கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 28, 2019
பார்வையிட்டோர்: 6,001 
 

அன்புள்ள அம்மாவுக்கு,

தாங்களின் வளர்ப்பு மகள் லாவண்யா எழுதும் கடிதம். எனக்கு எக்ஸாம் எல்லாம் முடிந்து விட்டது. எனது படிப்பிற்காக தொடர்ந்து அடுத்த வருடமும் தாங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும். செய்வீர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும், உங்கள் வளர்ப்பு மகள் லாவண்யா.

ஒரு போஸ்ட் கார்டில் இன்னமும் பக்குவப் படாத கையெழுத்தில் எழுதி இருந்தது. பென்சிலில் இருந்து பேனாவில் எழுத பழகத் தொடங்கி, இன்னும் சில மாதங்கள் கூட ஆகவில்லை என்பதால், அங்கும் இங்கும் அதிக பட்சமாய் இங்க் ஊறிய தன்மையைக் காட்டும் விதமாய் அமைந்திருந்தது அந்தப் போஸ்ட் கார்ட்.

லாவண்யா யார்? அடுத்த வருடமும் உதவுங்கள் என்று யாரிடம் கேட்கிறாள்? அதன் அவசியம் என்ன?

லாவண்யா இரண்டாம் வகுப்பு முடிந்து மூன்றாம் வகுப்பு சேரும் ஒரு கோடை விடுமுறையில், தன் பாட்டி வீட்டுக்குப் போனாள். விடுமுறை தொடங்கிய ஒருவார காலத்திற்குள், பாட்டி வீட்டுக்கு, லாவண்யாவின் அம்மா செத்துப் போய்விட்டதாய் செய்தி வந்தது.

பாட்டி, மாமா, சித்தப்பா என்று உறவுகள் கூடி, லாவண்யாவை அவள் அம்மா வீட்டிற்கு அழைத்து வந்தது. அம்மா செத்துப் போனதின் அர்த்தமும், கனமும் கூட முழுதாய் புரியாத நிலையில், லாவண்யாவுடன் கூடவந்த ஒவ்வொருவரும் அவளிடமிருந்து விலகி நின்றார்கள். அந்த விலகலை உணரும் சூட்சுமமும், புத்தித் தெளிவும் கூட இல்லாத வயதுதான் லாவண்யாவுக்கு. இந்த நிலையில்தான் இன்னொரு பிரச்சினை காத்துக் கிடந்தது…

லாவண்யாவின் தாய் விஜயாவிற்கும், அவள் கணவன் குமரேசனுக்கும் எல்லா விதமான கருத்து வேறுபாடுகளும் இருந்தன. குமரேசனோடு சேர்ந்து வாழுதல் இனி தன்னால் முடியாது என்ற சூழ்நிலையில், அவனை விட்டுப் பிரிவது என்ற முடிவுக்கு விஜயா வந்தாள். ஆனால் அதை நடைமுறைப் படுத்த அவள் சுற்றம் ஒத்துழைக்கவில்லை.

‘விவாகரத்தா? ஐயோ’ என்றது. வாழவேண்டிய வீட்டில் வாழாவெட்டியாய் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது, அவ்விதம் இருத்தலை விட, வாழ்வைத் துறத்தலே நல்லது என்று விஜயா முடிவு செய்தாள். அதற்காக ஒரு சந்தர்ப்பத்தை எதிர் பார்த்திருந்தாள்.

அவ்வித சந்தர்ப்பம் அவளுக்கு இயல்பாய் ஏற்பட்டது. லாவண்யா விடுமுறைக்கு பாட்டி வீடு போகவும், ‘இந்த என் மரணத்திற்கு முழுப் பொறுப்பும் என் கணவன் குமரேசன்தான்’ என்று போலீஸ் கமிஷனருக்கு அவசரமாய் ஒரு கடிதம் எழுதிப் போட்டுவிட்டு, அதன் நகலை வீட்டு எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்தாள். கடிதம் போய்ச் சேரும் முன், மூட்டைப்பூச்சி மருந்தைக் குடித்துவிட்டு இறந்துபோய் விட்டாள்.

வெளியிலிருந்து கதவைத் தட்டியும் திறக்காததால், அக்கம் பக்கம் இருந்து கூடியவர்கள் கதவுத் தாளை உடைத்து உள்ளே சென்று பார்க்க, விஜயா இறந்து விட்டிருந்தது தெரிந்தது. தகவல் தெரிந்து போலீஸ் வரவும், குமரேசனைக் காரணமாய் காட்டி காவல் நிலையத்திற்கு கடிதம் எழுதியது போய்ச் சேரவும் சரியாய் இருந்தது.

குமரேசன்தான் பொறுப்பு என்ற விவரம் வெளிவரவும், மனைவியின் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ளாமல் குமரேசன் எங்கோ ஓடிச்சென்று தலை மறைவாகிவிட்டான்.

பாட்டி வீட்டில் தொடங்கிய கோடை விடுமுறை, பாதை மாறி அடுத்து எங்கு என்று தெரியாமல் கேள்விக் குறியோடு நின்றது. ‘என் வீட்டுப் பிள்ளையைக் காணோம்… இனி இவளை வைத்து என்ன செய்ய?’ என்று குமரேசனின் உறவினர்கள் விலகிக் கொண்டார்கள்.

விஜயாவின் அண்ணன் ஒருவர் மட்டுமே என்பதாலும், அவரும் இருதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் இருந்ததாலும், தங்கையின் மரணம் குறித்தோ அவள் கணவன் ஓடிவிட்ட செய்தி பற்றியோ அவரிடம் சொல்லுதல் சரியாய் இராது என்று அண்ணனுக்கு சகலமும் மறைக்கப்பட்டது. தவிர, சென்னைக்கும் அமேரிக்காவுக்கும் இடையே இருந்த இடைவெளி, விஜயாவின் மரணம் பற்றிய செய்தி அவள் அண்ணன் காதுக்கு போகாமலிருக்க ஏதுவாக அமைந்துவிட்டது.

தாய் வீட்டுப் பக்கமும் நிராகரிக்கப்பட்டு, தந்தை வீட்டுப் பக்கமும் மறுக்கப்பட்டு, லாவண்யா என்ற இரண்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தை, சுலபமாய், மிகச் சுலபமாய், ஒரேநாளில் ‘அனாதைக் குழந்தை’ என்று நிலை தடுமாறிப் போனது.

அவள் மீது இரக்கப்பட்ட அக்கம் பக்கத்தார், ஒரு அனாதை இல்லத்தில் லாவண்யாவைச் சேர்க்க, பள்ளியும் இல்லமும் ஒரே இடமாய் லாவண்யாவுக்கு மாறிப்போனது. ‘இந்தக் குழந்தைக்கு படிப்புச் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று அந்த வருடம் முன்வந்த ஒரு பெண்மணி, லாவண்யாவின் பள்ளிக்கூட சம்பளப் பணத்தையும், யூனிபார்ம் செலவையும் ஏற்றுக் கொண்டாள். லாவண்யாவின் அப்போதைய அன்றைய கவலை முடிய ஒருவருட காலம் போகவும், அடுத்த வருடமும் தன்னைப் பராமரிக்கும் பொருட்டுதான், தன் வளர்ப்புத்தாய் என்று சொல்லி இப்போது அந்தப் பெண்மணிக்கு கடிதம் எழுதியிருந்தாள்.

லாவண்யா என்ற பத்து வயதுக்குட்பட்ட குழந்தை, இரக்கம் தேடி அலையும் பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது…

தன் சுக துக்கங்களைப் பற்றி எல்லா விதங்களிலும் கவலைப்பட்ட அவள் தாய் விஜயா, தனக்குப் பின் இந்தக் குழந்தை என்னாகும் என்று ஏன் யோசிக்கவில்லை?

போலீஸ் பற்றிய பயத்தில் தலை மறைவான அவள் தந்தை குமரேசன், தன் குழந்தையின் எதிர்காலம் பற்றி ஏன் எண்ணிப் பார்க்கவில்லை? மகனும், மருமகளும் இல்லையென்று ஆகும்போது, அவர்கள் குடும்பம் பற்றியோ, குழந்தைகள் பற்றியோ கவலை கொள்ளுதலும்; அக்கறைப் படுதலும் தங்கள் பணியல்ல என்று நினைக்கும் உறவு முறையை நாம் எதில் சேர்ப்பது?

தன்னுடைய செளகரியத்திற்கும், தன் குடும்பப் பொருளாதாரத்திற்கும் சிறிது இடையூறு வந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் இல்லாத இவர்களை மனிதர்கள் என்று ஏன் சொல்ல வேண்டும்?

வழி தவறுதல் என்பதும், வாழ்க்கையில் வழுக்கி விழுதல் என்பதும், ஆண் பெண் உறவு முறையைச் சுற்றிப் பின்னப்பட்ட நூலோ வடமோ மட்டுமல்ல. நம்மையே நம்பியுள்ள உயிரைப் பற்றிய நியாயமான கவலை ஏற்படவில்லை எனில், அதுவும் வழி தவறுதல்தான்; ஒழுக்கக்கேடுதான்.

ஆனால் ஒரே இரவிலோ, ஒரே பகலிலோ அனாதையாகிப் போன லாவண்யாவின் இன்றைய நிலைக்கு, அவள் பெற்றோரும், உறவினர்களும் மட்டும்தான் காரணமா? இல்லை, இல்லவே இல்லை. அதற்கும் மேற்பட்டு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. அது பொதுவான நம்பிக்கை. நான், எனது என்னும் விதமாய் தனி மனிதர்கள் வளர்த்துக் கொண்டுள்ள நம்பிக்கை.

என் பெயர் சொல்ல, என் ஆசைப்படி, நான் விரும்பும் விதத்தில், என் முகச் சாயலும், என் பரம்பரை ரத்தமும் – என்கிற விதமாய் யுகம் யுகமாய் விஷ ஊசிபோல் ஏற்றப்பட்டு, அவர்கள் பிரித்துப் பார்த்து இனம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு, ரத்தத்தில் ஊறிப்போன உடமைப் பொருள் பற்றிய எண்ணம்… அப்படித்தான்.

“பன்னிரண்டு வருஷமா குழந்தை இல்லே; போகாத கோயில் இல்லே, பார்க்காத வைத்தியமும் இல்லே, விட்டுப் போச்சு ஸார்… மனசு விட்டுப் போச்சு.”

“ராமேஸ்வரம் போனீங்களா?”

“சொந்த ஊரே நமக்கு அதுதான் ஸார்! என்னைப் பற்றிக்கூட இல்லை, நானாவது ஆபீஸ் வேலைக்கு போறேன். ஆனா என் மனைவி வீட்ல இருக்கா… அதான்.”

“ஸார் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, நீங்க ஏன் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கக் கூடாது?”

நண்பர்கள் சிவகுமாருக்கும் வேலுச்சாமிக்கும் இடையே நடந்தது இந்த விவாதம். சிவகுமார் பன்னிரண்டு வருட திருமண வாழ்க்கையில் குழந்தையில்லாமல் இருப்பவர் – அவரிடமே ‘தப்பா எடுத்துக்காதீங்க’ என்னும் முகமனோடுதான் தத்து எடுப்பது பற்றி பேச முடிகிறது. சிவகுமாரிடம் மட்டுமல்ல. பரவலாய் இருக்கும் நிலையும் இதுதான்.

சரி, சிவகுமாருக்கு ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்வதில் என்ன பிரச்சினை?

“என்ன பிரச்னை ஸார்? நீங்க ஏன் இதைச் செய்யக் கூடாது?”

“எனக்கு ஒன்னும் இல்லை ஸார்… என் மனைவிக்கு இதில் நம்பிக்கை இல்லை. அவ சொல்லுவதும் சில சமயத்திலே சரியாகத்தான் தோணுது.”

சிவகுமாரின் பதிலில் இருக்கும் நியாய நீதிகள் என்ன?

“நாம பெத்ததே நம்மளை காப்பாத்தறது இல்லை. இன்னொண்ணு வந்து நமக்கு என்ன ஸார் பண்ணப் போவுது? அதுவும் இல்லை, ஆயிரம்தான் ஆனாலும் நம்ம கொழந்தை மாதிரி ஆகுமா ஸார்?”

‘எனக்கு இது என்ன செய்யும்’ என்று கணக்குப் பார்த்து நிராகரிக்கப் படுதல் என்பது எத்தனை துரதிருஷ்டம்? ‘இது நம்மைக் காப்பாற்றாது’ என்று ஒவ்வொரு பெற்றோரும் கணக்குப் பார்த்து ஒதுக்கத் தொடங்கினால் ஒவ்வொரு வீட்டுக் குழந்தையும் அனாதை இல்லங்களிலும், பாதுகாப்பு விடுதிகளிலும் வாழும் அபாயம் வந்து சேராதா?

‘என் வீட்டுக் குழந்தை என்னை அப்படி நிராகரிப்பதில் எனக்குச் சம்மதம். ஆனால் வேறு ஒரு குழந்தை என்னை அப்படி நடத்துதல் அனுமதிக்கப் படாது’ என்று கற்பனை பிரச்னையில் காலம் கடத்துதல் எத்தனை பெரிய அறியாமை?

நம்மிடையே வாழ்க்கை வரம் வேண்டி அழும் குழந்தைகளுக்கும் பஞ்சமில்லை; குழந்தை வரம் வேண்டி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் பெரியவர்களுக்கும் பஞ்சமில்லை. இரண்டு பிரார்த்தனைகளும் ஒரே இறைவனை நோக்கியே வேண்டப் படுகிறது. ஆனால், அந்தப் பிரார்த்தனைகளை ஒரே நேர் கோட்டில் கட்டி வைக்க முடியாமல் போகிறது.

ஆத்மாவையும், அறிவையும் ஒன்றாக மூடி வைத்துவிட்டு, வெறும் புலம்பல்களோடு போய்விடக் கூடிய பிரார்த்தனைகள், என்ன பலனை விளைவிக்க முடியும்?

இப்போது சொல்லுங்கள், லாவண்யா என்ற குழந்தை அனாதையாக அவஸ்தைப் படுவதற்கும், அடைக்கலம் தேடி அலைவதற்கும், அவள் அம்மா, அப்பா, உறவினர்கள் மட்டுமா காரணம்?

வசதியும் வாய்ப்பும் இருந்தும், லாவண்யா போன்ற குழந்தை வளைய வருதல் வீட்டுக்கு அவசியம் என்ற சூழ்நிலை இருந்தும், அந்த நிஜத்தை ஜீரணித்து வாழ்க்கையின் அந்தத் தன்மையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளாத; புரிந்து கொள்ளாத சிவகுமார்களும் காரணமில்லையா?

நாகரீகமாகக் குடிப்பதற்கும், வாழ்க்கையில் மற்ற வசதிகள் குறித்து அதிகம் சிந்திப்பதற்கும், அமெரிக்கா போன்ற மேலை நாடுகளை எட்டிப் பார்க்கும் நாம், ஏன் இந்த விஷயத்தில் அவர்களைப் பார்க்கவில்லை?

கற்றுக் கொள்ளுதல் என்பது வசதிகளைப் பெருக்கிக் கொள்ளுதல் பொருட்டு மட்டுமல்ல; வாழ்க்கையை புரிந்து கொள்ளுதலும் கூட. கற்றுக் கொள்ள மறுப்பது என்பது, வாழ்க்கையோடு முரண்பட்டு நிற்பதன்றி வேறு அல்ல.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *