கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 8, 2023
பார்வையிட்டோர்: 5,195 
 

(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குருத்து 10-12 | குருத்து 13-15 | குருத்து 16-18

குருத்து பதின்மூன்று 

உயரமான மேடை. அதன்மீது ஒரு பெரிய பாறாங்கல், நாலைந்து தொழிலாளர்கள் அந்தப் பாறையைக் கடப்பாரை யால் கீழே தள்ளுவதற்குத் தங்கள் பலம் கொண்டமட்டும் முயன்று பார்க்கிறார்கள். தொழிலாளர்கள். நரம்புகள் புடைக்கப் பாறையைத் தள்ளும் காட்சியைக் கற்சிலையாக வடித்துக் கடற்கரையில் வைத்துள்ளான் சிற்பி ஒருவன். 

பாரதியைக் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ராஜா வுக்கு அவளை உடனே வீட்டில் கொண்டு விட்டுவிட மனமில் லாததால், சற்று நேரம் கடற்கரையிலேயே சுற்றிக் கொண் டிருந்தான். எங்கெங்கோ சுற்றிய பின்னர் கடைசியாக அந்தக் கற்சிலையின் அருகில் போய்க் காரை நிறுத்திவிட்டு பாரதி! இந்தச் சிலை எவ்வளவு அழகாயிருக்கிறது. பார்த் தாயா?” என்று கேட்டான். 

“எனக்கு இதைப் பார்க்கவே சங்கடமாயிருக்கிறது” என்றாள் பாரதி. 

“ஏன்?” 

“அந்த மேடைமீது இன்னும்கூட இரண்டு தொழிலாளர்கள் நிற்பதற்கு இடமிருக்கிறதே, அப்படியிருக்கப் பாறையை ஏழெட்டுப்பேர் தள்ளுவதுபோல் செய்திருக்கலாமே” என்றாள் பாரதி. 

“செய்திருக்கலாம்; ஏழெட்டுப்பேர் சேர்ந்து தள்ளினால் பாறை கீழே விழுந்துவிடுமே!” என்றான் ராஜா. 

பாரதி சிரித்துக்கொண்டே, “மிஸ்டர் டிரைவர்! நேரமாகிறது. காரை எடுங்கள். வீட்டுக்குப் போகவேண்டும்” என்றாள். 

“மிஸஸ் டிரைவர்! இப்படி முன் ஸீட்டில் வந்து அமருங்கள். இல்லையென்றால் கார் இந்த இடத்தைவிட்டு நகராது” என்றான் ராஜா. 

“முடியாது; நம் இருவருக்கும் மணமாகும்வரை நான் முன் ஸீட்டில் உட்காரமாட்டேன்” என்றாள் பாரதி. 

“நான் பின் ஸீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டால் கார் ஒட்ட முடியாதே” என்றான் ராஜா. 

பாரதி மீண்டும் சிரித்துக்கொண்டே, “மிஸ்டர் டிரைவர்! காரை எடுக்கப் போகிறீர்களா, இல்லையா?” என்று அதிகாரம் செய்தாள். 

“மேடம்! நீங்கள் முன் ஸீட்டில் வந்து உட்காரப் போகிறீர்களா, இல்லையா?” என்று பாரதியின் காதைப் பிடித்து முன் ஸீட்டுக்கு இழுத்துச் சென்றான் ராஜா. 

பாரதிக்கு ராஜாவின் அருகில் அமர உள்ளுற ஆசை தான் என்றாலும் மேலுக்கு விருப்பமில்லாதவள போல் முகத்தை வைத்துக்கொண்டாள். 

காரை மெதுவாகச் செலுத்தத் தொடங்கினான் ராஜா. இருவருக்கும் இடையே நிலவிய மௌனத்தைக் கலைப்பது போல், “என்ஜினீரிங் படிப்பு முடிந்ததும் என்ன செய்யப் போகிறீர்கள் ராஜா?” என்று கேட்டாள் பாரதி. 

“என்ஜினீராகப் போகிறேன்; ஏன், எதற்காக?” என்றான் ராஜா. 

“அப்படியா! நான் நினைத்தேன்… என்ஜினீரிங் படித்து விட்டு வக்கீல் தொழில் செய்வார்கள் என்று” என்றாள் பாரதி. 

“பி.எஸ்ஸி. படித்து முடித்ததும் நீ என்ன செய்யப் போகிறாய்?’ என்று ராஜா கேட்டான். 

“யாரோ ஒருவரை கார் டிரைவாக அமர்த்திக்கொண்டு அந்த டிரைவரின் மிஸஸ் ஆகிவிடப் போகிறேன்'” என்று கூறிக் ‘கல கல’ வெனச் சிரித்தாள் பாரதி. 

“அந்த யாராவது ஒருவர் யாரோ?” என்று ஆவலோடு கேட்டான் ராஜா. 

“கரா…கஜா!” என்றாள் பாரதி. 

“கச…கபா…கஷ்!” என்றான் ராஜா. 

கார் எங்கெங்கோ வளைந்து திரும்பிக் கடைசியில் பாரதியின் வீட்டை நெருங்கிய சமயம் ராஜா காரை வேகமாகச் செலுத்த முற்பட்டான். 

அதைக்கண்ட பாரதி, “மெதுவாகப் போங்கள். வீடு நெருங்கிவிட்டதே, தெரியவில்லையா?” என்றாள். 

“தெரிகிறது; அதனால்தான் வேகமாகப் போகிறேன். இன்னொரு முறை சுற்றிவிட்டு வரலாமே” என்றான் ராஜா.
“ஊஹூம்.கூடாது; நாம் இருவரும் இப்படியே சுற்றிக் கொண்டிருந்தால் கடைசியில் என் அப்பாவுக்கும் உங்கள் அத்தைக்கும் விஷயம் தெரிந்துவிடும்” என்றாள் பாரதி. 

“தெரியட்டுமே; நம் திருமணத்தைப்பற்றி அவர்களிடம் கூறுவதற்கு நம் இரண்டு பேருக்குமே தைரியம் கிடையாது. அவர்களாகவாவது தெரிந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாமே!” என்றான் ராஜா. 

பாரதி வீட்டுக்குத் திரும்பியபோது மணி ஒன்பதாகி விட்டது. தம்முடைய அறையில் தனியாக உட்கார்ந்து சிந்தனையில் ஈடுபட்டிருந்த சேதுபதிக்கு நேரம் போனதே தெரியவில்லை. சேதுபதியின் சகோதரி காமாட்சி அவரைச் சாப்பிட அழைத்தபோது, “பாரதி டியூஷனிலிருந்து வந்து விடட்டுமே!” என்றார். 

சேதுபதியின் கவலை தோய்ந்த முகத்தைக் கவனித்த காமாட்சி, “அண்ணாவுக்கு என்ன கவலை? மலையே புரண்டாலும் நிலை கலங்க மாட்டாரே! அவரா இப்படிக் கவலையே உருவாக உட்கார்ந்திருக்கிறார்?” என்று வேதனைப்பட்டாள். 

“என்ன அண்ணா உனக்கு? ஏன் ஒரு மாதிரியாக உட்கார்ந்திருக்கிறாய்?” என்று காமாட்சி கேட்டதற்கு, “ஒன்றுமில்லையே, ஏதோ யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று சகஜமாகப் பதில் கூறி அனுப்பிவிட்டார் அவர். 

சற்று நேரத்துக்கெல்லாம் பாரதியும் வந்துவிட்டாள். அப்பா என்ன சொல்வாரோ?’ என்ற திகிலுடன் உள்ளே வந்து கொண்டிருந்த பாரதியைப் பார்த்துச் சேதுபதி, 

“என்னம்மா இவ்வளவு நேரம்? டியூஷனுக்கு நேரமாகி விட்டதா! வா சாப்பிடலாம்” என்று அழைத்ததும் தான் பாரதிக்கு நிம்மதி ஏற்பட்டது. 

“இதோ வந்துவிட்டேன் அப்பா!” என்று குதித்துக் கொண்டே ஓடினாள். பாரதியும் சேதுபதியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சேதுபதி எதுவுமே பேசவில்லை. காமாட்சி கேட்ட கேள்வி அவர் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருந்தது. “என்ன அண்ணா உனக்கு? ‘” என்று கேட்டபோது ‘ஒன்றுமில்லை’ என்று அவளிடம் மழுப்பிவிட் டேன். ஆனால் உண்மையாகவே எனக்கு ஒன்றுமில்லையா? என் உள்ளத்தில் உறுத்திக் கொண்டிருக்கும் எண்ணத்தை அவளிடம் விளையாட்டாகச் சொல்லிப் பார்க்கலாமே என்று தோன்றியது. 

மௌனமாகவே சாப்பாட்டை முடித்துக்கொண்டு ஹாலில் போய் அமர்ந்தவர் சாவகாசமாகத் தட்டிலிருந்த பாக்கையும் வெற்றிலையையும் எடுத்துப் போட்டபடியே ‘காமாட்சி!…’ என்று அழைத்தார். 

காமாட்சி எதிரில் வந்து நின்றதும், “இப்படி உட் கார்ந்து கொள்ள சற்று நேரம் உன்னிடம் தாமாஷாகப் பேசிக் கொண்டிருக்கப் போகிறேன்…” என்று எதிரிலிருந்த சோபாவைச் சுட்டிக் காட்டினார். 

சேதுபதியின் பேச்சும் போக்கும் காமாட்சிக்கு வியப்பை அளித்தன. ‘அண்ணாவா இப்படிப் பேசுகிறார்?’ என்று எண்ணிக் கொண்டவள் “தமாஷுக்கும் வேடிக்கைக்கும்கூட உனக்கு அவகாசம் இருக்கிறதா, அண்ணா!” என்று கேட்டபடியே நாற்காலியில் அமர்ந்தாள். 

சோபாவில் உட்கார்ந்திருந்த காமாட்சியைப் பார்த்து சேதுபதி திடீரென்று கேட்டார். 

“காமாட்சி! இப்போது எனக்கு என்ன வயசிருக்கும்?”

“என்னைவிட நாலு வயசுகூட இருக்கும். ஏன் அண்ணா திடீரென்று இப்போது வயசைப்பற்றி என்ன கவலை வந்து விட்டது உனக்கு?” 

“ஒன்றுமில்லை; சும்மாத்தான் கேட்டேன். இப்போது உனக்கு என்ன வயசு?” 

“நாற்பத்தெட்டு.” 

“உன்னைவிட நாலு வயசு கூட என்றால்… எனக்கு இப்போ ஐம்பத்திரண்டுதானே?” 

“ஆமாம்…” 

“எனக்கு ரொம்ப வயசாகிவிட்டது. இல்லையா?” 

“சீ சீ ! இது ஒரு வயசா, என்ன? அறுபதாம் கலியாணத்துக்கே இன்னும் ஏழு வருஷம் இருக்கே?…” 

“சரி, காமாட்சி! இப்போது நான் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று வைத்துக்கொள். நீ என்ன செய்வே?” காமாட்சி சிரித்துக்கொண்டே, ”உனக்கு மனைவியாக வருகிறவளை ‘அண்ணி’ என்று கூப்பிடுவேன்” என்றாள். 

காமாட்சியின் பதில் சேதுபதிக்குச் சற்று நிம்மதி அளித்தது. விளையாட்டாகக் கேட்பது போலவே தன் உள்ளத்திலுள்ள சந்தேகங்களை யெல்லாம் ஒவ்வொன்றாகக் கேட்கலானார். 

“ம்…சரி; நீ அண்ணின்னு கூப்பிடுவே, பாரதி என்ன செய்வாள்?” 

“அம்மா என்று கூப்பிடுவாள்.” 

சேதுபதி சிரித்தார். சிரித்துக்கொண்டே, “என் கேள்வி யெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது இல்லையா, உனக்கு!” என்று கேட்டார். 

“வேடிக்கையாகத்தானே நீ கேட்கிறாய்?” என்றாள் காமாட்சி. 

“நீ எப்படி நினைக்கிறே? நிஜமாகவே கேட்பதாக எண்ணிவிட்டாயா? அதுசரி; இன்னொரு முக்கியமான கேள்வியையும் கேட்டு விடுகிறேன். இப்போது நான் கல்யாணம் செய்துகொண்டால் உலகம் அதைப்பற்றி என்ன நினைக்கும்?” 

“ஒன்றும் நினைக்காது கை கொட்டிச் சிரிக்கும்; அவ்வளவுதான்: பாரதி குழந்தையாயிருக்கும்போதே நான் படித்துப் படித்துச் சொன்னேன். அப்போது நீ கேட்கவில்லை. சரஸ்வதியை மறக்க முடியாது. அவளுடைய ஸ்தானத்தில் இன்னொருத்திக்கு இடமளிக்க மாட்டேன் என்று சீறி விழுந்தாய். இப்போது இத்தனை வயதான பிறகு, திருமணத்தைப் பற்றி நீயாகவே பேசுகிறாய். உலகம் என்ன நினைக்கும் என்று கேட்கிறாய். விளையாட்டாகக் கேட்பதாகச் சொல்கிறாய் உலகம் என்ன நினைக்கும் தெரியுமா? ‘குடுகுடு கிழவருக்குக் கலியாணம் டும் டும் கொட்டித் தாலி கட்டினார்’ என்று கேலி செய்யும்.”

“காமாட்சி! இந்த உலகத்தையே எதிர்த்துத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வைத்துக்கொள். அப்போது?…” 

”செய்து கொள்ளலாம்; ஆனால், நீ இந்த உலகத்தில் வாழவேண்டுமே…” 

இதைக் கேட்ட சேதுபதி ‘ஓ’ என்று எக்காளமிட்டுச் சிரித்தார், சிரித்துக்கொண்டே “அசடே! சுத்தப் பயித்தியமாயிருக்கிறாயே! சொன்னதை நான் விளையாட்டாகச் யெல்லாம் உண்மையென்று நம்பிவிட்டாயா? பாரதிக்குக் கலியாணம் செய்யவேண்டிய வயசிலே நான் திருமணம் செய்து கொள்வேனா? நிஜமாகவே நம்பிவிட்டாயா?” சேதுபதி கூறியது உண்மைதான். அந்த நிஜத்தை வாழ்க்கையோடு விளையாடிப் பார்க்க எண்ணினார். அந்த எண்ணத்தைத்தான் சகோதரியிடம் வேடிக்கையாகக் கூறிப் பார்த்தார். காமாட்சியின் பதில் அவருக்கு வேதனையை அளிக்கவே, தன் வார்த்தைகளை வேடிக்கை என்று கூறி மழுப்பி விட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து போய்விட்டார். 

படுக்கையில் போய் சாய்ந்து கொண்டவருக்கு வெகு நேரம் தூக்கம் வரவில்லை. இரண்டு கேள்விகள் அவர் உள்ளத்தில் புகுந்து மாறி மாறிக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு குரலும் தனித் தனியாகப் பேசும் போது அதன் தன் கட்சியை வலிவாக வாதாடியது! 

‘உலகத்தை எதிர்த்துத் தைரியமாக மணம் புரிந்து கொள்! துணிந்து நிற்பதுதான் ஆண்மைத்தனம்’ என்றது ஒரு குரல். 

‘உலகத்துக்குத் தாழ்ந்துப் போய்விடு. அது தான் அடக்கம். அப்போதுதான் உலகோடு ஒட்டி வாழமுடியும்’ என்றது இன்னொரு குரல். 

இரு குரல்களும் மாறி மாறி எழுந்து முழுக் சக்தியுடன் அவருடன் போர் புரிந்தன. இரு எண்ணங்களுமே சரி சமமான பலத்தில் எதிர்த்து நின்றதால், அவற்றில் எது சரி எது தப்பு என்பதை அவரால் முடிவு கட்ட முடியவில்லை. நேரம் போய்க்கொண்டிருந்தது. கடைசியில் எந்த முடிவுக்கு வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த சேதுபதியை உறக்கம் ஆட்கொண்டது. 

கல்லூரி அலுவலக அறையில் உட்கார்ந்திருந்த பிரின்ஸிபால் பார்வதி, அன்று வந்த கடிதங்களைப் படித்துக்கொண்டிருந்தாள். அவற்றில் ஒன்று மீனாவைப் பற்றியது. ஹாஸ்டலில் தங்கி பி.ஏ. இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருத்தியின் பெயர்தான் அது. கல்லூரியிலேயே மிக அழகி என்று பெயரெடுத்தவள் அவள்.ஆடம்பரமான ஆடை, பகட்டான ஆபரணங்கள் ஏதுமின்றியே எளிமையான உடையணிந்து காண்போரைக் கவர்ந்துவிடும் வசீகரக் கவர்ச்சி அவளிடமிருந்தது. இடைவேளையிலோ அல்லது வேறு வேளையிலோ கல்லூரி மாணவிகள் அத்தனை பேரும் தினமும் அவளை ஒரு முறை பார்க்காமல் போக மாட்டார்கள். அவள் ஆடை அலங்காரத்தைப் பற்றியும் தினுசு தினுசாகப் போட்டுக் கொள்ளும் கொண்டைகளைப் பற்றியும் பேசாமல் இருக்கமாட்டார்கள். 

நாகரிகம் என்ற பெயரில் கூந்தலைக் கந்தரித்துக் கொண்டும், குதிரைவால் முடிபோட்டுக்கொண்டும் அலங்கோலமாகச் சிங்காரித்துக் கொண்டும்வரும் மாணவிகளைப் பார்வதிக்குக் கட்டோடு பிடிக்காது. அத்தகைய மாணவிகளை அழைத்துக் கண்டிக்கவும் தவற மாட்டாள். ஆயினும் பார்வதிக்கு மீனாவின் அடக்கமான ஆடை அலங்காரத்தில் குற்றம் காண முடியவில்லை. 

டென்னிஸ் முதலிய விளையாட்டுப் போட்டிகளில் பல கல்லூரி மாணவ மாணவிகளை வென்று சாரதாமணிக் கல்லூரிக்குப் பெருமையும் புகழும் தேடித் தந்துள்ள பெருமையும் மீனாவுக்கு உண்டு. 

கடிதம் மீனாவைப் பற்றியது என்பதை அறிந்த பார்வதி, மிக அக்கறையுடனேயே அதைப் படித்து முடித்தாள். அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. 

வேறொரு சமயமாயிருந்தால் கடிதத்தில் இருந்த விஷயம் இதற்குள் பார்வதியை வேங்கையாக மாற்றிச் சீறச் செய்திருக்கும். தன் கல்லூரி கௌரவமே பாழாகி விட்டதாக எண்ணிக் கொந்தளித்திருப்பாள். அந்தக் கணமே மீனாவைத் தன் அறைக்கு அழைத்து வரச்சொல்லி, ஒழுக்கம் கெட்ட பெண்களுக்குத் தன் கல்லூரியில் இடமில்லை என்று ஏசி டிஸ் மிஸ் செய்து ஹாஸ்டலிலிருந்தும் வெளியேற்றியிருப்பாள். இப்போது அவள் பழைய பார்வதி அல்ல. முற்றிலும் மாறி விட்ட ஒரு புதுமைப் பெண்மணி. 

மீனாவின் தந்தை எழுதியிருந்த அக்கடிதத்தை எடுத்து மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தாள். அப்போதும் அவளுக்குக் கோபம் வரவில்லை. 

“தங்கள் கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் பெண்கள் தகுந்த பாதுகாப்பின் கீழ் பத்திரமாகப் படித்து வருவார்கள். அவர்களுடைய ஒழுக்கம் கெட்டுப்போகாத முறையில் தாங்கள் கவனித்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையும் நல்ல பெயரும் தங்கள் கல்லூரிக்கு எப்போதுமே உண்டு. அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் என் மகள் மீனாவைத் தங்கள் கல்லூரி ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைத்தேன். இப்போது நான் கேள்விப்படும் செய்தி என்னைத் திடுக்கிடச் செய்துள்ளது. 

மீனா வேறொரு கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவனை அடிக்கடி சந்திப்பதாகவும், அவனுடன் நட்பு கொண்டிருப்பதாகவும் எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கிறது. இது உண்மையானால் இதைவிட அவக் கேடான செய்தி வேறொன்றும் இருக்க முடியாது. இது பற்றித் தாங்கள் உடனே தீர விசாரித்து எனக்கு உண்மையைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.” 

பார்வதிக்கு வியப்பாக இருந்தது. ‘இதில் உண்மையிருக்குமா?’ என்று யோசித்துப் பார்த்தாள். ‘மீனா மிக நல்ல பெண். அப்படியெல்லாம் பண்புகெட்டு நடக்கக் கூடியவள் அல்ல’ என்றே கூறியது அவள் உள் மனம். 

மீனாவையே நேரில் அழைத்துக் கேட்டுவிடலாம் என்ற முடிவுடன் ஆறுமுகத்தை அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னாள். 

மீனா எதிரில் வந்து நின்றபோது பார்வதி சற்று நேரம் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். பெண்ணுக்குப் பெண்ணே பார்த்து வியக்கும் அளவுக்கு அத்தனை அழகு! பார்வதியால் சட்டென்று விஷயத்தைப் பிரஸ்தாபிக்க முடியவில்லை. சுற்றி வளைத்து ஏதேதோ கேள்விகளை யெல்லாம் கேட்டுவிட்டுக் கடைசியில் “ஸ்போர்ட்ஸெல்லாம் இப்போது எந்த மட்டில் இருக்கிறது, மீனா?” என்று கேட்டாள். “பரீட்சை முடிகிற வரையில் அதைப்பற்றி நினைக்கவே நேரம் கிடையாது மேடம்” என்றாள் மீனா. 

“பேஷ்! அப்படித்தான் படிக்கவேண்டும். அது சரி; பீ.ஏ.வை முடித்துவிட்டு என்ன செய்யப் போகிறாய்?” 

“அப்பா என்ன சொல்கிறாரோ, அதன்படி நடந்து கொள்வேன்…” 

“அப்பா கல்யாணம் செய்து கொள்ளச் சொன்னால்…”

“அவர் இஷ்டப்படியே நடப்பேன்.” 

“அவர் தேர்ந்தெடுத்துச் சொல்லும் பையனை மணந்து கொள்வாயல்லவா?…” 

“அதுதான் முடியாது; அந்த ஒரு விஷயத்தில் மட்டும் எனக்குச் சுதந்திரம் வேண்டும்.” 

“அப்படி யென்றால் நீயாகவே ஒருவனைத் தேர்த்தெடுக்கப் போகிறாயா?”

“ஆமாம்…” என்று கூறியவள், வெட்கத்துடன் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். 

“மீனா அந்தப் பையன் யாரென்று என்னிடம் சொல்லலாமோ?” 

மெளனமாக நின்றாள் மீனா. 

“என்னிடம் வெட்கப்படாமல் சொல், பார்க்கலாம். இது விஷயத்தில் உனக்கு என்னாலான உதவியைச் செய்கிறேன். உன் அப்பாவுக்கு நானே கடிதம் எழுதி, உன் திருமணத்தை முடிந்து வைக்கிறேன்…” 

“எனக்கு வெட்கமாக இருக்கிறது மேடம்…” 

“மீனா ! என்னிடம் சொல்லுவதற்கு வெட்கப்படலாமா? எங்கே சொல்லு பார்க்கலாம்…” 

தலையை நிமிர்த்திச் சொல்லுவதற்கு ஆயத்தமான மீனாவை மீண்டும் வெட்கம் சூழ்ந்துகொண்டது. 

“யார் அவன்? எங்கே இருக்கிறான்? பெயர்?…..” தூண்டிக்கேட்டாள் பார்வதி. 

“டென்னிஸ் ப்ளேயர் கோபாலன்.” 

“யார் அது? கார்நேஷன் கல்லூரியில் படிக்கும் டென்னிஸ் சாம்பியன் கோபாலனா? அவனுடன் உனக்கு எப்படிப் பழக்கம் ஏற்பட்டது?”

“டென்னிஸ் மாட்ச் நடைபெற்றபோது ….” 

“சரி; நீ வகுப்புக்குப் போகலாம்”. 

மீனா திரும்பி வகுப்பை நோக்கி நடந்தாள். அவள் நடையழகையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த பார்வதிக்கு மீனாவின்மீது துளியும் கோபம் வரவில்லை. மீனாவின் மீது குற்றம் இருப்பதாகவும் தோன்றவில்லை. அதற்குப் பதிலாக அவள் மீது அனுதாபமே பிறந்தது. 

டெலிபோனை எடுத்துக் கார்நேஷன் கல்லூரியின் எண்களைச் சுழலவிட்டாள். அடுத்த கணமே அந்தக் கல்லூரியின் பிரின்ஸிபால் திருவாளர் வேதாந்தம் பேசத் தொடங்கினார். 

“நான் தான் சாரதாமணிக் கல்லூரி பிரின்ஸிபால் பேசுகிறேன். தங்களிடம் ஒரு முக்கிய விஷயம் பேசவேண்டும். இப்போது வந்தால் சந்திக்க முடியுமா?” என்று கேட்டாள் பார்வதி. 

“தாங்களா இங்கே வருவதா? தங்களுக்குச் சிரமம் வேண்டாம். அரை மணிக்குள் நானே அங்கு வந்துவிடுகிறேன்” என்றார் வேதாந்தம். 

“தயவு செய்து மன்னிக்க வேண்டும். என்னுடைய காரியமாகவே தங்களைப் பார்க்க வரப்போகிறேன். ஆகையால் நான் அங்கே வருவதுதான் முறை. இதோ இப்போதே புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியபடி நாற்காலியை விட்டு எழுந்தாள் பார்வதி. 

குருத்து பதினான்கு 

பார்வதியின் கார், கார்நேஷன் கல்லூரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதைச் செலுத்திக்கொண்டிருந்த பார்வதியின் உள்ளம் தீவிரச் சிந்தனையில் ஈடுபட்டிருந்தது. 

மேற்படி கல்லூரியின் தலைவர் திருவாளர் வேதாந்தத்தைப்பற்றி எண்ணும்போதே அவளுக்கு ஒருமித அச்சமும், பக்தியும் தோன்றின. அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவளுக்கு இதுவரை ஏற்பட்டதில்லை. இதற்குமுன் அவரை இரண்டொருமுறை சந்தித்துப் பேசியிருக்கிறாள். ஆயினும், குறைந்த வார்த்தைகளுடனேயே அச்சந்திப்புகள் முடி வடைந்து விட்டன. 

சாரதாமணிக் கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்தபோதுகூடப் பார்வதியால் அவரிடம் பேச முடியவில்லை. அடக்கமே உருவான திருவாளர் வேதாந்தம், அமைதியே வடிவமாய் ஒரு பக்கமாகப் போய் உட்கார்ந்து கொண்டிருந்தார். நிறைகுடம் என்பார்களே, அந்தப் பெயர் திருவாளர் வேதாந்தத்தைப் பார்த்த பிறகே தோன்றியிருக்க வேண்டும். 

ஆங்கிலம், தமிழ் இவ்விரு மொழிகளிலும் அவருக்கு ஆழ்ந்த புலமையும் சரி சமமான பற்றுதலும்,ஞானமும் இருந்தன. கம்பனையும் ஷேக்ஸ்பியரையும் சமநோக்குடன் சம எடையில் வைத்து ஆராய்ந்த அறிவாளர் அவர். 

நிஜாரும், கோட்டும் போட்டுக்கொண்டு, குடுமியா கிராப்பா என்று தெரியாமல் மறைத்துவிடும் தலைப்பாகையுடன்தான் எந்நேரமும் காட்சியளிப்பார். யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. அப்படிப் பேசினாலும் பொதுவாகத் தமிழ் இலக்கியங்களைப் பற்றியோ, ஆங்கில நூல்களைப் பற்றியோதான் பேசுவார். 

எந்த மொழியில் பேசிய போதிலும் அந்த மொழிக்கே உரிய தனித் தூய்மையுடன் தான் பேசுவார். ஒரு மொழி பேசும்போது அத்துடன் இன்னொரு மொழியைக் கலந்து விடக்கூடாது என்பதில் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பவர். 

திருவாளர் வேதாந்தத்துடன் தமிழில் பேசுவதா, ஆங்கிலத்தில் பேசுவதா என்ற கவலை ஒருபுறமும், தன்னுடைய கல்லூரி மாணவி மீனாவைப்பற்றி அவரிடம் எவ்வாறு பேச்சைத் தொடங்குவது என்ற அச்சம் இன்னொரு புறமும் பார்வதியை வாட்டிக் கொண்டிருந்தன. 

‘எங்கே வந்தீர்கள், என்ன விஷயம்’ என்று வேதாந்தம் கேட்டால், விஷயத்தை எப்படித் தொடங்குவது? 

‘தங்கள் கல்லூரி மாணவன் கோபாலனைப்பற்றிப் பேச வந்திருக்கிறேன்’ என்று கூறி, மீனாவின் தந்தையிடமிருந்து வந்துள்ள கடிதத்தை அவரிடம் கொடுத்து விடுவதா? அல்லது பொதுவாகச் சில விஷயங்களைப்பற்றி முதலில் பேசிக்கொண்டிருந்த பின்னர், பேச்சுக்கிடையில் தான் வந்த காரியத்தை நாசுக்காக அறிவிப்பதா? 

காதல், கல்யாணம் இவைபற்றி வேதாந்தம் என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறார் என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். பின்னர்தான் மீனா விஷயத்தைப் பிரஸ்தாபிக்க வேண்டும். கோபாலனைப்பற்றிக் குற்றம் சொல்வ தாகவும் இருக்கக் கூடாது. நடந்திருப்பதையும் தெளிவாகச் சொல்லவேண்டும். காதல் விவகாரங்களில் அனுபவம் எதுவுமே இல்லாத பார்வதிக்கு இது ஒரு பெரும் பிரச்னையாக இருந்தது. 

திருவாளர் வேதாந்தத்தைச் சந்தித்து உரையாடப் போவது இதுதான் முதல் தடவை. முதல் முறையாக அவரைச் சந்திக்கப் போகும்போது இம்மாதிரியான காதல் விவகாரத்தையா எடுத்துக் கொண்டு போகவேண்டும்? 

இன்னொரு புறம் காதலைப்பற்றிய உணர்வு அவள் சிந்தனையைப் பகிர்ந்து கொண்டிருந்தது. 

மீனா – கோபாலன் நட்பில் குற்றம் இருப்பதாக அவளால் ஊகிக்க முடியவில்லை. தவறு ஏதும் நேராத வரையில் மீனாவும் கோபாலனும் நெருங்கிப் பழகுவதை ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? 

பார்வதி யோசித்தாள். இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு திருவாளர் வேதாந்தத்திடம் போக வேண்டியது அவசியந்தானா என்றுகூடத் தோன்றியது அவளுக்கு. ஆனாலும் வேதாந்தம் இதைப்பற்றி என்ன எண்ணுகிறார்; என்ன சொல்லுகிறார் என்பதை அறிந்து கொள்ளவும் ஆவல் தூண்டியது. 

வாழ்ந்துவிட்ட காலமெல்லாம் கன்னியாகவே பார்வதிக்கு, காதல் கல்யாணம்பற்றிய அனுபவமே இல்லாத பார்வதிக்கு, கல்வியும் கல்லூரியுமே உலகம் என வாழ்நாளை வீணாக்கிவிட்ட பார்வதிக்கு இப்போது ஒரு புதிய உணர்வும் உற்சாகமும் தோன்றியுள்ளன. 

இந்த நிலைக்குக் காரணம் சேதுபதிதான். 

சேதுபதியின் உறவை அவருடைய நட்பை அவள் விரும் பினாள்; எந்நேரமும் அவர் தன்னுடனேயே இருக்கவேண்டும் என்று எண்ணினாள். இந்த ஆசைக்கு, விருப்பத்துக்கு, எண்ணத்துக்கு என்ன காரணம் என்பதை அவளால் கூற முடியவில்லை. சேதுபதியிடமே கூடச் சொல்ல முடியாமல் இரகசியத்தில் மௌனமாக இருந்து வேதனைப்பட்டுக்கொண் டிருந்த பார்வதியின் உள்ளப்போக்கில் இப்போது பெரும் மாறுதல் ஏற்பட்டிருந்தது. 

நிறையப் படித்துள்ள பார்வதிக்கு, பல நூல்களை ஆராய்ந்து பட்டங்கள் பெற்றுள்ள பார்வதிக்கு இத்தனை அறிவும், ஆற்றலும் இருந்தும் தன் சொந்த வாழ்க்கையை மலரச் செய்து கொள்ளத் தெரியவில்லை. அனுபவத்தோடு அறிவு சேருகிறபோதுதான் மலர்ச்சியும் ஏற்படுகிறது. இப்போதுதான் அந்த அனுபவம் அவளுக்குக் கிட்டியிருக்கிறது. 

பார்வதி காரைவிட்டு இறங்கும்போதே வாசலில் காத் திருந்த வேதாந்தம் “வாருங்கள் வரவேண்டும்…” என்று அகமும் முகமும் மலரக் கைகூப்பி வரவேற்றார். 

முதிர்ந்த தோற்றமும் அறிவின் ஒளிவீசும் கண்களும் அடக்கமும் அமைதியும் கலந்த பண்பாடும் ஒருங்கே சேர்ந்த உருவமே வேதாந்தம் என்ற பெயரைப் பெற்றிருந்தனவோ? ‘தங்கள் வரவு நல்வரவாகுக’ என்ற உபசரிப்புடன் தம்முடைய அறைக்குப் பார்வதியை அழைத்துச் சென்றார் அவர். 

புன்சிரிப்பைத் தவிர, பார்வதியின் வாயினின்று எதுவுமே வெளிப்படவில்லை. 

பேச்சை எப்படித் தொடங்குவது என்பதிலேயே அவள் மனம் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. 

கடைசியில், “தங்களைச் சந்தித்துப் பேசும் பேறு எனக்குக் கிட்டியதற்காக மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பேச்சைத் தொடங்கினாள். 

வேதாந்தம் சிரித்தார். கள்ளம், கபடறமற்ற அந்தச் சிரிப்பின்மூலமே தம்முடைய பதிலைக் கூறிவிட்டார் அவர். 

“தாங்கள் என்னைத் தேடிவந்த காரியம் என்னவோ?” ஆங்கிலத்தில் மிக மிகச் சரளமாகப் பேசும் திறமை பெற்றிருந்த போதிலும் வேதாந்தம் தூய தமிழிலேயே பேசினார். 

கார்நேஷன் கல்லூரி பிரின்ஸிபால் பதவி அவரைத் தேடி வந்ததற்குக் காரணம் அவர் தமிழில் பெரும் புலமை பெற்றவர் என்பதற்காக அல்ல. ஆங்கிலத்தில் அவருக்கு உள்ள ஞானமே அவரை இந்த நிலைக்கு உயர்த்தியது. ஆயினும், அவர் தம்மை ஒரு தமிழ்ப் புலவர் என்று கூறிக் கொள்வதிலேயே பெருமைப்பட்டார். தம்மைப் பொறுத்த வரையில் தமிழுக்கு உயர்ந்ததொரு ஸ்தானத்தைக் கொடுக்க வேண்டுமென்பதற்காகவே தலைப்பாகையைத் தலையிலே அணிந்து கொண்டிருந்தார். 

“வள்ளுவரைப்பற்றித் தங்கள் கருத்து என்னவென்பதை நான் அறியலாமா?”-பார்வதி மிக மிக விநயமாகக் கேட்டாள். 

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு, என்று பாரதி பாடிய பிறகு, நான் கூறுவதற்கு என்ன இருக்கிறது!” 

“மன்னிக்க வேண்டும். இன்னொரு விஷயம்பற்றியும் தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்” என்றாள் பார்வதி. “நன்று நன்று! தாராளமாகக் கேளுங்கள்” என்றார் வேதாந்தம். 

“காதல் என்ற சொல்லுக்குத் தாங்கள் விளக்கம் தர முடியுமா;” 

“காதல் என்ற புனிதமான சொல் ஆண் பெண் உறவு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. நான் தமிழ் மொழிமீது காதல் கொண்டுள்ளேன். சிலர் இந்திமீது காதல் கொண்டுள்ளார்கள். உங்களுக்கு உங்கள் கல்லூரியின்மீது காதல்.”

“உண்மைக் காதலைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?…” 

“அதுபற்றித் தனிச் சொற்பொழிவே நிகழ்த்த வேண்டும். ஆனாலும் ஒன்று கூறுவேன். காதல் என்பது ஆண்மகனுடைய வாழ்க்கையில் ஒரு பகுதிதான். ஆனால் அதுவே ஒரு பெண்ணின் முழு வாழ்வுமாகும்”. 

“மிக உயர்ந்த கருத்து…” என்று பாராட்டினாள். 

“இக் கருத்து என்னுடையதல்ல. பைரனைப் பாராட்டுங்கள்” என்றார் வேதாந்தம். 

“அப்புறம்?” என்பதுபோல் முகத்தை வைத்துக் கொண்டு வேதாந்தத்தையே கூர்ந்து நோக்கினாள் பார்வதி. 

“ஒரு பெண்ணின் உள்ளத்தில் காதல் உணர்ச்சி தோன்றும்போதுதான் காதலைப்பற்றிய முழுச் சக்தியையும் அவள் அறிய நேரிடுகிறது” என்றார் வேதாந்தம். 

“காதலைப் பற்றி வள்ளுவர்?…” 

“நிரம்பச் சொல்லியிருக்கிறார். அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தது, “காணுங்காற் காணேன் றவறாய 
காணாக்காற் காணேன் றவறல்லவை” என்ற குறளாகும். காதலனை நேரில் காணும்போது காதலிக்கு அவனுடமுள்ள குற்றங்கள் எதுவுமே தெரிவதில்லையாம். அவனைக் காணாதபோது அவனிடமுள்ள குற்றங்களைத் தவிர வேறெதுவுமே தெரிவதில்லையாம்!”

“எவ்வளவு அழகான கருத்து…” என வியந்தாள் பார்வதி. 

“வள்ளுவர் கூறாத கருத்துக்களே இல்லை” என்று மகிழ்ந்தார் வேதாந்தம். 

மௌனத்திலாழ்ந்திருந்த பார்வதி, ஏதோ பேசுவதற்குத் தயங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் குறிப்பால் அறிந்த வேதாந்தம், “ஏதேனும் முக்கிய விஷயமிருந்தால் தயங்காமல் கூறுங்கள்” என்றார். 

“தாங்கள் இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்க்கவேண்டும். இந்த அற்ப விஷயத்தில் தங்களுக்குத் தொந்தரவு கொடுப்பதற்காக மன்னிக்க வேண்டும்” என்ற பூர்வ பீடிகையுடன் கடிதத்தை எடுத்துக் கொடுத்தாள் பார்வதி. 

அதைப் பிரித்துப் பார்த்த வேதாந்தம், “இதையா அற்ப விஷயம் என்று கூறினீர்கள்? இது நம் இரு கல்லூரியையுமே பாதிக்கும் விஷயமல்லவா? இம்மாதிரி விஷயங்களில் நாம் அலட்சியமாக இருந்துவிட்டால் கடைசியில் அது நம் கல்லூரிகளுக்கே இழுக்கைத் தேடித் தரும். கல்லூரித் தலைவர்களுக்கு இவை சம்பந்தமற்றவை என்று உதாசீனம் செய்துவிடுவது மிகமிகத் தவறான செயல். இது விஷயத்தில் தாங்கள் எடுத்துக்கொண்ட அக்கறையைப் பாராட்டுகிறேன். இப்போதே கோபாலனை அழைத்துப் பேசி உண்மையை அறிந்துகொண்டு விடுவோம். சற்று நேரம் தாங்கள் இந்த அறையிலேயே உட்கார்ந்திருங்கள். தங்களை நேரில் வைத்துக்கொண்டு அவனை விசாரிப்பது அவ்வளவு சரியாக இருக்காது. அவன் என்ன கூறுகிறான் என்பதைத் தாங்களும் கேட்க வேண்டும். ஆகையால், நான் அவனை அடுத்த அறைக்கு வரச்சொல்லி விசாரணை செய்கிறேன். இந்த அறையிலிருந்தபடியே தாங்கள் கேட்டுக் கொள்ளலாம்” என்றார். 

தலையசைத்தாள் பார்வதி. அடுத்த அறையில் விசாரணை ஆரம்பமாயிற்று. 

“கோபால்! உன்னிடம் இன்று சில கேள்விகள் கேட்கப் போகிறேன். எதையும் மறைக்காமல் பதில் கூறவேண்டும். இப்படி உட்கார்ந்து கொள்” என்றார் வேதாந்தம். 

கோபாலன் உட்காரவில்லை. “மன்னிக்க வேண்டும்!” என்று கூறித் தன் பண்பை வெளிப்படுத்தினான். 

“உனக்கு என்ன வயதாகிறது கோபால்?”

“இருபத்து மூன்று..? 

“இந்த ஆண்டுடன் உன் படிப்பு முடிந்து விடுகிற தல்லவா?”

“ஆம்..”

“அப்புறம் என்ன செய்யப் போகிறாய்..?”

“ஏதாவது ஓர் அலுவலகத்தில் சேர்ந்து பணி புரியப் போகிறேன்…”

“எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறாய்?”

“என் தந்தை முடிவு செய்யும்போது..”

“உன் தந்தையாகப் பார்த்து முடிவு செய்யும் பெண்ணை மணந்து கொள்ள போகிறாயா? அல்லது…” 

“அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்…”

“அப்படியானால்” 

“நானாக ஒரு பெண்ணைத் தேர்ந்து மணம் செய்து கொள்வதற்கு அவர் தம்முடைய பூரண சம்மதம் அளிப்பார்…” 

“ஒரு வேளை நீ தேர்ந்தெடுக்கும் பெண்ணை அவர் ஒப்புக் கொள்ளவில்லை யென்றால்?…” 

“ஒப்புக்கொள்ளமாட்டார் என்று ஏன் சந்தேகப்பட வேண்டும்? பொதுவாக உலகத்தில் நம்பிக்கைதான் முக்கியம். ஆயினும், எல்லாவற்றிலுமே நம்பிக்கை வைத்துவிடக் கூடாது தான். அதற்காக எதையுமே நம்பாமலும் இருக்கக் கூடாதல்லவா?”

“கோபால்! மிக அருமையாகப் பேசுகிறாயே! இதுவரை விளையாட்டிலும் படிப்பிலும் மட்டுமே புத்திசாலி என்று தான் எண்ணிக்கொண்டிருந்தேன். காதல் விவகாரத்திலும் நீ…” வேதாந்தம் சிரித்தபடியே கூறினார். 

“காதலா!…” கோபாலன் சற்றுத் திகைப்போடு கேட்டான். 

“காதலிப்பது தவறில்லை கோபால் !இதோ பார் இந்தக் கடிதத்தை..” 

கடிதத்தை வாங்கிப் படித்த கோபாலன், “ஐயா, மீனாவை நான் நேசிப்பது உண்மைதான். ஆனால் எங்கள் நட்பில் முறைகேடு எதுவும் கிடையாது. அவளை நான் என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன்.” அழுத்தமாகவும் திருத்தமாகவும் பேசினான் கோபால். 

கோபாலனின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதியின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கிற்று. அவனை ஒரு முறை கண்ணால் பார்த்துவிட விரும்பிய பார்வதி, கதவின் வழியாக அவனைப் பார்க்கவும் செய்தாள். 

சிரித்த முகத்துடன், மிடுக்கான தோற்றத்துடன் அடக்கமாக நின்றுகொண்டிருந்த கோபாலனின் உருவத்தைக் கண்ட பார்வதி, ‘மீனாவுக்கு ஏற்ற ஜோடிதான்’ என்று மனத்திற்குள்ளாகவே மகிழ்ந்து கொண்டாள். 

“சரி, நீ போகலாம்” என்று கோபாலனை அவனுடைய வகுப்புக்கு அனுப்பிவிட்டுத் தம்முடைய அறைக்குத் திரும்பி வந்தார் வேதாந்தம். 

வேதாந்தத்தைக் கண்டதும் “மிக்க நன்றி. தங்களுடைய நேரத்தை வீணாக்கி விட்டதற்காக மன்னிக்க வேண்டும்” என்று எழுந்து நின்றாள் பார்வதி. 

“வீணாக்கி விட்டதாக எப்படிக் கூற முடியும்? பயனுள்ள ஒரு முக்கிய காரியமல்லவா இது?” 

பார்வதி பதில் கூறாது புன்முறுவலுடன் நின்று கொண்டிருந்தாள். 

“ஆமாம்; தாங்கள் தமிழில் இவ்வளவு அழகாகப் பேசுகிறீர்களே, எப்போதுமே இப்படித்தான் பேசுவீர்களா?” வேதாந்தம் விசாரித்தார். 

“இல்லை; தமிழில் பேசினால் தாங்கள் மகிழ்ச்சியுறுவீர்கள் என்பதால் பேசிப் பார்த்தேன். நான் நன்றாகப் பேசுகிறேன் என்பதைக் கேட்க எனக்குப் பெருமையாக இருக்கிறது…” என்றாள் பார்வதி. 

“மீனாவின் தந்தைக்குக் கடிதம் எழுதி, திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடு செய்துவிடுங்கள். கல்லூரித் தலைவர்கள், மாணவர்களின் கல்வி விஷயத்தில் மட்டும் கருத்தைச் செலுத்தினால் போதாது. அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டும்…” சிரித்தபடியே கூறினார் வேதாந்தம். 

“வணக்கம்; நான் வருகிறேன்” என்று விடைபெற்றுக் கொண்டாள் பார்வதி. 

அன்று காலையில் தினப்பத்திரிகை வந்ததும் பார்வதி அவசர அவசரமாக அதைப் புரட்டினாள். பத்திரிகையின் ஏதோ ஒரு மூலையில் வழக்கமாக வரும் ஒரு பகுதியில் அவள் கவனம் சென்றது. அந்தப் பகுதியிலிருந்த செய்தியைக் கண்டதும், அவள் பெரும் வேதனைக்குள்ளானாள். 

“நேற்றிரவு சேதுபதி பம்பாய்க்குப் பயணமானார்” என்பதுதான் அச்செய்தி. ஏற்கெனவே அவள் சேதுபதியைச் சந்தித்து நாலைந்து நாட்களாகியிருந்தன. அந்தப் பிரிவுகூட அவளுக்கு வேதனையைத் தரவில்லை. இப்போது தன்னிடம் கூறிக் கொள்ளாமலே அவர், பம்பாய்க்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார் என்னும் தகவலைத்தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த உலகமே வெறிச்சென்றாகி விட்டதைப்போல் உணர்ந்தாள். அவர் ஊரிலிருந்தபோது சேதுபதி தன் அருகில் இருந்தது போலவும், இப்போது எல்லாமே தன்னைவிட்டு விலகிச் சென்றுவிட்டது போலவும் உணர்ந்தாள். 

சேதுபதியின் மீது அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. அடுத்த கணம் நான் ஏன் அவரைக் கோபிக்க வேண்டும்? எதற்காக அவர் என்னிடம் சொல்லிக்கொண்டு போக வேண்டும்? எனக்கும் அவருக்கும் என்ன உறவு? அன்று என்னுடைய சொந்த அண்ணன் என்னைத் தனியாகத் தவிக்கவிட்டுச் சொல்லிக் கொள்ளாமல் போனபோதுகூட எனக்குக் கோபம் வரவில்லையே! இப்போது எனக்குச் சம்பந்தமற்ற யாரோ ஒருவர் தன் சொந்தக் காரியமாகப் பம்பாய் போய்விட்டார் என்பதற்காகக் கோபம் வருவானேன்?’ பார்வதிக்கு வேதாந்தம் சொன்ன குறள் நினைவுக்கு வந்தது. 

“காணுங்காற் காணேன் றவறாய் 
காணாக்காற் காணேன் றவறல்லவை” 

விமானத்தில் போய்க்கொண்டிருந்த சேதுபதியின் உள்ளத்திலும் அமைதியில்லை. ஊரை விட்டுப் புறப்படும் போது அவர் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டுதான் புறப்பட்டார். ஆனாலும் பார்வதியிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்தது பெரும் குறையாகத் தோன்றியது அவருக்கு. அடுத்தகணம் ‘பார்வதிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அவளிடம் நான் ஏன் சொல்லிக் கொள்ளவேண்டும்?’ என்று தமக்குத் தாமே கேட்டுக்கொண்டார். 

அவர் உள்ளத்தில் அமைதியில்லை. பார்வதியைப் பற்றியே மீண்டும் மீண்டும் எண்ணமிட்டவராக விமானத்தின் பலகணி வழியாக விண்வெளியை வெறிச்சிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

குருத்து பதினைந்து 

“பாரதி! பரீட்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் கணக்கில் நீ அவ்வளவு ‘வீக்’ இல்லை. ஆகையால் இன்றுமுதல் உனக்கு ஸயன்ஸ் பாடம் சொல்லித் தரப் போகிறேன். எங்கே, ஸ்யன்ஸ் புஸ்தகம் கொண்டு வந்திருக்கிறாயா? அதிலிருந்து சில கேள்விகள் கேட்கப் போகிறேன்” என்றாள் பார்வதி. 

ஸயன்ஸ் என்றதுமே பாரதியின் வயிற்றில் ‘பகீர்’ என்றது. கணக்குக்கு அடுத்தபடியாக அவளுக்குப் பிடிக்காத ‘சப்ஜெக்ட்’ அதுதான். அன்று பாரதிராஜாவுடன் சினிமாவுக்குப் போகத் திட்டம் போட்டு வைத்திருந்தாள். அந்த நேரத்திலா ஸயன்ஸ் பாடம் படிக்கத் தோன்றும்? படு ‘போர்’ ஆயிற்றே! 

“காலையிலிருந்தே எனக்குத் தலைவலி தாங்கவில்லை அம்மா! அத்துடன் இன்று நான் ஸயன்ஸ் புத்தகமும் கொண்டுவர மறந்து போனேன்” என்றாள் பாரதி. 

“மாத்திரை கொடுக்கிறேன் அதைச் சாப்பிட்டுவிட்டு இப்படிக் கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டிரு. ராஜா வந்ததும் உன்னைக் கொண்டுபோய் வீட்டில் விட்டுவரச் சொல்கிறேன்….” 

“கல்லூரியிலிருந்து புறப்படும்போதே சொல்வதற்கென்ன? உன்னை அப்போதே வீட்டில் கொண்டுபோய் விட்டிருப்பேனே” என்றாள் பார்வதி. 

“அப்போது ராஜாவைச் சந்திக்க முடியாதே!” என்று பாரதி கூறவில்லை. எண்ணிக்கொண்டாள். 

ஸயன்ஸ் புத்தகம் கொண்டு வராததற்காகத் தன்னை பிரின்ஸிபால் கோபிப்பான் என எதிர்பார்த்த பாரதிக்கு பார்வதியின் உபசரணைகளும், அன்பு மொழிகளும் வியப்பை அளித்தன. 

சேதுபதி பம்பாயிலிருந்து எப்போது திரும்பி வருவார் என்பதை அறிந்து கொள்ளவே பார்வதி அவ்வாறு அன்பு பாராட்டினாள். ஆனாலும் பாரதியிடம் அதைக் கேட்டுவிடும் துணிவு அவளுக்கு ஏற்படவில்லை. சகஜமாகக் கேட்பதுபோல் கேட்டுப் பார்க்கலாமா? ஊஹூம் கூடாது. 

‘அப்பா, நீங்கள் எப்போது வருவீர்கள் என்று பிரின்ஸிபால் விசாரித்தார்’ என்று பாரதி தன் தந்தையிடம் கூறினால் அவர் என்ன எண்ணிக் கொள்வார்? அவர் வருகையில் நான் அக்கறை கொண்டிருப்பதாக அல்லவா நினைப் பார். ‘போய் வருகிறேன்’ என்று ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டு போகாதவரைப்பற்றி நான் ஏன் விசாரிக்க வேண்டும்? அவரிடம் எனக்கு அக்கறை இருப்பதாக ஏன் காட்டிக் கொள்ள வேண்டும்? ஆனாலும் அவளால் சேதுபதியைப் பற்றி எண்ணாமல் இருக்க முடியவில்லை. 

வெகு நேரம் தனக்குத்தானே குழம்பிக் கொண்டிருந்த பார்வதி, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாள். பாரதியை மெதுவாக விசாரிக்கத் தொடங்கினாள். 

“பாரதி! உனக்கு அடிக்கடி தலைவலி வருவது உண்டா?” 

“இல்லை அம்மா!” கொஞ்ச நாட்களாகத்தான்…இப்படி…” 

“யாராவது டாக்டரிடம் சிகிச்சை செய்து கொள்வது தானே? ஆமாம்… உன்னுடைய அப்பாகூட ஊரில் இல்லை போலிருக்கிறதே எப்போது வருகிறார்?… நான் வேண்டுமானால் டாக்டரிடம் அழைத்துக் கொண்டு போகட்டுமா?” என்று பேச்சுக்கிடையில் தான் கேட்கவேண்டிய கேள்வியை வெகு சாமர்த்தியமாகத் திணித்துவிட்டாள் பார்வதி. 

“ஞாயிற்றுக்கிழமை மாலை வருகிறார். இப்போது எனக்கு முன்னளவு தலைவலி இல்லை. வீட்டுக்குப் போய்ச் சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டால் சரியாகிவிடும்” என்றாள் பாரதி. 

“ராஜா வரட்டும்; உன்னைக் காரில் கொண்டு விடச் சொல்லுகிறேன்” என்று பார்வதி சொல்லி வாய் மூடவில்லை. 

வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. அதை அடுத்து ஒரு சீட்டிக் குரல், தொடர்ந்து வருவது ராஜாதான் என்பதை அறிந்து கொண்ட பாரதியின் உள்ளத்தில் குதூகலம் பொங்கியது. 

“ராஜா! உனக்கு ஆயுசு நூறுடா” என்றாள் பார்வதி. “என்ன அத்தை ! நான் வாலிபனாக இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா? என்னை குடுகுடு கிழவனாக்கிப் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறதா?” 

பார்வதி சிரித்துக் கொண்டே “ஆமாம்; நீ கிழவனாக ஆனால் வேடிக்கையாகத்தான் இருக்கும். சரி; பாரதிக்குத் தலை வலிக்கிறதாம். அவளைக் கொண்டுபோய் வீட்டில் விட்டு வா…” 

“சரி, அத்தை!” என்று சந்தோஷமாகத்தான் பதில் கூற வாயெடுத்தான் ராஜா.ஆனால் தனக்கு அந்த வேலையைச் செய்வதில் இஷ்டமில்லாதது போல் அத்தையிடம் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, “இதுவே எனக்குப் பெரிய வேலையாகப் போய்விட்டது. பாரதி வீட்டு டிரைவராகவே ஆகிவிட்டேன்” என்று முணுமுணுத்த படியே பாரதியைக் கடைக் கண்ணால் கவனித்தான். 

வானத்தில் வீட்டுக் கூரைக்கு மேலே அப்போதுதான் ஒரு விமானம் பறந்து கொண்டிருந்தது. அந்தச் சத்தத்தில் ராஜா கூறிய வார்த்தைகள் பார்வதியின் காதில் விழவில்லை. “என்னடா சொல்கிறாய்?” என்று கேட்டாள் அத்தை. “ரேடியோவில் இன்று எனக்குக் ‘குவிஸ் புரோகிராம்’ இருக்கிறது அத்தை! ஆகையால் நான் திரும்புவதற்கு லேட்டாகும்” என்றான் ராஜா. 

“சரி சரி; சீக்கிரம் வந்துவிடு” என்று சொல்லி அனுப்பினாள் பார்வதி. 

பார்வதிக்கு இருப்புக் கொள்ளவில்லை. அமைதியின்றித் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். சேதுபதியின் நினைவு முகத்தை அவளால் மறக்க முடியவில்லை. 

குருவி ஒன்று இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தது. தன் கூட்டுக்குள் போய் உட்காருவதும், பிறகு துணைவனைக் காணாமல் தேடி அலைவதுமாக இருந்த அந்தக் குருவியையே சற்று நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பார்வதி. அந்தக் குருவி முதன்முதல் தனியாக அங்கு வந்து கூடு கட்டிக் குடியேறியபோது பார்வதி அதைக் கவனித்திருக்கிறாள். இப்போது சில நாட்களாக அது வேறொரு குருவியுடன் சிநேகம் பூண்டு சுற்றிக் கொண்டிருப்பதையும் கவனித்திருக்கிறாள். இன்று அந்த ஆண் குருவியைக் காணாமல், பெண் சிட்டுக்கு ஆண் சிட்டு எங்கே போயிற்றே! எப்போது போயிற்றோ! பெண் சிட்டிடம் சொல்லிக்கொண்டு போயிற்றே! சொல்லிக் கொள்ளாமலேயே போய், அலைய வைத்துக் கொண்டிருக்கிறதோ? பார்வதிக்கு அந்தக் குருவியின் நிலை மிகுந்த வேதனையைத் தந்தது. பார்வதிக்கு மீண்டும் சேதுபதியின் நினைவு தோன்றவே அதை மறக்க விரும்பினாள். 

மீனாவின் தந்தை தனக்கு எழுதிய கடிதமும் அவருக்குத் தான் எழுதிப்போட்ட பதில் கடிதமும் ஞாபகத்துக்கு வந்தது. 

நேராக மாடி அறைக்குச் சென்றாள். போகும்போது அந்த விசிறி வாழை அவளைப் பார்த்துச் சலசலப்பதுபோல் தோன்றியது. கீழே கிளைத்திருந்த முதிர்ந்த இலை ஒன்று மெளனமாக அவளை விசாரிப்பது போலவும் தோன்றியது. ‘சே! இதெல்லாம் வீண் பிரமை!’ என்று எண்ணிக்கொண்ட வளாய், படிகளைக் கடந்து அறைக்குள் பிரவேசித்தாள். மேஜை டிராயரைத் திறந்து மீனாவின் தந்தைக்குத் தான் எழுதிய கடிதத்தின் பிரதியை எடுத்துப் படித்தாள். 

“ஐயா, தங்கள் கடிதம் கிடைத்தது. மீனா மிக நல்ல பெண். படிப்பிலும், விளையாட்டிலும் முதன்மையாக இருந்து இந்தக் கல்லூரிக்கே நல்ல பெயர் வாங்கித் தந்திருக்கிறாள் தாங்கள் எழுதியுள்ளபடி வேறொரு கல்லூரி மாணவனுடன் அவள் நட்பு பூண்டிருக்கிறாள் என்பது உண்மைதான். ஆனால் அந்த நட்பில் குற்றம் எதுவும் இல்லை. மீனாவைத் தனியில் அழைத்து விசாரித்தேன். அவள் எதையும் மறைக்காமல், என்னிடம் உண்மையைக் கூறிவிட்டாள். கார்னேஷன் கல்லூரி மாணவனாகிய கோபாலன் என்பவனை டென்னிஸ் விளையாட்டின்போது அடிக்கடி சந்தித்திருக்கிறாள். ஒருவருக்கொருவர் நட்புப் பூண்டிருக்கின்றனர். இது விஷயமாக அந்தக் கல்லூரி பிரின்ஸிபால் திருவாளர் வேதாந்தத்தையும் நேரில் சந்தித்துப் பேசினேன். நான் அறிந்த வரையில் கோபாலன் மீனாவுக்கு ஏற்ற ஜோடியாக இருக்கிறான். கண்டிக்கத் தக்க முறையில் ஏதும் நடந்துவிடவில்லை. அவர்கள், இருவரையும் சந்தோஷமாக வாழவைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. கோபாலனுடைய தந்தைக்குக் கடிதம் எழுதி அவர் சம்மதத்தைப் பெற்றுத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். இதற்கு என்னுடைய மனப்பூர்வமான ஆசிகள். மீனாவின் எதிர்காலம் மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கல்லூரித் தலைவி என்ற முறையில் என்னுடைய கடமை இத்துடன் முடிவடைகிறது. 
பார்வதி.”

கடிதத்தைப் படித்து முடித்ததும் பார்வதியின் முகத்தில் பெருமிதம் நிலவியது. 

மறுநாள் காலை. வழக்கத்தைக் காட்டிலும் கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து காலைப் பத்திரிகையின் வரவுக்காகக் காத்திருந்தாள் பார்வதி. காரணம் அன்று திங்கட்கிழமை. ஞாயிற்றுக்கிழமையே அவர் வரப்போவதாகப் பாரதி கூறினாளே! நேற்று அவர் வந்துவிட்டிருப்பாரோ? ‘திருவாளர் சேதுபதி பம்பாயிலிருந்து திரும்பினார்’ என்ற செய்தி பத்திரிகையில் வெளியாகியிருக்குமல்லவா? 

பத்திரிகை வந்தது. அவள் எதிர்பார்த்த செய்தியும் அதில் இருந்தது! 

அந்தச் செய்தியைக் கண்டதும், பார்வதியின் உட லெங்கும் இதற்கு முன் அனுபவித்தறியாத உணர்ச்சி அலை பரவியது. 

அவர் வந்துவிட்டார் என்பதில், எனக்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி? அவரைச் சந்தித்து ஒரு யுகமே ஆகிவிட்டது போல் அல்லவா தோன்றுகிறது? அவரைப் பார்க்கச் செல்லலாமா? 

எந்தக் காரணத்தை வைத்துக்கொண்டு மீண்டும் அவர் வீட்டுக்குச் செல்வேன்? ‘அதிக வேலை இருக்கிறது. மாலை வேளைகளில் இனி வரமுடியாது’ என்று கடிதம் எழுதி அனுப்பிவிட்டு இப்போது அவர் வீட்டுக்குப் போய் நின்றால் என்னைப்பற்றி என்ன எண்ணிக்கொள்வார்? 

எது வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும். என்னால் இனி ஒரு கணமும் அவரைப் பாராமல் இருக்க முடியாது. பார்வதி உறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள். 

அன்று மாலை கல்லூரி முடிந்ததுதான் தாமதம். வழக்கமாக வீடு நோக்கிச் செல்லும் பார்வதியின் கார், அன்று சேதுபதியின் வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. 

“எங்க வீட்டுக்கா போறீங்க மேடம்?” என்று கேட்டாள் காரில் உட்கார்ந்திருந்த பாரதி. 

“ஆமாம்” உறுதியாக வெளி வந்தது பார்வதியின் பதில். 

காரணம் கேட்கும் அளவுக்குத் துணிவு இல்லாத பாரதி மௌனமாகி விட்டாள். ராஜாவைச் சந்திக்க முடியாதே என்று எண்ணியபோது அவளுக்கு வருத்தமாக இருந்தது. பார்வதியின் கார் உள்ளே நுழைந்த சமயம், சேதுபதி தற்செயலாக வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார். 

‘ஒரு வேளை இன்று பார்வதி வந்தாலும் வரக்கூடும்’ என்று அவருடைய உள் மனம் சொல்லிக் கொண்டிருந்தது. சரியாகவே போய்விட்டது. 

காரிலிருந்து இறங்கிய பார்வதியை முக மலர்ச்சியுடன் வரவேற்ற சேதுபதி, “வாருங்கள்…வாருங்கள்…… பாரதி எப்படிப் படித்துக் கொண்டிருக்கிறாள்…” என்று விசாரித்தார். 

‘அதிக வேலை இருப்பதால் இனி மாலை வேளைகளில் வரமுடியாதென்று கூறினீர்களே, இப்போது வேலையெல்லாம் தீர்ந்துவிட்டதா?’ என்று கேட்பார் என்று எதிர்பார்த்த பார்வதிக்குச் சேதுபதியின் வினா வியப்பூட்டியது. 

‘எவ்வளவு பெருந்தன்மையான போக்கு! எவ்வளவு உயர்ந்த புண்பு!’- பார்வதி எண்ணிக் கொண்டாள். 

“பாரதி நன்றாகவே படித்து வருகிறாள். ஞாபக மறதி தான் கொஞ்சம் அதிகமாயிருக்கிறது. எந்தப் புத்தகம் கேட்டாலும் அந்தப் புத்தகத்தை மறந்து வந்துவிட்டதாகச் சொல்கிறாள். ஆகவேதான் புத்தகங்கள் இருக்கும் இடத்திலேயே பாடத்தை நடத்துவதென்று வந்துவிட்டேன்…” 

“எனக்கும்கூட இனி அவ்வளவு வேலை இருக்காது. என் அலுவல்களை யெல்லாம் கவனித்துக் கொள்ளப் பொறுப்பான ஒருவரை நியமித்துவிட்டேன். மாலை வேலை களில் இனி எனக்கும் ஓய்வுதான்… தினமும் ஒரு மணி நேரமாவது நிம்மதியாகப் பொழுதைக் கழிக்கப் போகிறேன். பொருளாலும் புகழாலும் மட்டும் ஒருவன் அமைதியைக் கண்டு விடமுடியாது. ‘கம்பானியன்’ என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்களே,அது ரொம்ப ரொம்ப முக்கியம்…” 

பாரதி இருவருக்கும் காபி கொண்டுவந்து வைத்தாள். 

“சிற்சில சமயங்களில் நமக்குத் தனிமை வேண்டியிருக்கிறது. சிற்சில சமயங்களில் தனிமை அலுத்துப் போய், ‘யாராவது வரமாட்டார்களா?’ என்று தோன்றி விடுகிறது.” 

பார்வதி பதில் ஏதும் கூறாமல் சேதுபதியையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

“சரி…நீங்கள் டியூஷனை ஆரம்பியுங்கள்…எனக்கும் கொஞ்சம் அவசர ஜோலியிருக்கிறது. அரை மணியில் திரும்பி வந்துவிடுகிறேன் ” என்று கூறிப் புறப்பட்டார் சேதுபதி. 

அன்றிரவு பார்வதி வெகு நேரம் தூங்காமல், தூக்கமும் வராமல், அமைதியின்றிப் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தாள். சேதுதிபதி கூறிய வார்த்தைகளை ஒவ்வொன்றாக நினைவுப்படுத்திப் பார்த்து ‘எதற்காக இப்படிப் பேசினார். அதன் இரகசியம் என்ன? ‘கம்பானியன்’ என்ற சொல்லுக்கு என்ன பொருள்? இவைபற்றியே அவள் எண்ணம் சுழன்று கொண்டிருந்தது. ‘என்னுடைய துணையை மனத்தில் எண்ணியே அப்படிப் பேசியிருக்கிறார். அவருடைய உள்ளத்தில் எனக்கு இடமிருக்கிறது. அவர் என்னை விரும்புகிறார். என் உறவை நாடுகிறார். அவருக்கு என்மீது நாட்டமிருக்கிறது. இல்லையென்றால் இம்மாதிரி அவர் பேசியிருக்க மாட்டார். சொற்களைத் தராசில் நிறுத்திப் போட்டு மிதமாகப் பேசக் கூடியவராயிற்றே! என் உள்ளமும் அவரையே எண்ணி எண்ணி ஏங்குகிறது. அவரை நான் சந்திக்க வேண்டும். சந்தித்து என் உள்ளத்தை அவரிடம் சொல்ல வேண்டும். ஆம்; நாளை காலையே அவரைச் சந்தித்து என் அந்தரங்கத்தை அவரிடம் கூறி விடுகிறேன். மனம் விட்டுப் பேசி விடுகிறேன். நீண்ட நாட்களாக என் மனத்தில் சுமந்து கொண்டிருக்கும் பாரத்தை இறக்கி விடுகிறேன். அப்போதுதான் எனக்கு நிம்மதி பிறக்கும். நெஞ்சுக்குள் புகுந்து அலைத்துக் கொண்டிருக்கும் வேதனை நீங்கும்’. இந்த முடிவு அவளுக்குச் சற்று நிம்மதியைத் தந்தது. 

மறுநாள் விடியற்காலையிலேயே எழுந்துவிட்ட பார்வதி குளிர்ந்த நீரில்குளித்துவிட்டு தேவியின் படத்துக்கு முன்னால் போய் நின்று வணங்கினாள். ‘தாயே! எனக்கு மனச் சாந்தியைக்கொடு. அவரிடம் என் உள்ளத்தை எடுத்துச் சொல்லும் துணிவைக் கொடு’ என்று வேண்டிக் கொண்டாள். பின்னர், மாடி அறைக்குப் போய்க் கண்ணாடி முன் நின்று, அலங்காரத்தில் ஈடுபட்டாள். தலையைச் சீவிப் பலவிதமான கொண்டைகள் போட்டுப் பார்த்துக் கடைசியில் எதுவுமே திருப்தியளிக்காததால் வழக்கமாகப்போடும் கொண்டையையே போட்டுக் கொண்டாள், புடவைகளை மாற்றி மாற்றி உடுத்திப் பார்த்தாள். நகைகளை அணிந்து கொண்டு பார்த்தபோது ‘சே! இவ்வளவு படாடோபம் கூடாது. அடக்கமாக, அழகாக, எளிய முறையில் அலங்கரித்துக் கொள்ளவேண்டும். அதுதான் அவருக்குப் பிடிக்கும்’ என்று தீர்மானித்தாள். கண்ணாடியில் கடைசி முறையாகப் பார்த்துக் கொண்டபோது, மூக்குக்கண்ணாடி அவள் வயதைச் சற்று அதிகமாக எடுத்துக் காட்டுவதுபோல் தோன்றியது. 

‘சே! அப்படி எனக்கு என்ன வயதாகி விட்டது?’ என்று எண்ணியவள், அந்தச் சந்திப்பு எப்படி இருக்கும் என்பதைத் தனக்குள்ளாகவே கற்பனை செய்து பார்த்துக்கொண்டாள். வெட்கத்துடன் தலை கவிழ்ந்தவண்ணம் தான் அவர் எதிரில் நிற்பது போலவும், தான் கூறுவதைக் கேட்டு அவர் முகம் மலர்வது போலவும் அவள் மனக்கண்முன் தோன்றியது. அவள் மெய்சிலிர்த்துப் போனாள். 

அந்த இன்ப நினைவோடு, துணிவான தீர்மானத்தோடு சேதுபதியைச் சந்திக்கும் நோக்கத்தோடு மாடியிலிருந்து அவசரம் அவசரமாகக் கீழே இறங்கி வந்தாள் பார்வதி. 

அச்சமயம் நடு ஹாலில் படித்துக் கொண்டிருந்த ராஜா “அத்தை!” என்று அழைக்கவே, பார்வதி திரும்பி அவன் அருகே சென்று, “என்ன ராஜா?” என்று விசாரித்தாள். 

”ஒன்றும் இல்லை அத்தை ! இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டான் ராஜா. 

“என்ன புத்தகம் ?” என்று கேட்டபடியே அந்தப் புத்தகத்தைக் கையில் வாங்கிப் பார்த்த பார்வதி, ‘பிக்விக் பேப்பர்ஸா?’ என்று லேசாகச் சிரித்துக் கொண்டாள். 

“ஏன் சிரிக்கிறீர்கள் அத்தை?” 

“பதினைந்து வருஷமாக இதைத் தானே திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன். கல்லூரியில் இது தானே பாடப்புத்தகம்! இதன் ஆசிரியர் சார்லஸ் டிக்கன்ஸன் ஒரு பெரிய அறிவாளி” என்றாள். 

”ஆமாம். மகா மேதை!” என்று கேலியாகக் கூறினான் ராஜா. 

“என்னடா உளறுகிறாய்?” 

“நான் உளறவில்லை. டிக்கன்ஸ்தான் உளறியிருக்கிறான். பெரிய அறிவாளியாம்! மேதையாம்! உலகப்புகழ் பெற்ற ஆசிரியராம்! ‘இந்தப் புத்தகத்தில் அவன் எழுதியிருப்பதைப் பார்த்தீர்களா; கற்பனை யென்ற பெயரில் கண்டதை யெல்லால் எழுதலாம் போலிருக்கிறது. ஐம்பது வயசுக்கிழவன் ஒருவனைக் காதலிக்கிறாளாம். ரொம்ப நன்றாயிருக்கிறதல்லவா? இதை பெரிய நகைச்சுவை என்று எழுதியிருக்கிறாரா. இல்லை, இயற்கை என்று எழுதியிருக்கிறாரா? வாழ்க்கையில் நடக்கக் கூடியதா இது? இதற்குக் காதல் என்ற புனிதமான சொல் ஒரு கேடா? சே! புத்தகமா இது? எழுத்தா இது? கிழவிக்கும் கிழவனுக்கும் காதலாம்! வெட்கக் கேடு தூ…” என்று அந்தப் புத்தகத்தைக் கோபமாக அப்பால் வீசி எறிந்தான் ராஜா. 

ராஜாவின் வார்த்தைகள் பார்வதியின் உள்ளத்தில் ஈட்டிகளாகப் பாய்ந்தன. ‘தன்னையே குற்றம் சாட்டிப் பேசுகிறானோ?’ என்று கூட அவள் நெஞ்சம் குறுகுறுத்தது. அவளால் அவனுக்குப் பதில் கூற முடியவில்லை. தானே அந்தக் குற்றவாளியாக மாறி அவன் எதிரில் நிற்பது போன்ற ஒரு மயக்கம்! 

மெதுவாக மௌனமாகத் திரும்பிய பார்வதி அவ் விடத்தைவிட்டு நகர்ந்தாள். அவள் கால்கள் வாசல் பக்கம் செல்லவில்லை. அதற்குப் பதிலாக மாடிப்படிகளை நோக்கி நடந்தன.

– தொடரும்…

– விசிறி வாழை, 12வது பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *