நட்சத்திர பங்களா

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 16, 2023
பார்வையிட்டோர்: 6,797 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6

சனிக்கிழமையே வீட்டில் விழாக் களை.

வெகு தூரத்திற்கு ‘கேக்’ வாசனை.

இவளுக்கு ‘கேக்’ தயாரிக்க கற்றுத் தந்த நட்சத்திரம்மா தன் ‘ஓவனை’யும் இவளுக்கே தந்துவிட்டுப் போயிருந்தார்.

இவளது ‘ஸ்பான்ஞ் கேக்’ மெய்யாலுமே வாயில் கரையும்.

‘கேக்’ மீது ‘சாக்லேட் ஐஸிங்’ பரப்பி, அதில் வண்ண ‘ஜெம்ஸ்’ வில்லைகளை ஒட்டினாள். பழரசமும் தயார்.

நாளை கேரட் அல்வா, பஜ்ஜி வேலை மட்டும்தான். காலை நேரம், வாழ்வின் கசப்புகளை மறக்கடிக்கும் தித்திப்போடு ஆரம்பமாகட்டும்.

அனுவின் பாவாடையோடு, நாளை தான் கட்டவேண்டிய சேலையையும் இஸ்திரியிட்டாள்.

சேலை மாம்பழ வர்ண மைசூர் பட்டு. உடல் எங்கும் சரிகைப் புட்டாக்களோடு அரக்கு வர்ண முந்தானை. இதுவும் பெரியம்மாவினுடையதுதான். ஓரிருமுறையே இதைக் கட்டியபின்,

“வாங்கும்போதே யோசிச்சேன் பரணி. இத்தனை சரிகை தெளிச்சிருக்கேன்னு. தவிர உடம்போட ஒட்டிக்கிது வேற. அறுபது வயசுல அங்கும் இங்குமாய் பிதுங்கற சதையை வெளிச்சம் போட்டு வேறு காட்டணுமா? இது உன் வயசு பொண்ணுங்களுக்குத்தான் தோது. இந்தா பிடி” என்று இவளுக்குத் தந்துவிட்டிருந்தது.

ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவ்வப்போது இப்படி பல பரிசுகள் இவளுக்கு வரும்.

இப்படித் தந்தால் பரணி மறுக்கமாட்டாள் என்பது பெரியம்மாவின் பிரிய சூழ்ச்சி!

கேக்கிற்காக மாவை, முட்டைகளை நுரைக்க அடித்துக் கலந்ததில் கை, தோள், முதுகு எல்லாம் வலி.

பலூன்களை இன்று ஊத முடியுமெனத் தோன்றவில்லை. படுக்க வேண்டியதுதான்.

அனுவை ஏன் இன்னும் காணவில்லை?

பாஸ்கர் நாளைய விழாவிற்குத் தன்னையே அழைத்துக் கொண்டான் என்றாலும், நாமும் ஒரு வார்த்தை அழைத்தால் தான் மரியாதை என்ற எண்ணத்தில் சிறு அழைப்பு ஒன்றை எழுதி அனுவிடம் தந்தனுப்பியிருந்தாள்.

‘அனுவின் ஐந்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொண்டு குழந்தையை ஆசீர்வதிக்க தங்களை அழைக்கிறேன். நாள் / நேரம் = நாளை (ஞாயிறு) மாலை 4 மணிக்கு’ – என்று மொட்டையாய் தன் பெயரிடப்படாத ஒரு அழைப்பு. அனுவின் வற்புறுத்தலால் ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு வர்ண ‘ஸ்கெட்ச்’ பேனாவால் எழுதியிருந்தாள்.

கொண்டுபோன குழந்தையை ஏன் இத்தனை நேரமாய் காணவில்லை?

ராணி வந்த பிறகு வீடு அத்தனை ‘ஹோ’வென்று தனிமை காட்டவில்லை.

அனு சமையல் அறைக்குப் போயிருப்பாளோ?

ராணி, அனுவைத் தூக்கிக் கொஞ்சும் ரகமில்லை.

‘இந்தா… கத்தி கபடாவையெல்லாம் உருட்டாத குட்டி. கை காலுல பட்டா கஸ்டம்’ என்று துரத்திவிடுவாள்.

இவள் சதா அனுவை இடுப்பில் இடுக்கிக்கொண்டு அலைய நிறுத்தி வைத்துப் பேசுவாள்.

இதுக்கோசரம் பாத்தா நீ சொச்சநாளை ஒண்டியாத்தான் கழிக்கணும். இப்படி உசிராப் பழகாத. நாளைக்கு ‘ஆஸ்டல்’ல விட்டா அது இருக்கணும்ல? அப்பத்தானே உனக்கு நிம்மதி?”

ஆக, பாஸ்கரனிடம்தான் குழந்தை இருக்க வேண்டும். இரண்டரை மணி நேரமாகவா?

சலிப்புடன் அனுவை அழைத்து வர கிளம்பினாள்.

கிளம்புவதற்காய் காலில் செருப்பு போடும்போது, அவர்களது சிரிப்பு கேட்டது.

சன்னல் வழியே குனிந்து பார்த்தாள்.

கைக்கொன்றாய் நூலில் கட்டிய கொத்து பலூன்களைப் பிடித்தபடி வந்துகொண்டிருந்தாள் குழந்தை. ‘கும்’மென்று வானை முட்ட முயன்று கொண்டிருந்தன பலூன்கள். ஆனால், அவள் இடுப்புக்கு வளைந்து பூங்கொத்தாய் காற்றில் அசைந்தபடி அவளோடு மிதந்து வந்தன.

“அனு… எப்போ இத்தனை பலூன்களை ஊதினே?” ஆச்சரியம் மிகக் கேட்டாள்.

“எத்துட்டுப் போனேன். அங்கிள் ஊதிக் தந்தாங்க. டி.வி.யில ‘கார்த்தூன்’ பார்த்துட்டே சாப்பித்தேன். பெரியம்மாகூட பேசினேன்…”

“அடடோ… எப்போ… இப்பவா?”

“சித்தி குழந்தையை ஆசீர்வதிக்க விரும்புவாங்கன்னு தெரியும். ஆனா,ஐ.எஸ்.டி. வசதி இங்க இல்ல. ‘கால் புக்’ பண்ணினா ஓரிரு மணி நேரமாகும். அதான் உன்னைக் கூப்பிடலை…” அவன் விளக்கினான்.

*பரவாயில்லை… எப்படி இருக்காங்க?”

“நல்லா இருக்காங்க. நீ சாப்பிட்டியா?”

ஏனோ அக்கேள்வி அவளை நெகிழ்த்தியது.

இனி இப்படி கரிசனையாய் தன்னை விசாரிக்க ஆளில்லை என்று நினைத்திருந்தாளே…

“தாங்க்ஸ்… அனுவுக்குச் சாப்பாடு தந்து…”

“ஒரு தோசை என்ன பிரமாதம்? ரெண்டு பேரும் சில பெட்டிகளை எல்லாம் பிரிச்சுப் பார்த்தோம். அனுவுக்கு இந்த சரிகைக் குண்டு, மணி எல்லாம் பிடிச்சிருந்தது. உங்க ஹால்ல இதையும் தொங்கவிடலாம்னு எடுத்து வந்தேன்…”

“எப்படி… எதுக்கு?”

“விருந்துக்குத்தான். ‘செலோ-டேப் எடுத்து வந்தேன். அஞ்சு நிமிஷ வேலை.”

பலூன்களை கொத்தாய் கூரையிலேயும், சன்னல் கம்பிகளிலேயும் கட்டிவிட்டவன், சுவர்களில் சரி அலங்காரங்களை ஒட்ட, ஹால் அமர்க்களமாகியது.

“ஹா…. ஜோரா இக்குது… இல்ல சித்தி?”

“ஆமா…”

அனுவை இத்தனை உற்சாகமாய் இதுவரை பார்த்ததில்லை. மறுநாள் காலை முகமெல்லாம் பூவாய் தன் சிறு வீட்டினைச் சுற்றிப் பார்த்த அனு ‘கிரீச்’சிட்டாள்!

“என்ன.. என்னாச்சு…?”

“சித்தி… அதோ பாருங்க.”

தையல் இயந்திரத்தின் பக்கமாய் குட்டி விரல் நீண்டது.

அதன் ‘பெடல்’ மீது மொத்த இடத்தையும் அடைத்தபடி உட்கார்ந்திருந்தது ஒரு பொம்மைக் கரடி!

‘ஹைய்யோ… ‘டெடி பேர்’ சித்தி!’

“அட… ஆமா!”

“தாங்க்ஸ் சித்தி… ஒம்ப பிடிச்சிருக்கு” குதித்து ஓடிய அனு ‘புகபுக ‘வென்றிருந்த அப்பொம்மையை அள்ளித் தூக்கினாள்.

முகத்தை அதன் ரோம முகத்தோடு ஒட்டி வைத்து முத்தமிட்டாள்.

“ஹை… கண்ணாடி கண்ணு… ச்சோ… பட்டா இருக்குதே?” இறுகக் கட்டி கொஞ்சினாள்.

“ஆனா இதெப்படி இங்கே வந்துச்சு அனு?”

“ஹை…! பெரியம்மா மாதிரி ‘டூப்’பு விடாதீங்க சித்தி. அவங்கதான் கிறிஸ்மஸ் ராத்திரி ‘பைன் டிரீ’க்குக் கீழ நெய்ய பொம்மல்லாம் வச்சுட்டு… ‘நானு வக்கிலியே… கிஸ்மஸ் தாத்தா வச்சார் போல’ன்னுவாங்க!”

விழிகள் இரண்டு நட்சத்திரங்களாய் மின்ன- குலுங்கிச் சிரித்தாள் குழந்தை.

“இல்லை அனு… நிஜமாவே நான் வைக்கலை,”

இது வெடிகுண்டோ என்றுகூட பரணிக்குள் ஒரு பய சந்தேகம்!

“இது ‘பர்த்-டே’ தாத்தா வச்சது” என்றது பாஸ்கரன் குரல்!

“ஹை! அங்கிள்… நீங்களா… தாங்க்ஸ்.”

“இது ஜாஸ்தி விலையிருக்குமே?” தடுமாறினாள் பரணி.

“இருக்கட்டுமே! அனுவுக்கு எப்பவும் சிறந்தவைதான் பிடிக்கும்.*

“எப்போ அங்கிள் வச்சிங்க…. ராத்திரியா?”

“ம்…”

*நீங்க கொண்டு வந்ததை நான் பாக்கலியே?”

“சாயந்திரமே ஒரு கவரில் சுத்தி வீட்டுக்கு வெளியே வச்சிருந்தேன். அப்புறம் நைசா ‘டெடி’யே உள்ளே புகுந்திருக்கும்!”

“அப்படியா?”

டெடிக்கு முத்தமிட்டாள் அனு.

“பிறந்த நாள் வாழ்த்துகள் அனு.” குனிந்தவன்- குழந்தையை முத்தமிட்டான்.

இன்னும் சவரம் செய்யாத கன்னங்கள். கீழ் முகத்தில் கருப்புப் புல்லாய் ரோமம் மொட்டு விட்டிருந்தது. சற்றே கலைந்த கேசமும், ஓரிரு பித்தான்களே பொருத்தப்பட்ட சட்டையிலும்கூட குறையாத அவனது கவர்ச்சி!

“சரி… எப்போ குளிச்சு புதுசிலே ஜொலிப்பீங்க அம்மணி?”

“எட்டு மணி ஆவுமே அங்கிள்.”

“சரி, அப்ப வரேன்- எனக்கும் சேர்த்து மசால் தோசை.”

“ம்கூம். இன்னைக்கு தக்காளி ஊத்தப்பம்- அப்புறம் கேக்!”

“நேத்திலிருந்தே வாசனை பிடிச்சிட்டுக் கிடந்தேன்!” பெருமூச்சு விட்டான்.

ஒன்றரை மணி நேரம் கழித்து அவன் வந்து சமையல் அறையில் தட்டோடு அமர்ந்தது பரணிக்குப் பிடித்திருந்தது.

போன பிறந்த நாளின்போது அம்மா இல்லை. தவறி இரு மாதங்கள் ஆகியிருந்தன. ஆனால், தேற்ற பெரியம்மா இருந்தார்.

இம்முறை அவர்களும் இல்லாது வெறிச்சோடிக் கிடந்திருக்கும்…

இவன் இருப்பது ஒருவகையில் ஆறுதல்… ஆதரவு.

தவிர, அனுவின் முகத்தில்தான் எத்தனை பரவசம்!

சீண்டலும், சிரிப்புமாய் காலை உணவு நேரம் அமர்க்களப் பட்டது. கைகழுவியவன், பாக்கெட்டிலிருந்து சிறு டப்பாவைத் திறந்தான்.

“இன்னொரு பரிசு! ஹை…!”

“ம்… போட்டுக்கோ!”

அவன் விரல்களில் மெல்லிய பொன் சரடு!

ஆம்… ஆங்காங்கே தங்கக் காசுகள் கோர்த்த பெரிய சங்கலி.

“பாஸ்கர்… இதென்ன?”

பதற்றமாய் கேட்டாள்.

“செயின்… அனுவுக்கு.”

“அவளுக்குத்தான் காலையிலே பரிசு தந்தாச்சி. இத்தனை விலை உசந்த பரிசெல்லாம் வேணாம்… தப்பு”

“ஸாரி மேடம் பரணி! இந்தப் பரிசு என்னுதில்ல பெரியம்மாவோடது.”

“ஆனாலும்… அவங்க எப்படி?”

“நான் புறப்படும் முன்னரே அமெரிக்காவிலிருந்து உத்த வந்தாச்சு. ரெண்டு பவுனுக்கு அனுவுக்கு ஏதாவது வாங்கிப் போகச் சொல்லி. ஆக, சென்னையிலிருந்து வரும்போது நான் இதை வாங்கி வந்தாச்சு.”

“ஆனா இப்ப… வேணாம்…”

“பள்ளிக்குப் போட்டுக்க வேணாம், சரி! ஆனா, விருந்தி போது போட்டுக்கணும். நாலு ‘போட்டோ’ எடுத்து பெரியம்மாவுக்கு அனுப்ப வேணாம்? பிறகு பத்திரமாய் கழட்டி வச்சிட வேண்டியது…”

“ஹெ! என்னை ‘போட்டோ’ எடுப்பீங்களா அங்கிள்?”

“பின்னே- சரி. இப்ப உன்னை நானே ‘ஸ்கூல்’ல கொண்டு விடவா?”

“இல்ல… அவளுக்கு ‘ரிக்ஷா’ வரும்.”

“வேணாம் சித்தி. இன்னைக்கு நான் காரிலேயே போறேன்”. கையாட்டிவிட்டு அவனோடு குஷியாய் கிளம்பியது அனு.

கூடவே. பாஸ்கரும் இவளை நோக்கி கைவீச, பரணி வெட்கத்துடன் கால்வாசி கையாட்டலுடன் விடை தந்தாள்.


மாலை வைபவம் வெகு உல்லாசமாய் போனது.

குழந்தைகளுக்காய் பல விளையாட்டுகளை பாஸ்கரன் நடத்தினான். ஜெயித்த, தோற்ற அத்தனை குட்டிகளுக்கும் சின்ன சின்ன பரிசுகள்.

அவனது ‘டேப்’பில் தாளமிட வைக்கும் இசை.

கூடவே, குஞ்சு குரல்களும் சேர்ந்து பாடின.

“இன்னொரு ‘கேக்’ ஆன்ட்டி” என்று கேட்டுச் சாப்பிட்டன.

“ரொம்ப வயிற்றை நிரப்பிடாதீங்க குட்டீஸ். ஐஸ்கிரீம் வாங்கி வச்சிருக்கேன் – அதுக்கும் வயித்துலே கொஞ்சம் இடமிருக்கட்டும்”

“ஹை!” பச்சரிசி பற்களை மொத்தமாய் காட்டி, பாஸ்கரன் நீட்டிய ஐஸ்கிரீமை ஆளுக்கு இரண்டு, மூன்று என்று காலி செய்தன குட்டிகள்.

நிமிடத்திற்கு ஒருமுறை ‘காமிரா’ கண்சிமிட்டியது ஒளியாய். கைகோர்த்து ஆடிப்பாடி, குதித்து ரகளை செய்து சற்றே அவை களைத்த நேரம்- அவர்களைக் கிளப்பினான்.

“ஆன்ட்டிக்கு நன்றி சொல்லிட்டு காரிலே ஏறுங்க குட்டீஸ். கொண்டு போய் அவங்கவங்க வீட்டுல விட்டுடறேன்”

சொகுசான கார் பயணம் மேலும் அவர்களுக்கு குதூகலம் போலும். மீண்டும் குதித்தார்கள்.

இன்று இவளுக்கு அதிக வேலையே இல்லை. அத்தனையும் தன் பொறுப்பு போல பார்த்துக் கொண்டான்.

நெஞ்சு நன்றியால் நிரம்பியது.

‘இனி அவனிடம் சற்று இன்முகம் காட்டியே பேச வேண்டும்’ – என்ற முடிவுடன் அவள் தூங்கப் போனாள். மறுநாள் அவன் வைக்கப் போகும் வேட்டினை அறியாமல்!

– தொடரும்…

– ராணிமுத்து மார்ச் 1, 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *