நட்சத்திர பங்களா

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2023
பார்வையிட்டோர்: 8,227 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7

சுவர்களில் மின்னிக் கிடந்த அலங்காரங்களைக் கவனமாய் கழற்றி வைத்தாள். வீட்டைப் பெருக்கிக் கழுவினாள்.

குழந்தைகள் ஆடிய வீடு முழுக்க மண்ணும், குப்பையுமாய்…

வீடு ‘பளிச்’சென ஆன பின், தானும் குளித்துவிட்டு தைக்க உட்கார்ந்தாள்.

இனி முழுமூச்சாய் இதே வேலைதான்.

போனவாரம் செலவு அதிகம்.

இனி அதை ஈடுகட்ட வரவு வேண்டும். முதுகு வேலையில் ஒடிந்தால்தான் வரவு.

“பரணி…”

“ராணியா? வாயேன். சமையல் ஆச்சா?”

“இனிமேதான். ரெண்டு பச்ச மிளகா தர்றியா?”

“சமையல் மேடையில் இருக்கு, எடுத்துக்கறியா? கழுத்துப் பக்கம் ரவிக்கை வெட்டுறேன். இப்ப எழுந்தா கை பிசகி விலகிடும்…”

கத்திரியை வளைவாய் ஓட்டியபடி சொன்னாள்.

“சரி… நேத்து நீ செஞ்ச கேக், பலகாரமெல்லாம் ஜோரு…”

“அனுவுக்காக, அவ சந்தோஷத்துக்காக, வீட்டோடு ஒரு பாயசம் வச்சாப் போதும்னுதான் இருந்ததேன். ஐயா போன வருஷம்ல? ஆனா, பெரியம்மா கண்டிப்பாய் ஏதேனும் நல்லபடி செய்யுன்னு சொல்லிட்டுப் போயிருந்தாங்க ஞாயிற்றுக்கிழமையுமாப் போச்சா… அதான்.”

“பாசு ஐயா வந்த பிறவு அனுவுக்கு தனி குஷி… என்னா சிரிப்பு சிரிக்குது”

“ம்ம்…”

“அதுக்கு மட்டுமா?” -ராணி இழுத்தாள்.

“ஆ… என்ன?” இவள் இதயம் பதற்றமாய் சிறகடித்தது!

“அர்ச்சனா பொண்ணுக்கும் குஷிதாங்கறேன்! தினத்துக்கும் நாலு தடவ போனு போடுது. இப்ப காலையிலேயே வந்து உட்காந்திடுச்சு.”

“கா…கார் சத்தம் கேக்கலியே?”

“கமுக்கமா முன் வாசல்லியே நிறுத்திப்புடுச்சே… ‘பாசு.. பாசு’ன்னு வருஷக்கணக்கா பழகினாப்பல ஒட்டுது.”

“ம்ம்…”

பரணிக்குக் கேட்கப் பிடிக்கவில்லை. கேட்காதிருக்கவும் மனமில்லை.

“முறைகேடெல்லாம் பார்த்தபடி சமைச்சுக் கொட்டணும்னு எந்தலையெழுத்து,”

“ஜாதி, மதம் வேறெங்கறதையா முறைகேடுங்கற?”

“அதில்ல பரணி. இது கல்யாணமான பொண்ணு. இங்க வந்து தனியே இருக்கற ஆம்பளைகிட்ட பொழுதன்னிக்கும் கிடக்கலாமா?”

அயர்ந்ததில் ஊசி, விரல் நுனியுள் ஏறியது.

“ஸ்ஸ்… ஆ…!”

“பாத்தியா, நச்சுங்குதுல்ல? இந்த அர்ச்சனா வாக்கப்பட்டுப் போனது சிவகாசியில் பெருங்குடும்பம். ஆனா, இந்தப் பொண்ணு அலட்டலுக்கும்… அந்தக் குடும்பத்து கட்டுத் திட்டத்துக்கும் ஒத்துப் போகல. ஊரு, உறவு எதுவுமே சேரல. இவ முரண்டுப் பண்ணிப் பாக்க, புருஷங்காரன் ‘போடீ’ன்னுட்டான். ஆக, இங்க அப்பன் வீட்டில் வந்து இருந்துகிட்டு ‘நோட்டீஸ்’ வுட்டிருச்சு. சீக்கிரத்தில் ‘டைவர்ஸ்’ ஆயிடுமாம். அது வரைக்குமாவது கம்முனு கிடக்கக்கூடாதா?”

“எனக்கு… எனக்கிது நாள் வரை எதுவுமே தெரியாதே ராணி?”

“துணி தைக்க வரும்- ‘புஸ்’ன்னு போவும். நமக்கென்னன்னு இருந்தேன். அங்க, இங்க சுத்துன நாகம் தலைமாட்டுக்கு வந்த பிறவுதானே கம்பெடுக்கறோம்? நம்ம பெரியம்மா இருந்த வூட்டுல இப்படியொரு ராங்கிக்காரி வந்து ராச்சியம் பண்ணுனா? நட்சத்திர பங்களா அருளே போச்சு போ…” சலித்தாள் ராணி.

“அர்ச்சனா ஏன் இங்க வரணும்?”

“பின்ன? பங்களா இப்ப பாசு ஐயாவோடது. இது பாசுவக் கட்டிக்கிட்டா வேறெங்க போவும்?”

“புரியலை… எனக்கு எதுவும் புரியலையே?”

ஊசி குத்தின விரல் தெறித்தது – இதயத்திலும் விநோத வேதனைகள்.

“பாசுய்யா உங்கிட்ட ஏதும் சொல்லலையாக்கும்?”

“இல்லையே…”

“அப்பப்ப சாப்பாட்டுக்கு இங்க வந்திடுது- சகஜமாப் பேசிப் பழகுதே?”

“ஆனா… பங்களா இப்ப அவருதுன்னு மூச்சுவிடலியே?”

“அம்மாவோட பொண்ணுங்க ரெண்டு வெளிநாட்டுல. ஆண் வாரிசு இல்ல. பாசு பெரியய்யாவோட தம்பி மவன், இவர்கிட்ட சொத்து இருந்தாத் தேவலை. இவரும் வேணாம்னுட்டா வித்துப்புடலாம்னு யோசனை,”

‘இத்தனை யோசனைகள் நடந்திருக்க, பெரியம்மா எதையும் தன் காதில் போட்டு வைக்கவில்லையே?’ பரணியின் மனசு சங்கடப்பட்டதா அல்லது தங்களது குழப்பங்களை ஏன் அநாவசியமாக இவள் தலையில் ஏற்ற வேண்டும் என்ற நினைப்பா?

“ஐயா இருந்தப்பவே இது பத்தி பேச்சு வார்த்த நடந்துச்சாம். எழுவது வயசுக்காரங்க எட்டு, பத்து அறைகளோட, சுத்துமுத்து இத்தினி இடத்தோட வீட்டைப் பராமரிக்கறது லேசா என்ன….?”

சிரமம்தான், அவர்களது இந்த சிந்தனா போக்குக் தெரிந்தால் பரணிக்கு தன் நிலைமை குறித்த அச்சம் எழும் என்றே பெரியவர்கள் இப்பேச்சைத் தவிர்த்திருக்கலாம்.

“பாசுய்யா இங்கே ஏதோ யாவாரம் ஆரம்பிக்ணுங்கற நோக்கத்தோட வந்திருக்குப்போல. இந்த வீட்ட எடுத்துக்கோன்னுட்டாங்க. பாசுவும், ‘பெருந்தொகையாத் தந்துடறேன். அக்காமாரு பிரிச்சு எடுத்துக்கட்டும்’ ங்கற மாதிரி சொல்ல… ஓரளவு எல்லாந் திரண்டு வந்த சமயந்தான் பெரியப்பா போயாச்சு…”

“இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் ராணி?”

“பங்களாவிலதான் இருக்கேன். வீட்டை விலைக்குக் கேட்டு சதா யாராவது வந்தபடிதான் – நாந்தானே டீயும், பிஸ்கெட்டும் கொண்டு போவணும்? பக்கத்து ‘பாக்டரி’ முதலாளிகூட இது விசயமா வந்தாரு. ரியல் எஸ்டேட்டு ஏஜெண்டுகளும் வரப்போகன்னு இருந்துச்சே! இங்க பேப்பரு போட வருமே மாரிமுத்து…”

“ம்ம்…”

“அவனும் ‘இதாமே… அப்படியாமே’ன்னு விவரஞ் சொல்லுவான். பிறவு அவங் குடிகாறன்ரது தெரியவும் பேச்ச முறுச்சிட்டேன். அப்படிப்பட்ட ஆளை நம்பக்கூடாது. நாம சொல்லாததையும் திரிச்சுப் பரப்புவான். பிறவு, பாசுய்யா இந்த இடம் வேணுங்கவும். ஐயா ‘இனி மூச்! வெளியே விக்கிற பேச்சே இல்லை’ன்னுட்டாங்க….”

ஆக, தான்தான் ஏதும் அறியாத மரமண்டை.

“என்ன பரணி, ஒரு மாதிரியாப் போச்சு முகம்?”

“எதுவும் எனக்குத் தெரியலியேன்னு பார்த்தேன். அப்ப இனி நட்சத்திர பங்களாவின் முதலாளி பாஸ்கரன்… வாடகைப் பணத்தை அவர்கிட்டத்தான் தரணும். இல்லியா?”

“உன் நொச்ச தாங்காத பெரியய்யா மனசில்லாம உங்கிட்ட ஒரு தொகை வாங்கிட்டிருந்தாங்க…”

“அதையே இப்ப இவர்கிட்ட நான் தந்துடறதுதான் முறை?”

“அந்த முதலாளி தோரணையெல்லாம் பாசுய்யாகிட்ட கிடையாது. பெரிய ஐயா குணமேதான். என்ன கொஞ்சம் குறும்பு ! ஆனா, இந்த அர்ச்சனா தேடிவந்து வழியறதுதான் எனக்குப் பிடிக்கலை. வயசுப் பசங்க ஜாக்கிரதையா இருக்கவேண்டிய விவகாரம்ல?”

“அவரொண்ணும் விவரம் தெரியாத பையன் இல்லையே?”

“ஆனாலும், வூட்டுல பெரியவங்க இருந்தாத் தேவலை. அப்படி இப்படித் திரும்புனா நேராத் தட்டி நிமுத்திவுடுவாங்க.”

“இவருக்கு வயசு முப்பதைத் தாண்டியாச்சு ராணி. சென்னையில ‘ரியல் எஸ்டேட்’ வியாபாரத்துல நல்ல லாபம் பார்த்தவர். பட்டணத்தில் இவர் பாக்காத, பழகாத பொண்ணுகளா?”

“ஆங்… அப்படியும் சொல்லிடாத பரணி. அங்க நட்சத்திரக் கூட்டமா நிறைய குட்டிங்க- பட்டும் படாத போயிரும். இங்க ஒத்தையா நின்று இதை சிமிட்டுனா சிக்கினாலும் சிக்கிக்குவாருல்ல?”

“அதெல்லாம்… நம்மை மீறின விஷயம்.”

“நா பெரியம்மாக்கு ஒரு கடுதாசி எழுதி வுடலாம்னு இருக்கேன். விலாவாரியா இல்லாட்டியும் சும்மா ஒரு ரப்பா…”

“அம்மா அங்கு நிம்மதியா இருக்கட்டுமே ராணி…”

“பத்து ரூவாக்கு ஏதோ வெளிநாட்டுத் தபால் ‘கவரு’ இருக்காமே? அடுத்தாப்பல மதுர போவும்போது எனக்கொண்ணு வாங்கிட்டு வந்துரு…” கறாராய் உத்திரவிட்டாள் ராணி.

“அம்மாவுக்கு நான் பொதுவாய் ஒரு ‘லெட்டர்’ போட்டாச்சு. இன்னுமொரு ‘கவர்’ இருக்கு. தரேன்.”

அன்று தைக்க வேண்டியதில் பாதி வேலைதான் முடிந்தது. மனம் வேலையில் ஒன்றவில்லை.

ஆக ‘நட்சத்திர பங்களா’ இப்போது பாஸ்கரனது சொத்து.

விரைவில் அர்ச்சனா, அவனது மனைவியாய் இங்கு குடியேறக்கூடும்!

பிறகும் தான் இங்கேயே தங்குவது சாத்தியமில்லை. ஒரு வாரப் பழக்கம் திருமணம் வரை போகுமா என்ன? அது ராணியின் யூகம்.

ஆனால், இனி தான் இங்கு இருக்க – பழைய சந்தோஷம், நிம்மதி இருக்காது. அது நிச்சயம்!

எனவே, மதுரைக்கு சமீபமாய் வேறு ஒரு வீடு பார்க்க வேண்டியதுதான்.

அனுவிற்கு வேறு புதுப் பள்ளி தேடணும்.

தெரியாத அண்டை, அயலுடன் பழக நேரும்.

நினைப்பே அயர்ச்சி தந்தது.

நேரம் போகப் போக ராணி சொன்ன செய்தி அவளை மேலும் குழப்பியது.

பாஸ்கரனும், அர்ச்சனாவிடம் குழைவது போலத்தானே பழகுகிறான்?

இருக்கும்.

இத்தனை அழகும், பணமும், சாமார்த்தியமும் உள்ள ஆணுக்கு பெண்களிடம் பலவீனம் இல்லாமல் போகுமா? அதுவும் அழகி ஒருத்தி வலிய வந்து விழும்போது…?”

பாஸ்கரனைப் பற்றிய தன் சிறுவயது ஞாபகங்கள் ஒன்றும் அத்தனை இனிமை இல்லையே…

சதா இவளை வெறித்துப் பார்ப்பதும், சீண்டுவதும், அழுந்தக் கிள்ளி கை பற்றுபவனுமாய்த்தானே நினைவுகள்?

ஒரு கிறிஸ்துமஸ் நாளின்போது அலங்காரத் தோரணங்களை எடுக்க அவனோடு நிலவறைக்குள் சென்ற நினைவு புகைபோல… அப்போது தனக்குப் பதிமூன்று வயதிருக்கும்… ஏதேதோ பேசினான்… அவள் புரிந்தும் புரியாமல் மூச்சிரைக்க படியேறி ஓடிப் போனாளே…?

அறியாத வயதிலேயே ஊடுருவும் அவன் விழிகளுக்கு அஞ்சிப் பதுங்கியிருக்கிறாள்.

ஒரு பெண் நம்பிப் பழகக்கூடிய நல்லவனில்லை இவன். வந்தவுடன் அத்தனை ஒட்டிக்கொண்டதில் இருந்தே தெரியவில்லையா?

பசித்தவனுக்கு பழங்கஞ்சியே போதும். ஆக, முதலில் தன்னிடம் சற்று குழையடித்திருக்கிறான்.

இப்போது நெய் சோறாக அர்ச்சனா! ஆக, இனி அவன உபத்திரவம் இராது – நிம்மதி.

இப்படி நினைத்த பிறகும் மனதில் நிம்மதியில்லை.

புரண்டு தவித்தது. தனக்கே தனக்கான பொருள் ஒன்று கைநழுவிப் போவது போன்ற ஊமை சோகம்… ஏன்?

புரியவில்லை.


சாயங்காலம் வீட்டின் முன்னே அனு பந்து விளையாடின நேரம். ஓரமாய் அடர்ந்திருந்த கனகாம்பரப் புதரிலிருந்து பூக்களைப் பறித்துத் தொடுத்தாள் பரணி.

தலைவாரி தனக்கும், அனுவிற்குமாய் பூச் சூட்டிக் கொண்டாள்.

“ஐய்…ஆரஞ்சு ஸாரி… ஆரஞ்சு பூ… அழகாயிருக்கு சித்தி”.

“தாங்க்ஸ் குட்டி – வர்றியா, பாஸ்கர் அங்கிள் வீடு வரை போயிட்டு வரலாம்?”

“ஓ… கையில அதென்னது?”

“ம்ம்… கவர். இதிலே போன மாச வாடகை வச்சிருக்கேன்,”

அனு முன்னே ஓடியது.

“உஷ்… ஓடாதே குட்டி. அங்கே வீட்ல அர்ச்சனா ஆன்ட்டி இருந்தாங்கன்னா நாம திரும்பிடணும். இல்லைன்னா பணத்தைக் கொடுத்துட்டுத் திரும்பிடலாம்.”

வீட்டின் முன்னே ‘கார்’ இல்லை.

படியேறினாள்.

இதுதான் அனுவைப் போன்ற பிஞ்சுப் பருவத்திலிருந்தே ஆடிப் பழகிய வீடு. சன்னல் கிரில்களில் நட்சத்திர வடிவம். தன் பிஞ்சு விரல்களால் அதைப் பற்றித் தொங்கியதுண்டு. மாடி முகப்பிலும்கூட பெரிய சிமெண்டு நட்சத்திரம்.

வீடு முழுக்க பவள மெழுகுத் தரை – பாதங்களுக்கு அடியில் ‘குளுகுளு ‘வென வழுக்கும்.

கடும் கோடையில்கூட உள்ளே அனல் அடிக்காத வகையில் நல்ல உயரத்தில் தேக்கு மர உத்திரங்கள்.

இனி இங்கு அவள் உரிமையாய் வளைய வர முடியாது.

கிறிஸ்துமஸ் காலம் இப்பெரிய வீட்டினைப் பார்த்து பார்த்து அலங்கரிக்க முடியாது.

மூங்கில் நட்சத்திரம் செய்து, நீலக் கண்ணாடித் தாள் ஒட்டி உச்சி மாடியில் தொங்க விட்டுவிட்டு-எத்தனைத் தொலைவிற்கு அந்நீல நட்சத்திரம் ஒளிர்கிறது என்பதற்காய் இரவு நெடுஞ்சாலையில் நடந்த அனுபவம் எல்லாம் இனி இனிய கனவுகள்தான்….

கதவைத் தட்டினாள்.

பைஜாமா, குர்தாவுடன் கதவைத் திறந்தது அவன்தான்.

“அட்டே… எங்கேடா நாள் முழுக்க இவனைக் காணுமேன்னு என்னைத் தேடி வந்திட்டீங்களா பெண்களே?”

அவனது ஆரவாரமான வரவேற்பு ஏனோ வெறுப்பாக இருந்தது.

“இல்லை… ஒரு விஷயமாய்..”

“உள்ளே வாங்க” தலைசாய்த்து வரவேற்றான்.

உள்ளே போய் அமர்ந்தாள். அதிக நேரம் இங்கிருப்பது உசிதமில்லை.

பண உறையை நீட்டினாள்.

“என்னதிது… காதல் கடிதமா பரணி?”

இயல்பாய் அவன் கேட்க, இவள் ‘குப்’பென முகம் சிவந்தாள்.

இதென்ன குழந்தையின் முன் தகாத பேச்சு?

உடம்பே நடுங்குவதான அவதியில் நெளிந்தாள்.

“சேச்சே… இது போன மாசத்துக்கான வாடகை…”

“அதை ஏன் எங்கிட்ட தரணும் பரணி?”

“வீட்டை நீங்க வாங்கியாச்சாமே… அதான்.”

“யார் சொன்னா?”

“நீங்க சொல்லியிருந்தால் முறையாய் இருந்திருக்கும். ஆனா விஷயத்தை எத்தனை நாள் மூடி வைக்க முடியும்?”. சுரத்தற்ற குரலில் பேசினாள்.

“அப்போ உனக்கு விவரமெல்லாம் தெரிஞ்சு போச்சு. அப்ப நேரே விஷயத்துக்கு வருவோமே பரணி. எப்போ அந்த அதாவது நீ இருக்கும் வீட்டைக் காலி பண்ணப் போறே?”

ரணத்தில் உப்பு தூவினான்.

“சீக்கிரமே! வேற… வேற வீடு பார்த்தவுடனே…”

தடுமாறினாள். காலுக்கடியில் கிடக்கும் பாயை உருவினால் அலுங்காமல் நிற்க முடியுமா? ஆனால், அடுத்து அவன் சொன்னது அவளை உச்சந்தலையில் அடித்து வீழ்த்தியது.

“வேற வீடா? ஏன் இந்த நட்சத்திர பங்களா உனக்கு பிடிக்காதா பரணி? இது உனக்குப் பிடிச்ச வீடு. நீ நினைவு தெரிஞ்ச நாளாய் புழங்கின வீடில்லையா?”

புரியாமல் ஏறிட்டாள்.

“இங்கேயே குடியேற வேண்டியதுதானே? இங்க நீயும் நானும் கணவன் – மனைவியாய் வாழறதைவிட பெரியம்மாவிற்கு வேறே சந்தோஷம்?”

என்ன சொல்கிறான் இவன்?

மேலே ஓடிய உத்திரக்கட்டையில் ஒன்றிரண்டு தலையில் இறங்கியது போலிருந்தது.

கண்ணை இருட்டியது.

– தொடரும்…

– ராணிமுத்து மார்ச் 1, 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *