கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 11, 2024
பார்வையிட்டோர்: 2,183 
 
 

“கடற்கரையோரம் நடக்கின்ற காதல் கல்யாணத்தில் முடிவது எதிர் நீச்சல்” என்ற பாடலை நிராகரிக்கும்வண்ணம் உமா மகேஸ்வரனும் உமா மகேஸ்வரியும் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, கல்யாண பத்திரிக்கையில் அவர்கள் பெயர் பொருத்தம் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து வாழ்த்தி மகிழ்ந்தனர்.

ஆனால் அவர்கள் நிஜ வாழ்க்கைப்பொருத்தம் ஏழாம் பொருத்தம்! ஆபீஸ் வாழ்க்கையில், “ப்ரொபஷனரி பீரியட்” என்பது போல இல்லற வாழ்க்கையில் மூன்று மாத தேனிலவு முடிந்து நாளாக நாளாக “சிறு பொறி பெரு நெருப்பு” என்பது போல் அவர்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும் தவறாமல் குடும்பத்தகராறு!

“நீ பண்ற அட்டூழியத்திற்கு மூச்சு முட்டக்குடித்துவிட்டு வந்து உன்னை போட்டுத்தள்ள வேண்டும்” என்று உமா மகேஸ்வரியை திட்டிக்கொண்டே இருப்பான் உமா மகேஸ்வரன்!

கணவனின் குடிப்பழக்கம் உமாவை விரக்தியின் விளிம்பிற்குத்தள்ள “ஏன்” என்று வெள்ளந்தியாக மனைவி கேட்க , “குடிபோதையில் தெரியாத்தனமாக பொண்டாட்டியை கொலை செய்து விட்டேன் எசமான்!” என்று கோர்ட்டில் சொன்னால் குறைந்த பட்ச தண்டனையோடு தப்பித்து விடலாம்” என்பான் கணவன்.

ஒரு நாள் குடும்பத்தகராறு கிளைமாக்ஸ் நெருங்கும் வேளையில் அவன் குடிக்க ஆரம்பித்தான்; அவன் குடித்தால், அடித்து விட்டு, வன்புணர்வு செய்வான் என்பதும் அவளுக்கு தெரியும்; அவனுக்கு அதிர்ச்சி வைத்தியமாக “நானும் குடிக்கிறேன்” என்று அவனருகில் அமர்ந்தாள்;

குடிகாரன் எப்படியும் இன்னொரு குடிகாரனை உருவாக்கி விடுவான் என்பது போல் அவனும் அவளுக்கு ஆதரவு கரமாக ஆல்கஹால் கரம் நீட்டினான்.

இருவரும் குடித்துகொண்டே மீண்டும் சம்சார சண்டை! விஸ்கியின் வீரியத்தால் சமரசம் ஆகாத சண்டை! குடியை கெடுக்கும் குடியால் குடும்பத்தகராறு முற்ற, சமையல் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள, எதிர்பார்த்தபடியே அங்கே கொலை நிகழ்ந்தது!

போலீஸ் ஸ்டேஷனில் ஏதோ எழுதிக்கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர், சப்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, கையில் ரத்தக்கத்தியுடன் பெரும் போதையில் இருப்பவரை பார்த்து விட்டு அலெர்ட் ஆனார்;

என்ன?

“கொலை செய்து விட்டேன் குடிபோதையில்”

யாரை?

நேரடியாக பதில் சொல்லாமல் சப் இன்ஸ்பெக்டரை பார்த்து “சார்! குடிபோதையில் செய்த தவறால் எனக்கு குறைந்த பட்ச தண்டனை தானே சார் கிடைக்கும்” என்று வினவியது கொலையாளியின் குரல்.

சப் இன்ஸ்பெக்டர் பொறுமை இழந்து “யாரை?” என்று அதட்டினார்.

“என் புருஷனை!” என்றாள் உமா மகேஸ்வரி!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *