சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்  
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 13,994 
 

“நாம் அனைவரும் கொலையெண்ணம் கொண்டவர்களே; சமூகத்தின் மீதும், சட்டத்தின மீதும் நமக்கு இருக்கும் பயமே அவ்வெண்ணத்தை நிறைவேற்ற விடாமல் நம்மைத் தடுக்கிறது”.

நான் கம்பிகளுக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தேன். கையில் லேப்டாப்பும், காதில் ஹெட்செட்டுமாக வாழ்ந்து பழக்கப்பட்டுப் போன எனக்கு அவ்வாழ்க்கை அலுத்துப் போனது. சீக்கிரமே எனக்கு விடுதலை அளித்து விடுவார்கள். இன்னும் ஒரு வாரம் தான். கம்பிகளுக்குப் பின்னால் இருந்து அல்ல. இந்த உலகத்திலிருந்தே என்னை விடுவித்து விடுவார்கள். அந்தப் கிழவர் அப்படித் தான் சொன்னார். “பிரதிவாதி மிகுந்த திட்டமிடலுடன் இக்கொலையைச் செய்திருக்கிறார் என்பது இந்நீதிமன்றத்திற்குத் தெளிவாகிறது. எனவே, அதிகபட்ச தண்டனையான மரணதண்டனையை இ.பி.கோ செக்ஷன் 302ன் பிரகாரம் இக்கொலையாளிக்கு விதிக்க இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

எனக்கு நான் செய்ததைப் பற்றி எந்த வருத்தமும் இல்லை. நெடுநாள் மனதில் தங்கியிருந்த பாரத்தை இறக்கி வைத்தது போல் நிம்மதி. மூன்று வருடங்களுக்குப் பிறகு லாக்கப்பில் போட்ட அந்த இரவில் தான் நான் நிம்மதியாகத் தூங்கினேன். இப்பொழுது கம்பிகளுக்குள் இருக்கும் போது அவள் அண்ணன் மூன்று வருடங்களுக்கு முன்னால் ஃபோனில் மிரட்டியது நினைவுக்கு வந்தது. “லே! என்னலெ நெனச்சுட்டுருக்க ஒன் மனசுல” என்று தொடங்கி சில எழுத்தில் வராத வார்த்தைகளைச் சொல்லி விட்டு, “ஓவராப் போனியன்னா போலீசுல கம்ப்ளெய்ன்ட் குடுத்துடுவேன், மரியாதைக்கு இருந்தா ஒனக்குக் கொள்ளாம்”. அந்த வார்த்தைகளை நினைத்து எனக்கு லேசாக சிரிப்பு வந்தது. இப்போது நான் சிறையில் தான் இருக்கிறேன். நிச்சயமாக அவன் சொன்ன குற்றத்துக்கு அல்ல.

அவள் மிக அழகானவள். இல்லையென்று நீங்கள் சொல்லலாம். ஆனால் எனக்கென்னவோ அப்படித்தான் தோன்றியது. அப்படி ஒருகாலத்தில் தோன்றியதால் தான் நான் இன்று கம்பிகளுக்குப் பின்னால் உட்கார்ந்திருக்கிறேன். அவள் மிக அழகானவள் என்று அறிந்து கொண்ட நான் என்னைப் பற்றி அறிந்து கொள்ளவில்லை என்றே எனக்குத் தோன்றியது. அவளும் என்னைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ளவில்லை. அவள் ஒரேயடியாக என்னை விட்டு ஒதுங்கிப் போயிருக்கலாம். அதையும் அவள் செய்யவில்லை.

ஒரு பொம்மையைப் போல் அவள் என்னை ஆட்டி வைத்ததாள். எங்களுக்கிடையேயான பேச்சு என்பது செல்போனிலேயே தொடங்கி முடிந்தும் போனது. அவள் அண்ணன் எனக்கு ஒருநாள் போன் பண்ணினான். “என் தங்கச்சிக்கு எதுக்குலே போன் பண்ணின? ஒனக்கு அக்கா தங்கச்சி யாரும் இல்லியாலே?” என்று கேட்டுவிட்டு நானே அதிகமாக உபயோகப்படுத்தாத சில வார்த்தைகளை அவன் உபயோகப்படுத்தினான். அவள் பிறகு என்னிடம் போனிலும் பேசவில்லை. கடைசியாக என்னை வெறுப்பதாகச் சொன்னாள்.

அவள் அப்படி செய்திருக்கக் கூடாது. அவள் என்னிடம் தொடர்பே வைத்திருந்திருக்கக் கூடாது. வைத்தபின் துண்டித்திருக்கக் கூடாது என்றே எனக்குத் தோன்றியது. எனக்குக் கோபம் அதிகமானது. அவளை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று தோன்றியது. நான் விரும்பியவள் அவள். அவளை என்னைத் தவிர வேறு யாரும் தொடுவதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவளைக் கொல்ல வேண்டும். சரிதான். ஆனால் எப்படி?

துப்பாக்கியைப் பயன்படுத்தலாம் என்று தோன்றியது. ஆனால் துப்பாக்கிக்கு யாரிடம் போவது? துப்பாக்கி கிடைத்தாலும் அதை வாங்க எங்கிருந்து காசு கிடைக்கும்? வேறு என்ன பண்ணலாம். விஷம் வைக்கலாமா? அட முட்டாளே, அவள் நீ கூப்பிட்டவுடன் வந்து என்ன வாங்கிக்கொடுத்தாலும் சாப்பிட்டால் விஷம் வைக்கலாம். ஆனால் அவள் அப்படிச் செய்யமாட்டாளே. அப்படிச் செய்தால் கொலை செய்யவும் தோன்றாதே. சரி, கத்தி எடுத்து ஒரே குத்தாகக் குத்திவிடலாமா? சரிப்பட்டு வராது. உயிர் போகும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அதுமட்டுமல்ல. கைமுழுதும் ரத்தமாகிவிடும். ரத்தத்தைக் கண்டாலே பிடிப்பதில்லை, என் ரத்தத்தைத் தவிர. பிறரின் ரத்தம் கையில் காய்ந்தால் சில நேரம் கவிச்சியடிக்கும். சகிக்க முடியாது. பின்மண்டையில் ஏதாவது கம்பியைக் கொண்டு அடித்து விடலாமா? வேண்டாம். ஸ்ட்ராங்காக அடித்தால் மூளை வெளியே தெறிக்கும். அசிங்கம்.

இப்படியெல்லாம் யோசித்துத் தான் அவள் கழுத்தை நெரித்துக் கொல்வது என்று முடிவெடுத்தேன். சரி, எப்படிக் கழுத்தை நெரிக்கலாம்? அவள் காலேஜ் யூனிபார்ம் சுடிதாரில் போட்டிருக்கும் துப்பட்டாவைக் கொண்டு கழுத்தை நெரிக்கலாமா? ம்ஹும்.. சரிப்பட்டு வராது. துப்பட்டாவை சுடிதாரோடு சேர்த்து பின் செய்து வைத்திருப்பாள். அதை உருவுவதற்கு நேரமிருக்காது. கையிலேயே கயிறு கொண்டு போகலாமா? முடியாது. சில நேரங்களில் கயிற்றோடு எதிரே வருவதைப் பார்த்து உஷாராகி ஓடி விட்டால்… பின் என்னதான் செய்வது? வேறு வழியில்லை. கையாலேயே கழுத்தை நெரித்து விடலாம் என்று முடிவெடுத்தேன்.

சரி, கொலை செய்து விடுவது என்று முடிவு செய்தாகி விட்டது. கழுத்தைக் கையாலேயே நெரித்துக் கொன்றால் தப்பிக்க வழியில்லை. போலீஸ்காரன் மிதிக்கும் போது தாங்கும் சக்தி உடம்புக்கும், மனசுக்கும் வேண்டுமே. என்ன செய்வது? என்னை நானே வதைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிளேடுகளாலும், கத்திகளாலும் உடம்பைக் கீறிக் கொண்டேன். ஊசிகளை உடம்பில் குத்தினேன். தீயால் சுட்டுக்கொண்டேன். மிளகாய்ப்பொடியையும், உப்பையும் காயத்திற்கு மருந்தாகத் தடவினேன். முதலில் வலித்தது. போகப் போக அதுவும் சுகமான அனுபவமானது.

சரி, எல்லாம் ஓகே. என்றைக்கு, எங்கு வைத்துக் கொல்வது? யோசித்துக் கொண்டிருந்தேன். அவள் காலேஜுக்குப் போய்விட்டு வரும் வழியில் தான் கொல்ல முடியும். வேறு எங்கேயும் அவள் தனியாக வெளியே போவது போல் இல்லை. அந்த ரூட்டில் நான் போய் இரண்டு தடவை சுற்றினேன். காலேஜ் அவள் வீட்டுக்கு அருகில் தான் இருந்தது. நடந்து தான் போய் வருவாள். இரண்டு தடவை சுற்றிய பின் எனக்குத் தேவையான இடத்தைக் கண்டுபிடித்தேன். சாலையின் ஒரு பக்கத்தில் செம்பருத்தி புதர்போல் மண்டிக்கிடந்தது. பின்னால் ஒரு ஆள் தாராளமாக நிற்கலாம். இருந்தாலும் பதுங்கி நின்று பாய்வது எனக்குச் சரியான யுக்தியாகப் படவில்லை. பாய்ந்தவுடன் திடீரென்று அலறிவிட்டால், அப்புறம் என் திட்டத்தை முழுவதுமாக நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.

பிற்பாடு தான் அந்த யுக்தி தோன்றியது. நேருக்கு நேராகப் போய் அவளது கழுத்தை நெரித்துக் கொண்டே அவளை இழுத்துக் கொண்டு புதர் மறைவுக்கு வந்து விடலாம். அங்கு வைத்து அவளது உடலை முகர்ந்து பார்க்கலாமா? வேண்டாம். பிறகு கொல்வதற்கு மனது வராது. அங்கு வைத்து அவள் கணக்கைத் தீர்த்து விடலாம். பிறகு நிம்மதியாகத் தூங்கலாம். தூக்கம் வருவதில்லை. கனவுகளில் எவனெவனெல்லாமோ அவளைச் சுவைக்கிறார்கள். இரவுகளில் திடுக்கிட்டு வியர்வையுடன் விழித்தெழுகிறேன். இவளைக் கொன்று விட்டால் பிரச்சினை தீர்ந்தது.

அது ஒரு வெள்ளிக்கிழமை. என்றும் கதிரவன் உதிக்கிறது; மறைகிறது. எல்லா நாளும் ஒன்று போல் கழிவதாகவே தோன்றுகிறது. ஆனாலும் இன்று எனக்கு வித்தியாசமான நாள். எனது நெடுநாள் ஆவலைத் தணித்துக்கொள்ளும் நாள். சாப்பிடுவதற்கு மனமில்லை. அம்மா சாப்பிடச் சொன்னாள். பெயருக்கு கொஞ்சம் தொட்டுக் கொண்டேன். மனம் முழுக்க எதிர்பார்ப்பால் நிரம்பியிருந்தது. இன்று எப்படியாவது விஷயத்தை முடித்து விட வேண்டும்.
மாலை நான்கு மணியானது. அம்மாவும், அப்பாவும் வீட்டில் இல்லை. அவர்கள் இருந்தாலும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டிய செய்தியல்ல அது. இப்போது கிளம்பினால் தான் நாலரைக்காவது அங்கே சேர முடியும் என்று தோன்றியது. நாசமாய்ப் போன கண்டக்டர் 15 ரூபாய் கேட்டான். போவதற்கு மட்டும் தான். திரும்பி வரவேண்டியதில்லை. கட்டாயம் வர வேண்டுமென்றால் போலீஸ்காரர்கள் கூட்டி வருவார்கள்.

நான் அவள் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளியிருந்த பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்து கொண்டேன். மணி நாலரை ஆயிற்று. தூரத்திலிருந்து அவள் காலேஜ் யூனிபார்மில் ஒரு நீலப்புள்ளி போல் நடந்து வந்தாள். எனக்குக் கைகள் ஆடின. துடித்தனவா, நடுங்கினவா என்று எனக்கு விளங்கவில்லை. லேசாக நெற்றியில் வியர்வை பூத்தது. நான் எழும்பி அவளுக்கு எதிராக நடக்கத் துவங்கினேன்.

அவள் தூரத்திலிருந்து என்னைப் பார்த்து விட்டாள் என்றே தோன்றியது. என்னைப் பார்த்து மெலிதாகச் சிரிக்க முயன்றாள். எனக்கு சிரிப்பு வரவில்லை. பெண்ணே! இன்னும் சில நிமிஷங்களில் நீ உன் உயிரை இழக்கப் போகிறாய்.

நான் என் முகத்தில் மிகச் சிரமத்துடன் அமைதியை நிலைநாட்டிக் கொண்டு நடந்தேன். மிகத்துல்லியமாக அவள் அந்த செம்பருத்திப் புதரின் அருகில் வந்தாள். ரோட்டில் வேறு யாரும் வருவதுபோல் இல்லை. நான் அவளுடைய கழுத்தைப் பிடித்தேன். இறுக்கத் தொடங்கினேன். கோபம், பயம், அதிர்ச்சி என அவள் முகம் உணர்ச்சிக் கதம்பமாய் காட்சியளித்தது. நீண்ட நாட்களாக வெட்டாமலிருந்த எனது நகங்கள் அவளது வெண்மையான, குழைவான கழுத்தில் ஆழப் பதிந்தன. அவள் என்னை விலக்கி விடப் போராடினாள். அவளது விரலில் லேசாக முளைத்திருந்த நகங்கள் எனது கரங்களைக் கீறின. அதுவும் சுகமாகத் தான் இருந்தது. என் கரங்கள் தொடர்ந்து அவள் மூச்சைக் கட்டுப்படுத்தின. அவளது உடல் சோர்ந்து போய் சரியத்துவங்கியது. அவளது முழு பாரத்தையும் என் கரங்களில் உணர்ந்தேன். ஆனாலும் அவளது கழுத்தை இறுக்குவதை நிறுத்தவில்லை. பத்து நிமிஷம் சென்றிருக்கும். அவள் கழுத்திலிருந்த கையை எடுத்தேன் அவள் முன்னாக விழுந்தாள்.

அப்படியே நடந்தேன். போலீஸ் ஸ்டேஷன் இரண்டு கிலோ மீட்டர் தள்ளியிருந்தது. அதற்குள் நுழைந்தேன். உள்ளே இருந்த ஒரு போலீஸ்காரரிடம் சொன்னேன், “என்ன அரெஸ்ட் பண்ணுங்க.நான் கொல பண்ணிருக்கேன்”. அவர்கள் என்னைக் கொலைகாரனைப் பார்ப்பதைப் போல் பார்க்கவில்லை. ஒரு பைத்தியக்காரனைப் பார்ப்பதைப் போலவே பார்த்தார்கள்.

அப்பொழுது ஒரு கோஷ்டி போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தது. அவர்கள் எல்லோர் முகத்திலும் கவலை கோலம் போட்டிருந்தது. அவர்கள் என்னைப் பார்க்கவில்லை. நேராக இன்ஸ்பெக்டர் ரூமுக்குள் போனார்கள். அவர்கள் அவளுடைய உறவினர்களோ என்று எனக்குத் தோன்றியது. உள்ளே போன அவர்கள் பேசிக் கொண்டிருந்தது வெளியே கேட்டது. “சார், எம் பொண்ண எவனோ ஒருத்தன் கொன்னுட்டான்”, அந்தக் குரல் தடித்து, விசித்து அழத் துவங்கியது. அந்தப் போலீஸ்காரர்கள் இப்பொழுது என்னை சந்தேகத்துடன் பார்த்தார்கள். உள்ளே இன்ஸ்பெக்டர் அவர்களிடம் போலீஸ் பாஷையில் பேசிக் கொண்டிருந்தார்.

உள்ளே அவர் விசும்பும் சத்தம் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. யாரோ கம்ப்ளேயின்ட் எழுதிக் கொண்டிருப்பது போல் தோன்றியது. கொஞ்ச நேரங்கழித்து அந்தக் கோஷ்டி வெளியே வந்தது. அப்பொழுது, அதிலிருந்த இளைஞன் ஒருவன் என்னைப் பார்த்து விட்டான். “சித்தப்பா, அவந்தான் சித்தப்பா, அவந்தான் கொன்னிருப்பான். நான் போட்டோல கூட பாத்துருக்கேன். அவ எங்கிட்ட காட்டிருக்கா”. நான் அமைதியாக அவனிடம் சொன்னேன், “அதைத்தான் இவங்கள்ட்டயும் சொன்னேன், நம்ப மாட்டேங்கறாங்க. நீங்க சொல்லிப் பாருங்க”. அந்தக் கோஷ்டி அப்படியே என் மேல் பாய்ந்தது. எனக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லை. அமைதியாக நின்றேன். திடீரென்று சட்டை கிழிந்தது. எனக்குக் கோபம் வந்தது. என் பிறந்தநாளுக்கு எடுத்த சட்டை அது. “தேவடியா மவனுவளா, கையை எடுங்கலெ” என்று சத்தமாகவே சொன்னேன். இதற்கிடையில் அங்கிருந்த போலீஸ்காரர்களும் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தனர். ஒருவழியாக அவர்கள் களைத்துப் போனார்கள். அவளுடைய அப்பா என்னைப் பார்த்துச் சொன்னார், “கோர்ட்ல ஒனக்குத் தூக்குக் குடுக்காட்டா நான் உன்னக் கொல்லுவம்லெ”. நான் எதுவும் சொல்லவில்லை. இரண்டு பற்கள் உடைந்திருந்தன. வாயைத் திறந்தால் ரத்தம் ஒழுகும் என்று தோன்றியது. வாயை அழுத்தமாக மூடிக்கொண்டேன்.

நான் அன்று இரவை லாக்கப்பில் கழித்தேன். வீட்டில் இருந்து யாரும் பார்க்க வரவில்லை. யாரும் பார்க்க வருவார்கள் என்று எனக்குத் தோன்றவுமில்லை. நிம்மதியாகத் தூக்கம் வந்தது. அவளுடன் எவனும் படுப்பது போல் கனவு வரவில்லை. அது இன்னொரு ஆறுதல்.

அடுத்த நாள் கோர்ட்டுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். என்னவெல்லாமோ விளங்காத ஃபார்மாலிட்டிகள். ஐயா, நான் தான் கொலை செய்தேன். ஒப்புக் கொள்கிறேன். என்னைத் தூக்கில் போடுங்கள்.எதற்காக கோர்ட்டுக்கும் சிறைக்குமிடையாக அலைக்கழிக்கிறீர்கள்?

அடுத்தபடியாக கோர்ட்டில் என்னவெல்லாமோ விவாதங்கள் நடந்தன. ஒரு வக்கீல் வந்தார். அவரை எதிர்த்து வாதாட இன்னொரு வக்கீலும் வந்தார். இரண்டு பேரும் அதிகமாகப் பேசுவதாக எனக்குத் தோன்றியது. ஒரு ஜட்ஜும் வந்தார். அவரைப் பார்த்தவிடன் “கிழவா! வீட்ல படுத்து தூங்குறதை விட்டுட்டு இங்க ஏன் ஒக்காந்து முழிச்சுட்டுருக்க?” என்று கேட்கணும் போல் தோன்றியது.

எனக்கு வக்கீல் என்று அழைக்கப்பட்ட அந்த நபர் வரிசையாகப் பொய் சொல்லிக் கொண்டிருந்தார். ரொம்ப சாமர்த்தியசாலி என்ற நினைப்பு. “எனது கட்சிக்காரர் மனநலம் சரியில்லாதவர். எனவே இ.பி.கோ செக்ஷன் 84ன் படி அவரது செய்கைகளுக்கு அவர் பொறுப்பாக மாட்டார்”. எனக்குக் கோபம் வந்தது. “லே, ஒரு ஏரோநாட்டிகல் ஸடூடண்டப் பாத்துப் பைத்தியம்னு சொல்ற, ஒனக்குப் பைத்தியம், ஒனக்க அப்பனுக்குப் பைத்தியம், ஒனக்க அம்மைக்குப் பைத்தியம்” என்றேன். அங்கே இருந்தவர்கள் எல்லாரும் சிரித்தார்கள். எனக்கு இன்னும் கோபம் வந்தது. “லே, எந்தப் பயலாவது சிரிச்சியன்னா அவளக் கழுத்த நெரிச்சிக் கொன்ன மாதிரி ஒங்களயும் கொன்னு போடுவேன்”. இப்பொழுது அங்கு மரண அமைதி நிலவியது. எனது வக்கீல் சேரில் போய் உட்கார்ந்து கொண்டார். இனி அதிகமான பொய்களைக் கேட்க வேண்டாம்.

இறுதியாக அந்தக் கிழவர் சொன்னார். “பிரதிவாதி மிகுந்த திட்டமிடலுடன் இக்கொலையைச் செய்திருக்கிறார் என்பது இந்நீதிமன்றத்திற்குத் தெளிவாகிறது. எனவே, அதிகபட்ச தண்டனையான மரணதண்டனையை இ.பி.கோ செக்ஷன் 302ன் பிரகாரம் இக்கொலையாளிக்கு விதிக்க இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது. எனக்கு இப்பொழுது ஓரளவு திருப்தி. கோர்ட்டில் சிலர் பேசிக் கொண்டார்கள். “ஹைக்கோர்ட்டில் அப்பீல் பண்ணுனா தூக்கு குடுக்க மாட்டான். ஆயுளாக்கிருவான்”. எனக்குத் தோன்றியது, “என்ன மசிருக்கு ஆயுளாக்கணும்? என்ன மசிருக்கு நான் அப்பீல் பண்ணனும்?”

கொஞ்ச நாட்களைச் சிறையில் நிம்மதியாகவே கழித்தேன். இப்பொழுதெல்லாம் படுத்தால் கனவுகளே வருவதில்லை. நிம்மதியான தூக்கம். ஒருநாள் சாயங்காலம் வார்டன் வந்தார். “நாளைக்குக் காலைல ஒனக்குத் தூக்குப்பா. ஏதாவது கடைசி ஆச இருந்தா சொல்லு” என்றார். நான் யோசித்தேன், “நான் செத்தப்புறம் அவளப் பொதச்ச எடத்துக்குக் கிட்ட என்னப் பொதைக்கணும்” என்றேன். அவர் என்னை விசித்திரமாகப் பார்த்தார். கொஞ்ச நேரம் அங்கேயே நின்றார். என்ன யோசித்தார் என்று தெரியவில்லை. செத்த பிறகும், அவள் உடல் எனக்கு அருகில் மண்ணுக்கடியில் கிடப்பது எனக்குக் கிளர்ச்சியூட்டியது.

அடுத்த நாள் காலையில் என்னைக் கூட்டிப் போனார்கள். முகத்தின் மேல் கறுப்பு முகமூடியை அணிவித்தார்கள். கழுத்தைக் கயிற்றுக்குள் நுழைத்தார்கள். கயிறு கழுத்தைச் சுற்றி இறுகியது. வலிக்கத் தொடங்கியது. அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்குமோ?……..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *