புலன்களுக்கு அப்பால் உள்வாங்குதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2024
பார்வையிட்டோர்: 648 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் அதை முதலில் பார்த்த போது கால் மட்டும் தான்-மன் னிக்கவும்- தூக்கங்கள் இரண்டு மூன்று தான் வெளியில் தெரிந்தது. அதன் பெயரை என்னால் மட்டிட முடியவில்லை. இவரது பெயர், “புலி முகச் சிலந்தி” என்பதாக இருக்குமோ என்ற பயம் கலந்த கேள்வி என் மூளையில் பொறி தட்டி மறைந்தது. என்னவாக இருந்தாலும் “ஆரோ பயங்கரமான ஆள்…” என்பதில் சந்தேகமில்லை. இப்போது “இவர் யார்?” “எங்கிருந்து வந்திருக்கிறார்?” “ஏன் வந்திருக்கிறார்?” “எப்படி இதற்குள் வந்து விழுந்தார்?’ என்ற கேள்விகளுக் கெல்லாம் பதில் கண்டுபிடித்த பிறகு தான் நான் வந்த காரியத்தைச் செய்ய வேண்டும் என்றால்… அது வலு கஷ்டம். 

எனக்கோ அவசரம் வேலைக்குப் போக வேண்டும். இவர் இருக்கு மிடத்தில் தான் எனது அலுவல் பார்க்க வேண்டும். ஒன்றும் செய்ய முடி யாது. நான் எனது தேவையைப் பூர்த்தி செய்து கொண்டு, எழும்பி வந்து விட்டேன். ஆளைக் குனிந்து பார்க்கவே இல்லை. அவர் என்னை ஒன்றும் செய்யமாட்டார் – ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தான் இருக்கிறார். என்றாலும், மனதில் ஒரு சிறு பயம் இல்லாமல் இல்லை. 

இந்தப் பயம் எப்போது தொடங்கியிருக்கும்? சிறு பிள்ளையாக இருக்கும் போது…. இரண்டோ, மூன்றோ வயதில் புலிமுகச் சிலந்தி அழ காக இருக்கிறது என்று அதனுடன் விளையாடப் போயிருப்பேன். அம்மா பதறி அடித்துக் கொண்டு ஓடிவந்து… “ஐயையோ தொடாதை பிள்ளை கடிக்கும் பொல்லாத நஞ்சு” என்று சொன்ன போது, தொடங்கியிருக்கும். பிறகு “புலிமுகச் சிலந்தி கடித்த பலர் பட்ட வேதனைகளைப் பார்த்த, கேட்ட அனுபவங்கள் அந்தப் பயத்தை உறுதிப்படுத்தியிருக்கும். இதிலே வேடிக்கை என்னவென்றால், புலியான புலி கடித்த ஒருவரையும் நான் பார்த்ததில்லை. அதுபற்றிக் கேள்விப்பட்டது மில்லை. புலி தேவை யில்லாமல் மனிதர் வாழும் இடங்களுக்கு வருவதில்லை. தற்செயலாக வந்தாலும்… அது வலு பெரிய மிருகம் என்பதால் எல்லாருக்கும் தெரி யும். யாரும் போய் அதனிடம் கடிவாங்க மாட்டார்கள். ஆனால்… இந்தப் “புலிமுகச் சிலந்தி….” ஆள் வலு சிறிது. எங்கேயும் மறைவிடங்களில் ஒழிந்திருந்து விட்டுக் கடித்து விடும். அது சரி… இதற்கு ஏன் மனிதர் “புலிமுகச் சிலந்தி” என்று பெயர் வைத்தார்கள்? புலிக்கும் இதனுடைய முகத்திற்கும் ஏதும் ஒற்றுமை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சும்மா…. எங்களைப் பயமுறுத்துவதற்காகத்தான் இருக்கும். 

அன்றைய நாள் வலு “பிசி” யாக இருந்தபடியால் ….அந்தக் காலைப்பொழுதுடன் நான் அதை மறந்தே விட்டேன். 

இது இரண்டாவது நாள். எங்கள் வீட்டுப் “போட்டிக்கோ” வின் அழ கிய தூணுக்கும் முன்பக்கச் சுவருக்கும் இடையில் ஒரு உயரமான படி இருக்கிறது. அதில் உடகார்ந்து காலைத் தேநீர் அருந்துவதில் ஒரு சுகம். அப்போது ஒரு சிறு பூச்சி அந்த வடிவான தூணில் மேலிருந்து கீழாக வழுக்கிக் கொண்டு வந்தது. நான் அது ஓடிவந்த அழகை இரசித் துக் கொண்டு தேநீரையும் சுவைத்துக் கொண்டேன். எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் படாரென்று பாய்ந்து வந்து இந்தச் சிறு பூச்சியை அப்பிப் கொண்டது ஒரு பல்லி. கண்டறியாத பல்லியும் அதனுடைய நாக்கும்! “சொச் சொச் சொ” என்று சொல்லிச் சொல்லி எல்லாருக்கும் வழி காட்டும்.. மன்னிக்கவும் வழி காட்டுவதாக மக்கள் பலர் நம்பும் பல்லி ஏன் இப்படியொரு சிறு பூச்சியை விழுங்கித் தொலைக்கிறது? இதற்கெல்லாம் விடை தேடிக் கொண்டிருக்க நேரமில்லை. இன்றும் வேலை நாள். தேநீர்க் கோப்பையை வைத்துவிட்டு “பாத்ரூமை” நோக்கிப் போனேன். 

கதவைத் திறந்து உள்ளே போனதுதான்…. அடுத்த கணம் அவ ரைப் பற்றி நினைவு வந்தது. பார்த்தேன். இருக்கிறார்… “எட … இன்றைக் குக் காலை விட்டு விட்டு வாலை….. மன்னிக்கவும்…. போஸ்ட் அப்டோ மினை (PostAbdomen) நீட்டிக் கொண்டிருக்கிறார்.” 

அப்படியானால் இவர் ‘புலிமுகச் சிலந்தி இல்லை.” 

இவரது பெயர் தேள். என்ன தேள்? மட்டைத் தேளா? பூரானா? பிள்ளைத் தேளா? ஒரு வேளை, திரு நீல கண்டனா? ஆளைச் சரியாக இனங்காண முடியாமல் இருக்கிறது. தன்னை முழுமையாகக் காட்டிக் கொண்டால் தானே யாரென்று கூற முடியும்? ஒரு நாள் காலைக் காட்டு கிறது. மறுநாள் வாலைக்காட்டுகிறது. மிகுதியைக் கோப்பை நீருக்குள் மறைத்து வைத்துக் கொள்கிறது. என்ன பெயருடனாவது இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கென்ன பிரச்சினை? என்னைக் கடிக்காவிட்டால் சரி. ஆ… தான் உயிருடன் தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க அந்த வாலை ஆட்டுகிறது. “பேசின்” வழுவழுப்பாக இருப்பதால், அவர் நீரை விட்டு வெளியேற எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவுகின்றன. அதனால், நான் தப்பினேன். அவர் என்னைக் கடிக்க முடி யாது என்று அறிவு சொல்கிறது. ஆனாலும், உணர்வு அதை முழுதாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இன்று, நேற்றைய தினத்தை விட அதிக பயத்தை அது என்னுள் ஏற்படுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அது இருக்கும் இடத்திற்குப் போகாமல், அதைப் பார்க்காமல் விட்டால் பயம் குறையும் என்றால், போகாமல் இருக்கவும் முடிய வில்லை. காலைக்கடன் கழிப்பது மிக அவசர வேலையாயிற்றே! மீண் டும் ஒருமுறை அதைப் பார்த்தேன். வெள்ளைப் பின்னணியில் நல்ல கறு த்த உருவம். கறுப்பு வானத்தின் பின்னணியில் வெள்ளைக் கொக்கு களைக் கண்ட இராமகிருஷ்ண பரமஹம்சர் தெய்வீக அனுபவம் பெற்று மூர்ச்சை அடைந்தாராம். எனக்கும் மெதுவாகத் தலை சுற்றுகிறது. இன் னும் ஒரு முறை அதைப் பார்த்தேன். அது வாலைப் பலமாக ஆட்டு கிறது. “ஆளை ஆளைப் பார்க்கிறாய், ஆளை ஆளைப் பார்க்கிறாய்! ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை ஆளைப் பாக்கிறாய்…”என்ற பழைய சினிமாப் பாடல் வேறு இந்த நேரத்தில் எனது மனதில் வந்து தொலை க்கிறது. ஒருவாறு மயக்கம் போடாமலே எனது வேலையைச் செய்து முடிப்பதில் வெற்றி கண்டேன். 

அன்றைய பகல் பொழுது பல்வேறு வேலைகளை நான் செய்த போதிலும், இந்த விடயத்தை மறந்து விட முடியாதிருந்தது. 

க.பொ.த. உயர்தர வகுப்பில் படித்த ஏகாம்பரநாத ஐயர் எழுதிய “அவுற்லைன்ஸ் ஒப் சோலஜி” (Outlines of zoology) என்ற புத்தகத்தில் முந்நூற்று நாற்பத்திரண்டாம் பக்கத்தில் இரண்டு தேளின் படம் இருக் கும். பைலம் ஆர்த்திரோ போடா (Phylum Arthropoda) 

கிளாஸ் அரக் னிடா (Class – Arachnida) ரைப் – ஸ்கோப்பியன் (Type – Scorpion)…. இப்போது அதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது. என்றாலும், அது தனது கொடு க்கை மன்னிக்கவும் – பெடிபால்ப்பை (Pedipalp) இன்னும் எனக்குக் காட் டவில்லை. தான் நல்ல பிள்ளை என்று தான் எனக்குக் காட்ட முனை கிறதோ? என்றாலும், அது தேள் என்ற படியால், அதற்குக் கட்டாயம் “கொடுக்கு” இருக்கும் என்று எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும் என்று அதற்கும் தெரிந்திருக்க வேண்டும். 

“கொடுக்கு என்பது இரையைப் பற்றிப் பிடிப்பதற்கே பயன்படும். சிறு பூச்சிகளும் சிலந்திகளுமே அதற்கு இரையாக முடியும். புலிமுகச் சிலந்தியின் குஞ்சை இது பிடித்துத் தின்று விடும். (அப்படியானால். இவர் அவரை விடப் பொல்லாத ஆள்!) என்னை அது இரையாகக் கொள்வதில்லை. அப்படி இருக்கும் போது, இரையைப் பிடிக்கும் கொடுக்கிற்கு நான் ஏன் இவ்வளவு பயம்? அறிவு சொல்வதை எப்போது தான் உணர்வு கேட்டது? அவரவர் தான் தான் நினைத்தது நினைத்தபடிதான்! 

தேள் பொதுவாக வெப்ப வலய நாடுகளில் தான் காணப்படுகிறது. தேளில்லாத நாடுகளும் உலகில் உண்டு. அப்படி ஒரு நாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டால் என்ன? 

இரவு நேரங்களில் தான் தேள் பொதுவாக வெளியே காணப்படும். அது நாங்கள் நித்திரை செய்யும் நேரம். இவர் வெளியே உலாவுவது பற்றி எங்களுக்குத் தெரியாதது நல்லது. 

பகலில் பொதுவாகக் கற்கள், விழுந்து கிடக்கும் மரங்கள், மரப் பட்டைகள், பொந்துகள் போன்றவற்றினடியில் மறைந்து வாழும். அவரி டத்தில் ஏதோ குற்ற உணர்வு இருக்கிற படியால்தானே மறைந்து வாழு கிறார்? இல்லாவிட்டால் பகல் நேரத்திலும் துணிந்து வெளியில் உலாவ லாமே? என்னவோ…. பகல் நேரத்தில் மறைந்திருந்தால் எனக்குப் பிரச் சினை இல்லை. பகல் நேரத்தில்… எனக்குத் தேவையான இடத்தில் வந்து குந்தி இருப்பது தானே எனக்குப் பிரச்சினையாக இருக்கிறது? 

இரவு கனவிலும் அவர் வந்தார். வெள்ளைப் பின்னணியில்.. நல்ல கறுப்பாக! வெள்ளைப் பின்னணி இல்லாவிட்டால் இந்தக் கறுப்பு நிறம் இவ்வளவு எடுப்பாகத் தெரியாது என்று கனவிலும் நான் நினைத்துக் கொண்டேன்… ஆனால் கனவில் சரியான பயமாக இருந்தது. எங்கோ உயரத்தில் இருந்த நான் கால் தவறி இவருக்கு மேல் விழுந்தேன். இவர் தன் வாலை வளைத்து என்னைக் குத்துகிறார். அந்த நடு இரவில் உட லெல்லாம் வியர்த்து எழுந்து உட்கார்ந்த போது தான் அது வெறும் கனவு என்பது உறைத்தது. ஒரு உண்மையும் புரிந்தது. அவருடைய வாலில், மன்னிக்கவும் போஸ்ட் அப்டோமினில் தானே நஞ்சு இருக்கிறது! அதற்கு என்ன பெயர்? ஆ… போர்ஸ்ட் ஏனல் ஸ்பைன் (Post Anal spine) அப்படி இருக்கும் போது நான் ஏன் கொடுக்குக்கு இவ்வளவு பயம்? வாலுக்குப் பயப்பட்டாலும் அதில் ஓர் அர்த்தமுண்டு. 

விடிந்து விட்டது. இது மூன்றாவது நாள் முதல் வேலையாக அவ ரைப் போய்ப்பார்த்தேன். இருக்கிறார் சுகமாக! இன்றைக்குத் தனது முழு உருவத்தையும் காட்டுகிறார். சுமார் 7 அங்குலத்திற்குமேல் இருக்கும். வெளியே வருவதற்குக் கடும் முயற்சி செய்கிறார் ஆக இருக்கலாம். இரவு சாப்பாடு ஒன்றும் கிடைத்திருக்காது. ஆனாலும் நான் என்னுடைய கோணத்தில் இருந்து தான் பார்க்க முடியும். என்னை இன்று அவர் மேலும் அதிகமாகப் பயப்படுத்துகிறார். எந்த விசயத்திற்கும் ஒரு மூன்று நாள் பார்க்கலாம். அதற்குமேல் முடியாது. காய்ச்சல் என்றால் கூட மூன்று நாள் வீட்டில் வைத்து “பனடோல்” கொடுக்கலாம். நாலாவது நாள் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும் என்று சொல்வார்கள். 

இவரோடு இதற்கு மேல் செல்லம் கொஞ்ச முடியாது. எனக்கும் கொஞ்சம் கோபம் வருகிறது. நான் என்ன ஞானியா? இல்லைத்தானே! ஒரு பெரிய வாளி நிறையத் தண்ணீர் எடுத்து…. அடித்து ஊற்றிப் பார்த் தேன். தண்ணீர் போகும் வரைக்கும் கால்களை… மன்னிக்கவும் தூக்கங் களை… மடித்து வைத்திருந்து விட்டுப் பிறகு உல்லாசமாக வெளியே தலை நீட்டுகிறார். 

வளவு முழுவதும் தேடி ஒரு பொருத்தமான தடி எடுத்தேன். நுனிப் பக்கத்தில் சிறு கவர்களைக் கொண்ட நீளமான தடி. கவர்ப்பக்கத்தை அவருக்கு அருகில் கொண்டு சென்றேன். வளவளப்பற்ற, சொரசொரப் பான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தவர், அதில் மெல்ல ஏறினார். தடிவழியே விறுவிறென்று ஏறி எனது கைக்குக்கிட்ட வந்து விடுவாரோ என்று அதீதமான பயம் ஒன்று இருந்தாலும்… எதிர்கால நன்மை கருதி அந்தச் சில கணங்களின் பதட்டத்தைத் தாங்கிக் கொண்டேன். “யாரு டைய அனுமதியுமில்லாமல் எங்களுடைய வீட்டிற்கு வந்தது மட்டு மில்லை. நான் அவசிய அலுவல் செய்கிற இடத்தில் குந்திக் கொண்டு பயம் காட்டுகிறீர். என்ன? வாரும் வெளியாலே!” 

தடியுடன் மெல்ல வெளியே வந்து, ஆளை நிலத்தில் உதறி, அவர் ஓட முதல், தடியின் மறுபக்கத்தால் போட்டேன் தலையில் ஒரு போடு, மன்னிக்கவும் கெபலோ தொறாக்சில் (Cephalo Thorax) வாலைக் கொஞ்சநேரம் ஆட்டிக் கொண்டிருந்தார். பிறகு தனது இறுதி மூச்சை விட்டார். மலகூடம் என்றாலும் அது அதற்கேற்ற முறையில் சுத் தமாக இருக்கவேண்டும். இல்லையோ? 

எங்கள் வீட்டு மலகூடத்திற்கு நாங்கள் சந்தோஷமாகத் தளர் வான மன நிலையில் போக வேண்டும். இல்லையா? 

அவருடைய சவம் பின் வளவில் கிடக்கிறது. ஒரு மணித்தியாலத் தின் பின் வேலைக்குப் புறப்படும் நேரம் எட்டிப்பார்த்தேன். எறும்பு கூட அவரை எட்டிப்பார்க்கவில்லை. அப்படியே கிடக்கிறார். “அனற்றமி” படிப் பதற்கு வசதியாக. நஞ்சுச் சவம்! 

நான் உள்ளே திரும்பி வந்த போது, எனது தந்தையார் வேலைக்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டார். வெள்ளை உடையில் துப்புரவாக இருந்தார். 

“மூண்டு நாளா அதுக்குள்ளை இருந்து பயங்காட்டின தேளை நீங்கள் ஏன் அடிக்கேல்லை?” என்று கேட்டேன். 

“தேளா? எங்கையிருந்தது? நான் காணேல்லை” என்றார் அவர். மூன்று நாளும் அவர் காலைக்கடன் கழித்தது நிச்சயம். அவரது வெள்ளை ஆடையை இப்போது நான் உற்றுப் பார்க்கத் தொடங்கினேன். 

– வலம்புரி 15.08.2003

– வரிக்குயில்(சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: நவம்பர் 2016, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *