காட்டுக்குள்ளே திருவிழா

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2023
பார்வையிட்டோர்: 3,714 
 

(2004 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராஜா அன்றைக்கு ஸ்கூலுக்குப் போகவில்லை. அவனுடைய சின்ன மம்மிக்கு குழந்தை பிறந்திருந்தது. ராஜாவையும், பாபுவையும் பாலச்சந்தர் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு வந்தான். பிள்ளைகள் ரெண்டு பேரையும் சந்தியா இருந்த அறைக்குள் விட்டுவிட்டு டாக்டரைப் பார்க்கப் போனான்.

பாபு மம்மியிடம் ஓடினான். கட்டிலில் ஒருக்களித்து சந்தியா, பாபுவை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

“குட்டிப் பாப்பா பாத்தியா பாபு?”

“குட்டிப் பாப்பா எப்படி வந்தது மம்மி?”

“ம்? கொக்குதான் கொண்டு வந்து போட்டுட்டுப் போச்சு.”

“என்னக் கொண்டு வந்த போட்டுட்டுப் போச்சே அந்த ஸேம் கொக்கா மம்மி?”

“இல்ல கண்ணா, இது வேற கொக்கு.”

“எல்லா பாப்பாவையும் கொக்குதான் கொண்டு வந்து போடுமா மம்மி?”

“நல்ல பாப்பாவையெல்லாம் கொக்குதான் கொண்டு வந்து போட்டுட்டுப் போகும்.”

“அண்ணாவையும் கொக்குதான் கொண்டு வந்து போட்டுட்டுப் போச்சா மம்மி?”

“அது யாரது, ஒனக்கு அண்ணா!”

“ராஜா அண்ணா.”

“அவனா? அவனக் கொரங்கு கொண்டு வந்துப் போட்டுட்டுப் போயிருக்கும்.”

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ராஜாவுக்கு முகம் சுண்டிப் போனது. மனசும்.

குழந்தைகளைக் கொண்டு வந்து போட்டுப் போவது கொக்குகளின் வேலையாயிருக்க, இவனைக் கொண்டு வந்து போட்டுப் போக மட்டும் குரங்கொன்று அமர்த்தப்பட்டது இவனுக்கு வேதனையாயிருந்தது.

டாக்டரைப் பார்க்கப் போயிருக்கிற டாடி திரும்பி வந்த பின்னால், டாடியின் பாதுகாப்பில் மெல்லப்போய்ப் பாப்பாவை அருகாமையில் பார்க்க வேண்டும் என்கிற ஆசையை ஓசையில்லாமல் விழுங்கிக் கொண்டான்.

குரங்கு கொண்டு வந்து போட்டு விட்டுப் போன பிள்ளை! ராஜாவின் கண்களில் கண்ணீர் திரண்டது. இந்தக் குரங்கு விவகாரத்தை டாடியிடம் கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான். ஆஸ்பத்திரியிலிருந்து கிளம்பி பைக்கில் போகிற போதோ அல்லது போகிற வழியில் வழியில் டிரைவ் இன்னில் டிஃபன் சாப்பிடுகிற போதோ கேட்க முடியவில்லை; தம்பி கூட இருந்தான். அவன் எதையாவது புரிந்து கொண்டு அவனுடைய மம்மியிடத்தில் தத்துபித்தென்று ஏதாவது உளறி வைத்தானென்றால் இவனுக்கு உதை விழும்.

ராத்திரி, பாபு தூங்கிவிட்டானென்று உறுதி செய்து கொண்டு, படுக்கையிலிருந்து எழுந்து, ஹாலில் புஸ்தகம் படித்துக் கொண்டிருந்த அப்பாவிடம் வந்தான்.

“டாடி.”

“நீ இன்னும் தூங்கலியா ராஜா, காலைல ஸ்கூலுக்குப் போகணும்ல?”

“டாடி ஒங்கட்ட ஒரு டௌட் கேக்கணும்.”

“டௌட் கேக்கணுமா!” பாலச்சந்தர் சிரித்தான்.

“டௌட்டெல்லாம் காலைல கேக்கலாம்; மணி பத்தாச்சு பார், போய்த் தூங்கு.”

“இல்ல டாடி, இது அர்ஜன்ட். ஏன் டாடி, நம்ம குட்டிப் பாப்பாவ கொக்கா டாடி கொண்டு வந்து போட்டுச்சு?”

“ம்? ஆமா, ஏன்?”

“பாபுவ?”

“அதுவும் கொக்குதான்.”

“அப்ப என்ன மட்டும் கொக்கு கொண்டு வந்து போடலியா டாடி?”

“ஒன்னயும் கொக்குதான் கொண்டு வந்து போட்டுச்சி. சரி போய்த் தூங்கு.”

“இல்லியாம் டாடி, என்னக் கொக்கு கொண்டு வந்து போடலியாம். என்னக் கொரங்கு கொண்டு வந்து போட்டுச்சாம்.”

பாலச்சந்தருக்கு முகம் இறுகியது.

“நான்ஸென்ஸ். யார் சொன்னது அப்படி?”

“சின்ன மம்மி தான் சொன்னாங்க டாடி.”

பாலச்சந்தர் மகனை இழுத்து அணைத்துக் கொண்டான். தகப்பனின் தோளில் ஆறுதலாய் முகம் புதைத்துக் கொண்டான் ராஜா. தகப்பனின் விரல்கள் தலைமுடியைக் கோதிவிடுவது சுகமாயிருந்தது.

பாலச்சந்தருக்கு சாவித்ரியின் ஞாபகம் வந்தது. ராஜாவைப் பெற்றுப் போட்டுவிட்டு, கடமை முடிந்ததென்று கண்மூடிக் கொண்டுவிட்ட சாவித்ரி. பிறகு சந்தியாவைக் கல்யாணம் பண்ணிக்க கொண்டது, தனக்கு ஒரு துணை வேண்டுமென்பதற்காக மட்டுமல்ல. ராஜாவுக்குத் தாய் வேண்டுமென்பதற்காவுந்தான்.

கல்யாணத்துக்கு முன்னால், பலம்மாய்த் தலையாட்டி வைத்த சந்தியா, முதலிரவு முடிந்த கையோடு தன்னுடைய சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டாள். ராஜா தன்னை மம்மியென்று கூப்பிடவே அவள் சம்மதிக்கவில்லை. பாலச்சந்தர் மம்மியென்று சொல்ல, அவள் ஆன்ட்டியென்று அடம் பிடிக்க, கடைசியில் ரெண்டுக்கும் பொதுவாய் சின்ன மம்மி என்று முடிவாயிற்று.

அவளுக்கென்று ஒரு பாபு பிறந்த பின்னால், சந்தியாவின் மாற்றாந்தாய்த்தனம் மூர்க்கமடைந்தது. இப்போது ரெண்டாவது குழந்தையாகிவிட்டது. நிலைமை இன்னும் மோசமடையலாம். ஒன்றிரண்டு வருஷத்துகாவது ராஜாவைத் திருநெல்வேலியில், சாவித்ரியின் பெற்றோரிடம் விட்டு வைத்தாலென்ன என்று தோன்றியது. பேரன்மேல் உயிரையே வைத்திருக்கிறவர்கள் அவர்கள். ராஜாவைத் தங்களிடம் விட்டுவிடும்படிக் கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். பையனைப் பெற்றவனுக்குத்தான் ஒரு வறட்டுக் கௌரவம்.

மாற்றாந்தாய் ஹிம்சையிலிருந்து மகனைக் காப்பாற்ற வேண்டுமென்றால், திருநெல்வேலிதான் சரி. நாளைக்கே ஸ்கூலில் ட்டி.ஸி. வாங்க எற்பாடு செய்ய வேண்டும்….

அப்பாவின் அணைப்பிலிருந்து மெல்ல விடுபட்ட ராஜா, அப்பாவின் முகத்தைப் பார்த்துக் கேட்டான்.

“டாடி, சின்ன மம்மி சொன்னது நெஜந்தானா டாடி?”

“ம்? எது?”

“கொரங்கு.”

மனசு புண்பட்டிருக்கிற மகனை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று கொஞ்சம் குழம்பின பாலச்சந்தரின் சிந்தனையில் ஒரு பொறி தட்டியது.

“ராஜா நீ இப்ப எந்த க்ளாஸ் படிக்கிற?”

“ஸெகண்ட் ஸ்டாண்டர்ட் ஸி செக்ஷன்.”

“நீ தர்ட் ஸ்டாண்டர்ட் ஃபோர்த் ஸ்டாண்டர் டெல்லாம் படிச்சிப் பெரிய்ய க்லாஸ்க்குப் போகும் போது ஒனக்கு சொல்லிக் குடுப்பாங்க, மனுஷங்க எல்லாமே கொரங்குலயிருந்து தான் வந்தாங்கன்னு. ராஜாவோட தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத்தா ஒரு கொரங்கு. ராஜாவோட பாட்டிக்குப் பாட்டிக்குப் பாட்டி ஒரு கொரங்கு. நாம எல்லாருமே கொரங்குக்குப் பொறந்தவங்க தான் ராஜா. நானும் கொரங்குக்குப் பொறந்தவன்தான். நீயும் கொரங்குக்குப் பொறந்தவன்தான். அதனால் ராஜா, ஒங்க சின்ன மம்மி சொன்னதுல தப்பொண்ணுமில்ல. ஸோ, எதப்பத்தியும் கவலப்படாம நீ போய்த் தூங்கு.”

ராஜாவின் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது.

“டாடி டாடி, நம்ம எல்லாருக்கும் அம்மா அப்பாவான கொரங்க நா பாக்கணும் டாடி.”

“அதான் வண்டலூர் ஸூல பாத்தோம்ல?”

“அந்தக் கொரங்கெல்லாம் நல்லாவேயில்ல. டாடி, எங்க க்ளாஸ்ல ஸி.அம்ருதான்னு ஒரு கேள் இருக்கா டாடி. அவ குத்தாலத்துக்குப் போய்ட்டு வந்தாளாம். அங்க அழகழகா நெறய்ய கொரங்கு இருக்காம். டாடி டாடி, நாமளும் குத்தாலத்துக்குப் போலாம் டாடி.”

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல இருந்தது பாலச்சந்தருக்கு. “அப்ப நீ திருநெல்வேலிக்கித் தாத்தா பாட்டிக்கிட்ட போறியா? அங்க பக்கத்துலதான் குத்தாலம். தாத்தா ஒன்ன அடிக்கடி குத்தாலத்துக்குக் கூட்டிட்டுப் போவார், நெறய்ய கொரங்கு பாக்கலாம். அழகழகான கொரங்கு பாக்கலாம். என்ன?”

“ஓ! நா ரெடி டாடி!”

அன்றைக்கு ராத்திரி ராஜாவின் மனசெல்லாம் குரங்கு.

கனவெல்லாம் குரங்கு.
விதவிதமான குரங்கு.
அழகழகான குரங்கு.
அப்பா அம்மாவான குரங்கு.

ராஜா திருநெல்வேலிக்குக் குடிபெயர்வது சந்தியாவுக்கும் சந்தோஷமான விஷயம் என்பதால் காரியங்கள் துரிதமாய் நடந்தன. நெல்லை எக்ஸ்ப்ரஸ்ஸில் போய் அப்பாவோடு திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கியதுமே, வரவேற்க வந்திருந்த தாத்தாவிடம் குத்தாலம் குத்தாலம் என்று அனத்த ஆரம்பித்துவிட்டான் ராஜா.

ஸ்கூலில் அட்மிஷன் கிடைத்த பிறகு குற்றாலம் என்று சொல்லப்பட்டது. அட்மிஷன் கிடைத்ததற்கு அடுத்த நாளே திரும்பவும் அனத்தல். குளிப்பதற்கில்லையே குரங்கு பார்க்கத்தானே, அதற்கு மெதுவாய்ப் போகலாம். இப்போது ஸீஸன் டைம், ரொம்பக் கூட்டமாயிருக்கும், குரங்கெல்லாம் ஒளிந்து கொண்டிருக்கும் என்பது போன்ற சமாதானங்கள் ராஜாவிடம் எடுபடவில்லை. சனி ஞாயிறு வரை காத்திருக்கக்கூட அவனுக்குப் பொறுமையில்லை.

இந்தத் தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத்தாவான குரங்கு, இந்தப் பாட்டிக்குப் பாட்டிக்குப் பாட்டியான குரங்கு, மனிதர்களெல்லாருக்குமே அப்பா அம்மாவான குரங்கு, தன்னைக் கொண்டு வந்து போட்டுவிட்டுப் போன குரங்கு, எல்லாவற்றையும் பார்க்க வேண்டும், உடனடியாய்ப் பார்க்க வேண்டும்.

வேறே வழில்லாமல், புதன் கிழமை அதிகாலை, தாத்தாவும் பாட்டியும் அவனைக் கூட்டிக் கொண்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு ஜங்ஷனிலிருந்த தென்காசிக்கு பஸ் ஏறினார்கள். தென்காசியிலிருந்து ஒரு டாக்ஸி பிடித்துக் கொண்டு குற்றாலம்.

ஐந்தருவிக்குப் பக்கத்தில், தாத்தாவுக்குப் பழக்கமான ஒரு பண்ணையாரின் பங்களாவில் காலை உணவுக்கு ஏற்பாடாகியிருந்தது. டிஃபன் சாப்பிட்டுவிட்டு, பிரயாணக் களைப்புத் தீர தாத்தாவும் பாட்டியும் நீட்டி நிமிர்த்திப் படுத்து விட்டார்கள்.

“வெயில் வந்த பெறவு குளிக்கப் போவலாம். அது வரக்யும் ராசா, நீ வாசல்ல ஒக்காந்து கொரங்கு பாத்துட்டிரு.”

ஆனால் ராஜாவுக்கு வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற மனநிலை இல்லை. திருநெல்வேலியிலிருந்து தாத்தா வாங்கிக் கொண்டு வந்திருந்த பழங்கள், பிஸ்கெட், சாந்தி ஸ்வீட்ஸ் ஹல்வா, பக்கோடா எல்லாவற்றையும் கூடையோடு எடுத்துக் கொண்டு சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு கேட்டைத் திறந்து கொண்டு வெளியே நடந்தான். இங்கொன்றும் அங்கொன்றுமாய்க் குரங்குகள் தரிசனந் தந்தன.

திருப்தியாயில்லை. நிறைய குரங்குகளை எதிர்கொள்ள வேண்டுமானால் காட்டுப் பாதையில் போக வேண்டும். இந்தப் பதார்த்தங்களையெல்லாம் அவற்றோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஜன நடமாட்டம் நிறைந்த பாதையிலிருந்து விலகி, ஜன நடமாட்டம் அறவே இல்லாத காட்டுப் பாதையில் தாவரங்களுக்குக்கூடே நடந்தான். மரங்களின் கிளைகளிலிருந்து பல ஜோடிக் கண்கள் ஆர்வமாய்ப் பார்க்கிறதை உணர்ந்தான், இவனையும், இவனுடைய கையிலிருந்த பதார்த்தக் கூடையையும். திருப்தியான ஓர் இடத்தில் நாப்கினை விரித்துக் கொண்டு உட்கார்ந்தான். கூடையிலிருந்த பதார்த்தங்களை எடுத்துப் பரப்பினான். பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.

“அடேங்கப்பா, எவ்ளோ பலகாரம்! எனக்கில்லியா ராஜா!”

காக்கி உடையணிந்த ஒரு காட்டிலாக்காக்காரர் சிரித்துக் கொண்டு நின்றிருந்தார்.

“ஹை! எம்ப் பேர் ஒங்களுக்கு எப்படித் தெரியும் அங்க்கிள்?”

“அட, ஒம்ப் பேர் ராஜாவா? ராஜா மாதிரிதான் இருக்க நீ. அல்வாப் பொட்டலம் வச்சிருக்கியே, அல்வான்னா எனக்கு ரொம்பப் புடிக்குமே!”

“எல்லாம் கொரங்குகளுக்குத்தான் அங்க்கிள். கொரங்கெல்லாம் எனக்கு ஃப்ரண்ஸ். கொரங்கு சாப்ட்டு மிச்சமிருந்தா ஒங்களுக்குத் தர்றேன், ஓக்கே அங்க்கிள்?”

“நிச்சயமா?”

“ப்ராமிஸ்.”

காட்டிலாக்காக்காரர் குனிந்து அவன் கன்னத்தைச் செல்லமாய்த் தட்டினார்.

“இதே பாதையில நேரா வந்தா ஃபாரஸ்ட் ஆஃபீஸ் இருக்கு. அங்கதான் நா இருப்பேன். உன் ஃப்ரண்ஸ் ஃப்ரண்ஸ் மிச்சம் வச்சாங்கன்னா அத எடுத்துட்டு அங்க வர்றியா? அங்க வந்து பரதன் அங்க்கிள்னு கேளு, என்ன?”

“ஓ, வர்றேன் அங்க்கிள்.”

கொரங்காவது மிச்சம் வக்யவாவது என்று திரும்பவும் சிரித்தபடி இவனை செல்லமாய்த் தட்டிக் கொடுத்துவிட்டு அவர் நகர்ந்தார்.

காக்கிச் சட்டை அகன்றதும் மற்ற விருந்தாளிகள் ஒவ்வொருவராய் ப்ரசன்னமானார்கள்.

அழகழகான குரங்குகள்.
அப்பாக் குரங்குகள், அம்மாக் குரங்குகள்,
பிள்ளைக் குரங்குகள், குட்டிக் குரங்குகள்…

அம்மாக் குரங்கொன்று, வயிற்றில் சுமந்த குட்டியோடு வந்திருந்தது. இப்படித்தான் இவனையும் ஒரு அம்மாக் குரங்கு சுமந்து வந்து தொட்டிலில் போட்டுவிட்டுப் போயிருக்கும்!

அந்த இனத்தின் மேலே ராஜாவுக்கு ஒரு பாசம் பிறந்தது. பழங்களையும் பதார்த்தங்களையும் இவன் நீட்ட, அந்தக் குரங்குகள் ஆச்சர்யமான கட்டுப்பாட்டுடன் ஒவ்வொன்றாய் வந்து இவனிடம் பெற்றுச் சென்று தின்றன. இவனுக்கும் அந்த வானர இனத்துக்கும் ஓர் அந்நியோன்னியம் ஏற்பட்டுவிட்ட நிலையில் அவை இவனை இன்னும் நெருங்கி வந்தன.

அந்த நேரத்தில் தான் அந்த அராஜகம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ வந்து விழுந்த வலையொன்று அந்தக் குரங்குக் கும்பலில் ஒரு பத்து பன்னிரண்டு குரங்குகளை லபக் கென்று கவ்விக் கொண்டது. தொடர்ந்து, நாலு முரட்டு உருவங்கள்.

“அள்ளுல பக்கிரி. நம்ம வேல இன்னிக்கி இவ்ளோ ஜல்தியா முடியும்னு நெனக்யவேயில்ல டேய்! இந்தச் சின்னப் பயலுக்குத்தான் டாங்ஸ் சொல்லணும். அள்ளு. அள்ளி, வண்டியில போடு. காக்கிச் சட்டக்காரன் எவனும் வாறதுக்கு முந்தி சிட்டாப் பறந்துரணும்.”

“இந்தக் கொரங்கயெல்லாம் வெளிநாட்ல எண்ண பண்ணுவான் அண்ணாச்சி?”

“கசாப்புப் போடுவான். அதெல்லாம் நமக்கென்னத்துக்கு டேய். ஒரு கொரங்குக்கு சொளையா ஐநூறு ரூவா தாறான். தூக்கு சனியன. பெறாண்டிரப் போவுது, கவனமாத் தூக்கு.”

என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது ராஜாவுக்குப் புரிந்தபோது உடம்பும் மனசும் பதைபதைத்தன.

சத்தமில்லாமல் ஒரு கடத்தல் ஜீப் வந்து சமீபத்தில் நின்று கொண்டிருந்தது. வலைக்குள்ளே குரங்குகளின் காச் பூச்சென்ற கூச்சல். குட்டியைச் சுமந்து வந்த தாய்க் குரங்குகூட மாட்டிக் கொண்டிருந்தது.

இந்த மிருகங்களிடமிருந்து குரங்குகளைக் காப்பாற்றியாக வேண்டுமென்கிற துடிப்பு ராஜாவிடம் எழுந்தது. ஓர் ஆக்ரோஷத்தோடு அந்த அரக்கர்களின் பாதையை வழிமறித்துக் கொண்டு நின்றான், ரெண்டு கைகளையும் கைகளையும் விரித்துக் கொண்டு, கண்களில் கோபத்தோடு, குரலில் வேகத்தோடு.

“இந்தாங்க, இது எல்லாம் என்னோட கொரங்கு, என்னோட ஃப்ரண்ஸ். அத நீங்க புடிச்சிட்டுப் போக முடியாது. நா விடமாட்டேன்.”

மூன்று முரடர்கள் இவனை அலட்சியப்படுத்த, ஒருவன் மட்டும் உறுமினான். “இந்தா பார்ல, மருவாதியா இப்படியே ஓடிரு. இல்ல, ஒன்னையுந் தூக்கிட்டுப் போயிருவோம்.”

“இப்படியே ஓடிரு” என்ற மிரட்டல் வார்த்தைகள் ராஜாவுடைய மண்டையில் மின்னலடித்தன.

ஓடினான்.

காக்கிச் சட்டை…. பரதன் அங்க்கிள்…

காட்டிலாகா அலுவலகத்தை அடைந்து மூச்சிறைக்க இவன் நடந்ததைச் சொல்லி வாயை மூடும் முன்னாலேயே காக்கிப் பட்டாளம் பரபரப்படைந்து புறப்பட்டுவிட்டது. பரதன் அங்க்கிள் இவனை வாரியெடுத்துக் கொண்டு ஓடி வந்தார்.

மரங்களுக்கும் பாறைகளுக்குமிடைய பாதையமைக்கத் திணறிக் கொண்டிருந்த கடத்தல் ஜீப் மடக்கப்பட்டது. குரங்குகள் விடுவிக்கப்பட்டன. விடுதலையடைந்த குரங்குகள் ராஜாவை நன்றியோடு பார்த்துவிட்டு மரங்களுக்குள்ளே மறைந்தன.

“இத்தன நாளா நமக்கு அல்வாக் குடுத்திட்டிருந்த களவாணிப் பயலுவ இந்தச் சின்னப் பையனால இன்னிக்கி மாட்டிக ன்னிக்கி மாட்டிக்கிட்டானுவப்பா.” வனத்துறை நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

பரதன் அங்க்கிள் ராஜாவை உயரத்தூக்கிக் கன்னத்தில் முத்தம் பதித்தார். அவரிடமிருந்து விடுவித்துக் கொண்ட ராஜா, கீழே கூடையிலிருந்து ஒரு பொட்டலத்தையெடுத்து அவரிடம் நீட்டினான்.

“அங்க்கிள் ஒங்களுக்கு ஹல்வா. கொரங்கு மிச்சம் வச்சது.”

“அட, இத்தன நாளா இவனுங்க அல்வா தந்தானுங்க. இப்ப நீ அல்வா தர்றியா!”

எல்லாரும் சிரித்தார்கள்.

அந்த நாலு மிருகங்களைத் தவிர.

– 04.06.2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *