என்னாச்சு இவளுக்கு?!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 6, 2020
பார்வையிட்டோர்: 6,158 
 

முந்தானையால் மூடிய குழந்தையை இன்னும் நெருக்கி மார்போடணைத்து ஜன்னலோரம் இன்னும் நெருக்கி அமர்ந்து, வெளியே வெறித்தாள் தனலட்சுமி.

பேருந்து ஏறி இவளுக்குப் பக்கத்தில் அமர்ந்த அம்புஜம் இவளை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

தனலட்சுமியின் அழுதழுது வீங்கிய முகமும், பரட்டைத் தலையும், அழுக்கில் கசங்கிய புடவையுமாக இருந்தவளை பார்க்க மனசுக்குக் கலக்கமாக இருந்தது.

வாசல்படியிலேயே… பயணிகளை நடத்துனர் மடக்கி எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்துவிட்டதால் நேரம் பிசகாமல் எந்தவித அலட்டலுமில்லாமல் அந்த காரைக்கால் டூ காரைக்கால் பேருந்து பேருந்து நிலையத்தை விட்டுப் புறப்பட்டு ஊ…..ர்ந்து ஓட்டமெடுத்தது.

இது காரைக்கால் வட்டாரத்தில் குக்கிராமத்துப் பேருந்து.

‘ என்ன இது. . திரும்பாமலிருக்கிறாள். .?! பக்கத்தில் வந்து அமர்ந்தது கூட உணராமலிருக்கிறாள். ! ? இல்லை. ..யாரோ, எவரோ என்றிருக்கிறாளா . .? ‘ என்று நினைத்த அம்புஜம். ….

” எனக்கா. .! என்னைத் தெரியுதா. .? ” தானே அவளை வலியக் கேட்டாள்.

எந்தவித திடுக்கிடல் , திகைப்புமில்லாமல் அம்புஜத்தை அசிரத்தையாகத் திரும்பி பார்த்த தனலட்சுமி முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல். …

” தெரியல. ..” என்று ரொம்ப சாதாரணமாக ஒற்றையாகச் சொல்லி வெளியே வெறித்தாள்.

உண்மையிலேயே.. இந்த பதிலால் அம்புஜம்தான் திடுக்கிட்டாள்.

” என்னைத் தெரியலையா. .? நான் உங்க வீட்டுக்கும் மூணாவது தெருவுல இருக்கிற மாரியாத்தாளோட அக்கா அம்புஜம் ! ” அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

அப்படியும் …… தனலட்சுமியின் முகத்தில் மாற்றமில்லை. ஆள் திரும்பவுமில்லை. நினைவு எங்கேயோ இருப்பது போல் வெளியே பார்த்தபடியே வந்தாள்.

” திருவேங்கடபுரம் பேருந்து நிறுத்தத்துலதானே உங்க வீடு, ரெண்டு மூணு தடவை வந்திருக்கேன். பேருந்துக்கு உங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் ஏறுவேன், இறங்குவேன். நெசமாவாத் தெரியல. .?! ” இவள் திருப்பிக் கேட்டாள்.

” தெ. . தெரியல. ..”

அம்புஜத்திற்கு ஆள் நிலைமை புரிந்து விட்டது.

” எதுக்குக்கா கவலையா இருக்கீங்க. .? ” அடுத்த கேள்வி கேட்டாள்.

தனலட்சுமி பதில் சொல்லவில்லை.

” மடியில புள்ளையைத் தூக்கிக்கிட்டு, அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய், கட்டிய புடவையுடன் கிளம்பி இருக்கீங்களே. .! வீட்டுக்காரரோட சண்டையா. .? ” அக்கறையாய்க் கேட்டாள்.

” இல்லே. .”

” பின்ன எதுக்கு உம்முன்னு வர்றீங்க. .? ”

”………………………”

” குழந்தைக்கு உடம்பு சரி இல்லையா. .? ”

” ஆமாம் ! ”

”என்ன செய்யுது. .? ”

” சுரம் ”

” ரொம்பவா. ..? ”

” ம். ம்ம். ..”

” அதான் கவலையா. .? ”

” ம்ம். ..”

பேருந்து ஏதோ ஒரு கிராமத்தில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிக் கொண்டு நகர்ந்தது.

” டாக்டர்கிட்ட காட்டுனீங்களா. .? ” அம்புஜம் தொடர்ந்தாள்.

” ம்ம். .”

” என்ன சொன்னார். .? ”

” சரியாய்ப் போயிடும்ன்னு சொன்னார். ”

” ஆண் குழந்தையா, பெண் குழந்தையா. .? ”

” ஆண். ! ”

அம்புஜத்திற்குக் குழந்தையைப் பார்க்க ஆசை.

அது இருக்கும் இடத்தைப் பார்த்தபடி….

” பால் குடிக்கிறானா. ? ” கேட்டாள்.

” ம்ம். .”

” ஒரு பக்க மார்லேயே ரொம்ப நேரமாய்க் குடிக்கிறான் போலிருக்கு . .!? ”

” …………………..”

” மாத்திக்க குடுங்க. .”

” …………………….”

” தூங்கிட்டானா. ..? ”

” ம்ம். ..”

” என்னக்கா, என்னாச்சு. .? சரியா பேசமாட்டேங்கிறீங்க. ..? ”

” என் மனசு சரி இல்லே. தயவு செய்து பேசாம வர்றீங்களா. .? ” தனலட்சுமி கெஞ்சும் குரலில் கரகரத்தாள்.

அதற்கு மேல் எப்படி பேசமுடியும். .? அம்புஜம் வாயடைத்தாள். ஆனாலும் மனசுக்குள். ..

‘ தெரிந்த தன்னைத் தெரியாது என்கிறாள். சரியாய்ப் பேசவில்லை. பேச்சும் வரவில்லை. கணவனிடம் சண்டைப்போட்டுக் கொண்டு இவ்வளவு தூரம் தலைவிதி என்று அம்மா வீட்டிற்கு வந்து சரியான வரவேற்பில்லாமல் திரும்பி விட்டாளா, திருப்பி விட்டார்களா .? ‘ என்று மனசுக்குள் பலவாறாக நினைக்கும் போது நடத்துனர் விசிலடித்தார்.

” திருவேங்கிடபுரம் இறங்குங்க. .” குரல் கொடுத்தார்.

பேருந்து அந்த கிராமத்து பேருந்து நிறுத்தத்தில் நின்றது.

ஐந்து வயது குமார், ஜன்னலோரம் எழுந்த தனலட்சுமியைக் கண்டதும். ..

” ஆ. .. அம்மா வந்தாச்சு ! ” குதித்துக் குரல் கொடுத்தான்.

அவனுக்கு அருகில் நின்ற அவன் தங்கையும். ..

” அம்மா வந்தாச்சு ! ” என்று உற்சாகக் குரல் கொடுத்து குதூகலித்தாள்.

குழந்தைகள் குரல்கள் கேட்டு குடிசைக்குள் இருந்த சேகர். ..

” எங்கேடா. .? ” கேட்டு வியப்பும் திகைப்புமாய் வெளியே வந்தான்.

அதற்குள் பேருந்து….. தனலட்சுமி, அம்புஜத்தை இறக்கி விட்டுவிட்டு நகர்ந்தது.

வயிற்றோடு குழந்தையை அணைத்துக் கொண்டு வீடு நோக்கி வரும் மனைவியைக் கண்ட அவன். ..

” என்ன தனம் ! நான் பெட்ல இருக்கிற உன்னைப் பார்க்க மருத்துவமனைக்குக் கிளம்பிக்கிட்டிருக்கேன். நீ வந்துட்டே. .? டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்களா. .? ” கேட்டு அருகில் வந்தான்.

சட்டென கலங்கிய தனலட்சுமி. .

” இல்லீங்க. அனுப்பிட்டாங்க. .” என்று விசும்பி அவன் கையில் குழந்தையைக் கொடுத்த விட்டு. ..

” என் ராசா போயிட்டாங்க. ..” அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அணை உடைந்து பீறிட ஓங்கி குரல் கொண்டு அழுது தரையில் புரள. ..

அம்புஜம் துணுக்குற்று ஆணி அடித்து நின்றாள்.

‘ அடப்பாவி ! இறந்த பிள்ளையை மடியில் வைத்துக் கொண்டா அழுகை அடக்கி அப்படி வந்தாள். .? ! ‘ நினைக்கவே அவளுக்கும் மனம் அதிர சிலையானாள். . !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *