இடைவெளி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 15,627 
 

கார்த்திக், நீனாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தான். இருவர் கண்களும் ஒரு நேர்க்கோட்டில் சந்தித்து மலர்ந்தன. குறும்பு, சிரிப்பு, காதல். “ஏய், என்னை அப்படிப் பார்க்காதே” – கார்த்திக் நெளிந்தான். “இந்த வெட்கம்லாம் நான் படணும்டா… நீ ஏன் இப்படி வழியறே?” – இருவரும் மேஜை மேல் கைகோத்துச் சிரித்தனர்.

“என்ன சாப்பிடறே?”

“சாப்பாடு. அப்புறம்… தாகமா இருக்கு. ரெண்டு பியர் சொல்லுடா.”

உயரமான கண்ணாடிக் கோப்பையில் வெயிட்டர் ஊற்றிய நுரை பொங்கும் பியரை ‘சியர்ஸ்’ சொல்லி உறிஞ்சினார்கள்.

“அப்பாடா! இப்பதான் உசிரே வந்தது. இன்னிக்குக் காலையிலேர்ந்து ஒரே வேலை. யு.எஸ். க்ளையன்ட் ஒருத்தன் வந்து எங்க டீம் செய்ற அத்தனை வேலையிலும் குற்றம் கண்டுபிடிச்சு, கழுத்தை அறுத்துட்டான். அவனை கன்வின்ஸ் பண்றதுக்குள்ள எவ்ளோ ஸ்ட்ரெயின். அவனை ஹோட்டலில் இறக்கிவிட்டுட்டு, இப்பதான் வெளியே வர முடிஞ்சது. சொல்லு கார்த்திக்… யு வான்ட் டு டாக் டு மி.”

“நீ ரொம்ப டயர்டா இருந்தா இன்னிக்கு வேணாம். வேற ஒரு நாள் பேசலாம்.”

“சோர்வெல்லாம் உன்னைப் பார்த்துக்கிட்டே பியர் குடிச்சதில் பறந்துபோச்சு…”

“உனக்குச் சோர்வு போச்சு… எனக்குப் புதுத் தெம்பு, சந்தோஷம் எல்லாம் வந்துடுச்சு.”

நீனா உதட்டைக் குவித்து மெள்ள விசிலடித்தாள். “நீ ஏன் சாஃப்ட்வேர் துறைக்கு வந்தே? பேசாம பைஜாமா, முழங்கால் வரைக்கும் குர்தா மாட்டிட்டு கவிதை எழுதிட்டு இருக்கலாமே.”

“அவசியமே இல்லை. கவிதையே என் எதிர்ல உட்கார்ந்திருக்கே.”

“எந்த சினிமா டயலாக் இது”- நீனா அவன் மூக்கைத் திருகினாள்.

“நான் இன்னிக்கு உன்னோட கொஞ்சம் சீரியஸாப் பேசணும்.”

“பேசு. இரு, அம்மாவுக்கு ஒரு போன் அடிச்சுடறேன்”- நீனா கைப்பையில் இருந்த போனை எடுத்து அம்மாவை அழைத்தாள். “ஹாய் மம், ஹோட்டல்ல ஃப்ரெண்டோடு இருக்கேன். வீட்டுக்கு வர 11 மணிக்கு மேல ஆகும். டின்னர் வேண்டாம். எனக்காக கொட்டக் கொட்ட முழிச் சுட்டு இருக்காதே. படுத்துத் தூங்கு. என்கிட்ட வீட்டுச் சாவி இருக்கு. ஓ டாட்! ஜாக்கிரதையா கார் கண்ணாடியை ஏத்திவிட்டுத்தான் வருவேன். உங்க பொண்ணை யாரும் தூக்கிட்டு ஓடிட மாட்டான். நிம்மதியாத் தூங்குங்க. குட் நைட்”- நீனா உதட்டைப் பிதுக்கினாள். “25 வயசான, சுயமாச் சம்பாதிச்சு, புராஜெக்ட்சுக்கு வெளி ஊருக்கும் வெளிநாட்டுக்கும் போயிட்டு வர்ற பொண்ணு, வீட்டுக்கு லேட்டா வர்றேன்னு சொன்னா மட்டும் பேரன்ட்ஸ் ஏன் இப்படிப் பதர்றாங்கன்னு தெரியலை.”

“எங்கப்பாவும் அம்மாவும் இந்த 28 வயசுப் பையனையே எல்.கே.ஜி. பாப்பா மாதிரிதான் நடத்துறாங்க. அது பேரன்ட்ஸ்ஸோட ட்ரெய்ட்.”

“ம்… ஏதோ சீரியஸா பேசணும்னியே…”

“இப்போ ராகு காலம் இல்லையே…”

“ராகு காலம் எல்லாம் ராத்திரி வருது… கன்டினியூ…”

“ஓ.கே.” கார்த்திக் தலை குனிந்து தயங்கினான்… “நீனா ஐ லவ் யூ. ஐ வான்ட் டு மேரி யூ!” உணர்ச்சிப் பெருக்கில் அழுதுவிடுவான்போல் இருந்தது.

நீனா குறும்பாகச் சிரித்தாள்… “நீ என்னிக்கு இதைச் சொல்வேன்னு காத்துட்டு இருந்தேன். பேசாம உன்னைக் கடத்திட்டுப் போய் நானே தாலி கட்டிடலாமான்னுகூட யோசிச்சிட்டு இருந்தேன்.”

கார்த்திக் வெட்கத்தில் நெளிந்தான். “நீ செய்தாலும் செய்வே…” நீனாவின் கண்களை உற்று நோக்கினான். “எனக்கு உன்னை ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா, உன் புத்திசாலித்தனம், குறும்பு, சென்ஸ் ஆஃப் ஹ்யூமர், வெளிப்படையான பேச்சு.”

“போச்சுடாப்பா… ஒரு பெண்ணைக் காதலிக்கணும், கல்யாணம் கட்டிக்கணும்னா, அவ அழகா இருக்கணும். அடக்கமா இருக்கணும் அப்படி எல்லாம் எதிர்பார்ப்பாங்க… அதெல்லாம் இல்லாத தால இந்தச் சப்பைக்கட்டா?”

“டியர், உன் அழகே உன் பர்சனாலிட்டிதான்.”

“ஓ.கே. எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் சொல்லு?”

“ஏய், இதென்ன, அடுத்த 10 நிமிஷத்துல நடக்கிற விஷயமா? நீ உங்க அப்பா, அம்மாகிட்ட பேசு. நானும் பேசறேன். எல்லோருக்கும் சூட்டபிளா ஒரு தேதி பார்ப்போம்.”

“சரி… ஆனால், கல்யாணத்தை எளிமையா வெச்சுக்கலாம். மெஹந்தி, சங்கீத்னு நம்ம சமூகத்துக்குச் சம்பந்தம் இல்லாத பழக்கம் எல்லாம் வேணாம்.”

“நான் மெஹந்தி இட்டுக்கப் போறதில்லை. இதெல்லாம் நீதான் முடிவெடுக்கணும். என்னைப் பொறுத்தவரை காலையிலே நெருங்கிய சொந்தம் 50 பேரை அழைச்சு ஒரு ரிலிஜியஸ் செரிமனி. அதுகூட நம்மளைப் பெத்தவங்களுக்காகத்தான். மதியம் ரெஜிஸ்ட்ரேஷன். ஒருநாள் நம்ம கலிக்சுக்கு பார்ட்டி… அவ்வளவுதான்.”

“நானும் அதுதான் நினைச்சேன் கார்த்திக். படாடோபக் கல்யாணங்கள் ரொம்ப ஆபாசமா இருக்கு. அதுவும் இந்த ரிசெஷன் டைம்ல…”

“நீனா, கல்யாணத்தை எப்படி நடத்துறதுன்னு அப்புறம் பேசுவோம். நீ என்னை உண்மையாக் காதலிக்கிறாயா… என்னை மாதிரியே த்ரில்லிங்கா உணர்கிறாயா?”

“என் அசட்டுக் கண்ணா, உன் பார்வையிலேயே என் உடல் புல்லரிக்கிறது. இதயம் துடிக்கிறது. இன்னும் என்னவெல்லாம் சொல்லணும் சொல்லு. இந்த மாதிரி ஃபீலிங்ஸ் இல்லேன்னா, 25 ஆண்டு கட்டிக்காத்த என்னை உன்னிடம் இழந்திருப்பேனா?. உனக்கு நான் பேசறதுல நம்பிக்கை இல்லைன்னா வா, வெளியே போவோம். அழகான நிலவு இருக்கு… மரம் இருக்கு… சுத்தி வந்து ஒரு டூயட் பாடுவோம்” -இருவரும் சிரித்தார்கள்.

“கார்த்திக், திருமணம்கிற அமைப்புபத்தி எனக்குச் சில எதிர்பார்ப்புகள் இருக்கு. அதேபோல உனக்கும் இருக்கும். அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே பேசிடணும்.”

“என்னைப் பொறுத்தவரை தனியான எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. நீ நீயாக இருந்தாலே போதும்.”

“அது போதாது கார்த்திக். நம் வேலை, பணம், பகிர்வு, நம் பெற்றோர், உறவுகள், இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு பேச.”

“பேசலாம்… இப்பவே பேசலாம்.”

“நம்ம ரெண்டு பேர் வேலையும் டிமாண்டிங். ஒன்பது மணிக்குப் போய் ஐந்து மணிக்கு வீடு திரும்ப முடியாது. உள்ளூரில் இருந்தால்கூட, ஒரே வீட்டில் வசித்தால்கூட நாம ஓரிரண்டு நாள் சந்திக்கவே முடியாமல் போகலாம். எதற்குச் சொல்றேன்னா, காலையில உனக்கு பெட் காபி, பிரேக்ஃபாஸ்ட் எல்லாம் என்னால் தர முடியாது. அவங்கவங்க தேவையை அவங்கவங்கதான் பார்த்துக்கணும். யாருக்கு நேரம் இருக்கோ, அவங்க அன்னிக்குச் சமைக்கலாம். நீ என்னதான் வெளிநாட்டிலே படிச்சவனா இருந்தாலும், ‘எங்கம்மா செய்ற வத்தக் குழம்பு’ங்கிற மாதிரி சமையலறை எதிர்பார்ப்புகள் இருக் கக் கூடாது.”

“நீனா, நீ சமைக்கணும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. அமெரிக்காவில் எம்.எஸ். படிக்கும்போது ரெண்டு வருஷம் நான் சமைச்சுச் சாப்பிட்டு இருக்கேன். சமையல், பெண்களுடைய பிறப்புரிமைன்னு நான் நினைக்கலை. சுய கௌரவத்துடன் வாழ விரும்பற எந்த ஆணுக்கும் அடிப்படைச் சமையலாவது தெரிஞ்சிருக்கணும்னு நினைக்கிறவன் நான். சமையல் மட்டும் இல்லை, வீட்டு வேலை எல்லாவற்றையும் நாம பகிர்ந்துக் கலாம்.”

“அடுத்த விஷயம்… நீ உங்க அப்பா, அம்மாவுக்கு ஒரே பையன். நான் ஒரே பெண். இதனால நம்மைப் பெத்தவங்க நம் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் மூக்கை நுழைப்பாங்க. நாம குழந்தைகள் இல்லை. நம்மால் நம் முடிவுகளை யோசிச்சு எடுக்க முடியும். அதோடு, நாம நம் பெற்றோர்களோட கார்பன் காப்பியும் கிடையாது.”

“இந்த விஷயத்தை நான் ஏற்கெனவே என் பெற்றோர்கிட்ட பேசிட்டேன். ஓ.எம்.ஆர்-ல நான் புக் பண்ணியிருக்கிற அபார்ட்மென்ட் ரெடி. நீ வந்து அழகுபடுத்தத்தான் காத்திருக்கு. நம் வாழ்க்கையை நாம் வாழ்வோம். ஒரே ஊர்ல வசிக்கிற தாலயும், அவங்க நம்மைவிட வயசானவங்கறதாலயும் ஏதாவது உதவி தேவைப்பட்டா செய்வோம்.”

“வெரிகுட் டா… உனக்கு ரொம்ப க்ளியர் திங்கிங் இருக்கு. அப்புறம் இந்தப் பண விஷயம்… நாம ரெண்டு பேரும் சம்பாதிக்கிறோம். ஆனா, பண விஷயத்தில் ஒருத்தரை ஒருத்தர் கன்ட்ரோல் பண்ணக் கூடாது. குடும்பச் செலவுக்குன்னு ஒரு காமன் அக்கவுன்ட்ல ஒவ்வொரு மாசமும் சம அளவு போட்டு அதை உபயோகிப்போம். மற்றதைச் செலவழிப்பது, சேர்ப்பது எல்லாமே நம்ம பிரைவேட் விஷயம். ஒருவர் மற்றவர் விஷயத்துல தலையிடக் கூடாது.”

“ஆமா நீனா, ஆபீஸிலே இத்தனை பேரை மேனேஜ் செய்கிற நம்மால, நாம சம்பாதிக்கற பணத்தைத் தனியா மேனேஜ் செய்ய முடியாதா என்ன?”

“கார்த்திக், உனக்குக் குழந்தைகள் பிடிக்குமா?”

“பிடிக்கும் என்கிறதைவிட, பயம்னு சொல்லலாம். அவங்க விஷமம், அழுகை இதுக்கெல்லாம் பொறுமை தேவை. நான் ஒரே குழந்தையா இருந்ததாலோ என்னமோ, எனக்கு குழந்தைப் பாசம் எல்லாம் அதிகம் இல்லை. வாட் அபௌட் யூ?”

“எனக்குக் குழந்தைகளை ரொம்பப் பிடிக்கும். அவங்க இன்னொசன்ஸ், குறும்பு ரொம்ப அழகு. நமக்கு ரெண்டு குழந்தைகளாவது வேணும்.”

“எப்ப தயாரிக்க ஆரம்பிக்கலாம் நீனா… டின்னர் முடிஞ்சதுமேவா?”

“லூசு… எனக்குக் குழந்தை பிடிக்குமே தவிர, இப்போ வேணாம்னு சொல்ல வந்தேன். இன்னும் நாலு வருஷம் கழிச்சு, நம் திருமண வாழ்வு, வேலை எல்லாம் ஸ்டெபிலைஸ் ஆன பிறகு, குழந்தை பெத்துக்கலாம். குழந்தை பிறந்த பிறகு வேலையைத் தொடர வேண்டுமா, வேண்டாமா என்ற முடிவை நான்தான் எடுப்பேன். ஏன்னா, குழந்தையை எங்கம்மா, உங்கம்மாவிடம் எல்லாம் ஏலம்போட எனக்கு விருப்பம் இல்லை. நல்ல ஆயா கிடைச்சா சரி… இல்லாட்டி, நான் வேலையை விட்டுடுவேன். அப்போ குடும்பச் செலவு முழுவதும் நீதான் செய்ய வேண்டி இருக்கும்.”

“முழுச் சம்மதம்… அடுத்தது என்ன?”

“கார்த்திக், இந்த கல்யாணங்கற விஷயத்தைப்பத்தி நான் நிறைய சிந்தித்து வெச்சிருக்கேன். எங்கப்பா, அம்மாவையே எடுத்துக்கிட்டா வெளியில ரொம்ப ஆதர்ச தம்பதியாத் தெரிவாங்க. அப்பா சொல்ற எல்லா விஷயத்துக்கும் அம்மா, ‘ஆமாம் சாமி’ போடுவா. அப்பா, ஞாயிறு தவறாம என்னையும் அம்மாவையும், பாட்டி வீட்டுக்கும், ரிலேட்டிவ்ஸ் வீட்டுக்கும் அழைச்சுட்டுப் போவார். சனிக்கிழமை கட்டாயம் ஹோட்டல், அவருக்குப் பிடிச்ச சினிமா எல்லாம் உண்டு. ஆனால், அம்மாவுக்குன்னு தனியா ஒரு ஆசை, நட்பு, எதிர்பார்ப்பு உண்டுன்னு அவர் உணர்ந்ததே இல்லை. ஹோட்டலுக்குப் போனாக்கூட தனக்கும் அம்மாவுக்கும் சேர்த்து அவரே ஆர்டர் பண்ணுவார். அம்மாவுக்குத் தன் தாய் வீட்டுல தான் சின்னப் பெண்ணா இருந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாவற்றையும் தன் பெற்றோர், உடன்பிறந்தவர் களோடு பேசி மகிழணும்னு தோணாதா? காலேஜ்ல கூடப் படிச்சவங்களைச் சந்திக்கணும். அவங்ககூட சினிமாவுக்குப் போணும்னு ஆசை இருக்காதா… அப்பா ஆர்டர் செய்யறதைத் தவிர, தனக்கு விருப்பமானதைக் கேட்டு வாங்கிச் சாப்பிட உரிமை கிடையாதா? அப்பா அதற்கெல்லாம் வாய்ப்பே தந்தது இல்லை.

திருமணத்துல நெருக்கம் மட்டும் போதாது. இடைவெளியும் ரொம்பத் தேவை. தனக்கு விருப்பமானதைச் செய்வதற்கான ஸ்பேஸ். நம் விருப்பு, வெறுப்புகள் தனித்தனியானவை. நான் என் நட்பு, பழக்கவழக்கங்கள் எல்லாம் கல்யாணமான பிறகு தொடரணும்னு விரும்புறேன். உனக்கு எங்க கேர்ள்ஸ் கேங்பற்றித் தெரியும். நாங்க எப்பவும் இருப்பதுபோல மாசம் ரெண்டு முறை டின்னர், டிஸ்கோன்னு போவோம். அதேபோல நீ கல்யாணம் ஆனதுக்காக உன் நண்பர்களையோ, உங்க பியர் பார்ட்டிகளையோ விட வேண்டாம். எல்லா உறவு களையும் பழக்கங்களையும் துறப்பதற்கான சாதனம் இல்லை கல்யாணம்.”

“நீ சொல்வது சரிதான். வேறு ஏதாவது கண்டிஷன்?”

“ஒண்ணே ஒண்ணு… தைரியம் இருந்தால் இப்ப எனக்கு ஒரு முத்தம் தா!”

கார்த்திக் சடாரென எழுந்து அவள் முகம் முழுவதும் முத்தமிட்டான். “நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கப் போறோம்” என்று உரத்த குரலில் கத்தினான். ஒரு நிமிடம் திகைத்த கூட்டத்தினர், மறு விநாடி இருவரையும் கைதட்டி வாழ்த்தினர். முகம் அறியாத ஒருவர் கேக் அனுப்பினார். பலர் கை குலுக்கினார்கள். அந்த ஹோட்டலின் சாப்பாட்டு அறையில் பியர் மயக்கத்தில் கார்த்திக், நீனா திருமண நிச்சயதார்த்தம் வெயிட்டர்கள் ஆசியுடன் நடந்தது.

புது வீடு, புதிய அலங்காரங்கள், அழகானதிட்ட மிட்ட வாழ்வு என கார்த்திக் – நீனா வாழ்க்கை அற்புதமாகவே அமைந்தது. திருமணத்துக்கு முன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி இருவரும் சமையல், வீட்டு வேலை எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டார் கள். அவரவர் காரில் வேலைக்குச் சென்று திரும்பினார்கள். விரும்பியபோது சேர்ந்து வெளியே சென்று வந்தார்கள். பண விஷயத்திலும் அழகாகப் பகிர்ந்துகொண்டார்கள்.

“கார்த்திக், நான் எங்க கேர்ள்ஸ் கேங்கோட வெளியே போறேன். நான்தான் இன்னிக்கு அசைன்டு டிரைவர் (மது அருந்தாமல் அனைவரையும் வீடு சேர்ப்பவர்) அதனால வர ஒரு மணிக்கு மேல ஆகலாம். உன் பிளான் என்ன?”

“நவீனுக்கு போன் பண்றேன். அவன் ஃப்ரீயா இருந்தா கிளப்புக்குப் போவேன். இந்த முக்கால் பேன்ட்டும், டைட் டீயும் உனக்கு ரொம்ப அழகா இருக்கு”- கார்த்திக் மனைவியின் திறந்த தோளில் உதடு பதித்தான்.

நீனா கிளம்பிய பிறகு நவீனுக்கு போன் செய்தான். “நவீன், கிளப்புக்கு வர்றியா?”

“ஏன், நீனா இல்லையா?”

“இல்லை. அவ ஃப்ரெண்ட்ஸோடு வெளியே போயிருக்கா.”

“ஸாரி கார்த்திக், நான் என் கேர்ள் ஃப்ரெண்டை டின்னருக்குக் கூட்டிட்டுப் போகணும்”- ஸ்ரீநிவாசனின் ஐந்து மாதக் குழந்தைக்கு உடம்பு சரியில்லையாம். ராகேசுக்கு ஊரில் இருந்து உறவினர்கள் வந்திருக்காங்களாம். ராஜனும் நளினாவும் வீட்டில் தனியே படம் பார்க்கப் போகிறார்களாம்.

சட்டென கார்த்திக்குக்கு நினைவு வந்தது. அம்மா நேற்று போன் செய்திருந்தாளே அத்தை வந்திருப்பதாக, பார்த்துவிட்டு வந்துவிடலாம். சின்ன வயதில் இரண்டு வருடம் அவன் அத்தை யுடன்தான் வசித்தான். 20 வயதிலேயே விதவையான அத்தை அவன் மேல் உயிரையே வைத்திருந்தாள். அவனுக்கு விதவிதமாக சமைத்துப் போடுவாள். அவனுக்கு ஹோம் வொர்க் எழுதிக் கொடுப்பாள். அவசரமாக உடை உடுத்திக்கொண்டு திருவான்மி யூருக்குக் கிளம்பினான்.

“அட, என் செல்லமே!’ என்று அத்தை கார்த்திக்கை அணைத்துக்கொண்டாள். அவள் 70 வயது மூப்பே அவனைக் கண்டதும் பறந்துவிட்டது. “அப்பாவோடு பேசிட்டு இரு… இதோ நொடியில வந்துடறேன்” என்று உள்ளே ஓடினாள். அப்பா வழக்கம்போல மகனுடன் சீரியஸாக உலக அரசியல் பேசினார். அம்மா, “ஏன்டா, நீனாவையும்கூட்டிண்டு வர மாட்டியா?” என்றாள்.

“உனக்குப் பிடிக்குமேன்னு உப்புமாக் கொழுக்கட்டையும், வெங்காய கொத்சும் செய்தேன்” என்று அத்தை உபசரித்தாள். 20 வருடங்களுக்கு முன் அனுபவித்த ருசி. ருசித்துச் சாப்பிட்டான். அப்பா ஒன்பதரை மணிக்கு விளக்கணைத்துவிடுவார். எனவே, கார்த்திக் விடைபெற்று வீடு வந்து சேர்ந்தான். மன நிறைவுடன் படுக்கையில் விழுந்தான்.

காலையில் நீனா தன் தோழிகளைப்பற்றி சிரிக்கச் சிரிக்கக் கதை சொன்னாள். “ஆமா… நீ என்ன பண்ணினே?”

“என்ன பண்றது… திருவான்மியூர் போய் அத்தை யைப் பார்த்துட்டு வந்தேன்.”

“ஃப்பூ… ஹெள அனெக்சைட்டிங்!”

“வேற வழி? உப்புமாக் கொழுக்கட்டை சாப்பிட்டுட்டு 10 மணிக்குத் தூங்கிட்டேன்.”

அடுத்த வீக் எண்ட் இருவருமாக பாண்டிச்சேரிக்கு ட்ரைவ் போனார்கள். அசோகாவின் நீச்சல் குளத்தில் நீந்தி, கடற்கரையில் வெறுங் காலில் நடந்து, தெருவோரம் வெளிநாட்டு உடைகளைத் தேடி வாங்கி, மறுநாள் வீடு திரும்பிக் கட்டிஅணைத்து… வாழ்க்கை வாழ்வதற்கே எனக் கிறுகிறுத்தார்கள்.

இன்று மறுபடியும் நீனாவின் டே அவுட்.’ “கார்த்திக்… அசடாட்டம் உப்புமா சாப்பிட்டுட்டுத் தூங்காதே. வாழ்க்கையை அனுபவி. உன் பேச்சுலர் நண்பர்கள் எல்லோருக்கும் பார்ட்டி வை.”

கார்த்திக் தலையாட்டினான். ஆனால், வழக்கம்போல பேச்சுலர் நண்பர்கள் அனைவருக்கும் அவரவர் பெண் தோழிகளுடன் அல்லது பேச்சுலர் நண்பர்களுடன் வேலை இருந்தது. திருமணமானவர்களுக்கோ பொறுப்பு இருந்தது. “ஓ! நீனா வீட்டில் இல்லையா. அப்போ ஸ்வாதிக்குப் போரடிக்கும். இன்னொரு நாள் வர்றோம்” என்று தவிர்த்தார்கள்.

கார்த்திக் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். பேசாமல் காமெடி சேனல் பார்த்தபடியே தூங்கலாம் என முடிவு செய்தான். போன் அடித்தது… அம்மாதான். “சும்மாதான் கூப்பிட்டேன்” என்றவர் “முடிஞ்சா, நாளைக்கு ரெண்டு பேரும் ஒரு நடை வந்துட்டுப் போங்களேன். அப்பாவுக்கு ரெண்டு நாளா பி.பி. கொஞ்சம் அதிகமா இருக்கு. டாக்டர் கிட்ட போக மாட்டேங்கறார். நீங்க சொன்னாக் கேட்பார்” என்றாள்.

“இப்பவே வர்றேம்மா” என்று கிளம்பினான் கார்த்திக். அப்பா மிகவும் சோர்வாக இருந்தார். அவரைக் கட்டாயப்படுத்தி டாக்டரிடம் அழைத்துச் சென்றான். வீடு திரும்பும்போது அத்தை ரெடியாக ஆலு பரோட்டாவும் கொத்துமல்லிச் சட்னியும் செய்துவைத்திருந்தாள். “நான் படுத்துக்கிறேன் நீங்க பேசிட்டு இருங்க” என்று அப்பா படுத்துக் கொள்ள… அம்மாவுடனும் அத்தையுடனும் தாயக் கட்டம் ஆடினான். 11 மணி வாக்கில் வீடு திரும்பினான். இரவு நீனா எப்போது வீடு திரும்பினாள் என்று தெரியாதவாறு உறக்கத்தில் ஆழ்ந்தான்.

“குட்மார்னிங் நீனா, யூ லுக் ஸோ க்யூட். நேத்திக்கு எஞ்சாய் பண்ணினாயா?”

“ஓ! கிரேட்பா… மாலினி செம பூஸ்… அவளை கார் பார்க்கிங்குக்குத் தள்ளிட்டு வந்தா, ஹோட்டல் ஸ்டூவர்ட் தொப்பியைக் கழட்டிட்டா. ‘வாரும் மன்னரே!’ன்னு டயலாக் வேற. அப்புறம் உனக்குத் தெரியுமா, கல்பனாவும் ரிதேசும் பிரியறதா முடிவு பண்ணிட்டாங்களாம். அந்த ப்ளடி ஃபெலோ கல்யாணத்துக்கு ஆயிரம் கண்டிஷன் போடறானாம். விட்டுத் தொலைன்னு சொன்னா கேட்காம ஒப்பாரிவெச்சா. அப்புறம் டிஸ்கோல உன் ஃப்ரெண்ட் ராமனைப் பார்த்தேன். உன்னை ரொம்ப விசாரிச்சான். ஆமா, நீ என்ன செய்தே?”

“ஒண்ணும் இல்லை… ஒரு பயலும் ஃப்ரீ இல்லை. என்ன செய்யலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன். அப்பாவுக்கு உடம்பு சரியில்லைனு அம்மா போன் பண்ணினா. அவரை டாக்டரிடம் அழைச்சுட்டுப் போனேன்.”

“என்ன ஆச்சு?”

“ஹை பி.பி!”

“அவ்வளவுதானே… வழக்கமான விஷயம்தான்.”

“ஆனாலும், அம்மா பயந்துட்டா. அதோட அவர் ரொம்ப டயர்டா இருந்தார். ஒன்பதரை மணிக்கு வாசற் கதவை தான்தான் சாத்தணும்னு கண்டிப்பா இருக்கிறவர், எட்டரை மணிக்கே படுத் துட்டார். அத்தை ஆலு பரோட்டா செய்தா. சாப்பிட்டு அம்மா, அத்தையோட தாயக்கட்டம் ஆடிட்டு வந்தேன்.”

நீனா சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். விறைப்புடன் குறுக்கும் நெடுக்கும் நடந்தாள். திடீரென்று உரத்த குரலில் கத்தினாள், “யூ ப்ளடி சீட்… நான் ஒண்ணும் தெரியாத பாப்பான்னு நெனைச்சுண்டு ஏமாத்தறியா?”

“நான் யாரை ஏமாத்தினேன்?” கார்த்திக் வியப் புடன் கேட்டான்.

“என்னை வெளியே அனுப்பிட்டு, உங்க அப்பா – அம்மா வீட்டுக்குப் போய் கொஞ்சறியா? நீ சராசரி இந்திய ஆண்தானே. இப்படியெல்லாம் செய்வேன்னு தெரிஞ்சுதானே நான் கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாம் தெளிவாப் பேசினேன். நீ ஒரு ஏமாற்றுக்காரன்… உன்னை மாதிரி அம்மாக் கோண்டு, அத்தைக் கோண்டுகூட என்னால வாழ முடியாது.”

“அம்மா நாளைக்கு வாங்கோன்னுதான் சொன்னா… நான்தான் வேற வேலை இல்லையேன்னு இன்னிக்கே போனேன்.”

“ஏய், பொய் பேசாதே! உங்கம்மா சாமர்த்தியம் எனக்குத் தெரியாதா? நான் வீட்டில் இல்லேன்னு தெரிஞ்சுக்கிட்டு பிள்ளைக்குப் போன் போடுவாங்க. நீயும் ரகசியமா ஓடுவே.”

“இதிலென்ன ரகசியம் இருக்கு… நான் என்ன கள்ளக் காதலியையா பார்க்கப் போனேன்?”

“அப்படிப் போனாக்கூட உன்னை மன்னிப்பேன். இப்போ, உன்னை என்னால மன்னிக்க முடியாது.” தேர்ந்த ஆங்கிலத்தில் நீனா உயர்ந்த குரலெடுத்துக் கத்தக் கத்த… கார்த்திக்குக்கு ஒன்று மட்டும் தெளி வாகப் புரிந்தது…

இடைவெளி என்பது இருவருக்கும் பொதுவான வார்த்தை அல்ல என்று. சில உறவுகள் இடைவெளிக்கும் அப்பாற்பட்டவை!

– ஏப்ரல் 2010

Print Friendly, PDF & Email

1 thought on “இடைவெளி

  1. இப்படிதான் இப்பொது நிறைய பேர் வாழ்க்கை வீணாக போகிறது உண்மை கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *