கரடிக்குக் கிடைத்த பரிசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 1,810 
 

ஒரு காட்டிலே குண்டோதரன் என்ற கரடிக் குட்டியொன்று இருந்தது. அது வீட்டில் அம்மா அப்பாவுக்கு எந்த உதவியும் செய்யாது. மூன்று வேளையும் மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுவிட்டு எப்போதும் தூங்கி வழியும். விழித்திருக்கும் கொஞ்ச நேரத்திலும் தீய நண்பர்களோடு சேர்ந்து ஊரைச் சுற்றும். அரட்டை அடித்து வெட்டியாக பொழுதைப் போக்கும். தன்னைவிட வலிமை குறைந்த விலங்குகளை மிரட்டி உருட்டித் துன்புறுத்தி மகிழும்.

ஒருநாள் மாலை தூக்கம் கலைந்து எழுந்த குண்டோதரன், அம்மாவைத் தேடி சமையலறைக்குள் சென்றது. அம்மா கரடியோ முகமெல்லாம் வியர்த்துப் போய் தலையைப் பற்றிக் கொண்டு வருத்தமாக அமர்ந்திருந்தது.

அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத குண்டோதரன், “”எங்கே எனக்கு டிபன்?” என்று கேட்டு உறுமியது.

அம்மா கரடி கெஞ்சும் குரலில், “”மகனே குண்டோதரா! அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. சமையலுக்கு தண்ணி பிடிச்சுட்டு வர உடம்பில தெம்பில்லை. ரெண்டு குடம் தண்ணி பிடிச்சுட்டு வந்து தாயேன்…” என்று வேண்டியது.

தாயின் மேல் கொஞ்சமும் இரக்கமில்லாத குண்டோதரன், “”இதோ பார் கிழவி! எனக்கு வேலை இருக்கு. நான் இன்னும் ஒரு மணி நேரத்தில திரும்பி வருவேன். அதற்குள்ள சமைச்சு வைச்சுடு. இல்லாட்டா நடக்கறதே வேற!” என்று மிரட்டிவிட்டு வெளியேறியது.

தெருவிலே பிற விலங்குகளின் குட்டிகளெல்லாம் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றிடம் வகை வகையான பொம்மைகளும் சுவையான தின்பண்டங்களும் இருந்தன. குண்டோதரனுக்கு ஒரே வியப்பு! பொறாமை!

அருகிலே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு முயல் குட்டிகளின் காதைப் பற்றி முரட்டுத்தனமாக தூக்கிய குண்டோதரன், “”ஏய்… இந்தப் பொம்மைகள், தின்பண்டங்களை எல்லாம் உங்களுக்குக் கொடுத்தது யார்?” என்று அதட்டிக் கேட்டது.

அஞ்சி நடுங்கியவாறே முயல் குட்டிகள் கூறின- “”அண்ணா… கொஞ்ச நேரத்துக்கு முன்னால கிறிஸ்துமஸ் தாத்தா இங்க வந்தாரு… அவருதான் எங்களுக்கு இந்தப் பரிசுகளைக் கொடுத்தாரு…”

“அப்படின்னா கிறிஸ்துமஸ் தாத்தா எனக்கேன் பரிசு தரல?” என்று கோபத்தோடு உறுமியது குண்டோதரன்.

“அதை நீங்கதாண்ணா அவர்கிட்ட கேட்கணும்…” என்றன முயல்கள் தாழ்ந்த குரலில்.

“கேட்கறேன்… கேட்கறேன்… அவரோட தாடியைப் பிடிச்சு கேட்கத்தான் போறேன்… அவர் இப்போ எங்கேயிருக்கார்?”

“காளி கோயில் வேப்ப மர நிழல்ல ஓய்வெடுத்துக்கிட்டு இருக்கார்…”

முயல்களைத் தூக்கி எறிந்த குண்டோதரன் உடனே காளி கோயிலை நோக்கி ஓடியது. கோயில் அருகே கிறிஸ்துமஸ் தாத்தாவின் கலைமான் வண்டி நின்றுகொண்டிருந்தது. களைத்துப் போயிருந்த கலைமான்களுக்கு அன்வர் என்ற ஆட்டுக்குட்டியும், சலீம் என்ற புலிக் குட்டியும் புல்லை ஊட்டிக் கொண்டிருந்தன.

வேப்ப மரத்து நிழலிலே அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார் கிறிஸ்துமஸ் தாத்தா. திபுதிபுவென்று ஓடிவந்த குண்டோதரன் கரடியை அன்வர் ஆட்டுக் குட்டியும் சலீம் புலிக்குட்டியும் தடுக்க முயன்றன. ஆனால் அவற்றை இடித்துத் தள்ளிவிட்டுத் தாத்தாவிடம் ஓடியது குண்டோதரன்.

அவரை உலுக்கி, “”ஏய் கிழவா… எழுந்திரு… எழுந்திரு…” என்று கூச்சலிட்டது.

கிறிஸ்துமஸ் தாத்தா மெல்லக் கண் விழித்தார். குண்டோதரனைப் பார்த்துப் புன்னகைத்தார். “”என்ன குண்டோதரா… ஏன் என்னை எழுப்பினாய்?” என்றார் அமைதியான குரலில்.

“”காட்டில் இருக்கும் விலங்குகளுக்கு எல்லாம் பரிசளித்த நீங்கள் எனக்கு மட்டும் ஏன் பரிசு தரவில்லை?” என்று கேட்டது குண்டோதரன்.

கிறிஸ்துமஸ் தாத்தா மெல்லச் சிரித்தார். “”உனக்குப் பரிசுதானே வேண்டும்? இதோ தருகிறேன்!” என்றபடியே இடுப்பிலிருந்த மந்திரக் கோலை எடுத்தார். குண்டோதரனை நோக்கி ஒரு வீசு வீசினார்.

உடனே-

குண்டோதரன் ஒரு 10 வயதுச் சிறுவனாக மாறியது!

தாத்தா அடுத்த வீசு வீசினார்.

அந்தச் சிறுவன் நகரத்திலே இருந்த ஒரு பெரிய ரொட்டிக் கடை முன் நின்று கொண்டிருந்தான்.

கிறிஸ்துமஸுக்காகவும் புத்தாண்டுக்காகவும் அங்கே சுவையான ரொட்டிகளும் கேக்குகளும் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. அவற்றிலிருந்து எழுந்த இனிய மணம் பசியைத் தூண்டியது. கரடிச் சிறுவன் நாவிலே எச்சில் ஊற அவற்றையே உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தான்.

கடை முதலாளி முறுக்கு மீசையை வருடியபடியே, “”என்னடா பையா… கடையிலே வேலை செய்யிறியா? நிறைய கேக்குகள் சாப்பிடத் தர்றேன்…” என்று ஆசை காட்டினார்.

பையனும் ஆவலோடு தலையாட்டினான்.

ஆனால் பாவம் அவன். அந்தக் கடையில் அவன் கொத்தடிமை ஆக்கப்பட்டுவிட்டான்.

சரியான உணவோ, கூலியோ கொடுக்கப்படாமல் 18 மணி நேரம் வேலை செய்ய வைக்கப்பட்டான். வேலையென்றால் எளிமையான வேலை இல்லை. இடுப்பொடியும் அளவுக்கு கடுமையான வேலைகள்!

வேகாத வெயிலில் நீண்ட தொலைவு நடந்து சென்று குடங்களிலே தண்ணீர் பிடித்துவந்தான். பெரிய பெரிய பாத்திரங்களை தேய்த்தான். அடுத்தவர்களின் துணிகளைத் துவைத்தான். மாவு பிசைந்தான். அடுமனையின் வெப்பத்திலே வெந்து தவித்தான்…

அது மட்டுமல்லாது அவனை ஆளாளுக்கு அடித்து உதைத்தார்கள்… மிரட்டி உருட்டினார்கள்.

பையன் மனம் நொந்துபோய் கலங்கி அழுதான். தான் கரடிக் குட்டியாக இருந்தபோது செய்த தவறுகளையெல்லாம் நினைத்து வருந்தினான்.

அன்று திடீரென அந்த ரொட்டிக் கடைக்கு காவல் துறை அதிகாரிகளும் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளும் வந்தார்கள். சிறுவர்களை வைத்து வேலை வாங்கியதற்காக கடை முதலாளியை பிடித்துச் சென்றார்கள்.

அம்மா, அப்பா பெயரையோ, சொந்த ஊர் எதுவென்றோ சொல்லத் தெரியாத கரடிப் பையனை ஒரு தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தார்கள்.

அந்தத் தொண்டு நிறுவனத்திலே, பெற்றோரை இழந்து சாலையோரமாகச் சுற்றித் திரிந்து கொண்டிருந்த சிறுவர், சிறுமியர் பலர் இருந்தனர். கரடிப் பையனும் அவர்களோடு சேர்க்கப்பட்டான்.

பெற்றோர் இல்லாமல் அந்தச் சிறுவர்கள் பட்ட துன்பங்களையெல்லாம் அறிந்தபோது தன்னுடைய அம்மா, அப்பாவின் அருமை பெருமைகளை கரடிப் பையன் உணர்ந்தான். அவர்களுக்காக ஏங்கினான்.

மேலும் தொண்டு நிறுவனத்திலே அவனுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தார்கள். திருக்குறள், ஆத்திச்சூடி எல்லாம் கற்பித்தார்கள். அதனால் கரடிப் பையன் பண்பட்டவனானான்.

ஒருநாள் இரவு அவன் கனவிலே கிறிஸ்துமஸ் தாத்தா அழைப்பது போல இருந்தது. பையன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். அவனிருந்த மூன்றாவது மாடியின் ஜன்னலோரமாக, அந்தரத்தில் நிஜமாகவே கிறிஸ்துமஸ் தாத்தாவின் கலைமான் வண்டி நின்றுகொண்டிருந்தது.

கிறிஸ்துமஸ் தாத்தா புன்னகையோடு அவனை அழைத்தார்.

உடனே ஜன்னல் கம்பிகள் மறைந்து போயின. கரடிப் பையன் இடைவெளி வழியே மகிழ்ச்சியோடு தாவி வண்டியில் குதித்தான். கிறிஸ்துமஸ் தாத்தா அவனை அன்போடு அணைத்துக் கொண்டார். கலைமான் வண்டி முகில்களுக்கு இடையே மின்னல் வேகத்தில் பறந்தது.

விடிந்தபோது அவர்கள் காட்டிலே இருந்தார்கள்.

பையன் மறுபடியும் குண்டோதரனாய் மாறியிருந்தான்.

குண்டோதரன் கரடி கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு நன்றி கூறிவிட்டு வீட்டை நோக்கி ஓடியது- அம்மாவுக்கு உதவி செய்ய!

– பெப்ரவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *