யாரென்று மட்டும் சொல்லாதே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: January 6, 2024
பார்வையிட்டோர்: 13,310 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7 

‘பின்ன…? டி.வி.யில ‘ஜாக்ரபி சேனல்’னு ஒண்ணு வருது. அதை பாருங்க. அதுல பாம்புங்க முட்டை போடுறதுல இருந்து, குஞ்சு பொறிக்கிறது வரை காட்டுறாங்க. அனகோண்டா பாம்புல இருந்து, நம்ம ஊர் தண்ணிப்பாம்பு வரை அவங்க காட்டாத பாம்புங்க இல்லை. அதுக்காக காட்டுக்குள்ளே கேமராவோடு ஆண்டுக்கணக்கில் அலையுறாங்க. அவங்கள்ல ஒருத்தர்கூட இந்த நாகமாணிக்கம்கிற விஷயத்தை ஒத்துக்க தயாரா இல்லை. மொத்தத்துல நாகமாணிக்கம் என்கிறதே கப்சா மாமா’. 

சாமியார் சச்சிதானந்தம் அவளைப் பார்த்துக்கொண்டே செல்வதை லட்சுமி கவனிக்கவில்லை. அவளுக்குள் ரமேஷ் ஒருவித ஆண்மையோடு பேசியதுதான் உருண்டு, பிரண்டு கொண்டிருந்தது. 

அவனது ஆண்பிள்ளைத்தனமான பேச்சு ஒரு பக்கம் அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், மறுபக்கம் பயத்தையும் மூட்டியது. தனது விருப்பப்படி தன் மாளிகையில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க எந்த காலத்திலும் உடன்படமாட்டான் என்பது ஒருவித பாணியில் அவன் பேசியதிலேயே அவளுக்குத் தெரிந்து விட்டது. 

இந்த நிலையில் – இப்படி ஒருவனை பிரியாவும் பிடிக்கவில்லை என்றுதான் கூறுவாள். ஏற்கெனவே கல்யாணப் பேச்சை எடுக்காதே என்று வேறு சொல்லி விட்டாள். இப்படியெல்லாம் இருக்க இந்தக் கல்யாணம் எப்படி நடக்க முடியும் என்கிற ஒரு பயம் கலந்த கேள்வியும் அவளுக்குள் எழும்பியது. அவள் மன இரைச்சலுக்கு இசைவான சப்தத்தோடு ரெயில்வே தண்டவாளத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் சீறியபடி சென்று கொண்டிருந்தது. 

வீடுகள் ஒன்றன்பின் ஒன்றாக விரையும் அந்த அழகை டிரைவர் ஞானமணி மட்டும்தான் ரசித்தான். ரெயில் சென்று முடியவும், ‘கேட்’ திறக்கப்பட -காரை கிளப்பினான். தன்முன் உள்ள கண்ணாடி வழியாக தீவிரமான சிந்தனை யோடு அமர்ந்திருந்த லட்சுமியையும் பார்த்தான். 

மெல்ல போக்குவரத்தில் இருந்து விடுபட்டவனாக – “அம்மா… என்னம்மா, பலமான யோசனையில் இருக்கீங்க… எதாச்சும் சிக்கலுங்களா?” – என்று லயமாக பேச்சை ஆரம்பித்தான். 

முப்பது ஆண்டாக ஞானமணி அவளோடு இருப்பதால், அவனை டிரைவராக மட்டும் பார்க்காமல், அவனிடம் ஒரு சகோதரவாஞ்சையும் அவள் கொண்டிருந்தாள். அவனும் அபூர்வமாகத்தான் குடும்ப விஷயத்தில் மூக்கை நுழைப்பான். 

அன்றும் அவன் கேட்கவும், அவளுக்குள்ளும் மனதில் இருப்பதை கொட்டிவிடும் ஒரு அவா! 

“ஆமாம் ஞானம்… எனக்கு இப்ப சோதனையான ஒரு காலம் போல…” என்று உதட்டைப் பிதுக்கினாள். லட்சுமி.

“என்னம்மாசொல்றீங்க… சோதனைக்கு சோதனையை கொடுக்கிற தைரியசாலியாச்சேம்மா நீங்க…?” 

“இந்த தைரியம், வீரமெல்லாம் ஒரு எல்லைவரை தான் ஞானம். காலம் ஆட்டி வைக்க நினைச்சா நாம ஆடித்தான் தீரணும்?” 

“இப்ப அப்படி ஆடிப்போகிற அளவுக்கு என்னம்மா சிக்கல்?” 

“என்னன்னு சொல்வேன். நல்லமணி ஐயா, நம்ம பிரியாவுக்கும்…அவர் பேரனுக்கும் கல்யாணத்தை முடிக்க சொல்றாரு. மாரடைப்பு வந்து படுத்திருக்காரு… உயிர் எப்ப வேணா போயிடலாம்கற பயம்! பேரனுக்கும் விருப்பம் தான். ஆனா, ரொம்ப காட்டியமா பேசுறான். கல்யாணம் பத்தி பேச நரிக்குடியில உள்ள அவங்க வீட்டுக்கு நான் போகணுமாம். இங்கே பிரியாவோ – கல்யாணப் பேச்சை எடுக்காதேங்கிறா…” 

“மாப்பிள்ளை ஜமீன் வம்சம் மட்டுமல்ல… ஜமீன் சிங்கம்னும் நீங்க சொல்றதுல இருந்து தெரியுது. உங்க கைக்கு அடங்காம போயிட்டா என்ன பண்ணுறதுன்னு பயப்படுறீங்களாக்கும்?” 

ஞானமணி அவளை துல்லியமாக புரிந்து வைத்திருப்பவன் என்பது அவன் கேட்டதிலேயே தெரிந்து விட்டது. அவன் நேர்த்தியாக கேட்டதற்கு அவளாலும் ஒரு பதிலை பளிச்சென்று சொல்ல முடியவில்லை. மவுனம் சாதித்தாள். 

“விடுங்கம்மா… அதான் பிரியா பாப்பா இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடிச்சில்ல” என்று அவனே ‘டிராக்’ மாறவும் செய்தான். 

“நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா, நல்லமணி ஐயாவுக்காகவாவது நான இப்ப பிரியாகிட்ட சம்மதம் வாங்கித்தான் தீரணும்… “

“பிரியாகண்ணு விருப்பத்தை பாருங்க… நல்லமணி ஐயா விருப்பத்தைப்பத்தி நமக்கெதுக்கும்மா கவலை?” – ஞானமணி சரியாகத்தான் கேட்டான். 

ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையில் நாகமாணிக்கம் என்கிற ஓர் அபூர்வமான விஷயம் இருப்பது அவனுக்குத் தெரியாதே? 


லட்சுமி அவனுக்கு பதில் கூறாமல், மவுனமாகவே வந்தாள். பொதுவில் இப்படி குழப்பமாக இருக்கும் தருணங்களில் அவள் யோகா மாஸ்டர் ராமலிங்கம் என்பவரிடம்தான் ஆலோசனைகள் கேட்பாள். 

ராமலிங்கம் ஓர் ஆத்மஞானி, லட்சுமிக்கு வீட்டுக்கே வந்து எல்லா யோகாசனங்களையும் கற்றுத் தந்தவர். இப்போதும், அவ்வப்போது வந்து போவார். செல்போனை எடுத்து அவரது எண்களைத் தட்டி அவரைப் பிடித்தாள். 

”ஐயா… நான் லட்சுமி பேசுறேன்.” 

“நல்லா இருக்கியாம்மா?” 

“நல்லா இருக்கேன்ய்யா… ஒரு சில விஷயங்கள்ல தான் திடீர் குழப்பம். நீங்க கொஞ்சம் பங்களாவுக்கு வந்தா நல்லாருக்கும். ” 

“அதனால என்ன… நீ வண்டியை அனுப்பிவை. நான் வரேன்.” 

அவர் பதிலைத் தொடர்ந்து, செல்போனை அணைத்தவள் – ஞானமணியின் தோள்பட்டையை பார்த்தபடியே, “ஞானம்… என்னை இறக்கிவிட்டுட்டு, அப்படியே ராமலிங்கய்யாவை போய் கூட்டிட்டு வந்துடு” என்றாள். 

ஞானமணி அப்போதே முடிவு செய்துவிட்டான். நிச்சயம் ஏதோ விவகாரம்தான் என்று! 

ஆஸ்பத்திரி. நல்லமணியைப் பார்க்க உறவுக்காரர் ஒருவர் வந்திருந்தார். இவர் நரிக்குடிக்கு பக்கத்து ஊரான கம்பிக்குடி ஜமீனை சேர்ந்த கைலாசநாதன். படுக்கையில் அரை மயக்கத்தில் இருப்பவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்தவர், பேரன் ரமேஷைத்தான் கூப்பிட்டு காதைக் கடிக்க ஆரம்பித்தார். 

”ரமேஷ்…என்னப்பா இதெல்லாம்? நேத்து சாயந்தரம்கூட ஐயா என்கூட நல்லவிதமாகத்தானே பேசிக்கிட்டிருந்தாரு…’ 

“மாரடைப்புங்கிறதே திடீர்னு வர்றதுதானுங்களே?”

“சரி, டாக்டருங்க என்ன சொல்றாங்க…?” 

”எங்க சொல்றாங்க? கூடிக் கூடி பேசுறாங்க. ‘பைபாஸ்’ பண்ணப் போறீங்களான்னு கேட்டா, ரெண்டு நாள் கழிச்சு சொல்றோம் என்கிறாங்க…” 

“புரியுது… அவங்க ஒரு முடிவு பண்ணிட்டாங்க. நீ வேணா பாரு… இன்னிக்கே ஐயாவை வீட்டுக்கு கொண்டு போகச் சொல்லிடுவாங்க…”. 

“அப்படியா?” 

“ஆமாம்… இங்க அவர் உயிருக்கு ஏதாவது வந்தா, ஜமீன் ஆளுங்க ஆஸ்பத்திரியைத்தானே துவம்சம் பண்ணுவாங்க?” 

“என்னங்க பயமுறுத்துறீங்க…?” 

“பயமுறுத்தல… நானும் எங்கப்பாவை ஆஸ்பத்திரியில ‘அட்மிட்’ பண்ணி நல்லது கெட்டது எல்லாம் பார்த்த அனுபவத்துலதான் சொல்றேன். அதே நேரம் எனக்கு ஒரு சந்தேகம்?” 

“என்னங்க?’” 

“ஐயா இப்படி ஆஸ்பத்திரியில கிழிஞ்ச பாய் மாதிரி கிடக்கவேண்டிய அவசியமே இல்லையே… எப்படி இவ்வளவு தூரம் ஆச்சு?” 

“நீங்க பேசுறது புரியலீங்களே…?” 

“என்ன ரமேஷ்… உனக்கு உடைச்சு சொன்னாத்தான் தெரியுமாக்கும்…? உங்க மாளிகைலதான் யார்கிட்டேயும் இல்லாத ஒரு காவல் சக்தி இருக்குதேப்பா. அது இருக்கிற இடத்துல இப்படியெல்லாம் நடக்கக்கூடாதேப்பா…” 

“ஓ… நீங்க அந்த நாகமாணிக்கத்தை சொல்றீங்களாக்கும்?” 

“மெல்லப் பேசு… யார் காதுலையாவது விழுந்துடப் போகுது…” 

“என்னங்க மாமா நீங்க… எனக்கு அதுல எல்லாம் சுத்தமா நம்பிக்கை இல்லீங்க… நாகமாணிக்கம் இருந்தா மாரடைப்பு வராதுங்கறதெல்லாம் பயங்கர முட்டாள் தனமாக பேச்சு. முதல்ல அது நாகமாணிக்கம் தானான்னே எனக்கு சந்தேகம்… அது தெரியுமா உங்களுக்கு?” 

“ஐயாவின் பேரனா இப்படி பேசுறே?”

“பின்ன…? டி.வி.யில ஜாக்ரபி சேனல்னு ஒண்ணு வருது. அதை பாருங்க. அதுல பாம்புங்க முட்டை போடுறதுல இருந்து, குஞ்சு பொறிக்கிறது வரை காட்டுறாங்க. அனகோண்டா பாம்புல இருந்து, நம்ம ஊர் தண்ணிப்பாம்பு வரை அவங்க காட்டாத பாம்புங்க இல்லை. அதுக்காக காட்டுக்குள்ள கேமராவோடு ஆண்டுக்கணக்கில் அலையுறாங்க. அவங்கள்ல ஒருத்தர்கூட, இந்த நாகமாணிக்கம் என்கிற விஷயத்தை ஒத்துக்க தயாரா இல்லை. மொத்தத்துல நாகமாணிக்கம் என்கிறதே கப்சா மாமா…” 

“அப்ப உங்க ஜமீன்ல இருக்கிறது?” 

“அது ஒரு கல்லு… நவரத்தினத்துல ஒண்ணா இருக்கலாம்… அதுதான் என் அபிப்பிராயம் மாமா…” 

“அப்ப நீ அதை பெருசா நினைக்கலையா?”

“நிச்சயமா…” 

“சரி… நான் நல்ல விலைக்கு கேட்டா, நீ கொடுத்திடுவியா?”

“தாராளமா… ஆனா, என் தாத்தா ரொம்ப கெட்டிக்காரர். நான் நம்பிக்கை இல்லாதவன்கிறது அவருக்கும் தெரியும். உங்களை மாதிரி யாராவது கேட்டா நான் தூக்கி கொடுத்துடுவேன்னு தெரிஞ்சுதானோ என்னவோ அதை தூக்கி ‘லயன்’ லட்சுமியம்மாவுக்கு கொடுத்துட்டார்.” 

போகிற போக்கில் ரமேஷ் சொன்ன அந்த உண்மை, கம்பிக்குடி ஜமீன் கைலாசநாதன் நெஞ்சில் நல்ல ‘பஞ்சிங்’குடன் விழுந்த ஒரு குத்தாகத்தான் இருந்தது. 

“ரமேஷ், நிஜமாவா சொல்றே…?” என்று வியப்போடு கேட்டார். 

“ஆமாம் மாமா… மாணிக்கக்கல்லை கொடுத்ததோடு, அந்தம்மா மகளைத்தான் நான் கட்டிக்கணும் என்கிறதும் தாத்தாவோட விருப்பம். அவங்களும் இப்பதான் வந்துட்டு போறாங்க…” 

‘ஓ… ஐயா இந்த வகையில கூட்டிக்கழிக்கிறாரா?’ – கைலாசநாதன், நல்லமணி ஐயாவின் உள் கணக்கை விநாடியில் புரிந்துகொண்டார். 

“என்ன கணக்குவழக்கோ…? அந்த அம்மாவும் கொஞ்சம் சிங்கம் மாதிரிதான் பேசிப் பார்த்தாங்க…என்கிட்ட வேகுமா, அவங்க பருப்பு? முறையா ஜமீனுக்கு வந்து பொண்ணு வீட்டுக்காரங்க எப்படி அணுகணுமோ அப்படி அணுகுங்கன்னு சொன்னேன். அப்படியே, பொம்பளை பொம்பளையா இருந்தாதான் எனக்கும் பிடிக்கும்னும் சொல்லாம சொல்லி அனுப்பினேன்… “

ரமேஷ் அலட்சியமாக -செல்போனில் வந்த ஒரு தகவல் சப்தம் கேட்டு அதை பார்த்தபடியே சொன்னான். 

கம்பிக்குடி ஜமீன்தார் கைலாசநாதனோ ‘ஏமாந்துட்டேனே…!’ என்று நாக்கை மடித்து, கடித்துக் கொண்டார். அதைக் கவனித்த ரமேஷ், ”மாமா என்ன… உங்களுக்கு இப்ப அந்த நாகமாணிக்கம் வேணுமாக்கும்?” என்றான். 

“…”

“போங்க மாமா… போய் வேலையைப் பாருங்க. இந்த மாதிரி சமாசாரம் எல்லாமே பெரிய ரீல். அது இருந்தாலும், இருக்காட்டியும் நடக்கிறதுதான் மாமா நடக்கும்…” – என்றான், தன் வாலிபத்துக்கே உரிய கிண்டலான தொனியோடு… 

ஆனால், கைலாசநாதன் மனம் சமாதானம் அடையவில்லை. 

“உனக்கென்னடா தெரியும்… நீ பொடிப்பய! லட்சுமிகிட்ட அது போய் சேர்ந்துடுச்சிங்கிறது உண்மைன்னா, அவ எல்லா வகையிலேயும் பலமாகப் போறாள்ன்னுதான் அர்த்தம். 

நல்ல நாளிலேயே அவ ஒரு வில்லங்கமா… இனி அவளை பிடிக்கமுடியாதே!” என்றபடியே முணு முணுத்தார். 


கைலாசநாதன் எந்த நேரத்தில் அப்படி நினைத்தாரோ தெரியாது, லட்சுமி வீட்டு தொலைபேசி சிணுங்கியது. அவள் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை நடத்தி கல்விச் சேவை செய்து வருவதை எல்லாம் வைத்து மத்திய அரசு அவளுக்கு பத்மஸ்ரீ’ விருது அளிக்க முடிவுசெய்து அந்த செய்தியை தலைமை செயலகத்தில் இருந்து ஒருவர் கூறி முடித்தார். 

லட்சுமிக்கு கொஞ்சம் ‘ஜிவ்’வென்று வானத்தில் பறக்கிற மாதிரிகூட இருந்தது. அடுத்த நிமிடமே இன்னொரு போன். இந்த போன், அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் உள்ள அவள் வீட்டில் ஒரு பெட்ரோல் கிணறு இருப்பதை உரியவர்கள் கண்டுபிடித்துவிட்டதை கூறி முடித்தது. அரசாங்க ‘ராயல்டி மட்டுமே மாதாமாதம் லட்சக்கணக்கில் வரும் என்கிற அந்த செய்தியின் பரிமாணம் அவளை மேலும் அப்படியே சிலிர்க்க வைத்துவிட்டது. 

செய்தி, பிரியாவுக்கும் போனது. உடனேயே அவள் தோட்டத்து பக்கம்தான் ஓடிப் போனாள். பெரியதாகப் பூத்திருந்த ஒரு ரோஜாவை பறித்துக்கொண்டு ஓடிவந்தாள். லட்சுமியிடம் ஒரு சேவகன் போல பணிவாக வணங்கிய படியே அந்த பூவை வைத்தாள். 

“மை டியர் பத்மஸ்ரீ அம்மா எனக்கு இப்ப எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா?” – என்று கேட்டாள். 

கச்சிதமான அந்த வேளையில் போர்டிகோவில் ராமலிங்கய்யாவும் இறங்கி, உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். 

“பிரியா… என் வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத நாளுடா…” என்றாள், லட்சுமி. அதே ஜோரில் ராமலிங்கய்யாவையும் வரவேற்று, மாடியில் உள்ள குளிர்சாதனம் பொருத்திய தனது அறைக்கு அழைத்துச் சென்றாள். 

பின்னர் உள்ளே அவர் காலில் விழுந்து வணங்கி, ‘பத்மஸ்ரீ’ ஆகப்போவதை கூறினாள். அவரும் அவள் உச்சந்தலையில் கைவைத்து வாழ்த்தினார். 

”ஐயா… இன்றைய தினம் என் வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமான நாள். அதே அளவு குழப்பமான நாளும்கூட…”- என்று ஆரம்பித்து, நடந்த அவ்வளவையும் கூறி முடித்தாள். 

ராமலிங்கய்யாவும் நிதானமாக கேட்டுக் கொண்டார். ”என்னய்யா சொல்றீங்க… நாகமாணிக்கக் கல் வேலை செய்யுறதை நான் பார்க்கிறேன். அது இனி என்கிட்டேயே இருக்கணும்னா நல்லமணி ஐயா பேரனுக்கு நான் பிரியாவை கொடுக்கணும். அதுவும் வேகமா… ஆனா அவனோ…” 

அவள் மீண்டும் பேச்சை நீட்டிக்க பேசியது போதும் என்கிற மாதிரி கையை உயர்த்தி ராமலிங்கைய்யா தடுத்தார். பின் அவளை ஆழமாக ஊடுருவ ஆரம்பித்தார். அங்கே ஓர் அர்த்தமுள்ள நிசப்தம். 

துல்லியமான அதே வேளையில் – நாகமாணிக்கத்தை அவள் பாதுகாப்பாக வைத்திருக்கும் அந்த அறையின் ‘லாக்கர்’ மேல் பன்னிரண்டு அடி நீளத்துக்கு குறையாத நாகம் ஒன்று ‘ஸ்பிளிட் ஏ.சி.’யின் ரப்பர் துவாரம் வழியாக உள்ளே நுழைந்தபடி இருந்தது! 

அத்தியாயம்-8

‘சத்தியமா? நாமாணிக்கம்கறது ஒரு பித்தலாட்டம். உனக்கு அவ்வளவு கூடவா தெரியாது?’ 

‘லாக்கர்’ பெட்டி மேல் விழுந்து, பின்னர் படம் விரித்த நிலையில் நிமிர்ந்த அந்த நாகம் ‘உஸ்ஸ்…” என்று தனக்கே உரித்தான விதத்தில் சப்தமெழுப்பவும்… 

லட்சுமியும், யோகி ராமலிங்கய்யாவும் சப்தம் வந்த பக்கமாக திரும்பினர். 

அப்போது அந்த நாகமும் நிமிர்ந்து எழும்பி நின்றபடி, தன் பட்டாணி அளவு கண்களால் இருவரையும் தீர்க்கமாக பார்த்தது. 

லட்சுமிக்குள் கணத்தில் அமிலம் சுரக்க ஆரம்பித்து விட்டது. யோகி ராமலிங்கய்யா, அவள் அளவுக்கு பாதிக்கப் படவில்லை. இருந்தும் முகம் வெளிறியவராக லட்சுமியைப் பார்த்து மிரட்சியைக் காட்டினார். 

“ஐய்ய்ய்யா!” 

”பயப்படாதே லட்சுமி… நாகமாணிக்கம் இருக்கிற இடத்துல அதோட சக்திக்கும், வாடைக்கும் பாம்புங்க வரும்னு நான் கேள்விப்பட்டிருக்கேன்.” 

“ஆ… ஆமாங்க! நல்லமணி ஐயாகூட மாணிக்கக் கல்லை கொடுத்தனுப்பிட்டு, ‘போன்’ பண்ணுனப்ப சொல்லி இருந்தாரு…” 

“உன்கிட்ட இருக்கிறது ‘ஒரிஜினல்’ நாகமாணிக்க கல்லுதான் என்பதுக்கு இங்கே வந்துட்ட இந்த நாகமே சாட்சி. போகட்டும்! இதை கைகூப்பி வணங்குவோம். அதான் நாம இப்ப செய்ய வேண்டியது.” 

ராமலிங்கய்யா இறுதியாக ‘வணங்குவோம்’ என்று சொன்னதை கேட்க, லட்சுமி அந்த அறையில் இல்லை. வேகமாக கதவைத் திறந்துகொண்டு வெளியேறிய அவள், வேலைக்காரர்களை அழைப்பது அவர் காதிலும் விழுந்தது. 

“டேய் அருணகிரி… ராஜசேகரா… ஓடிவாங்கடா… என் அறையில் பாம்பு!” 

அந்தக் குரல் ராமலிங்கய்யாவை பெருமூச்சுவிட வைத்தது. வேலைக்காரர்களும், ‘திபுதிபு’ வென்று ஓடிவந்தனர். பின்னாலேயே வந்த லட்சுமிக்கு அடுத்தகட்ட அதிர்ச்சி காத்திருந்தது. அந்த நாகம் இப்பொழுது ‘லாக்கர்’ மேல் இல்லை. 

ராமலிங்கய்யாவும் பதறிப்போய் பேச்செடுத்தார். “லட்சுமி… எதுக்கு வேலைக்காரங்களை கூப்பிட்டே? நாகத்தை அடிக்கக்கூடாது. அதுவும் நல்லவிதமா வாழுற ஒரு வீட்டுக்குள்ள அந்தத் தப்பு நடக்கவே கூடாது.” 

அவர் பேசுவதை காதில் வாங்காதபடி, வேலைக்காரர்கள் அந்த பாம்பை அறை முழுக்க தேடத் தொடங்கினர். அதை அடிப்பதற்காக கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கிக்கொண்டனர். 

ஆனால், அந்தப் பாம்பு எப்படியோ வந்த சுவடு தெரியாதபடி மறைந்துபோனதுதான் ஆச்சரியம்! 

அம்பாரி மாளிகையே அரண்டுபோனது… யாரிடம் பார்த்தாலும் பீதி… எவரிடம் பார்த்தாலும் அச்சம்! 

ராமலிங்கய்யா மட்டும் உறுதியாகச் சொன்னார். “லட்சுமி…நீ அந்த நாகமாணிக்கத்தை பூஜை அறையில கொண்டுபோய் வைச்சு பூஜை செய். இந்த வீட்டுக்குள்ள எந்த ரசாபாசமும் நடந்துடக்கூடாதுன்னும் வேண்டிக்க. நிச்சயமா எந்தத் தப்பும் நடக்காது. அநேகமா அது காவல் நாகமாதான் இருக்கணும். காவல் நாகம் எப்பவும் எஜமானருக்கு தப்பு பண்ணாது.” 

லட்சுமியும் அவர் சொன்னபடியே செய்ய ஆயத்தமானாள். ராமலிங்கய்யாவும் பிறகு பார்ப்பதாக அவளிடம் கூறிவிட்டு, விடைபெற்றுக் கொண்டானர். 


பிரியாவின் தனியறை! 

ஏ.சி.யின் இதமான குளிரூட்டத்துக்கு நடுவில், வெளியே நிலவும் பதற்றம் பற்றி துளிகூட தெரியாதபடி அர்ஜுனுடன் பேசிக்கொண்டிருந்தாள், பிரியா! 

“அர்ஜுன்… அடுத்து நீ என்னடா பண்ணப்போறே?”

“நீ என்ன பண்ணப்போறே பிரியா?” 

“எம்.எஸ். பண்ணலாம்னு நினைக்கிறேன். அமெரிக்கா போறதுக்கு திட்டம் இருக்கு. ஆனா, என் அம்மாவை நினைச்சாதான் கஷ்டமா இருக்கு. ” 

”உன் ‘அம்மா நோய்’ உன்னை விட்டு எப்பதான் போகுமோ?” 

”போடா… உனக்கெல்லாம் சொன்னா புரியாது. பாவம் தெரியுமா, என் அம்மா.” 

“அப்ப எதுக்கு அமெரிக்கா… அதிக படிப்பு? பேசாம உன் அம்மாகூடவே இருந்துடு. அதான் ஏழு தலைமுறைக்கு சொத்து இருக்கே?” 

“அம்மாவும் கிட்டதட்ட அப்படித்தான் திட்டம் போட்டுகிட்டு இருக்காங்க. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?” 

“எப்படி பிரியா உன்னால் இப்படியெல்லாம் கேனத்தனமா ஒரு கேள்வி கேட்கமுடியுது?”

“எதுடா கேனத்தனம்?” 

“பின்ன… விஷயம் என்னன்னே சொல்லாம, ‘உனக்கொரு விஷயம் தெரியுமா’ன்னா என்ன அர்த்தம்?” 

“சாரி… நானே சொல்லிடுறேன். என் அம்மா எனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணிகிட்டு இருக்காங்க. மாப்பிள்ளையும் எங்க அந்தஸ்துக்கு ஏத்த பெரிய இடம்.” 

பிரியா தன் கல்யாண விஷயம் பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போதே – அந்தப் பக்க அர்ஜுன் கதை கேட்கப் பிடிக்காதவன் போல செல்போனை ‘கட்’ செய்தான். 

பிரியாவுக்கும் அவன் ‘கட்’ செய்தது எதனால் என்பது புரிந்தது. கையில் உள்ள செல்போனையே அர்ஜுனா 
நினைத்துக்கொண்டு, “உனக்கு என் மேல காதல் இருக்குன்னா ‘ஐ லவ் யூ பிரியா’ன்னு தைரியமா நேர்ல சொல்டா. இப்படி பொறாமைபட்டு போனை ‘கட்’ பண்ணாதே” என்று செல்லமாக சிணுங்கிக் கொண்டாள். 

அப்படியே எழுந்து கண்ணாடி முன்னால் போய் நின்று, தன்னைத்தானே உற்றுப் பார்த்துக் கொண்டாள். 

‘தான் ஒரு நல்ல அழகிதான்!’ என்கிற கர்வம் அவளுக்குள் மெல்ல எட்டிப்பார்த்த தருணத்தில், அந்த அறைக்குள்ளும் ‘உஸ்ஸ்…’ என்ற சத்தம். பிரியாவுக்கு நடு முதுகில் ஒரு சிற்றெறும்பு ஊறுகிற மாதிரி இருந்தது. 

சப்தம் நீளத் தொடங்கியது. பிரியாவும் தன் கண்களை சுழலவிட்டாள். அப்படியே தளர்வான தன் கூந்தலை லாகவமாக ஒதுக்கிவிட்டுக் கொண்டாள். 

சப்தத்துக்கு காரணமான அந்த நாகம், அவளது அறையில் ‘லாப்டாப் கம்ப்யூட்டர்’ பக்கத்தில் சுருணடு படுத்திருந்தது. பார்வையின் சுழற்சியில் பிரியாவும் பாம்பைப் பார்த்துவிட்டு, முதலில் அதை ஒரு பொம்மையாகத்தான் உணர்ந்தாள். 

அதன் படம்விரித்த தலைப்பாகம் அசையவும்தான் அது உயிருள்ள நாகம் என்பது அவளுக்குள் உணர்வானது. அடுத்த நொடி, இரத்த ஓட்டத்துக்குள் சர்க்கரை கரைவது போல, பயம் உடலில் கலக்கத் தொடங்க – இதயத்திலும் ‘திக்… திக்…’ என்கிற சத்தம்! 

கச்சிதமாக கதவு திறக்கப்பட – கதவின் அருகில் ‘லயன்’ லட்சுமி. தனக்கு நேர் எதிரில் ஒரு சிலை போல பிரியா நிற்பதைப் பார்த்த அவள் – மகள் பார்ப்பதை வைத்து, அவளும் பாம்பை பார்த்துவிட – அவளுக்குள்ளும் ‘திக்திக்’ உணர்ச்சி! 

சில பல நொடிகள் ஸ்தம்பித்தாலும் அதிலிருந்து விடுபட்டு, “டேய் அருணகிரி, ராஜசேகர்…” என்று ஓங்கலாய் குரலெடுத்தாள். அவர்களும் ஓடிவந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் அங்கிருந்தும் மாயமாகி விட்டது, அந்த நாகம்! 

“அம்மா..” 

பிரியா ஓடிவந்து லட்சுமியைக் கட்டிக்கொண்டாள்.

“பயப்படாதேம்மா… பயப்படாதே! டேய்… அதை அடிக்காம உயிரோடு பிடிச்சு வெளியே கொண்டுபோய் விடுங்கடா.” 

“அட… என்னம்மா நீங்க… பாம்பை பார்த்த இடத்துல அடிச்சிடணும். இல்லேன்னா அது நம்மை கடிச்சிடும்மா…”

“பதில் பேசாதீங்கடா… சொன்னதை மட்டும் செய்யுங்க.” 

அவள் கட்டளைப்படியே அந்த அறையை சல்லடை போட்டு சலித்துப் பார்த்துவிட்டனர். அது அகப்படவே இல்லை! 

பிரியா, தாய் லட்சுமியை கட்டிக்கொண்ட பிடியை விடவே இல்லை. 

அப்படியே இருவரும் ஹாலுக்கு வந்தனர். ஹாலில் சோபாவில் அமர்ந்துகொண்ட பிரியா, காலை தொங்கப் போட்டுக்கொள்ளக்கூட அஞ்சினாள். முத்து முத்தான வியர்வை அவள் முகத்தில்… 

ஒரு வேலைக்காரன் லட்சுமியிடம் வந்து பணிவாக கைகட்டிக்கொண்டு, “அம்மா… அந்த பாம்பை நாம பிடிக்கிறது சாத்தியம் இல்லம்மா. பாம்பாட்டிங்க வந்தாதான் முடியும். மகுடி வாசிச்சு, அதை வெளியே இழுத்து ஒரே அமுக்கா அமுக்கிப் பிடிக்கணும்மா” என்றான். 

“அப்ப போய் பாம்பாட்டியை கூட்டிகிட்டு வாங்கடா.” 

“அவங்களை எங்கே போய் நான் தேடுவேன்ம்மா?”

“அப்புறம் எதுக்குடா சொல்றே… இதோ பாரு என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது… இன்னும் ஒரு மணி நேரத்துல பாம்பாட்டி இந்த மாளிகைக்குள்ள வந்தாகணும். ஒருத்தருக்கு பத்து பேர் தேடிகிட்டு போங்க. ஓடுங்க…” 

லட்சுமி, மழையில் நனைந்திருந்த புறா போல ஆகி இருந்தாள். அவளது மொத்த கலகலப்பும் பாம்பு பயத்தில் ஆவியாகிவிட்டிருந்தது. 

“பிரியா கண்ணு… பயப்படாதேம்மா! அந்தப் பாம்பு வந்ததுல ஒருவிதத்துல நல்லதுதான்” என்று பிரியாவின் தலையை கோதிவிட்டாள். 

”நல்லதா… என்னம்மா உளறுறே?” 

“ஆமாம்… உனக்கு தெரியாது. இப்ப உலகத்தில் யார்கிட்டேயும் இல்லாத ஒரு விஷயம் நம்ம பங்களாவில் இருக்கு.” 

“உலகத்துல யார்கிட்டேயும் இல்லாததா?” 

“ஆமாம்டா… நீ நாகமாணிக்கம் பத்தி கேள்விப் பட்டிருக்கியா?” 

பிரியா மறுப்பாக உதட்டைப் பிதுக்கினாள். 

“ரொம்ப அபூர்வமானது… அது இருக்கிற இடத்துல அதிருஷ்டம் கொழிக்கும்னு சொல்லுவாங்க. இது எவ்வளவு பெரிய உண்மைன்னும் நான் இப்ப உணர்ந்துட்டேன்.’ 

“அம்மா… என்னம்மா நீ சொல்றே… நாகமாணிக்கத்துக்கும், நம்ம வீட்டுக்குள்ள பாம்பு வந்ததுக்கும் என்னம்மா சம்பந்தம்?” 

“என்னா அப்படி கேட்டுட்டே? இப்ப நம்ம வீட்டுல அந்த நாகமாணிக்கம் இருக்கு. அதான் அதை தேடிகிட்டு பாம்பு வந்துடுச்சி…” 

ரகசியமான குரலில் பிரியாவின் காதில் லட்சுமி சொல்லி முடிக்க, பிரியாவுக்குள் எக்குத்தப்பான திகைப்பு. 

“பிரியா…” 

“பிரியா செல்லம்…” 

”உம்…”

“என்னடா… நம்பமுடியலையா உன்னாலே?”

“ஆமாம்மா… என்னம்மா இது புது கதை?”

“கதையா… நான் சொன்னதெல்லாம் சத்தியம்டா கண்ணு…” 

“சத்தியமா…? நாகமாணிக்கம்கறது ஒரு பித்தலாட்டம். உனக்கு அவ்வளவு கூடவா தெரியாது?” 

“இல்லடா… நானும் ஆரம்பத்துல சந்தேகப்பட்டேன். ஆனா, இது அப்படி இல்லை. அது இருக்கிற இடத்துல பாம்புங்க தானா தேடிவரும்னு நல்லமணி ஐயா ஏற்கெனவே என்கிட்ட சொல்லி இருந்தாரு. இப்பகூட அப்படித்தான் நடந்துருக்கு.” 

“நல்லமணி ஐயான்னா…?” 

“நரிக்குடி ஜமீன் குடும்பம்மா… அவர் பேரனுக்குத்தான் உன்னை கேட்டார். இது, அவர் அதுக்காக கொடுத்த சீதனம் மாதிரின்னு வைச்சுக்கோயேன்.” 

“அதான் கல்யாணப் பேச்செடுத்தியா… கடவுளே, இப்ப நான் என்ன பண்ணுவேன்?” – பிரியா கசந்துபோய் கைகளை பிசைந்து கொள்ளத் தொடங்கினாள். 

“பிரியா…நீ அநாவசியமா ‘டென்ஷன்’ ஆகாதே. நமக்கு இனி நல்லகாலம்தான். அதை நான் நல்லா புரிஞ்சுகிட்டேன். இந்தப் பாம்பு வீட்டுக்குள்ள நுழைஞ்சுதுல எனக்கு வருத்தமே இல்லை. ஏன்னா, இது என் சந்தேகத்தை போக்கின பாம்பு, என்கிட்ட இப்ப இருக்கிறது யார்கிட்டேயும் இல்லாத ஒரு விஷயம். அதை நான் எக்காரணம் கொண்டும் இழக்கமாட்டேன். இனி இந்த அம்பாரி மாளிகை, உலகத்தையே ஆட்டிவைக்கப் போறதையும் நீ கண்கூடா பார்ப்பே.” 

“என்னம்மா உளறிகிட்டே போறே… அப்ப நீ நல்லமணி ஐயா பேரனுக்கு என்னை கல்யாணம் பண்ணி கொடுக்கப்போறியா?” 

“ஆமாம் பிரியா… அதுதான் இப்ப எனக்கு இருக்கிற ஒரே வழி. ஒரு ஆச்சரியம் பாரு… அந்த பையனும் நீ விரும்புற ரகம்தான்! அதாவது, ஒரு ஆம்பளைக்கு தேவையான அவ்வளவும் அவன்கிட்ட இருக்கு.’ 

“அம்மா…” 

“பிரியாகண்ணு…அநாவசியமா நீ மனசைப் போட்டு குழப்பிக்காதே. இப்ப நம்ம வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கிற பாம்பை நிச்சயமா பாம்பாட்டியைவிட்டு பிடிச்சிடுவேன். அப்புறமா, பாம்பு வராம இருக்க சில மூலிகைகள் இருக்கு. சிரியாநங்கை, நாகதாளின்னு… அவற்றை வாங்கி வந்து பங்களாவை சுத்தி வைச்சுட்டா, அதன்பிறகு நாம பயப்பட வேண்டாம். ஆனா, இந்த சமுதாயமே நம்மைப் பார்த்து பயப்படும். அதுமட்டும் நிச்சயம்!” 

லட்சுமியின் முகத்தில், இந்த நாட்டுக்கே அவள் ராணியாகிவிட்டதைப் போல ஒரு செருக்கு. பிரியாவுக்கு அவளைப் பார்க்கவே என்னவோ போல் இருந்தது. 

அம்பாரி மாளிகையிலும் ஓர் அசாத்திய அமைதி. வேலைக்காரர்கள் அவ்வளவு பேரும், பாம்பை நினைத்து கண்களை சுழற்றியபடியே இருந்தனர். 

லட்சுமி சொன்ன அந்த ஒரு மணி நேரமும் முடிந்து விட்டது. பாம்பாட்டியை அழைத்துவருவதாகச் சொல்லி சென்றவர்களில் ஒருவன், மகுடியும் கையுமாக சாமியார் போன்ற ஒருவரோடு வந்து சேர்ந்தான். 

அம்பாரி மாளிகையின் வாசலில் நின்று நிமிர்ந்த அவர் முகத்தில் ஒரு சன்னமான வெற்றிப் புன்னகை. லட்சுமியும் அவரைப் பார்த்துவிட்டு விசாரித்தாள். 

“டேய்… யாருடா இவர்? பார்க்க சாமியார் மாதிரியே இருக்காரே?” 

”ஆமாம்மா… பாம்பாட்டியை தேடி அலைஞ்சு கிட்டிருந்தேன். ஒருத்தன் கூட கிடைக்கலை. அப்ப இவரா எதிர்ல வந்தார். ‘என்ன – பாம்பு பிடிக்கணுமா?’ன்னு கேட்டாரு… எனக்கு தூக்கிவாரிப் போட்டுச்சு. ‘நான் சாமியார்தான். அதேநேரம், நல்ல பாம்புகளை அதோட விஷத்துக்காக பிடிப்பேன்’னு சொல்லவும்… கூட்டிகிட்டு வந்தேன்” என்றான், அந்த வேலைக்காரன். 

லட்சுமியின் பார்வையும், சாமியார் பக்கம் திரும்பியது. 

”சாமி பேரு?” 

“சங்கரானந்தம்!” 

லட்சுமிக்கு உண்மையில் அவர் யாரென்று தெரிய வில்லை. ஆனால், அவர் முகத்திலோ – வரவேண்டிய இடத்துக்கு மிகச் சரியாக வந்து சேர்ந்துவிட்டதைப் போல ஓர் உற்சாக மகிழ்ச்சி!

அத்தியாயம்-9

‘அம்மா… நான் இப்ப இங்கே சொன்னது நாகபந்தன மந்திரம்! ரொம்ப அபூர்வமானது. இன்னிக்கு இது தெரிஞ்சவங்க ரொம்ப குறைவு. இந்த மந்திரத்தை எழுதி வைக்கக்கூடாது!’

அம்பாரி மாளிகையின் பிரமாண்ட நிலைகால்படி முன்னால் நிமிர்ந்து நின்றார். சங்கரானந்தம். களங்கமில்லாத காவி வேட்டி-சட்டை, பாதிக்கு பாதி நரை விழுந்துவிட்ட சடாமுடி தாடி முகம். அதில் கூர்மையான நாசி. கண்ணிரண்டிலும் ஒரு தேடல்! 

சங்கரானந்தம் பற்றி வேலைகாரர்கள் சொன்ன சூட்டோடு ஒதுங்கி நின்றுகொள்ள – லட்சுமி அவரை அளப்பது போல பார்த்தாள். சமீபகாலமாகவே சாமியார்கள் என்றால் ஒருவித அச்சம் ஏற்படுவதை அவளாலும் தவிர்க்க முடியவில்லை. 

பல போலிச்சாமியார்களின் லீலைகள், நல்ல சாமியார்களையும் சந்தேகப்பட வைத்துவிட்டது. ‘இந்த சங்கரானந்தம் அதில் எந்த ரகம்?’ லட்சுமிக்குள் கேள்வி எழும்ப – அவரை உள்ளே வந்து சோபாவில் அமரச் சொன்னாள். அங்கங்கே தடிகளோடு வேலைக்காரர்கள். சங்கரானந்தமும் பார்த்துச் சிரித்தார். அப்படியே அம்பாரி மாளிகையையே தன் பார்வையால் அளந்து முடித்தார். 

அங்குலத்துக்கு அங்குலம் அம்பாரி மாளிகையில் அந்தக்காலம் தெரிந்தது. இன்றைக்கு எந்த மாளிகையிலும் மரங்களுக்கு இடமில்லை. உத்தரத்தில் இருந்து வாசல் நிலை வரை எல்லாமே இரும்பும், பிளாஸ்டிக்குமாய் போய்விட்டன. 

“சாமி எதை அப்படி பார்க்கிறீங்க?” – லட்சுமி பேச்சை ஆரம்பித்தாள். 

“ஒண்ணுமில்லைம்மா… இந்த மாளிகையோட லட்சணத்தை ரசிச்சேன்…” 

“மன்னிக்கணும் சாமி. முதல்ல பாம்பை பிடிக்கற வழியைப் பாருங்க. அது வசப்பட்ட பிறகு, நானே இந்த மாளிகையை உங்களுக்கு சுத்திக் காட்டுறேன்…” 

“பதற்றப்படாதேம்மா… இந்த மனை, வாஸ்து பலம் உள்ளது. இங்கே துர்மரணங்களுக்கு இடமேயில்லை. இப்படியொரு மாளிகைக்குள் சர்ப்பம் வந்திருக்குன்னா அதுக்கு பின்னால் அழுத்தமான வேறு ஒரு காரணம் இருக்கணும்.” 

சங்கரானந்தம், நாகமாணிக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு பேசியது லட்சுமியை நிரடியது. 

”சாமி…காரணத்தை ஆராய்கிற நேரமா, இது? முதல்ல பாம்பைப் பிடிக்கிற வழியைப் பாருங்க…”

“அது ரொம்ப சுலபம்மா… உன் வேலைக்காரர்கள் கிட்ட சொல்லி ஒரு மண் பானையை கொண்டுவரச் சொல்…” 

”மண் பானையா… எதுக்கு?” 

“கொண்டுவரச் சொல்… பிறகு பாரு…” 

அடுத்த நொடி, வேலைக்காரர்களில், ஒருவன் ஓடினான். அதன்பின் அவரிடம், வடமேற்கு மூலையை பார்த்து ஒரு சிரிப்பு. 

“என்ன சாமி சிரிக்கிறீங்க?” 

“இல்ல… வடமேற்கு மூலையான வாயு மூலையில் மேல மூடியிருக்கு… அது வழியா காத்து நுழைய வழி இல்லை. இதனால் இந்த வீட்டு எஜமானியம்மாளுக்கு எப்பவும் ஒரு மனக்கவலை… இல்லேன்னா மனப்புழுக்கம் இருந்துக்கிட்டே இருக்கும்…”

“இது என்ன வாஸ்து ஜோசியமா?” 

”ஆமாம்… அதே நேரம் வடகிழக்கு பாகமான ஈசானியமும் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கு. அதாவது, வடக்கு கிழக்குலேயும் திறப்பே இல்லை… அங்க ஒரு மேடை போல கட்டி, அது மேல சோபா செட்டை போட்டுருக்கீங்க…”

“அதனால என்ன?” 

“உங்க எதிர்காலமும், உங்க வாரிசுகளோட எதிர்காலமும் சிக்கலான நிலைக்கு போகப் போகுதுன்னு அதுக்கு அர்த்தம்.” 

“நீங்க பாம்பு பிடிக்கிறவரா.. இல்லை இப்படி இஷ்டத்துக்கும் உளறுவரா?” 

லட்சுமியிடம் கோபம், குளத்தைப் பார்த்த தவளையைப் போல் துள்ளியபடி வந்தது. 

“அம்மாடி… நான் பாம்பு பிடிக்கிற பிடாரன் இல்லை. சந்நியாசி. ஜாதகம்,ஜோசியம், வாஸ்துங்கிற எல்லாமே ஒருவிதத்துல ஒண்ணோடு ஒண்ணு தொடர்புடைய விஷயங்கள்தான். அவற்றில் எனக்கு விசேஷ ஞானமுண்டு. அதனாலதான் இந்த பங்களாவை பார்த்துட்டு அதற்குண்டான பலன்களை என்னால சொல்லாம இருக்க முடியலை…”

அவர் பேசிமுடிக்க, பானை வர சரியாக இருந்தது. அந்த பானையை வாங்கி, ஹாலின் மையத்தில் வைத்தவர், அருகிலேயே சம்மணமிட்டு அமர்ந்துகொண்டார். 

லட்சுமிக்கு அவர் செய்கை எல்லாமே விநோதமாக இருந்தது.வேலைக்காரர்களும் ஒருவித பரபரப்போடு, அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று பார்த்தனர். 

சம்மணமிட்டு அமர்ந்துகொண்ட அவர், முணுமுணு வென்று மந்திரம் சொல்ல ஆரம்பித்துவிட்டார். 

லட்சுமி அவரை அழைத்துவந்த வேலைக்காரனை குழப்பத்தோடு பார்த்தாள். மகுடியை எடுத்துக்கொண்டு வாசித்தபடியே பங்களா முழுக்க சுற்றிவந்து, பாம்பு வெளிப்படும் இடத்தில் அதைப் பிடித்து சாக்குப் பைக்குள் போட்டுக்கொள்வார் என்றுதான் அவள் நினைத்திருந்தாள். ஆனால், இங்கே பானை முன் அவர் உட்கார்ந்துவிடவும், குழப்பியது. 

நேரமும் சொட்டுச் சொட்டாய் கரைய ஆரம்பித்தது. மொட்டைமாடிப் பக்கம் போய்விட்ட பிரியாவும், சங்கரானந்த சாமியார் வந்திருப்பது தெரிந்து ஆர்வமாக ஓடிவந்தாள். 

அவளுக்கும் அவருடைய முணுமுணுக்கும் கோலம் ஆச்சரியமளித்தது. அந்த ஆச்சரியம் அதிகமாகும் விதத்தில், ஹாலின் சோபா ஒன்றின் பின்னால் பாம்பு ஒன்று நெளிவது தெரிந்தது. 

அவ்வளவு பேரும் வாயைப் பிளந்துவிட்டனர். அதுவோ இரண்டடி நீள குட்டிப்பாம்பு. ஆனால், முன்பு அவர்கள் பார்த்ததோ பன்னிரண்டு அடி நீள பாம்பு! 

அந்த குட்டிப் பாம்பு நெளிந்து நெளிந்து பானையை நோக்கி முன்னேறி, பானை முன் நின்று ஒரு சாண் உயரத்திற்கு படம் விரித்தது. பின்னர், விறுவிறுவென்று பானையில் ஏறி, உள் அடங்கியது. பார்த்துக் கொண்டிருந்த அவ்வளவு பேரிடமும் ஆச்சரியம். 

அடுத்து இன்னொரு பாம்பு! 

அது கிட்டதட்ட ஆறடி நீளமிருந்தது. 

அதுவும் ஊர்ந்து வந்து பானைக்குள் புகுந்து, சுருண்டுகொண்டது! 

லட்சுமிக்கு உடம்பில் நடுக்கம் பரவ ஆரம்பித்து விட்டது. ‘ஒரே ஒரு பாம்பு என்று நினைத்தது எவ்வளவு பெரிய தப்பு? நாகமாணிக்கம் உள்ள இடத்தில் இப்படியா பாம்புகள் அடையும்?’ 

அவள் முகம் முத்தாக வியர்க்க -இறுதியாக அந்த பன்னிரண்டு அடி நீள பாம்பு தரையில் பிரண்டு பிரண்டு வருவது போல வந்து, பானைக்குள் புகுந்துகொண்டது. 

பார்த்துக்கொண்டே இருந்த சங்கரானந்தம் தன் தோளில் கிடந்த காவித்துண்டால் உடனேயே பானையின் வாயை மூடிக் கட்டினார். பானையையும் கையில் எடுத்துக்கொண்டார். 

லட்சுமி இப்பொழுது அவரை பிரமிப்புடன் பார்த்தாள். அவர் பானையும், கையுமாக பேசினார். 

“அம்மா… நான் இப்ப இங்க சொன்னது நாகபந்தன மந்திரம். ரொம்ப அபூர்வமானது. இன்னிக்கு இந்த மந்திரம் தெரிஞ்சவங்க ரொம்ப குறைவு. இந்த மந்திரத்தை எழுதிவைக்கக்கூடாது. குரு உபதேசமா காதுல போட்டு, மனுசல தக்கவெச்சு ஜெபிக்கணும். இதுல உச்சரிப்பு ரொம்ப முக்கியம். 

இந்த மந்திர சப்தம் காற்றுவெளியில் சில அதிர்வுகளை உருவாக்கும். ரொம்ப ரொம்ப மென்மையான அதிர்வுகள், அவை! அந்த அதிர்வுகளை பாம்புகளால் தாங்க முடியாது. அதனால், அவற்றின் உடம்புல கூச்சம் ஏற்பட்டு, அவை கூச்சத்தை நீக்கிக்க நாலாபுறமும் பார்த்தபடி வெளியவரும். அப்ப கண்ணுல பானை பட்டா… அதுக்குள்ள புகுந்துகிட்டு அதிர்வுல இருந்து தப்பிக்க பார்க்கும். எப்படி யாரும் சொல்லித்தராமலே மனித உடம்புல இரத்தம் இருக்கிறது தெரிஞ்சு கொசு அதை உறிஞ்சிக் குடிக்க தேடி வருதோ…அப்படி அனிச்சையா நடக்கிற ஒரு நுட்பமான விஷயம்தான், இது. இதுல எந்த மாயமும் இல்லை…” 

சங்கரானந்தம் அளித்த விளக்கத்தில் ஆச்சரியமான உண்மைகள். 

அவர் அந்த பானையுடன் புறப்பட்டார். லட்சுமி உடனே தடுத்து நிறுத்தினாள். 

“சாமி… நில்லுங்கள்…” 

அவரும் திரும்பினார். 

“ஒரு பாம்புக்கு மூணு பாம்பை பிடிச்சிட்டு எதுவும் வாங்கிக்காம போறீங்களே…?”

”மன்னிக்கணும்மா… நான் சந்நியாசி. கூலிக்கு மாரடிக்கற ஜென்மமில்லை”. 

“ஐயோ நான் அப்படி சொல்லலை… காணிக்கையா எதாவது…?” 

“எதுவும் வேண்டாம். எனக்குன்னு பெரிய தேவைகள் எதுவும் கிடையாது. அப்படி தேவைப்படும் போது வந்து கேக்கிறேன்… அப்ப கொடுங்க…” 

சங்கரானந்தம் அந்த பதிலோடு வாசலை தாண்டும்போது, திரும்பவும் தடுத்தாள், லட்சுமி. 

“சாமி உங்களைப் பார்க்கணும்னா எங்கே வந்தா பார்க்கலாம்?” 

அந்த கேள்விக்கு மட்டும் ஒரு சிரிப்பு சிரித்தவர், “அழகர் கோயிலுக்கு மேல கோம்பை மலைன்னு ஒரு மலைப்பகுதி இருக்கு. சித்தர்கள் நடமாடுற மலை, அது. அங்கே வந்தாலே போதும். நானே முன்ன வந்து நிற்பேன்”. 

லட்சுமியும் அதை மனதில் நன்கு குறித்துக் கொண்டாள். அவர் போய்விட, பிரியா அருகில் வந்து “அம்மா…” என்றாள். 

“ம்!” 

“இங்கே என்ன நடக்குதும்மா… நம்மை சுற்றி…?”

“எல்லாம் நல்லபடியாதான் பிரியா நடக்குது…” 

“ஒரு பாம்புக்கு மூணு பாம்பு… நம்ப வீடு ஜமீன் பங்களாவா, இல்லை பாம்புப் புத்தா…?” 

“பயப்படாதே… தேன் இருக்கிற இடத்துல ஈக்கள் இருக்கும். சர்க்கரை இருந்தா எறும்பு… இந்த விஷயமும் அப்படித்தான், பிரியா. உண்மையில் என் மனசு இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” 

“எனக்கு தரையில கால் வைக்கவே பயமா இருக்கும்மா.” 

“பயப்படாதே… வீட்டைச் சுற்றி மூலிகைகளை வைக்க ஏற்பாடு செய்துட்டேன். இனி ஒரு பாம்புகூட வராது…” 

அழுத்தமாக அவள் பிரியாவுக்கு ஒரு பதிலைச் சொன்னபோது, செல்போனில் அழைப்பு. காதைக் கொடுத்தவளுக்கு ‘சுருக்’கென்றது. 

“என்னம்மா விஷயம்?” 

“நல்லமணி ஐயா இறந்துட்டாராம்…!” 

“அடக்கடவுளே!” 

பிரியாவின் சிவந்த இதழ்களிரண்டும் விரிந்து மூடிக்கொண்டன. 


ஆஸ்பத்திரி! 

ராஜதுரையிடம் அவசர முன்னேற்றம். சங்கரானந்தம் தந்திருந்த மருந்து பிரமாதமாக வேலை செய்திருந்தது. கட்டிலில் சாய்ந்த நிலையில் படுத்திருந்தவர், சாதாரணமாக ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பது போல இருந்தார். 

டாக்டர்களுக்கே வியப்பு. அப்போதுதான் நல்லமணி ஐயா காலமான அந்தச் செய்தி ராஜதுரையையும் எட்டியது. 

“அண்ணே… நரிக்குடி ஜமீன் கிழவன் ஒருவழியா போய்ச் சேர்ந்துட்டான்…” 

”நெஜமாவா?” 

“இதுல எல்லாமா விளையாடுவோம்?” 

“படுபாவிக் கிழவன்… என் கையால கொல்ல நினைச்சேன், முந்திக்கிட்டானே.” 

“போகட்டும், விடுங்கண்ணே. ஆனா, சாகறதுக்கு முந்தி வில்லங்கமா ஒரு விசயத்தை சொல்லிட்டுதான் செத்துருக்கான், கிழவன்…” 

”என்னய்யா?” 

“சாவுத்தீட்டு கழிஞ்ச அடுத்த முகூர்த்தத்துலேயே ‘லயன்’ லட்சுமி பொண்ணுக்கும், கிழவன் பேரனுக்கும் கல்யாணத்தை நடத்திடணுமாம்…”

“இது அந்த கிழவன் ஆரம்பத்துலையே ஆசைப்பட்ட விசயம்தானே?” 

“இருக்கலாம்… பேராண்டி கொஞ்சம் முரண்டு பிடிச்சான்னு கேள்வி… லட்சுமியும், கிழவனின் பேரன் தன் வீட்டோடு மாப்பிள்ளையா இருக்க விரும்புவானான்னு குழம்பி இருக்கா…” 

“ஆனா, கிழவன் இப்ப கல்யாணம் நடந்தே தீரணும்னு சத்தியம் வாங்கிட்டு செத்துட்டானாக்கும்?” 

“ஆமாண்ணே…” 

“நல்லா கேட்குக்குங்க… இந்தக் கல்யாணம் மட்டுமில்ல… எந்த கல்யாணமும் லட்சுமி வரையில நடக்கவேகூடாது. அவ என் காலில் வந்து விழுறவரை அவளையும், அவ மகளையும் ஒரு ஆட்டு ஆட்டி வெச்சிடணும்…”

“நீங்க கவலையை விடுங்கண்ணே… கல்யாண முகூர்த்ததுக்குள் கிழவனின் பேரனை பரலோகத்துக்கு அனுப்பிட்டு வந்து தகவல் தர்றோம்… அப்புறம் சொல்லுங்க…”

மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரையின் அடியாட்கள் துப்பாக்கியில் ‘லோடு’ செய்யப்பட்ட தோட்டாவாக அப்போதே பாயத் தயாராகிவிட்டனர்! 

ராஜதுரைக்கும் அவர்கள் மேல் அப்படியொரு நம்பிக்கை அது, அவன் முகத்தில் கர்வ சிரிப்பாக வெளிப்பட்டது. 


ஒரு பெரிய மலர் வளையத்துடன் போன லட்சுமி, நல்லமணி உடம்பைப் பார்த்து லேசாக கண்கலங்கினாள். அவளை அங்கிருந்து ஒரு தனியறைக்கு நல்லமணி ஐயாவின் உறவினர்கள் அழைத்துச் சென்றனர். 

“அம்மா… எப்படியும் கல்யாணத்தை பார்த்துடணும்னு ஐயா ஆசைப்பட்டார். ஆனா, எமன் முந்திகிட்டான். சாகும்போது அவரோட ஒரே விருப்பம், சாவு காரியம் முடிஞ்ச கையோடு உங்க பொண்ணுக்கும்… எங்க பையனுக்கும் கல்யாணம் நடத்தணும்கிறதுதான்…” 

“அதுக்கென்ன… நான் தயாராகவே இருக்கேன். அப்பதான் ஐயாவுக்கு ஆத்மசாந்திங்கிறது எனக்கும் நல்லா தெரியும்…” 

“அப்ப இப்பவே போய் நீங்க ஏற்பாடுகளை செய்யுங்க. இங்க மத்த விஷயங்களை நாங்க பார்த்துக்கிறோம். எங்க வரையில இது கல்யாணச்சாவு. ஐயா, ராஜா மாதிரி வாழ்ந்தவர். அவரை தங்கத்துல பூட்டி அப்படியே தான் அடக்கம் பண்ணப்போறோம்”

ஒருவர் சொன்னது, நல்லமணி ஐயா வரையில் நடந்தபடி இருந்தது. 

அவரது உடலுக்கு புதிய உடை அணிவித்து, தலைக்கு பட்டால் ஆன ‘டர்பன்’ சூட்டப்பட்டது. கழுத்திலும் பெரிய ரத்தின மாலை. விரல்களுக்கெல்லாம் மோதிரங்கள் பூட்டப்பட்டன. 

சில எடுபிடி வேலைக்காரர்கள் அதை ஏக்கத்தோடு பாத்தனர். 

“ஒரு பொணத்துக்கு போட்டு புதைக்கப்போற இம்புட்டு நகைங்களை நமக்கெல்லாம் தானமா கொடுத்தா எவ்வளவு நல்லா இருக்கும்?” -என்று ஓர் ஊழியன் தன் சகாவிடம் பெருமூச்சோடு முனங்கியபடி சொன்னான். 

லட்சுமியும் வந்து ராஜாபோல அலங்கரிக்கப்பட்ட நல்லமணி ஐயாவை இறுதியாக ஒருமுறை பார்த்து, கைகூப்பி வணங்கினாள். 

அந்த சாவு வீட்டிலும் சிலர் “என்ன மேடம்… பத்மஸ்ரீ விருதுக்கு உங்க பேரும் போயிருக்காமே?” – என்று கேட்டு, அவளை சற்று புளகாங்கிதப்படுத்தினர். 

அந்த பரபரப்பான சூழலில் இறுக்கமாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான், நல்ல மணி ஐயா பேரன் ரமேஷ். அவன் கூடவே இருந்தார் கம்பிக்குடி ஜமீன்தார் கைலாசநாதன். 

”ரமேஷ் … நான் சொன்னது உனக்கு நல்லா ஞாபகத்துல இருக்கட்டும். அந்தம்மா கைக்கு நீ போகக் கூடாது… உன் கைக்குதான் அவ வரணும். கல்யாணம் முடிகிறவரை அமைதியா இரு. அதன்பிறகு, ‘நாகமாணிக்கத்தை தந்தா உன் மகளோடு வாழுறேன். இல்லாட்டி அவ வாழாவெட்டிதான்’னு நீ சொல்றதைக் கேட்டு, ‘லயன்’ லட்சுமி சயனைடு சாப்பிட்ட லட்சுமியாட்டம் மாறிடணும்…”

கைலாசநாதன், ரமேஷை நன்றாகவே ஏற்றிவிட்டுக் கொண்டிருக்க – அவனும் அதை செயல்படுத்த அந்த நொடியே தயாராகிவிட்டான். லட்சுமியும் அவனிடம் சொல்லிவிட்டு செல்ல, அவனைப் பார்த்தபடியே வந்தாள். “தம்பி… மாப்பிள்ளை…” லட்சுமியிடம் அப்போதே உறவு துளிர்த்துவிட்டது. 

”சொல்லுங்க அத்தை…” – பதிலுக்கு அவனும் குழைவாக பேசினான். 

“நான் புறப்படுறேன்… எல்லா காரியமும் முடிஞ்சபிறகு ஒருநாள் வீட்டுக்கு வாங்க…” 

“நிச்சயமா அத்தை! அப்புறம்… போன தடவை நான் எதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிக்குங்க…” 

அவன் பேச்சால் லட்சுமியின் நெற்றியில் ஆச்சரிய வரிகள்.

“தாத்தா சாகிறதுக்கு முன்ன என்கிட்ட பேசின பேச்சு… குறிப்பா உங்களைப் பத்தி அவர் என்கிட்ட சொன்னது என்னை ரொம்பவே நெகிழ வைச்சிடிச்சு…” 

லட்சுமி மவுனமாக அதை ரசித்து, சுவைத்தாள். 

“சரிங்க அத்தை… நீங்க கிளம்புங்க… நான் அப்புறமாக வரேன். பிரியாகூடவும் நான் கொஞ்சம் மனம்விட்டுப் பேசணும்.” 

அவன் குழைந்து, நெளிந்து அவளுக்குள் இன்ப அதிர்வுகளை ஏராளமாக அளித்தான். 

அவளும் ஒரு சிறு புன்னகையை பதிலுக்கு உதிர்த்துவிட்டு கிளம்பினாள். 

சவ அடக்கத்திற்கு எல்லோரும் தயாராகி – மாளிகை வாசலில் மிகப்பெரிய பூப்பல்லக்கு ஏற்பாடாகி இருந்தது. லட்சுமி அதை கடந்து சென்று தன் காரில் ஏறினாள். 

கம்பிக்குடி கைலாசநாதன் பார்வை மட்டும் தோட்டா துளையிடுவதுபோல அவள் மேலேயே. 

– தொடரும்…

– யாரென்று மட்டும் சொல்லாதே…  (நாவல்), முதற் பதிப்பு: 2009, திருமகள் நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *