சுன்னாகம்<சிட்னி<சுன்னாகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2024
பார்வையிட்டோர்: 689 
 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

2005 சுன்னாகம். 

“கோயில் வாசல் றக்கம்…” 

“கோயில் வாசல் றங்கிறவை எல்லாம் கெதியெண்டு எழும்பி வாங்கோ.. அசைஞ்சு கொண்டு நிக்காதேங்கோ.. எல்லாரும் வேலைக்குப் போற ஆக்கள்… நேரம் போட்டுது… ஆச்சி… பக்கத்திலை இறங்கிற தெண்டு தெரிஞ்சு கொண்டு ஏனெணை பின்னுக்குப் போன்னி…? இதில எனக்குப் பக்கத்திலை நிண்டிருக்கலாமே… கெதியா வாணை… வயது போனா வீட்டிலை இருக்கேலாமல் வெளிக்கிட்டிடுவியள்… இடிச்சுக் கொண்டு வாணை…. அண்ணை கொஞ்சம் றங்கிப் போட்டு ஏறுங்கோ…” 

“அக்கா… ஏறுங்கோ…. இடம் கிடக்கு ஏறுங்கோ… உதிலை துரை வீதியிலை கனபேர் றங்கப் போயினம்…. ஏறுங்கோவன்… மற்றக்கா நீங்கள் என்ன சீ.ரி.பி வரும் எண்டு வாய் பாக்கிறியளோ…? 

“அவன் இப்ப வரான்… நல்லாக் கால் முறிய நில்லுங்கோ….” 

“அக்கா கொஞ்சம் பின்னுக்குப் போங்கோ…. என்ன மனச்சாட்சி இல்லாத மனிசரப்பா நீங்கள்? நீங்கள் மட்டும் போனாக்காணும். மற்றவை ஒருத்தரும் ஆஸ்பத்திரிக்கு, வேலைக்குப் போறேல்லையோ… அங்கை அதுக்குள்ளை எந்தளவு இடம் கிடக்கு… அம்மா… பஸ் போற பக்கம் பாத்துக்கொண்டு நில்லுங்கோ. பின்னுக்குப் போங்கோ… இதிலை வாசல்லை எல்லாரும் என்னை கட்டிப் பிடிச்சுக்கொண்டு நிண்டு என்னெய்யப்போறியள்? இல்லைக் கேக்கிறன்… ஹி… ஹி….” 

“பிள்ளை அதிலை டிறைவருக்குப் பின்னாலை ஏறு பிள்ளை. ஆ… அண்ணை மேலே ஏறுங்கோ… புற்போட்டிலை நிண்டா பொலிஸ் காறனோடை பிரச்சினைப் படோணும்… ஒரு மாதிரி ஒரு காலை வைச்சு மேலை ஏறுங்கோ….” 

“ஆ… இல்லை… இல்லை… துரைவீதி இறக்கம் இல்லை. றைற்..” 

(மெதுவான குரலில்) -அண்ணை கெதியா எடுங்கோ… அவன் துரத்திக்கொண்டு வாறான். 

“கோண்டாவில் இறங்கிற ஆக்கள் கெதியா வாங்கோ. உள்ளுக்கை ஏறிட்டால்.. பிறகு இறங்கிறேலை எண்டே இருக் கிறனியள்…?” 

“அடிலை போய்க் கிடந்திடுவியள். கெதியா வாங்கோ புற் போட்டிலை இறங்கி நில்லுங்கோ.. கெதியா… கெதியா… ம்…ம்.. கெதியா. வேலைக்குப் போறதுகள் எவ்வளவு மன அவதியோடை நிக்குதுகள்…. நீங்கள் ஆடி ஆடி… இஞ்சாலை வாணை… நீ விழுந்தா நான் பிடிப்பன் தானே…. டக்கெண்டு இறங்கு… றைற்…” 

“ஏறுறவை எல்லாம் ஏறுங்கோ. இடம் தரலாம் இருக்க. ஏறுங்கோ. அக்கா இந்தக் குழந்தைப் பிள்ளையோடை வாற அக்காவுக்கு ஓராள் இடம் குடுங்கோ… என்னப்பா நீங்கள் பொம்பிளையளே…? ஒரு இரக்கம் இல்லாததுகள் அப்பா… எழும்பி எங்கை நிக்கிறதோ? இஞ்சாலை வாங்கோ. இதிலை நான் புற்போட்டிலை அரைக்கால் வைச்சுக்கொண்டு நிக்கிறன்தானே… எல்லாம் சமத்துவம் எண்ணுவியள்… என்னோடை நில்லுங்கோ பாப்பம்…” 

அக்கா ஒழும்புங்கோ… உந்த சீற்றிலை மூண்டுபேர் இருக்கேலாது.ஒழும்புங்கோ சொல்லுறன். நீங்கள் உப்பிடிக் காலை வைச்சுக்கொண்டு இருந்தா இதிலை என்னெண்டு நிக்கிறது? பத்துப்பேர் நிக்கிற இடத்திலை நீங்கள் ஓராள் காலை வைச்சுக்கொண்டு இருக்கிறியள்… எழும்புங்கோ… காச்சலோ? காச்சலுக்குத்தானே மருந் தெடுக்கப்போறியள்? அது மாறிவிடும். ஒழும்பி நில்லுங்கோ…’ 

“அம்மா! கதையை விட்டிட்டுப் பின்னுக்குப் போங்கோ. நாளைக்குச் சண்டை தொடங்கி அவன் மல்ரிபெறல் அடிச்சானெண்டால் திறந்த வாயளுக்குக் குண்டுதான் விழும். பொம்பிளையளுக்கு எந்த நேரமும் கதைதான். நகைநட்டுக்கதை, சீலைக்கதை, வீட்டுக்கதை காணாதெண்டு இப்ப ஆசுப்பத்திரிக் கதை…. பேந்து இறங்கி நிண்டு கதைக்கலாம். இப்ப இடங்களைப் பாத்துப் பின்னுக்குப் போங்கோ…. உந்தக் கம்பியை ஏன் பிடிச்சுக்கொண்டு நிக்கிறியள்? அது விழாது நீங்கள் விடுங்கோ….” 

“என்னடாப்பா… உவன் றோட்டு முழுதும் தனக்கெண்ட மாதிரி ஓடுறான்…. அருந்தப்பு என்ன?” 

“பஸ் எண்டாக் கெதியாத்தானே போகும்? ஆறுதலாப் போற தெண்டால் நீங்கள் மாட்டுவண்டில்லை வந்திருக்கலாம். பின்னை என்ன கேக்கிறன்.? பிறேக் பிடிச்சா முன்னுக்குப் பின்னுக்கு ஆட்டுந்தானே… இந்தச் சனத்துக்கை நீங்கள் கடைசிவரை விழமாட்டியள்… பயப்பிடாமல் கையை விட்டிட்டு நில்லுங்கோ…” 

(இரகசியமாக) “அண்ணை கிட்ட வந்திட்டான் கெதியா…” 

“ஆர் புறுபுறுக்கிறது? தங்கச்சி என்ன பிரச்சினை? பஸ் எண்டா ஆக்களின்ரை கை கால் படுந்தானே… நீங்கள் பெரிய கற்புக்கரசியள் எண்டால் தனிக்கார் பிடிச்சுக்கொண்டு போயிருக்கலாமே… சத்தம் போடாமல் நில் பிள்ளை. இவ்வளவு பேருக்கும் முன்னாலை உன்னைப் பெரிசா ஒண்டும் செய்யேலாது. நான் நிக்கிறன். இங்கை… பயப்பிடாமல் நில் பிள்ளை…” 

இனியென்ன தாவடி வந்திட்டுது. ஒரு மூச்சுவிட முந்தி யாழ்ப்பாணம் வந்திடும். கொஞ்சம் கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ… தாவடியாரை நாங்கள் விட்டிட்டு போறதே…. அதுகளும் பாவந்தானே…. அம்மா ஏறுங்கோ… நானெல்லோ இடம் தாறது… கெதியா ஏறுங்கோ. ஏன் உந்தப் பெட்டி படுக்கை எல்லாம் காவிக்கொண்டு வெளிக்கிட்டனீங்கள். பெட்டி ஐஞ்சு பேற்றை இடத்தை பிடிக்கப்போகுது… முன்னுக்கு இருக்கிற அண்ணை… இந்தப் பெட்டியை ஒருக்கா மடியிலை வைச் சிருங்கோ… பெட்டிக்கு இரண்டு ரிக்கற் காசு தரோணும். ஆஸ்பத்திரிச், சாமானோ….. அந்திரட்டிச் சாமானோ பெட்டி பெட்டிதானே…? 

“குளப்பிட்டி எல்லாம் எழும்பி வாங்கோ. அம்மா கொஞ்சம் விலத்துங்கோ. நடுப்பாதைலை நிக்கிறியள். வாறவை இஞ்சாலை வர விடுங்கோ. உங்கடை உடம்பு வலு மெலிசு. அந்தச் சீற்றுக்கு இடை யிலை நில்லுங்கோவன். மனுசற்றை கால்தானே மிதிச்சது… அதுக்கேன் கத்திறியள்? மிதிவெடி வெடிச்சுக் கால் போனால் என்ன செய்யப்போறியள்? இறங்கிறவையெல்லாம் புற்போட்டுக்கு வாங்கோ… கெதியா… கெதியா… நான்தான் உங்களைக் கையைப் பிடிச்சு இழுக்க வேண்டிக் கிடக்கு. வாய் இல்லையே…. இறக்கம் எண்டு சொல்லிக் கொண்டு வாங்கோவன். ஏறேக்கை சந்தோஷமா ஏறுவியள்… பிறகு இறங்க மாட்டியள். அண்ணை உந்தப்பாட்டை நிப்பாட்டுங்கோ… அதுகள் பாட்டைக் கேட்டுக்கொண்டு நிக்குதுகள்…. இறங்காதுகளாம். காசுகளை எடுங்கோ… நான் என்ன பாங்கே நடத்திறன்…. எல்லாற்றை காசும் மாத்த…? கொட்டப்பெட்டியளைக் கிளறிப் பாருங்கோ. சில்லறை அம்பிடும். அக்கா மிச்சக்காசு தரச் சில்லறை இல்லை அக்கா. இருந்தா நான் ஏன் உங்கடை காசைக் கொண்டு போறன்…? இறங்குங்கோ… இறங்குங்கோ..ஒரு ஐஞ்சு ரூபா மிச்சக்காசுக்கு இப்பிடி நிண்டு அடி படுறியள்.. காசைக் கண்ணாலை காணாத ஆள் மாதிரி நிக்கிறியள்… எப்பதான் இதுகள் திருந்தப் போதுகளோ தெரியாது.” 

“ஏறுங்கோ….. ஏறுங்கோ…. இப்போதைக்கு இந்த றோட்டிலை பஸ் ஒண்டும் வராது. உங்களை என்னெண்டு விட்டிட்டுப் போறது? ஒரு மனச்சாட்சி வேண்டாமே? ஏறுங்கோ…. அக்கா உங்களைத்தான். என்ன சீ.ரி.பியைப் பார்த்துக்கொண்டே நிக்கிறியள்… நாளைக்கு எங்கடை பஸ்ஸை மறிப்பியள்தானே…. அப்ப பாப்பம்…” 

“அண்ணை றைற்” 

“அக்கா உதிலை இஞ்சின் பெட்டியில இராதேங்கோ . சுடும், சலக்கடுப்பு வரும். உங்களைத்தான் சொல்லுறன். ஒழும்பி நில்லுங்கோ… பஸ் போற பக்கம் திரும்புங்கோ…” 

“இல்லை அண்ணை முன் சீற்றுக்குப் போகாதேங்கோ. அதிலை மூண்டுபேர் இருக்கேலாது. கியர் போட ஏலாது. கொஞ்சத் தூரந்தானே நில்லுங்கோ. தலை சுத்துதோ, விழமாட்டியள் பயப்பிடாதேங்கோ…” 

“இறக்கம் இல்லை றைற்” 

“அடுத்த ஹோல்ற் இறங்கிறவை எல்லாம் காசுகளைக் கையிலை எடுத்துக்கொண்டு வாங்கோ. இனிமேல்தான் கொட்டப்பெட்டியள் திறப் பியள். பஸ்சுக்கை ஏறேக்கை காசைக் கையிலை கொண்டுவர ஏலாதே…?” 

“தங்கச்சி… கண்ணாடியோடை சரியாதை. கண்ணாடி உடைஞ்சு கையிலை குத்தப்போகுது…” 

“கொக்குவில் பள்ளிக்கூடம் இறங்கிறவை கெதியா வாங்கோ. பிள்ளை ஆறு ரூபா பிள்ளை. ஆளைப்பாத்தா கலியாணம் செய்யிற வயசு மாதிரிக் கிடக்குது. அரை ரிக்கற் எண்றாய். எடு பிள்ளை, யூஸ் வாங்க வைச்சிருக்கிற காசை எடுத்துவிடு பிள்ளை வெளியாலை…” 

“ஆச்சி பெட்டி தருவன். நான் என்ன கொண்டே போப்போறன். அண்ணை அந்தப் பெட்டியை ஒருக்காத் தாங்கோ…. அதில்லை…. மற்றப் பெட்டி… பிடி… பிடி… கெதியா, பள்ளிக்கூடப் பிள்ளையளுக்கு நேரம் போட்டுது….” 

“ஏறுங்கோ… ஏறுங்கோ…. தம்பி இடிச்சுக்கொண்டு போ பின்னாலை…” 

“ஆரது… சத்தி வருதோ? யன்னலுக்குள்ளாலை தலையை வெளியில் நீட்டு பிள்ளை… அட… வாகனம் வருதோ எண்டு பாத்தெல்லோ நீட்டோணும்… அருந்தப்பு… தலை பறந்திருக்கும் இப்ப…” 

“ஆ…. றக்கம். ஆச்சி இறங்கணை கெதியா…… 

ஆ…. ஆ… என்னெண ஏன் விழுந்தனி? அது வளர முந்தி மாறிடும்… ஒழும்பு ஒழும்பு… றைற்…’ 

(தணிந்த குரலில்) “தட்டாதெருவோடை முந்தட்டும் விடுங்கோ… பிறகு சனம் நில்லாது” 

“அண்ணை உவன் துர்க்கா எங்கினேக்கை போறான்… ஆ… ஆ…. பிழையில்லை.” 

“சிவலிங்கப்புலியடி இறக்கம் இருக்கோ? உங்கினை பின்னுக்கு நிண்டு அனுங்காமல் வெளிக்கிட்டு வாங்கோ… இந்த நூறு ரூவாத் தாளைக் கொண்டு ஏன் வெளிக்கிர்றனியல்? நீங்கள் பணக்காரர் எண்டு காட்டவோ? கொண்டாங்கோ… இரண்டு ரூபா சில்லறை இல்லை… பிடியுங்கோ நூறு ரூவாயைத் தந்திட்டுப் பேந்து ரண்டு ரூபா வேண்டிறதுக்கு அடிபடினம்….” 

“பொம்பிளையளுக்கு வாய் கூடிப் போச்சு….” 

“சரி… சரி… பட்டணம் வந்திட்டுது… ஆறுதலா ஒவ்வொருத்தராக் காசுகளையும் எடுத்துக்கொண்டு வாங்கோ பாப்பம்… என்ன அவசரமப்பா…? பட்டணத்தைக் கண்டோண்ணை ஏனப்பா அவசரப் பாறியள்? இருங்கோ… இருங்கோ… இப்பென்ன… ஆரோ செத்துப் போட்டினமே…. ஓராள் ஓராளா வாருங்கோ… அக்கா கொஞ்சம் அவசரப்படாதேங்கோ… ஒரு நாளைக்குக் கொஞ்சம் பிந்திப் போனால் என்ன…. வேலை போயிடுமே….? ஆஸ்பத்திரியிலை பின்னேரம் மட்டும் மருந்து குடுப்பினம்… அம்மா கொஞ்சம் நில்லுங்கோ…. எங்கை ஏறின்னீங்கள்? சுன்னாகமோ? ஆம்பிளையளை விட்டிட்டு வாறன் பொறு பிள்ளை. பள்ளிக்குடத்திலை போய் இப்ப பி.ரி. தானே செய்யிறது? நில்… வாறன்…” 

“அப்பாடா… இதுகளோடை நான் படுற பாடு பெரிய பாடு….” 

“அண்ணை ஏன் இருக்கிறியள்? பஸ்ஸாலை இறங்கேல்லை?” 

தம்பி நான் ஒரு டொக்டர். அவுஸ்திரேலியாவிலை இருந்து வந்தனான். என்ரை சொந்த இடம் யாழ்ப்பாணம்தான். கிட்டடியிலை அங்கை போனனான். போர் நெருக்கடியள் இதுகளாலை உள ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்கிற எங்கடை சனத்துக்கு ஏதும் உதவி செய்திட்டுப்போக வந்தனான். உளநலம் பாதிக்கப்பட்டவையை வைச்சுப் பராமரிக்க ஒரு இல்லம் கட்டிக்குடுப்பம் எண்டு யோசிச்சுக்கொண்டு வந்தனான். இப்ப இதிலை வந்தாப்பிறகு… உமக்கு முதலிலை உதவி செய்யலாம் எண்டு நினைக்கிறன…” 

“எனக்கோ? அப்ப எனக்குச் சொந்தமா ஒரு மினிபஸ் வேண்டித் தாறியளே… ஓடுவம்….” 

மஞ்சள் கிரகணம் கவிந்து உறைக்கத் தொடங்கிய முன் காலைப் பொழுது. மாசி மாதக் கோடையில் உவப்பான “சன்னிடே”. காலை 9.25க்கு நான் ஸ்ரெத்ஃபீல்டில் லிவர்பூல் வீதியில் 483 பஸ்ஸுக்கு நிற்கிறேன். இல்லை அமர்ந்திருக்கிறேன். பஸ்தரிப்பு இட இருக்கையில் நான் தனியே. அருகில் இருக்கும் மஞ்சல் பெட்டி பஸ் 9.27க்கு வரும் என்று தெரிவிக்கிறது. பாடசாலை நேரமும் அலுவலக நேரங்களும் முடிந்து தெரு கொஞ்சம் அமைதியாக இருக்கிறது. 

2010 சிட்னி

சரியாக 9.28க்கு பஸ் வருகிறது. நான் ஆறுதலாக எழுந்து கை காட்டி மறிக்கிறேன். பஸ் எனக்கு அருகில் வசதியாக நின்று, டிறைவரின் கட்டுப்பாட்டில் கதவு திறந்து கொள்கிறது. உள்ளே ஏறி சாரதியாகவும், நடத்துனராகவும், ரிக்கற் பரிசோதகராகவும் எல்லாமாக இருக்கும் அந்த ஒருவரைப் பார்க்கின்றேன். 

“குட்மோர்னிங்… ஹவ் ஆர் யூ?” என்கிறார். 

நானும் நலம் சொல்லி அவரை நலம் விசாரிக்கிறேன். அவுஸ்திரேலிய வெள்ளையர். சுத்தமாகச் சவரம் செய்யப்பட்ட சிரித்த முகம் “எங்கே போகிறாய்” என்று அவர் கேட்பதாக இல்லை. என்னிடமிருந்த “மைபஸ் ஒண்” அட்டையை எடுத்து நீட்டுகிறேன். நான் இரண்டு டொலருக்குட்பட்ட தூரம்தான் போகிறேனா என்பது பற்றிக்கூட அவர் அக்கறைப்படுவதாக இல்லை. அது எனக்குத் தெரியும்தானே என நம்புகிறார். எனது அட்டையை அந்தப்பச்சை மெசினில் போட்டு அடித்துத் தருகிறார். அது நேரம், நாள் ஆகியவற்றைப் பதிந்திருக்கிறது. 

பஸ்ஸை ஒருமுறை பார்க்கிறேன். எந்தச் சீற்றில் இருப்பது? எதிலும் இருக்கலாம். இறங்குவதற்கான பொத்தானை அழுத்துவதற்குக் கிட்டவான ஒரு சீற்றில் அமர்ந்து கொள்கிறேன். நான் அமர்ந்துவிட்டதை உறுதி செய்து கதவைப்பூட்டி நிதானமாகப் பஸ்ஸை எடுக்கிறார். 

பஸ்ஸைப் பார்க்கிறேன். அழகான குஷன்கவர் போட்ட நீல, சிவப்பு சீற்கள். உடல்நலக் குறைபாடு உடையோரும், நடக்கச் சிரமப் படுவோரும் அமர்வதற்காக எதிர் எதிராகப் பார்த்தபடி ஆறு சீற்கள். சக்கர நாற்காலியில் வரும் பயணிகள் அதனை எப்படி நிறுத்தவேண்டும், எப்படி அதன் பிறேக்கைப் போடவேண்டும் என்று கூறும் அறிவுறுத் தல்கள் தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றன. 

பஸ்ஸில் எவரும் புகை பிடிக்க முடியாது. உணவு அருந்த முடியாது. தண்ணீர் தவிர வேறு பானங்கள் அருந்தமுடியாது என்றும் எழுதப்பட்டிருக்கிறது. 

அவசர தேவையின்போது பஸ்ஸில் இருந்து வெளியேறும் இடம் குறிக்கப்பட்டிருக்கிறது. “அவசர வேளையில் கண்ணாடியை உடைக் கவும்” என்றும் கூறப்பட்டிருக்கிறது. 

பொதிகளை வைப்பதற்கென்று உயரமான அடைப்புப் போட்ட ஒரு இடம் இருக்கிறது. 

பஸ் கட்டணங்கள் தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றன. 

முதியோர் யாராவது நின்று பயணம் செய்தால் இளையோர்கள் எழுந்து இடம் கொடுக்கும்படி ஒரு விளக்கப்படம் தெரிவிக்கிறது. 

நன்றாகச் செப்பனிடப்பட்ட வீதி. பஸ் வழுக்கிக்கொண்டு அமைதியாக ஓடுகிறது. டிரைவர் தனது வேலையில் கவனமாகத்தான் இருக்கிறார். பச்சை, சிவப்பு, மஞ்சள் விளக்குகள் அவரைக் கண் காணிக்கின்றன. எல்லா வாகனங்களையும் கட்டுப்படுத்துகின்றன. அவர் எந்தக்கதையும் கதைக்க வேண்டியதில்லை. ஹோர்ன் அடிக்க வேண்டிய தேவையும் இல்லை. 

நெஞ்சில் கானமெழவேண்டும். கவிதை வரவேண்டும். அவ்வளவு அமைதியான பயணம். 

ஒரு ஆனந்த அனுபூதி உடலெங்கும் தழுவிப்பரவும் சுகம் வரவேண்டும். 

புலன்கள் ஓயும்போது நேர் உணர்வாலே உளம் நனைய வேண்டும். வெளியே பூத்திருக்கும் மரங்களில் காற்றுத் தழுவிச் செல்வது இலை அசைவில் தெரிகிறது. அந்தக் காற்றின் சீதளக் குளுமை முகத்தில் அழுத்தி விலகிச் செல்ல வேண்டுமே? காணவில்லை. 

ஓ…. இது “எயர்கொன்” பஸ். காற்று உள்ளே வராது. 

என்ன பிரச்சினை? ஏன் நான் எதிர்பார்க்கிற அந்த மகிழ்வைக் காணவில்லை? வேறு யார் இந்த பஸ்ஸில் இருக்கிறார்கள்? ஒருமுறை முழுமையாகத் திரும்பித் தேடுகிறேன். கடைசி வரிசையின் மூலையில் ஒரு பெண். அவளது கையில் மொபைல். காதில் பொருத்திய வயர். அந்த மொபைலுக்கு அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொள்கிறாள். காதலனோடு பேசுகிறாளா? அவள் ஏதும் பேசுவதாகவும் தெரிய வில்லையே. யாரைக்கேட்பது? அவள்தான் இந்த உலகத்திலேயே இல்லையே. இருந்தாலும் தான் கேட்க முடியுமா? 

அதைத்தவிர…? 

ஓ… அதைத்தவிர வேறு யாரும் இல்லை. என்னைச் சுற்றிலும் வெறுமையான சீற்றுக்கள். மனிதர்கள் எல்லாம் தனித்தனி அவர்களது கார்களில், வெளியில்! 

இந்த பஸ்ஸில் பதினைந்து பயணிகள் மட்டுமே நின்று பயணம் செய்யலாம் என்ற அறிவுறுத்தல் என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. 

“அண்ணை பின்னுக்குப் போங்கோ… அக்கா உங்கை என்ன செய்யிறியள்?” என்ற தமிழ் வார்த்தைகளை மனம் கற்பனையில் கேட்டு மகிழ முயற்சிக்கிறது. 

பறவைகள் அடிவானுக்கும் ஆழிக்கும் இடையில் அந்தரப்படும் காட்சி யன்னல் கண்ணாடியூடாகக் கண்ணில் படுகிறது. 

– ஜீவநதி – அவுஸ்திரேலியா சிறப்பிதழ் வைகாசி 2012

– வரிக்குயில்(சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: நவம்பர் 2016, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *