கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 17, 2024
பார்வையிட்டோர்: 3,648 
 

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வசிக்கும் பவித்ரா தவளைகள் கத்தும் அரவம் கேட்கும் வேளையில் வேலைமுடிந்து வீட்டின் வாசற்படிக்கு வந்தாள். படியில் எப்போதும் போலவே அந்தப் பையன் அமர்ந்து கொண்டு அவளைப் பார்த்துச் சிரித்தான். பதிலுக்கு லேசாக முறுவளித்தவள். இந்தப் படியில் ஏற இடமே சிறிதாக உள்ளது இதில் இவன் தொல்லை வேறு? இவனையெல்லாம் ஏன் வெளியில் விடுகிறார்கள்? என்று மனதில் நினைத்துக் கொண்டே மாடிப்படி ஏற ஆரம்பித்தாள். இரண்டாவது தளத்தில் வீடு இருப்பதால் வீட்டிற்கு வருவதற்குள் மூச்சு வாங்கியது.

வீடு குப்பையாக இருந்தாலே பவித்ராவுக்குப் பிடிக்காது. வேலைமுடிந்து வீட்டிற்குத் திரும்பியவுடன் வீட்டின் நிலை பரிதாபமாக இருந்தது. காலையில் போட்ட பாத்திரம் சிங்க்கில் இருக்க, துணி நாற்காலியில் அப்படியப்படியே கிடக்க, வாசிங்மெசினில் காலையில் துவைக்கப் போட்டிருந்த துணி காயப்போடாமல் அப்படியே மெசினில் கிடப்பதைப் பார்த்தவுடன் கோபத்தில் இந்தப் பெண்ணை என்ன சொல்லித்தான் திருத்துவது, சொல்வதையே கேட்கமாட்டேன் என்கிறாளே? என்று தன்னையும் அறியாமல் முணுமுணுக்க ஆரம்பித்தாள். வேலைமுடிந்து வீட்டிற்கு வந்தால் நிம்மதியாக இருக்கமுடியவில்லையே இந்தப் பெண் ஒரு பக்கம் என்றால் கீழே வாசற்படியில் தினமும் அமர்ந்து கொண்டு இந்தப் பையன் இருப்பது மேலேவரும் நமக்குச் சங்கடமாக அல்லவா இருக்கிறது. முதல்மாடியில் இருப்பவர்கள் முக்கால்வாசி நேரம் வீட்டிலேயே இருப்பதில்லை. பக்கத்துத் தெருவில் இருக்கும் அம்மா வீட்டில் இருந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த வீட்டில் நானும் எனது பெண் ஷண்மதியும் மட்டுமே இருக்கிறோம். எனது கணவர் வெளியூரில் வேலை பார்க்கிறார். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வருவார்.

அடுத்த தடவை ஹவுஸ்ஓனரிடம் சொல்லி இந்தப் பையனை இங்கே உட்காரக்கூடாது என்று சொல்லவேண்டும். பாதிநேரம் என் மகள் ஷண்மதி தனியாகத் தான் இருப்பாள். இந்தப் பையன் மனவளர்ச்சி குன்றியவனாகத் தெரிகிறானே? இவனால் ஏதாவது தொல்லை ஏற்பட்டால் என்ன செய்வது? என்னையும் அறியாமல் சிந்தனைகள் திக்குத்தெரியாமல் ஓடின. வீட்டுவேலையில் மனம் சென்றதால் அந்தச் சிந்தனை காணாமல் போய்விட்டது.

அடுத்த ஒரு வாரத்திற்கு அந்தப் பையனைக் காணவில்லை. அப்பாடா ரொம்ப நிம்மதி என்று தோன்றியது. அவன் உட்காரும் நேரங்களில்,

“ஷண்மதி உன்னை எதுவும் தொந்தரவு செய்யவில்லையே” என்று கேட்க,

“இல்லைமா. கீழே உட்காருவதால் வருவது போவதுதான் சிரமமாக உள்ளது. எந்திரிக்கச் சொல்லவேண்டியிருக்கு” என்றாள் ஷண்மதி.

“இருந்தாலும் நான் வேலைக்குக் கிளம்பியவுடன் கதவை பூட்டிக்கொள். கவனமாக இரு. நீ மட்டும் தனியாக இருக்கிறாய். இந்தப் பையன் எப்பப் பார்த்தாலும் வாசல்படியில் உட்காருவது எரிச்சலாக உள்ளது” என்றேன் நான்.

“சரி விடும்மா. உட்கார்ந்தா உட்காரட்டும். ஏதாவது தொல்லை வந்தால் பார்த்துக்கலாம்” என்றாள் ஷண்மதி.

இந்தக் காலத்துப் பிள்ளைங்க எதையும் விளையாட்டாய் எடுத்துப்பாங்க. இந்தப் பிள்ளைய கரைசேர்க்கறது வரை நாமதான் வயித்துல நெருப்பக் கட்டிட்டு இருக்கணும்போல, பேப்பரைப் பார்த்தாலே பயமாயிருக்கு யாரையும் நம்பமுடியல என்று நினைத்துக் கொண்டாள் பவித்ரா. இதுநடந்து ஆறுமாதத்தில் அந்த வீட்டைக் காலி செய்து நானும் ஷண்மதியும் பக்கத்துத் தெருவில் உள்ள வீட்டில் குடியேறினோம்.

ஒரு நாள் மனநிம்மதிக்காக பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டுப் படிக்கட்டில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது மனவளர்ச்சி குன்றிய அந்தப் பையன் திடீரென என் அருகே வந்து,

“அத்தை நல்லா இருக்கீங்களா, இப்ப இங்கதான் இருக்கீங்களா?”

என்று கட்டைக்குரலில் திக்கித் திக்கி கேட்டான். புன்னகையுடன் அவனைப் பார்த்து முறுவலித்தேன் நான்,

“இங்கதான் இருக்கோம்” என்றேன் நான். அவனும் பதிலுக்கு முறுவலிக்க அங்கிருந்து நகர்ந்து வீட்டிற்கு வந்தேன். வீட்டில் நுழைந்தவுடன்,

“ஷண்மதி இன்னிக்கு மனவளர்ச்சியில்லாத அந்தப் பையன பார்த்தேன். அத்தை நல்லா இருக்கீங்களான்னு கேட்டான். ஆச்சர்யமா போயிடுச்சு. என்னைய அவனுக்கு ஞாபகம் இருக்கு பாரு. நான்தான் தேவையில்லாமல் அவனைத் தப்பாகப் புரிந்து விட்டேன் போல” என்று வருந்தினேன்.

“நிஜமாகவே பேசினானா” என்று ஷண்மதியும் ஆச்சர்யப்பட்டாள்.

“அம்மா நாம் முதன்முதலில் ஒருவரைப் பார்த்துக் கெட்டவர்கள் என்று நினைத்தால் அவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். நல்லவர்கள் என்று நினைப்பவர்கள் நமக்குக் கெடுதல் செய்கிறார்கள். வாழ்க்கை விந்தையானதுதான் அம்மா” என்றாள். உண்மைதான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

இந்த உலகில் உள்ளவர்கள் எல்லோரும் ஒவ்வொரு கோணத்தில் உலகைப் பார்க்கின்றனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு பரிமாணங்களில் தெரிகிறோம். இதுவும் உலக இயல்புதான் போல என்று நினைத்துக்கொண்டேன்.

– முத்தமிழ் நேசன் மின்னிதழில் வெளிவந்த சிறுகதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *