கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2023
பார்வையிட்டோர்: 1,992 
 

காலை ஐந்தரைக்கு எழுந்து முகம் கை கால் கழுவி யாரையும் எழுப்பி தொந்தரவு செய்யாமல், மனைவி நேற்று இரவே எழுதி கொடுத்த காய்கறிகள் வாங்க மார்க்கெட்டுக்கு சென்று பையில் வாங்கி வந்து மனைவியிடம் ஒப்படைத்து அப்பாடி என்று களைப்புடன் நின்றார் ராமனாதன்.

அவர் வாங்கி வந்திருந்த காய்கறிகளை பிரித்து பார்த்து விட்டு, ஒரு காய் பாத்து வாங்கியாற துப்பில்லை, இதுல வியாக்கியானம் வேற..!

மனைவியின் இந்த வார்த்தைக்கு ராமனாதன் தாம் எப்பொழுது இவளிடம் வியாக்கியானம் செய்திருக்கிறோம் ? என்று யோசித்து பார்த்தார், அப்படி இதுவரை ஒரு நாளும் அவளிடம் எதிர்த்து பேசியதாக ஞாபகம் வரவில்லை, என்றாலும், தான் ஒன்றும் அப்படி வியாக்கியானம் உங்கிட்ட செய்யலையே, என்பதை அவளிடம் சொல்லாமல், அமைதியாக அங்கிருந்து நகர்ந்தார்.

அவர் அங்கிருந்து நகரவும், அம்மா, அம்மா இந்த அப்பா பாரும்மா…, கொஞ்சம் கூட யோசிக்கறதே இல்லை, குற்றம் சாட்டிக் கொண்டே, மகள் அம்மாவிடம் வந்தாள்.

என்னாச்சு, உங்கப்பா என்ன பண்ணுனார்?

டேபிள்ள வச்சிருந்த புக்ஸ் எல்லாம் எடுத்து எங்கியோ வச்சுட்டாரும்மா.

மனைவி திரும்பி ராமநாதனை முறைத்தாள். ஏங்க அவ புக்கை எதுக்கு எடுக்கறீங்க? போங்க முதல்ல அவ புத்தகத்தை எடுத்து கொடுத்துட்டு மத்த வேலைய பாருங்க.

இவர் எதுவும் பேசவில்லை, அம்மா உறவு வீட்டுக்கு போய் வருவதாக மாலையில் கிளம்பினாள். மகளிடம் ஒழுங்கா படி, என்று மிரட்டி விட்டு சென்றாள்.

மகள் படிப்பதாக அம்மாவிடம் சொல்லி விட்டு எல்லா புத்தகங்களையும் பிரித்து டேபிளின் மேல் வைத்து விட்டு முன்னறைக்கு சென்று டிவி பார்க்க உட்கார்ந்தவள், இரவு ஒன்பது மணிக்கு அம்மா வருவது போல சத்தம் கேட்ட பின் டிவியை அணைத்து விட்டு, சாப்பிட சமையலறைக்குள் போய் விட்டாள். சாப்பிட்டு முடித்து நல்ல பிள்ளையாய் அப்படியே படுக்கைக்கு போய் விட்டவள், காலையில் அவள் அம்மா ஏதாவது கேட்டு விட்டால்..! அதனால் அப்பாவின் மேல் பழியை போட்டு விட்டாள்.

இது தெரிந்தும் ராமனாதன் எதுவும் பேசாமல் தான் கிளம்ப தயாராவதற்காக பின் புறம் சென்றார்.

அதற்குள் காலையில் மைதானத்திற்கு சென்று விட்டு உள் நுழைந்த மகன் அம்மா, அம்மா, பாரும்மா இந்த அப்பாவை குற்றம் சொல்லியபடி வந்தான்.

இந்த மனுஷன் சும்மாவே இருக்கறதில்லை இந்த வீட்டுலே, உனக்கு என்ன பண்ணினார்? கோபத்துடன் கேட்டாள். இந்நேரத்துக்கு நான் வருவேன்னு தெரிஞ்சும் கரெக்டா பாத்ரூம் போயிடறாரு. பாருங்க, நான் காலேஜுக்கு கிளம்பறதுக்கு நேரமாச்சு.

அங்கிருந்த ராமநாதனுக்கு இது கேட்கத்தான் செய்தது. ஒன்றுக்கு இரண்டு பாத்ரூம் கீழ் தளத்திலும், மேல் தளத்தில் இரண்டும் இருக்கிறது, இவன் அதிகமாக இந்த பாத்ரூம் உபயோகப்படுத்தியதில்லை. என்றாலும் இன்று இப்படி ஒரு குற்ற சாட்டை முன் வைக்கிறான். சிரித்து கொண்டார்.

தலையை துவட்டி வெளியே வந்தவரிடம் டிபன் செய்து டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்து விட்டு திரும்பிய மனைவி, உங்களுக்கு எத்தனை முறை சொல்லியாச்சு, அவன் கூட வம்பு பண்ணறதே உங்க வேலையா போச்சு. அவன் உபயோப்படுத்தற பாத்ரூமுக்கே போகணுமா? குற்றம் சாட்டும் பாவனையில் சொல்லி விட்டு மீண்டும் சமையலறைக்குள் சென்று விட்டாள்.

தான் நினைத்ததை அவளிடம் சொல்ல விரும்பினாலும் அதை சொல்லாமல் உடை மாற்றுவதில் கவனமாக இருந்தார் ராமனாதன்.

ராமனாதா ராமனாதா, அழைப்பு உள் அறையில் இருந்து வர, தன் அம்மாதான் கூப்பிடுகிறாள், நினைத்தவாறே அறைக்குள் நுழைந்தார்.

அம்மா அங்கிருந்த சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். ஏண்டா எத்தனை முறை உங்கிட்ட சொல்லியிருக்கேன், இந்த ‘சோபா கவரை’ மாத்தி தொலைன்னு, பாரு ஒரே கறையா இருக்கு, குற்றம் சாட்டினாள் அம்மா.

இரண்டு நாளுக்கு முன்புதான் அவரே கைப்பட மாற்றினார். நேற்று மாலை வேலை முடிந்து வந்து மாலையில் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்த பொழுதும் கேட்டார், அம்மா இந்த சோபா கவரை மாத்திடட்டுமா?

முந்தா நேத்துதான மாத்துனே, இப்ப என்ன அவசரம்? பதில் சொன்ன அம்மா, இன்று குற்றம் சாட்டுகிறாள், ராமனாதன் எதையும் சொல்லவில்லை, அம்மா சாயங்காலம் மாத்திடறேன், சொல்லி விட்டு வெளியே கிளம்பினார்.

வாக்கிங் முடித்து அப்பொழுதுதான் உள்ளே வந்த அப்பா அவனை முறைத்து என்னடா இந்த வயசுல இப்படி மறதியா இருக்கே, ஈபி ஆபிசுல சொல்லி கம்பத்துல நமக்கு வர்ற ‘லைனை’ சரி பண்ண சொல்லுடானு சொல்லியிருந்தேனே.

ராமனாதனுக்கு அப்பாவுக்குத்தான் ஞாபக மறதி என்று சொல்ல விரும்பினார். போன வாரமே ‘லைன்மேன்’ வந்து சரி செய்து இவரிடமே தலையை சொறிந்து நூறு ரூபாய் வாங்கி போயிருந்தான்.அதை மறந்து விட்டார்.

பண்ணிடலாம்ப்பா.. வேறு எதுவும் சொல்லாமல் கிளம்பி வெளியே படிக்கு வர..கார் வந்து நின்றது.

இராமனாதன் அந்த கல்லூரியில் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார். அவ்வளவு அமைதி மாணவர்களிடையே காணப்பட்டது. அந்த கல்லூரியே அவர் மீது அவ்வளவு மதிப்பு வைத்திருந்தது, அறிஞர், பொருளாதார அறிவாளி, சின்ன சின்ன விஷயங்களை கூட ஞாபகம் வைத்து மாணவர்களிடம் விளக்கி சொல்பவர் அப்படி இப்படி என்று.

இவை எதுவும் ராமனாதன் வீட்டில் சொல்வதில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *