மனக்கோட்டை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 26, 2023
பார்வையிட்டோர்: 1,856 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

ஸ்ரீ பராங்குசம் பிள்ளையின் மனம் அன்று என்ன காரணத்தினாலோ ஒரு நிலையில் இராமல் தத்தளித்துக்கொண்டிருந்தது.

அன்று மாலை இருட்டுகிற சமயத்தில், ஆபீஸி லிருந்து வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்த பிள்ளையவர்கள், “சீ! இதென்ன உலகம்? மனசிலே துளிச் சந்தோஷம் உண்டா இந்த ஜன்மத்துக்கு?” என்று முணுமுணுத்துக் கொண்டே ஸுரட்டி பஜாரில் ஒரு மருந்து ஷாப்புக்குள் நுழைந்தார். கடையில் ஒரே கூட்டம். வெகு நேரம் ‘கௌண்டரு’க்கு எதிரில் அவர் நின்றிருந்த பின்பு ஒரு பையன் வந்து, “என்ன வேண்டும்?” என்று கூட அவரைக் கேளாமல் நரை மயிர் கறுக்கும் தைலப் புட்டிகள் இரண்டைக் கொண்டுவந்து அவர் முன்பு வைத்தான்.

பிள்ளை முதலில் திடுக்கிட்டுப் போனார். பின்பு, தாம் ஏற்கனவே ஒரு தடவை அங்கு மருந்து வாங்கிய ஞாபகம் வந்ததும் சமாளித்துக் கொண்டு இரண்டு புட்டிகளையும் திருப்பித் திருப்பிப் பார்த்து விட்டு, “சின்ன சைஸ் புட்டி என்ன விலை?” என்று கேட்டார். அனால் அதற்குள் அந்தப் பையன் வேறு யாரையோ கவனிக்கப் போய்விட்டதால் பதில் சொல்ல ஒருவரும் இல்லை. பத்து நிமிஷம் நின்று பார்த்தார் பிள்ளை. பேசாமல் புட்டியைப் பைக்குள் போட்டுக்கொண்டு போய்விடலாமா என்று தோன்றிற்று. அடுத்தாற்போல், “இன்றைக்கெல்லாம் இருந்தால் மூன்று ரூபாய் இருக்கும். இதற்காகவா இந்தக் கெட்ட எண்ணம்?” என்றும் தோன்றின படியால், சின்னப் பட்டியை வைத்து விட்டுப் பெரியதை எடுத்துக் கோட்டுப் பைக்குள் போட்டுக் கொண்டு மறுபடியும், “சீச்சீ, என்ன உலகம்!” என்று முணுமுணுத்துக்கொண்டே கடையை விட்டு வெளியே வந்தார்.

அப்போது சூரியன் அஸ்தமிக்கும் சமயம்; ட்ராம் வண்டியின் கணகண என்ற ஓசையும், ட்ராலி பஸ்களின் சப்தமும், காலில் அணிந்திருந்த பன்னாக் கட்டைகளைத் தரையில் தேய்த்துக் கொண்டே பர்மாக்காரர்கள் பேசிக்கொண்டு போகும் இரைச்சலும் சேர்ந்து காதைத் துளைத்தன.

சிறிது நேரம் இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளையவர்கள், பிறகு மெதுவாய் நடந்து ஒரு டீக்கடைக்குள் நுழைந்து உட்கார்ந்தார். மேஜைமேல் தம் எதிரில் வைக்கப்பட்ட பிஸ்கோத்துகளைத் தின்னத் தொடங்கியபோது அவர் மனம் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தது.

2

பிள்ளையவர்களுக்கு இப்போது வயசு கிட்டத் தட்ட நாற்பத்தைந்து ஆகிறது. ரங்கூனில் ரெயில்வே ஆபீஸில் முந்நூறு ரூபாய் சம்பளத்தில் அவருக்கு வேலை. சொந்தப் பங்களா ஒன்று வாங்கியிருந்ததுடன் ரொக்கத்திலும் இருபதாயிரம் வரையில் சேர்த்துவிட்டார். தேகமும் நோய் நொடி இல்லாமல் திடமாய்த்தான் இருந்தது. குழந்தைகள் இல்லாதது, அப்படிப் பெரிய குறையாக அவருக்குப் படவில்லை. இப்படி வாழ்க்கையில் யாதொரு குறையும் இல்லாதவருக்கு மனசில் சிறிது காலமாகத் தவிர்க்க முடியாத ஓர் ஏக்கம் நிறைந்து வாட்டிக் கொண்டிருந்தது.

“எல்லாம் அந்த மனுஷனால் வந்ததுதான்!” என்று பிள்ளை தமக்குள் சொல்லிக்கொண்டார். “அந்த மனுஷன்” என்று அவர் குறிப்பிட்ட செல்வரத்தினம், அவர் நணபர்களில் ஒருவன்; எப்படி அவன் நட்பு தமக்கு ஏற்பட்டது என்பது அவருக்கு இப்போது ஞாபகம் இல்லை. ‘ஆட்டை எடுத்து மாட்டில் போடுவது, மாட்டை எடுத்து ஆட்டில் போடுவது’ என்று சொல்வார்களே, அந்த மாதிரி அந்தச் செல்வரத்தினம் பிள்ளையும் எப்படியோ தகல் பாஜித்தனம் பண்ணிக்கொண்டு காலக்ஷேபம் செய்து வந்தான்.

நான்கு மாசங்களுக்கு முன் ஒரு தினம் இப்படித் தான் பராங்குசம் பிள்ளை ஆபீஸிலிருந்து வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது செல்வரத் தினம் எதிரே வந்தான். தன் வீட்டுக்கு வந்து போகும்படி அவன் அவரை வற்புறுத்தினதால் அவனுடன் சென்றார். வீட்டில் நுழைந்து மாடிப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கையில் கீழே இருந்த ஹால் பக்கம் தற்செயலாக அவர் பார்வை சென்ற போது பிள்ளைக்குத் தூக்கிவாரிப் போட்டது. அங்கே ஒரு ஸோபாவில் வெகு சொகுசாய்ச் சாய்ந்து கொண்டிருந்த பர்மியப் பெண் ஒருத்தி அவரைப் பார்த்து நீண்ட நாட்கள் பழக்கமானவளைப்போல் புன்னகை செய்தது தான் அதற்குக் காரணம்.

பிள்ளைக்கு அன்று வேறு எதிலும் கவனம் செல்லவில்லை. அவள் யார் என்று செல்வரத்தினத்தைக் கேட்டதற்கு அவன், தனக்குத் தெரியாதென்றும், அவள் அங்கே குடி வந்து பத்து நாட்களே ஆகின்றனவென்றும் தெரிவித்தான். அந்தப் பர்மாக்காரி உண்மையில் நம்மைப் பார்த்துத்தான் புன்னகை செய்தாளா அல்லது நாமே நினைத்துக் கொண்டோமா என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப அவர் மனம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனால் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அவர் மறுபடியும் கீழே இறங்கி வந்தபோது சந்தேகம் எல்லாம் பறந்தது. அவர் வரவுக்காகக் காத்துக்கொண்டிருப்பதுபோல் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்த அந்தப் பெண்ணின் முகத்தில் மறுபடியும் அதே புன்னகை தோற்றியது.

வீட்டை நோக்கி அன்று வெகு வேகமாய் நடக்கையில் பராங்குசம் பிள்ளையின் இருதயம் திக்குத் திக்கென்று அடித்துக்கொண்டிருந்தது.

மறுநாள் முதல் பராங்குசம் பிள்ளை தினந்தோறும் மாலையில் ஆபீஸ் விட்டதும் செல்வரத்தினத்தின் வீட்டுக்குப் போகத் தொடங்கினார்.

இப்படி மூன்று மாசங்கள் சென்றன. ஒரு நாள், பிள்ளைக்கு எங்கிருந்துதான் அவ்வளவு தைரியம் வந்ததோ தெரியவில்லை. அந்தப் பர்மியப் பெண்ணைப் பார்த்து, “என்னைக் கல்யாணம் செய்துகொள்கிறாயா?” என்று கேட்டே விட்டார்.

இதைக் கேட்டதும் அந்தப் பெண்ணின் முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. ஆனால் உடனே, “உங்களுக்கு மனைவி இல்லையா?” என்று பதிலுக்குக் கேட்டாள் அவள்.

“இருக்கிறாள்-” என்று பிள்ளை இழுத்தாற் போல் சொன்னார்.

“பின்னே?”

“இருந்தால் என்ன?” என்றார் அசட்டுச் சிரிப்போடு.

பர்மாக்காரி கோபத்தினால் முகம் சிவக்க, வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.

3

பராங்குசம் பிள்ளை மறுபடியும் பெருமூச்சு விட்டார். நான்கு மாசங்களாக அவர் மனசிலே புழுங்கிக்கொண்டிருந்த ஏக்கம் இப்படி வெளிப் பட்டது. இதற்குள் எதிரில் இருந்த டீயும் ஆறிப் போய்விட்டது. அதைக் குடிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில், “என்ன பராங்குசம்? ஏதாவது விசேஷம் உண்டா?” என்று கேட்டுக்கொண்டே செல்வரத்தினம் அவர் எதிரில் வந்து உட்கார்ந்தான்.

“விசேஷம் இருக்கிறது; அதனால் தான் உன் வீட்டுக்கு நான் வராமல் உன்னை இங்கே வரச் சொன்னேன். ஏய், இங்கே ஒரு டீ கொண்டாப்பா” என்றார் பிள்ளை.

செல்வரத்தினம் சற்று நேரம் அவர் முகத்தைக் கவனித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். பிறகு சிரித்துக்கொண்டே, “என்ன விஷயம்? மிம்மியைப் பற்றித்தானே?” என்று கேட்டான்.

பிள்ளைக்குச் சட்டென்று உடல் சிலிர்த்தது. சமாளித்துக்கொண்டு, “ஆமாம் அப்பா; அந்தப் பெண்ணிடம் ஆசை வைத்துவிட்டேன். ஆனால் எனக்கு ஏற்கனவே ஒருத்தி இருக்கிறாளே, என்ன செய்யலாம்?” என்றார்.

“ஆமாம்; மிம்மியை மறக்க வேண்டியதுதான். வேறு வழி இல்லை” என்றான் செல்வரத்தினம்.

வெளியே நன்றாய் இருட்டிவிட்டது. தூரத்தில் ‘பையா’ கோவிலின் (புத்ததேவன் கோயில்) கோபுரத்தின்மேல் விளக்குகள் தெரிந்தன.

பக்கத்திலிருந்த ‘காக்கா’ கடையில் சுருட்டு வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டு இருவரும் மொகல் தெருவை நோக்கி நடந்தார்கள்.

திடீரென்று செல்வரத்தினம், “ஒரு யோசனை தோன்றுகிறது” என்று சொல்லிக்கொண்டு நின்றான்.

பிள்ளை, “என்ன?” என்று கேட்டார் ஆவலுடன்.

“இப்போது தான் ஒரே யுத்த பீதியாய் இருக்கிறதே! ரொம்பப் பேர் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் சென்னைக்கு அனுப்பிக்கொண்டிருக்கி றர்கள் அல்லவா? உன் சம்சாரத்தையும் காப்ரா பண்ணி அனுப்பிவிடேன்” என்றான்.

“அனுப்பிவிட்டு?”

“தெரியவில்லையா? அப்புறம் இங்கே உன் ராஜ்யந்தானே? யுத்தம் எப்படி முடிகிறதோ, எப்போது முடிகிறதோ, யார் கண்டார்கள்?”

4

பத்து நாட்களுக்குப் பிறகு, ரங்கூன் துறை முகத்திலிருந்து ‘டலம்பா’ என்ற கப்பல், ‘ஹும்’ என்று யானை பிளிறுவதுபோல் ஒரு பயங்கரச் சப்தம் போட்டுவிட்டுக் கிளம்பியபோது, கப்பலின் மேல் தளத்தில் மற்றப் பிரயாணிகளுடன் இரும்புக் கிராதியைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்த சிவகாமி அம்மாளின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. கரையில், கூட்டத்தில் ஒருவராக இருந்த பராங்குசம் பிள்ளை கைக் குட்டையை உயரத் தூக்கிப் பலமாக ஆட்டினார். பாவம், அப்போது அவர் மனசில் சந்தோஷமும் துக்கமும் கலந்து போராடிக்கொண்டிருந்தன. என்னவென்று புரியாத ஒரு பாரம் அவர் இருதயத்தின் மேலிருந்து அமுக்கியது.

பிள்ளை, மூக்கைச் சிந்திவிட்டு நேராகச் செல்வ ரத்தினத்தின் வீட்டுக்குப் போனார். அங்கே மிம்மியைப் பார்த்துத் தாம் மனைவியை ஊருக்கு அனுப்பி விட்ட செய்தியைத் தெரிவித்து, “இனிமேல் நீ இங்கே இருக்கவேண்டாம். என் பங்களாவுக்கு வந்துவிடு. நான் விவாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கிறேன்” என்று கூறி அவளையும் தம்முடன் அழைத்துச் சென்றார்.

இரண்டு தினங்கள் சென்றன.

அலை ஓய்ந்த நடுக்கடலில் ‘டலம்பா’ அன்னப் பறவைபோல் மெதுவாக அசைந்துகொண்டே பாரத பூமியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

அதே நேரத்தில் ரங்கூன் நகரத்தில் விமானத் தாக்குதலை அறிவிக்கும் சங்கு வயிற்றைக் கலக்கும் கர்ண கடோரமான சப்தத்தோடு அலறத் தொடங்கியது. வீதிகளில் அங்கங்கே வண்டிகள் அப்படி அப்படியே நின்றன. தெருவில் இருந்தவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மறைவிடத்தை நோக்கிப் பதுங்கிக்கொள்ள ஓடினார்கள். மரணத்துக்குப் பயப்படாமல், தமாஷ் பார்ப்பதற்காக ஆகாயத்தையே அண்ணாந்து பார்த்துக்கொண்டு தெருவிலேயே சில மேதாவிகள் நின்றார்கள்.

ஆபீஸில் வேலை செய்துகொண்டிருந்த பராங்குசம் பிள்ளை அலறி அடித்துக்கொண்டு எழுந்து போய் மேஜை அடியில் பதுங்கிக் கொண்டார். இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் வானத்தில் ‘உர்ர்’ என்று விமானங்களின் ஓசை கேட்டது. அடுத்தாற் போல், பூமியைக் கிடுகிடுக்கச் செய்து, காதைச் செவிடாக்கும் வெடிச் சத்தங்கள் கேட்டன. பிள்ளை, கண்களையும் காதையும் கெட்டியாக மூடிக் கொண்டு, ‘இன்று செத்தோம்’ என்று நினைத்துப் பகவானைப் பிரார்த்தித்தார். சிவகாமியின் ஞாபகம் வந்தது. அவளைக் கப்பலேற்றி அனுப்பிவிட்டதைக் குறித்து அவர் மனசில் இப்போது அடக்க முடியாத ஆனந்தம் ஏற்பட்டது ; ‘அவளாவது பிழைத்துக் கொண்டாளே’ என்று தோன்றிற்று. உடனே, ‘இங்கே குண்டு போட்டான் என்று கேள்விப்பட்டால் அவள் நமக்காக எவ்வளவு கவலைப் படுவாள்?’ என்றும் நினைத்தார். அடுத்தாற்போல், தம் வீட்டில் மிம்மி என்ன செய்துகொண்டிருக்கிறாளோ என்ற பயம் உண்டாயிற்று.

5

அன்று மாலையில் தம் வீட்டை நோக்கிச் சென்ற பராங்குசம் பிள்ளையின் உடலில் பாதிப்பிராணன் கூட இல்லை.

இடிந்து தரை மட்டமாய்ப் போன கட்டிடங்களையும், கால் போனதும், கை போனதுமாய் உருத் தெரியாமல் அங்கங்கே தெருவில் கிடந்த பிணங்களையும் காணச் சகியாமல் பைத்தியம் பிடித்தவர் போல் தம் பங்களாவை நோக்கி ஓடியவர் தம் எதிரில் தோன்றிய காட்சியைக் கண்டதும் “மிம்மி!” என்று கத்திக்கொண்டு அப்படியே மூர்ச்சித்து விழுந்துவிட்டார்: அவர் வீடும், பக்கத்தில் இன்னும் சில வீடுகளும் இடிந்தும் எரிந்தும் போயிருந்தன. இன்னும் சில இடங்களில் புகைந்து கொண்டே இருந்தது.


அடுத்த வாரம் ரங்கூனிலிருந்து புறப்பட்ட கப்பல் பிரயாணிகளில் ஸ்ரீ பராங்குசம் பிள்ளையும் ஒருவர். “மனைவியை முன்பே அனுப்பிவிட்டேன். நான் மட்டும் எதற்காக இங்கே இருந்து சாக வேண்டும்?” என்று நண்பர்களிடம் கூறி விட்டு அவர் விடைபெற்றுக்கொண்டார்.

தக தக என்று பொன்மயமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்த ‘பையா’ கோவிலின் சிகரம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து வந்தது.

– காளியின் கண்கள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *