கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: சாவி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 19, 2023
பார்வையிட்டோர்: 5,974 
 

(1990ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 19 – 20 | அத்தியாயம் 21 – 22


அத்தியாயம் 21 

“தெய்வம் கொடுக்கற தண்டனை அதுதான்னா, பாகீரதியோட எதிர்கால வாழ்க்கைக்காக நீ அதை தாராளமா ஏத்துக்கலாம், பரவாயில்லே.”

கௌரியின் இந்த வார்த்தை கனபாடிகளின் மன அடிவாரத்தில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது. 

“இப்ப நான் சொல்றது உனக்கு அக்ரமமாத்தான் தோணும். நீயே நிதானமா யோசிச்சுப் பார்த்தா நியாயம் புலப்படும்”. 

”உண்மைதான்; நியாயந்தான். பாகீரதியின் எதிர்காலம் பற்றி நான் தீர்க்கமா யோசிக்க வேண்டியதுதான்”. 

யோசித்தார்; இரவெல்லாம் யோசித்தார். 

தூக்கம் இல்லாமல் திண்ணையில் போய் உட்கார்ந்து, தெருவில் போய் நின்று, முன்னும் பின்னும் நடந்து, ஆகாசத்தைப் பார்த்து… 

நிலா வானம் நிர்மலமாய்த் தெரிந்தது. ஊரே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. தாகம் நெஞ்சை வறட்டியதால் வீட்டுக்குள் வந்து தண்ணீர் அருந்தினார். ஊஞ்சலில் உட்கார்ந்தார். கிட்டா அயர்ந்து குறட்டைவிட்டுக் கொண்டிருந்தான். 

‘பாவம், ரொம்ப அலைச்சல் அவனுக்கு!’ 

செம்பில் ஜலம் எடுத்துக்கொண்டு கொல்லைப் பக்கம் போய், சாக்கடை ஓரமாக உட்கார்ந்து, சிறுநீர் உபாதையை முடித்துக்கொண்டு திரும்பினார். இருள் சூழ்ந்திருந்த மாட்டுக் கொட்டிலில் பசு மாட்டின் கண்கள் மட்டும் பளபளத்தன அதைப் பார்த்துக் கொண்டே வந்தவரின் கால்களைக் கீழே இருந்த வாளி ஒன்று பலமாகத் தாக்கவே, கனபாடிகள் வலி பொறுக்காமல் ‘அப்பா, ராமா!’ என்று அலறிக்கொண்டு கீழே விழுந்து விட்டார். 

‘ராமா’ என்ற கனபாடிகளின் குரல் கேட்டு அவர் வளர்ப்புச் செல்லம் அணில் குட்டி பயந்து போய், படபடத்து மூலைக்கு மூலை ஓடியது. 

வாளிச் சத்தமும் கனபாடிகளின் அலறலும் கேட்டுப் பதறி எழுந்த ராவ்ஜியும் கிட்டாவும்.

ஓடிச் சென்று “கீழே விழுந்துட்டேளா? ஐயோ, என்ன ஆச்சு?” என்று கேட்டுக் கொண்டே கனபாடிகளைத் தூக்கி நிறுத்தினார்கள். 

“வாளி தடுக்கிட்டுதுடா, நல்ல அடி! ரொம்ப வலிக்கிறதுடா, கிட்டா! கால் வீங்கியிருக்கா பாரு!” என்று முனகினார் கனபாடிகள். 

இருவரும் அவரை கைத்தாங்கலாய் அணைத்துக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார்கள். 

எல்லா துக்கங்களும் சேர்ந்துகொள்ளவே கனபாடிகள் சின்னக் குழந்தைப்போல் அழத் தொடங்கி விட்டார். 

”சிதம்பரம் போய் வரமுடியுமான்னு சந்தேகமாயிருக்கு, கிட்டா! இன்னும் நாலஞ்சு நாள்தான் இருக்கு. உடம்பில சக்தி குறைஞ்சு போச்சு. ஒரு சின்ன வலிகூடத் தாங்கிக்க முடியலே!” என்று வருத்தப்பட்டார். 

“இப்படி பட்டினிக் கிடந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்றான் கிட்டா. 

“இந்தாங்க, இந்தப்  பாலைக் குடியுங்க. சுடச்சுட பாலைக் காய்ச்சுண்டு வந்திருக்கேன்” என்று சொல்லி கனபாடிகளிடம் கொடுத்தார் ராவ்ஜி. அதை வாங்கிக் குடித்த பிறகுதான் கனபாடிகளுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. சற்று நேரத்துக் கெல்லாம் தூங்கிப் போனார். 


காலையில் எழுந்து கடிகாரத்தைப் பார்த்தவர் “இவ்வளவு நேரமாவா தூங்கிட்டேன்! மணி ஒன்பது!” என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டு ஆச்சரியப்பட்டார். அடுத்தகணம் அடிப்பட்ட காலைப் பார்த்து, “ஸ்ஸ்! நன்னா வீங்கிப் போயிருக்கு!” என்றார். 

“நாளைக்குள் சரியாப் போயிடும். இன்னைக்கு நீங்க குளிக்க வேணாம். பேசாமல் படுத்துண்டே இருங்கோ” என்றான் கிட்டா. 

“என்னால ஸ்நானம் பண்ணாமலும் இருக்க முடியாது; பூஜை பண்ணாமலும் இருக்க முடியாது. நான் போய் இதோ குளிச்சுட்டு வந்துடறேன்” என்று எழுந்தார். அந்த நேரம் பார்த்து கனபாடிகளைப் பார்க்க வாசலில் ஒரு பெரிய கூட்டம் வந்து நின்றது. 

”விராடபர்வம் வாசிக்கணும்னு உங்களைக் கேட்டுக்கப் போறதா நேத்து அரசமரத்தடில கூட்டம் போட்டுப் பேசிண்டிருந்தா. அவாதான் வந்திருக்கா போலிருக்கு!” என்றான் கிட்டா.

“ஓகோ, அப்படியா பிராம்மணாள் மட்டுமா? குடியானவாளும் வந்திருக்காளா?” என்று கேட்டுவிட்டு அங்க வஸ்திரத்தை எடுத்துப் போர்த்திக்கொண்டவர் “அதோ அந்த கைக்கம்பைக் கொண்டு வா இப்படி” என்றார். கிட்டா கொண்டு வந்த கம்பை வாங்கிப் பார்த்துவிட்டு “ம்! இத்தனை நாள் இதை நான் தொட்டதே இல்லை. எங்கப்பா உபயோகிச்சது!” என்று பெருமையோடு கூறியபடி அதை ஊன்றிக் கொண்டே வாசலுக்கு விந்திவிந்தி நடந்து போனார். 

அவரைப் பார்த்ததும் ஊரார் கையெடுத்துக் கும்பிட்டனர். 

“இந்த வெயில்ல எல்லாருமா எங்க இப்படி…?” 

“உங்களைப் பார்க்கத்தான். மழையே இல்லாம பயிர் பச்சையெல்லாம் போயிட்டுது. ஆடுமாடெல்லாம் ஒண்ணு ஒண்ணா செத்துட்டிருக்கு. தாது வருஷத்துப் பஞ்சம் மாதிரி மறுபடியும் வந்துருமோன்னு தோணுது. விதை நெல்லைச் சாப்பிட வேண்டிய கதிக்கு வந்துட்டோம்.” 

“என்ன சொன்னீங்க! விதை நெல்லைச் சாப்பிடப் போறீங்களா? ஊஹூம்! அந்த நிலைக்கு உங்களை நான் ஒரு நாளும் விடமாட்டேன்! வேதத்துக்கும் விவசாயத்துக்கும் வித்து தானே முக்கியம்! வித்து அற்றுப்போனா வேதமும் போச்சு, விவசாயமும் போச்சு. பயப்படாதீங்க. ஒரே வாரம் பொறுத்துக்குங்க. நான் வந்து விராடபர்வம் வாசிக்கிறேன்; நிச்சயம் மழை வந்துடும். நம்பிக்கையோடு இருங்க” என்றார். 

“ஒரு வாரமா! நாளைக்கே ஆரம்பிச்சுட முடியாதா?” என்று கேட்டான் ஒரு விவசாயி. 

“முடியாதப்பா! இத பார்த்தயா? என் கால்ல செம்மையா அடிபட்டிருக்கு. சப்பணம் போட்டு உட்கார முடியாது. விராடபர்வம் வாசிக்கணும்னா ரெண்டு மணி நேரமாவது உட்கார்ந்திருக்கணுமே. அடுத்த வாரம் நிச்சயம் ஆரம்பிச்சுடலாம். பதிமூணாம் தேதி சிதம்பரத்துலே ஒரு விசேஷம். அதுக்கு நான் கண்டிப்பா போயாகணும். போயிட்டு பதினாலு வந்துடுவேன். பதினஞ்சு வச்சுக்குங்க” என்றார். 

”ரொம்ப சந்தோசம்; உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு. மவராசனாயிருப்பீங்க!’ என்று வாழ்த்திவிட்டுப் புறப் பட்டார்கள் குடியானவ மக்கள். 

பிராம்மணர்கள் புறப்பட ஆயத்தமானபோது, “நீங்கள்ளாம் கொஞ்சம் இருந்துட்டுப் போக முடியுமா? உங்களோடு முக்கியமா ஒரு விஷயம் பேசணும். என் சொந்த விஷயம்தான்” என்று விநயமாய்க் கேட்டுக் கொண்டார் கனபாடிகள். 

“எங்களோடயா?” என்றார் ஒருவர். 

“ஆமாம்; என் மகள் பாகீரதி விஷயமா இது வரைக்கும் நான் எதுவுமே யோசிக்காம இருந்துட்டேன். என் மூச்சு இருக்கப்பவே அவளுக்கு ஒரு வழி செய்துடணும்னு நினைக் கிறேன்.” 

”அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்?” 

“நீங்க ஒண்ணும் செய்ய வேணாம். கனபாடிகள் பெண் சீர்கெட்டு அலையறாங்கற அவப்பெயர் அவளுக்கு வரக்கூடாது. அவள் எதிர்காலம் என்னங்கறதை நான் முடிவு பண்ணியாகணும். இந்த விஷயத்துல உங்க அபிப்ராயம் என்னன்னு தெரிஞ்சுக்க விரும்பறேன்”. 

“மனசுல நீங்க என்ன நினைச்சுண்டு பேசறீங்கன்னு புரிஞ்சு போச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னால பார்வதியின் புருஷன் பினாங்கிலிருந்து திரும்பி வந்தப்போ அவனைச் சேர்த்துக்கலாமான்னு உங்களிடம் யோசனை கேட்க வந்தோம். அப்ப நீங்க பிடிவாதமா சாஸ்திரம் ஒப்புக்காதுன்னு சொல்லி அனுப்பிட்டேளே, ஞாபகம் இருக்கா? இப்ப மட்டும் அந்த சாஸ்திரம் ஒப்புக்கறதோ? ஊருக்கு ஒரு சாஸ்திரம். உங்களுக்கு ஒரு சாஸ்திரமோ?” என்று தைரியமாகக் கேட்டார் ஒருவர். 

“இப்ப நான் உங்களைக் கேட்கிறது சாஸ்திரம் அல்ல. உங்க அபிப்ராயம்தான். ‘எங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டேளா?’ன்னு நாளைக்கு நீங்க பழி சொல்லக் கூடாது பாருங்க, அதுக்காகத்தான். என் பெண்ணை இப்படி இந்த நிலையிலே, விட்டுட்டுப் போனா அவளை யார் காப்பாத்துவா? யாராவது அவளை நல்லபடியா காப்பாத்துவேளா? அவளுக்கு நான் ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்க வேணரமா? உங்களில் யாருக்காவது இஷ்டம் இருந்தா, யாராவது காப்பாத்த முன் வந்தா, இப்பவே சொல்லுங்க. இந்த நிமிஷமே என் சொத்தையெல்லாம் எழுதி வைக்கத் தயாராயிருக்கேன்” என்றார். 

யாருமே பதில் பேசவில்லை. வாய்மூடி மௌனிகளாக முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்கள். 

“தெரியும். உங்க பதில் இதுவாத்தான் இருக்கும்னு தெரியும். என் பெண்ணைக் காப்பாத்துங்கோன்னு உங்களை நான் கட்டாயப்படுத்தப் போறதில்லே. கெஞ்சப் போறதில்லே. அது உங்க இஷ்டம். ஆனா, நான் ஒரு முடிவுக்கு வரதுக்கு முன்னால உங்கனை ஒரு வார்த்தை கேட்க வேண்டியது என் கடமை இல்லையா? அதுக்காகத்தான் கேட்டேன். இப்ப நீங்க போகலாம்” என்று அவர்களை அனுப்பிவிட்டு மெதுவாக நடந்து போய் ஊஞ்சலில் உட்கார்ந்தார். 

உட்கார்ந்தவர் “கிட்டா! நெஞ்சை வலிக்கிறதுடா!” என்று மார்பைக் கையால் தாங்கியபடி ஊஞ்சலில் சாய்ந்து படுத்துக்கொண்டார். 


அத்தியாயம் 22 

சுவீகாரம் என்பது ஒரு சாதாரண நிகழ்ச்சிதான் என்றாலும் கௌரி அத்தை அதை ஒரு கல்யாண வைபோகமாகவே நடத்திவிட ஆசைப்பட்டாள். 

“வாசலில் பெரிய பந்தலாப் போட்டு, வாழை மரம், மாவிலைத் தோரணமெல்லாம் கட்ட ஏற்பாடு பண்ணுங்க” என்று கணவரிடம் ஒரு உத்தரவுபோல் சொல்லிக் கொண்டிருந்தாள். 

“இது வெறும் வைதிகச் சடங்குதா? இதை இவ்வளவு ஆடம்பரப்படுத்த வேணுமா?” என்று கேட்டார் அவர். 

“வைதிகம், லௌகிகம் ரெண்டும் கலந்தாத்தான் எந்த விசேஷமும் சோபிக்கும். வீடு கட்டி முடிச்சப்போ கிரகப் பிரவேசத்தை ‘ஜாம் ஜாம்’னு நடத்தினோம். அப்புறம் எந்த சுப காரியத்துக்கும் வாய்ப்பு  இல்லாமப்  போயிட்டுதே!” என்றாள். 

“ஆமாம், நீ சொல்றதும் சரிதான்” என்று தலையாட்டினார் அவர். 

“வெள்ளிப் பாத்திரம், ஜவுளி, சந்தனம், கதம்பம், பழதினுசு எல்லாத்தையும் வாங்கிண்டு மூர்த்தியோடு முதல் நாளே வந்துடணும்னு கிட்டப்பாவுக்குச் சொல்லி அனுப்புங்க. கூடவே சமையல்காராளையும் அழைச்சுண்டு வந்துரட்டும்; கிட்டப்பா வந்தாத்தான் முகூர்த்தமே களைகட்டும்!” 

“தஞ்சாவூர்ல நல்ல தாழம்பூ கிடைக்குமா, அத்தை?” என்று நாசூக்காய் ஞாபகப்படுத்தி வைத்தாள் பாகீரதி. 

”ஓகோ! அதை மறந்துட்டனோ! வாங்கிண்டு வரச் சொல்றேன். மூர்த்தி வரான் இல்லையா! உனக்கு முதல் நாளே தாழம்பூ வெச்சு தலை பின்னிடறேண்டா, கண்ணு” என்று செல்லமாக பாகீரதியின் கன்னத்தைத் தட்டிச் சிரித்தாள் கௌரி. 

“நான் தாழம்பூ வச்சுக்கறதுக்கும் மூர்த்தி வரதுக்கும் என்ன சம்பந்தம்? அத்தை என்னத்தை வச்சுண்டு இப்படிப் பேசறா?” என்று சந்தேகப்பட்டாள் பாகீரதி. 


முகூர்த்தத்துக்கு முதல் நாள் சாயந்திரம் கிட்டப்பாவும் மூர்த்தியும் ஏகப்பட்ட சாமான்களோடு காரில் வந்து இறங்கினார்கள். மூர்த்தியை வாசலிலேயே நிற்கச் சொல்லி ஆரத்தி சுற்றிக் கொட்டி மேளவாத்தியத்துடன் உள்ளே அழைத்துச் சென்றாள் அத்தை. 

“சமையல்காரா வரலையா?” என்று கேட்டாள் கெளரி. 

”பஸ்ல வந்துண்டிருக்கா” என்றான் மூர்த்தி. 

“தாழம்பூ கொண்டு வந்திருக்கேன்” என்று கிட்டப்பா சொன்னதுமே மற்ற வேலைகளையெல்லாம் மறந்துவிட்டு பாகீரதிக்குத் தலைபின்னத் தொடங்கி விட்டாள் அத்தை. 

கூடத்தில் ‘ஹிஸ்மாஸ்டர்ஸ் வாய்ஸ்’ தகரக்குழாய் கிராம போனில் எஸ்.ஜி. கிட்டப்பா ‘கோடையிலே இளைப்பாறி’ பாடிக் கொண்டிருந்தார். 

எல்லோரும் கூடத்தில் வந்து உட்கார்ந்து பாட்டு கேட்க ஆரம்பித்தார்கள். கிராமபோன் பிளேட்டில் ஏற்பட்டிருந்த கீறல் காரணமாக பாட்டு தடைப்பட்டு ‘கோடையிலே… கோடையிலே கோடையிலே…’ என்று ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்! கிராமபோனை நிறுத்தச் சொல்லிவிட்டு ” நீங்கள்ளாம் ஆளுக்கொரு பாட்டுப் பாடுங்களேன், கேட்போம்” என்றார் கிட்டப்பா. 

“நீதான் ஒரு பாட்டுப் பாடேன் கேட்கலாம்” என்றாள் கௌரி அத்தை கிட்டப்பாவிடம். 

“நான் என்ன எஸ்.ஜி.கிட்டப்பான்னு நினைப்பா உனக்கு! நான் பாடினா எல்லாரும் ஓடுவா!” என்றார் அவர். 

பாகீரதியை அழகாக அலங்கரித்து முடிந்ததும் கூடத்துக்கு அழைத்துவந்து கிட்டப்பாவுக்கு நமஸ்காரம் பண்ணச் சொன்னாள் அத்தை. 

“சீக்கிரமேவ விவாகப் பிராப்திரஸ்து!” என்று வாழ்த்தினார் கிட்டப்பா. 

கிட்டப்பா இப்படி வாழ்த்துவார் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை. 

“உன் ஆசீர்வாதம் பலிக்கட்டும். அதுதான் எனக்கு வேண்டியது. பாகீரதி எத்தனை அழகா இருக்கா பார்த்தயா தங்கப்பதுமை மாதிரி!” என்றாள் அத்தை. 

”பார்க்க வேண்டியவன் பார்த்து சந்தோஷப்பட்டால் சரி!” என்று கண் சிமிட்டி மூர்த்தியை ஓரக் கண்ணால் பார்த்தார். 

வெட்கத்தில் தலைகுனிந்தபடி உள்ளே ஓடிவிட்டாள் பாகீரதி. 

“கிட்டப்பா ஏன் இப்படி ஜாடைமாடையாப் பேசறார்? இவாளுக்குள்ள ஏதோ பேச்சு நடந்திருக்குமோ!” என்று சந்தேகித்தான் மூர்த்தி. 

“பாகீரதியை இனிமே பாகீன்னு கூப்பிடாதீங்க” என்றார் கிட்டப்பா. 

“வேற எப்படிக் கூப்பிடறதாம்?” 

“முதல் ரெண்டு எழுத்தை விட்டுட்டுப் பின் ரெண்டெழுத்தைச் சொல்லிக் கூப்பிடுங்க. அதான் பொருத்தமாயிருக்கும்” என்று ஒரு புதிர் போட்டு மகிழ்ந்தார் கிட்டப்பா. 

“கிட்டப்பாவுக்குத்தான் இப்படியெல்லாம் சாதுர்யமா வேடிக்கையாப் பேசத் தெரியும். தஞ்சாவூரோன்னோ?” என்றார் கௌரியின் கணவர். 

கனபாடிகள், கமலா, கமலாவின் ஆத்துக்காரர்- கிட்டா நாலு பேரும் ராத்திரியே வந்துவிட்டார்கள். 

கனபாடிகளைக் கண்டதும் “கால்ல என்ன, அண்ணா?” என்று கவலையோடு விசாரித்தாள் கெளரி. 

“வாளி தடுக்கி விழுந்துட்டேன்” என்றார் கனபாடிகள்.

”கமலா! நீ எப்படி அப்பாவோடு சேர்ந்து வந்தே?”

“காஞ்சீபுரத்திலேந்து நேரா அப்பாவைப் பார்க்கப் போயிருந்தேன். அங்கிருந்து எல்லாருமா வந்தோம்” என்றாள் கமலா. 

“நல்லவேளை! இப்பத்தான் தாழம்பூவைத் தலையிலிருந்து பிரிச்செடுத்து தோட்டத்துல போட்டுட்டு வந்தேன். இந்த கமலா கண்ணில் படாம் தப்பிச்சனே!” என்று எண்ணி மகிழ்ந்தாள் பாகீரதி. 

ஆனாலும் கமலாவுக்கு மூக்கில் வேர்த்திருக்கவேண்டும். “என்னடி தாழம்பூ வாசனை அடிக்கிறது வீடு முழுக்க?” என்று கேட்டாள். 

‘இந்த கமலாவுக்குத்தான் என்ன மூக்கோ! போன ஜன்மத்துல மோப்ப நாயாப் பிறந்திருக்கணும்’ என்று எண்ணிக் கொண்ட பாகீரதி, “அதுவா? கிட்டப்பா தஞ்சாவூர்லேந்து கதம்பம், தாழம்பூல்லாம் வாங்கிண்டு வந்திருக்கார்” என்று சமாளித்தாள் பாகீரதி. 

“அந்தக் கழைக்கூத்தாடிப்பெண் மஞ்சு என்ன ஆனா மாமா?” என்று சந்தடிசாக்கில் கிட்டப்பாவின் காதைக் கடித்தான் கிட்டா. 

“அவளை அந்த சர்க்கஸ்காரன் விடறதா இல்லே! கல்யாணம் பண்ணிக்கப் போறானாம்” என்றார் கிட்டப்பா. 

“பாவம், அந்தப் பெண் மூர்த்தி பேர்ல உசிரையே வெச்சிருந்தது” என்றான் கிட்டா. 

“நீ போய் வேலையைப் பாருடா. உனக்கெதுக்கு இந்த வம்பெல்லாம்” என்றார் கிட்டாவின் மாமா. 


மறுநாள் விடியற்காலையிலேயே வைதிகச் சடங்குகளை ஆரம்பித்துவிடச் சொன்னார் கனபாடிகள். வீடு முழுதும் ஹோமப் புகை சூழ்ந்து கொள்ளவே வைதிகர்கள் ஆளுக்கொரு விசிறியைக் கையில் வைத்து வீசிக்கொண்டிருந்தனர். எல்லாம் முடிந்து ஆரத்தி எடுக்கிறபோது மணி பன்னிரண்டு! 

மூர்த்திக்கு – கிட்டப்பா ஆசீர்வாதம் முக்கால் பவுனில் ஒரு மோதிரம். 

கௌரி அத்தை அஞ்சு பவுனில் ஒரு சங்கிலி. 

வெள்ளி பஞ்சபாத்திர உத்தரணி – கனபாடிகளின் ஆசீர்வாதம். 

கனபாடிகளை முதலில் நமஸ்காரம் செய்து, அபிவாதையே சொல்லி, அட்சதை ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட மூர்த்தி அடுத்தாற்போல் அத்தைக்கும் அத்திம்பேருக்கும் நமஸ்காரம் செய்தான். அத்துடன் சுவீகார முகூர்த்தம் மங்களவாத்திய இசையுடன் சுபமாக முடிந்தது. 


மறுநாள் கனபாடிகள் சீக்கிரமே எழுந்து ஸ்நான பானங்களை முடித்து ”பிரயாணத்துக்கு உஷக் காலம் உத்கிருஷ்டம்” என்று சொல்லிப் புறப்பட்டுவிட்டார். 

“என்ன அண்ணா அதுக்குள்ள அவசரம்! நாளைக்கு நாங்களும்தான் வரப் போறமே! எல்லாரும் சேர்ந்து போலாமே!” என்றாள் கௌரி. 

“கிட்டாவை அழைச்சுண்டு நான் முன்னாடி போறேன். விராடபர்வம் கதையை ஒரு தடவை முழுக்க படிச்சுடணும். ஏகப்பட்ட சுலோகங்கள்! ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்! அந்தப் பேர்களையெல்லாம் கதைல ஞாபகமா மறக்காமல் சொல்லணும்” என்றார். 

“அப்படின்னா நீங்க கிட்டாவை அழைச்சுண்டு இப்பவே போங்க. பின் ஸீட்ல சௌகரியமா காலை நீட்டி உட்கார்ந்துண்டு போகலாம்” என்றாள் கௌரி. 

“கனபாடிகள் விராடபர்வம் வாசிச்சு இது வரை மழை வராமப் போனதில்லை. இத பார்த்தேளா! முன் ஜாக்கிரதையா குடைகூடக் கொண்டு வந்திருக்கேன்!” என்றார் கிட்டப்பா. 

“நீ ரொம்ப நம்பிக்கையோடதான் இருக்கே! பார்க்கலாம்” என்று சிரித்துக்கொண்டே புறப்பட்டார் கனபாடிகள். 


சனிக்கிழமை ராத்திரி எட்டு மணிக்கு விராடபர்வம் நடக்கப் போவதாக ஊர் மக்களுக்கு தண்டோரா போட்டு அறிவித்தார்கள். 

பஜனை மடம் வாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம்போட்டு, சுவாமி படங்களுக்கு மாலை அலங்காரம் செய்து, குத்துவிளக்கு ஏற்றிவைத்து எல்லா ஏற்பாடுகளையும் கிட்டா தான் ஓடி ஆடிச் செய்து கொண்டிருந்தான். 

ரொம்ப நாளைக்கப்புறம் கனபாடிகள் கதை சொல்கிறார் என்பதால் ஊர் மக்களோடு, அடுத்த கிராமத்து ஜனங்களும் திருவிழாக் கூட்டம் போல் பஜனை மடத்தில் கூடியிருந்தார்கள். கனபாடிகள் அன்று காலையிலிருந்தே உபவாசம் இருந்து, பக்தி சிரத்தையோடு வந்து மணையில் உட்கார்ந்தார். பெட்ரோமாக்ஸ் விளக்கு ‘புஸ்புஸ்’ என்று அணைந்து அணைந்து எரிய, விட்டில் பூச்சிகள் விளக்கைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. 

பஞ்சாயத்துத் தலைவர் கனபாடிகளுக்கு மாலை போட்டு விழாவைத் துவக்கி வைத்ததும், கனபாடிகள் கழுத்தில் போட்ட மாலையோடு பேச்சைத் தொடங்கினார். 


“வியாச பகவான் அருளிய மகாபாரதம் மொத்தம் பதினெட்டு பர்வங்கள் அடங்கியது. நாலாவதுதான் விராடபர்வம். 

பாண்டவர்கள் வனவாசம் முடிந்து ஓராண்டு காலம் அஞ்ஞாத வாசம் செய்வதற்கு ஏற்ற இடமாக விராடனுடைய மச்ச நாட்டைத் தேர்ந் தெடுத்தார்கள். விராட மகாராஜாவுக்கே தெரியாமல் திரௌபதியும் பாண்டவர்களும் மாறு வேடத்தில் அங்கே வாழ்ந்து வருகிறபோது திரௌபதியின் அழகில் மயங்கிய கீசகனை பீமன் வதம் செய்வதும் விராடனின் மச்ச நாட்டுப் பசுக்களை கௌரவர்கள் மடக்கிச் செல்வதும், அர்ஜுனன் அலியாக மாறி ராணியின் அந்தப்புரத் தில் பணிபுரிவதும், விராடராஜனுடைய மகன் உத்தரனுக்கு உதவியாகத் தேரோட்டிச் சென்று பசுக்களை மீட்பதும் இந்த பர்வத்தில்தான் நடக்கிறது. 

பல சோதனைகளுக்கிடையே ஒரு வருஷகாலம் அஞ்ஞாதவாசம் இருந்து அதை வெற்றிகரமாக முடிக்கும் பாண்டவர்கள் தங்கள் உண்மை சொரூபத்தை வெளிப்படுத்துவதும் இந்த பர்வத்தில்தான். 

அதுவரை பஞ்சம் தலைவிரித்து ஆடிய விராட ராஜன் தேசத்தில் பரம துஷ்டனான கீசகனை பீமன் வதம் செய்து ஒழித்த பின் அந்த நாட்டில் சுபிட்சம் தாண்டவமாடத் தொடங்குகிறது. பாண்டவர்களுக்குப் புகலிடம் தந்து அவர்களை வெற்றி காணச் செய்த தேசம், விராடனுடைய மச்சதேசம். 

ஆகவே, இந்த உன்னதமான கதையை எப் போது, யார், எங்கே சொன்னாலும் அங்கே மழை பெய்யும் என்றும் சுபிட்சம் உண்டாகும் என்றும் ஓர் அசைக்க முடியாத நம்பிக்கை இந்த பாரத தேசத்தில் பரவியிருக்கிறது. 

நான் இதுவரை ஏழு இடங்களில் விராட பர்வம் கதை சொல்லியிருக்கிறேன். ஏழு தடவை யும் மழை பெய்யத் தவறியதில்லை. இந்தப் பெருமை என்னைச் சேராது. பாரதக் கதையின் மகிமை அப்படி. இன்றைக்கும் மழை பெய்யும் என்கிற திட நம்பிக்கையோடு கதையைத் தொடங்கு கின்றேன்” என்று பூர்வ பீடிகையாகக் கூறிவிட்டு கணீரென்ற சங்கீதக் குரலில் சுலோகங்களைச் சொல்லத் தொடங்கியதும் அங்கே தெய்வீகமான ஒருசூழ்நிலை உருவாயிற்று. 


கதை முடிகிறபோது மணி பன்னிரண்டு. கனபாடிகள் வீட்டுக்குத் திரும்பி வரும்போதே களைப்பாக இருந்தார். கிட்டாவின் தோளை ஆதாரமாகப் பற்றிக் கொண்டே ஊஞ்சலில் போய் உட்கார்ந்தார். 

“இறுக்கம் தாங்கலைடா, கிட்டா! கொஞ்சம் விசிறி விடறயா?” என்று கேட்டவர் “வடக்குப்பக்கம் பளீர் பளீர்னு மின்னல் அடிக்கிறது, மழை வருமோ, என்னவோ தெரியலை!” என்றார். 

“கொட்டு கொட்டுணு கொட்டப் போறது. பார்த்துண்டே இருங்க” என்றார் கிட்டப்பா. அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே பயங்கரமாய்க் காதே செவிடாகிவிடும் போல் இடித்த பேரிடி ஒன்று ஊரையே கிடுகிடுக்கச் செய்தது. 

”அப்பா, இந்தப் பாலைக் குடிச்சுட்டு போய்ப் படுத்துக்குங்க. இன்னைக்குப் பூரா பட்டினி நீங்க. ஏற்கனவே உடம்பு சரியில்லை உங்களுக்கு” என்று பரிவோடு அந்தப் பாலை அப்பாவிடம் தந்தாள் பாகீரதி. 

கனபாடிகள் அவளையே சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவர், சட்டென்று கண்களில் பனித்த நீரைத் துடைத்துக் கொண்டு “கிட்டாவுக்கும் கொடும்மா, பாவம்! அவனுக்குத் தான் சிரமம். மத்தியானத்திலேந்து அலையறான்” என்றார்.

“அர்ஜூனன் அலியா வரானே அப்பா, அந்த அலிக்கு என்ன பேரு சொன்னே?” என்று கேட்டாள் கமலா. 

“பிருஹன்னளை!” என்றார். 

“அந்த அலியை அவன்னு சொல்றதா, அவள்னு சொல்றதா?” என்று கேட்டாள் கமலா. 

“மகாபாரதத்துல எத்தனையோ சந்தேகங்களெல்லாம் இருக்கு, போயும் போயும் உனக்கு இப்படி ஒரு சந்தேகமா?” என்று கேட்டு மெலிதாகச் சிரித்தார் கனபாடிகள். 

கௌரி அத்தை கட்டிக் கற்பூரம் கொளுத்தி வந்து எல்லாரையும் கனபாடிகள் பக்கத்தில் நிற்கச் சொல்லி திருஷ்டி கழித்துப் போட்டாள்.

“உங்க எல்லாரையும் இன்னைக்கு சேர்ந்தாப்ல பாக்கறப்போ எனக்கு மனசு நிறைஞ்சு இருக்கு. நீங்க அத்தனை பேரும் அக்கறையா வந்து கதை கேட்டதில் பரம திருப்தி எனக்கு. எல்லாரும் க்ஷேமமா இருங்கோ” என்று ஆசீர்வதித்தார். 

“சரி, எல்லாரும் போய்ப் படுத்துத் தூங்குங்க. மழை பலமா வரும்போல இருக்கு. மணி ஒண்ணாகப் போறது” என்றாள் கௌரி. 

கனபாடிகள் மெதுவாக எழுந்து போய்த் தம் அறையில் படுத்துக் கொண்டார். தூக்கம் வராததால் எழுந்து உட்கார்ந்து சற்று நேரம் எதையோ படித்துக் கொண்டிருந்தார். வானம் தொடர்ந்து உறுமிக் கொண்டிருந்தது. கனபாடிகள் ஒரு வெள்ளைத் தாளை எடுத்து ஏதோ எழுதத் தொடங்கினார். எழுதி முடித்துவிட்டு மறுபடியும் படுத்தார். 


பொழுது விடிந்தது. ராத்திரி பெய்யத் தொடங்கிய மழை ஓயவில்லை. பிரளயமே வந்ததுபோல் பெய்த மழையில் மண்குடிசைகளும் மரம், செடி கொடிகளும் அடியோடு தலைவிரி கோலமாய்ச் சாய்ந்து வீழ்ந்து கிடந்தன. விடிந்த பிறகும் கனபாடிகள் தூங்கிக் கொண்டிருந்தார். 

“என்னை ஆறு மணிக்கெல்லாம். எழுப்பிடுடான்னு சொல்லிட்டு படுத்தவர் இன்னும் இப்படித் தூங்கறாரே!” என்று வியந்து கொண்டே கனபாடிகள் அறைக்குச் சென்று பார்த்த கிட்டா “அத்தை!” என்று வீடே அதிரும்படி கூக்குரலிட்டான். 

“என்னடா?” என்று அலறி அடித்துக் கொண்டு எல்லோரும் கனபாடிகள் படுத்திருந்த அறைக்கு ஓடிச் சென்று பார்த்தார்கள். 

கனபாடிகள், சாந்தமாக, நிம்மதியாக ஆண்டவன் திருவடிகளில் உறங்கிக் கொண்டிருந்தார். அந்த அணில் குஞ்சு கனபாடிகள் இறந்துபோனது தெரியாமல் அவர் மீது ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தது. 

கனபாடிகள் எழுதி வைத்த வெள்ளைத்தாள் அவர் பக்கத்தில் கிடந்தது. கிட்டப்பா அதை எடுத்துப் படித்தார். 

அன்புள்ள கௌரிக்கு, 

வாளி தடுக்கிக் கீழே விழுந்ததிலிருந்தே, இரண்டு மூன்று நாட்களாகவே என் உடல்நிலை சரியில்லை. வயதானவர்கள் கீழே விழக்கூடாது என்று சொல்வார்கள். சுவீகார முகூர்த்தம் சுபமாக முடிந்ததில் சந்தோஷம். விராடபர்வம் வாசிப்பதாகக் கொடுத்த வாக்கையும் நிறைவேற்றிவிட்டேன். கொஞ்ச நாளாகவே எனக்கு அவ்வப்போது லேசாக மார்வலி வருவதுண்டு. நீங்களெல்லாம் கவலைப்படுவீர்கள் என்பதால் யாரிடமும் சொல்லாமலிருந்தேன். இப்போதுகூட வலித்துக் கொண்டுதானிருக்கிறது. என் உயிர் பிரியப் போகும் தருணம் நெருங்கிவிட்டதாகவே தோன்றுகிறது. வெளியில் பேய் மழை பெய்து கொண்டிருக்கிறது. எல்லாம் விராடபர்வத்தின் மகிமைதான். 

பாகீரதியின் கவலைதான் என்னை வாட்டிக் கொண்டிருக்கிறது. பாசம் ஒரு புறமும் தர்மம் ஒரு புறமுமாக நின்று என்னுள் ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. என் 

காலத்திலேயே பாகீரதிக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துவிட எண்ணி ஊராரை அழைத்துப் பேசினேன். அவர்களில் யாருமே பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை. 

இப்போது நான் எடுத்துள்ள முடிவு உனக்கும் உலகத்துக்கும் ஆச்சரியம் தரலாம். 

வேதத்தையும் தர்மங்களையும் ஊருக்கு போதித்தேன், வேத பாடசாலை நடத்தினேன். இரண்டு முறை யாகங்கள் செய்தேன். சாஸ்திரங்களைப் போற்றினேன். ‘சாஸ்திரத்தை இஷ்டம்போல் நமது வசதிக்கேற்றபடி யெல்லாம் மாற்றக் கூடாது’ என்று வாதாடினேன். இப்போது சோதனையாக, நானே அதை மீறவேண்டிய நிலைக்கு வந்து விட்டேன். 

பாகீரதிக்கு மறுமணம் என்பது சாஸ்திர விரோதம்தான், அதர்மமான காரியம்தான். ஆனாலும் சாஸ்திரத்தை மீறி நான் எடுத்திருக்கும் முடிவு மிகப் பெரிய பாவம் என்பது எனக்குத் தெரியும். இந்த பாவத்துக்குரிய தண்டனையை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன். 

வேதமும் சாஸ்திரமும் புனிதமானது. நிரந்தரமானது; மாற்ற முடியாதது. மாற்றக் கூடாதது. அதை மீறுகிற நான்தான் மகாபாபி. 

வேதமும் சாஸ்திரமும் என்னை மன்னிக்கட்டும். 

கௌரி! எனக்குப் பிறகு பாகீரதியைக் காப்பாற்றும் பொறுப்பை உன்னிடத்தில் விட்டுச் செல்கிறேன். அவளுக்கும் மூர்த்திக்கும் நீ மணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறாய் என்பதை நான் ஒருவாறு ஊகித்து விட்டேன். உன் இஷ்டப்படியே செய். இதில் எனக்குப் பூரண சம்மதமே. 

இதனால் கிடைக்கக்கூடிய நல்ல பலன் எதுவானாலும் அது உன்னைச் சேரட்டும். பாவத்தின் பலனை நானே ஏற்றுக்கொள்கிறேன். 

நீ எனக்காகக் கொண்டு வந்து கொடுத்த கங்கையை இப்போது என்மீது கொட்டு. அந்தப் புனிதநீர் என் பாவத்தைக் கழுவட்டும். 

உங்கள் எல்லோருக்கும் என் ஆசீர்வாதங்கள். 

இப்படிக்கு சங்கர கனபாடிகள். 

”அண்ணா, நான் உனக்கு கங்கை சொம்பு கொண்டு வந்தது இதுக்குத்தானா?” என்று கேட்டு இதயமே வெடித்து விடுவது போல் கதறினாள் கௌரி அத்தை. 

ராத்திரி பெய்த மழையின் மிச்சமாக வீட்டுக் கூரைகளிலிருந்தும் மரம், செடி கொடிகளிலிருந்தும் சொட்டிக் கொண்டிருந்த துளிகள் கனபாடிகளுக்காக உலகமே அழுவது போல் இருந்தது.

-முற்றும்-

– வேத வித்து, முதற் பதிப்பு: மே 1990, சாவி பப்பிளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *