எலுமிச்சை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 31,589 
 

[கதைகளுக்கு முன்னுரை எழுதுவது எனக்குப் பிடிக்காது. அதென்ன கட்டியம் கூறுவதுபோல என்று கிண்டல் செய்வேன். கதையென்றால் சொல்ல வந்த விஷயத்தை கதையிலேயே சொல்லிவிட வேண்டியதுதானே! இது என்ன முன்னுரை? அறிவுரை?

ஆனால் இந்த முன்னுரை எழுதுவதில் ஒரு காரியமிருக்கிறது கு.அழகிரிசாமி எழுதிய ‘குமாரபுரம் ஸ்டேஷன்’ என்ற கதையை நீங்கள் படித்திருப்பீர்கள். அதில் ஒரு பாத்திரம் மூலமாக ‘நாங்கள் ஒன்றை மனதில் நினைத்து செய்யும் செயல் எப்படி எங்களை அறியாமல் இன்னொரு காரியத்துக்கு உதவுகிறது’ என்று சொல்லியிருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது நடந்த இந்த உண்மைச் சம்பவமும் அப்படித்தான். இனி, சற்று தள்ளி நில்லுங்கள். கதை வருகிறது]

செடியாக இருந்த அந்த எலுமிச்சை இப்பொழுது மரமாக வளர்ந்துவிட்டது. அம்மா அதைக் கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தாள். சதிருக்கு வந்த தேவடியாள் கையைக் காலை விசுக்கி ஆடுவதுபோல அந்த மரம் கிளையெல்லாம் வீசி வளர்ந்துவிட்டது. ஆனால் பேச்சுக்கு ஒரு பூ இல்லை; ஒரு காய் கிடையாது. ஓவென்ற மலட்டு மரம்.

அம்மாவும் செய்யாத வித்தையில்லை; பார்க்காத வைத்தியமில்லை. மண்ணை வெட்டி, கொத்தி பசளையெல்லாம் போட்டு அலுத்துவிட்டது. அது அசையவில்லை. வடக்கு வீதிக்கு வந்த மஞ்சவனப்பதி தேர்போல தன்பாட்டுக்கு நின்றது.

இப்படித்தான் முன்பு ஒரு கறிவேப்பிலைச் செடி. அம்மாக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள். ஒரு சாண் உயரத்துக்கு வளர்ந்த பிறகு ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் செத்துவிட்டது. அம்மாவும் ‘விடேன், தொடேன்’ என்று ஒன்பது தரம் ஒன்றன்பின் ஒன்றாய் செடிகளை நட்டு தன்கையால் தண்ணி ஊற்றி வளர்த்துப் பார்த்தாள், சரிவரவில்லை. கடைசியில் செல்லாச்சிக் கிழவி சொன்ன மந்திரம்தான் பலித்தது.

சூதகமாய் இருக்கிற நேரம் பார்த்து, பலபலவென்று விடியும் முன் ஒட்டுப்போடாத ஒற்றைத்துணி உடுத்தி, கிழக்குப் பார்த்து செடியை நட்டால் அது பிய்த்துக்கொண்டு வளர்ந்துவிடும் என்பதுதான் அது.

அம்மாவும் அப்படியே செய்து பார்த்தாள். என்ன ஆச்சரியம்! பார்த்துக் கொண்டிருக்கம்போதே மரம் வளர்ந்துவிட்டது. வளர்த்தியென்றால் அப்படி ஒரு வளர்த்தி. ஊர்ச்சனம் எல்லாம் கறிவேப்பிலை கேட்டு வரத் தொடங்கி விட்டார்கள். கையாலே பறித்துக் கொடுத்தது போய் கொத்தடி வைத்து ஒடித்துக் கொடுக்க வேண்டி வந்துவிட்டது. அவ்வளவு உயரம்.

காலை, பகல் இரவு என்றுகூட ஆட்கள் கறிவேப்பிலை கேட்டு வரத்தொடங்கினார்கள். அம்மாவும் சலிக்காமல் கொடுத்துவந்தாள். ‘இது புண்ணியம் ஆச்சே!’ என்று அடிக்கடி சொல்லிக் கொள்வாள்.

அந்த நேரம் பார்த்துத்தான் நாங்கள் நாய் வளர்க்கத் தொடங்கினோம். ‘வீட்டுக்காரர், நாயைப் பிடியுங்கோ’ என்று படலையில் இருந்து கூக்குரல் கேட்கத் தொடங்கியது.

நாயென்றால் ஏதோ சந்திரகுலம், சூரியகுலத் தோன்றலில்லை. சாதாரண ஊர் நாய்தான். நான் பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது வழியிலே பொறுக்கியது. என்னுடையது கையையும் முகத்தையும் நக்கி என்னை அது ஆட்கொண்டுவிட்டது.

வீட்டிலே அம்மா முதலில் அடிபிடியென்று சத்தம் போட்டாள். பிறகு அது பால் குடித்த வேகத்தைப் பார்த்து அவள் மனது மாறிவிட்டது. பலூன் மாதிரி ஊதிப்போன வயிற்றைத் தூக்கிக்கொண்டு அது தள்ளாடித் தள்ளாடி நடந்தபோது அம்மாகூடச் சிரித்துவிட்டாள். இப்படித்தான் இந்த நாய்க்குட்டி எங்கள் வீட்டுச் சங்கதியானது.

குட்டியாயிருக்கும்போது அது செய்த வீர சாகஸங்களை வைத்து வீரன் என்று பெயர் வைத்தோம். அதுவும் கறிவேப்பிலை மரம்போல கிடுகிடென்று வளரத்தொடங்கியது. சாப்பாடு என்றால் வீரனுக்கு இதுதான் என்ற வரைமுறை கிடையாது. முருங்கக்காய்ச் சக்கையிலிருந்து சோறு, பருப்பு, பனங்காய் நார் என்று சாதி வித்தியாசம் பாராமல் சாப்பிட்டு பரிபூரண சந்தோசமாக இருந்தது.

என்னுடைய வாய் அசைந்தால் என் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கும். அதற்கும் கொடுத்தபடியே சாப்பிட வேண்டும். கடைசியில் வெறும் கையைக்காட்டி, தொடையில் தட்டினால்தான் தன் வழியில் போகும். பள்ளிக்கூடத்து பாணில் இதற்கு ஓர் அளவுகடந்த பாசம். பள்ளி மணி அடித்ததும் காதல் வயப்பட்ட கன்னிப்பெண் போல உள்ளுக்கும், வாசலுக்குமாய் பறந்து திரியும். நான் வந்தேனோ இல்லையோ என் மீது பாய்ந்து பாணையும் சம்பலையும் பறித்துக்கொண்டு போய்விடும்.

வீரனின் முதுகில் நான் சவாரி செய்யும் அளவுக்கு குதிரைபோல வளர்ந்துவீட்டது. நான் அதோடு இருக்கும்போது பெரியவர்கள் கூட பயபத்தியோடு தூரதேசமாய் செல்வார்கள். எனக்கு கர்வம் தலைக்கு மேலேறிவிடும்.

அதற்கு வயசுக்கு வந்தபோது பக்கத்து வீட்டு கண்ணகியைச் சேர்த்துக்கொண்டது. ஒரு நாள் இரவு களவியல் நடத்த கண்ணகி வந்துவிட்டது. கண்ணகி என்றால் கற்பின் திருவுருவம் என்று அவசரப்பட்டு நினைத்துவிடக் கூடாது. எங்கள் ஊரில் அரைவாசி ஆண்நாய்கள் அதற்கு பின்னால்தான். அதனுடைய கருநீலச் சடையையும், மதுரையை எரித்த கண்களையும் வைத்து அப்படிப்பேர் வைத்திருப்பார்கள் போலும். கண்ணகியின் பின்னாலேயே வீரன் ஒடத்தொடங்கியது. குரைத்துக் குரைத்து துரத்தும் ஒலி. பிறகு. பிறகு ‘பொதக்’ என்று ஒரு சத்தம். அதற்குப்பின் மௌனம் மௌனம் என்றால் ஊயிரம் பேருடைய மௌனம்.

அப்பா அம்மா கூவினாள், ‘இஞ்சருங்கோ, நாய் கிணத்துக்கை விழுந்திட்டுது போல கிடக்கு’. நாங்கள் அரிக்கன் விளக்கை எடுத்துக்கொண்டு அடித்துபிடித்து கிணற்றடிக்கு ஓடினோம். உண்மைதான். கிணற்றுக்குள்ளே இருந்து ‘சதக் புதக்’ என்ற சத்தம் வந்து கொண்டிருந்தது. அவசரமாக ஒரு கயிற்றிலே அரிக்கன் விளக்கைக் கட்டி கீழே இறக்கிப் பார்த்தோம். ஒரு மண்ணும் தெரியவில்லை.

இந்தக் கலவரத்தில் ஊர் அரைவாசி கிணற்றடியில் கூடிவிட்டது. பக்கத்துவீட்டு சிவப்பிரகாரசம் பத்து பற்றறிபோட்ட ரோர்ச் லைட்டை கொண்டு வந்தார். பெரிய எழுத்து நல்லதங்காளை தினமும் பெரிய குரலில் படித்து தொண்டையை வளமாக வைத்திருப்பவர். ரோர்ச்சை அடித்துப்பார்த்தால் வீரன்தான் கிணற்றைச் சுற்றி சுற்றி ஓயாமல் நீந்திக் கொண்டிருந்தது. அவர் ஒருவரிடமே ரோர்ச் லைட் இருந்த படியாலும், உரத்த குரல் வளத்தில் அவருக்கு நிகர் எவரும் இல்லை என்றபடியாலும் நாய் மீட்பு பணிக்கு அவரே அக்கிராசனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாளியும் கயிறுமாக நாய் எடுப்பதற்கு நாங்கள் செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. அடுத்ததாக, பனைநாரில் செய்த பட்டை கிணற்றில் இறக்கப்பட்டது. நாய் இந்த விசித்திரமான ஏற்பாட்டை ‘இந்தா, என்று வந்து மணந்து பார்த்துவிட்டு திரும்பிவிடும். பட்டையில் ஏறினால் உயிர் தப்பிவிடலாம் என்று ஒருமுறை அதற்குப் பட்டதுபோலும், ஏறிவிட்டது. நாங்கள் எல்லாம் கூக்குரல் இட்டு அதைப் பதனமாக இழுத்தெடுக்கும்போது அது என்ன நினைத்ததோ மனதை மாற்றிக்கொண்டு மறுபடியும் பாய்ந்துவிட்டது.

கடைசியில் தொட்டில் யோசனையைச் சொன்னது பாவாடை சண்முகம்தான். இவர் படு அப்பாவி. ஒருமுறை கிணற்றடியில் மனைவியின் உள்பாவாடையை தோய்க்கும் போது கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டார். அன்றிலிருந்து அவர் பிரக்கியாதி இப்படி பரவிவிட்டது. இந்த ஒரு குற்றத்தைத் தவிர அவர் அவ்வப்போது அருமையான யோசனைகளை தரவல்லவர்.

எங்கள் ஊரில் எதற்கு குறைவிருந்தாலும் தொட்டிலுக்கு குறைவில்லை. மழையோ, வெய்யிலோ குழந்தை விளைச்சல் அமோகமாக இருக்கும். ‘நீ, நான்’ என்று தொட்டில்கள் வந்துவிட்டன. நாலு மூலையிலும் கயிறு கட்டி வெகு கவனமாக தொட்டிலை இறக்கினோம். தொட்டில் தண்­ரில் அமுங்கியபடியே இருந்தது. சிவப்பிரகாசம் ரோர்ச் லைட்டை கண்வெட்டாமல் அடித்துக் கொண்டிருந்தார். நாய் தொட்டில் பக்கம் நீந்திவந்தபோது சொல்லி வைச்சதுபோல நாலுபேரும் கயிற்றை இழுத்துவிட்டார்கள். நாய் தொட்டிலில் வசமாய் மாட்டிவிட்டது.

வெளியே வந்ததுதான் தாமதம் நான் அதை ஆசை தீரக் கட்டிப்பிடித்தேன். அது ஒரு சிலுப்புச் சிலுப்பி தண்ணியைச் சிதறடித்தது. பிறகு ஒரே பாய்ச்சல்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வீரன் கண்ணகியை கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. எதிர் வீட்டு வண்டார்குழலியிடம் அதற்கு மையல் ஏற்பட்டுவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். (எங்கள் ஊரில் தமிழ்ப்பற்று கரைபுரண்டு ஓடிய காலகட்டம் இது. பற்பன்கூட தன் அணில் குஞ்சுகளுக்கு பரிமேலழகர், லோபாமுத்திரை என்று பெயர் வைத்திருந்ததாக ஞாபகம்)

எங்களுக்கு கணக்குப் பாடம் எடுப்பது கந்தையா வாத்தியார்தான். இவர் ஒரு தீவிரவாதி. இவர் பாடம் நடத்தும் போது நாங்கள் எல்லாம் கைவிரல்களை ஒன்றுகூடத் தவறாமல் மேசைமேலே வைத்திருக்க வேண்டும். மனக்கணிதம் என்றால் மனதால் சொல்லவேண்டும். கையால் சொல்லக்கூடாது என்பது இவருடைய அற்புதமான சித்தாந்தம்.

பதின்நான்கிலிருந்து ஒன்பது போனால் மிச்சம் எவ்வளவு. இதுதான் கேள்வி. நாங்கள் உயிரைக் கொடுத்து இதற்கு விடை தேடிக்கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் வீரன் வந்து என் காலை நக்கியது. அதுமாத்திரமல்ல, விரகதாபக் கதாநாயகியைப் போல கொஞ்சம் முக்கல், முனகலையும் சேர்த்துக்கொண்டது.

கந்தையா வாத்தியார் எவ்வளவுதான் சுத்த வீரர் என்றாலும் அவருக்கும் நாய்க்கும் ஒரு சொந்தம் இருந்தது. அவர் வேட்டியைத் தூக்கினால் கணுக்காலில் இருந்து முழங்கால்வரை எல்லாம் நாய்க்கடி தழும்புகள்தான். இது புன்னாலைக்கட்டுவன் நாய், இது பெரிய கடை நாய், இது சித்தங்கேனி என்று வகைவகையான தழும்புகளை பொறாமைப்படும்படி காட்டுவார்.

நாயைக் கண்டதும் அவர் அஞ்சம் கெட்டு அறிவும் கெட்டு, ‘ஆர், ஆர் அந்த நாயைப் பிடி; கொண்டுபோ, கொண்டுபோ, என்று கத்தத் தொடங்கிவிட்டார். ஒரு கால் நிலத்திலும், மறுகால் கதிரையிலுமாக எந்தத் திசையிலும் பாய்வதற்கு ஏதுவாக யுத்த சன்னத்தனாக நின்றார். நானும் இதுதான் சாட்டு என்று நாயை இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். வாத்தியாரைப் பயங்காட்ட என்னிடம் ஓர் அஸ்திரம் இருக்கிறது என்பதில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் அமுங்கி பள்ளிக்கூடத்திற்கு திரும்பிப்போக வசதியாக மறந்துவிட்டேன்.

அதற்கு பிறகுதான் அம்மா வீரனை பள்ளிநாட்களில் நான் திரும்பி வரும்வரை கட்டி வைக்கத் தொடங்கினாள். ஆனால் இரவு நேரங்களில் வீட்டைக் காக்கும் DUTY இருப்பதால் அது சுதந்திரமாக உலாவந்து காவல் வேலைகளைக் கவனித்தது.

அன்று சனிக்கிழமை, தலை முழுக வார்க்கும் நாள். வீடு முழுக்க தடபுடல் பட்டது. உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து என்னைத் தயார்நிலையில் வைத்திருந்தார்கள். அடுத்த கட்டம் அரைத்து களியாக்கிய சீயக்காயைப் பிரட்டுவதுதான்.

அம்மா அலுமிச்சை மரத்தை பார்த்தபடியே நின்றாள். அம்மாவின் முகத்துக்கு கவலை தோதுப்படாது. அவளுடைய கண்களில் என்றுமில்லாத சோகம் கப்பியிருந்தது. ஐந்து சதத்திற்கு பத்து எலுமிச்சம்பழம் சந்தையிலே விற்ற காலமது. ஆனாலும் அம்மாவுக்கு அந்த மரத்தில் அப்படி ஒரு மோகம். அதை எப்படியும் காய்க்க வைத்துவிட வேண்டும் என்ற பிடிவாதம்.

அதற்கு முதல் நாள்தான் செம்பட்டையன் வந்து மண்ணைப் பிரட்டிக் கொத்தி, தண்ணியும் பாய்ச்சி விட்டிருந்தான். மலட்டு மரங்களுக்கே உரித்தான ஒருவித அலட்டலோடு அது நின்றுகொண்டிருந்தது. அம்மாவுக்கு சலிப்பாக வந்தது. இடுப்பிலே கையை வைத்து யோசித்துக் கொண்டிருந்தாள்.

அம்மாவின் நிறமே எலுமிச்சம்பழ நிறந்தான். அவள் அப்படி அண்ணாந்து பார்க்கும்போது நெற்றியில் இட்ட குங்குமத்தின் ஒரு துளி மூக்கிலே ஒட்டிக்கொண்டு இருந்தது. அது ஒரு சிவப்புக்கல் மூக்குத்திபோல அழகாகத் தெரிந்தது. அம்மா அந்தக் கணம் என்ன நினைத்தானோ, கனத்த பெருமூச்சொன்று வெளியே வந்தது.

அம்மா அப்படி கவலைப்பட்டிருக்கத் தேவையில்லை அந்த மரத்தின் விதியை மாற்றப் போகும் ஒரு சம்பவம் சீக்கிரமே அங்கே நடப்பதற்கு இருந்தது. அப்போது அது அம்மாவுக்கும் தெரியவில்லை; எனக்கும் தெரியவில்லை; மரத்துக்கம் தெரியவில்லை.

எனக்கு கண்ணில் எண்ணெய் வழிந்து எரிந்துகொண்டிருந்தது. நான் அம்மாவின் கையைப் பிடித்து இழுத்தபடியே இருந்தேன். அம்மா இருந்த இடத்ரைவிட்டு அரைசயவில்லை; அந்த மரத்தைப் பார்த்தபடியே இருந்தாள்.

அப்போதுதான் அது நடந்தது. எங்கள் வேலைக்காரப் பெட்டை இளைக்க இளைக்க ஓடி வந்தாள். ‘அம்மா, வாருங்கோ, வாருங்கோ; சுறுக்கா வாருங்கோ. விதானை யாரை நாய் கடிச்சிட்டுது’ என்று கூக்குரலிட்டாள்.

எங்கள் ஊரில் நாய் கடிப்பது என்பது சர்வ சாதாரணம். நுளம்புக்கடி, மூட்டைக்கடி போலத்தான் இதுவும். எனக்கு எட்டு வயது முடிவதற்கிடையில் நான் மூன்றாம்தரம் நாயிடம் கடி வாங்கியிருக்கிறேன். ஆனால் இதை எங்கள் வகுப்பில் சொல்லுவதற்கு வெட்கம். என்னோடு படிக்கும் கூட்டாளிகள் பற்பனும், கிட்ணனும் இரணை வாழைப்பழம்போல ஒட்டிக்கொண்டு திரிவார்கள். பற்பன் கறுத்து மெலிந்துபோய் இருப்பான்; கிட்ணனோ இரண்டு ஆட்டில் ஊட்டிய குட்டிபோல தளதளவென்று இருப்பான். இந்த கிட்ணனுக்கு எட்டு தடவையும், பற்பனுக்கு பதினாலு தடவையும் நாய் கடிச்சிருக்கு. நாங்கள் எங்கள் விழுப்புண்களை ஆளுக்கு ஆள் காட்டி மகிழ்ந்திருக்கிறோம்.

நாய்க்கடிக்கு வைத்தியமும் அப்படித்தான். நவசியரிடம் தான் போவோம். அவர் மந்திரித்துக்கொண்டே பச்சிலைச் சாறை தலையிலே தேய்த்து நடு உச்சி மயிரையும் மூன்றுதரம் இழுத்துவிட்டு, பச்சிலையையும் கடிவாயில் கட்டிவிடுவார், அவ்வளவுதான். என்னைப்போல ஒரு மகாசாது உலகத்தைப் பிரட்டிப் போட்டாலும் கிடைக்காது. மற்றவர் சோலிக்கு போனதில்லை. அப்படிப்பட்ட என்னை மடக்க கண்ணகி ஒரு தந்திரம் செய்தது.

வழக்கம்போல மருந்துச் சிரட்டையை எடுத்துக்கொண்டு முலைப்பால் வாங்கிவர கிளம்பினேன். அழகம்மாக்கா வீட்டுக்குத்தான் முதலில் போனேன். அங்கே பால் தீர்ந்துவிட்டது. உடனே வடிவக்கா வீட்டுக்குத் திரும்பினேன். அது வற்றாத ஊற்று. இருபத்து மணி நேரமும் பால் பொங்கிய படி இருக்கும். என் தலையை தூரத்தில் கண்டவுடனேயே ரவிக்கையை தளர்த்தி வாசலுக்கு வந்துவிட்டா, வடிவக்கா.

சிரட்டை நிறைய சுடு பால் தளும்ப ஏந்திக்கொண்டு மெள்ளத் திரும்பும்போது கண்ணகி கண்டுவிட்டது. ஒருவித புளகாங்கிதத்தோடு என்னைத் துரத்தத் தொடங்கியது.

கண்ணகிக்கு சிறுவர்களின் பிருட்டச் சதையில் அப்படி ஓர் ஈடுபாடு. அதுவும் எனக்காக இவ்வளவு நாளும் விரதம் காத்திருந்தது. நான் சிரட்டையை கடாசிவிட்டு ஓடிப்போய் வேலியில் பாய்ந்து ஏறுமுன் எட்டிக் கடித்துவிட்டது. நான் அழுதுகொண்டே அம்மாவிடம் ஓடிப்போனேன். அம்மா களிசானை இழுத்துப் பார்த்துவிட்டு ‘ஐயோ! மூன்று பல்லு பதிஞ்சிருக்கு’ என்று ஓலமிட்டாள். நான் பட்ட அவஸ்தையெல்லாம் அந்தக்கணம் பஞ்சாய்ப் பறந்துவிட்டது. மூன்று பல் என்றதும் பற்பனைப் பார்த்து புளுகுவதற்கு என்னிடம் ஒரு அபூர்வ விஷயம் கிடைத்ததென்பதில் என்மனம் குதிபோட்டது.

வீரன் கிராமத்து நாய்க்குரிய சகல லட்சணங்களையும் கொண்டிருந்தது. கிடைத்ததைச் சாப்பிட்டு, தானுண்டு தன் வாசலுண்டு என்று கிடக்கும். தூங்குகிற நேரத்தில் தூங்கி விழிக்கிற நேரத்தில் விழித்து காவல் கடமைகளைச் சரிவரச் செய்யும் தன் குல ஆசாரம் தவறாமல் அவ்வப்போது தெருச் சண்டைகளில் கலந்துகொள்ளும் மற்றும்படி, ஆட்களைக் கடித்ததென்பது அதன் பயோடேட்டாவில் கிடையாது.

இப்படிப்பட்ட வீரன் விதானையாரைப் போய் கடித்துவிட்டது. இப்ப இரண்டு நாளாய் அது சுரத்தில்லாமல்தான் இருந்தது. சம்மாட்டுத் துணிபோல சுருண்டு சுருண்டுபோய் கிடந்தது. மயிலை நிறக் கண்கள் மஞ்சளாகிவிட்டன. பெரிய சிரமத்தோடு தன் பாரிய உடம்பை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டுதான் அது நடந்தது.

பள்ளிக்கூடத்தில் என் யோசனை முழுக்க வீரனைப் பற்றியே இருந்தது. ரத்தினேஸ்வரி அக்காவுக்கு அது தெரியாது. ஒரு சதக்காக போல வட்டமான முகம். அவ என்றால் இடைத்தொடர் குற்றியலுகரம் பற்றி இடைவிடாது உருவேற்றிக் கொண்டிருந்தார். ‘என் சொல்லை ஒருபோதும் தட்டாதே! என் வாசக்கட்டி! எதற்காக விதானையாரைப் போய் கடித்தது. அதற்கு ஏதாவது நடந்துவிடுமோ?’ என்று ஒரே பயமாக இருந்தது. அப்பொழுதே ஓடிப்போய் வீரனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கவேண்டும்போல பட்டது.

நான் பயப்பட்டது சரிதான். நான் திரும்பி வந்தபோது எங்கள் வீட்டுப் படலையில் ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது எனக்கு துணுக்கென்றது. எங்களுடைய ஐயா, நவசியர், சிவப்பிரகாசம், வல்லியர், சிவக்கொழுந்து என்று முக்கியமானவர்கள் எல்லாம் சேர்ந்துவிட்டார்கள். அம்மா காத்திருந்து என்னுடைய கையைப் பிடித்து திண்ணைக் குந்தில் தூக்கிவிட்டாள்.

நாய்க்கு விசர் பிடித்துவிட்டதாம். அது கடித்தால் ஆட்கள் சாவது நிச்சயமாம். என்னைக் கிட்டப் போக வேண்டாம் என்று அச்சுறுத்தி வைத்தார்கள்.

அப்போதுதான் நான் வீரனைப் பார்த்தேன். அது வேலியோரத்தில் நின்றுகொண்டிருந்தது. தலை தோறுக்குக் கீழே தொங்கியது. இரைத்து, இரைத்து குலைத்தது. வால் கால்களுக்கிடையில் சுருண்டுவிட்டது. நாக்கைத் தொங்கப் போட்டபடி நிலை குத்தாமல் பார்த்தது. வீரன் போலவே இல்லை. நாலு நாளில் குருக்கடித்த வாழைபோல உருத்தெரியாமல் மாறிவிட்டது.

ஊர் முழுக்க இந்தப் புதினம் பரவிவிட்டது. அப்பொழுது பறவைக்காவடி எடுத்ததுபோல பறந்துவந்தார் பற்பனின் அப்பா. இவர் பாட்டு வாத்தியார். சங்கீத ஞானம் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் வீட்டுக்கு வீடு ‘வரவீணாவை’ பிரபலப்படுத்தி வரலாறு படைத்தவர். ஆரபி ராகத்தில் அளவில்லாத பக்தி. எப்பவும் அதை வெளியே விடாமல் வாய்க்குள் வைத்து முணுமுணுத்துக்கொண்டு இருப்பார். ஏகப்பட்ட குஷ’ பிறந்துவிட்டால் மட்டும் வாயால் பாடுவார். சொல்லாமல் கொள்ளாமல் மேல் ஸ்தாயிக்குப் போய் அங்கேயே நின்று அவஸ்தைப் படுவார். கீழே இறங்கமாட்டார்.

இவ்வளவு கீர்த்தி இருந்தாலும் மிகவும் இரக்க சுபாவம் கொண்டவர். ‘நாய்க்கு விசரில்லை; பாவம், ஏதோ வருத்தம்’ என்று முதன்முதலாக துணிந்து நாயின் கட்சியைப் பேசியவர் இவர்தான்.

இப்ப கூட்டம் இரண்டாகப் பிரிந்துவிட்டது. வாதப் பிரதிவாதங்கள் சூடு பிடித்தன. நாயைக் கொன்றுவிட வேண்டுமென்பது ஒரு கட்சி. இன்னும் கொஞ்சநாள் வைத்துப் பார்க்க வேண்டுமென்பது அடுத்த கட்சி. ஒருவரும் விட்டுக் கொடுப்பதாயில்லை. அந்தக்காலத்தில் நாங்கள் மூன்றாவது அம்பயருக்கு எங்கே போவது?

அப்பொழுதுதான் எடுப்பான குரலில் நவசியர் பேசத் தொடங்கினார். இப்படியான சங்கதிகளில் எங்கள் ஊருக்கு அவர்தான் ‘வேதநூலறிந்த மேதகு முனிவர்’. திருப்பித் திருப்பி ஒத்திகை பார்த்த பட்டாளத்து வீரர் நடைபோல அவருடைய சொற்கள் ஒரு நிதானத்துடன் தாளம் தவறாமல் வந்து விழுந்து கொண்டிருந்தன.

‘இஞ்ச கேளுங்கோ! நான் சொல்லுறதை வடிவாய்க் கேளுங்கோ! நாய் தண்ணியைக் காட்டினால் குலைத்தபடியே இருக்கு; குடிக்குதில்லை. நாக்கு தொங்கிப்போயிருக்கு; தண்ணி கொட்டினபடியே கிடக்கு. நாய்க்கு விசர்தான்; ஐமிச்சமே இல்லை!’ என்று அடித்துக் கூறிவிட்டார். விசாரணைக் கூட்டம் முடிவு பெற்றது. மன்னர் பேச்சுக்கு மறு பேச்சுண்டோ?

இப்படியாக எங்கள் வீட்டு நாயின் எதிர்காலத்தை நாயை ஒரு வார்த்தைகூடக் கேட்காமல் தீர்மானித்தது எனக்கு தர்மமாகப் படவில்லை.

வேலைக்காரப் பெட்டை தோன்றினாள். அவள் அப்படித்தான் சாமி வரம் தர வருவதுபோல திடுதிப்பென்று தோன்றுவாள். தன் கன்னத்தில் விரலை வைத்து தலையை சிறு அசைப்பு அசைத்து என்னைப் பார்த்தாள். ‘நாயை அடிக்க செல்லத்தம்பி வரப்போறான்’ என்று மொய் அறிவிப்பு செய்வது போலச் சாதாரணமாகச் சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள் பாதகத்தி.

கிராமங்களில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பேர் வந்துவிடுகிறது. இது எப்படி என்ற பூர்விகம் யாருக்கு தெரியாது. மாட்டுக்குச் சரி, குதிரைக்குச் சரி லாடம் அடிப்பதென்றால் சின்னையன்தான்; தென்னை மரத்திலேறி பருவம் தாண்டாத ஆட்டுச்செவிப் பதம் இளநீர் வெட்டுவதென்றால் அதற்கு மாணிக்கன்தான். அந்தக் கலையில் அவனை மிஞ்ச ஆள் இல்லை. விசர் நாயை அடிப்பது என்றால் அது செல்லத்தம்பிதான். அவனுக்கு அப்படி ஒரு கீர்த்தி.

இவர்கள் எல்லாம் எந்தப் பயிற்சி மையத்தில் கற்றுத் தேர்ந்தார்கள். நான் அடிப்பதில் ஒருவன் கியாதி பெறுவதென்றால் எத்தனை நாயைக் கொண்றிருக்கவேண்டும்?

செல்லத்தம்பி பின்னுக்கு கைகளைக் கட்டியபடி நிலம் அதிராமல் நடந்துவந்தான். அவன் புஜத்தின் தசைகள் திரண்டு திரண்டு கிடந்தன. தோளிலே போட்ட துண்டு முதுகிலே இருந்த வாள் வெட்டுக் காயத்தை முற்றிலும் மறைக்க முடியாமல் கிடந்தது.

வீரனை இப்ப பிடித்துக் கட்டிவிட்டார்கள். கழுத்திலே இரண்டு சுருக்கு கயிறு; ஒன்று ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. மற்றது ஒரு வேலிக் கதியாலில். வீரன் கால்களைப் பரப்பிக்கொண்டு நடுவிலே அசையமுடியாமல் நின்றது. ஏதோ அனர்த்தம் நடக்கப் போகிறது என்று அதன் உள்ளுணர்வுக்கு தெரிந்திருக்கவேண்டும். ஒரு சத்தம் இல்லை; முனகல் இல்லை. சுற்றியிருந்த அந்த முகங்களில் ஒரு சிநேகமான முகத்தை அது தேடியிருக்கவேண்டும். மஞ்சள் பழுத்த அந்தக் கண்கள் பரிதாபகரமாக என்னை ஒரு கணம் பார்த்து மீண்டன.

சுயம்வரத்துக்கு ஆள்விட்டு அழைத்ததுபோல கூட்டம் சேர்ந்துவிட்டது. ஊர் இளந்தாரிகள் எல்லாம் நெருக்கி அடித்தார்கள். நாய் அடி என்பது ஒவ்வொரு நாளும் பார்க்கக் கிடைக்கிற சங்கதியா? செல்லத்தம்பி மேல் துண்டை ஒரு மரக்கிளையில் மாட்டிவிட்டு வேட்டியை மடித்துக் கட்டினான். இரும்புப் பூண்போட்ட உலக்கையை யாரோ அவன் கையில் கொடுத்தார்கள். அதை ஒற்றைக் கையால் பின்னால் பிடித்தபடி வியூகத்தை உடைத்துக்கொண்டு நாய் இருந்த திக்கில் பராக்குப் பார்த்தபடி மெள்ள அடிவைத்து நடந்தான்.

எனக்கு அந்த நேரம் பச்சாத்தாப உணர்விலும் பார்க்க இந்த நாய் அடி எப்படி இருக்கும் என்ற ஆவல் ஒரு கணம் தோன்றியதை நினைத்து வெட்கமாக இருந்தது.

கிட்டவந்த செல்லத்தம்பி காலை அகட்டி வைத்து வாகாக நின்றுகொண்டு கண் இமைக்கும் நேரத்தில் உலக்கையைச் சுழற்றி நாயின் மண்டையில் ஒரு போடு போட்டான். ‘ங்கா’ என்ற ஈனமான கதறல் ஊ‘ முழுவதும் கேட்டது. நாய் சுருண்டுபோய் விழுந்தது.

நான் கொஞ்சம் கிட்டவந்து பார்த்தபோது அதன் தலையிலே ஒரு சொட்டு ரத்தம் சிந்தியிருந்தது. கபாலம் வெடித்து வெள்ளைக் களிபோல மூளை ஓடிக்கொண்டிருந்தது. கண்கள் அகலமாகத் திறந்துபோய் கிடந்தன. நாயின் பற்கள் ஆவென்று என்னைப்பார்த்து சிரித்தன. என்னுடைய இருதயம் மெதுவாகக் கிளம்பி தொண்டைக் குழியை வந்து அடைத்துக் கொண்டது.

செல்லத்தம்பி நாய் அடித்த கதை அட்ட திக்குகளிலும் பரவிவிட்டது. அந்தப் பரிதாபத்தையே எல்லோரும் கதைத்தார்கள். அவன் உலக்கையை எடுத்த விதத்தையும், விசுக்கியதையும், ஒரேயடியில் நாயை வீழ்த்தியதையும் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோனார்கள்.

ஆட்கள் எல்லாம் போன பிறகு அம்மாவைப் பார்த்து ஐயா ‘என்ன செய்வம்? என்று கேட்டார். அம்மா கண்ணைத் துடைத்தபடி,’அந்த எலுமிச்சை மரத்தடியில் தாட்டு விடுங்கோ’ என்றாள்.

நாயை அடித்துக் கொன்றுவிட்டாலும் ஊரில் விதானை யாருக்க என்ன நடக்குமோ என்ற பயம் இருந்துகொண்டுதானிருந்தது. ஊர்ச்சனங்கள் எல்லாம் அடிக்கடி போய் ‘இன்னும் இருக்கிறாரா’ என்று நோட்டம் பார்த்து வந்தார்கள். விசர் பிடிக்க பதினாலு நாள் ஆகும் என்று மெல்லிய குரலில் பேசிக்கொண்டார்கள். விதானையர் என்னவென்றால் பச்சிலையைக் கட்டிக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டார். வண்டி கட்டி பெரியாஸ்பத்திரிக்கு போகும்படி சிலர் வற்புறுத்தியும் அவர் தலையைப் பலமாக ஆட்டிவிட்டார்.

சனியோட சனியெட்டு, ஞாயிறு ஒன்பது என்று பதினாலு நாள் கழிந்துவிட்டது. ஒன்றுமே நடக்கவில்லை. விதானையார் என்றால் மழைக்கு வெடித்த மரவள்ளிபோல விளைந்துபோய் இருந்தார். காயம் ஆறின இடம்கூடத் தெரியவில்லை. முன்புபோல அவர்தன் காரியங்களைக் கவனிக்க ஆரம்பித்தார்.

இப்படித்தான் நான் எனது பால்ய காலத்து அத்தியந்த நண்பனை மூடசனங்களின் அறியாமையால் இழக்கவேண்டி நேர்ந்தது. அதனுடைய ஓவென்ற அவலக்குரல் எனக்கு பல இரவுகள் தொடர்ந்து கேட்டன. அதை இழுத்துக்கொண்டு போனபோது மஞ்சள் கண்களால் அது என்னை இரந்து பார்த்தது திருப்பித் திருப்பி ஞாபகத்துக்கு வரும். இனி என்ன? அது திரும்பவா போகிறது?

இந்த அநியாயக் கதையில் சொல்லுவதற்கு இன்னும் ஒன்று மிச்சமிருக்கிறது.

அந்த வருடம் அம்மாவின் எலுமிச்சை மரம் இலை தெரியாமல் பூத்துக் குலுங்கியது. கொத்துக் கொத்தாய்க் காய்த்தது. காலை நேரங்களில் நிலம் முழுவதும் வெளிர் மஞ்சள் பந்துகளாக எலுமிச்சம் பழங்கள் பரவிக் கிடந்தன. பேய்க் காய்ச்சல் என்று சொல்வார்களே, அப்படி. அம்மா விழுந்து விழுந்து பொறுக்கினாள். அள்ள அள்ள வந்து கொண்டே இருந்தது. ஆசைதீர ஒரு பெரியசாடி நிறைய ஊறுகாய் போட்டாள், அம்மா.

எல்லோரும் வட்டமாக இருந்து சாப்பிடும்போது அம்மா ஊறுகாயைப் பரிமாறினாள். கையில் எடுக்கும்போதே மணம் தூக்கியது. நடு நாக்கில் புளித்து உள்ளே செல்லும்போது காரமாக தொண்டையில் உரசியது. ஐயாவுக்கு, அம்மாவை லேசிலே பாராட்ட மனம் வராது. அன்னு என்னவோ ஐயா, ‘ஊறுகாய் அருமையாய் விழுந்திருக்கு’ என்றார். எல்லோரும் சப்புக்கொட்டி அதை ரசித்து சாப்பிட்டார்கள்.

ஒருவருக்காவது வீரனுடைய ஞாபகம் வரவில்லை.

– 1996-97, வடக்கு வீதி (சிறுகதைத் தொகுப்பு), மணிமேகலைப் பிரசுரம், நவம்பர் 1997

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *