கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 18, 2023
பார்வையிட்டோர்: 609 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்த டாக்சியில் போகலாமா?” அன்போடு குரல் கொடுத்த நண்பனைத் திரும்பிப் பார்த்தேன். அவன் சிரித்தான்; நானும் புன்னகை செய்தேன். முதல் சந்திப்பு; ஆகவே அன்பு நகைத்தது. புதிய இடம்; முன்பு பார்த்திராத நண்பனைச் சந்திக்கவே அவன் ஊருக்கு வந்திருக்கிறேன்.

“போகலாம்” என்ற வண்ணம் நின்றிருந்த டாக்சியைப் பார்த்தேன். மனம் மருண்டது. அந்த டாக்சியின் வண்ணம் வடிவம் எல்லாம் என்னை மயக்கின. இன்பம் ஒரு கணம் ஏக்கமாக மாறியது.

டாக்சியை நெருங்கினோம்; டிரைவர் அங்கே இல்லை. இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். நண்பன் சேகர் எவ்வளவு நல்லவன்! தன் ஊருக்கு வந்து போக வேண்டும் என்று அடிக்கடி எழுதிக் கொண்டே யிருந்தான். எப்படியோ சந்தர்ப்பம் என்னை மலையாள மண்ணை மிதிக்கச் செய்துவிட்டது!

எங்களை நோக்கி விரைந்து வந்த டிரைவரைப் பார்த்தேன்! பாவம். வயதான மனிதர், அவர் எதையோ காகிதத்தில் கட்டி எடுத்து வந்த காட்சியைப் பார்த்தேன்.

“டாக்சி எடுக்கணும், நாயர்!” என்றான் சேகர்.

“வீட்டிற்குத்தானே?”

“ஆமாம்.”

“உட்காருங்கள். இவர் யார்?”

“நம் ஊரைப் பார்க்க வந்திருக்கும் என் நண்பன்!”

டாக்சியில் அமர்ந்தோம்.

“காகித மடிப்பினுள் என்ன இருக்கிறது, நாயர்?”

“தீபாவளி வருகிறதல்லவா? சரோவுக்குத் துணிகள் வாங்கினேன். நேற்றே குழந்தை சொன்னாள்…” என்று சாந்தமாக அந்த டிரைவர் – கங்காதர நாயர் – சொன்னார்.

“சரோ, சௌக்கியமா இருக்கிறாளா?”

“குறும்பெல்லாம் கிடையாது; சமர்த்தாகப் படிக்கிறாள்.”

கங்காதர நாயரின் சொல் அவனை மகிழ்வித்தது.

சரோ டிரைவரின் மகள் போலும். தீபாவளிக்கு நான்கைந்து நாட்கள்தாம் இருக்கின்றன. என்றாலும் குழந்தைக்கு எத்தனை அக்கறையோடு நாயர் துணி எடுத்துப் போகிறார்!

எண்ணம் விரிந்தது. டாக்சி ஓடிக் கொண்டிருந்தது. டிரைவரின் முகத்தில் எதையோ தேடினேன். எதுவுமே பிடிபடவில்லை!

ஒன்று…இரண்டு… நாட்கள் நகர்ந்து கொண் டிருந்தன. கொல்லம் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இருவரும் நகரத்தைச் சுற்றிப் பார்த்தோம். நாள் முழுதும் கதைகள் பேசினோம். பொழுது இன்பமாகக் கழிந்து கொண்டிருந்தது. என்றாலும் புரியா ஏக்கம் இதயத்தில் படர்ந்திருந்தது. அந்த டாக்சி; அதன் வண்ணம்; அந்த டிரைவர் குழம்பிக் கொண்டிருந்தேன் நான்.

பூங்காவில் உட்கார்ந்திருந்தோம். புதுமை இன்பம் நிலவியது அங்கே.

“ஏன் கலக்கமாக இருக்கிறாய், சங்கர்?” எப்படியோ சேகர் கேட்டுவிட்டான்.

“அப்படி ஒன்றுமில்லையே!”

“இல்லை. நான் அப்பொழுதிலிருந்தே கவனித்து வருகிறேன். எதற்காகவோ ஏங்குகிறாய்; என்னிடம் சொல்லக் கூடாதா. சங்கர்?”

என்னைப் பார்த்தான். அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவள் முகத்தில் இருந்தது.

“சேகர். நினைவிருக்கிறதா. அந்த டாக்சியைப் பார்த்ததிலிருந்து தான் எல்லாம்?”

“என்ன ஏற்பட்டுவிட்டது; என்னிடம் சொல், சங்கர்!”

நினைத்தேன்: நெஞ்சு வருந்தியது. நண்பனிடம் சொல்வதில் என்ன தவறு?

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் பத்து வயதுகூட நிரம்பாத சிறுவனாகப் பள்ளியில் படித்துக் கொண்டிருந் தேன். தங்கை சாருமதிக்கு ஐந்து வயது இருக்கும். நன்றாக இருப்பாள்; குறும்பாகப் பேசுவாள். எழுத்துக் கூட்டுவாள். பாடவும் தெரியும். சாருமதியின் மேல் எல்லோருக்கும் ஆசையும் அன்பும் அதிகம். தங்கைக்குப் பாட்டுக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அம்மா விரும்பினாள் பாட்டு வாத்தியாரம்மாவின் வீட்டிற்கு அவளைத் தினமும் அனுப்பி வைக்க ஏற்பாடாயிற்று.

தினமும் மாலையில், மோட்டார் காரில் தங்கையை அழைத்துப் போய், திரும்பக் கொண்டு வருவான் அரவிந்தன். அரவிந்தன் எப்படியோ எங்களுக்கு டிரைவரா கக் கிடைத்தான். மிகவும் நல்லவன்; நடுத்தர வயது; நாணயமான மனிதன். சாருவையும் என்னையும் பள்ளிக் கூடத்திற்குக் காரில் கொண்டு போவதும், வாத்தியாரம்மா வின் வீட்டிற்குத் தங்கையை அழைத்துப் போவதும் அரவிந்தன்தான். அடிக்கடி ஊருக்குப் போகும் அப்பா வுக்கு எவ்வளவோ துணையாக இருந்தான். அழகான கதைகள் சொல்லி என்னையும் சாருவையும் மகிழ்விப்பதில் அரவிந்தனுக்கு அளவில்லாத ஆனந்தம்!

ஒரு நாள் வீட்டிற்குப் பணக்கார உறவினர்கள் வந்திருந்தார்கள்.

திரும்பும்போது அரவிந்தன் தான் கார் எடுத்துப் போய். விட்டுவருவதற்குக் கிளம்பினான். மகிழ்ச்சியோடு அவன் திரும்பி வந்தபோதுதான் திடுக்கிடும் அந்தச் செய்தி காத்திருந்தது.

விருந்தினர்கள்தான் ஊரிலிருந்து ‘போன்’ செய்திருந்தார்கள். மோட்டார் காரிலேயே ஏராள மதிப்புள்ள பொருளும் பணமுமுள்ள பையைத் தவற விட்டு விட்டார்களாம். செய்தி கேட்டுத் திடுக்கிட்டார். அப்பா. என்ன செய்வதென்று அப்பாவுக்குப் புரியவில்லை. கௌரவம் வாய்ந்த அவர்களுக்கு என்ன பதிலைச் சொல்லுவது?

அரவிந்தனிடம் சொன்னார். மோட்டார் கார் முழுவதையும் நூறு தடவை பார்த்தாயிற்று: பலனில்லை. கையைப் பிசைந்தான் டிரைவர். அப்பாவுக்குப் பட்டது அதுதான். அரவிந்தன்தான் பணத்தை எடுத்திருப்பான். பணத்தாசை அவனுக்கு மட்டும் இல்லாமலா போகும்? அப்பா முடிவு கட்டினார்.

மிரட்டினார் அப்பா. அரவிந்தன் அழுதுவிட்டான். அவன் ஆயிரம் சொன்னாலும் யார் நம்பப்போகிறார்கள்?

ஐந்தாறு வருடங்களாக நம்பிக்கையோடு வேலை பார்த்து. வந்த அவன் விரட்டப்பட்டான். அரவிந்தன் பேரில் இருந்த பணத்தைக் கூட அவனிடம் சேர்க்கவில்லை.

அரவிந்தன் போகும்போது பார்த்த அந்தப் பார்வை…! எந்த நேரமும் அது மனத்தை விட்டு மறையாது. பார்வை யிலே நெருப்பு இருந்தது அரவிந்தன் போய்விட்டதால் நானும் சாருவும் வருந்தினோம்.

இரண்டு மூன்று வாரம் கழித்து ஒரு நாள் டாக்சி டிரைவராக அவனைப் பார்த்தோம். ஆனால் முன்போல் என்னைப் பார்க்கவில்லை; பழகவுமில்லை. மனம் வருந்தினேன்.

புது டிரைவர் வந்தான். அவன் போக்கே ஒரு மாதிரி. பொறுப்பு இல்லாதவனாகவே தோன்றினான். அரட்டையில் தேர்ந்தவன்.

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் மாலையில் சாருவைப் பாட்டு வகுப்புக்கு அழைத்துச் சென்றிருந்தான் டிரைவர். திரும்பும்போது பதறிப்போய் தனியே வந்தான் அவன். சாருமதியைக் காணவில்லை என்று கூசாமல் சொன்னான். அப்பா துடித்தார்; அம்மா அலறினாள்; நான் அழுதேன். தங்கையைக் காணோம்! எங்கே போயிருப்பாள்? திரும்பி வரும்போது ‘ஹோட்டல்’ வாசலில் காரை நிறுத்திவிட்டு உள்ளே போனானாம் டிரைவர். வந்து பார்த்தபோது வண்டியில் சாரு இல்லையாம்! சாரு எப்படி, எங்கே போயிருக்கக் கூடும் ? உள்ளங்கள் ஓலமிட்டன.

போனவள் போனவள்தான்! அப்புறம் வீடு வீடாக இல்லை. தீபாவளிகள் மட்டும் வந்துபோய்க் கொண்டிருந்தன.

சேகர் என்னைப் பார்த்தான். அவன் முகத்தில் ஆதுரமும் அநுதாபமும் படிந்திருந்தன. இருவரும் அசையாமல் உட்கார்ந்திருந்தோம். என்னைக் கண்டு அவன் வாட, அவனைக் கண்டு நாள் வாட அப்படியே இருந்தோம்.

அப்போது –

“நமஸ்காரம் சேட்டா!” மென்மையான குரல். குரலுக்குரிய சிறு பெண் நின்றிருந்தாள்.

“சுகந்தன்னேயோ?” என்றான் சேகர்.

“அதே தன்னே!” என்றாள் அவள்.

சரோ என்ற அந்தப் பெண்ணைப் பார்த்தேன். சின்ன வயதுதான். அழகிய முகம். அமைதியும் குறுகுறுப்பும் இருந்தன. சரோவைப் பார்த்தேன்; என் பக்கம் பார்த்தாள். அன்பு அங்கே

அலையாகப் புரண்டது. அழகாகத் தமிழிலும் மலையாளத்திலும் பேசினாள்; பேசினவள் போய்விட்டாள்! பிடிபடாத எண்ணங்கள் இதயத்தில் மேகங்களாகச் சூழ்ந்திருந்தன.

“சங்கர்!”

“என்ன சேகர்?”

“இவள் யார் தெரியுமா?”

“என் தங்கை மாதிரி இருக்கிறாள். சேகர்!”

“உண்மையாகவா?”

“சாயல் அப்படி! இந்த ஊர்ப் பெண்தானா இவள்?” “ஆமாம்,கங்காதர நாயரைப் பார்த்தோமல்லவா?” “டாக்சி டிரைவர்! அவர் குழந்தைதானோ சரோ?’ ‘இல்லை; நாயரின் தம்பி மகள்.”

“தம்பி இருக்கிறானா?’

“இல்லை; ‘ஆக்ஸிடென்’டில் போய்விட்டான்.”

“அவனும் டாக்சி டிரைவரா?”

“ஆமாம். சங்கர்!”

“கங்காதர நாயரிடம் ஒன்று கேட்க வேண்டும். எது என்பது உனக்குப் புரிகிறதா?” என்றேன்.

சேகர் விழித்தான்.

கங்காதர நாயர் இதனை எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? சாந்தமாக எங்களைப் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருந்தார். ஆனால் அந்த முகத்தில் எத்தனைவித உணர்ச்சிகள்! ‘இல்லை’, ‘அல்ல’ இப்படி ஒரு சொல் அவரிடமிருந்து வராதா? ஏங்கினேன் அதற்காக!

“சரோஜா உங்கள் பெண்தானா?” – இந்தக் கேள்விதான் கங்காதர நாயரை மயக்கத்தில் ஆழ்த்தி விட்டது. கலங்கும் கண்கள் கதை சொல்லத் துடித்தன. நாயர் என்ன செல்வாரோ என்று காதுகள் கூர்மையாகின.

இளம் வயதில் வீட்டைவிட்டுப் போனவன் தம்பி. பல வருடங்கள் ஆகியும் அவன் திரும்பவேயில்லை. கங்காதர நாயரின் அன்பான அந்தத் தம்பி நல்லவன் வறுமை இருந்தது. ஆகவே சுதந்தரமாக இருக்க விரும்பிக் கூட்டை விட்டுப் பறந்துவிட்டான். தம்பியைத் திரும்பக் காணப் போகிறோம் என்ற நம்பிக்கை நாயருக்கு இல்லை. அது தேய்ந்து வந்தபோதுதான் ஆச்சரியத்தில் அவரை ஆழ்த்தும் வண்ணம் ஊருக்கு வந்தான் தம்பி.

அவன் மட்டுமா வந்தான்? அழகான சிறுமியையு மல்லவா கொண்டு வந்தான்! இளையவனைப் பார்த்த நாயருக்குத் தலைகால் புரியாத மகிழ்ச்சி. குழந்தை அழகாக இருந்தாள். ஐந்து வயது அல்லது அதற்குச் சற்று மேல் இருக்கலாம்.

அந்தக் குழந்தை சரோஜாவைத் தன் குழந்தையாகப் பேணினார் கங்காதர நாயர். “அப்பா… அப்பா…” என்று அவரை அழைத்தாள் சரோ. பிரிக்க முடியாத அன்பு செழித்தது. தம்பி டாக்சி ஒட்டிக் கொண்டிருந்தான். நிம்மதி யாக நாட்கள் சென்றன. ஒருநாள் விபரீதமும் விளைந்தது. டாக்சி விபத்தில் விழுந்துவிட்டான் இளையவன். பிழைப் பான் என்ற நம்பிக்கை இல்லை. சரோஜாவைப் பற்றிய நினைவுதான் அவனுக்கு. அண்ணனைக் கூப்பிட்டான். நெஞ்சை அரித்துக் கொண்டிருந்த ஒரு செய்தியைச் சொல்ல முடியவில்லை. முனகியவாறு அவன் சொன்ன கடைசிச் சொற்கள் கங்காதர நாயரை அதிர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டன.

“என்னைக் குற்றவாளியென்றோ, கொள்ளைக்காரன் என்றோ உன்னால் சொல்ல முடியுமா, அண்ணா?”

“யாராலும் முடியாது. உன் குணம் எனக்குத் தெரியும்…!”

“உண்மைதான் என்னைத் திருடன் என்று சொல்லி விரட்டியவருக்கு நான் என்ன செய்யலாம். அண்ணா?”

“என்ன செய்தாய்?”

“வஞ்சம் தீர்த்தேன்; வருந்துகிறேன்! சரோஜா நம் குழந்தையல்ல அண்ணா நான் செய்த குற்றம் அதுதான். பெற்றவர்களிடம் அவளைச் சேர்த்துவிட வேண்டும். செய்வாயா. அண்ணா?”

கங்காதர நாயரின் அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லத் தம்பியில்லை, கலங்கினார் நாயர். சரோவின் பெற்றவர்களை எங்கே போய்த் தேடுவது? ஆசையோடு சரோஜாவை அதற்காகத்தானா நாயர் பேணினார்? எதையும் செய்ய அவர் முற்படவில்லை. சரோவுக்காக வாழ விரும்பினார். ஆகவே தம்பியின் தொழிலைத் தானே ஏற்றுக் கொண்டார். சரோ ஆனந்தமாக இருந்தாள். அழகோடு பள்ளிக்கூடம் போய் வந்தாள்.

டாக்சி தினமும் வீதிகளில் ஓடிக் கொண்டிருந்தது. கங்காதர நாயரின் வயதான கரங்களுக்கு ‘ஸ்டியரிங்’கைப் பிடிப்பதிலிருந்து ஓய்வேயில்லை. அந்த டாக்சி ஓடிக் கொண்டிருந்ததெல்லாம் சரோவின் இன்பத்திற்காகத்தான்!

அன்பு அலறியது! சேகரையும் நாயரையும் மாறிமாறிப் பார்த்தேன். மனம் துடியாய்த் துடித்தது. ‘சரோ! சரோ ஏன் என் தங்கையாக இருக்கக் கூடாது? கண்டிப்பாக இருக்கலாம்.’

கங்காதர நாயரைக் கேட்டேன்; “உங்கள் தம்பியின் பெயர் அரவிந்தன்தானே?”

நாயரின் கண்ணிலிருந்து கண்ணீர் உருண்டது அவர் தலையசைத்தார் ‘ஆமாம்’ என்பதற்கு அறிகுறியாக! நான் அவரிடம் பேசினேன் சரோவைப் பற்றி, சேகர் அவரிடம் என்னைப்பற்றிப் பேசினான். அவர் சிலையாக உட்கார்ந் திருந்தார். ஏதோ பேசினோம். அவர் முடிவுக்கு வந்தார். உள்ளங்கள் மகிழ்ந்தன.

சரோஜா வந்தாள்; எல்லோரையும் பார்த்தாள்; பார்வையிலே வியப்பு! மருட்சியோடு எங்களை மீண்டும் நோக்கினாள்.

“சரோ!”

“என்ன அப்பா?”

“நீ ஊருக்குப் போக வேண்டும்!”

“எந்த ஊருக்கு? ஏன்?”

“உன் அண்ணன் போகும் ஊருக்கு. அதோ பார்த்தாயா உன் அண்ணனை!” என்ற வண்ணம் என்னைக் காட்டினார். கங்காதரன்.

“என்ன சொல்கிறீர்கள்?”

“உண்மையைத்தான், சரோ!”

“ஆமாம். சரோ!” என்றான் சேகர்.

“ஆமாம்!” என்று தலையை ஆட்டினேன்.

தீபாவளிக்கு இரண்டே நாட்கள்! அப்பாவுக்குத் தந்தி கொடுத்தேன். சாருமதியோடு புறப்பட்டு வருவதாக!

புகைவண்டி நிலையத்தில் நல்ல பரபரப்பு. கங்காதர நாயர். சேகர், சரோ, நான்! எல்லோரும் நின்றிருந்தோம் டாக்சியினருகே. சேகர் எங்களை டாக்சியோடு ‘போட்டோ’ எடுத்தான். அவனுக்கு எத்தனை மகிழ்ச்சி! டிரைவர் நாயரை எங்களோடு வந்துவிடும்படி வற்புறுத்தினேன்.

நாயர் சொன்னார்: “நான் வர வேண்டும் என்பதில்லை சங்கர் – சரோ எங்கிருந்தாலும் சுகமாக இருந்தால் போதும்.”

வண்டி நகரத் தொடங்கியது. சாருவும் நானும் அனைவரையும் பார்த்து விடை பெற்றுக் கொண்டோம். தொலைவில் நின்ற டாக்சி சிறிதாகத் தெரிந்தது. பின்னர் தோற்றம் மறைந்துவிட்டது. என்றாலும் மனத்திலிருந்து எப்படி மறைய முடியும்?

– 1959 – ‘கண்ணன்’ இதழில் பிரசுரமான சிறுகதை, ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *