கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 3,702 
 

(1934ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

முதல் அதிகாரம் | 2-வது அதிகாரம் | 3-வது அதிகாரம்

தாயாரின் ஜெயம்-தீயோரின் பயம் 

தாமோதரன் தனக்கு ஏதேனும் பிழைப்பு கிடைக்குமா என்று சுற்றி யலைந்துவிட்டு, வீட்டிற்குள் வந்து சேர்ந்தான். தன் தாயார் அலங்கோலமாய் ஸ்மரணை யற்றுப் படுத்திருப்பதைப் பார்த்து அவனையறியாது விசனமுண்டாகிவிட்டது. அக் கடித விஷயம் எதுவும் அவனறியமாட்டானாகையினால் தாயாருக்கு ஏதோ ஆபத்து வந்துவிட்டது என்று பயந்து போய் “அம்மா! அம்மா!” என்று எழுப்பினான்; தண்ணீரைத் தெளித்தான். 

சற்று நேரத்திற்கெல்லாம் பொன்னம்மாள் கண்ணைத் திறந்தாள். “அப்பா! தாமோதரா! அதோ உன் பாட்டனாரின் தரிசனம் பாரு! தரிசனங் கண்டேன்! கலங்கிவிட் டேன்!” என்றாள். இதைக் கேட்ட தாமோதரனுக்குப் பின்னும் பயமதிகரித்துவிட்டது. “அம்மா! உனக்கு என்ன உடம்பு ஏன் இப்படி இருக்கிறாய்! பாட்டனார் யாரு! எனக்கு ஒன்றும் புரியவில்லையே! எனக்குப் பயமாயிருக்கிறதே!” என்றான். 

பொன்னம்மாள் சற்று தெளிவடைந்து “அப்பா தாமோதரா! பயப்படாதே; எனக்கு உடம்பு ஒன்றுமில்லை; நான் பிறந்த நாள் முதல் இன்று வரையில் கடவுள் என்னை சோதனை என்கிற சாகரத்திலேயே தள்ளி வாட்டிவிட்டார். அக்கடவுளே இப்போது உன் பாட்டனார் மூலம் நமது பிழைப்புக்கு வழி காட்டி இருக்கிறார்! எனக்குள்ள பல நிர்ப்பந்தங்களில் சிறிது எழுத்து வாசனையை என் தாயாரும் உன் தந்தையும் ஊட்டியதனால் இதைக் காணவும், படிக்கவும் ஏற்பட்டது. அந்தஅம்மாளைப்போல எனக்கும் எழுத்து வாசனையே இல்லாமலிருந்திருக்குமாயின் நானும் இதை உதாசீனமே செய்திருக்க நேர்ந்திருக்கும். கல்வி உதவும் உதவியைப் பார்த்தாயா! இதோ இக்கடிதத்தைப் படித்துப் பாரு!” என்று கொடுத்தாள். 

தாமோதரன் கடிதத்தைப் படித்ததும் பரமாநந்த மடைந்தான். அந்த அவுடதம் தயாரிக்கும் முறையையும் பார்த்தான்! அதில் ஒன்றும் அவனுக்குப் புரியவில்லை எனினும் தமக்குப் பிழைக்கும் வழி கிடைத்து விட்டதை எண்ணிச் சந்தோஷமடைந்தான். 

பொன்ன:- அப்பா! இதைப் பார்த்தாயா! உனக்கென்ன தோன்றுகின்றது. நாம் நமது நாட்டுப்புறத்திற்குச் சென்றதாலன்றோ இவ்வரிய கடிதங்களைக் கண்டு எடுக்க நேர்ந்தது. இது நம்மிடமிருப்பதே வெளியாருக்குத் தெரியலாகாது. இது அத்தனை பரம ரகஸியமாக விருக்கவேண்டும். ஏனெனின் நீசற்று அசட்டுத்தனமாய் இதை சோதாச் சினேகிதரிடம் கூறிவிட்டால் நமக்கு ஆபத்தே விளைந்து விடும். ஜாக்ரதை; ஜாக்ரதை! 

தாமோ:- அம்மா! நான் அப்படி ஒருவரிடமும் கூற மாட்டேன்! தாய் சொல் துறந்தொரு வாசகமில்லை என்கிற பழமொழியை நான் இப்போதுதான் அறிந்தேன்! என் சினேகிதர்களாக விருந்த பேய்களிடமிருந்து நீ என்னை அத்தகைய நிபந்தனை செய்து விலக்காதிருப்பின் நானும் கைதியாகி இருப்பேன். அவர்கள் செய்த திருட்டும், மோசமும் வெளியாகி அவர்களைக் கையும் மெய்யுமாகக் கைது செய்து கொண்டு போய்விட்டதை இன்று நான் கண்ணாரக் கண்டதும் தேகமே சிலிர்த்தது. என்னையும் இப்பேராபத்து வந்து தாங்கி இருக்குமே! அதிலிருந்து என் மாதாவாகிய தெய்வமன்றோ காப்பாற்றியது?” என்று எண்ணி எண்ணிச் சந்தோஷமும் பெருமகிழ்ச்சியும் அடைந்தேன்! அம்மா! நீ கீறிய கோட்டிற்கு நான் இனி தாண்டமாட்டேன்! நீ என்ன சொல்கிறாயோ அப்படியே செய்கிறேன்; இது சத்தியம்” என்றான். 

பொன்னம்மாளும் நிரம்ப சந்தோஷமடைந்து மகனின் புத்தி திருந்தி அறிவு இன்னதென்று அறிந்துகொண்டதற்கு மகிழ்ந்தாள். தன் மகனுடன் மலையடிவாரத்தில் இருக்கக்கூடிய ஒரு கிராமத்திற்குச் சென்றாள். அவளுக்கு அனேக பச்சிலைகள், மூலிகைகள் முதலியன சிறு பிராயத்திலேயே பழக்கமாகத் தெரியுமாதலால் அந்த அவுடதத்திற்கு வேண்டியவற்றைத் தானாகச் சிறிதும் அங்குள்ள காட்டு வேடர், மலைக்குறவர் முதலியவர்களின் துணையால் சிலவற்றையும் கண்டு பிடித்து அந்த மருந்துகளைத் தயார் செய்யவேண்டிய ஏற்பாடு செய்துவிட்டாள். 


பன்னிரண்டு மாதங்கள் பறந்தோடிவிட்டன. இந்த அவுடதங்களைத் தயார் செய்யும் பொருட்டு பொன்னம்மாள் என்ன பாடு பட்டிருப்பாளோ! அது பகவானுக்கே அர்ப்பணம். அவைகளைச் செய்து முடித்தாள். அந்த மருந்துகளில் ஒன்று ஸ்திரீகளின் வயிற்றுக் கோளாறுகள், கர்ப்பா சயக் கோளாறுகள் முதலியவைகளை அறவே போக்கும் தன்மையில் முதன்மை ஸ்தானம் வகித்திருந்தது. ஆதலால் அந்த மருந்திற்கு “ஜெய ஸஞ்ஜீவி என்ற பெயரையும் அடுத்தவற்றிற்கு அஜீரண வைரி, ரண நிவாரணி, ஜூர சம்ஹாரி என்ற நாமங்களைச் சூட்டினாள். 

தன் பாட்டனாரின் கடிதத்தில் கண்டபடி, யோகியாரின் உருவத்தை மானஸீகமாகச் சித்திரித்து அதற்குப் பூஜை முதலியன தினந்தோறும் தவறாமல் செய்து அம்மருந்துகள் வைத்துள்ள கோப்பைகளின்மேல் சாமியாரின் துணை என்றும் அவருடைய உருவப்படமும் பதிப்பித்து முதல் முதல் விற்பனைக்குத் தொடங்கினாள்.எந்த வியாபாரமும் சடுதியில் லாபங் கொடுப்பதுண்டா! அப்படியே ஒரு வருட காலம் சரியானபடி விலை இல்லாமல் திண்டாடியது. இவ்விரண்டு வருஷ காலத்தையும் பொன்னம்மாள் மகா புத்திசாலியானபடியால் வீணாக்காமல் தன் பாட்டனார் பெட்டியிலிருந்த சில மருத்துவ புத்தகங்களை எல்லாம் தானும் படித்துத் தன் மகனையும் குருட்டுப்பாடமாகப் படிக்கச்செய்து அதிலிருந்து சில மருத்துவ முறைகளை இருவரும் நன்றாகத் தெரிந்துகொண்டார்கள். 

மருத்துவ மகாதேவன் என்ற ஒரு கிழவனிடம் தன் பையனை யனுப்பித் தாது பார்க்கும் முறைகளையும் பின்னும் சில விஷயங்களையும் தெரிந்துகொள்ளச் செய்தாள். நம் நாட்டு மருத்துவத்திலேயே பெரிய ஜெயம் பெறவேண்டும் என்றும், அதைக் கண்டு அனேக வைத்தியர்கள் ஆச்சரியப் படவேண்டு மென்றும் பொன்னம்மாள் எண்ணினாள்: தாமோதரனின் அறிவு நாளைக்கு நாள் மிகத் தெளிவாயும் விரிவாயும் மலர்ந்துகொண்டே வந்ததால் தன் தாயார் தன் பால் காட்டும் சிரமத்தையும், அன்பின் மகிமையையும் நன்றாகத் தெரிந்துகொண்டு உலகில் தாயைப் பார்க்கிலும் தெய் வமே இல்லை. தாய்தான் தனக்கு முதன் தெய்வம். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்ற பழமொழி பொய்யல்ல என்ற தீர்மானத்திற்கு வந்து அதையே அனுஷ்டிக்கவும் தொடங்கினான். 

பொன்னம்மாளின் பெரும் முயற்சியினால் தாமோதரன் அறிவு வளர்ந்ததுபோல அந்த அவுடதங்களும் பலன் கொடுக்க வாரம்பித்தன. ஊசி குத்தாமலும், கத்தி எடுக்காலும், ஆயுத மில்லாமலும் பலவித ரோகங்களும் ஸ்வஸ்தமாகும் ஆச்சரியம் உலகம் முற்றும் வெகு விரைவில் பரவியது. இத்தனை அவுடதங்களில் ஜெய ஸஞ்ஜீவியும், ரண் நிவாரணியும் தான் முதன்மை ஸ்தானம் வகித்துச் சிறந்து நின்றன. அனேக ஸ்திரீகள் இந்த ஜெய ஸஞ்ஜீவியை வாங்கி உபயோகித்துத் தம் வியாதி நீங்கப் பெற்று ஜெயத்தை யடைந்து இவர்களை வாழ்த்தத் தலைப்பட்டார்கள். 

சில வருடத்திற் குள்ளாகவே இந்த வைத்திய சாலைக்கும் “ஜெய ஸஞ்ஜீவி அவுஷதாலயம்” என்ற பெயரே ஜனங்களால்  நிர்மாணிக்கப்பட்டு நிலைத்துவிட்டது. ஆதலால் பொன்னம்மாள் ஜெய ஸஞ்ஜீவி அவுஷதாலயம் என்ற மகுடத்துடன் பலகை மாட்டிவிட்டாள். தாமோதரனும் அனுபவத்திலேயே ஓர் மருத்துவனாகி விட்டான்: பொன்னம்மாளின் சகாயம் பெரிதும் பயன் அளித்தது. சொந்தத்தில் கட்டிடமும் கடவுள் விரைவில் அளித்துவிட்டார்: தாமோதரனும், பொன்னம்மாளும் இத்தகைய உயர்ந்த நிலைமை தமக்கு வந்தபோதிலும் தாம் குப்பை வாரக்கூடிய நிலைமையிலும் இருந்த காலத்தை மறக்கவில்லை. 

பெரிய ஷாப்புக்கள் போல இந்த அவுடதாலயம் பெருகிவிட்டது. தாமோதரன் ஷாப்பிற்கு வரும் ஜனங்களின் எண்ணிக்கை கூறத் திறமன்று. அவனுடைய புகழ் நாளைக்கு நாள் ஓங்கி வளர்கின்றது. இந்நிலைமையில் தாமோதரனுக்குக் குறைவுஉண்டா! நான், நீ என்று பெண்ணைக் கொடுக்கப் போட்டிகள் உண்டாயின. இந்த போட்டிகளில் பொன்னம்மாள் தன் மகனை ஏலத்தில் விட வில்லை. தாமோதரனும் தன் விவாக விஷயத்தில் ஆத்திரப் படவில்லை. ஆதலால் போட்டிக்காரர்களின் பாச்சா பலிக்கவில்லை. தான் வைத்தியத்தில் நன்கு நிபுணத்வம் அடைவதற்கும், வியாபாரம் நன்று செழிப்புற்று ஓங்குவதற்கும் வேண்டிய முயற்சியிலேயே இருந்தான். 

அந்நிலைமையில் இருக்கையில் முன்பு இவனுடன் சினேகமாயிருந்தவர்கள் தண்டனை யடைந்ததாக நாம் கூறியது நினைவிருக்கலாம். அவர்கள் எல்லோரும் விடுதலை யடைந்து வந்து சேர்ந்தார்கள். “பாம்பினுடைய விஷம் பல்லை விட்டுப் போகுமா?” என்பதுபோல பாம்புக் கொப் பாகிய அவர்கள் விடுதலையடைந்து வெளியுலகத்திற்கு வந்ததும் தங்கள் பழைய சினேகிதர்களைப் பற்றி விசாரிக்கையில் தாமோதரனின் உன்னதமான ஸ்திதியையும், அபார புகழையும் கேள்வியுற்றுப் பொறாமை வடிவமாக பிரமித்தார்கள். “இத்தகைய அதிர்ஷ்டம் இவனுக்கு எப்படி வந்தது. எவ்விதம் இவன் பெரிய நாட்டு வைத்தியனாயும்? மருந்து ஷாப்புக்குக் சொந்தக்காரனாயும் ஆய்விட்டான், நம்மை யறியாது எங்கேனும் கொள்ளைதான் அடித் திருக்கவேண்டும். இல்லாவிடின் இத்தனை வருடத்திற்குள் எவ்விதம் இந்த பதவியை அடையக்கூடும்?” என்று பெருங் குழப்பங் கொண்டு அதையே கவனிக்கத் தொடங்கினார்கள். 

தாமோதரனிடம் சினேகம் செய்ய மீண்டும் எத்தனிக்க வேண்டு மென்று சூழ்ச்சி செய்து அவனிடம் ஒரு தினம் சென்றார்கள். பரம அயோக்யர்களாகிய அவர்களைக் கண்டதுமே தாமோதரன் நடுங்கினான்; வெறுப்பு கொண்டான்; சற்றும் தாக்ஷண்யமின்றி “உங்களை யார் இங்கு வரச் சொல்லியது? நீங்கள் உடனே இவ்விடத்தை விட்டு எழுந்து போய் விடுங்கள்; உங்கள் சகவாஸம் வேண்டாம்.” என்று கண்டிப்பாய்க் கூறினான். 

வந்த சோதாக்கள் இதைக் கேட்டதும் குறும்பாக நகைத்துக்கொண்டே, “ஓகோ! கோபந்தான் வரும்: வராதா பாவம்! இந்த பதவிக்கு வருவதற்குத் தாங்கள் எங்கே கொள்ளை யடித்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாத பரமரகஸிய மென்று எண்ணவேண்டாம்: எங்களுக்குத் தெரிந்துவிட்டது எஜமானே!” என்றார்கள். 

தாமோ:- சேச்சே! பேமானிகளே! மானங் கெட்டு சிறைக்குச் சென்று திரும்பிய பின் இன்னும் கொழுப்பு அதிகரித்து விட்டது போலிருக்கிறது; உளறாதீர்கள். நல்ல தனமாக எழுந்து போகிறீர்களா, அல்லது உங்களைத் தள்ளும் வகையில் தள்ளட்டுமா? என்று கூறியவாறு டெலிபோனிடம் சென்று பேசத் தொடங்கி “போலீஸ் ஸ்டேஷனா!” என்று கேட்டான். உடனே அத்தனை பெயர்களும் “அடேய் தாமோதரா! உன் அகந்தையை, உன் வாழ்நாளின் திமிரை நாங்களறியாமல் விடப் போவதில்லை: ஜாக்ரதை! கூடிய சீக்கிரமே உன் கதியை நீ அறியச் செய்கிறோம்” என்று கூறிவிட்டுப் போய்விட்டார்கள். 

இந்த வார்த்தைகளைப் பொன்னம்மாளும் கேட்டுக் கொண்டே வந்தாள். “அப்பா! இதற்காக பயப்படாதே; ஆதியில் நீ செய்த லீலையின் பயன் இது. இதனால் நமக்கு யாதொரு அழிவுமில்லை. கடவுள் மீது பாரத்தைச் செலுத்தி நீ பொதுவாய் நட. கடவுள் நன்மை தீமைகளைத் தானே பார்த்துக்கொள்கிறான்” என்று தேறுதல் கூறினாள். என்ன தேறுதல் கூறியும் தாமோதரனுக்கு உள்ளூர குலை நடுக்கலும் ஒரு விதமான பயமும் ஏற்பட்டு அதே கிலி கொண்டதுபோல வருத்தத் தொடங்கியது. “ஐயோ! கொலைக்கும் அஞ்சாத துஷ்டர்களாயிற்றே! என்ன செய்து விடுவார்களோ”! என்று எண்ணிப் பதுமை போலானான்.

– தொடரும்…

– ஜெயஸஞ்ஜீவி (துப்பறியும் நாவல்), முதற் பதிப்பு: 1934, ஜகன்மோகினி காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *