வருவாள், காதல் தேவதை…

1
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 30, 2024
பார்வையிட்டோர்: 8,891 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40

அத்தியாயம்-31 

காதல் – மழையைப்போல மகத்துவமானது பூக்களைப் போல புனிதமானது. மனிதர்ளிடம்தான் சில நேரங்களில் அது மனிதத்தை கழந்து அசிங்கமாகிறது. – கிழக்குதூரமல்ல – ஜோமல்லூரி. 

ஆகாஷ் மாடிக்குப் போய் தானும் ஒரு சூட்கேஸ் சகிதம் கீழிறங்கி வந்தான். 

”நா கிளம்பறேம்ப்பா. இவளுக்கு மரியாதை தராத வீடு எனக்கு மட்டும் எப்டி தரும்.” 

“அவசரப்படறடா நீ. சுஜிதாகிட்ட உங்கம்மா மெடிகல் ஃபிட்னஸ் கேட்டா. உனக்கு கோவம் வராதா? உடனே அவ அதுக்கு ஒத்துப்பாளா?” 

ஆகாஷின் முகம் சுருங்கியது. 

”கோவம் வருதுல்ல? அதே மாதிரிதாண்டா உணர்வுகள் எல்லா மனுஷனுக்கும் இருக்கும். சுஜிதாக்கு மட்டும் உள்ளுக்குள்ள ஒரு வியாதியும் இருக்காதுன்றது என்ன நிச்சயம்? எம்பிள்ளைய மட்டும் நா சந்தேகப்பட்டுக்கிட்டா கட்டிக் கொடுக்க முடியும்? அப்டியே நா போய் பிரவீண்கிட்ட கேட்டாலும், அவங்கம்மாவும் நா கேக்கறதைத் தானே கேப்பாங்க. உங்க மருமகளா வரப்போறவகிட்ட மெடிகல் ஃபிட்னஸ் வாங்கிட்டீங்களான்னு. அதுக்கு நா என்ன பதில் சொல்லுவேன்? அப்டி ஒரு கேள்வி வந்தா ஆமா வாங்கிட்டேன்னு நெஞ்சு நிமிர்த்தி காட்டறதுக்கு, முதல்ல நீ அவளை செக்கப்பண்ண வெச்சு மெடிகல் ஃபிட்னஸ் வாங்கிட்டு வந்துட்டு அப்பறம் எங்களைத் திட்டு. நியாயம்னா நியாயம்தானே.” 

ஆகாஷ் அப்பாவை வெறித்துப் பார்த்தான். அவர் பேசுவது நியாயம் தான் என்பதை உள்மனம் ஒப்புக் கொண்டாலும் வெளிப்படையாய் அதை ஒப்புக் கொள்ள ஏதோ ஒன்று தடுத்தது. அவனது திடீர் மௌனம் சுஜிதாவை முகம் சுளிக்கச் செய்தது. 

“ஓகே ஆகாஷ். நா போறேன். நீங்க வர வேணாம். உங்க தங்கையோட நன்மைக்காக நா சொன்ன விஷயம் இவ்ளோ பெரிய விஷயமாகும்னு தெரிஞ்சுருந்தா எனக்கென்ன போச்சுன்னு பேசாம இருந்திருப்பேன். அவங்கவங்க தலையெழுத்தை யாரால் மாத்த முடியும்? கல்யாண சமயத்துல உங்களை நா கூட்டிட்டு போய்ட்டேன்னு கெட்ட பேரு வரவேண்டாம். நீங்க இருங்க,.நா போறேன்.” 

ஆகாஷ் என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறினான். சுஜிதா வாசல் நோக்கி நடந்தாள். 

“நில்லு சுஜி. உன்னை உன் பிரண்டு வீட்டுல நானே டிராப் பண்ணிட்டு வரேன். தனியா போக வேண்டாம்.”

தன் சூட்கேஸை வைத்துவிட்டு கார் சாவியை மட்டும் எடுத்துக் கொண்டு யாரையும் பார்க்காமல் நடந்தான். சற்று நேரத்தில் கார் கிளம்பியது. 

சுஜிதா வீட்டை விட்டுப் போனதில் சந்தோஷமும், ஆகாஷ் அவளோடு போகவில்லை என்பதில் நிம்மதியும் ஏற்பட சம்பத்தும் சங்கீதாவும் ஒருவரை ஒருவர் நமுட்டுச் சிரிப்போடு பார்த்துக் கொண்டார்கள். 

“இப்ப திருப்தியா? நம்ம வீட்டுக்கு வந்த ஒரு பெண்ணை இப்டி விரட்டி அடிச்சுட்டீங்களே. ஏன் உங்க புத்தி இப்டி போவுது?’ 

”உன் புத்தி எப்டி எப்டியோ போறதுக்கெல்லாம் நா காரணமா கேட்டுட்ருக்கேன்?” 

“இப்டியெல்லாம் பேசிட்டா நா அந்த பையன்கிட்ட மெடிகல் சர்டிபிகேட் வேண்டாம்னு விட்ருவேன்னு நினைச்சிங்களா? நா கல்யாணத்துல பெத்த தாயா பக்கத்துல நிக்கணும்னா அவனோட ஃபிட்னஸ் சர்டிபிகேட் வாங்கிட்டுதான் வரணும். இல்லாட்டி நீங்களே உங்க பொண்ணு கல்யாணத்தை நடத்திக்குங்க. அம்மா எங்கேன்னு யாராவது கேட்டா செத்துட்டான்னு சொல்லுங்க.” 

சாரதா உறுமி விட்டு உள்ளே செல்ல சங்கீதா அப்பாவை கவலையோடு பார்த்தாள். அவர் சைகையால் கவலைப்படாதே என்று சொல்லி விட்டு, மனைவிக்கு பதில் சொன்னார். 

”சரி அப்டியே சொல்லிடறேன். நீ இல்லாமயே என் பொண்ணு கல்யாணம் நடக்கட்டும். இந்த பிளாக்மெயில் எல்லாம் வேற எங்கயாவது வெச்சுக்க!” 

சாரதா உள்ளிருந்து வேகமாய் வெளியில் வந்தாள். 

“எப்டி பண்ணுவிங்க. உங்ககிட்ட பணமிருக்கா. உங்க அக்கௌண்ட்ல இருக்கற பணத்துல வரவங்களுக்குத் தாம்பூலம் கூட வாங்க முடியாது நினைவிருக்கட்டும்”. 

“எங்கிட்ட இல்லாட்டா என்ன? ஆகாஷ் விட்டுக் கொடுத்துடுவானா?” 

‘கிழிப்பான். அவனே சுஜிதாகிட்டதான் காசு வாங்கிட்டு போறான். பொறுப்பை அவகிட்ட ஒப்படைச்சு ரொம்ப நாளாச்சு.” 

”ஏன் அவ வீட்டை விட்டுப் போகும்போது சார்ஜை மறுபடியும் உங்கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணலையாக்கும். என்ன கெட்டுப் போச்சு. மறுபடியும் பொறுப்பை நீ வாங்கிக்க வேண்டியதுதானே” 

“மாட்டேன். அப்டியே வாங்கிக்கிட்டாலும் ஒத்தைப் பைசா தரதால்ல. உங்களால ஆனதைப் பார்த்துக்குங்க!” சாரதா திமிராகச் சொன்னாள். 

“அவ்ளோதானே விடு! பிரவீணைப் பத்தி. எனக்கு தெரியும். நம்மகிட்ட இப்ப பணமில்லைன்னு சொன்னா அதுக்காக கல்யாணத்தை நிறுத்திட மாட்டான். ரெண்டு மாலை, ஒரு மஞ்சக்கயிறு, அதுல கோர்த்த தாலி, இது போதும். ஏதாவது ஒரு கோயில்ல இவ கழுத்துல தாலி கட்ட அவன் ரெடியார்ப்பான். உன்னை மாதிரி பணப்பிசாசில்ல அவங்க” 

“அப்டின்னா எதுக்கு சுஜிதா வீட்ல அவளுக்குப் போடறதெல்லாம் வேணும்னு கேட்டாங்களாம்? அதுக்கு பேர் பேராசை இல்லாம என்னவாம்?” 

”உன் பேராசையை அடக்கத் தாண்டி அவங்களை அப்டி கேக்கச் சொன்னேன். எல்லாம் நா போட்ட நாடகம்தான். என் தலையெழுத்து எம்பிள்ளை, காதலிச்சவளை எந்த பிரச்சனையுமில்லாம கைபிடிக்கணும்ங்கற நல்ல எண்ணத்துல எம்பொண்டாட்டிய பத்தி நானே அந்தம்மாட்ட சொல்ல வேண்டியதாப்போச்சு. நா சொல்லிக் கொடுத்த வசனத்தைதான் அந்தம்மா உங்கிட்ட ஒப்பிச்சாங்க!” சம்பத் நிறுத்த சாரதா அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தாள். ”நாடகமா? ஏன் எதற்கு?” அழுகையும் அவமானமும் மேலிட ஆத்திரத்தோடு அவரைப் பார்த்து கத்தினாள். 

”நீ ரொம்ப ரொம்ப பெருமையா கொண்டாடிட்ருக்கயே அந்த பொண்ணு சுஜிதா. அவ கோடீஸவரிதான். ஆனா நீ கனவு காண்றாப்பல அவ காதலை அங்கீகரிக்கல. நம்மளை விட கோடீஸ்வர சம்பந்தத்தை பார்த்து வெச்சிருக்கார் அவளுக்கு. இந்த பொண்ணு வேணாம்னு சொல்லிடுச்சு. அப்டின்னா பெத்த கடனுக்கு அம்பது பவுன் நகையும் அஞ்சு லட்சம் பணமும் தரேன். அதோட உனக்கும் எனக்கும் உறவு அத்துப் போச்சு. எக்கேடும் கெட்டு ஒழின்னு விட்டுட்டான் அவப்பன். இது தெரிஞ்சா நீ எங்க அவங்க காதலுக்கு குறுக்க நிப்பயோன்னு பயந்துதான் அந்த பொண்ணுக்கு நல்லது செய்ய நினைச்சு சம்பந்தியம்மா கிட்ட பிரச்சனையைச் சொல்லி உதவி கேட்டேன். நமக்கு உதவப்போய் அம்மாக்கும் பிள்ளைக்கும் அங்க மனஸ்தாபமே வந்துடுச்சு. இவ்ளோ எல்லாம் நாம நல்லது நினைச்சும் அந்த பணக்கார எச்சக்கலை புத்தி திருந்துதா என்ன? உன்கிட்ட இல்லாததும் பொல்லாததும் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தறதுல அவளுக்கு என்ன ஆனந்தம்னு தெரியல. நாத்தனார் கல்யாணத்துல இந்த வீட்டு சொத்தெல்லாம் கரைஞ்சு போய்டுச்சுன்னா? அதுவும் தவிர சங்கீதா. அவளை மதிக்கறதில்ல இல்ல? அந்த ஆத்திரம் இவ சந்தோஷமா இருந்துடக் கூடாதுன்னு தேவையில்லாத குழப்பங்களை உண்டாக்கிட்ருக்கா. இப்டியெல்லாம் வதந்தியப் பரப்பி உன் மனசைக் கலைச்சுட்டா. கட்டின துணியோட சங்கீதா அவங்கூட போயிடுவான்ற நம்பிக்கை. அப்பறம் எல்லாம் இவளுக்குதானே!” 

சம்பத் சொல்லச் சொல்ல சாரதா குழம்பிப் போனாள். சுஜிதாவைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. அதே நேரம் சம்பத் சொல்வதை எல்லாம் நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஒருவேளை இவர் சொல்வதுதான் உண்மையா? நான்தான் ஏமாந்து விட்டேனா? தலை சுற்றியது அவளுக்கு. எதுவுமே பேசாமல் குழம்பிய முகத்தோடு தனிமையை நாடிச் சென்றாள். 

“எந்த பிரண்டு வீட்டுக்குப் போகப் போற சுஜி?” ஆகாஷ் கொஞ்ச தூரம் வந்ததும் கேட்டான். 

“நிஷா வீட்டுக்குதான் வேறெங்க?” 

“நீ அவசரப்பட்டுட்ட சுஜி. இப்டி சட்டுனு கிளம்பியிருக்க வேண்டாம்” 

“பின்ன என்ன ஆகாஷ். நீங்களும் உங்கம்மாவும் மட்டும்தான் எங்கிட்ட அன்பா இருக்கீங்க. உங்கப்பாக்கும் சங்கீதாக்கும் ஆரம்பத்துலேர்ந்தே என்னைப் பிடிக்கல. நா அங்க இருக்கறதும் பிடிக்கல. பல விதத்துல என்னை அவமானப்படீத்தியிருக்காங்க. நா உங்ககிட்ட எதுவும் சொன்னதில்ல. எவ்ளோ நாள்தான் நானும் பொறுத்துக்கறது. சரி சங்கீதாக்கு கல்யாணமாகி அவ போய்ட்டா பிரச்சனை குறைஞ்சுடும்னு நினைச்சேன். ஆனா பாருங்க. அதுலயும் பிரச்சனை. உங்க தங்கச்சி வாழ்க்கை எக்கேடும் கெட்டா என்னன்னு எனக்கு ஒதுங்கிப் போகத் தெரியல. என் காதுல ஒரு செய்தி விழுந்தும் பேசாம இருக்க முடியல. அது உண்மையா பொய்யான்னு நிச்சயமா தெரியாட்டாலும் சந்தேகம்னு ஏற்பட்ட பிறகு அதை தெளிவு படுத்திக் கறதுதானே நல்லதுன்னு நினைச்சுதான் உங்கம்மாகிட்ட விஷயத்தைச் சொன்னேன். ஏண்டா சொன்னோம்னு இப்பொ தோணுது.எவ எக்கேடு கெட்டுப் போனா என்னன்னு விட்ருந்திருக்கணும்.” 

”எல்லாம் சரிதான் சுஜி. ஒருவேளை இதெல்லாம் வெறும் சந்தேகமாவே இருந்து அந்த பையனுக்கு எந்த நோயும் இல்லன்னு ஆய்ட்டா, நாம அவங்க மனசை நோகடிச்சுட்டதா ஆகாதா? அப்பா சொல்றா மாதிரி செக்கப்புக்கு நீ ஒத்துப்பாயா?” 

”ஒய் நாட்! நா ரெடி.. இப்பவே வேணாலும் வரத் தயார்.”

“ச்சீச்சீ சும்மா கேட்டேன். விடு சுஜி. அவளே அதைப் பத்தி கவலையில்லன்னு சொன்னப்பறம் உனக்கென்ன? உனக்கே ஏதாவது நோய்னு யாராவது சொன்னாலும் நா கவலைப்படமாட்டேன். உன்னைத் தான் கட்டிக்குவேன். ஒரு வாரம் இல்ல ஒரு நாள்தான் வாழ்க்கைன்னாலும் சந்தோஷமா வாழ்ந்துட்டு போய்டணும். அதே மாதிரிதான் சங்கீதாவும் நினைக்கறா போலருக்கு. காதலிக்கற நாம, அவங்க காதலையும் மதிக்கத்தானே வேணும்” 

”உங்கம்மாகிட்ட இந்த சாவியையும் கணக்கு வழக்கு எழுதின நோட்புக்கையும் கொடுத்துடுங்க. நா மறந்து கையோட எடுத்துட்டு வந்துட்டேன்.”

“ஏதாவது சாப்படறயா சுஜி. வீட்ல எதுவுமே சாப்டலையே நீ?” 

“நீங்களும்தான் சாப்டல” 

“அப்பொ வா அந்த ரெஸ்ட்டாரண்ட்ல சாப்டுவோம்.”

ஆகாஷ் காரை அந்த ஏஸி ரெஸ்ட்டாரண்ட்டின் ஓரமாக நிறுத்தினான். இருவரும் உள்ளே நுழைந்தனர். மங்கிய வெளிச்சத்தில் காலியாயிருந்த ஒரு மூலையில் போய் அமர்ந்தனர். 

சற்று நேரத்தில் இன்னும் இருவர் உள்ளே நுழைந்தனர். அவர்களைப் பார்த்ததும் ஆகாஷின் புருவம் மேலெழும்பியது. சரவணனையும் சரண்யாவையும் அந்த நேரத்தில் அங்கே அவன் எதிர்பார்க்கவில்லை. சுஜிதாவுக்கு எதிரில் அவர்களோடு பேசவோ நலம் விசாரிக்கவோ தயங்கினான். நல்ல காலம் அவர்கள் இவர்களைப் பார்க்கவில்லை. 

சீக்கிரமே சாப்பிட்ட விட்டு எழுந்தான் ஆகாஷ். சரண்யா பார்ப்பதற்கு முன் வெளியில் வந்தான். தான் சரண்யாவுக்கு பயப்படுகிறோமா சுஜிதாக்கு பயப்படுகிறோமா என்று அவனுக்கே புரியவில்லை. சிரிப்பு கூட வந்தது. 

சுஜிதாவை நிஷாவின் வீட்டில் இறக்கி விட்டான். “நீங்களும் உள்ள வாங்க”. 

”வேணாம் சுஜி.நீ மட்டும் போ. அவ என்னன்னு கேட்டா என்ன சொல்லுவ?” 

”ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கறேன்.” 

“நீ எங்க வீட்லயே இருந்தப்பொ நாம அதிகம் பேசிக்கக் கூட இல்ல சுஜி. இனிமே மறுபடியும் வெளில் அடிக்கடி சந்திக்கணும். அடிக்கடி போன் பண்ணு.” 

“சரி கிளம்புங்க” 

சுஜிதா அந்த பல மாடி குடியிருப்பின் லிஃட்டை நோக்கி நடந்தாள். 

ஆகாஷ் காரை வீடு நோக்கி கிளப்பினான். ஹோட்டல் சாப்பாடு நெஞ்சைக் கரிப்பது போலிருந்தது. பீடா ஒன்று போட்டுக் கொண்டால் தேவலை என்று நினைத்தபடி வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு எதிர் திசையிலிருந்த பிளாட்பார பீடா கடையை நோக்கி நடந்தான். அவனிடம் பீடாவுக்கு சொல்லிவிட்டு அதுவரை பெட்டிக்கடையில் தொங்கிய போஸ்டர் செய்திகளைப் படித்தான். நாலைந்து பேருக்கு பீடா மடித்துக் கொடுத்துவிட்டு கடைசியாகத்தான் ஆகாஷுக்குக் கொடுத்தான். 

இருபது ரூபாய் தாள் ஒன்றை எடுத்து நீட்டினான். “சில்ற இல்லையே சார்.’ 

ஆகாஷ் பெட்டிக்கடைக்காரரிடம் சில்லறை வாங்கினான். அதிலிருந்து ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை பீடாக்கடைக்காரரிடம் வைத்துவிட்டு நடந்தான். ரோடை கடக்கத் தொடங்கியவனை கடைக்காரனின் குரல் நிறுத்த திரும்பினான். 

“சார் மிச்ச காசு..” பீடாக்கடைக்காரன் சொன்னது சரியாய் காதில் விழவில்லை. பஸ் ஒன்று ஹாரனை அலறவிட்டபடி சிக்னல் கிடைத்து சீறி வர வினாடி நேரத்தில் ஆடிப்போனான் ஆகாஷ்.பயத்தில் புத்தி வேலை செய்யவில்லை. பின்னால் ஓடி வர வேண்டியவன் என்ன செய்வதென்று புரியாமல் நடுரோடுக்கு ஒதுங்க எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த வேன் ஒன்று இவன் திடுதிப்பென்று இந்தப் பக்கம் ஒதுங்குவான் என்று எதிர்பாராமல் அவன் மேல் மோதி சடன் பிரேக் போட்டு நின்றது. ஆகாஷ் தூக்கி எறியப்பட்டு சற்று தள்ளி சாலையில் விழ டிராஃபிக் ஸதம்பித்தது. ரத்தம் குபுகுபுவென்று குட்டை கட்டியது. யார் யாரோ கத்தியபடி பதறியடித்துக் கொண்டு அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். 

ஆகாஷ் நினைவிழந்தான். டிராபிக் போலீஸ்காரர் ஒருவர் ஓடி வந்தார். 

”உயிர் இருக்குப்பா. சீக்கிரம் ஆஸ்பத்திரி கொண்டு போனா காப்பாத்திடலாம்” யாரோ சொன்னார்கள். 

“யாரு என்னன்னு ஒரு விவரமும் தெரியலையே!” 

”அந்த கார்லேர்ந்து இறங்கி வந்து பீடா வாங்கினாருங்க. மிச்ச சில்ற வாங்காம போறாரேன்னு கூப்ட்டேன். அதுங்காட்டியும் இப்டி அடிபட்டு விழுந்துட்டார்” பீடாக்கடைக்காரன் சொல்ல கார் நம்பரைக் குறித்துக் கொண்டு ஆகாஷை ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள். 

“இன்னும் அவனைக் காணலையே” சாரதா மணி பார்த்தபடி புருஷனிடம் கவலையோடு சொல்லிய நேரம், டெலிபோன் அடித்தது. 

அத்தியாயம்-32 

மனித வாழ்க்கை என்பது ஓயாத போராட்டம். மனிதன் பரிபொடு போராடியாக வேண்டும் நோயோடு போராடியாக வேண்டும். எதிரிகளோடு போராடியாக வேண்டும். இதற்கெல்லாம் மேலாத அஞ்ஞானத்தோடு போராடியாக வேண்டும். -சுவாமி பிரபலானந்தர் 

சம்பத் டெலிபோனை எடுத்தார். தன் பெயர் சொன்னார். 

”சார் நாந்தான் சரவணன் பேசறேன்”. 

”சொல்லு. என்ன விஷயம்.” 

”உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் கன்சல்ட் பண்ணணும் சார்”. 

சம்பத் ஓரக்கண்ணால் மனைவியைப் பார்த்தார். 

“யாருங்க?” 

“கிளையண்ட் ஒருத்தர்” என்றபடி வாசற்பக்கம் வந்தார் கார்ட்லெஸ்ஸோடு. சாரதா அடுக்களைப் பக்கம் சென்றாள். 

“என்ன விஷயம் சரவணா? சத்யா எப்டியிருக்கா?” 

“அவ நல்லாதான் இருக்கா சார். ஆனா அம்மாதான் புதுசு புதுசா பிரச்சனை பண்றாங்க.” 

“என்ன?” 

”சத்யாக்கு இனி தாயாகற சக்தியில்லன்ற விஷயம் அம்மாவோட புத்தியை ஆட்டி வெக்குதுன்னு நினைக்கறேன். அவங்க புத்தி கெட்டுப் போச்சு. அசிங்க அசிங்கமா திட்டம் போடுது. அக்காவால முடியலன்னதும் தங்கையை எனக்கு தாரமாக்கிடணும்னு முயற்சி பண்றாங்க. தன் திட்டத்துக்கு சத்யாவையும் கூட்டு சேர்த்துக்கிட்டாங்க. சத்யா எப்படி இதுக்கு சம்மதிச்சான்னு புரியல. ஒருவேளை பயமோ என்னவோ. மொத்தத்துல சரண்யாவை இனிமேயும் எங்க வீட்ல வெச்சிருக்கறது நல்லதில்லன்னு தோணுது. அந்த பொண்ணு நல்லார்க்கணும்னு நா மனசாற நினைக்கறேன். அதனால் அவளை ஹாஸ்டல்ல சேர்த்துடலாங்கற முடிவுக்கு வந்துட்டேன். இதைத் தவிர எனக்கு வேற வழி தெரியல. உங்ககிட்ட சொல்லாம இதைச் செய்யக் கூடாதுன்னு தான் போன் பண்ணினேன். தயவு செய்து என்னைத் தப்பா எடுத்துக்காம நீங்க இதுக்கு சம்மதிக்கணும். ஏன்னா நீங்களும் அவளுக்கு ஒரு கார்டியன் இல்லையா?” 

சம்பத் ஒரு வினாடி கனத்துப் போனார். சூழ்நிலைகளும், ஆசைகளும் மனிதர்களை என்னமாய் மாற்றி விடுகிறது என்று பெருமூச்சு விட்டார். சரவணனின் இக்கட்டான நிலைக்கு வருந்தினார். அவன் சலனப்படாதவனாக இருப்பதாலும் உறுதியாயிருப்பதாலும் இப்படி ஒரு நல்ல முடிவுக்கு வந்திருந்தான். இதே வேறு ஒரு சராசரி ஆணாயிருந்தால் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டிருக்க மாட்டான். 

“என்ன அங்கிள் ஸைலன்ட்டாய்ட்டீங்க?” 

“ஒண்ணுல்லப்பா” சம்பத் அவசரமாக அவனுக்கு பதில் சொன்னார். 

“நா எடுத்த முடிவு சரிதானே அங்கிள்” 

”மாமான்னு நா ஒருத்தன் கல்லு மாதிரி இருந்தும் அந்த பெண்ணுக்கு எந்த விதத்துலயும் உதவ முடியலையேன்னு வெக்கமார்க்கு சரவணா. ஆனா இனிமே வெக்கப்படறதுல அர்த்தமில்ல. ஹாஸ்டல் வேண்டாம் சரவணா. என்ன ஆனாலும் பரவால்ல அவளை நா இங்கயே கூட்டிட்டு வரேன். எங்க வீட்லயே இருக்கட்டும். இங்க என்ன பிரச்சனை வந்தாலும் சமாளிச்சுக்கறேன். நாளைக்கு நானே உங்க வீட்டுக்கு வரேன். அவளை தயாரா இருக்கச் சொல்லு. ஆமா உங்கம்மா அவளை அனுப்புவாங்க இல்ல?” 

”அவளை அனுப்பி வெக்க வேண்டியது என் பொறுப்பு அங்கிள்.நானும் யாருக்கும் பயப்படறதால்ல. நீங்க எத்தனை மணிக்கு வரிங்க அங்கிள்?” 

“பத்து மணிக்கு வரேன்.” 

சம்பத் போனை வைத்தார். வைத்த ஐந்து நிமிடத்தில் மறுபடியும் போன் அடித்தது. அவரே வந்து எடுத்து ஹலோ என்றார். எதிர்முனையில் வந்த செய்தியில் கார்ட்லெஸ் நழுவியது. உடல் தள்ளாட சோபாவில் சரிந்து அமர்ந்தார். 

டைனிங் டேபிளில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த சாரதா பதறிப் போய் கிட்டே வந்தாள். 

”என்னாச்சுங்க?” 

”ஆகாஷ்க்கு ஆக்ஸிடென்ட் ஆய்டுச்சுன்னு போன்ல தகவல் வந்திருக்கு.” 

“கடவுளே..! எங்கயாம் எப்டியாம். யார் சொன்னாங்க?”

“கிளம்பு.சங்கீதா எங்க?” 

அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர்கள் மூவரும் கிளம்பினார்கள். 

நல்ல காலம் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான் ஆகாஷ். 

அழுது கொண்டிருந்த அம்மாவை சங்கீதா பார்த்துக் கொள்ள சம்பத் ஆகாஷ் பற்றி விசாரிக்கச் சென்றார். 

“சாரி மிஸ்டர் சம்பத். அடி பலம்தான். விழுந்த வேகத்துல முதுகெலும்பு பாதிக்கப்பட்டிருக்கு. இப்போதைக்கு வேண்டிய முதலுதவிகளை செய்து ரத்தப்போக்கை நிறுத்தியிருக்கோம். இனிமேதான் என்னென்ன பாதிப்புன்னு பார்த்து மத்த விஷயங்களை டிஸைட் பண்ணணும். கவலைப்படாதீங்க. ஸ்பெஷலிஸ்டுகள் எல்லாரும் பார்த்துட்ருக்காங்க”. 

”உயிருக்கு…” 

”உயிருக்கு எந்த ஆபத்துமில்ல. மூளையும் இதயமும் நல்லாவே இருக்கு. பார்ப்போம்.” 

டாக்டர் எமர்ஜென்ஸிக்குள் நுழைய சம்பத் கவலையோடு திரும்பி வந்தார். 

“என்னப்பா சொல்றாங்க?” 

”உயிருக்கு ஆபத்தில்லன்றாங்க. மத்தபடி எதுவும் சரியா சொல்ல மாட்டேன்றாங்க. டாக்டர்ஸ் பார்த்துட்ருக்காங்களாம். பரிசோதனைக்கப்பறம் சொல்றேன்னுட்டு போய்விட்டார்”. 

”எல்லாம் உங்களாலதான். அந்த பொண்ணை வீட்டை விட்டு வரட்டாம இருந்திருந்தா எம் பிள்ளைக்கு இந்த நிலை வந்திருக்குமா?” 

”யார்ரி இவ… எதையும் எதையும் முடிச்சு போடற நீ? உம் பிள்ள என்ன இருபத்தி நாலு மணி நேரமும் வீட்டுக்குள்ளயா இருக்கான். இன்னிக்கு அவளைக் கொண்டு விடப் போனப்பொ இந்த விபத்து நடந்ததால பழி எனக்கா?” 

“அப்பா ப்ளீஸ்… நம்ம சண்டையை அப்பறம் வெச்சுக்கலாம். முதல்ல அண்ணா எப்டியிருக்கான்னு வேற யார்கிட்டயாவது கேட்டுட்டு வாங்க” சங்கீதா கண்ணீரோடு அவரை சமாதானப் படுத்தி அனுப்பினாள். அவர் போனதும் அம்மாவை எரிச்சலோடு பார்த்தாள். 

”எப்பொ என்ன பேசறதுன்னு உனக்கு விவஸ்தையே இல்லாம போச்சும்மா. அப்பாக்கு என்ன ஆசையா ஆகாஷ்க்கு ஆக்ஸிடென்ட் ஆகணும்னு? இல்ல அடிபடப் போறதுன்னு அவருக்கு ஜோசியம் தெரியுமா? அவனுக்கு ஆபத்து வரணும்னு விதியிருந்தா வீட்லயே இருந்தாலும் வரும். சும்மா எதையாவது பேசி மத்தவங்க மனசை புண்படுத்தறதை முதல்ல நிறுத்து!” 

மனசிலிருந்த துயரத்தால் சங்கீதா கடிந்து கொண்டதை பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை சாரதா. 

சங்கீதா அப்பா சென்ற திசையில் நடந்தாள். 

ஐ.சி.யூ.வில் கிழித்துப் போட்ட துணி மாதிரி கிடந்தான் ஆகாஷ்.நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. 

“முதுகுத்துண்டுல உடனடியா ஒரு ஆபரேஷன் பண்ணணும் நாளைக்கு காலேல ஒன்பது மணிக்கு ஆபரேஷன். உடனடியா இந்த பணத்தைக் கட்டிடுங்க.” 

டாக்டர் போய்விட்டார். 

“உம்பிள்ளை ஆபரேஷன்க்கு பணம் கட்டணும். பணம் நீ தருவயா இல்ல அந்த சுஜிதாகிட்ட போய் கேக்கணுமா?” 

”அப்பா ஒரு நிமிஷம். இன்ஸ்பெக்டர் நம்ம காரை கொண்டு வந்து விட்டுட்டு சாவியைக் கொடுத்துட்டு போனார். கார்ல நம்ம கஜானா சாவி இருக்கு. அவ அண்ணாகிட்ட கணக்கையும் சாவியையும் ஒப்படைச்சுட்டான்னு தோணுது”. 

“நல்ல காலம்தான். அந்த சாவியை எங்கிட்ட குடு சங்கீதா. இன்னும் கொஞ்ச நாளைக்கு அது எங்கிட்டயே இருக்கட்டும்” அப்பா சாவியை வாங்கிக் கொண்டு காரிலேறிச் சென்றவர் ஒரு மணி நேரத்தில் பணத்தோடு வந்தார். 

“யாராவது ஒருவர் இருந்தால் போதும்” என்று டாக்டர் சொல்ல சாரதாவை அங்கு விட்டு விட்டு சம்பத்தும் சங்கீதாவும் கிளம்பினார்கள். 

“எனக்கென்னமோ பயம்மார்க்குப்பா ஆகாஷ் நல்லாய்டுவான் இல்ல?” 

‘நல்லாகணும்.” 

“காரை விட்டிறங்கி எங்க போனான் அவன். எப்பவும் கேர்ஃபுல்லாதானே இருப்பான். எப்டி நடந்திருக்கும் இந்த விபத்து” 

”அவன் கண் விழிச்சு பேசினாதான் எல்லா விவரமும் தெரியும்”. 

“சுஜிதாக்கு சொல்ல வேணாமா?” 

“காலேல சொல்லிக்கலாம். அவ இப்பொ எங்க இருக்கான்னு யாருக்கு தெரியும்? காலேல காலேஜுக்கு போன் போட்டு தகவல் சொல்லு. அதுக்கு முன்னாடி அவளா எதுக்காவது பேசினா சொல்லு. ஆகாஷோட செல் உங்கிட்ட இருக்கட்டும். அநேகமா அவ பேசுவான்னு நினைக்கறேன். அப்பறம் இன்னொரு விஷயம் சங்கீதா. சரவணன் போன் பண்ணினான். அங்க ஏதோ பிரச்சனையாம். சரண்யாவை ஹாஸ்டல்ல சேர்த்துடப் போறேன்னு சொன்னான். நா, வேண்டாம்னு சொல்லிட்டேன். அவளை இங்கயே கூட்டிட்டு வந்துடறேன்னு அவனுக்கு வாக்கு கொடுத்துட்டேன்.’ 

“அம்மா… ” 

“இனிமே பயப்படப் போறதில்லம்மா, நாமள்ளாம் இருக்கும்போது அந்த பொண்ணு எதுக்காக அனாதையாட்டம் ஹாஸ்டல்ல தங்கணும். யாரோ ஒரு சுஜிதா இந்த வீட்ல வந்து தங்கி நம்மளையே அதிகாரம் பண்ணலாம். என் தங்கை பொண்ணு வரக்கூடாதா என்ன? அவ ஒருத்தி இங்க வந்து இருக்கறதுனால இந்த வீடு ஒண்ணும் முழுகிடாது. நா காலேல ஆஸ்பத்திரிக்கு போறேன். சரவணன் கிட்ட நா அங்க வரதா சொல்லியிருந்தேன்.நீ போய் ஆகாஷ்க்கு நடந்த விபத்தைச் சொல்லி அவசர உதவிக்கு சரண்யாவைக் கூட்டிட்டு போக வந்ததா சொல்லி அவளை அழச்சுக்கிட்டு வந்துடு. மிச்சத்தை அப்பறமா நா பாத்துக்கறேன்.” 

சங்கீதா சரி என்று தலையாட்டினாள். இரவு முழுக்க தூங்காமலே கரைந்தது. மறுநாள் விடியற்காலையிலேயே சம்பத் கிளம்பி விட்டார். சற்று நேரத்தில் சங்கீதாவும் சரவணனின் வீட்டுக்கு கிளம்பினாள். 

அந்த வலியிலும் ஆகாஷ் அப்பாவைப் பார்த்து சிரித்தான். “என்னடா ஆச்சு.’ 

”நேரம்ப்பா..” 

“ரொம்ப வலிக்குதா? ஜாக்ரதையா வர வேணாமா?” 

“அசையவே முடியல.” 

“எல்லாம் சரியாய்டும். பயப்பட ஒண்ணுமில்லன்னார் டாக்டர். சின்ன சர்ஜரிதான்.” 

“சுஜிக்கு சொன்னிங்களாப்பா?” 

“சங்கீதாட்ட சொல்லிட்டு வந்திருக்கேன் அவ சொல்லிடு வா.” 

“சார் கொஞ்சம் வெளில இருக்கீங்களா டாக்டர்ஸ் வராங்க” நர்ஸ் வந்து சொல்ல சம்பத்தும் சாரதாவும் வெளியில் வந்தார்கள். 

”எனக்கென்னமோ பயம்மார்க்கு. எம்பையன் நல்லாய்டுவான் இல்ல?” 

“கண்டிப்பா குணமாய்டுவான்” 

“அசையவே முடியலன்றானே” 

“இப்பொ எப்டி முடியும்? முதுகெலும்புல அடிபட்ருக்கில்ல? அதுக்குதானே ஆபரேஷன்! அப்பறம் எல்லாம் சரியாய்டும். நீ கவலைப்பட்டு உன் உடம்பை கெடுத்துக்காதே!” 

“சங்கீதா எங்கே?” 

”கொஞ்சம் நேரம் கழிச்சு வருவா. நீ ஏதாவது சாப்ட்டயா?”

”எனக்கு ஒண்ணும் வேண்டாம்” 

“காபியாவது குடி வா” 

”வேணாம்னா வேணாம் விடுங்க. அவன் ஆபரேஷன் நல்ல படியா முடியட்டும்.” 

சாரதா பிடிவாதம் பிடித்தாள். 

எட்டு மணிக்கு சங்கீதாவோடு, சரவணனும் சரண்யாவும் பதறியபடி வந்தார்கள். அவர்கள் வருவதைப் பார்த்ததும் சம்பத் அவசரமாகச் சென்று அவர்களை சாரதாவின் கண்ணில் படாமல் ஆகாஷிடம் அழைத்துச் சென்றார். டாக்டர் அவன் உடல் நிலையை பரிசோதித்து விட்டு நர்ஸிடம் ஏதோ சொல்லியபடி செல்ல சம்பத் ஆகாஷிடம் நெருங்கினார். சரண்யாவைப் பார்த்ததும் ஆகாஷ் வியந்தான். 

”உனக்கு யார் சொன்னாங்க? ஏம்ப்பா எல்லாரையும் பயமுறுத்தறீங்க? எனக்கு ஒண்ணுல்ல சரவணன். சின்ன அடிதான்.” 

“இருந்தாலும் மனசு கேக்கலை. அதான் வந்தோம்.” 

“சார் ப்ளீஸ் இங்க கூட்டம் போடாதீங்க.” நர்ஸ் அதட்ட, அனைவரும் வெளியில் வந்தனர். 

“டாக்டர் என்ன சொல்றார்?” 

“மாமி எங்க சங்கீதா?” 

“அங்க இருக்காங்க வா” சம்பத் சரவணனோடு பேசிக் கொண்டிருந்த நேரம் சங்கீதா சரண்யாவை அழைத்துக் கொண்டு அம்மாவிடம் சென்றாள். சரண்யாவைப் பார்த்ததும் சாரதாவின் முகம் மாறியது. இவள் எங்கே இங்க வந்தாள் என்ற எரிச்சலோடு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவளை அலட்சியப்படுத்தி விட்டு சங்கீதாவைப் பார்த்தாள். “சுஜிதாக்கு தகவல் சொல்லச் சொன்னா யார் யாரையோ கூட்டிட்டு வர! மொதல்ல போய் அவளைக் கூட்டிட்டுவா” 

சங்கீதா பரிதாபமாக சரண்யாவைப் பார்த்தாள். 

”நீ கிளம்பு சங்கீதா” சரண்யா நகர்ந்து மாமாவிடம் வந்தாள். ”நாம கிளம்பலாமா?” சரவணனைப் பார்த்து கேட்டாள். அவன் சம்பத்தைப் பார்த்தான். 

“எனக்கு ஒரு உதவி பண்ணுவயா சரண்?” 

“என்ன மாமா?” 

“மறுக்க மாட்டயே” 

“அய்யோ என்ன மாமா இப்டி கேக்கறீங்க. என்னன்னு சொல்லுங்க” 

”கொஞ்ச நாள் நீ என் வீட்ல இருக்கணும். அதான் உதவி.”

சரண்யா திகைப்போடு அவரைப் பார்த்தாள். “மாமி இதுக்கு ஒத்துப்பாங்களா?” 

“மாட்டா. ஆனா அவ என்ன முகத்தைக் காட்டினாலும் எனக்காகப் பொறுத்துக்கிட்டு அங்க இருக்கணும். கொஞ்ச நாளானா அவளே தானா மாறிடுவா” 

சரண்யா என்ன சொல்வதென்று புரியாமல் குழம்பினாள். ”என்ன சரண் யோசிக்கற?” 

“இல்ல மாமா. வரேன்.” 

”குட். இது வீட்டு சாவி. சரவணன் உன்னை விட்டுட்டு போவான்.வீட்டை சுத்தம் பண்ணி ஏதாவது சமைச்சு வை. ஆபரேஷன் முடிஞ்சதும் நாங்க வருவோம் சாப்ட.” 

சம்பத் வீட்டு சாவியைக் கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தார். 

ஒன்பது மணிக்கு ஆரம்பித்த ஆபரேஷன் மூன்று மணி நேரம் நடந்தது.டாக்டர்கள் வெளியில் வர சம்பத் வேகமாக அருகே சென்றார். அவரைத் தொடர்ந்து சாரதா ஓடி வந்தாள். 

“ஹவ் இஸ் ஹி டாக்டர்” 

“ஏகப்பட்ட சிக்கல் மிஸ்டர் சம்பத். இன்னும் ரெண்டு மூணு ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கும்.’ 

”என்ன சொல்றீங்க டாக்டர்?” 

‘உங்க பையன் எழுந்து நடக்கறது கடவுள்கிட்டதான் இருக்கு. நாங்க எங்களால மேக்ஸிமம் என்ன முடியுமோ செய்யப் பார்க்கறோம். கடவுளை நம்புங்க!” டாக்டர் தன் ஜூனியரோடு ஆகாஷின் உடல்நிலை பற்றி பேசியபடி செல்ல சம்பத் சிலையாய் நின்றார். சாரதா நெஞ்சைப் பிடித்தபடி கீழே விழுந்ததைக் கூட அவர் கவனிக்கவில்லை. 

அத்தியாயம்-33 

நீ மற்றவர்களுக்கு பரிசளிக்க விரும்பினால் – உன் பகைவனுக்கு மன்னிப்பைப் பரிசளி. உன் நண்பனுக்கு உள்ளத்தைப் பரிசனி, உன் குழந்தைக்கு நல்ல நடத்தையைப் பரிசளி. உன் தந்தைக்கு மரியாதையைப் பரிசளி. உன் தாய்க்கு உன் உயர்வைப் பரிசளி. உன் மனைவிக்கு சகிப்புத்தன்மையைப் பரிசளி. எல்லோருக்கும் தாரான குணத்தைப் பரிசளி. உனக்கு நீ தன்னம்பிக்கையைப் பரிசளித்துக் கொள். -பால்போர் 

சந்தோஷம், சங்கடம், இன்பம், துன்பம் எதுவும் மனிதனைக் கேட்டுக் கொண்டு வருவதில்லை. வரப்போவதை மனிதன் அறிவதுமில்லை. வந்தபின்தான் அவற்றோடு போராடி ஜெயிப்பதோ அல்லது தோற்பதோ நடக்கிறது.பயமிருப்பவனால் ஜெயிக்க முடிவதில்லை. பயத்தை வெல்கிறவன் தோல்வியை வெல்லுவான். அச்சம் தவிர் என்று எவ்வளவுதான் முழங்கினாலும் மனித மனம் பயத்தை உதறுவதில்லை. பயத்திற்கு காரணம் பற்று, பாசம், ஆசை பிடிப்பு. தனக்கு விருப்பமான ஒன்றை இழக்க மனித மனம் ஒருபோதும் விரும்புவதுமில்லை சம்மதிப்பது மில்லை. தேகம் வெறும் சட்டை என்று தெரிந்தாலும் மரணத்தை எவரும் வரவேற்பதில்லை. போராட்டங்களில் மிகப் பெரியது காலனோடு அவன் நடத்தும் போராட்டம் தான். ஆகாஷ் அத்தகைய போராட்டத்தில்தான் ஈடுபட்டிருந்தான்.அவன் மட்டுமல்ல சாரதாவும் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருந்தாள் நெஞ்சுவலியோடு. பிள்ளைப் பாசமும், பற்றும், பற்றினால் ஏற்பட்ட பயமும் அவளை சாய்த்திருந்தது. கீழே விழுந்தவளை அதே மருத்துவ மனையில் அவசரமாக பரிசோதித்ததில் அவள் இதயத்தின் பலவீனம் புலப்பட்டது. தேகத்திற்குள் இருந்த சிற்சில குறைகள் எல்லாம் பரிசோதனையில் ஒவ்வொன்றாய்த் தெரிய வர சம்பத் ஆடிப் போனார். ஒரு பக்கம் மகன், இன்னொரு பக்கம் மனைவி என்ற நிலையில் என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறினார். 

“சாரி மிஸ்டர் சம்பத். உங்க மனைவிக்கும் உடனடியா பைபாஸ் பண்ணிடறது நல்லது. இவ்ளோ அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லையா?”

“எதுவும் இருந்தா மாதிரி தெரியலையே டாக்டர்.” 

”ஆனா இருக்கே. எவ்ளோ சீக்கிரம் பண்றீங்களோ அவ்வளவு நல்லது.” 

டாக்டர் செல்ல சம்பத் வேதனையோடு அமர்ந்தார். யாரை கவனிக்க? யாருக்காக வருத்தப்பட? ஆகாஷுக்கே இதுவரை ரெண்டு லட்சம் கட்டியாகி விட்டது. இன்னமும் கூட அவனுக்கே பணம் தேவைப்படும் என்ற நிலையில் திடீரென்று சாரதாவின் ஆபரேஷனுக்கு இரண்டரை லட்சம் கட்ட வேண்டும் என்பது மலைப்பாக இருந்தது. பணம் பலவிதத்தில் முடங்கியிருந்தது. கைவசம் அவ்வளவு தொகை ரெடிமேடாக இல்லை. ஒரு நிமிடத்தில் பத்து லட்சம் கூட அவரால் புரட்டி விட முடியும். இதுவரை யாரிடமும் எதற்கும் கை நீட்டிப் பழக்கமில்லாத நிலையில் கேட்பதற்கு மனம் ஒரு வினாடி தயங்கியது. ஆனாலும் வேறு வழியில்லை. எப்படியாவது பணத்திற்கு ஏற்பாடு செய்தாக வேண்டும். சம்பத் யோசித்தார். உடனடியாக யாரிடம் கேட்டால் கிடைக்குமென்று. 

“என்னப்பா யோசனை?” 

“தற்சமயம் நம்ம கைல கேஷ் இல்லம்மா. இருந்த அஞ்சு லட்சத்துல ஆகாஷ்க்கே ரெண்டு லட்சம் கட்டியாச்சு. இன்னும் ரெண்டு மூணு லட்சம் கூட அவனுக்கு தேவைப் படும். அம்மாவோட ஆபரேஷன்க்கு யார்கிட்டயாவது அவசரத்துக்கு வாங்கிட்டு அப்பறம் திருப்பிக் கொடுக்கணும். அதான் யார்கிட்ட கேக்கலாம்னு யோசிக்கறேன்.” 

“அம்மாவோட ஆபரேஷன் செலவு எதிர்பாராதது இல்லப்பா” 

”அப்படி சொல்லாதே. அவளுக்குள்ள ஏற்கனவே பிரச்சனை இருக்கு. யாருக்கும் தெரியல. இப்ப தெரிஞ்சதும். நல்லதுதான். என்ன எல்லா செலவும் ஒட்டு மொத்தமா வந்து அழுத்தறதுனால திணறலா இருக்கு. பொருளா அசையா சொத்துக்களா எவ்ளவோ இருக்கு. ஆனா அவசரத்துக்கு உதவாது அதை நம்பி தைரியமா கடன் வாங்கலாம். அவ்ளோதான்.” 

”நீ இருந்து இங்க கவனிச்சுக்க. நா ஒரு மணி நேரத்துல வந்துடறேன்.” 

சம்பத் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி நேராக வீட்டுக்கு வந்தார். உடம்பு கசகசவென்றிருந்தது. இப்படியே போய் யாரையும் பார்க்க முடியாது. குளித்து உடைமாற்றிக் கொண்டு செல்லும் எண்ணத்தோடு வீட்டுக்கு வந்தவரைக் கண்டதும் சரண்யா ஓடி வந்தாள். 

“எப்டி மாமா இருக்கார்?” 

”ஒண்ணும் புரியல சரண். அவனுக்கு இன்னும் ரெண்டு மூணு ஆபரேஷன் செய்யணுங்கறார் டாக்டர். அப்டியும் எழுந்து நடந்தா அது கடவுளின் அருள்ங்கறார். அதைக் கேட்டதும் உங்க மாமி நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு கீழே விழுந்தா. சாதாரண அதிர்ச்சி மயக்கம்னு நினைச்சா டாக்டர் உடனடியா பைபாஸ் பண்ணணும் ஹார்ட்ல அடைப்பு இருக்குன்றார்.” 

”கடவுளே..! என்ன மாமா சோதனை இது?” சரண்யா ஸ்தம்பித்துப் போனாள். 

“சோதனைதாம்மா. இல்லாட்டா எல்லா கஷ்டமும் ஒண்ணா வருமா? கைல உடனடியா அவ்ளோ பணம் வேற இல்ல. இருந்ததெல்லாம் ஆகாஷ்க்கு கட்டியாச்சு. பத்து நாள் முந்திதான் தங்கம் விலை குறைஞ்சுதேன்னு சாரதா போய். சங்கீதா கல்யாணத்துக்கு வேணுங்கற நகையெல்லாம் வாங்கி வெச்சா. ஸோ.. இப்போதைக்கு பணமா கைல இல்ல.” 

“என்ன செய்யப் போறீங்க மாமா?” 

“அதுக்காக விட்ர முடியுமா? அவசரத்துக்கு அம்பது லட்சம் கூட தரதுக்கு ஆள் இருக்காங்க. ஜஸ்ட் ஒரு மூணு லட்சம் கிடைக்காதா என்ன? நா குளிச்சுட்டு கொஞ்சம் வெளில போய்ட்டு வரேன். சூடா ஒரு காபி ரெடி பண்ணி வை.”

அவர் குளிக்கப் போனார். பத்தே நிமிடத்தில் குளித்து உடை மாற்றி கீழே வந்தார். 

”பணம் எப்பொ கட்டணும்?” 

“நாளைக்கு காலேல கட்டினா போதும். இப்பவே சொன்னாதான் கிடைக்கும். ”சம்பத் காபியை உறிஞ்சினார். 

சரண்யா உள்ளே சென்றவள் ஐந்து நிமிடம் கழித்து அவரிடம் வந்து எதையோ நீட்டினாள். 

“என்னம்மா இது?” 

“செக்! மூணு லட்சத்துக்கான செக்.’ 

“யார் கொடுத்தா?” 

”அப்பா கொடுத்தனுப்பியிருக்கார்னு வெச்சுக்கோங்களேன்.’ 

சம்பத் அவளை வியப்போடு பார்த்தார். 

”அவன் சாவுக்கு கிடைச்ச நஷ்டஈடா சரண்?” 

“ம் ரெண்டு லட்சம் நஷ்டஈடு. ஒரு லட்சம் அவருக்காக கலெக்ஷன் பண்ணி நல்லவங்க சிலர் கொடுத்தது. மொத்தம் மூணு லட்சம் ரெண்டு மாசம் முந்திதான் கிடைச்சுது. சத்யாக்கு கூட தெரியாது. நியாயமா அவளுக்கு பாதி சேரணும். ஆனா சரவணன் வேண்டவே வேண்டாம்னு சொல்லி என் வாயைக் கட்டிப் போட்டுட்டார். இந்த பணம் உன் கல்யாணத்துக்குதான் உபயோகப் படணும்னு கண்டிப்பா சொல்லி என் பேர்லயே போட்டுட்டார். இப்டி ஒரு அவசரத்துக்கு உபயோகப்படாத பணம் வேறெதுக்கு? யார்கிட்டயும் நீங்க கைநீட்டவே கூடாது. காலேல இந்த பணத்தை வாங்கி கட்டிடுங்க. யார்க்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம்.” 

சம்பத் கண்கலங்க அவளைப் பார்த்தார். “கடனா கொடுத்தா வாங்கிக்கறேன். இல்லாட்டா வேண்டாம்” 

“அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம். முதல்ல பணத்தை கட்டுங்க. அவங்க ரெண்டு பேரும் நல்லபடியா வீடு திரும்பட்டும். உங்க பணம் ஓடியா போய்டப் போறது?” 

சரண்யா காலி டம்ளரை வாங்கிக் கொண்டு போனாள். சம்பத் சங்கீதாவின் கைவசமிருந்த ஆகாஷின் செல் நம்பரை தொடர்பு கொண்டு சங்கீதாவோடு பேசினார். 

”அம்மா எப்டி இருக்கா?” 

“ரொம்ப அழறாப்பா. என்னால வேற தண்டச் செலவான்னு புலம்பறா. டாக்டர் திட்றார். பணம் கிடைச்சுதாப்பா?” 

“கிடைச்சுதும்மா.” 

”யார்ப்பா கொடுத்து?” 

சம்பத் சரண்யாவைப் பார்க்க, அவள் யாருக்கும் தெரிய வேண்டாமே என்று கைகூப்பி கெஞ்சினாள். 

“கஷ்டத்தைக் குடுக்கற கடவுள், யாராவது நல்லவங்க மூலமா ஏதாவது ஒரு கதவை திறந்து விடுவான். அப்டி ஒரு நல்ல ஆத்மா தான் அவசரத்துக்கு உதவி செய்தது. டாக்டர் வேற ஏதாவது சொன்னாரா? ஆகாஷ் எப்டியிருக்கான்.” 

”அண்ணா ரொம்ப அப்ஸெட் ஆகியிருக்கான். இன்னும் ரெண்டு மூணு ஆபரேஷன் பண்ணியாகணும்னு டாக்டர் சொன்னதுல மிரண்டு போயிருக்கான். நீங்க சீக்கிரம் வாங்களேன்”. 

“சுஜிதாவைப் பிடிக்க முடிஞ்சுதா?” 

“காலேஜுக்குப் போன் பண்ணி தகவல் சொன்னேன். இன்னும் வரல. தகவல் கிடைச்சுதா கிடைக்கலையான்னு தெரியல. அவங்களைப் பத்தி வேற கேட்டுக்கிட்டே இருக்கான்.அப்பா அவங்களுக்கு நூறு ஆயுஸ். இப்பதான் ஆட்டோல வந்து இறங்கறாங்க. நா அப்பறம் பேசறேன்.”

”சரி இன்னும் அரை மணில நா வந்துடறேன்” 

சம்பத் சரண்யாவின் வற்புறுத்தலுக்காக ஒரு பிடி தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டு விட்டு கிளம்பினார். 

அவர் ஆஸ்பத்திரிக்கு வந்த போது ஆகாஷின் அருகில் பேயறைந்தாற்போல் நின்றிருந்தாள் சுஜிதா. 

“பயப்பட ஒண்ணுமில்லன்னார் டாக்டர். இன்னும் ரெண்டு மூணு மாசத்துல ஹி வில் பி ஆல்ரைட்.” சம்பத் அவளுக்கு தைரியம் சொல்ல, சுஜிதா அதை சட்டை செய்யாதது போல் அவனுக்கு அருகில் அமர்ந்தாள். 

”நீ வந்ததே எனக்கு அசுர பலம் சுஜி. ப்ளீஸ் நீ இங்கயே இரேன், ” 

”ஏண்டா அவள் காலேஜு போக வேண்டாமா? நாங்கள்ளாம் தான் இருக்கோமே. அவ முடிஞ்சப்பொ எல்லாம் வருவா. உங்க ஆண்ட்டிய பாத்தயா சுஜிதா?” 

“இல்ல…” 

”வா. உன்னைப் பார்த்தா சந்தோஷப்படுவா” சம்பத் அவளை அழைத்துக் கொண்டு சாரதாவிடம் வந்தார். சுஜிதாவைப் பார்த்ததும் சாரதாவின் முகம் மலர்ந்தது. அவள் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். ”நீ வீட்டை விட்டுப் போன ஒரே நாள்ள என்னல்லாம் ஆய்டுச்சு பாத்தயா சுஜி. வீட்டுக்கு மருமகளாகப் போறவ வீட்டை விட்டுப் போனா அந்த வீட்டுக்கு நல்லதில்லன்னு நிரூபணாமாய்டுச்சு. நீ மறுபடியும் வந்துடு சுஜி. இனிமே நீதான் எல்லாம். எல்லா பொறுப்பையும் நீதான் ஏத்துக்கணும். எங்க ரெண்டு பேரையும் உன்னாலதான் நல்லபடியா கவனிச்சுக்க முடியும். அவனை எழுந்து நடக்க வெக்க வேண்டியது இனி உன் பொறுப்பு.” 

சாரதா பேசிக் கொண்டே போக சுஜிதா எவ்வித பதிலும் சொல்லாது சலனமின்றி நின்றிருந்தாள். 

“என்ன சுஜி வந்துடுவ இல்ல?” 

”காலேஜில இப்பொ ரொம்ப டைட்டா இருக்கு ஆண்ட்டி. புராஜக்ட் ஒர்க் மென்னியப் பிடிக்குது. முடிஞ்சப்ப எல்லாம் நா வந்து பாத்துக்கறேன். கவலைப் படாதீங்க” பட்டும் படாமலும் சொல்லிவிட்டு வெளியில் வந்தாள். 

“டாக்டர் என்ன சொல்றார்?” சம்பத்திடம் கேட்டாள். சம்பத் கூறினார்.”ஓ.கே.நா போய்ட்டு அப்பறம் வரேன்.” சுஜிதா கிளம்பி விட்டாள். ஆகாஷுக்கு இப்படி ஒரு விபத்து ஏற்படும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. மறுபடியும் அந்த வீட்டுக்குப் போக ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் போக முடியுமா தன்னால்? யோசித்தாள் அவள். இதுவரை அங்கே இருந்ததில் எந்த பிரச்சனையும் இல்லை. வேளா வேளைக்கு சாப்பாடு, சௌகர்யமான இருப்பிடம், சாரதாவின் தனி உபசரிப்பு, அவள் கொடுத்த உரிமைகள் என்று ஒரு ராணி மாதிரி இருந்த நிலை வேறு. அதே நிலை இனி இருக்குமா என்பது சந்தேகம்தான். முதுகில் அடிபட்டு நடமாட இயலாத நிலையில் ஆகாஷ், பைபாஸ் அறுவை சிகிச்சை பெற்று மிக மிக கவனமாக பார்த்துக் கொள்ளப்பட வேண்டிய சாரதா என்று இரு நோயாளிகளையும் மாறி மாறிப் பார்த்துக் கொள்ள தன்னால் இயலுமா? கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்து ராஜ வாழ்வு வாழ்ந்தவள் அவள். யாருக்கும் சிச்ருஷைகள் செய்து பழக்கமில்லை. செருப்பெடுத்துப் போடக் கூட அங்கே ஆட்கள் உண்டு. 

ஆகாஷை பிடித்துவிட்ட காரணத்தால் தன் வீட்டை விட சௌகர்யங்கள் குறைந்த அந்த வீட்டில் அவள் இருந்தாள். அதற்காக அந்த வீட்டில் நர்ஸ் உத்யோகமெல்லாம் பார்க்க முடியுமா என்ன? காதலித்து விட்ட காரணத்திற்காக கஷ்டப்பட அவள் தயாராக இல்லை.பொறுப்புகளை சுமக்கிறேன் பேர்வழி என்று வேலைகளில் அழுந்திப் போய் விடக்கூடாது. ஏதாவது காரணம் சொல்லி தள்ளியே இருப்பதுதான் நல்லது. வீட்டை விட்டு வந்ததும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. இதெல்லாம் நடந்த பிறகு கிளம்பினால் வேறு மாதிரி பேச்சுக்கிடமாகியிருக்கும். அந்த வரைக்கும் நிம்மதி. நோயாளிகளை கவனிக்கும் அறுவையான வேலைகளிலிருந்து தப்பித்தோம். அவ்வப் போது அங்கு போனால் போதும். ஆகாஷ் உடம்பு சரியான பிறகு மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம். அதுவரை, சிரமப்படவும் கூடாது. அதேநேரம் தொடர்பிலும் இருக்க வேண்டும். எவ்வித கஷ்டங்களும் படாது காதலில் ஜெயிக்க வேண்டும். இப்படி ஒரு முடிவுக்கு வந்தாள் அவள். சங்கீதாவுக்கு தினசரி போன் பண்ணி இருவரைப் பற்றியும் அக்கறையோடு விசாரித்தாள். 

தன்னால் வந்து இருக்க இயலாத நிலையை வருத்தத்தோடு வலியுறுத்தினாள். ஆகாஷும் சாரதாவும் சீக்கிரமே உடல் நலம் தேற வேண்டி வருவதாய் உருகினாள். எப்பொழுதாவது ஒரு சமயம் திடீரென்று வந்து அரை மணி நேரம் அவனோடு இருந்து தன் அக்கறையை அவனுக்கு வெளிப்படுத்தினாள். பத்தாவது நாள் சாரதாவை டிஸ்சார்ஜ் செய்தார்கள். இந்த பத்து நாளில் ஆகாஷுக்கு இரண்டாவது அறுவை சிகிச்சையும் முடிந்தது. வலி, வேதனை, அசைய இயலாமை எல்லாமாய் சேர்ந்து உடலாலும் மனதாலும் சோர்ந்து போயிருந்தான் அவன். தான் நல்லபடியாய் எழுந்து நடப்போமா என்ற சந்தேகம் அவனுக்கே ஏற்பட்டது. இன்னும் எவ்வளவு நாள் இந்த ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும் என்ற அலுப்பேற்பட்டது. வெளி உலகைப் பார்க்கத் தவித்தது. துள்ளி எழுந்து ஓடி,பழையபடி ஆகி விட மாட்டோமா என்ற ஏக்கம் அதிகரித்தது. 

ஒரே நாளில் தன் வாழ்க்கை இப்படி திசைமாறி கட்டிலோடு கட்டிப் போடப்பட்டு விட்டதே என்று எண்ணி புழுங்கினான். கஷ்ட காலத்தில் கிட்டே காதலி இருந்தாலாவது மனசுக்கு இதமாக இருக்கும். பலம் சேர்க்கும். ஆனால் சுஜிதாவோ எப்பொழுதாவது வருகிறாள். போகிறாள். அவள் அன்போடு பணிவிடை செய்யமாட்டாளா என்றிருந்தது. அப்பாவும் சங்கீதாவும் நன்றாகத்தான் கவனித்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் மனசு சமாதானமடைய மறுத்தது. சுஜியின் அருகாமைக்கு ஏங்கியது. 

“இன்னிக்கு அம்மாவை டிஸ்சார்ஜ் பண்றாங்க” சங்கீதா அவனுக்கு ஹார்லிக்ஸ் கொடுத்தபடி சொன்னாள். 

”நீ இங்க இருக்க. அவங்களை யார் கவனிச்சுப்பாங்க? டோட்டலா நம்ம நேரமே சரியில்ல பார்த்தயா?” கவலையோடு சொன்னான் அவள். ”பணமிருந்துட்டா மட்டும் போறாது சங்கீதா மனுஷங்க வேணும். ஒரு கஷ்டம்னா நாலு பேர் ஓடி வரணும். ஆனா அம்மா யாரையும் கிட்டே சேர்க்காததன் பலனை இப்பொ நாம் அனுபவிக்கறோம் பார். எல்லார்க்கும் கஷ்டம். அவளை கவனிக்கவே இப்பொ ஆள் இல்ல!”

“அப்படின்னு யார் சொன்னா?” 

“யார் இருக்காங்க சொல்லு!” 

“வீட்ல சரண்யா இருக்கா தெரியுமோ?” 

ஆகாஷ் விழி விரித்தான். “அவ எப்பொ…? அம்மாக்கு தெரியுமா?” 

“அன்னிக்கே அவ வந்தாச்சு. வீட்டை அவதான் பாத்துக்கறா. அம்மாக்கு இன்னும் தெரியாது. தெரிஞ்சாலும் இப்ப இருக்கற நிலைல அவளை வெளிய போகச் சொல்ல முடியாது. வேலை செய்ய ஆள் வேணுமே!” 

”ச்சே ! தப்பு சங்கீதா. பாவம் அந்த பொண்ணு. அவளுக்கு நாம என்ன செஞ்சோம்னு அவ வந்து நம்ம வீட்ல கஷ்டப்படணும்” 

“அவ கஷ்டமாவே நினைக்கலையே!” 

“இருந்தாலும்…” 

“என்ன பண்ணச் சொல்ற.சுஜிதாவை கூப்ட்டு பாத்துட்டோம். அவங்களால வர முடியல.” 

”நீங்கள்ளாம்தானே அவளை வெளில அனுப்பினீங்க. இப்பொ எப்டி வருவா? போன்றதுக்கும் வான்றதுக்கும் அவ என்ன பொம்மையா?” ஆகாஷ் அந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் பேச, சங்கீதா அட அசடே என்பது போல் அவனைப் பார்த்தாள். சுஜிதாவின் நடவடிக்கைகளிலிருந்து அவளது எண்ண ஓட்டம் நன்றாகவே புரிந்தது. சிரம்ப்படவோ, சிச்ருஷை செய்யவோ அவள் விரும்பவில்லை என்பதும் புரிந்தது. ஆகாஷுக்கு இன்னும் இது புரியவில்லை. காதல் மேகம் அவன் அறிவை மறைத்திருக்கிறது! 

அத்தியாயம்-34 

நல்ல இதயமுள்ள பலர் அறிவற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் யாருக்கும் தீமையில்லை. அவர்கள் வாழலாம். அதிக அறிவுள்ள அநேகர் தீயவர்களாக இருக்கிறார்கள் அவர்களால் பிறருக்கு ஆபத்துண்டு. அவர்கள் வாழக்கூடாது. நல்ல இதயமும் நல்ல அறிவும் கொண்டவர்கள் மிகச் சிலரே. அவர்கள் வாழ்வதினால்தான் உலகம் வாழ்கிறது. -அர்த்தசாஸ்திரம் 

“போலாமா?” சம்பத் உள்ளே வந்து கேட்டார். இரண்டு ஹெல்ப்பர்கள் வந்து சாரதாவை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து வெளியில் அழைத்து வந்தார்கள். சம்பத் அவள் பின்னால் நடந்தார். 

“ஆகாஷைப் பாக்கணுமே எனக்கு?” 

“டாக்டர் அலவ் பண்ண மாட்டார். அப்பறம் பார்த்துக் கலாம் கிளம்பு” 

”பத்து நாளாச்சுங்க என் பையனைப் பார்த்து!” 

சம்பத் பதில் சொல்லவில்லை. முன்பை விட ஆகாஷ் இளைத்து கறுத்து வாடிப் போயிருந்தான். இந்நிலையில் அவனைப் பார்த்தால் நிச்சயம் அழுவாள். அனாவசிய பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்றுதான் டாக்டர் பேர்சொல்லி இவரே மறுத்து விட்டார். 

“வீட்டுக்கு போனா என்னை யார் கவனிச்சுப்பாங்க? நர்ஸ் யாராவது வருவாங்களான்னு கேக்றது தானே?” 

”இதோ பார் சாரதா. உன்னை கவனிக்க ஆள் வேணும்னு எங்களுக்குத் தெரியாதா? வேண்டாத கவலையெல்லாம் நீ படாதே. உன்னை கவனிக்க ஆள் இருக்கு வீட்ல. போதுமா?” 

”யாரு?” 

“அதை அங்க வந்து பார்த்துக்க” 

சாரதா அது யார் என்ற யோசனையோடு வீடு வந்தாள். 

கார் நின்ற சத்தம் கேட்டதுமே உள்ளிருந்து ஓடி வந்த சரண்யாவைப் பார்த்ததும் அதிர்ச்சியும் திகைப்பும்  அடைந்தவள் முகம் கடுகடுப்பாயிற்று. 

“வாங்க மாமி” சரண்யா அவள் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அருகே வர சாரதா நகர்ந்து கொண்டாள். 

“என் வீட்டுக்கு வந்து என்னையே வரவேற்கறயா? நேரம்தான்! இவ எப்பொ இங்க வந்தா? எதுக்காக வந்தா? எனக்கு தெரியாம இன்னும் என்னல்லாம் நடக்குது? மொதல்ல இவளை கிளம்பச் சொல்லுங்க” 

“நீ முதல்ல உள்ள வா. இப்டி டென்ஷன் ஆகக் கூடாதுன்னு தெரியாது உனக்கு?” சம்பத் அவளை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து வந்தார். ஏஸியை ஓடவிட்டு அவளை படுக்குச் சொல்லிவிட்டு அருகில் அமர்ந்தார். 

“இதோ பார் சாரதா. நா சொல்றதைக் கவனமா கேளு. காசை விட்டெறிஞ்சா ஆயிரம் பேர் கால் பிடிக்க வரலாம். ஆனா கரிசனத்தோட பிடிச்சு விடமாட்டாங்க. பத்து நாளா இந்த வீட்டை இவதான் பாத்துக்கறா. உனக்கு பிடிக்கலன்றதுக்காக ஒரு நல்ல பொண்ணை கெட்டவ, சரியில்லன்னு சொல்லிட முடியுமா? பத்து நாள் அவளை கவனிச்சு பார். உனக்கு திருப்தியில்லன்னா வேற யாரையாவது தேடிப் பிடிக்கறேன். ஆனா அப்பவும் சரண்யா இந்த வீட்லதான் இருப்பா. அதையும் சொல்லிட்டேன்.” 

சாரதா முகம் சுருங்க அவரைப் பார்த்தாள். “அவ இங்கதான் இருப்பான்னா? என்ன அர்த்தம் அதுக்கு? இருக்கக் கூடாதுன்னு நா சொன்னா?” 

“இருப்பா!” சம்பத் அழுத்தந்திருத்தமாக சொல்லிவிட்டு எழுந்தார். “உனக்கு அவ பணிவிடை செய்யணுமா வேண்டாமான்னு மட்டும் தீர்மானிச்சு சொல்லு. வேண்டாம்னா காசுக்கு ஒரு ஆள் போடறேன். இவ உன் எதிர்க்கயே வரமாட்டா.”

”உங்க நோக்கம் என்னன்னு எனக்கு புரியல. அவ இப்பொ இங்க இருக்க வேண்டிய அவசியம் என்ன? இத்தனை நாள் அவ எங்க இருந்தாளோ அங்கயே இருக்க வேண்டியதுதானே?” 

“நம்ம வீட்டு நிலையை உத்தேசிச்சு நாந்தான் அவளை இங்க கூட்டிட்டு வந்தேன் சாரதா. இப்பொ நானே எப்டி வேண்டாம் போய்டுன்னு சொல்ல முடியும்? என் கௌரவத்தை பார்க்க வேண்டாமா? தயவு செஞ்சு இந்த விஷயத்தை பெரிசு பண்ணாதே. அந்த பொண்ணு ஒருத்தி இருக்கறதால் நாம் ஒண்ணும் குறைஞ்சுட மாட்டோம்” 

சம்பத் வெளியில் வந்தார். தேகத்தில் பழைய தென்பு இல்லாததாலும், படுக்கையில் இருக்க வேண்டிய நிலையிலும் சாரதாவால் அவரை எதிர்க்க முடியவில்லை. இவள் இருக்கும்போது காசுக்கு வேறு ஆள் போடுவானேன். 

இவளே செய்யட்டுமே என்று தோன்றியது. 

ஒரு வேலைக்காரியைப் போல் அவளை நடத்தினால் போதும் என்று முடிவு செய்தாள். அதற்குப் பிறகும் அவள் இங்கு இருப்பாளா என்ன? தானாக ஓடிவிட மாட்டாள்! 

சம்பத் அடுக்களைக்கு வந்தார். டாக்டர் கொடுத்திருந்த டயட் லிஸ்ட் படி சாரதாவுக்கு சமைத்துக் கொண்டிருந்தாள் சரண்யா. 

”மாமியோட கோபம் தீர்ந்துதா?” 

“அவ கிடக்கா நீ எதுவும் பேசிக்க வேண்டாம். அவ ஏதாவது வெடுக்கு வெடுக்குனு சொன்னா கூட எனக்காக நீ சகிச்சுக்கணும். அன்புன்னா என்னன்னு அவளுக்கு புரிய வெக்கணும்.ஆகாஷை உனக்கு கட்டி வெக்க முடியுமோ இல்லையோ என்னால சொல்ல முடியல. அட்லீஸ்ட் சாரதா உன்னை தன் பெண்ணா நினைக்கற அளவுக்கு மாறணும் சரண். நீ அவளை மாத்தணும். அதான் எனக்கு வேணும்.” 

சரண்யா அவருக்கு நம்பிக்கையளிப்பது போல் புன்னகைத்தாள். 

”சரி நீ போய் அவளுக்கு டிபன் கொடு.நா ஒரு குளியல் போட்டுட்டு கொஞ்ச நேரம் படுக்கறேன். கண் எல்லாம் எரியுது.” 

சம்பத் மாடிக்கு சென்றார். 

சரண்யா சற்று நேரத்தில் சாரதாவுக்கு டிபன் கொண்டு போனாள். 

ஒரு நேப்கின் எடுத்து அவள் மார்பின் மேல் போட்டு தானே டிபனை ஊட்டிவிடப் போனாள். “தேவையில்ல நானே சாப்ட்டுக்கறேன்” ‘சாரதா முகத்தை திருப்பிக் கொண்டாள். 

“உங்களால் முடியாது மாமி. தயவு செய்து அடம் பிடிக்காம சாப்டுங்க.” 

“வேணாம்னா வேணாம் விடு.” 

”என்னை ஏன் உறவுன்னு நினைக்கறீங்க. வேலைக்கு வந்திருக்கறதா நினைச்சுக்கிட்டு சாப்டுங்க. டாக்டர் உங்களை ஸ்ட்ரெயின் பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்.” 

சரண்யா வற்புறுத்தி தானே ஊட்டிவிட வேறு வழியின்றி வாய் திறந்தாள். பூ மாதிரி இரண்டு இட்லிகள் உள்ளே சென்றது. 

”போறும்” 

சரண்யா வாய் துடைத்து குடிக்க நீர் கொடுத்துவிட்டு காலிபிளேட்டோடு வெளியில் வந்தாள். 

ஆரம்பத்தில் எரிச்சல் பட்டாலும் போகப் போக அவளுடைய கவனிப்பிலும் உபசரணையிலும் குளிர்ந்து போகாவிட்டாலும் மௌனமாய் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். உடம்பு சரியானதும் இவளை வெளியே அனுப்பி விட்டுதான் மறுவேலை என்ற எண்ணம் உள்ளுக்குள் இருந்தது. 

அடுத்த ஒரு வாரத்தில் ஆகாஷுக்கு மூன்றாவது அறுவை சிகிச்சையும் நடந்தது. எனினும் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டாற் போல் தெரியவில்லை. ”இதுக்கு மேல செய்ய எதுவும் இல்ல மிஸ்டர் சம்பத். உங்க பையனோட நம்பிக்கையும் உங்க எல்லாரோட அனுசரணையும் இருந்தா நாளாக நாளாக அவர் எழுந்து நடக்க ஆரம்பிக்கலாம். பிஸியோதெரபி ரொம்ப முக்கியம். அவருடைய தன்னம்பிக்கைதான் அவரை தூக்கி நிறுத்தணும். இன்னும் ஒரு வாரத்துல நீங்க அவரை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம். மெதுவாதான் பிக்அப் ஆகும். நம்பிக்கை முக்கியம்.” 

டாக்டர் கைகுலுக்கி விட்டுச் செல்ல சம்பத் செயலிழந்து நின்றார். ‘ஆகாஷ் எழுந்து நடப்பானா?’ மனசு பயம் கொண்டது. ‘என் ஒரே பிள்ளையை இப்படி படுக்கப் போட்டு விட்டாயே தெய்வமே. நியாயமா இது?’ 

சங்கீதா சோர்ந்து நின்றிருந்த வரை ஆறுதலாகத் தொட்டாள். “நீங்களே இப்டி ஃபங்க் ஆய்ட்டா எப்டிப்பா? நாம யாருக்கும் எந்த கெடுதலும் செய்யல. நிச்சயம் ஆகாஷ் சீக்கிரமே பழையபடி ஆய்டுவான் பாருங்க” 

பெண்ணின் தைரியத்தில் சம்பத் பெருமூச்சு விட்டார். இதுவரையே ஏகப்பட்ட லட்சங்கள் கரைந்திருந்தது. ஒரே நேரத்தில் வீட்டில் இருவருக்கும் பெரிய அளவுக்கு அறுவை சிகிச்சை என்றால் சும்மாவா? பணக்காரர்களாயிருந்தாலும் மூச்சுத்திணறும். சங்கீதாவின் கல்யாணச் செலவு, பைபாஸ் ஆபரேஷன், ஆகாஷின் ஆபரேஷன்கள், தவிர இருவரது உடல்நிலை என்று ஒரே நேரத்தில் பலவித பாரங்கள் அழுத்தியதில் சம்பத் சோர்ந்து போனார். 

“பிரவீண்க்கு சொல்லலையப்பா?” சங்கீதா கேட்டாள். “இல்லம்மா மாத்தி மாத்தி டென்ஷன்” 

”தப்பா நினைச்சுக்கப் போறாங்கப்பா” சம்பத் அவளை புன்னகையோடு பார்த்தார். 

“உனக்கு பிரவீணைப் பார்க்கணும்! புரியுதும்மா. சொல்லிடறேன் சரியா?” 

“ச்சீ போங்கப்பா.” சங்கீதா அழகாக வெட்கப்பட்டாள். ”பாவம்மா நீ. ஒரு மாசமா ஒரு என்டர்டெய்ன்மென்ட்டும் இல்லாம ஆஸ்பத்திரியே கதின்னு இருக்க. உன் படிப்பு காலேஜ் எதையும் கவனிக்கல. பரிதாபமா இருக்கு உன்னைப் பார்த்தா.” 

“இங்க எல்லாரும் ரொம்ப ஃபிரண்டாய்ட்டாங்க. டாக்டர்ஸ்லேர்ந்து பேஷண்ட்ஸ் வரை டைம் போனதே தெரியல.” 

“பிரவீணோட செல் நம்பர் ஞாபகமிருக்கா உனக்கு?” 

சங்கீதா கடகடவென்று சொல்ல சம்பத் விஷமமாய் சிரித்தபடி அவளிடமிருந்த செல்லை வாங்கி அவன் எண்களை அழுத்தினார். 

“ஹவ் ஆர் யூ பிரவீண்.” 

“பைன் அங்கிள் நீங்க எப்டியிருக்கீங்க. என்னாச்சு. ஒரு மாசமா ஒரு போன் கூட வரல? நானும் ரொம்ப பிஸியார்ந்துட்டேன். சாரி” 

“ஆகாஷுக்கு ஆக்ஸிடெண்ட் ஆய்டுச்சு பிரவீண்.” 

“மை காட்… எப்டி?” 

”உனக்கு டைம் இருந்தா நேர்ல வாயேன் விவரமா சொல்றேன்”சம்பத் ஆஸ்பத்திரி பெயர் சொன்னார். 

“ஷ்யூர் அங்கிள். உடனே வரேன்” 

“உன் ஆள் வராணாம்” 

பெண்ணைப் பார்த்து கண்ணடித்தார். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவசரமாக வந்திறங்கினான் பிரவீண். 

விவரங்களை சம்பத் சொல்லச் சொல்ல மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தான். அடுத்தடுத்து இப்டி கஷ்டம் வருமா? வியந்தான். 

ஆகாஷைப் பார்த்து தைரியம் சொன்னான். “எனக்கு தெரிஞ்ச எல்லா ஸ்பெஷலிஸ்ட்டையும் நாம கன்ஸல்ட் பண்ணுவோம். கவலைப் படாதீங்க அங்கிள். சீக்கிரமே அவர் எழுந்து நடப்பார் பாருங்க.” 

வெளியில் வந்து அவரிடம் சொன்னான். ”ஆண்ட்டி எப்டியிருக்காங்க?” 

“பரவால்ல. அவங்க படுக்கைல அவதிப்படறாங்க. நாங்க நடமாடிக்கிட்டு அவதிப்படறோம். ஒரு மாசமா இந்த பொண்ணு இங்கயே இருக்கா!” 

“இஸ் இட்? ஒரு சேஞ்சுக்கு என்னோட கொஞ்சம் வெளில அனுப்புங்களேன்.” 

”போறயாம்மா?” 

”எதுக்குப்பா?” 

“வாய் இப்டி கேட்டாலும் போகத்தயார்னு கண்ணு சொல்லுதே. சும்மா போய்ட்டு வா. போ. முகம் கழுவி டிரெஸ் மாத்திக்கணும்னா மாத்திட்டு வா” 

“நல்லாதான் இருக்க. இப்டியே வா” பிரவீண் சொல்ல கூச்சத்தோடு கிளம்பினாள். 

”ஒரு மணி நேரத்துல வந்துடறோம் அங்கிள்.” 

“போய்ட்டு வாங்க” சம்பத் அவர்கள் போவதையே புன் சிரிப்போடு பார்த்தார். 

“எங்க போலாம்?” காரைக் கிளப்பியபடி கேட்டான். “என்னைக் கேட்டா?’ 

”அதுவும் சரிதான். அப்பொ நா எங்க கூட்டிட்டு போனாலும் வந்துடுவதானே?” 

”ஒரு மணி நேரத்துல திரும்பி வரதா சொல்லியிருக்கீங்க. நினைவிருக்கட்டும்”

“ஒரு மணி நேரத்துல எவ்ளோ சாதிக்கலாம் தெரியுமா?” விஷமாகச் சிரித்தான் அவன். 

”சதி வேலையெல்லாம் வேண்டாம். சமத்தா நடந்துக்கணும்” 

“சரி தாயி!” பவ்யமாகச் சொன்னான். 

“ஆமா கல்யாண தேதி தள்ளிப் போய்டும் இல்ல? அம்மா, ஆகாஷ் ரெண்டு பேர்க்கும் உடம்பு சரியில்லையே” 

“தெரியல. அப்பாட்டதான் கேக்கணும். அவரே உங்க வீட்டுக்கு வருவார்னு நினைக்கறேன்.” 

“அந்த பொண்ணு இன்னும் வீட்லதான் இருக்காளா?”

“நீங்க வேற அவளைக் கொண்டு விட்டுட்டு வர வழிலதான். ஆக்ஸிடெண்ட்டே ஆச்சு. அண்ணாக்கு!'” 

”இப்பொ அவதான் ஆகாஷைப் பார்த்துக்கறாளா?”

“அப்பப்பொ வருவாங்க!” 

“இந்த நேரத்துல இல்ல கிட்ட இருக்கணும். காதல்னா என்ன ஜாலியா ஊர் சுத்தறது மட்டும்தானா? கஷ்டத்துல இல்ல கூட இருக்கணும்” 

“இது உங்களுக்கு தெரியுது. அண்ணாக்கு தெரியலையே. இன்னமும் அவ நாம ஜெபம்தான்.” 

“அவளை விடு. நீ என் நாம ஜெபம் சொல்றதுண்டா இல்லையா?” 

”வேற வழி! இனி சொல்லித்தானே ஆகணும்?” 

”அவ்ளோ எல்லாம் அலுத்துக்க வேணாம்மா”

“ஆனா அலுக்கல. அது ஒண்ணுதான் ஆறுதலா இருக்கு” சங்கீதா மெல்லிய குரலில் சொல்ல, பிரவீண் நெகிழ்வோடு அவளைப் பார்த்தான். இடது கரத்தால் அவள் கரத்தை இறுகப் பற்றி வாயருகில் கொண்டுச் சென்று மணிக்கட்டில் மென்மையாய் இதழ் பதித்தான். 

சற்று நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. 

“அப்பா இப்பொ ரொம்ப பண நெருக்கடில இருக்கார். பிரவீண். அநேகமா கல்யாணம் தள்ளிப் போகும்” சற்று பொறுத்து சொன்னாள். 

“எனக்கு ஆடம்பரம் வேணாம் சங்கீதா. உங்க விடலயே அமைதியா எளிமையா நம்ம கல்யாணம் நடந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன். உங்கப்பாவை எந்த விதத்துலயும் நாங்க சிரமப்படுத்த மாட்டோம்” 

“தேங்க்ஸ். இப்டி சொல்ற மனசு யாருக்கு வரும்?”

“வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா?’ 

”பின்னே?” 

‘பதிலுக்கு என் கைல நீயும் ஒரு முத்தம் கொடுத்தா குறைஞ்சா போய்டுவ?” பிரவீண் தன் இடது கையை அவள் இதழருகில் கொண்டு செல்ல அவள் மறுக்காமல் சிரித்தபடி முத்தமிட்டாள். 

கார் டிரைவ் இன்னில் நுழைந்து நின்றது. 

“லான்ல உக்காந்து சாப்பிடலாம்” 

அவன் காரை விட்டிறங்கி அவளோடு நடந்தான். சற்று தள்ளி சிநேகிதி ஒருத்தியோடு டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த சுஜிதா கம்பீரமாய் நடந்து சென்ற பிரவீணையும் அவனோடு உரசியபடி நடந்த சங்கீதாவையும் வெறித்துப் பார்த்தாள். அவள் கண்களில் வெறுப்பும் குரோதமும் மின்னியது. 

அத்தியாயம்-35 

மனம் ஒரு மாளிகை. உள்ளே சென்றவர்கள் வெளியே வர விரும்புவர். வெளியே இருப்பவர் உள்ளே செல்ல விரும்புவர். -ஆல்பரி 

இயக்கம் என்பது இந்த பிரபஞ்சத்தின் ஜீவ நாடி! அணுவிலிருந்து அண்டம் வரை எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இயங்குவதையே விரும்புகின்றன. நின்று போக எதுவும் விரும்புவதில்லை. இயக்கம் சுகம். சும்மா இருத்தல் கொடுமை. அதிலும் நோய் கண்டு கிடத்தல் கொடுமையிலும் கொடுமை. அதனிலும் கொடுமை இளமையில் படுக்கையில் கிடத்தல். அந்த கொடுமையைத் தான் ஆகாஷ் அனுபவித்துக் கொண்டிருந்தான். அடுத்தடுத்து நாலு ஆபரேஷன்கள் நடந்தும் ஒன்றும் சரியாகவில்லை. எங்கே பிரச்சனை? எதனால்? என்பது மருத்துவர்களுக்கே சவாலாக இருந்தது.ஏன் இயங்க இயலவில்லை என்பது விடுபடாத புதிராயிருந்தது. எத்தனை பரிசோதனைகள்! எவ்வளவு வலிகள்! போதும் போதும் என்று கதறினான் அவன். “விட்ருங்க டாக்டர்… என்னை விட்ருங்க… என்னால முடியல!” வலி தாங்காமல் அவன் அழுதபோது வீடே அழுதது.”இனி ஆயுசுக்கும் இப்டித்தான் கிடக்கணும்னா, ஒரே ஒரு ஊசி போட்டு என்னைக் கொன்னுடுங்களேன்! ப்ளீஸ்…!” கெஞ்சினான். 

“என்ன பேசறீங்க ஆகாஷ். எந்த வியாதியும் மருந்துகள்ள ஒரு பங்கு குணமாகும்னா நம்பிக்கையிலதான் நாலு பங்கு குணமாகும். நம்பிக்கை ரொம்ப முக்கியம் நிச்சயமா நீங்க எழுந்து நடப்பீங்க” 

டாக்டர் அவனைத் தட்டிக் கொடுத்தார். 

சம்பத் டாக்டரிடம் மனம் விட்டு பேசினார். 

“எம் பிள்ளைக்கு என்னதான் ஆச்சு டாக்டர்? எங்கிட்டயாவது சொல்லக்கூடாதா?” 

“சில விஷயங்கள் மருத்துவர்களுக்கு அப்பாற்பட்டது மிஸ்டர் சம்பத். நாங்களும் போராடிக்கிட்டு தான் இருக்கோம் சரி செய்ய.ஆகாஷோட கேஸ் ஃபைல், ஸ்கேன் ரிப்போர்ட்ஸ், சர்ஜரி டீடெய்ல்ஸ் எல்லாத்தையும் லண்டன்ல இருக்கற எனக்கு தெரிஞ்ச ஒரு ஸ்பெஷலிஸ்ட்டுக்கு இன்டர்நெட் மூலம் அனுப்பியிருக்கேன். அவர் என்ன சொல்றார், அவரோட சஜஷன் என்னன்னு பார்ப்போம். பட் நா சொன்னா மாதிரி நம்பிக்கைதான் மிகச்சிறந்த மருந்து” 

டாக்டர் கிளம்பினார். சம்பத் சோர்வோடு உள்ளே வந்தார். ஒரு பக்கம் மனைவி, மற்றொரு பக்கம் மகன் என்று இருவரும் படுக்கையில். ஏராளமான பணம் தண்ணீராய்ச் செலவழிகிறது. என்று இந்த பிரச்சனை தீரும் என்று தெரியவில்லை. பழையபடி எப்போது ஆகப் போகிறது இந்த வீடு? பெருமூச்சு விட்டார் அவர். 

சரண்யா ஆகாஷுக்கு ஹார்லிக்ஸும், பிரெட் துண்டுகளும் எடுத்துக் கொண்டு வந்தாள். 

“டாக்டர் என்ன சொன்னார் மாமா?” 

”வழக்கமா சொல்றதைத்தான் சொல்கிறார்” சம்பத் அலுத்துக் கொண்டார். 

“எல்லாம் சரியாய்டும் மாமா” 

”உனக்குத்தான் சரியான வேலை இல்ல சரண்? இங்க வந்து இந்த ஒரு மாசத்துல இளைச்சுப் போய்ட்ட. நல்லார்ந்தப்பொ எல்லாம் உன்னைக் கூப்ட்டு நல்லா வெச்சுக்க முடியல இப்ப வேலக்காரிக்கு பதிலா கூட்டிட்டு வந்தாப்பல இருக்கு. மனசுக்கு ரொம்ப உறுத்தலார்க்கும்மா” 

”இப்ப வந்ததுான் எனக்கு சந்தோஷமா இருக்கு. அனாவசியமா குழப்பிக்காதீங்க.” சரண்யா ஆகாஷின் அறைக்குச் சென்றாள். புத்தகம் படித்துக் கொண்டிருந்த ஆகாஷ் அவளைப் பார்த்ததும் புத்தகத்தை மூடி வைத்தான். 

“சுஜிதாவோட பேசினயா சரண்?” 

“நாலு தரம் டிரை பண்ணினேன். எப்பக் கேட்டாலும் இல்லன்றாங்க. நா வேணா நேராவே போய்ப் பார்த்து கூட்டிட்டு வரவா ஆகாஷ்?'” 

‘ஒரு வேளை ஊருக்கு எங்கயாவது போய்ட்டாளா? இல்லாட்டா வராம இருக்க மாட்டாளே. நீ இன்னொரு முறை நம்பர் போட்டுக்குடேன். நானே பேசிப்பாக்கறேன்” 

“இதைக் குடிங்க போட்டுத் தரேன்” 

ஹார்லிக்ஸை அவன் கையில் கொடுத்துவிட்டு கார்ட்லெஸ்ஸில் சுஜிதாவின் நம்பரை அழுத்தனாள். 

“ஹலோ நிஷா ஹியர்” 

“மிஸ் நிஷா ஐ ஆம் ஆகாஷ். சுஜிதா இல்லையா?’ 

“ஹவ் ஆர் யூ மிஸ்டர் ஆகாஷ்? உங்களை வந்து பார்க்கணும்னு நினைச்சேன். டைமே கிடைக்கல. அடுத்த வாரம் வரேன்” 

“பரவால்ல. சுஜி இல்ல?” 

“குளிச்சிட்ருக்கா. வந்ததும் உங்களை கூப்ட சொல்லட்டுமா?” 

“ப்ளீஸ் கண்டிப்பா கூப்ட சொல்லுங்க” 

கார்ட்லஸ்ஸை சரண்யாவிடம் கொடுத்தான். “பத்து நிமிஷத்துல கால் வரும்” 

“அதுக்குள்ள இந்த பிரெட்டையும் சாப்ட்டுடலாமே” 

“அம்மா எப்டியிருக்காங்க. அவங்களைப் பார்த்து எவ்ளோ நாளாச்சு” 

“அவங்களும் உங்களைப் பத்திதான் கேட்டுருக்காங்க. உங்களைப் பார்த்தா அவங்க ஃபங்க் ஆயிடறாங்க. அது அவங்க ஹெல்த்துக்கு நல்லதில்லன்னுதான் அவங்களை கொஞ்ச நாள் உங்களை பார்க்க வேணாம்னு சொல்லியிருக்கார் டாக்டர்” 

“எங்க வீட்டு மேல யார் கண் பட்டுது சரண்? கல்லெறிஞ்ச தேன்கூடு மாதிரி இப்டியாய்டுச்சு!” 

“வாழ்க்கைன்னா எல்லாம் தான் இருக்கும் ஆகாஷ். சந்தோஷம் வந்தா தடுக்கறோமா? வா வான்னு வரவேற்ப்பு கொடுக்கறோம். கஷ்டம்னா மட்டும் வராதேன்னு கதவு சார்த்திடப் பாக்கறோம். ஆனாலும் ரெண்டுமே மாறி மாறி வரத்தான் செய்யும். இது உங்களுக்கு கஷ்ட காலம். இது நிச்சயம் மாறும். மறுபடியும் சந்தோஷம் வரும்”

”அம்மா உங்கிட்ட எப்டி நடந்துக்கறாங்க?”

“ஏன்? நல்லாத்தான் பேசிட்ருக்காங்க!”

“குதிரைப்பசி!” ஆகாஷ் சிரித்தான்.

“புரியலையே” 

“வேற வழியில்ல. பேசிட்ருக்காங்கன்னு சொல்றேன்”

“அப்டியெல்லாம் இல்ல” 

போன் அடித்தது. எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

“கூப்ட்டீங்களா ஆகாஷ்?” எதிர்முனையில் சுஜிதாவின் குரல் கேட்டதும் அவன் முகம் பிரசன்னமாயிற்று. அதற்கு மேல் அங்கிருப்பது அநாகரீகம் என்று சரண்யா காலி டம்ளரோடு வெளியில் வந்துவிட்டாள். 

“என்ன சுஜி என்னை மறந்துட்டயா? இந்த பக்கமே வரல நீ!” 

“அப்டியெல்லாம் இல்ல ஆகாஷ். எனக்கு எக்ஸாம்ஸ் நடந்துட்ருக்கு இல்ல! பெண்டு நிமிருது. நா தூங்கி பத்து நாளாச்சு” 

“எக்ஸாம்ஸ் எப்பொ முடியுது?” 

”இன்னும் டென் டேஸ்ல முடிஞ்சுடும்” 

“அதுக்கப்பறமாவது இந்த பக்கம் தரிசனம் தருவாயா?”

”ஷ்யூர். எப்டியிருக்கீங்க ஆகாஷ். எனி இம்ப்ரூவ் மென்ட்?” 

“நீ கிட்டக்க இருந்தா நிச்சயம் இம்ப்ரூவ் ஆய்டுவேன். எல்லாத்தையும் மறந்துட்டு நீ மறுபடியும் இங்கயே வந்து இருக்கணும் சுஜி” 

”மரியாதையிருக்காது ஆகாஷ்” 

“இல்ல சுஜி. அதான் எல்லாத்தையும் மறந்துடுன்னு சொல்றேனே! இந்த வீட்டோட ராணி நீ! அம்மாவும் இப்பொ படுக்கைல. நீ வந்தாதான் சரியாகும். மறுபடியும் நீ வந்து எல்லா பொறுப்பையும் ஏத்துக்கணும் சுஜி. இது என்னோட ஆசை! என் விருப்பத்தை நீ மதிப்ப இல்ல? மதிப்பன்னா மறுபேச்சு பேசக்கூடாது. எக்ஸாம் முடிஞ்சதும் வந்துடணும்” 

அவள் எதுவும் பேசவில்லை. ‘டேக் கேர்’ என்று மட்டும் சொல்லிவிட்டு வைத்தாள். நிச்சயம் அவள் வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் சந்தோஷமாக போனை வைத்தான் ஆகாஷ். 

ஒவ்வொரு வேலையாக முடித்தாள் சரண்யா. மாமிக்கு சாப்பாடு கொடுத்து விட்டால் அதோடு நாலு மணிக்கு ஹார்லிக்ஸ் கொடுத்தால் போதும். இரண்டு மணிக்கு சங்கீதா வந்து விடுவாள். இவள் காலேஜுக்கு கிளம்ப வேண்டும். 

காலைப் பொறுப்பு இவளிடம் என்றால் மதியத்திற்கு மேல் சங்கீதா எல்லா வேலையும் பார்த்துக்கொண்டு விடுவாள். அதனால் இருவருக்கும் படிப்பு கெடாமல் நாட்கள் நகர்ந்தது. ஆகாஷிடம், அத்தை நன்றாகத்தான் பேசுகிறாள் என்று சொன்னாளே தவிர அது உண்மையில்லே. எப்போது எழுந்து நடப்போம், எப்போது இவளை வீட்டைவிட்டு துரத்தலாம் என்ற நினைப்பிலேயே இருந்தாள் சாரதா. இவள் முகத்தைப் பார்த்துக் கூடப் பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் ஏதாவது குத்தல் குதர்க்கமாகத்தான் வார்த்தைகள் வரும். 

எழுந்து வந்தாதானே தெரியும் வீட்ல என்னென்ன இருக்கு, என்னென்ன போச்சுன்னு! என்பாள் அடிக்கடி. 

சில நேரம் அந்த வார்த்தைகளின் உஷ்ணம் தாங்காமல் ஓடி விடலாமா என்று கூடத் தோன்றும். ஆனாலும் ஆகாஷுக்காகவும் மாமாவுக்காகவும் சகித்துக் கொள்ளப் பழகிக் கொண்டாள். இன்னும் கொஞ்ச நாள். ஆகாஷ் எழுந்து நடமாடிவிட்டான் என்றால் எல்லாம் சரியாகிவிடும். சங்கீதாவுக்கு கல்யாணமாகி அவளும் போய்விடுவாள். சுஜிதா திரும்ப வந்துவிடுவாள். அவர்களது திருமணமும் நடைபெறும். அதன் பிறகு இவள் உதவி யாருக்கும் தேவைப்படப் போவது மில்லை, இவளும் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பமாட்டாள். படிப்பும் முடிந்துவிடும். படித்த படிப்புக்கு எங்காவது ஒரு சாதாரண வேலையாவது நிச்சயம் கிடைக்கும். ஹாஸ்டலில் போய் இருந்துகொண்டு விடலாம். 

சரண்யா சமாதானப்படுத்திக் கொண்டு அத்தைக்கு சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டு போனாள். 

“நீ இங்க வந்து எவ்ளோ நாளாச்சு?” சாரதா கேட்டாள்.

“ஒரு மாசம்” 

“அந்த பீரோ திறந்து அதுல இருக்கற பர்ஸ் எடுத்துக்கிட்டு வா” 

அவள் சொன்னபடி செய்தாள். 

சாரதா ஒரு ஆயிரத்தி ஐநூறு ரூபாயை எடுத்து நீட்டினாள்.

“எதுக்கு மாமி?” 

”உன் சம்பளம்…” 

“பணமெல்லாம் வேணாமே!” 

”பணம் குடுக்காட்டி நீ உரிமை கொண்டாட ஆரம்பிச்சுடுவ. அதெல்லாம் வேணாம். வேற யாராவதார்ந்தா ஆயிரம்தான் குடுத்திருப்பேன். நீ தூரத்து உறவாச்சேன்னு கூட ஐநூறு போட்டுத்தரேன். அதோட மூணு வேளை சாப்பாடு”

சரண்யா மறுக்காது ரூபாயை வாங்கிக் கொண்டு அவளுக்கு சாப்பாடு போட்டு விட்டு வெளியில் வந்தாள். 

இரண்டு மணிக்கு சங்கீதா வந்து விட்டாள். சம்பத்தும் அப்போதுதான் கிளம்பினார். 

”வா சரண். நா உன்னை டிராப் பண்ணிட்டே போறேன்” சரண்யா காரில் ஏறியமர்ந்தாள். 

சற்று தூரம் வந்ததும் தன் கைப்பை திறந்து பணத்தை எடுத்து அவரிடம் நீட்டினாள். 

”என்னம்மா அது..?” 

“என் முதல் மாச சம்பளம் மாமா. மாமி குடுத்தாங்க”

மாமா அவளையும் பணத்தையும் மாறி மாறிப் பார்த்தார்.

“சில ஜென்மங்கள் எவ்ளோ பட்டாலும் திருந்தாது உன் மாமியை மாதிரி! இன்னமும் பணத்திமிர் விட்ட பாடில்ல பார். இன்னிக்கு பாங்க் பாலன்ஸ் எவ்ளோன்னு தெரிஞ்சிருந்தா உன் நல்ல மனசுக்கு விலை வெச்சிருக்க மாட்டா” 

”இந்த பணத்தை நா என்ன செய்யட்டும் மாமா?” 

”அவ முகத்துலயே விட்டெறிஞ்சிருக்கணும் நீ!” 

“என்னால அது முடியாதுன்ற தாலதானே வாங்கிட்டேன்”

“என்ன செய்யப்போற? நீயே சொல்லேன்” 

“உங்ககிட்ட குடுத்துடலாம்னு தான் வாங்கிண்டேன்”.

”கொண்டா” மாமா பணத்தை வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

“உன் மனசு கஷ்டப் படக்கூடாதுன்னு வாங்கிக்கறேன். நீ கொடுத்த பணத்துக்கு இந்த பணம் வட்டிக்கு கூட காணாது. சம்பளம் குடுக்கறாளாம் சம்பளம்!” 

“போறும் மாமா. விட்ருங்களேன்” 

“இன்னும் ஒரு அஞ்சாறு மாசம் சரண். எனக்கு வர வேண்டிய பணமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வந்துடும். உன் படிப்பும் முடிஞ்சிடும். இனி நீ தனியா இருக்கறது சரியில்ல. நல்ல ஒரு ஆளா பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன்னா நீயும் நல்லார்ப்ப, எனக்கும் சமாதானமாய்டும். போறும்மா நீ பட்ட கஷ்டமெல்லாம் இந்த வயசுக்கு உனக்கு இவ்ளோ கஷ்டம் தேவையேல்ல” 

“ஒரு நிமிஷம்…” சரண்யா குறுக்கிட்டாள். 

“என்ன..?” 

”பணத்தை திருப்பிக் கொடுக்கறது உங்க தன்மானம் சம்பந்தப்பட்ட விஷயம். நா வேண்டாம்னு சொல்லல. ஆனா இந்த கல்யாண விவகாரத்தை விடுருங்களேன்” 

“அப்டின்னா கடசி வரை இப்டியே இருந்துடலாம்னு எண்ணமா?” 

“எனக்கு நிறை படிக்கணும் மாமா. நிறைய சாதிக்கணும், அதைத்தவிர வியாபார நோக்கமில்லாத நல்ல ஸ்கூல் ஒண்ணு ஆரம்பிக்கணும்னு ஒரு ஆசையிருக்கு. ஏழை குழந்தைகளுக்கு சுத்தம், சுகாதாரம், நல்ல இங்கிலீஷ், நல்ல தமிழ், நல்ல இலக்கியம் எல்லாம் குடுக்கணும். நம்பர் ஒன் ஸ்கூல்னு பேர் சொல்ல வெக்கணும். ஏழை குழந்தைகளும் தாட் பூட்னு இங்கிலீஷ் பேசணும். அதோட நல்ல தமிழும் பேசணும். சர்வீஸ் மைண்ட் உள்ள படிச்சவங்க வந்து சம்பளமில்லாம பாடம் சொல்லிக்கொடுக்கத் தயாரார்ந்தா நிச்சயம் என் ஆசை நிறைவேறும்” 

“ரொம்ப நல்ல விஷயம். அப்டி ஒரு ஸகூல் நீ ஆரம்பிச்சா நானும் கூட வந்து என்னால முடிஞ்ச சர்வீஸ் பண்ணுவேன். நீ சொல்றது கரெக்ட்தான் சரண். பணக்காரங்களுக்குதான் எல்லாம்ங்கற நிலை மாறணும். நல்ல கல்வி ஒருத்தனுக்கு எல்லாமே தேடிக் கொடுக்கும். அதனால கல்வியை நாம கொடுக்கறது உண்மையிலயே நல்ல சர்வீஸ்தான்” 

மாமா மனமாறப் பாராட்டினார். 

“ஆமா காலேல சுஜிதாக்கு போன் எல்லாம் பண்ணிக்கொடுத்த போல்ருக்கு! என்ன சொல்றா அவ?” 

“தெரியல, நா வெளில வந்துட்டேன்” 

“எம்பிள்ள ஒரு மடையன்!” 

“ஏன் அப்டி சொல்றீங்க?” 

”நீயே சொல்லு சரண். அந்த பெண் இங்க வருவான்னு நினைக்கறயா நீ?” 

“ஏன் வராம என்ன?” 

“எனக்கென்னமோ சந்தேகமாதான் இருக்கு” 

சரண்யா பதில் சொல்லவில்லை. 

சரியாய் இரண்டு வாரம் கழித்து சுஜிதா ஒரு ஆட்டோவில் இறங்கிய போது சம்பத்தின் புருவம் உயர்ந்தது. தன் வியப்பை மறைத்துக் கொண்டு புன்சிரிப்போடு அவளை வரவேற்றார் அவர். 

உள்ளே வந்தவள் முகம் ஆகாஷின் உடம்பை துடைத்து விட்டுக் கொண்டிருந்த சரண்யாவைப் பார்த்ததும் சுருங்கியது.

– தொடரும்…

– வருவாள், காதல் தேவதை… (நாவல்), முதற் பதிப்பு: 2012, தேவி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “வருவாள், காதல் தேவதை…

  1. வருவாள் காதல் தேவதை அடுத்த அத்தியாயத்தை பதிவிடவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *