கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: August 26, 2022
பார்வையிட்டோர்: 15,032 
 

சுகமான பஞ்சு மெத்தையில், பாஸ்டன் நகர குளிரை மிஞ்சும் ஏ.ஸி.செட்டிங்கில் , நாலு போர்வையை கழுத்து வரை இழுத்து போர்த்திக்கொண்டு படுக்கும் வேதிகா,

தரையில், கருரத்தம் நெற்றிப்பொட்டிலிருந்து ஒழுகி , பின்புற கழுத்துக்கடியில் கட்டியாக உறைந்த நிலையில்…

இந்த ஆடம்பர வாழ்க்கைக்கும்., புகழுக்கும் , அழகுக்கும் , அறிவுக்கும்…எனக்கும் எந்த உறவுமில்லை என்பது போல , வண்டுக்கண்கள் உயிருடன் நம்மைப் பார்ப்பது போல மல்லாக்க கிடந்தாள்.

கறுப்பு நிற பிளாங்கா ஏர் பிஸ்டல் அவள் கைவிரல்களை இறுகப் பற்றியிருந்தது…

***

இரவு இரண்டு மணியிருக்கும். வழக்கத்துக்கு மாறாக அரைமணி நேரமாக லூலூ விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது..

மாடியில் டுமீல் என்ற சத்தம்..ஏதோ வெடி சத்தமாகத்தான் தெரிந்தது..

நன்றாய் அசந்து தூங்கிக்கொண்டிருந்த சமையல்காரர் கேசவன் நாயர், தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்து அவசர அவசரமாய் அவிழ்ந்த வேட்டியை இறுக்கி கட்டிக் கொண்டு மாடியை நோக்கி விரைந்தார்..

இரண்டு படிகள் ஏறும்போதே முட்டிவலித்தது.. அவர் மாடியேறி ரொம்ப நாளாகிவிட்டது..

வேதாவின் அறையைக் கண்டுபிடிக்க கொஞ்சம் தடுமாறினார்..

“வேதா..! வேதா மோளே…!”

அறைக்கதவை பலமாகத் தட்டினார்..

பத்து நிமிடமாகியும் பதிலில்லை..

ஜன்னல் வழியாக பார்த்த காட்சி…

மோளே…என்னம்மா…! என்ன பண்ணிட்ட…?

ஐய்யோ ! சார் வேற ஆஸ்பத்திரியில இருக்காறே..!

இவ்வளவு நேரம் தாம் இருட்டில் நிற்கிறோம் என்பது அவருக்கு உறைக்கவே இல்லை.

அதனால் உள்ளேயிருந்த மங்கிய ஒளியில் அவரால் நன்றாகப் பார்க்க முடிந்தது.

லைட்டைப்போட்டார்..மெள்ள பிடித்துக் கொண்டே ஒவ்வோரு படியாக இறக்கி வந்தார்…

டெலிபோன் டைரியைப் புரட்டினார்.

கை நடுங்கியது..

“ஹலோ…! எம்பேரு கேசவன் நாயர்……

***

வழக்கமான கேள்விகள்.பழக்கமான பதில்கள்..

மணவாளன்….!

குற்றவியல் பிரிவின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் இளம் காவல்துறை அதிகாரி.

காவல் துறையில் சேவை செய்வதற்கே அவதாரம் எடுத்தவர் போல மிகவும் சிக்கென்ற உடல்வாகு.. ஆறடி உயரம்.வயது முப்பத்தைந்தை தாண்டாது…

கழுகுக் கண்களிலிருந்து ஒரு குண்டூசி கூட தப்பாது..

ஆம்.ஒரே சமயத்தில் எட்டுத்திக்கும் பார்க்கும்…

கதவு உள்பக்கம் தாளிட்டிருந்ததால் தாழ்ப்பாளை உடைக்க வேண்டியிருந்தது.

எத்தனையோ தற்கொலை கேசைப்பார்த்திருந்தாலும் , வேதிகாவின் கண்கள் அவரை உற்று நோக்கி ஏதோ கூற வருவது போலிருந்தது அவருடைய சிந்தனையைக் கொஞ்சம் கலைத்தது…

“ராமலிங்கம்…! சுரேன் !எல்லாத்தையும் டீட்டெய்லா செக் பண்ணி நோட் எடுத்துக்குங்க…கதவ சாத்தி சீல் வச்சிட்டு பாடிய போஸ்ட்மார்ட்டம் பண்றதுக்கான ஏற்பாடுகள பண்ணுங்க.

யாரையும் உள்ள அலவ் பண்ணாதீங்க.. மாடிக்கே ஏறவிடாதீங்க..!

நான் கீழ கேசவன் நாயரோட பேசவேண்டியது நிறைய இருக்கு.

என்ன சந்தேகமானாலும் உடன மெஸேஜ் பண்ணுங்க.

எந்த எவிடன்சையும் அலட்சியமா விட்றாதிங்க.“

“யெஸ் சார்…”

“வாங்க கேசவன் நாயர் !! கீழ போகலாம்…”

***

கீழே சோஃபாவில் வசதியாக அமர்ந்து கொண்டார்.

கேசவன் கொடுத்த சுவையான கும்பகோணம் ஃபில்டர் காப்பியுடன் அவர் கேசவனிடம் சம்சாரிக்க ஆரம்பித்தார்..

இருவரும் கேரளாவிலிருந்து வந்தவர்கள் என்பதால் தமிழும் மலையாளமும் கலந்து உரையாடல் இரண்டு மணி நேரம் போயிற்று…

***

வேதிகா க்ரூப் ஆஃப் கம்பெனிகளின் சேர்மேன் மற்றும் எம்.டி. டாக்டர் வேதிகா . முப்பத்தைந்து வயது.கணவன் டாக்டர் அலெக்ஸ்.

காதல் திருமணம்.. குழந்தைகள் இல்லை…

***

“கேசவன் அங்கிள்.. நான் குழந்தை வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்..

காலையிலிருந்து ராத்திரி வரை விஸ்கியத் தவிர வேற எதுவுமே தெரியாத இவனுக்கு குழந்த பெத்துக்கிற மாதிரி அவமானம் எனக்கு வேற எதுவுமே இல்லை…”

சமீபத்தில்தான் OMR ரோட்டில் பீச்சை ஒட்டி ஆறு கிரவுண்டில் வீடு…

எழுந்ததிலிருந்து படுக்கும் வரை சண்டை.. வாக்குவாதம்…சண்டை..

இருவருமே தனித்தனி அறையில் படுப்பதாக பணிப்பெண் அமராவதி சொல்லித்தான் தெரியும்..

சேர்ந்து சாப்பிட்டு ஒரு வருடத்துக்கு மேலாகி விட்டது..
அலெக்ஸ் சாப்பிட்டு முடிக்க பதினொன்று ஆகிவிடும்.

காலையில் எழுந்திருப்பதோ பத்து மணி..

வேதிகா காரை ஸ்டார்ட் செய்கிறாள் என்றால் மணி சரியாக எட்டு..

***

“அங்கிள்.. இவனோட அதிக நாள் தாக்குப்பிடிக்க முடியாதுன்னு தோணுது..

இப்பவே அவனுக்கு கைகாலெல்லாம் நடுங்குது… கிளினிக் பக்கம் எட்டிப்பாத்து எத்தனை மாசமாச்சு..? இவனா காலேஜ்ல கோல்ட் மெடல் வாங்கினான்…? உங்களால நம்ப முடியுமா? என்ன குறை? எதுக்கு இந்த குடிப்பழக்கம்..?

இதில பெரிய நர்சிங்ஹோம் கட்டணுமாம்.. இரண்டு கோடி ரூபா வேணுமாம்..”

***

“அங்கிள்… நான் ஓடி ஓடி யாருக்கு சம்பாதிக்கறேன்னே புரியல..! எனக்கு வாழ்க்கையே வெறுத்திருச்சு…!!”

“ஒரு நாள் தற்கொல பண்ணிக்கிட்டா கூட ஆச்சரியப்படாதீங்க…!!”

***

ஒரு வருடமாகவே அலெக்ஸ் நடக்கத் தடுமாறினான்… இரண்டு மூன்று தடவை கண்கள் இருட்டி மயக்கமாகி விட்டான்..

போன மாதம் “தயா “மருத்துவமனையில் அட்மிட் செய்தாள்…

அன்றிலிருந்து வேதிகா மாறிப்போனாள்…!!

***

“டாக்டர்.ஹரி..! அலெக்ஸ்னு ஒரு பேஷன்ட்.. நான் பிரிலிமினரி செக்கப் முடிச்சு ரிப்போர்ட்ல எல்லாம் விவரமா எழுதி இருக்கேன்.ஃபாலோ தி ரொட்டீன் ப்ரொஸீஜர்ஸ் அண்ட் கம் பேக் டு மீ. கொயட் சீரியஸ் கேஸ்…!!

அவுங்க மனைவிகிட்ட கொஞ்சம் விவரம் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு…”

டாக்டர்..தயாநிதி… நியூரோசர்ஜன்….எம்.எஸ்.எஃஆர்சிஸ்…இன்னும் ஒரு அடி நீளத்தி’ ஏ.பி.சி.டி.’ ஒன்றையும் மீதி வைக்காமல் டிகிரிகள்…

‘தயா ந்யூரோகிளினிக் ‘கின் உரிமையாளர்..சென்னையிலேயே பெயர் சொல்லும் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்..

முப்பத்தைந்து வயது.ஆறடிக்கு சற்று குறைவான உயரம். முழுவதும் நரைத்த அடர்த்தியான தலைமுடியிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் ஒரு சிலரில் இவனும் அடக்கம்..

எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் கண்கள் இயற்கையில் அமைந்ததா ? தெரியவில்லை..

“மே ஐ கம் இன் டாக்டர்…?”

“யெஸ். ப்ளீஸ்…”

வந்தவள் வேதிகா… டாக்டர் வேதிகா…!

“ப்ளீஸ் டேக் யுவர் சீட்…”

ரிப்போர்ட்டில் கவனமாயிருந்த தயா நிமிர்ந்ததும் கண்ணுக்கு முன்னால் நின்றவளைப் பார்த்து மின்னல் தாக்கியவன் போல் ஒரு வினாடி பார்வை இழந்தான்..

“ஹேய்…! யூ ! வேத். ? டாக்டர் வேதிகா ஃப்ரம் வெல்லூர் மெடிக்கல் காலேஜ் ?”

“நீங்க…நீங்க..? ஏய் நீ தயாதானே ? எனக்கு எப்படி தோணாம போச்சு ?

கறுப்பு முடியவிட ..க்ரே ஹேரில் …யூ லுக் ஷோ யூத்ஃபுல் அண்ட் ஹேண்ட்சம்…!”

இருவருக்குமே பளிச்சென்று நினைவுக்கு வந்தது இரண்டாம் வருடம் பயோகெமிஸ்ட்ரி லேபில் , அவனும் அவளும் தனியே…!

ஒரு நிமிடம்..அவனை அதேபோல் அப்படியே கட்டிபிடித்து முத்தமிட தோன்றியது..

உடம்பெல்லாம் வெந்து தணிந்தது..

“வேதிகா ! நீ அலெக்ஸ கல்யாணம் பண்ணியிருப்பன்னு கனவுல கூட நினைக்கல..அதுனால என்னால சட்டுன்னு கனெக்ட் பண்ண முடியல…!

நீ பெரிய கார்டியாலஜிஸ்ட்டா பிராக்டீஸ் பண்ணிட்டிருப்பன்னுதான் நெனச்சேன்.. ..!!

மிகப்பெரிய தொழிலதிபரா சந்திக்கிறது ஒரு பக்கம் ரொம்பவே மகிழ்ச்சியா இருந்தாலும் மருத்துவ துறை நல்ல இருதயநிபுணர இழந்திருச்சோன்னு நினக்கும்போது நிறையவே ஏமாத்தமா இருக்கு..!

“தயா.. உன்னோட பழைய கேலியும் கிண்டலும் மாறவேயில்லையா…?”

“”வேத்..! ஜயம் பிரட்டி சீரியஸ்..”

இருவரும் சட்டென்று மௌனமானார்கள்..

நினைவுகளில் மூழ்கி மேலே வரமுடியாமல் கீழே.கீழே..போய்க்கொண்டே இருந்தார்கள்…!

எத்தனை முத்துக்கள்…?

***

மணவாளனுக்கு இந்த கேஸ் சுலபமாக முடிந்து விடும் ஒன்றாகத்தான் தோன்றியது.

தாளிட்ட அறையில் தற்கொலை.!!

நிச்சயம் கொலையில்லை.!

ஆனால் ஏன் ? எதற்காக..?

கசப்பான திருமண வாழ்க்கை? பெரிய தொழிலதிபருக்கு விவாகரத்து ஒன்றும் பெரிய விஷயமில்லை.!!

ஆனால் போனமாதம் முழுவதும் மருத்துவமனையில் …

ஓடி ஓடி கவனித்திருக்க வேண்டும்!!

ஆனாலும் தற்கொலை எண்ணம் இருந்திருக்கிறது..?

எதற்காக துப்பாக்கி..? அவனுக்கா? அவளுக்கா ?

மணவாளன் மனதில் ஆயிரம் கேள்விகள்? யூகங்கள்!!

எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது சுரேன் அவளுடைய அறையில் கண்டெடுத்த கடிதம்..

“நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்..என்னை தற்கொலைக்கு தூண்டிய……”

மணவாளன் எதிர்பார்க்கவில்லை….

***

வேலூர் மருத்துவக் கல்லூரி!!

முதலாண்டு மருத்துவ மாணவர்களில் எல்லோர் கவனத்தையும் ஈர்த்தவர்கள் மூன்று பேர்..

தயாநிதி , வேதிகா , அலெக்ஸ்..!

ஏதோ ஒரு காந்த சக்தி மூவரிடமும் இருந்தது.

அதே காந்தசக்திதான் மூவரையும் ஒருவருடன் ஒருவரை கவர்ந்தது..

மூவர் என்றாலே முக்கோணக் காதல்தானே!

தயா <வேத் <அலெக்ஸ்….!!

மூவருமே பிற்காலத்தில் மருத்துவத்துறையில் பிரகாசிக்கப் போவதற்கான ஒளிவட்டம் தலையைச் சுற்றி……

இரண்டாம் வருடம் அனாட்டமி டிசெக்க்ஷன்… வாரத்தில் ஒரு நாள்.

வேதிகாவும் தயாவும் ஒரே டேபிள்…அலேக்ஸ் அந்த நேரங்களை வெறுத்தான்..

யாருக்குமே புலப்படாத நரம்புகள் எப்படியோ தயா கண்ணில் மட்டும் பட்டுவிடும்..

எல்லோரும் ‘ ட்ரோக்ளியர் ‘ நரம்பைத் தேடிக்கொண்டிருக்கும் போதே ‘ இதோ ‘ என்பான்..

மனித உடம்பிலேயே மிக மெல்லிய ஆனால் நீளமான க்ரேனியல் நரம்பு… இமைகள் மூடித்திறக்க உதவும் நரம்பு..

“வாவ் ‘ என்று எல்லோர் தலையும் அந்த மனித சடலத்துக்குள் முகம் புதைக்க வேதிகா மட்டும் இமைக்காமல் தயாமுகத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள்.

“வேத்? என்ன ? கண்கொட்டாம அவனையே பாக்கிற ? உனக்கு அந்த நரம்பே இல்ல போலயே..?

டேனியல் அடித்த ஜோக்குக்கு எழுந்த சிரிப்பலை வேதிகாவுக்கு தன்னிலை உணர்த்தியது.

தயாவின் திறமை ஆசிரியர்களையே வியப்பிலாழ்த்தியது..

வேதிகா அவன் மேல் பித்தானாள்…!

யாருமில்லாத போது ஒரு நாள் லேபில் வலுக்கட்டாயமாக அவனைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டாள்..

கொஞ்சம் கொஞ்சமாக அவளது அன்பு வலையில் வீழ்ந்தான் தயா..

அந்த வருட தங்கப் பதக்கங்கள் எல்லாம் அலெக்ஸ் மடியில்.

வேதிகாவும் கூடிய சீக்கிரமே அவன் மடியில் விழும் நாளுக்காக காத்திருந்தான் அலெக்ஸ்….!!

மிக எளிதில் உணர்ச்சி வசப்படும் வேதிகாவை விரித்த வலையில் விழச்செய்வது அலெக்ஸைப்போன்ற கிரிமினல் மூளை உடையவனுக்கு எளிதில் சாத்தியமானது……

***

தயா முழித்துக் கொண்டான்.

வேதிகாவை முற்றிலும் தவிர்த்துவிட்டான்..வேதிகாவை ஏமாற்றமும் அவமானமும் மாறி மாறி மாறி வாட்டி எடுத்தது..

அலெக்ஸிடம் ஒரு நாள் எல்லாவற்றையும் கொட்டித்தீர்த்து தோளில் முகம் புதைத்து அழுதாள்..

இனி அவள் அவன் மடியில் விழும் நாள் அதிக தூரத்தில் இல்லை..

“வேதா! நீயே பார்த்தயில்லை..

பெரிய புத்திசாலியாயிருந்தா காதல் முட்டாளாக்கிடுமா.?

அவனால உனக்கு ஒருநாளும் சந்தோஷம் கிடைக்காது…

வெறும் படிப்பு , படிப்புன்னு இருந்தாமட்டும் போதுமா..?

நான் உங்கிட்ட சவால் விடறேன்..நீ மட்டும் சரின்னு சொல்லு… இரண்டையுமே நான் சாதிச்சு காட்டறேன்…!!”

“இரண்டையுமேன்னா?”

“லவ் யூ வேதா!!”

***

“தயா! உன்ன பழிவாங்குவதா நெனச்சு என்னையே ஏமாத்தி கிட்டேன்..

கடைசி வருஷம் எல்லா பதக்கத்தையும் அள்ளிக்கிட்டு சிறந்த மாணவனா நீ மேற்படிப்புக்கு லண்டன் போய்ட்ட.

இரண்டு பேருமே அரியர்ஸ் இருந்ததால அடுத்த வருஷம் தான் க்ளியர் பண்ணினோம்..

நான் செஞ்ச பெரிய முட்டாள்தனம் அவன கல்யாணம் பண்ணிக்கிட்டதுதான்…!

தயா..! ஹி இஸ் எ க்ரூக்…! பணத்துக்காக என்னை என்னவேணா செய்வான்…!

எனக்கு அவங்கிட்டேயிருந்து விடுதல வேணும்..! “

“வேத். ! நீ ஒரு வக்கீல் கிட்ட பேசல. ஒரு டாக்டர் கிட்ட பேசறங்கிறத நியாபகம் வச்சுக்கோ…!

உனக்கு தெரியும் இப்போ அவன் என்னோட பேஷன்ட்..

நான் முதல்ல அவனோட ரிப்போர்ட்டெல்லாம் பாக்கணும்.

நாளைக்கு மறுபடியும் நீ வர வேண்டியிருக்கும். ட்ரீட்மென்ட் என்னன்னு டிஸ்கஸ் பண்ணனும்…

லெட்டஸ் ஃபோகஸ் ஆன் ஹிம்.அப்புறம்தான் மத்ததெல்லாம்.

நிறைய பேஷன்ட்ஸ் காத்திருக்காங்க.. காம் டவுன்…! குட் லக் அண்ட் ஸீ யூ டுமாரோ.”

***

வேதிகா தினமும் வந்தாள்.பேசினாள்.பேசினாள்…பேசினாள்…….

அதில் அலெக்ஸ் இல்லவேயில்லை… அவள் மனது முழுதும் ‘ தயா..தயா..தயா… தான்.

“வேத்! அலேக்ஸோட கண்டிஷன் எவ்வளவு சீரியஸ் தெரியுமா..?

“தயா.. எனக்கு நல்லாவே தெரியும்..உனனால மட்டும்தான் இந்த ஆபரேஷன வெற்றிகரமா செய்ய முடியும்…

ஆனா என்ன ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்னு பிடிவாதமாக இருக்க…உன்ன மறக்கமுடியலையே தயா…!

ஐயம் மேட்லி இன் லவ் வித் யூ.! தேன் எவர் பிஃபோர்..”

“வேத்.. நான் சரியாக தூங்கி ஒரு வாரமாச்சு.. ப்ளீஸ்..வேண்டாதத பேசி என் கவனத்த குலைக்காதே.

என்ன நம்பி உன் அலெக்சையே என் கையில ஒப்படைச்சிருக்க.!”

“எனக்கு நல்லாவே தெரியும் தயா..நீ நிச்சயம் அவன பிழைக்க வச்சிடுவ…”

“தாங்யூ வேத் ! என்மேல இவ்வளவு நம்பிக்கை வச்சதுக்கு…”

“ஆனா..ஆனா..தயா..! அவன் பிழைக்கக் கூடாது.. யெஸ்!

யெஸ்..ஐ டோன்ட் வான்ட் ஹிம் பேக்…!!அந்த அரக்கன கொன்னுடு…”

அதற்கப்புறம் வேதிகா பேசியது ஒன்றுமே அவன் காதில் விழவில்லை..

அழுதாள்..கெஞ்சினாள்..மிரட்டினாள்..!!

“இதைவிட நல்ல சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காது…உன்னை யாரும் சந்தேகப் படமாட்டாங்க…திரும்ப அந்த நரகத்தில என்னத் தள்ளிவிடாத…”

“வேதிகா.. ஒண்ணு மட்டும் நிச்சயம்.அலெக்ஸோட ஆபரேஷன் வெற்றியோ , தோல்வியோ …… நீ நினைக்கிற மாதிரி உன்னோட ஒருநாளும் சேர்ந்து வாழ என்னால முடியாது. ஃபர்கெட் அபவுட் இட்.!!

சனிக்கிழமை ஆபரேஷன்.. உன் எண்ணத்த மாத்திக்கோ.விஷ் மி குட் லக்! “

***

“டாக்டர் தயாநிதி..?”

“யெஸ்..ஸ்பீக்கிங்…!”

“ஐ அம் இன்ஸ்பெக்டர் மணவாளன்.சிபி…சிஐடி.”

“சொல்லுங்க மணவாளன்..!”

“எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல…உங்க மேல ஒரு அரெஸ்ட் வாரன்ட் இருக்கு..!”

“அரெஸ்ட்டா..!”

தயாவின் குரலில் பெரிய மாற்றம் ஏதுமில்லை..

“கொஞ்சம் விவரமா சொல்ல முடியுமா…?”

அஃப்கோர்ஸ்..! அது என் கடமையாச்சே…

டாக்டர் வேதிகா தற்கொலை விஷயமா…”

“ஓ ..ஐ சீ…ப்ரொஸீட்…”

“ஆனா உங்கள அரெஸ்ட் பண்ண அவசியமில்லைன்னு சீஃப் மெஸேஜ் அனுப்பிட்டாரு. ஆனா உங்க கிட்ட விரிவான என்கொயரி பண்ண உத்தரவு.

எப்ப வச்சுக்கலாம்…?”

“லக்கிலி இன்னைக்கு ஆறுமணிக்கு மேல எனக்கு ஆபரேஷன் எதுவும் இல்ல. ஒய் நாட் பிட்வின் சிக்ஸ் அண்ட் எய்ட்…?”

“பெர்ஃபெக்ட்…!”

மணவாளனுக்கு மனதை அரித்த ஒரு விஷயம்..

டாக்டர் தயாவுக்கு கோபம் வந்து பார்த்தவர்கள் அபூர்வம்! அதற்காக இப்படியா..? தலையில் இடி விழுந்திருக்கிறது….!!! சம்திங் ஃபிஷ்ஷி….!

***

ஆழ்வார்பேட்டையில் பெரிய தோட்டத்துடன் வீடு..
உதவி ஆட்களைத் தவிர பெண்கள் யாரும் இருப்பதாய் தெரியவில்லை..

கொஞ்சம் கூட பதட்டமில்லாமல் கேட்ட கேள்விக்கெல்லாம் பொறுமையாக பதில் சொன்னான் டாக்டர் தயாநிதி..

வேதிகாவின் கடிதத்தை அலட்சியமாய் படித்துவிட்டு ஒரே வினாடியில் திருப்பிக் கொடுத்து விட்டான்…

“டாக்டர் தயா…! உங்க பேரை தெளிவா குறிப்பிட்டு ,

‘அலெக்ஸ பிளான் பண்ணி….‘

***

அலெக்ஸுக்கு சர்ஜரிக்கு முன்னால் நடக்க வேண்டிய முன்னேற்பாடுகளெல்லாம் திட்டமிட்டபடி போய்க் கொண்டிருந்தது..

தயா எப்போதுமே அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிடுவது வழக்கம்.

அதுவும் அலெக்ஸ் அவனுடன் படித்தவன்.வேதிகாவின் கணவன்..

“அலெக்ஸ்.. நீயும் ஒரு டாக்டர் என்பதால நான் உங்கிட்டேயிருந்து எதையும் மறைக்க விரும்பல.

உனக்கும் இப்போ எல்லாமே தெரியும்..

ப்ரெயின் ஸ்டெம் க்லியோமா.

உனக்கே தெரியும் சர்ஜரியோட ஸக்ஸஸ் ரேட்.!!

இப்போகூட விரும்பினா நீ வேற சர்ஜன மாத்திக்கலாம்.

ஐ ஹாவ் அப்ஸல்யூட்லி நோ அப்ஜெக்க்ஷன்..

ஆனா வேதிகா பிடிவாதமா நான்தான் பண்ணனும்னு தீர்மானம் பண்ணிட்டா…!

என்ன சொல்ற ? நீ தயாரா..?”

“தயா..! உன்மேல் நூறு இல்லை..இருநூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு..

ஆனா..தயா..! நான் பிழைக்கக் கூடாது..வேதாவுக்கு நான் பணணின துரோகத்துக்கு நான் திரும்ப உயிரோட வராம இருக்கிறதுதான் எல்லோருக்குமே நல்லது..

ப்ளீஸ்.லெட் மீ டை…எனக்கு இந்த ஆபரேஷன் வேண்டாம்..!”

இதுவரை நடந்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் கொட்டித் தீர்த்தான்..

தயாவுக்கு சுமை அதிகமானது.

ஒரு கட்டத்தில் தனக்கு பதில் இன்னொருவரிடம் இந்த கேசை ஒப்படைப்பது நல்லதோ என்று கூட எண்ணினான்..

ஆனால் இந்த சவாலில் தோற்கக் கூடாது..அலெக்ஸை எப்படியும் வேதா கையில் திருப்பி கொடுத்தே ஆகவேண்டும்…!!

***

சர்ஜரிக்கு முதல்நாள்..

அலெக்ஸ் ரொம்பவே மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தோன்றியது..

வேதிகா அவனை கட்டிப் பிடித்து வாழ்த்து சொன்னாள்..

தயாவிடம் “என்ன ஏமாத்திடாத.! அதர்வைஸ் யூ வில் ஹாவ் டு ஃபேஸ் தி கான்சிகொயின்ஸஸ்…”என்று எச்சரித்தாள்..!!

ஆபரேஷன் தியேட்டர் போவதற்கு முன்னால் அலெக்ஸ் தயாவிடம் ஒரு கவரைக் கொடுத்து ,

“சர்ஜரி முடிஞ்சப்புறம் திறந்து பாரு…! விஷ் யூ குட் லக் !”

என்று விரல் உயர்த்தி காண்பித்தபடி உள்ளே தள்ளப்பட்டான்…

***

“ம்ம்ம்..ஏன் நிறுத்திட்டீங்க? மேல படிங்க!

அவ மேல இருந்த காதலால திட்டமிட்டு அலெக்ஸ கொன்னுட்டேன்.அதானே…!”

“ப்ளீஸ்.. டாக்டர்.. என் வாயால அத சொல்லல.! அவங்களோட கடிதம்!”

“யெஸ்.. நீங்க உங்க கடமையத்தான் செய்ய வந்திருக்கீங்க!”

“யெஸ் டாக்டர்.. தற்கொலைக்கு தூண்டினதுக்காக உங்கள் அரெஸ்ட் பண்ண முடியாது.ஆனா அவுங்க உங்க மேல சுமத்தியிருக்கிற குற்றம்!

அதை நிச்சயம் இன்வெஸ்டிகேட் பண்ணியாக வேண்டிய கட்டாயம்…”

“மணவாளன்..! உங்கள நான் ரொம்பவே மதிக்கிறேன்.. நிச்சயமா என்னோட முழு ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு..!

அதுக்கு முன்னால இந்த கடிதத்த உங்க கிட்ட காட்டியே ஆகணும்…

மணவாளன் கடிதத்தை படிக்க படிக்க முகத்தில் தோன்றிய வெளிப்பாடுகள்…!! உணர்ச்சிகள்!!

***

“டியர் தயா ! இந்தக் கடிதத்தை நான் சுயநினைவுடன் எழுதுகிறேன்..

சாட்சிக்கு என் வக்கீலும் உடன் இருக்கிறார்.

இந்த அறுவைசிகிச்சை எத்தனை சிக்கலானது என்பதை ஒரு மருத்துவர் என்ற முறையில் நன்கு அறிவேன்.

முடிவு எப்படியும் இருக்கலாம்.

ஆனால் நான் எடுத்த முடிவு இந்த கடிதத்தில்..

நான் வேதிகாவை விவாக பந்தத்திலிருந்து விடுதலை செய்கிறேன்.. உன்னைவிட பொருத்தமான ஒரு துணை அவளுக்கு இருக்க முடியாது.

ஆனாலும் என் முடிவை உங்கள் இருவர் மீது திணிப்பது அநாகரீகம்.

நீ மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்..!!

அலெக்ஸ்.

***

“மிஸ்டர்.மணவாளன்..! வேதிகா அவசரப்பட்டு இந்த முடிவ எடுத்திருக்க வேண்டாமோன்னு தோணுது…!

“அப்படீன்னா…?”

“ப்ளீஸ் டோன்ட் ரீட் பிட்வின் லைன்ஸ்…

யூ கேன் கோ ஃபர்தர் வித் யுவர் என்கொயரி.!”

“தி கேஸ் இஸ் க்ளோஸ்ட் டாக்டர் !

உங்க கிட்ட ஒரு பர்சனல் கேள்வி..கேசுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..

வேதிகா உயிரோட இருந்தா…?”

“மணவாளன்! நான் என்னோட இரண்டு நல்ல நண்பர்களை இழந்துவிட்டேன்….

இதுக்குமேல சொல்றதுக்கு எதுவுமில்லன்னு நினைக்கிறேன்.

தி கேஸ் இஸ் க்ளோஸ்ட்…”‘

இருவர் சிரிப்பும் சேர்ந்து ஒலித்தது புதுமாதிரியாக இருந்தது..!!

“தயா.. உண்மையிலேயே நீங்க உயர்ந்த மனிதர்..விஷ் யூ ஆல் தி பெஸ்ட்..!!”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *