தீண்டித் தீண்டி…

 

நான் ஸ்வேதா. வயது 17. சினேகாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடைப்பட்ட நிறம். உயரம்..? நடிகர் மாதவன், தலையைக் குனியாமல் என் உதட்டில் முத்தம் கொடுக்கலாம். வீட்டில் பணம்… நிறையப் பணம். அம்மா, அப்பாவால் வளர்க்கப்பட்டேன் என்பதை விட, பணத்தால் வளர்க்கப் பட்டேன் என்பதே நிஜம்!

ப்ளஸ் டூ முடித்தவுடன், நகருக்கு வெளியே, ரகசிய நோய் மருத்துவர்களுக்கு அடுத்து அதிகமாக முளைத்திருக்கும் இன்ஜினீயரிங் காலேஜில் அப்பா என்னைச் சேர்த்துவிட, அங்குதான் கதையே ஆரம்பம்!

வினோத், எங்கள் காலேஜில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவன். நான்காலேஜுக்குச் சென்ற முதல் நாளே, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

‘‘ஹாய்! என் பேர் வினோத். ட்ரிபிள் இ தேர்டு இயர். அப்பா கார்ப்பரேஷன் ஸ்கூல்ல டீச்சர். இருபது வருஷமா, வாய்ப்பாடு சொல்லித் தந்துட்டிருக்கார். அம்மா நர்ஸ். உன் பேரு?’’ என்ற வினோத் நல்ல உயரம்.

‘‘ஸ்வேதா’’ என்றேன். அவனுடைய வசீகரமான தோற்றமும், கலகலப்பான பேச்சும் எனக்குப் பிடித்து விட்டது.

பஸ்ஸிலும், கல்லூரி யிலும் தினந்தோறும் வினோத்தைச் சந்தித்தேன். பேசினோம்… வளர்த்து வானேன்? காதலிக்கத் தொடங்கிவிட்டோம்.

வினோத்துடன் பழகப் பழக, அவன் என்னை ஒரு புயல் போல ஆக்கிரமித்தான். சிரிக்கச் சிரிக்கப் பேசினான்.

‘‘என்ன வினோத், ரொம்ப டல்லா இருக்கே?’’

‘‘ப்ச்.. உடம்பு சரியில்லை!’’

‘‘என்ன உடம்புக்கு?’’

‘‘நமீதா சிண்ட்ரோம்னு ஒரு வியாதி!’’

‘‘நமீதாவா,யார் அது?’’

‘‘நமீதாவைத் தெரியாதா? நாசமாப்போவே! தமிழ் சினிமா பாக்கிறதே இல்லையா?’’

‘‘ம்ஹ¨ம்! இங்கிலீஷ், இந்தி மூவிஸ்தான் பார்ப்பேன்!’’

‘‘சரியாப்போச்சு, கடவுளே… நமீதாவை அறியாத இந்தக் குழந்தையின் பிழையை மன்னித்துவிடு!’’

‘‘அதை விடுறா! இந்த நோயோட அறிகுறிகள் என்னென்ன, அதைச் சொல்லு?’’

‘‘நமீதாவை ஸ்க்ரீன்ல பார்த்த வுடனே, மனசுக்குள்ள ஒரு குதிரை ஓடும். தேங்காய் பால் ஆப்பம் சாப்பிட்ட மாதிரி, உடம்பெல்லாம் மதமதன்னு இருக்கும். மறுநாள், லவ்வர் மடியில படுத்துக்கத் தோணும்’’ என்றபடி என் மடியில் படுத்துக்கொண்டான்.

‘‘பொறுக்கிப் பையா!’’ என்று அவன் நெஞ்சில் குத்தினேன்.

வினோத் மேலும் என்னை நெருங்கினான்.

‘‘நேத்து ராத்திரி பூராவும் தூங்கவே இல்ல ஸ்வேதா! விடிய விடிய உன் நினைப்புதான்!’’ என்றான் ஒருநாள்.

‘‘கதை விடாதடா! நமீதா, த்ரிஷானு யாரையாச்சும் நினைச்சிட்டிருப்பே!’’

‘‘நிஜமாத்தாண்டி! ராத்திரில நீ என்னை நினைச்சுக்கிறதே இல்லியா?’’

‘‘சேச்சே! இல்லப்பா!’’

‘‘நிஜமா?’’

‘‘சத்தியமா!’’

‘‘உன் ரெண்டு மனசாட்சி மேல ஆணையா?’’

‘‘ரெண்டு மன சாட்சியா?’’ என்று குழம்பிய நான், ‘யூ… நாட்டி ராஸ்கல்!’’ என்று அவன் தலை முடியைப் பிடித்து உலுக்கினேன்.

என் விரல்களை இழுத்துத் தன் உதடுகளால் கவ்வியபடி, ‘‘வெட்கப்படுறப்ப நீ இன்னும் அழகா இருக்கே!’’ என்றான்.

எனக்கு ஜிவுஜிவுவென்று ஏறியது. அப்படியே அவன் தோளில் சாய்ந்த என்னை அணைத்தபடி, ‘‘என்ன சோப்பு போடுற..? வாசனை கமகமன்னு இருக்கு.’’

‘‘நீயே கண்டுபிடி!’’

அவன் என் கழுத்தில் முகர்ந்து பார்த்துவிட்டு, ‘‘லிரில்..?’’ என்றான்.

‘‘இல்ல!’’

எனது கன்னத்தில் தனது உதடு களையும், மூக்கையும் அழுத்தமாகப் பதித்து, ‘‘மார்கோ?’’ என்றான்.

எனக்கு உடம்பினுள் அனல் காற்று சுழன்றடித்தது. ‘‘இல்ல…’’ என்றேன் கிசுகிசுப்பாக.

அவன் மேலும் என்னை இறுக்கமாக அணைத்தபடி, எனது உதடுகளில் தன் உதடுகள் உரச ‘‘லக்ஸ்?’’ என்றவன், அப்படியே…

நான் தடுக்கவில்லை.

அதன் பிறகு, எப்பொழுது தனிமையில் சந்தித்தாலும், முதல் பத்து நிமிஷம்தான் பேச்சு. பிறகு முத்தங்கள், தழுவல்கள்.

ஒருநாள் வினோத்திடம், ‘‘எனக்கு எலெக்ட்ரிகல் நெட்வொர்க் புரியவே மாட்டேங்குதுடா’’ என்றேன்.

‘‘நாளைக்கு எங்க வீட்டுக்கு வா, சொல்லித் தரேன்’’ என்றான்.

‘‘வீட்ல…’’

‘‘யாரும் இருக்க மாட்டாங்க! அம்மா, அப்பா வேலைக்குப் போயிடுவாங்க. தங்கச்சி ஸ்கூலுக்குப் போயிடுவா.’’

‘‘வேண்டாம்ப்பா…’’ என்றேன்.

‘‘ஒண்ணும் நடக்காது, வா!’’ என்றான்.

மறுநாள் சென்றேன். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.

‘‘வினோத்… ஒரு கடி ஜோக்!’’

‘‘சொல்லு?’’

எனது நடுவிரலை நீட்டி, ‘‘இந்த விரல் நகத்தை உன்னால கடிக்க முடியாது. ஏன், சொல்லு?’’ என்றேன். வினோத் விழிக்க, ‘‘தெரியலையா? ஏன்னா… இது என் விரல்’’ என்றேன்.

‘‘இல்ல. என்னால கடிக்க முடியும்’’ என்றவன், என் விரலைப் பிடித்து, தனது பற்களால் மெல்ல என் நகத்தைக் கடிக்க, அவன் உதடுகள் என் விரலில்… உடல் தீப்பற்றி எரிந்தது.

நகத்தைப் பிய்த்துவிட்டு நிமிர்ந்த வினோத் நகத்தைத் துப்ப, அது என் கன்னத்தில் ஒட்டிக்கொண்டது. நான் அதை எடுக்க முயற்சிக்க, ‘‘இரு’’ என்றவன் தனது உதடுகளால், ஒட்டியிருந்த என் நகத்தை ஒற்றி எடுக்க, அவன் மூச்சுக்காற்று சூடாக கன்னத்தில் பட, தாள முடியாமல் ‘‘வினோத்…’’ என்று அவன் தோள்களை நான் இறுகத் தழுவ… நான் முற்றிலும் வீழ்ந்துபோனேன்.

முந்தைய நாள் எது நடக்காது என்று வினோத் சொன்னானோ, அது நல்லபடியாகவே நடந்து முடிந்தது. மனிதனின் உடலுக்குள் கடவுள் இத்தனை மகத்தான சந்தோஷங்களை ஒளித்து வைத்திருக்கிறானா? எனக்கு அதன்பின் அடிக்கடி எலெக்ட்ரிக்கல் நெட்வொர்க்கில் சந்தேகம் வரத் தொடங்கியது.

நான் பி.இ. இரண்டாம் வருடம் படித்துக்கொண்டு இருக்கும்போது, எங்கள் காதல் விஷயம் வீட்டுக்குத் தெரிய வர, அந்தஸ்து வித்தியாசத்தைக் காரணம் காட்டித் தீவிரமாக எதிர்த்தார்கள். என்னைக் காலேஜுக்கு அனுப்புவதை நிறுத்தினார்கள். என் கண்ணீரையும், போராட்டத்தையும் புறக்கணித் தார்கள். அவசர அவசரமாக ஒரு மும்பைத் தொழிலதிபரை எனக்கு நிச்சயம் செய்தார்கள். என்னை மறந்துவிடச் சொல்லி, தோழி மூலமாக வினோத்துக்குக் கண்ணீர்க் கடிதம் கொடுத்து அனுப்பினேன்.

திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்தன. எப்போதும் என்னருகில் காவலுக்கு ஆள் இருந்தார்கள்.

இப்படியே மூன்று மாதம் ஓட… இப்போது சற்று சமாதானமாகி இருந்தேன். திருமணம் குறித்தும், வருங்காலக் கணவன் குறித்தும் சற்று ஆர்வம்கூட ஏற்பட்டது. அவ்வப்போது அவருடன் தொலைபேசியிலும் உரையாட ஆரம்பித்தேன். திருமணப் பத்திரிகையை நேரடியாகச் சென்று என் தோழிகளுக்குக் கொடுக்க வீட்டில் சம்மதித்தார்கள்.

ரேணுகா மேடத்துக்குப் பத்திரிகை கொடுப்பதற்காக, அவர் வீட்டுக்குச் சென்றேன். வினோத்துக்கும் எனக்குமான காதல் விவகாரங்கள் தெரிந்தவர் அவர்.

‘‘என்னிக்கு மேரேஜ்?’’ என்றார்.

‘‘வர்ற 30&ம் தேதி!’’

‘‘போச்சு, போ! எனக்கும் அன்னிக்குதான் மேரேஜ்’’ என்று தன் பத்திரிகையை நீட்டினார்.

‘‘அப்படியா? வாட் எ சர்ப்ரைஸ்! கங்கிராட்ஸ்!’’ என்று கை குலுக்கினேன்.

என் பத்திரிகையைப் பார்த்த மேடம், ‘‘ஸோ… மேரேஜுக்கு ரெடியாயிட்ட!’’ என்றார்.

‘‘ம்… ஆனா, சந்தோஷத்தோட ரெடியாகலை!’’

‘‘ஏன்?’’

‘‘வினோத்தை இழந்த வேதனை இன்னும் இருக்கு.’’

‘‘ம்…’’ என்று கேலியாகச் சிரித்தவர், ‘‘அப்படி வேதனை இருக்குறவ, வீட்ல போராடி, அவனையே கல்யாணம் பண்ணிக்கவேண்டியதுதானே?’’

‘‘நானும் எவ்வளவோ போராடிப் பார்த்துட்டேன், மேடம்! வீட்ல ஒப்புக்கலை!’’ என்றேன்.

‘‘நான் ஒண்ணு கேட்டா, தப்பா எடுத்துக்கக் கூடாது.’’

‘‘கேளுங்க, மேடம்!’’

‘‘நீயும் வினோத்தும் செக்ஸ் வெச்சுக்கிட்டீங்களா?’’

நான் தயக்கத்துடன், ‘ம்…’ என்றேன்.

‘‘அதான் பிரச்னையே! எப்ப லவ்வர்ஸ் ரெண்டு பேரும் செக்ஸ் வெச்சுக்க ஆரம்பிக்கிறாங்களோ, அப்பவே பரஸ்பர ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சுடும். ஈர்ப்பு குறையறப்ப, காதலுக்காகப் போராடுற உறுதியும் குறைஞ்சுடும். நான் லவ் மேரேஜ்தான் பண்ணிக்கப் போறேன், தெரியுமா?’’

‘‘அப்படியா!’’ என்றேன் ஆச்சர்யமாக.

‘‘நாங்க ரெண்டு பேரும் எத்தனை வருஷமா லவ் பண்ணிட்டிருக்கோம் தெரியுமா? 12 வருஷமா! ஆறு வருஷத்துக்கு முன்னாடியே, எங்க ரெண்டு பேர் வீட்டுக்கும் தெரிஞ்சிடுச்சு. அவர் கிறிஸ்டியன். ரெண்டு பேரு வீட்லயும் சம்மதிக்கல! ‘சரி, நீங்க எங்க காதலை ஏத்துக்குற வரைக்கும், வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்’னு ரெண்டு பேரும் உறுதியா சொல்லிட்டோம். எங்களோட பிடிவாதத்தைப் பார்த்து, இப்ப பேசி முடிச்சிருக்காங்க. சரி, நீ எவ்ளோ நாள் வீட்டுல ஃபைட் பண்ணினே?’’

‘‘ரெண்டு மாசம்!’’

‘‘அதான்… நீங்க எல்லாத்தையும் வேகவேகமா முடிச்சிட்டு, மூணே மாசத்துல, அடுத்த எக்ஸ்பீரியன்ஸ§க்குத் தயாராகிடுறீங்க. வினோத்தும் ஒரு ரெண்டு மாசம் சோகமா இருந்தான். இப்ப வேற ஒரு பொண்ணோட சுத்திட்டிருக்கான். உங்களுக்கெல்லாம் காதல்ங்கிறது பருவ காலத்துக்கும், திருமண காலத்துக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியை நிரப்புற ஒரு விஷயம்… அவ்வளவுதான்! தயவுசெஞ்சு இதைக் காதல்னு சொல்லாதீங்க. அசிங்கமா இருக்கு!’’ என்று ரேணுகா மேடம் சொல்லச் சொல்ல, தலைகுனிந்து நின்றிருந்தேன் நான்.

- வெளியான தேதி: 27 ஆகஸ்ட் 2006 

தீண்டித் தீண்டி… மீது 2 கருத்துக்கள்

  1. Nithya Venkatesh says:

    உண்மை தான் உடலுக்கு அடிமையாகாமல் உள்ளங்களின் அன்பிற்கு அடிமையாவதே காதல் .. காதல் கொண்ட நெஞ்சு என்றும் உறுதியாக இருக்கும் …

  2. ganesh says:

    Every lovers Must read this story.Great.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)