், பெரியவரை பார்த்து..“ சார் பின்னாடி அந்த சீட்ல உட்கார்ந்துக்க முடியுமா.. அவங்க இங்க வராங்களாம்..”
பெரியவர் எதோ ஒரு சந்தேகத்தோடு பார்த்து கொண்டே நேகா சீட்டுக்கு போனார்.

“ நேகா… எத்தன வருஷம் கழிச்சி பார்க்கிறோம்.. அட்லீஸ்ட் கோவை போற வரைக்குமாவது பேசலாம்னுதான்.. லைப் எப்படி போயிட்டிருக்கு..அப்புறம் உனக்கு எத்தன பசங்க?

“ ஒரே பையன் செகண்ட் ஸ்டாண்டார்டு படிக்கிறான்.. என் லைப் எப்படி போயிட்டிருக்குன்னு என்னை பார்த்தாலே தெரியலை?”..களுக்கென்று சிரித்தாள்.அந்த சிரிப்பில் கொஞ்சம் கர்வமும் எட்டிப்பார்த்தது.

***

அவன் நண்பன் பிரபாகர் வீட்டில்தான் அவளை முதலில் சந்தித்தான். பிரபாகரின் தங்கைதான் அறிமுகப்படுத்தினாள்.. “அண்ணே.. இவ எதிர்வீட்லதான் இருக்கா.. உன்னை மாதிரியே நிறைய கவிதை எல்லாம் எழுதுவா.. உன்னோட போட்டி போட இவதான் சரியான ஆளு..எங்கே ஒரு கவிதைய சொல்லி உங்க வீரத்தை காமிங்க பார்க்கலாம்…”
அதற்கு பிறகு வந்த நாட்களை எல்லாம் தென்றல் வருடி சென்றது.இலக்கியத்தில் ஆரம்பித்து அரசியல் வரை வாய் வலிக்க பேசினார்கள்.

நேகா திண்டுக்கல்ல ஒரு கவியரங்கம் நீயும் கலந்துக்கிறியா?
எதுக்கு?

நாம ஒண்ணா பஸ்ல அத்தனை தூரம் போயிட்டு வரலாமில்ல..
யோசித்தவள் சரி என்றாள்.

கவியரங்கம் முடிந்து ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்த போதுதான் சொன்னான்..

“ நேகா என் கூட வந்தியே உங்க வீட்ல என்னை தப்பா நினைக்க மாட்டாங்களா..?”

பெரிய ஹாஸ்யத்தை கேட்டது போல் சிரித்தாள், “ என்ன ஐயாவிற்கு இப்படி ஒரு சந்தேகம்? அதான் உன் முகத்திலயே நல்லவன்னு எழுதாமலே வந்து ஒட்டிட்டிருக்கே .. உன் மனசு!அப்புறம் என்ன பயம்? அப்பாவுக்கு உன்ன பத்தி நல்லா தெரியும் ருத்ரா.. உன் கிட்ட பழகினது கொஞ்ச நாட்கள்தான்னாலும் ஏதோ கால காலமாய் பழகின மாதிரி இருக்கு..”

மென்மையாக அவள் கைகளை பற்றியவன் “ நேகா நீ இல்லாம என் வாழ்க்கை நல்லாயிருக்கும்னு தோணலை.. நட்பை தாண்டி என் மனசுக்குள்ள உட்கார்ந்திருக்கேன்னு புரியுது..”

கைகளை விடுவித்தவள்..”ஏய் என்னாச்சு உனக்கு?”

“ நிஜமாத்தான் மா.. நீயில்லாம என்னால இருக்கு முடியாது.. உனக்கும் இப்படி தோணுச்சின்னா நான் உங்க வீட்ல வந்து பேசறேன்…”

“ இதுக்கு நான் மறுத்தா..?”

“ தெரியும்.. உன் மனசுக்குள்ள நான் இருப்பேன்னு..”

“ ஓ அத்தனை நம்பிக்கையா ருத்ரா..? என்னோட அப்பாகிட்ட சம்மதம்
வாங்கறதெல்லாம் இருக்கட்டும்.. வெறும் ரசனை மட்டும் வாழ்க்கையாயிடாது ருத்ரா..உனக்கொரு நல்ல வேலை கிடைச்சி லைப்ல செட்டிலாகு அப்புறம் வீட்ல சொல்லிக்கலாம்.”

இடைப்பட்ட நாட்களில் வேலை தேடி அவனும், மேற்கொண்டு படிக்க அவளும் வெவ்வேறு திசைகளில்..அவ்வப்போது போனில் பேசி கொண்டார்கள். அன்றைக்கு ருத்ராவிற்கு நாக்கில் சனி உட்கார்ந்து விட்டதோ என்னவோ..” நேகா நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துகிட மாட்டியே.. இரண்டொரு முறை நீ பைக்ல ஒருத்தன் கூட போனதை பிரபா பார்த்திருக்கான்..நான் ஒண்ணும் தப்பா நினைக்கல… உன்னோட படிக்கிறவனா?”

அவன் கேள்வியில் வெகுண்டவள்..” உன் புத்தியை நீ காட்டிட்டே பார்த்தியா.. இதை நீ கேட்டிருக்கவே வேணாமே.. உன் மனசுக்குள்ள குறு குறுப்பு இருக்கவேதானே கேட்கிற.. ரைட் ருத்ரா இப்பவாவது உன் இன்னொரு முகத்தை காமிச்சியே.. இத்தன நாளா பழகி நாம புரிஞ்சிகிட்டது இவ்வளவுதானா..? இந்த மாதிரி வர்ற மெல்லிய கீறல் ஒவ்வொண்ணா ஒரு நாளைக்கு மொத்தமா போட்டு ஒடைச்சிடும்..வேண்டாம்.அப்படி உடையறதை என்னால் தாங்க முடியாது. இந்த அழகான நினைகளோடவே நம்ம பாதையில் நாம் போய்க்கலாம்….”

பிரபாகருக்கு வெளி நாட்டில் வேலை கிடைத்த நேரம்.இவனுக்கு இங்கேயே பிஸினஸ் தொடங்க அப்பா பணம் தந்ததும் அதை சொல்ல நேகாவை சந்தித்த போதுதான் அவளின் திருமண அழைப்பிதழை நீட்டினாள்.உடைந்து போய் மனசுக்குள் அழுதான்.

அதற்கு பிறகு இப்போதுதான் சந்திக்கிறான்.

******
“ நேகா அன்னிக்கு விளையாட்டா கேட்டது உன் மனசை எவ்வளவு பாதிச்சதோ .. நீ என்னை விட்டு போன பிறகு கிட்டத்தட்ட ஒரு வருஷம் பைத்தியம் போல்தான் இருந்தேன்னு சொல்லனும்.. எதிலயும் பிடிப்பில்லாம..அந்த சூழ் நிலையில் நண்பர்களோட சேர்ந்து குடிக்க கூட ஆரம்பிச்சேன். பிஸினஸில் எக்கச்சக்கமா நஷ்டம்.. என் சொந்தக்காரங்க எல்லாம் இவங்க சேப்ட்டர் அவ்வளவுதான் கைகொட்டி நின்னப்ப..என் அம்மாதான் என்னை தெய்வமா தாங்கினா.எதேதோ முயற்சிகள் அப்புறம் வேலை கிடைச்சது. கல்யாணம் பண்ணனுமான்னு நான் யோசிச்சப்பா.. அப்ப என் அப்பாவோட உடல் நிலை, அவர் கடைசி ஆசைன்னு உறவுல சுபாவை எனக்கு கட்டி வச்சாங்க..

…என் லைப் பத்தி நான் எவ்வளவு கற்பனைகள் வச்சிருந்தோனோ அதில் கொஞ்சகூட ஒத்து வராதவளாத்தான் அமைஞ்சிருக்கா. அவங்கப்பா இவளுக்கு ஓரளவு சொத்து வச்சிருக்காருன்னு வேலைக்கு போறதெல்லாம் பிடிக்கலைன்னுட்டா.இருந்தாலும் என் வாழ்க்கையில் அவதான்னு வந்துட்ட பிறகு அவளை கட்டாயப்படுத்தி மாத்தனும்னு நான் நினைக்கலை நேகா.. சில விஷயங்களை சொல்வேன்..அவ ஏத்துக்கலைன்னா விட்டுடறது.மற்றபடி அவ குடும்பத்தை நிர்வகிக்கிறதுல கெட்டிக்காரி தெரியுமா? உறவினர் வீட்டு விசேஷம்னா இவதான் ஓடி ஓடி செய்வா..எல்லார் மனசுலயும் இடம் பிடிச்சுடுவா.என்னை பத்தி எல்லாம் தெளிவா சொல்லியிருக்கேன்.உன் கூட பழகின நாட்களயும்.எந்த ரியாக்ஷனும் காட்டாம சாதரணமாதான் எடுத்துகிட்டா.இரண்டு குழந்தைங்க.. பெரியவன் ஆதர்ஷ்..சின்ன பெண் நேத்ரா. பெண் பிறந்தவுடனே உன் பேரைத்தான் வைக்கனும்னு ஆசையா இருந்துச்சு நேகா.. ஆனா ஒவ்வொரு முறையும் கூப்பிடறப்ப சுபா எதாவது சங்கடமா பீல் பண்ணுவாளோன்னுதான் உன் பேர்ல முதல் எழுத்தையும் என் பேர்ல இருக்கிற கடைசி எழுத்தையும் சேர்த்து வச்சேன். எவ்வளவு வாயடி தெரியுமா நேத்ரா.. அவ பேசறப்ப பார்க்கனுமே.. வாய் ஒரு பக்கம் கண் ஒரு பக்கம் போய் நிறைய மேனரிசம்… ரொம்ப ரசிப்பா இருக்கும். தினம் அவளோட குழந்தையா குழந்தையா விளையாடினாதான் விடுவா.

சரி நேகா என்னை பத்தியே ரொம்ப பேசி அறுத்திட்டேனா.. உன் வாழ்க்கையை பத்தி சொல்லு..”

“ அவர் ரொம்ப ஸாப்ட் டைப்.. ருத்ரா..சொல்லப்போனா என்னை விட நல்லவர்.எங்களுக்குள்ள எல்லாமே திறந்த மனசுதான். எந்த விஷயத்திற்கும் கோபப்பட்டு அவரை நான் பார்த்ததே இல்லை..வீட்ல எப்பவும் எதையாவது ஜோக்கடிச்சிட்டிருப்பார். உன்ன பத்தியும் சொல்லியிருக்கேன் ருத்ரா.. அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா…

” ம்.. அவன் தப்பிச்சிகிட்டான்.. நான் மாட்டிக்கிட்டேன்னு..” அவ்வளவுதான் நான் ஓங்கி அவர் முதுகில் ஒரு அடி விட்டேன் தெரியுமா? என்ன ஒண்ணு அவருக்கு கவிதைன்னாலே காத தூரம் ஓடுவார்.ரசனை வேற வாழ்க்கை வேற ருத்ரா.ரசனைகளோட வாழ்க்கை அமைஞ்சிட்டா சந்தோஷமான வாழ்க்கைதான். ஆனால் அது இல்லைன்னாலும் வாழமுடியாம போயிடறதில்ல. நான் வேலைக்கு போகனும்னு எல்லாம் அவர் என்னை வற்புறுத்தலை.. என் படிப்பு வீணாக கூடாதேன்னு நானா போறேன்.. எனக்கான தேவைகள்ல அவர் எந்த குறையும் வைக்கறதில்ல..என் பையனை கலெக்டராக்கி பார்க்கனும்கிறதுதான் என் வாழ்க்கையின் அடுத்தகட்ட ஆசை ருத்ரா…”

அவர்கள் கண்கள் கெஞ்சி விழிகளை மூடும் வரை மாறி மாறி பேசி கொண்டிருந்தார்கள்.பயண களைப்பு கொஞ்ச நேரம் அசதியில் தூக்கம்.கோவை வந்து இறங்கும் நேரம் வந்தது.

“ நேகா.. நாம நினைச்ச மாதிரி வாழ்க்கை அமைச்சிருந்தா இன்னும் நல்லாயிருந்திக்குமோன்னு எப்பவாவது தோணியிருக்கா..?

நேகா மெல்லிதாய் புன்னகை ஒன்றை சிந்தி மௌனத்தை பதிலாக தந்து கடந்து

போனாள்.

ருத்ராவிற்கு மில்டனின் கவிதை ஒன்று நினைவுக்கு வந்து போனது..

இவ்வளவு வெறுமையாகவும்
இவ்வளவு முழுமையாகவும்
ஒரே சமயத்தில் உணர்வது
காதலில் மட்டுமே சாத்தியம்..!

‘ருத்ரா.. ஐ மிஸ் யூ..‘என்ற ஒற்றை வார்த்தையாவது அவளிடமிருந்து வராமல் போனது அவனுக்கு எதோ வெற்றிடமாய் தோன்றியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *