யாரென்று மட்டும் சொல்லாதே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: January 12, 2024
பார்வையிட்டோர்: 12,147 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

அத்தியாயம்-16 

‘போதும் ராஜதுரை… கொலை பாவம் பத்தி உனக்கு தெரியலை. ஏழு ஜென்மத்துக்கு அது தொடர்ந்து வந்து கணக்கு தீர்க்கும். ஏழு ஜென்மத்துக்கும் நீ ஒரு உயிரை அநியாயமா பறிகொடுத்துட்டு, துக்கம் தாளாம அதை நினைச்சே வாடுவே!’

எண்ணெயில் மெழுகியது போல் இருந்த தார்ச்சாலையில் ஓடியது போதும் என்று அந்த கார், ஓர் ஓரமாக நிற்கத் தொடங்கியது. அதனுள்தான் பிரியாவும், அர்ஜுனும் அமர்ந்திருந்தனர். கார் நிற்கவும், பிரியா கேட்டாள். “டிரைவர் ஏன் காரை ஓரம்கட்டுறே?” 

“கிளச் ‘பிளேட்’ பழுதடைஞ்சு இருக்கு மேடம்…”

“இல்லீயே… வண்டி நல்லாத் தானே போய்க்கிட்டு இருக்கு?” 

“வண்டி ஓட்டுற எனக்குல்ல மேடம் தெரியும்.” 

அவன் பதிலில் சன்னமாய் ஓர் அலட்சியமும்கூட! பிரியாவின் கூரிய புத்தி அதை அந்த நொடியே புரிந்துகொண்டுவிட்டது. அவனும் காரை விட்டு இறங்கி, ‘பானட்’டை திறந்துகொண்டு உள்ளே பழுது பார்ப்பது போல நடிக்கத் தொடங்கினான். சாலையில் மற்ற வாகனங்கள், துப்பாக்கியில் இருந்து கிளம்பிய தோட்டாக்களாய் சீறிக்கொண்டிருந்தன. 

“அர்ஜுன்… எனக்கு இந்த டிரைவர் மேல சந்தேகமா இருக்கு. இவன் வேணும்னே காரின் வேகத்தை, குறைச்சி ஓட்டுறான். நடுவுல நடுவுல யார்கூடவோ போன்ல பேசிட்டு வந்ததைக் கவனிச்சேதானே?” 

“ஆமாம் பிரியா… நீ யார்னு தெரிஞ்சு உன் அம்மாகிட்ட போட்டு கொடுத்திருப்பானோ?”

“பேசாம இறங்கி நாம வேற ஏதாவது பஸ்சை பிடிச்சு போயிடலாமா”

“நீ கொஞ்சம் பொறு… நான் இவன்கிட்ட பேசிப் பார்க்கிறேன்”. 

அர்ஜுனும் பேச்சோடு பேச்சாக காரைவிட்டு இறங்கினான். டிரைவரும் அவன் வருவதைப் பார்த்து நிமிர்ந்தான். 

“என்னய்யா… நிஜமாவே ‘ரிப்பேரா?’ இல்ல எதாவது டுபாக்கூர் வேலை பார்க்கிறியா?”

“சார்ர்ர்…!” 

“என்ன, சார்… மோர்… நீ ஏதோ உள்வேலை பார்க்கிறமாதி தான் எனக்குத் தோணுது”. 

”உள் வேலையா… என்ன சார் நீங்க…? நான் எதுக்கு சார் அதை எல்லாம் பார்க்கணும்?”

“இதோ பார்…நான் ஒண்ணும் கொண்டையில பூ வெச்சுகிட்டு வரலை. உண்மையைச் சொல். பிரியா யாருன்னு உனக்குத் தெரியும்தானே?”

”சார்ர்ர்…”

“சொல்லுய்யா…இல்லாட்டி இங்கேயே இறங்கி நாங்க வேற வண்டியைப் பிடிச்சுக்கிட்டு கிளம்பிடுவோம்…” 

“அது வந்து சார்…”

“எது வந்து… விவரமா சொல்லு… யாருக்காக இங்கே காரை நிறுத்தி இருக்கே?”

“லட்சுமி மேடம் வந்துகிட்டிருக்காங்க சார்…!”

“அடப்பாவி.. ஆமா பிரியாவை எப்படி அடையாளம் கண்டுபிடிச்சே? லட்சுமி மேடம் எங்களை தேடிக்கிட்டு இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்?”

“மேடம் உங்களைக் கண்டுபிடிக்கிற பொறுப்பை பல துப்பறியும் நிபுணர்களிடம் கொடுத்திருக்காங்க. அதுல ஒரு ஏஜெண்டோட உதவியாளன்தான் நான்.”

“அவர் எப்படி கண்டுபிடிச்சார்…?”

“நீங்க என்ன சார் பின்லேடனா? உங்களை யதார்த்தமா பார்த்த ஒருத்தர், எங்க துப்பறியும் நிறுவனத்துக்கு தகவல் கொடுத்தாரு. அப்படியே தொட்டுத் தொட்டு வந்து உங்களை நெருங்கினோம். நீங்க அப்ப பார்த்து திருப்பதி போகணும்னு சொல்லவும், எங்களுக்கு வசதியா போச்சு. இன்னும் 10 நிமிடத்துல லட்சுமி மேடம் வந்துடுவாங்க.”

“ஏன்ய்யா… இது ஒரு துரோகம்னு உனக்குத் தெரியலியா?”

”சார்… நான் பிள்ளைக்குட்டிக்காரன் எனக்கு சம்பளம் கொடுக்கிறவர் சொல்றதை கேக்கிறதுதான் என் வேலை…”

“சரி… நாங்க இப்ப இங்கே இருந்து ஓடப்போறோம். வந்தா சொல். இந்தத் தடவை அவங்களால மட்டுமில்ல… யாராலேயும் பிடிக்க முடியாதுன்னும் சொல்.”

“தப்பா எடுத்துக்காதீங்க சார்… திருப்பதி போய் திருட்டுத்தனமா தாலி கட்டிக்கிறதுக்கு மேடம் கால்ல விழுந்தா நிச்சயம் மன்னிச்சு ஏத்துக்குவாங்க சார்…”

“நாங்க கல்யாணம் பண்ணிக்க போறோம்னு உனக்கு யாருய்யா சொன்னா… முட்டாள்! பிரியா, உடனே காரைவிட்டு இறங்கி வா…”

அர்ஜுன் முகம் சிவக்க சாலை நடுவில் போய் நின்றவனாக ஏதாவது வாகனம் வந்தால் தடுத்து நிறுத்தி அதில் ஏறிக்கொள்ள தயாரானான். அதேபோல் ஒரு காரும் நல்ல வேகத்தில் வந்தபடி இருந்தது. கை கட்டைவிரலை உயர்த்தி வாய்ப்பு கேட்டவனாக நின்றவன் முன்னே கச்சிதமாக அந்த காரும் தேங்கி நின்றது. 

அதன் கண்ணாடிகள் சீரான வேகத்தில் இறங்கிட – உள்ளே ‘லயன்’ லட்சுமியின் முகம் தெரிந்தது. சங்கிலி பூட்டிய கூலிங்கிளாசை கழட்டியபடியே அர்ஜுனை வெறித்தவள், தாமதமில்லாமல் காரைவிட்டு இறங்கினாள். பிரியாவும், லட்சுமியைப் பார்த்துவிட்டு சற்று பதைத்துப் போனாள். 

“பிரியா…!” – லட்சுமி முந்தினாள். பிரியாவிடம் – ஏமாற்றமான முகபாவனை. 

”பிரியா… நான் உன் அம்மா வந்திருக்கேன். நீ இப்படி நடந்துக்குவேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை தெரியுமா?”

பிரியா மவுனமாகவே நின்றாள். 

“வாயைத் திறந்து பேசு. இப்படித்தான் என்னை தவிக்கவிடுவியா?”

“பேசுடி…ஆமா, திருப்பதிக்கு எதுக்கு போறீங்க. திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணிக்கத்தானே?”

லட்சுமியின் கேள்விக்கு ஆண்மையோடு, “ஆமாம்… சரியா சொன்னீங்க?” என்று முன்வந்தான் அர்ஜுன். அவன் பதில், அவள் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. 

“நீ வாயை மூடு… நான் உன்கிட்ட பேசலை…” 

லட்சுமி அவனை நீ என்று கூறவும், அதுவரை மவுனமாக இருந்த பிரியாவிடம் ஓர் ஆவேசம். 

“அம்மா… அவரை மரியாதை இல்லாம பேசாதே. அவர் என் வருங்கால கணவர்…”

பிரியாவின் பதிலுக்கு ஒரு பதிலைச் சொல்ல லட்சுமி வாயைத்திறந்தபோது, அவள் செல்போனில் அழைப்பொலி. 

காதைக் கொடுத்தவள் அப்படியே ஸ்தம்பித்து காரின் மேல் ஓர் ஓரமாக சாய்ந்துவிட்டாள். அதுவரை காருக்கு அந்தப் பக்கம் மவுனமாய் நின்றுகொண்டிருந்த சிட்டிபாபுவும் நெருங்கிவந்து, “என்ன மேடம் ஆச்சு?” என்று கேட்டான். 

அவளும் காற்றுக் குரலில் சொன்னாள்: “மாப்பிள்ளை ரமேஷ் மேல லாரி ஏறிடிச்சாம். அந்த விபத்துல அவர் இறந்துட்டாராம். கூடப்போன கம்பக்குடி ஜமீன்தார் கைலாசநாதனும் செத்துட்டாராம்!”

அவளின் பதில் பிரியாவை மட்டும் ஓர் இறுக்கத்தில் இருந்து விடுவித்ததுபோல ஆக்கி இருந்தது. 


ஆஸ்பத்திரி கட்டிலில் ஒன்றுமே தெரியாததுபோல கண்களை மூடிக்கொடு படுத்திருந்தார், ராஜதுரை. காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் வந்து எழுப்பவும், அப்போதுதான் எழுந்திருப்பதுபோல எழுந்தார். 

“சார் ஒண்ணும் பிரச்சினை இல்லை! லாரிக்கு ‘பிரேக் கட்’ ஆயிடிச்சுன்னு முதல் தகவல் அறிக்கை போட்டு டிரைவரையும் ‘லாக் – அப்’ல உக்காத்தி வெச்சுட்டுதான் வந்துருக்கேன்.” 

“யாராவது இது கொலை முயற்சின்னு சந்தேகப் பட்டாங்களா?” 

“இந்த நிமிடம் வரை இது விபத்துதான் சார். லாரி டிரைவர் அவ்வளவு தொழில் சுத்தமா காரியம் பண்ணியிருக்கான்.”

”சந்தோஷம்… என் சபதத்துல ஒரு பாதி நிறைவேறிடிச்சு. மறுபாதி பாக்கி இருக்கு…”

“லட்சுமி மேடம் விஷயம்தானே சார்?” 

“அவளேதான்… அவ இப்ப கதிகலங்கிப் போயிருப்பா.”

“நிச்சயமா சார். ஆனா, அந்தம்மாவின் மக வீட்டை விட்டு ஓடிடிச்சாம் சார்.” 

“உனக்கு ஓடினது மட்டும்தான் தெரியும். எனக்கு இப்ப அவ எங்கே இருக்கா, என்ன பண்ணிகிட்டு இருக்கான்னு தெரியும்.” 

“உண்மையிலே பெரிய ஆள் சார் நீங்க.”

“என்னை இப்படி ஈவு இரக்கம் இல்லாம படுக்க வைச்சவளை சும்மா விடலாமாய்யா?”

“பார்த்து சார்… கமிஷனர்கிட்ட மேடத்துக்குத்தான் ‘பவர்’ அதிகம்.” 

“என்கிட்டேயும் ‘பவர்’ இருக்குய்யா… பார்க்கிறியா?” – ராஜதுரை கேட்கும்போதே சிரித்தபடி வந்தார், சங்கரானந்த சாமிகள். 

“வாங்க சாமி… உங்களைத்தான் நினைச்சேன். வந்து நிக்கிறீங்க?” 

“சாமின்னா நினைச்ச உடனே வரணும்ப்பா.”

“சரியா சொன்னீங்க… சாமி இன்னிக்கு என் வாழ்க்கையில ஒரு மறக்கமுடியாத நாள்.’ 

“தெரியும்ப்பா… இருந்தாலும் அவசரப் பட்டுட்டே…”

“என்ன சாமி சொல்றீங்க?”

“இனி சொல்ல என்ன இருக்கு? விதி வலியது. எது எப்ப எப்படி நடக்கணுமோ அப்ப அப்படியே நடந்து முடிஞ்சிடுது. வினை விதைச்சா வினை… தினை விதைச்சா தினை…” 

“நீங்க சாமியார் பாருங்க… இப்படித்தான் பேசுவீங்க. ஆனா, நான் உப்பு, காரம்னு சாப்பிட்டு வாழ்ற ஒரு மனுஷன். என்வரையில நான் யார் வம்புக்கும் போறவனில்லை. அதே நேரம் வந்த வம்பையும் விடமாட்டேன் சாமி.” 

“போதும் ராஜதுரை… கொலை பாவம் பத்தி உனக்குத் . தெரியலை. ஏழு ஜென்மத்துக்கு அது தொடர்ந்து வந்து கணக்கு தீர்க்கும். ஏழு ஜென்மமும் நீ ஒரு உயிரை அநியாயமா பறிகொடுத்துட்டு, அந்தத்துக்கம் தாளாம அதை நினைச்சே வாடுவே.”

“எனக்கு இப்ப வாழுற நாள்தான் சாமி கணக்கு. ஜென்மத்தைப் பத்தி எல்லாம் நான் இப்ப எதுக்கு நினைக்கணும்?” 

ராஜதுரை சாமியிடம் பதிலுக்கு பதில் பேசிவிட, காவல்துறை உதவி ஆய்வாளர் மெல்ல ஒதுங்கிக்கொள்ளத் தொடங்கினார். 

”சார்… நான் போயிட்டு அப்புறமா வர்றேன்.”

”சரிய்யா…அப்பப்ப நிலைமையைப் பத்தி தகவல் கொடுத்துகிட்டே இரு. நரிக்குடி ஜமீனே ஒழிஞ்சுபோச்சு. கம்பக்குடிகாரனும் ஓழிஞ்சான்” – ராஜதுரை சிரித்தார். 

காவல்துறை உதவி ஆய்வாளரும் விலக்கிக்கொள்ள, எழுந்து நன்றாக நடந்தே போய் அறைக் கதவை மூடியவர், “சாமி” என்று சங்கரானந்த சாமியாரிடம்தான் ஊன்றினார். 

“என்ன ராஜதுரை… உன் அடுத்த குறி லட்சுமியா?”

“ஆமாம் சாமி. முதல்ல அவகிட்ட இருக்கிற நாகமாணிக்கம் என் கைக்கு வரணும். அப்புறமா அவ மகள் கழுத்துல நான் தாலியைக் கட்டி அவளோட அவ்வளவு ஆஸ்திக்கும் நான் வாரிசாகணும்.” 

சங்கரானந்த சாமிகள் ராஜதுரையின் ஆசையை ஒரு பேராசையாக உணர்ந்து சிரித்தார். 

“சாமி… இந்த சிரிப்புக்கு அர்த்தம்?” 

“நீ ரொம்பவே அவசரப் படுறே.”

“சரி… என்னதான் நான் செய்யட்டும்?”

“உனக்கு தோணுறதைச் செய். ஆனா, கொலை பாவம் மட்டும் வேண்டாம்.”

“சரி சாமி…இனி நான் யாரை கொல்லப் போறேன்? லட்சுமியைப் போட்டு உலுக்குறதுதான் என் வேலை.” 

“நல்லாவே உலுக்கு… அவ பதிலடி கொடுத்தா அதையும் வாங்கிக்கோ.”

“யுத்தம்னு இறங்கிட்டா காயத்துக்கு பயப்படலாமா சாமி? நீங்களே யோசிச்சு பாருங்க. நான் ரொம்ப நல்ல பிள்ளையா தூது போனவன். என்னை உலகத்தைவிட்டே அனுப்ப பார்த்தானே அந்த ஜமீன்தார் கிழவன்?” 

“அப்படி எல்லாம் நடக்கலேன்னா நீ என்னை சந்திச்சிருக்க முடியுமா? இல்ல நான்தான் உன்னை சந்திச்சி இருப்பேனா?”

“விடுங்க சாமி… எனக்கு இப்ப லட்சுமியோட அவ்வளவு சொத்தும் வரணும். அந்தப் பொண்ணையும் நான் கட்டணும். உங்களுக்குத்தான் வசிய மருந்தெல்லாம் பண்ணத் தெரியுமே… தர்றீங்களா?” 

ராஜதுரையின் கேள்வி முன் மவுனமாக வெறித்தார், சாமி.

“இப்படி பார்த்தா எப்படி சாமி? என்னைக் கொல்ல நினைச்ச லட்சுமிக்கு மாப்பிள்ளையாகி, அவளை தினம் தினம் உசுரோடு கொல்ல நினைக்கிறேன், நான். இதுல என்ன சாமி தப்பு இருக்கு?”

“ஒரு தப்பும் இல்லை. அதுதான் லட்சுமியோட விதின்னா அதை மாத்த யாரால முடியும்? ஆமா, இவ்வளவுதூரம் என் உதவியை கேக்கிறியே… எனக்கு என்ன வேணும்னு கேக்கமாட்டியா?” 

“எனக்கு நல்லா தெரியும் சாமி… உங்களுக்கு அந்த நாகமாணிக்கக் கல்லு வேணும்… அவ்வளவுதானே?” 

“பரவாயில்லையே… பளிச்சின்னு சொல்லிட்டியே?”

“லட்சுமியைக் கட்டிப்போட நீங்க மருந்து தாங்க… நான் மாப்பிள்ளையான நிமிடம் அந்த மாணிக்கக்கல் உங்களுக்கு வந்து சேரும்.” 

சாமியார் சிரித்துக்கொண்டே புறப்படத் தயாரானார்.

“சாமி, மருந்து…”

“அடுத்ததடவை சந்திக்கும் போது கொண்டு, வர்றேம்ப்பா.” 

“சந்தோஷம். உங்களைக் கடைசியா ஒரு கேள்வி கேட்கலாமா?” 

“தாராளமா கேளு.” 

“உங்களுக்கு தெரிஞ்ச வித்தைகளையும், சாகசங்களையும்விட அந்த மாணிக்கக்கல் ஒசத்தியா?”

“ஆமாம்ப்பா” உதடு அழகாக குவிய சாமியார் சொன்னதில் நல்ல நேர்த்தி. 


திருப்பதி. 

இந்த ஒரு மலைத்தலத்தில் மட்டும் திருமணம் செய்து கொள்ள குறித்த நாள் இல்லை, கிழமை இல்லை, நேரம் இல்லை. இங்கே ஒவ்வொரு நொடியும் முகூர்த்த நேரம்தான். 

பிரியாவுக்கும், அர்ஜுனுக்கும் சந்நதியிலேயே திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டிருந்தான், சிட்டிபாபு. லட்சுமி மட்டும் எந்தத் தடையும் இன்றி வேகமாய் திருமணம் நடந்தாக வேண்டுமே என்கிற கவலையில் இருந்தாள். 

ரமேஷை போட்டுத்தள்ளிய ராஜதுரைக்கு இந்தத் திருமணம் ஓர் அதிர்ச்சி செய்தியாக இருக்க வேண்டும் என்பது லட்சுமியின் திட்டம். அதேவேளை, ரகசியமாக வைத்திருந்து ரமேஷ் கர்மகாரியமெல்லாம் முடிந்தபிறகு தன் மகளுக்கு அர்ஜுனைப் பார்த்து முடித்தது போல ஊர் நினைக்க வேண்டும் என்பது அவள் கணக்கு. 

இப்படி ஓர் உள் கணக்கோடுதான் அவள் சம்மதம் தந்திருக்கிறாள் என்பதெல்லாம் பிரியாவுக்கும், அர்ஜுனுக்கும் தெரியாது. 

அவர்கள் இருவரும் ரமேஷ் என்கிற தடை விலகவுமே – லட்சுமி சம்மதித்துவிட்டதாகத்தான் நினைத்துக் கொண்டு இருந்தனர். 

அர்ஜுனும் தன்வசம் இருந்த அந்த நாகமாணிக்கத்தை லட்சுமியிடம் சேர்த்துவிட்டான். அது பத்திரமாக வைத்துள்ள பணப்பைக்குள் அடங்கி இருந்தது. 

அது இருப்பதால் திட்டமிட்டபடியே எல்லாமே நல்லபடி நடக்கும் என்கிற ஒரு தைரியம் அவளிடம்… 

அத்தியாயம்-17

‘அரை மணி நேரத்துல அழகர்கோயில் பக்கம் இருந்து ஆஸ்பத்திரிக்கு வந்துட்டாரே… நடந்து வர்றாரா- இல்ல ஓடி வர்றாரா – அதுவும் இல்லை, பறந்து வர்றாரான்னும் தெரியலியே…!’

திருப்பதியிலும் ‘லயன் லட்சுமிக்கு நல்ல செல்வாக்கு! அவளுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது கிடைக்கப் போகிறது என்பது அங்கே கூட பல மேல்மட்டங்களுக்கு தெரிந்திருந்தது. அது நன்றாக வேலை செய்தது. அங்கே உள்ள பதிவுத் திருமண அலுவலக்தில் அவளுக்காக ஜரூராக ஏற்பாடுகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. 

“எங்க குடும்ப ஜோதிடர் என் மகளுக்கு திருப்பதி மாதிரி ஒரு தலத்துலதான் கல்யாணம் நடத்தணும்னு சொல்லிட்டார். அதனாலதான் இங்கே கல்யாணம் பண்ண வந்திருக்கேன். கூடிய சீக்கிரம் ஒரு நல்ல நாள் பார்த்து, ஊரைக் கூட்டி ‘வரவேற்பு’ வைப்பேன்” என்று அங்குள்ள அதிகாரிகளை சமாளித்தபடி இருந்தாள். 

ஆனால், அர்ஜுன் சற்று சங்கடத்தில் இருந்தான். 

இப்படி அவசரகதியில் தனக்கு திருமணம் நடக்கும் என்று அவன் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை.

லட்சுமியின் வேகம் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை பிரியாவிடம்கூட கேட்டான். 

“பிரியா… உங்கம்மா ஏன் இப்படி பறக்கிறாங்க?”

“அதுக்கு சரியான காரணம் இருக்கு அர்ஜூன்…”

“இப்படி நமக்கு கல்யாணம் நடக்கும்னு நான், கனவுலகூட நினைக்கல…”

“நான் மட்டும் நினைச்சேனா என்ன? ஒருவேளை இதுவும் அந்த நாகமாணிக்கத்தின் வேலையோ என்னவோ?” 

“ஆமா… உன்னை ஒரு ஜமீன்தார் பையனுக்கு கட்டிவைக்கப் போறதா சொன்னாங்களே… அதுக்காகத் தானே நீயும் வீட்டை விட்டு வந்தே…”

“இப்ப என்னை எதுவும் கேட்காதே. எனக்கு எதுவும் தெரியாது. நமக்கு கல்யாணம் அவசரமா தேவைப்படுற ஒரு விஷயம். ஆகையால நடக்கட்டும். என்ன சொல்றே?”

“நான் சொல்ல என்ன இருக்கு… என் அப்பா அம்மாவுக்குகூட தெரியாம கல்யாணம் பண்ணிக்க போறதை நினைச்சாதான் கவலையா இருக்கு…”

“வேணும்னா அவங்களுக்கு தகவல் தந்து விமானத்துல வர வைக்கலாமா?”

“இல்ல… அவங்களுக்கு இந்த நிலைமையை புரிய வைக்கிறதே கஷ்டம்… உங்க அம்மா விருப்பப்படி கல்யாணம் நடக்கட்டும். பிறகு, ஊருக்குப் போய் எல்லாத்தையும் பார்த்துப்போம்.” 

இருவரும் தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வந்தனர். 

திருமலையில் முகூர்த்த நேரமெல்லாம் பார்க்கத் தேவையே இல்லை. எப்போதும் லட்சம் பேர் சூழ நிற்கும் மலை, அது. 

தாலி கட்டிய அடுத்த நிமிடமே புதுமணத் தம்பதியை திருப்பதி சாமி முன்னால் நிறுத்திவிட லெட்சுமி மனது துடித்துக் கொண்டிருந்தது. ரவிக்கைக்குள் அடங்கிக்கிடந்த அந்த மாணிக்கக்கல் அவளுக்கு தைரியம் தந்து கொண்டிருந்தது. 

அதே நேரம், மதுரையில்… 


டாக்டர் வந்து ராஜதுரையை பார்த்துவிட்டு நீங்கள் ‘டிஸ்சார்ஜ் ஆகலாம்’ என்று கூறும்போது அவரிடம் முதுகுவலிக்கிறது என்று வேண்டுமென்றே பொய் சொல்ல – டாக்டரிடம் ஆச்சரியம். 

“வலி நிக்க ஊசி போடுறேன்… நிக்கலைன்னா ‘ஸ்கேன்’ பண்ணி பார்த்துடுவோம்” என்று கூறிவிட்டு அவர் விலக – ராஜதுரையின் அடியாட்களில் ஒருவன் ஆச்சரியமாக பார்த்தான். 

“என்னடா பார்க்கிறே?”

“எதுக்குண்ணே குணமாகலைன்னு சொன்னீங்க. எனக்கு புரியலை…”

“நான் இப்பதான்டா படுத்தே இருக்கணும். என்னதான் கமுக்கமாக நாம காரியம் பண்ணி இருந்தாலும் நரிக்குடி ஜமீனை சேர்ந்தவர்களையும் ஒண்ணும் சாதாரணமா நினைக்க முடியாது. அந்த ரமேஷ் சாவை சந்தேகப்பட்டு கமிஷனர் வரை போய் இருப்பாங்க. ஏற்கெனவே நானும் லாரி ஏறித்தான் இங்கே கிடக்கிறேன். ஆகையால் அஞ்சும், மூணும் எட்டுன்னு அழகா கணக்கு போட்டு என்கிட்ட போலீஸ் வந்து நிக்கலாம். அப்படி அவங்க வரும்போது எழுந்திரிக்கக்கூட முடியாதபடி நான் கிடந்தாதான் என்மேல போலீசுக்கு கொஞ்சமாவது பரிதாபம் இருக்கும்.” 

ராஜதுரையின் எச்சரிக்கை உணர்ச்சி, அந்த அடியாட்களை வாய் பிளக்கச் செய்தது. 

“அண்ணே… நீங்க எதனால எம்.எல்.ஏ. ஆனீங்க… எம்.எல்.ஏ.ஆனீங்க… நான் ஏன் அடியாளாவே இருக்கேன்னு இப்பதாண்ணே புரியுது…” என்று ராஜதுரையைக் கொஞ்சம் புகழ்ந்தான். 

அதே வேளையில் மேலும் இரண்டு பேர் வந்து, ‘ரமேஷ் பிணம் அடக்கத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. வி.ஐ.பி.கள் குவிந்துவிட்டனர்’ என்கிற தகவலைக் கூற – ராஜதுரை முகத்தில் ஒரு செருக்கு குறுக்கில் ஓடியது. 

”யாரும் பெருசா சந்தேகப்படலைண்ணே… அசலா நடந்த விபத்தாகத்தான் பார்க்கிறாங்க…” என்றும் கூடுதலாக ஒரு தகவலையும் அவர்கள் கூறினர். ராஜதுரையும் பழிக்குப்பழி வாங்கிவிட்ட உணர்வில் மீசையை நீவி விட்டுக்கொண்டார். நர்ஸ் ஒருத்தி எட்டிப் பார்க்கும்போது மட்டும் வலிப்பது போல ஒரு முகபாவனையைக் காட்டினார். 

“இவங்க வேற குறுக்க குறுக்க…” என்றும் ஒரு சலிப்பு. நடுநடுவே பார்வை – தலையணைக்கு கீழ் இருக்கும் செல்போன் மேலேயே சென்றது. 

“யாருகிட்ட இருந்துண்ணே போனை எதிர்பார்க்கிறீங்க?”

“நம்ம நாகைய்யாகிட்ட இருந்துதான்… லட்சுமி இப்ப எங்கே இருக்கா… என்ன செய்துகிட்டு இருக்காங்கிறது முக்கியம்ல…?”

“நிச்சயமா… செத்து இருக்கிறது அவ முடிவு செய்த மாப்பிள்ளைல்ல… பத்திரிகைக்கெல்லாம் வேற பெருசா பேட்டி கொடுத்திருக்காளே…”

“அவ நிலைதான் இப்ப ரொம்பவே மோசம். அந்தப் பொண்ணை வேற காணோம்ல?”

“இந்த நேரத்துல சாமியார் இருந்தா சரியா சொல்லிடுவார்ல?”

“அவருக்கும் ஆள் அனுப்பி இருக்கேன்ல…”

“வசிய மருந்தோட வர்றேன்னுட்டு போனவர்… வரணுமே…”

“வருவாருடா… வந்தே தீருவார். அவருக்கும் லட்சுமிதான் இப்ப முக்கியம். எனக்கும் லட்சுமிதான் முக்கியம்.”

“பார்த்துண்ணே… ‘லயன்’ லட்சுமி சாதாரணமான பொம்பளை இல்லை. நீங்க தடுக்குல பாஞ்சா, அவ கோலத்துல பாயுறவ…”

“பாயட்டும்டா… நல்லாவே பாயட்டும். ஒரு ஜமீனையே நான் சாய்ச்சிட்டேன். இவ எந்த மூலைக்கு…?”

ராஜதுரை மூக்கில் அனல்காற்று வெளிப்பட்டு சுட்டது. அவ்வேளையில் சாமியார் அழைத்தார். 

“என்னப்பா ராஜதுரை… என்னைப்பத்தி அங்க பேசிகிட்டு இருக்கிறமாதிரி தெரியுதே?”

அவர் துல்லியமாக கேட்டது ராஜதுரையை கொஞ்சம் அதிரத்தான் வைத்தது. 

“ஆ… ஆமாம் சாமி… நான் ‘டிஸ்சார்ஜ்’ ஆகலை சாமி. படுக்கையில் தான் கிடக்கேன். லட்சுமிதான் எங்க இருக்கா… என்ன பண்ணிக்கிட்டு இருக்காள்ன்னு தெரியலை…”

“இப்ப உனக்கு அது தெரியணுமாக்கும்?”

“என்ன சாமி கேள்வி இது… அவளை வசப்படுத்தி, அவ மகள் கழுத்துல நான் தாலி கட்டணும். மாப்பிள்ளையா அவளை ஆட்டிவைக்கணும். நான் இப்படி படுத்துக்கிடக்க அவளும்ல ஒரு காரணம்.”

“யாரும் காரணம் இல்ல… உன் விதிதான் உன்னை படுக்க வெச்சிருக்கு… போகட்டும், உனக்குத்தான் வசிய மருந்து செய்துகிட்டு இருக்கேன். அதோடு கொஞ்ச நேரத்துல அங்கே வந்துடுவேன். அதுக்குமுந்தி ஒரு பத்து நிமிடம் நான் தியானத்துல உட்கார்ந்தாலும் போதும். லட்சுமி பத்தி நான் ஓரளவு கண்டுபிடிச்சு சொல்லிடுவேன். அவ… அவ மகளை பிடிக்க போயிருக்கா. அது மட்டும் இப்ப உறுதியா தெரியும்.” 

“அப்ப அவ மக கிடைச்சிட்டாள்ன்னு சொல்லுங்க…” 

“கிடைச்சிருப்பா… நீ கொஞ்சம் பொறுமையா இரு.”

ராஜதுரையை சாமியார் சமாதானப்படுத்திவிட்டு, பேச்சையும் முடித்துக்கொண்டார். 

ராஜதுரை முகத்தில் அதன் எதிரொலியாக ஓர் ஆழ்ந்த சிந்தனை. 

“என்னண்ணே பலமான யோசனை?”

“இந்த சாமியார் பெரிய ஆளா இருக்காருடா.”

“பெரிய ஆளா இருந்தாதானேண்ணே சாமியாரா ஆக முடியும்.”

“நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. நாம இங்கே அவரைப் பத்தி பேசுறது அவருக்கு அங்கே எப்படியோ தெரியுது.”

“அரை மணிநேரத்துல அழகர் கோயில் பக்கம் இருந்து ஆஸ்பத்திரிக்கு வந்துடுறாரே… நடந்து வர்றாரா… இல்ல ஓடி வர்றாரா…அதுவும் இல்லை, பறந்து வர்றாரான்னு தெரியலை. பெரிய மாயாஜாலமா இருக்கே?”

“அசலான சாமிண்ணே அவரு. ஏகப்பட்ட வித்தை தெரிஞ்சவரு. அவரைப்பத்தி வில்லங்கமா எதுவும் நினைச்சிடாதீங்க. அப்புறம் போட்டுத் தாக்கிடப் போறாரு…” 

அவர்கள் தங்களுக்குள் பொதுப்படையாக பேசிக் கொண்டபோது, ராஜதுரை ஆவலாக எதிர்பார்த்த அந்த தொலைபேசிச் செய்தியும் வந்தது. 

“அண்ணே… லட்சுமி இப்ப திருப்பதியில் இருக்கா! அவ மகளும், அவளோட காதலனும் ஏற்கெனவே திருட்டு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணத்துல இருந்துருக்காங்க. இந்த நேரத்துல இங்கே நாம் ஜமீன்தார் பேரனை போட்டுத்தள்ளவும், அவளும் உடனே கட்சி மாறிட்டா. அவ மகளுக்கு அவ விருப்பப்படியே கல்யாணம் பண்ணி வைச்சு, மதுரைக்கு கூட்டிகிட்டு வர விரும்புற மாதிரி தெரியுது. அப்பதானே உங்களுக்கு ஆப்பு வைச்ச மாதிரி இருக்கும்?”

காதில் விழுந்த செய்தி ராஜதுரையை எழுந்து உட்கார வைத்தது. நகம்கடிக்கவும்விட்டது. அடுத்த நொடியே சாமியாரை அழைத்தான். 

“சாமி… விஷயம் கைமீறி போய்கிட்டு இருக்கு. லட்சுமி, தன் மகளுக்கு திருப்பதியில் கல்யாணம் முடிக்கப் போறாளாம். எனக்கு தகவல் வந்தது!”

“அப்படியா… அப்ப அவ மகளை உன்னால் கட்டிக்கமுடியாம போயிடுமோ?”

“என்ன சாமி கேள்வி இது? நீங்கதான் இப்ப அந்தக் கல்யாணம் நடந்துடாதபடி ஏதாவது செய்யணும்.”

“அது எப்படிப்பா முடியும்? நான் இருக்கிறதோ கோம்பை மலையில். அவ இருக்கிறதோ திருப்பதி மலையில்.”

“போதும் சாமி, என்னை ஆழம் பார்க்காதீங்க. நீங்க மனசு வைச்சா முடியும்.”

“அவகிட்ட நாகமாணிக்கக்கல் இருக்கிறவரை யார் எது செய்தாலும் அவளுக்கு சாதகமாத்தான் முடியும். இதை நீ புரிஞ்சுக்கோ.”

“சாமி, இப்ப பார்த்து காலை வாருறீங்களே?”

“உள்ளதை சொல்றேன். அவ மனசு வைச்சா நீ கூட சிக்கிக்கலாம். ஆனா, அவளை உன்னால் ஒண்ணும் பண்ண முடியாது.”

“என்ன சாமி பயமுறுத்துறீங்க?”

“பயமுறுத்ததல… உள்ளதை சொல்றேன். எச்சரிக்கையா இரு. உனக்கு இனி வசிய மருந்தும் தேவை இல்லைன்னு நினைக்கிறேன். சரிதானே?”

“சாமி ஈ… ஈ…” 

”ஊகூம்…இனி லட்சுமிதான் சாமி. அவ உன்னை அழிக்க நினைச்சா யாராலேயும் ஒண்ணும் பண்ண முடியாது. ஏன்னா, அந்த நாகமாணிக்கக்கல்! புத்திசாலித்தனமா நடந்துக்கோ. பழி உணர்ச்சியில் திரும்பத் திரும்ப தப்புப்பண்ணிடாதே!”

சாமியார் அவனை உற்சாகப்படுத்துவதற்கு பதிலாக பயமுறுத்திவிட்டு, பேச்சை முடித்தார். 

ராஜதுரைக்கும் அவருக்கு போன் செய்ததே தவறோ என்று தோன்றிற்று. 

சாமியார் அவருக்கு சரியான ஆலோசனைதான் அளித்திருந்தார். அவர் சொன்னது போலவே லட்சுமி செயல்பட்டுக் கொண்டிருந்ததுதான் ஆச்சரியம்! 


நரிக்குடி ஜமீன்! 

ரமேஷின் சடலம் பண்ணைத் தோட்டத்தில் நல்லமணி சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய தயாராகிக் கொண்டிருக்க – ஒரு கூட்டம் லட்சுமி வராததைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தது. 

அப்போது லட்சுமியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. ரமேஷின் அத்தை நாமகிரி என்பவள்தான் போனை எடுத்தாள். 

“யாரு பேசுறது?” 

”நான் ‘லயன்’ லட்சமிதாங்க பேசுறேன். நடக்கக் கூடாதது நடந்துடிச்சு போல இருக்கே?”

“ஆமாம் தாயி… உன் மாப்பிள்ளையாக வேண்டியவன் எமன் மாப்பிள்ளையா போய் சேர்ந்துட்டானே…”

“ஐயோ அம்மா… இது அந்த மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரை வேலை. அவன்தான் லாரி விபத்து மாதிரி இப்படி செய்தது. திருப்பதி போய்கிட்டு இருந்த எங்க கார் மேலேயும் லாரி மோத இருந்துச்சு. தப்பிப் பிழைச்சது தம்பிரான் புண்ணியம்.”

“அடக்கொடுமையே… இது அந்த நாய் வேலையா?”

“ஆமாம்மா.. நான் எப்படியும் துக்கம் கேக்க வருவேன்னு தெரிஞ்சு, அப்படி வர்ற வழியில என்னை கொல்ல இன்னும் ரெண்டு லாரிங்க தயாரா இருக்கு. அதான் நான் வரலை. ஆனா, என் மனசெல்லாம் அங்கேதான் இருக்கு.”

லட்சுமியின் புத்திசாலித்தனம் பிரமாதமாக வேலை செய்யத் தொடங்கியது. 

நாமகிரி அங்கேயே… அப்போதே ராஜதுரைபற்றி ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டாள்! 

அத்தியாயம்-18

‘ரமேசுக்கு நிச்சயித்த நேரத்துல அர்ஜுன் என்கிறவன் தாலிகட்டிட்டான். என் மக கல்யாணத்தை எப்படியோ நடத்திட்டேன்னுதான் நரிக்குடி ஜமீன்ல எல்லாரும் பேசணும்!’ 

லட்சுமியின் புத்திசாலித்தனமான பேச்சு நாமகிரி யிடம் நன்றாகவே வேலை செய்தது. நாமகிரி அந்த துக்கமான சூழ்நிலைக்கு நடுவில், நெருங்கிய அவ்வளவு உறவினர்களையும் கூப்பிட்டு, லட்சுமி போனில் கூறியதை அப்படியே வார்த்தை பிசகாமல் சொல்லி எல்லோரையும் கலங்கடித்தாள். 

அவள் அப்படி பேசி முடிக்கவும், “நான் கூட சந்தேகப்பட்டேன்” என்றும், “அந்த ராஜதுரை இப்படியா பழிவாங்குவான்?” என்றும் பல மாதிரிகளில் உறவினர்களும் பேச ஆரம்பித்துவிட்டனர். 

மூங்கில்காட்டுக்குள் தீப்பிடித்த மாதிரி செய்தி பற்றி எரியத் தொடங்கியது. 

தங்களுக்குள்ளேயே வைத்து பேசிக்கொண்டு அழ, அந்த குடும்பம் என்ன இந்திய நடுத்தட்டு வர்க்கமா என்ன? பேரில் நாமகிரியே எல்லோரது ஆலோசனையின் கமிஷனருக்கு போன் செய்தாள். 

“ஐயா, நான் பிணத்தை இப்போதைக்கு அடக்கம் பண்ணப் போறதில்லை. ஏன்னா, ‘லயன்’ லட்சுமியம்மாவே நினைக்கிற மாதிரி – நடந்து இருக்கிறது விபத்துங்கிற பேர்ல ஒரு கொலை!” என்று அவள் சொல்லவும் – கமிஷனருக்கு நடுங்கியது. 

“அம்மா நீங்க பதற்றப்படாதீங்க… நான் டிரைவரை விசாரிக்கிறவிதமா விசாரிக்கிறேன்” என்று அவளுக்கு சமாதானம் கூறிவிட்டு, அவரே நேரடி விசாரணைக்கும் தயாராகிவிட்டார். 


விஷயம் ஆஸ்பத்திரியில் ராஜதுரைக்கும் போனது. 

“அண்ணே… லட்சுமி பெரிய கெட்டிக்காரிண்ணே! உங்களைலாகவமாசிக்க வெச்சுட்டா. நரிக்குடி ஜமீனே இப்ப உங்களை நினைச்சுதான் குமுறிகிட்டு இருக்கு. ஜமீன்தார் தங்கச்சி, கமிஷனருக்கு புகார் கொடுத்து, கமிஷனரும் டிரைவரை நேரடியாவே விசாரிக்க கிளம்பிட்டாராம்!”

செய்தி ராஜதுரையை உண்மையாலுமே உலுக்கி விட்டது. 

“டேய்… டிரைவர் ‘பல்டி’ அடிச்சிடமாட்டான் தானே?”

“தெரியாதுண்ணே… எதுக்கும் உதவி கமிஷனரைப் பிடியுங்க.அவர்தான் இந்த சிக்கல்ல இருந்து இப்ப நம்மை காப்பாத்த முடியும்.”

ராஜதுரையும் செல்போனில் உதவி கமிஷனரைப் பிடித்தார். 

“என்னய்யா இது புது குழப்பம்? லட்சுமி என்னவோ சொன்னாள்ன்னு கமிஷனரே விஷயத்தில் இறங்கிட்டாராமே?” 

“ஆமாங்க… நான்தான் அப்பவே உங்ககிட்ட சொன்னேனே… லட்சுமியம்மாவுக்கும், கமிஷனர்கிட்ட நல்ல செல்வாக்குன்னு…” 

“என்னய்யா ‘பல்டி’ அடிக்கிறே… பார்த்துய்யா… வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைஞ்சிடப் போகுது…” – ராஜதுரை பதறினார். 

”சாரி சார்… ஒரு அளவுக்கு மேல என்னால உதவ முடியாது. இனி எல்லாமே அந்த லாரி டிரைவர் கையிலதான் இருக்கு. அவன் மட்டும் கடைசிவரை உங்களைக் காட்டி கொடுக்காம இருந்தா நீங்க தப்பிச்சீங்க. லட்சுமியம்மா உங்கமேல உள்ள பொறாமையில் ஜமீனை தூண்டி விட்டாங்கன்னு சொல்லுங்க. விஷயம் அதோடு முடிஞ்சிடும்… இல்லேன்னா…”

உதவி கமிஷனர் இழுத்த இழுப்பில் ராஜதுரை முன்னால் ஒரு தூக்குகயிறே தோன்றி அவர் கழுத்தை வளைத்து இழுக்கிற மாதிரி இருந்தது. 

செல்போனை முடக்கியவர் – அடுத்து சங்கரானந்த சாமியைத்தான் பிடித்தார். 

“சாமி ஈஈ…!”

“என்னப்பா… வசிய மருந்துதானே? தயாராகிக் கிட்டே இருக்குது…”

“இல்ல சாமி… இப்ப கதையே மாறிடிச்சு. அந்த லட்சுமி திருப்பதியில் இருந்துகிட்டே இங்கே எனக்கு மொட்டையடிக்கப் பார்க்கிறா…”

“விஷயத்தை விவரமா சொல்லு…” 

“அவ நரிக்குடி ஜமீனையே எனக்கு எதிரா திருப்பி விட்டுட்டா. அது மட்டுமல்ல… அவளும், அவ மகளும் திருப்பதியில் இருந்து, இங்கே வந்தா, நான் அவங்க மேலேயும் லாரியை ஏத்தி கொலை செய்துடுவேன்கிற அளவுக்கு பீதியைக் கிளப்பிவிட்டிருக்கா…”

“புத்திசாலி பொம்பளை… நாகமாணிக்கம் வேற அவகிட்ட இருக்கிறதால அவ நினைக்கிற மாதிரியேதான் எல்லாமும் நடக்கும். “

“சாமி ஈஈ…!”

“கத்தாதே… நான்தான் ஆரம்பத்துல இருந்தே கொலை பாதகம் உனக்கு ஆகாதுன்னு சொல்லிகிட்டே இருக்கேனே?”

“சாமி… போலீஸ் உதவி கமிஷனர்கிட்டே இப்பதான் பேசினேன். எல்லாம் டிரைவர் கையிலதான் இருக்கு, என் கையில எதுவும் இல்லேன்னு அவர் சொல்லிட்டார். நீங்களும் கைவிட்டுறாதீங்க… நான் அவங்களால பாதிக்கப்பட்டவன்…”

”சரி, என்னை என்ன செய்யச் சொல்றே?”

“அந்த டிரைவர் உண்மையைச் சொல்லக்கூடாது. அவன் வாயைக் கட்ட வேண்டியது உங்க பொறுப்பு.”

“சரி… உனக்காக செய்யுறேன். ஆனா, ஒண்ணு! நான் ஸ்டேஷனுக்கு போய் அவனைப் பார்க்கணும். பார்த்தாத் தான் அவனை என் பார்வையால நான் கட்ட முடியும். அப்படி நான் பார்க்கிறதுக்குள் அவன் உண்மையைச் சொல்லிட்டா என்மேல வருததப்படாதே.”

”சாமி… நீங்களும் புரண்டு பேசுறீங்களே?”

”என்னை என்ன பண்ணச் சொல்றே? வலுவா எதிரிகூடல்ல மோதிகிட்டு இருக்கே? அதுலேயும் துளிகூட தோல்வியைத் தராத நாகமாணிக்கம் உள்ள எதிரின்னா சும்மாவா?”

சங்கரானந்த சாமிகள் ராஜதுரையின் வயிற்றில் புளியைக் கரைத்தார். 

”சாமி, போதும் சாமி… பேசிகிட்டு இருக்காதீங்க. உடனே கிளம்புங்க… எனக்கு இப்பவே படபடன்னு வருது…”

”சரிப்பா… நீ அமைதியா இரு. நடக்கிறதுதான் நடக்கும். நானும் எவ்வளவு வேகமா போலீஸ் நிலையத்துக்கு போக முடியுமோ அவ்வளவு வேகமாக போய்ப் பார்த்துட்டு, உனக்கும் தகவல் தர்றேன்…”

“நல்லது சாமி… முதல்ல கிளம்புங்க…”

ராஜதுரை அப்படி இதுவரை படபடத்து, அவரது சகாக்கள்கூட பார்த்ததில்லை. 

விக்கித்துப் போய் நின்றனர். 


மாலையும், கழுத்துமாய் நின்றுகொண்டிருந்தனர் – பிரியாவும், அர்ஜுனும்! 

இடம், திருப்பதி பதிவாளர் அலுவலகம்! அத்தனை நெருக்கடியிலும் – மேல் திருப்பதியில் இருந்து ஒரு பிரதான ஜோசியர் நல்ல நேரம் குறித்து கொடுக்க அந்த நேரத்தை தொட சில நொடிகளே இருந்தன. 

லட்சுமி கைக்கடிகாரத்தில் அந்த நொடி நெருங்கவும், சிக்னல் கொடுத்தாள். பதிவாளர், முன்னிலையில் அர்ஜுன் ஒரு மஞ்சள் கயிறில் உள்ள ஐந்து பவுன் தாலியை பிரியா கழுத்தில் கட்டி முடித்து, பதிவு நோட்டிலும் கையெழுத்து போட்டு முடித்தான். 

சாட்சி கையெழுத்தை சிட்டிபாபுவும், டாக்சி டிரைவரும் போட்டு முடிக்க பிரியாவும், அர்ஜுனும் லட்சுமி காலில் விந்தனர். 

லட்சுமி மனதுக்குள், ‘பிரியா… உன்னை நல்லபடியா காப்பாத்திட்டேன்’ என்று சொல்லிக்கொண்டே – கண்ணீர் மல்க வாழ்த்தினாள். பின், தனது ‘செல்போன் கேமரா’வில் அவளே சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டாள். 

சிட்டிபாபு, அதிகாரியை நன்றாகவே கவனித்து விட்டு, ‘இந்த விஷயம் கொஞ்ச நாளைக்கு ரகசியமாகவே இருக்கட்டும்’ என்று அவருக்கு வாய்ப்பூட்டுப் போட்டு முடித்தான். 

அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர்கள் கல்யாணம் நடந்த சுவடே தெரியாதபடி காரில் மலை ஏற தொடங்கி விட்டனர். 

லட்சுமி, காரில் செல்லும்போது லாகவமாகத்தான் இருந்தாள். மதுரை நடப்புகள் அவளுக்கு நேரடி ஒளிபரப்பு போல ஒருவனால் – சொல்லப்பட்டுக்கொண்டே இருந்தன. 

“மேடம்… நீங்க பத்த வைச்ச நெருப்பு நல்லாவே வேலை செய்யுது. உங்க விஷயமா உடனேயே கமிஷனர் ரொம்ப வேகமாயிட்டாரு. அநேகமா இப்பலாரி டிரைவரை விசாரணை என்கிற பேரில் பின்னி எடுத்துகிட்டு இருப்பாங்க.”

“அந்த டிரைவர் என்ன சொன்னான்கிறது எனக்கு தெரியணும். “

“கட்டாயமா… நானும் இப்ப ஸ்டேஷனுக்கு போய்கிட்டுதான் இருக்கேன். ஆனா, இந்த விஷயத்துல ராஜதுரை அந்த கோம்பைமலை சாமியார்கிட்ட சரணாகதி அடைஞ்சுட்டதாகவும் தகவல்.”

“அந்த சாமியார் என்ன சொன்னாராம்?”

“அது தெரியாது. ஆனா, அவர் ராஜதுரைக்கு நிச்சயம் உதவி செய்வாருன்னுதான் நான் நினைக்கிறேன். “

“அவர் உதவி செய்யக் கூடாது. செய்யவும் மாட்டார். அவரை எப்படி கட்டிப்போடுறதுங்கிறது எனக்கு தெரியும். அதேநேரம் – என் மகளுக்கு கல்யாணம் நடந்துடிச்சிங்கிற விஷயத்தை யாராவது போய் ராஜதுரை காதுல மட்டும் சொல்லுங்க. இந்த செய்திதான் அவனை ரொம்பவே உலுக்கி எடுக்கும்னு நான் நினைக்கிறேன்.”

“மேடம்…நிஜமாவே கல்யாணம் ஆயிடிச்சா?” 

“ஏன், நம்பமுடியலையா?”

“ஆமாம் மேடம்… இவ்வளவு எளிமையாகல்யாணம் பண்ண எப்படி மேடம் உங்களுக்கு மனசு வந்தது?”

“கல்யாணம்தான் எளிமை. சந்தடியெல்லாம் அடங்கட்டும். தலைக்கு ஆயிரம் ரூபா மதிப்புள்ள பரிசுடன் வரவேற்பு தூள்பறக்கும். அப்ப நான் ‘பத்மஸ்ரீ’ யாகவும் இருப்பேன்.” 

“ஆச்சரியம் மேடம்… ஆச்சரியம்…”

“பாராட்டினது போதும். நடக்கிறதைக் கவனமா கவனிச்சு, எனக்கு தகவல் சொல்லிகிட்டே இருங்க. கல்யாண விஷயம் இப்ப வெளியே தெரியறது நல்லது இல்லைன்னு நான் நினைக்கிறேன். 

ரமேசுக்கு நிச்சயித்த நேரத்துல அர்ஜுன் என்கிறவன் தாலி கட்டிட்டான். என் மக கல்யாணத்தை எப்படியோ நடத்திட்டேன்னுதான் நரிக்குடி ஜமீன்ல பேசிக்கணும். ரொம்ப முக்கியம், ரமேஷ் இல்லை… அதனாலதான் அர்ஜுனை முடிவு செய்தேன்னு அவங்க நினைக்கணும். அதுக்கு குந்தகம் வந்துடக்கூடாது.”

செல்போனை முடக்கிவிட்டு, பின்னால் திரும்பிப் பார்த்தாள். ஒரு தனி ‘ஏ.சி.’ காரில் அர்ஜுன் – பிரியா வந்துகொண்டிருந்தனர். 

காருக்குள் – “பிரியா… ரெண்டு நாள்ல நம்ம வாழ்க்கையில எவ்வளவு திருப்பங்கள்… இல்ல?”

“ஆமாம் அர்ஜுன்… நான் ஆசைப்பட்ட மாதிரி, நீ ஆசைப்பட்ட மாதிரி, அம்மா ஆசைப்பட்ட மாதிரியே எல்லாம் நடந்துடிச்சு. யாராலெல்லாம் பிரச்சினைகள் வரும்னு நான் பயந்தேனோ… அவங்க இப்ப உயிரோடே இல்லை. 

நான் வீட்டைவிட்டு தனியாதான் வந்தேன். ஆனா, திரும்பிப் போகும்போது கல்யாணப் பெண்ணா போகப் போறேன். அதை நினைச்சா, எல்லாமே ஒரே மாய மந்திரமாகத்தான் இருக்கு.”

“நீ மாய மந்திரம்னு சொல்றே. நான், அதை நாகமாணிக்கம்னு நினைக்கிறேன்.”

“அப்ப நீ அதை நம்ப ஆரம்பிச்சிட்டியா?”

“நீயே யோசிச்சுப் பாரு. அதுமட்டும் இல்லைன்னா நீதான் வீட்டைவிட்டு ஓடி வந்துருப்பியா? உங்க அம்மாதான் உன்னை தேடிகிட்டு வந்து இருப்பாங்களா? இல்ல, நம்ம கல்யாணம்தான் நடந்துருக்குமா?”

“ஒரு கோணத்துல நீ சொல்றதும் உண்மைதான். அதேவேளை, அது ஒரு விலைமதிப்பு மிக்க கல்லு.. அவ்வளவுதான். இந்த உலகத்துல ரொம்ப அபூர்வமா கிடைக்கிற ஒரு விஷயம்னுகூட சொல்லலாம். ஆனா, அது எப்படி நம்ம வாழ்க்கைக்குள் பாதிப்புகளை உருவாக்க முடியும்கிறதுதான் எனக்கு இன்னமும் புரியவே இல்லை!”

“என்ன பிரியா நீ… அறிவியலுக்கு பேர்போன மேல்நாட்டுலகூட ‘ஹாரிபாட்டர்’ மாதிரி புத்தகங்கள்தான் நிறைய விக்குது. அவங்களே அறிவியலைவிட அறிவுக்கு புதிரான இந்த மாதிரி விஷயங்களைத்தான் பெருசா நினைக்கிறாங்கன்னு தெரியலியா?”

“ஆமாம்…அப்படித்தான் தோணுது.. அதே நேரம் – எங்க அம்மா ஒண்ணும் இப்ப ரொம்ப சந்தோஷத்துல இல்லை. எனக்கு அவங்க முதல்ல பார்த்த மாப்பிள்ளையான அந்த கம்பக்குடி இளைய ஜமீன்தார் ரமேஷ், இப்ப உயிரோடு இல்லை. ஆனா, இந்த நாகமாணிக்கம்கிறது அந்த குடும்பத்து சொத்து. அது வந்ததே எனக்காகத்தான்!”

“நீ என்ன சொல்ல வர்றே, பிரியா?”

“எங்க அம்மா இனி அந்நாகமாணிக்கத்தை என்ன செய்வாங்கன்னு நான் யோசிச்சு பார்க்கிறேன்.”

“ஓ… அதை அந்த ஜமீன் குடும்பம் திருப்பிக் கேட்குமா?”

“பின்ன என்ன… சும்மாவா இருப்பாங்க?”

“அடடா! இப்ப இப்படியொரு சிக்கல் இருக்கா?”

“ஆமாம்… அது கையைவிட்டுப் போறதுக்குள் சில நல்ல காரியங்களை முடிச்சிடணும்னுதான் அம்மா நம்ம கல்யாணத்தைப் பண்ணிவச்சிருக்காங்க.”

“இருக்கலாம். அதேவேளை, அந்த ஜமீன் குடும்பம் திருப்பிக் கேட்டா, நாகமாணிக்கத்தை கொடுத்துடுறது தானே மரியாதை.”

“பார்ப்போம்… அம்மா என்ன செய்யுறாங்கன்னு.” காருக்குள் இருந்த இருவரும் நாகமாணிக்கம் பற்றி பேசியது போதும் என்பது போல நிறுத்த – பிரியாவின் இடையை உரிமையோடு பற்றி அணைத்தான், அர்ஜுன்! 

காரும் வளைவுகளில் மேலேறியபடி இருந்தது. அர்ஜுன் கைகளும் அவசர அவசரமாய்…

– தொடரும்…

– யாரென்று மட்டும் சொல்லாதே…  (நாவல்), முதற் பதிப்பு: 2009, திருமகள் நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *