கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: March 10, 2024
பார்வையிட்டோர்: 5,106 
 

(1934ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதல் அதிகாரம் | 2-வது அதிகாரம்

வறுமைப் பேயால் வருந்தும் வனிதை

“தாமோதரன் வந்து விட்டான்! இனி நம் காரியத்தைத் துவக்கலாம்” என்றான் தாண்டவராயன். இதைக் கேட்ட மற்ற சகாக்கள் “ஹஹ்ஹஹா!” என்று பெரிதாக நகைத்து ஆரவாரித்து “வாருங்கள்! வாருங்கள்!” என்றார்கள். 

தாமோதரன் அந்த அற்புதமான சபையில் வந்து அமர்ந்தான். “நேயர்களே! இன்று என்ன வேலையைச் செய்யத் தீர்மானித்திருக்கிறீர்கள். இதை இப்போதே முடிவு செய்து கொண்டால் நமக்கு நிம்மதியாகிவிடும்” என்றான்.

தாண்டவ:- நண்பா! ஒவ்வொரு தினமும் நாம் புதிய புதிய வேலைகளைக் கண்டு பிடித்துச் செய்து வருகிறோம். இன்று நாம் செய்யப் போகும் வேலை இதுவரையில் செய்ததைவிட மிகவும் நூதனமான வேலை! வேடிக்கையும் தமாஷும் நிறைந்த வேலை; அதாவது நமது பிரபல வியாயாரி பீதாம்பரம் இருக்கிறாரே அவர் ஒரு நல்ல குட்டியைத் தமக்கு பார்த்துத் தரவேண்டுமென்று கேட்டார். அதற்கு யோசித்தேன்; நமக்கு முக்கியம் பணமல்லவா! பக்கத்துத் தெரு பார்வதியம்மாளின் மூன்றாவது மகளுக்கு ஒரு காது மூளி; அதோடு ஒரு காலும் சற்று சாய்கால்தான்; அந்தப் பெண்ணை யாரும் கட்ட மாட்டேனென்கிறார்களாம். அந்த அம்மாள் கவலைப் படுகிறார்கள். அந்த விடத்து காரியத்தை நாணயமாகவே முடித்துவிட வேண்டும். இன்றைய வேலை இதுதான்” என்றான். 

தாமோ:- நண்பா! அக்கிரமக்காரர்களுக்கு எதுவுமே அக்ரமம் செய்யலாம். பீதாம்பரம் அக்கிரமக்காரர் அல்லவே! அவருக்கு எவ்விதம் நீங்கள் கெடுதி செய்யலாம்; இது சரியா? 

தாண்ட:- போடா போ! எந்த நேரமும் நீ தருமத்தையும், சாஸ்திரத்தையும் வைத்துக் கொண்டு மாரடிக்கிறாய்! அதுவெல்லாம் இக்காலத்தில் எடுக்காது; தர்மமாவது. நீதியாவது. நமக்கு இதுபரியந்தம் சோறு போடுவ தெல்லாம் தருமமா! அதர்மமா! அதர்மம்தான் அன்னமிடும்; தர்மம் தடிபோல நிற்கும் என்று பெரிய உபன்யாசம் செய்தான். இன்னும் சற்று நேரம் எல்லோரும் பேசிக் கொண்டிருந்து பின்னர் ஒரு வித தீர்மானத்துடன் கூட்டம் கலைந்தது. 

தாமோதரன் வீட்டிற்கு வந்தான். அவனுக்கு மிகவும் இளம்பிராயத்திலேயே தந்தை இறந்து விட்டார்! அவனுடைய தாயார் அவனிடம் உயிரையே வைத்திருப்பவள். அவர்களுக்கு நிலம் புலம் முதலிய வேறு எதுவுமே கிடை யாது. அவன் பிதா கொல்லத்து வேலை செய்து கொண்டிருந்தார். அதில் வரும் சொல்ப தொகையில் குடும்பத்தைச் சிக்கனமாக நடத்தி வந்தார்கள்; அவர் இறந்துவிட்ட பிறகு சிறு குழந்தையை வைத்துக் கொண்டு விதவையான பொன்னம்மாள் என்ன செய்வாள் பாவம்! தாமோதரனுக்கு 5 வயது ஆகும் வரையில் பொன்னம்மாள் அந்தக் குழந்தையின்மீது கொண்டுள்ள பிரேமையின் பொருட்டு நாத்தியின் வீட்டில் பட்ட கஷ்டங்களைக் கூறத் திறமன்று. 

கணவன் உயிருடனிருக்குங் காலையிலேயே நாத்தனார் என்கிற தேவதையின் தனியாட்சியின் பரிபவம் கூறத் திறமற்று உலகில் விளங்குகின்றது எல்லோரும் கண் கூடாகக் கண்ட விஷயமாகும். கணவனை இழந்து, கதியற்றுத் தவிக்கும் பொன்னம்மாளை அந்த தேவதை என்ன பாடு படுத்தியிருக்கும் என்பதைக் கூற வேண்டுமா! 

வீட்டில் ஒரு வேலைக்காரியை வைத்துக் கொண்டால் அவள் கூட இத்தனை வேலைகளுக்கும், கட்டுப்பாடுக்களுக்கும் உடன்பட மாட்டாள். நமது பொன்னம் மாளோ அதற்கும் கடையளான பதவியில் நடத்தப் பட்டாள். நாத்தனாரின் வீட்டிலிருக்கும் சகலரும் அவளை ஓர் மனித உருவம் என்றே எண்ணாமல் நாய், கழுதை முதலிய ஜந்துக்களைப்போல எண்ணி நடத்துவார்கள்! தாமோதரன் சிறு குழந்தை யாகையினால் அழுதால் அதுவும் ஓர் பெரிய குற்றமாகி விடும் ! உடனே நாத்தியாகிய நாகம்மாள் நாகப் பாம்பைவிட அதிகமான சீற்றத்துடன் பிரஸன்னமாகி “எண்டீ! பொன்னீ! வேலைக் கள்ளிக்குப் பிள்ளைமீது சாக்கு என்றதை நீரூபிக்கின்றாயா! இந்த பாச்சா இந்த நாகத்தினிடம் பலிக்காது. இந்த சனியனை அழ விட்டால் அழுதுகொண்டேதான் இருக்க வேண்டும். அழுது அழுது சாகட்டும்; இதனால் வேலையைச் செய்யாது ஏய்த்து விடலாம் என்று எண்ணாதே!” என்று வாயில் வந்தவாறெல்லாம் திட்டுவாள். 

இந்தச் சொல்மாரி பொன்னம்மாளுக்கு தினம் கிடைக்கும் பிரஸாதமாகி விட்டது. அவள் உரத்துப்பதில் கூறாது. தன் விதியை எண்ணிக் காலத்தைக் கடத்துவாள். தான் என்ன விதமான கஷ்டங்களை அனுபவித்தாலும் தன் குழந்தைக்கு ஒரு குறைவு மின்றிக் காப்பாற்றினால் போதும் என்பதே அவளுடைய கருத்து. அதற்காகவே அவள் சகல கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு தன் குழந்தையை 5 வயது வரையில் வளர்த்து வந்தாள்; வர வர இம்சை அதிகரித்து அவளால் தாங்கக் கூடாது போய்விட்டது. தன்னுயிரெனப் பாவிக்கும் குழந்தையைச் சதா திட்டுவதும் அடிப்பதும்,பட்டினி போடுவதுமாக வதைக்க வாரம்பித்தாள். இந்த சங்கடம் அவளால் சற்றும் சகிக்க முடிய வில்லை. தப்பித் தவறி என்றாவது “அக்கா! நான்தான் செக்கு மாடு போல உழைக்கிறேனே! எந்த வேலையாயினும் என்னிடமே பெற்றுக் கொண்டு இந்த பால் மணம் மாறாத பாலகனை இம்சிக்காமல் விட்டு விடலாகாதா?” என்று கூறி விட்டாலோ, அன்று வீட்டில் நடக்கும் அமர்க்களம் மித மிஞ்சிப் போய்விடும். 

பின்னும் சில காலம் சென்றது. “நான் என்ன சித்திரவதைக் குள்ளாயினும் பொறுப்பேன்! என் குழந்தையைச் செய்யும் இம்சைக்கு நான் சற்றும் பொறுக்க மாட்டேன். நான் இந்த வீட்டில் சொந்த மனிதர்களின் முன்னிலையில் இப்படி கஷ்டப் பட்டுக் குழந்தையையும் வருத்துவதை விட நாலு வீடுகளில் பிச்சை வாங்கியோ, பெருக்கி சாணி தெளித்து மெழுகிக் கோலம் போட்டு வேலை செய்தோ, சுண்ணாம்பு இடித்தும், செங்கல் தண்ணீர் முதலியன தூக்கிக் கொடுத்துச், சித்தாள் வேலை செய்தோ நம் குழந்தைக்குக் கால் வயிறு கஞ்சியை வார்த்து சந்தோஷமாய் வளர்க்கலாம். இந்த சனியன் பிடித்த வீட்டில் இம்சைப் படவேண்டாம். ஓடிவிட்டாள் என்ற கெட்டப் பெயரை நமக்குச் சூட்டி விடுவார்களே என்று அஞ்சி இதுகாறும் சகித்தேன். கடவுளறிய நாம் நிரபராதியாய் – பரிசுத்தமாய் – இருந்தால் போதும்; இவர்களுடைய கொடிய சிறையிலிருந்து தப்பிக்கும் வழியை இனித் தேடவேண்டும்” என்ற தீர்மானம் அவள் மனத்தில் வேரூன்றி விட்டது. 

இதற்குச் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்; தாமோதரனுக்குத் திடீரென்று ஜுரமும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. அதற்கு ஒரு கஷாயங் கூட கொடுக்கச் சம்மதிக்காத நாகம்மாள் பின்னும் திட்டவாரம்பித்தாள்: இதைக் கண்ட பொன்னம்மாள் மிகுந்த துக்கமடைந்து நாகம்மாளைப் பார்த்து “அக்கா! நான் இந்த 6 வருட காலமாக என் விதியை எண்ணி பட்ட கஷ்டங்கள் முற்றும் என்னுடைய இச் சிறு குழந்தையின் பொருட்டாகவே யன்றி வேறல்ல. அத்தகைய குழந்தைக்கு இத்தகைய ஆபத்தான உடம்பு வந்திருக்கையில் கூட நான் இங்கு அதைக் கவனிக்க முடியாமல் அடிமை வேலை செய்ய இனி சகிக்கக் கூடவில்லை. இதுவரையில் என்னையும் என் குழந்தையையும் வைத்து சம்ரக்ஷித்ததற்காக மனப் பூர்வமான வந்தனத்தைச் செலுத்துகிறேன்: நான் இம்மட்டுடன் போகிறேன்: என் குழந்தை பிழைத்தால் எனக்குப் போதும்: இல்லையேல் அவனுடன் என்னுயிரையும் மாய்த்துக் கொள்கிறேன்” என்று கூறியவாறு அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டு விட்டாள். 

இதைக் கேட்ட நாகம்மாள் “ஆகா! அடீ நன்றி கெட்ட பன்றியே! நாணங் கெட்ட நாயே! உனக்கு இத்தனை தலைத்திமிரா! உன்னை நான் இத்தனை வருடங்களாக வைத்து தண்ட பிண்டங் கொட்டியது போதாமல் போது நான் படுத்தியதாக அவதூறையும் என்மீது சுமத்தி விட்டுப் போகிறாயா! நாணங் கெட்டவளே! இரு; இரு! உன் கதியைப் பார்க்கிறேன்:” என்று சரமாரியான வசைமாரியைக் கொட்டித் திட்டினாள்: 

பொன்னம்மாள் பதில் பேசாமல் கண்ணீர் வடிய குழந்தையைத் தூக்கிக்கொண்டு போய்விட்டாள். நோய் கண்ட குழந்தையுடன் எங்கே செல்வாள் பாவம்! தர்ம ஆஸ்பத்திரிக்குச் சென்றாள்: அங்கு பட்டினியாய்த்தான்  இரண்டு நாள் கிடந்தவாறு குழந்தைக்குச் சிகிச்சை செய்தாள்: குழந்தைக்குச் சற்று குணமாயிற்று. பிறகு கால் நடையாக வேறு ஒரு ஊரை அடைந்தாள். அங்கு சிலரை அண்டி சில வீடுகளில் வேலை செய்து வந்தாள். 

நாகம்மாளுக்கு இச் செய்தி தெரிந்ததும் அந்த வீடுகளில் இவளை வேலைக்கு வைத்துக் கொள்ளாமலிருக்க வேண்டி தன் வேலைக்காரர்கள் மூலம் அவர்களிடம் பொன்னம்மாள் பெரிய திருடி என்றும், திருடிவிட்டுப் பலவிடங்களில் செருப்படி பட்டுச் சிறைவாசமும் செய்த பேமானி என்றும் கூறச் செய்து வேலையிலிருந்து தள்ளிவிடச் செய்தான். 

இந்த சூழ்ச்சியைப் பொன்னம்மாள் முற்று மறியவில்லை எனினும் தன் நாத்தியால் விளைந்த கேடுதான் இது என்பது மட்டும் தெரிந்து கொண்டாள்: அதற்குமேல் என்ன செய்வாள்! சில வீடுகளில் பிச்சை எடுத்தும் சித்தாள் வேலை செய்தும், வீடு பெருக்கியும் காலத்தைக் கடத்தலானாள்: அதிலும் மண் விழுந்தது. 

பொன்னம்மாளின் மகன் ஏழு வயதையடைந்தான்; எனினும் நற் சகவாஸமா, படிப்பா எதுவுமே இல்லாமல் வீதியில் திரியும் பிள்ளைகளுடன் கோலி விளையாடுவதும், பளிசப்பளாம் ஆடுவதும் வீணே திரிவதுமாக ஆய்விட்டான். சதா சர்வ காலமும் உழைப்பிலேயே காலத்தைக் கழிக்கும் பொன்னம்மாள் அந்த பிள்ளையை முற்றும் கவனிக்க முடிவதில்லை. எனினும் இராக்காலத்தில் அவனைக் கண்டித்து துஷ்ட சகவாஸம் செய்யாம லிருக்கும்படி நற்புத்தி கூறுவாள்: 

அதனாலும் அவளது குழந்தையின் புத்தி திருந்தவில்லை. “ஐயோ! நாம் இத்தனை கஷ்டங்களை யனுபவித்தும் குழந்தையினால் நமக்கு நற்காலம் பிறக்காது போய்விடுமோ! துஷ்ட சகவாஸத்தின் தோஷம் அவனை யழுத்திப் படுகுழி யில் தள்ளிவிடுமோ!” என்று சதா சிந்தித்து வருந்துவாள். நற்சகவாஸம் படிவதற்காக அந்தப் பையனை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள்: பையன் அங்கு செல்வது போல பாவனை காட்டிவிட்டு விளையாடுவதற்கே சென்று விடுவான். 

சில தினங்கள் கழித்து இந்த திருட்டைப் பொன்னம் மாள் அறிந்துகொண்டாள்: நல்லதனத்திலும், கோபத்திலும் கூறிப் பார்த்தாள்; பலனில்லை. அதற்குமேல் பையனை ஓர் கடினமான வேலையில் புகுத்தி அவனை திருந்தச் செய்ய வேண்டும் என்று எண்ணினாள். அவளுடைய எண்ணம் முற்றும் தன் மகன் நல்ல நிலைமையை அடையவேண்டும், சத் சகவாஸத்துடன் புத்திமானாய் விளங்கவேண்டும் என்பதே. 

ஒரு தினம் பையனை அழைத்து “அப்பா! தாமோதரா! உன் பொருட்டு நான் பட்ட கஷ்டமும், அடைந்த துன்பமும் கூறத் திறமன்று. நீ இவ்விதம் படிப்பு மில்லாது துன் மார்க்கர்களுடன் சகவாஸம் செய்துத் திரிவது என் மனத்தைப் புண்படுத்துகின்றது. நான் மட்டும் எத்தனை நாளைக்குத் தான் வேலை செய்து சிரமப்படுவது? நீ என்னவோ படிக்க மாட்டே னென்கிறாய்: வேலையாவது செய்து சம்பாதித்துக் கொடுத்தால்தான் இனி சோறு உண்டு, இல்லையேல் பட்டினிதான். இன்று முதல் இந்த ஊரில் குப்பை வாரும் தொழிலில் உன்னைச் சேர்த்து உன் பெயரும் கொடுத்துவிட்டேன். காலையும் மாலையும் குப்பை வண்டியுடன் சென்று குப்பை வாரினால் மாதச் சம்பளமாக ஏதேனும் கொடுப்பார்கள். அதைக் கொண்டு உன் காலத்தைக் கடத்தலாம்: குப்பை வாரி பிழைப்பதற்கும் கையாலாக வில்லை என்றால் அவமானம்: ஜாக்ரதை. இதோ! இந்த குப்பைக்காரன்தான் உன்னை யழைத்துச் செல்வான் ஜாக்ரதை; புறப்படு. உன்னை யழைத்துச் செல்லவே அவன் வந்திருக்கிறான்.” என்றாள். 

இதுவரையில் பையன் கோலியாடிக்கொண்டும், தெருவில் திரிந்தும் வந்ததால் ஒரு விதமான உணர்ச்சியு ன்றி கட்டைபோல விருந்தான். குப்பை வாரும் தொழிலில் சேரவேண்டுமென்று கூறக்கேட்டதும் அப்படியே நடுங்கிப்போய்! “ஐயோ! நான் குப்பைக்காரனாகவா… வாருகிறவனாகவா-ஆகவேண்டும்?” என்று அலறிப்போய் தம்பித்து நின்றுவிட்டான். 

கல்யாண வீட்டின் ஆரவாரத்தைக் கேட்கவேண்டுமா! மேளமும்,தாளமும், ஜனங்களின் அலங்கார அழகும், விவாக மண்டபத்தின் ஜோடிப்பும் மணமகன், மணமகள் ஆகிய தம்பதிகளின் கண்கொள்ளா சிங்கார வனப்பும் ஒருங்கு கூடி மக்களின் மனத்தைப் பரவசப் படுத்தியது. அத்தகைய விவாக வீட்டில் கணக்கற்ற பணியாள்கள் இருந்தனர். அவர்களில் நமது பொன்னம்மாளும் ஒரு வேலைக்காரி யாதலால் அங்கு அவளுக்கு சற்று நேரமேனும் ஓய்ச்சலே இல்லாமையினால் அங்குமிங்கும் ஓடியாடி அலைந்து கொண்டே இருக்கிறாள். ஆனால் இடை இடையே அவளது விழிகளில் நீர் பெருகிக்கொண்டிருந்தது. அதற்குக் காரணம் என்ன விருக்கும்? 

அவ்விவாகத்தில் சம்மந்தி வீட்டு உறவினளாய் நாகம்மாள் வந்திருந்தாள். அந்த அம்மாளின் கண்ணில் படாமலே பொன்னம்மாள் மறைந்து மறைந்து வேலை செய்துவந்தாள்; எனினும் தன்னைத் தெரிந்துகொள்ளாதிருக்கும் பொருட்டுத் தான் கீழே விழுந்து அடிபட்டதாகக் கூறி நெத்தியில் பத்து போட்டு கட்டு கட்டிக்கொண்டிருந்தாள். பெண்டுகள் எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கையில் நாகம்மாளை நோக்கி ஒரு அம்மாள் “ஏனம்மா! உங்கள் உடன் பிறந்தான் ஒருவன் முன்பு..” 

நாகம்மா: ஆமாம்! இதற்கு இத்தனை இழுப்பென்ன? அவன் காலந்தான் முடிந்துவிட்டதே! உம்! தங்கக் கட்டியைத் தணலாக்கி யாயிற்று. 

வேறொருத்தி :- ஐயோ! பாவம்! அவருக்கு ஒரு குழந்தை இருந்ததல்லவா! அதுவும் அதன் தாயும் எங்கே இருக்கிறார்கள்? 

நாகம் :- ஐயோ! அந்த வெட்கக்கேட்டைக் கேட்க வேண்டுமா? எல்லாம் குட்டிச்சுவராகிவிட்டது. அவனோடு பிறந்த பாசத்திற்காக நான் அந்த அனாதைகளை வீட்டில் வைத்திருந்தேன்! இதற்காக நான் என் மாமியார் நாத்தனார் புருஷன் முதலியவர்களிடம் பட்ட பாடு கொஞ்சமன்று. அந்த அல்ப முண்டையின் சகவாஸம் வெகு மோசமாயிருந்ததை நான் கவனிக்கவில்லை. வெட்கக்கேடு! என் பர்த்தாவையே அவள் வலையில் போட்டு என்னைத் தனக்கு அடிமையாக்கிக்கொண்டு நடத்த எண்ணினாள். இதற்கு அவளுடைய தறிதலை மகனே உள் கையாக விருந்தது.யார்தான் தன் வாழ்க்கையைப் பிறருக்கு மனமொப்பிக் கொடுப்பார்கள்! அவளுடைய ஆதிக்கம் நிலைக்கும் முன்னர் இவளை ஒட்டிவிடத் தீர்மானித்து ஓட்டியும் விட்டேன் ! பிறகு சனியன் எங்கு சென்றதோ! எவ்விதமாயிற்றோ யார் கண்டது. இன்னொரு பிள்ளையும் பிறந்திருப்பதாயும், இன்னும் எங்கெங்கேயோ செருப்படி வாங்கியதாயும் கேள்வி யுற்றேன்! காசுக்குதவாச் செருப்பு எப்படியாயின் என்ன பயன்! என்று அவர்களைப்பற்றி நான் கட்டோடு விட்டுவிட் டேன்!” என்று சற்றும் வாய் கூசாமல் கூறினாள். 

அப்போது அந்த இடத்திற்குப் பக்கத்து விடுதியில் உட்கார்ந்து பொன்னம்மாள் பலாப்பழத்தைத் திருத்தி சுளை எடுத்துக்கொண்டிருந்ததால் அவள் செவியில் இம் மொழிகள் யாவும் விழுந்தன. மனம் அப்படியே அனலிடைப்பட்டமெழுகென உருகியோடிற்று. “ஐயோ!நம் விதி இவ்வித அபாண்டமான வார்த்தைகளைக் கேட்பதிலா வந்து முடிந்தது. ஹா! கடவுளே! உனக்கும் இவ்வுலகத்திற்கும் சம்பந்தமில்லையா! நான் பரிசுத்தமான இருதயத்தை யுடையவள் என்பதற்கு உன் மனச்சாட்சி சட்டம் இல்லையா! என்னுடைய நிரபராதித்தனம் உனக்கும் தெரியாவிட்டால் உன்னுடைய மகத்துவத்திற்கு என்ன பெருமையுண்டு? ஹா….. என்னப்பனே! ஜகத்ரக்ஷகா! என் பேதைத் தனத்தை, அறிவீனத்தை மன்னிக்கவேண்டும்! என் விதியும் என் பாபமும் அன்றோ இவ்விதம் பழி கேட்கச் செய்தன?” என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு தனக்குள்ளேயே எண்ணாததும் எண்ணித் தவித்தாள். அக்காரணம் பற்றியே கண்ணீர் வடிந்துகொண்டே இருந்தது. 

இந்த விவாக வீட்டில் நாகம்மாள் சொல்லிய வார்த்தையைக் கேட்ட ஏனையோரும் இதை நம்பியும் நம்பாமலும் இதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். பொன்னம்மாள் தனக்கு இவ்விஷயத்தில் சம்பந்தமிருப்பதாகவே காட்டிக் கொள்ளாமல் தன் விதியைத் துலைத்து வந்தாள். அன்று முதல் பொன்னம்மாளுக்குத் தன் மகன் விஷயமான கவலையே அதிகப்பட்டுவிட்டது. தன்னை வீணான பழி சுமத்தி வைப்பதற்கேற்பத் தன் மகனும் சோதாவாகிவிட்டால் தான் பட்ட சிரமம் முற்றும் விழலுக்கிறைத்த நீர்போலாய்விடுமே! என் செய்வது? உலகத்தில் ஒரு பெண்பிள்ளை அனாதையாக விருந்து பல விதமான கஷ்டங்களை வித்து ஒரு மகனைக் காப்பாற்றி விருத்திக்குக் கொண்டு வந்தாள்! என்ற பெயர் தனக்கில்லாது போய்விடுமோ! என்று ஏங்கினாள். 

இந்த ஏக்கத்தினால் தான் முன்னதிகாரத்தின் இறுதியில் கூறியபடி குப்பைக்காரத் தொழிலை மேற்கொள்ளும் படி தன் மகனுக்குக் கூறினாள்! இதைக் கேட்ட தாமோதரன் சில நிமிஷ நேரம் கல்லாய்ச் சமைந்துவிட்டான்; ஒன்றுமே தோன்றாமல் தவித்தான். “சீச்சீ! நாம் குப்பை வாரும் தொழிலைச் செய்வதா?” என்று வெறுத்தான். உடனே தன் தாயாரை நோக்கி, “அம்மா! நீ எத்தனையோ கஷ்டப்பட்டு என்னை வளர்த்ததாகக் கூறுகிறாயே! கடைசியில் என்னைக் குப்பை வாரும் தொழிலில் விட்டு நீ வேடிக்கை பார்ப்பது உனக்கு தருமமா! இது மட்டும் தாயார் செய்யும் கடமையா!” என்று கேட்டு முறைப்பாக நின்றான். 

இதைக் கேட்ட பொன்னம்மாள் சற்று கோபத்துடன் “அப்பா! நான் என்னாலாகிய சகல வித மார்க்கங்களையும் பார்த்தாகி விட்டது. இனிமேல் நான் என்ன செய்யக் கூடும்? தான் ஜீவனம் செய்வதற்கு மோசம், திருடு, அனியாயம் முதலிய எக்காரியமும் செய்யாமல் எவ்விதமான ஈனத் தொழிலைச் செய்வதிலும் குற்றமே இல்லை; அவமானமும் இல்லை. ஒவ்வொரு தொழிலுக்கும் தனி கௌரவ முண்டு. அப்படி அது அகௌரவமாகத் தோன்றினால் பட்டினிதான் கிடக்க வேண்டும். இல்லை! நீ உலகத்தவர்களைப் போல கண்ணியமாக வாழ வேண்டுமென்று நினைத்தாயானால் பள்ளிக்கூடத்தில் படிக்க வாரம்பி; சோதாக்களின் சகவாஸத்தை அறவே விட்டு ஒழித்து விடு. இவ்விரண்டு மில்லா விட்டால் கட்டாயம் குப்பைக்காரத் தொழிலில் உன்னையும் சேர்த்து நானும் சேரப் போகிறேன்; அந்தத் தொழிலை நீ செய்யாவிடினும் நான் செய்யப் போவதால் உன்னை எல்லோரும் குப்பைக்காரி மகன் என்றுதான் சொல்லுவார்கள். உன்னைக் கண்டு அருவருப்பார்கள். “அடேய்! விலகிப் போ! விலகிப் போ!” என்று அதட்டு வார்கள். நான் இத்தனை கஷ்டங்களையும் சகித்துக் கொள்வதெல்லாம் உன் பொருட்டாகத்தான் என்பதை மறக்காதே.” என்று கூறினாள். 

மூளையே கலக்க மடைந்து விட்டதுபோலப் பிரமித்து நின்ற தாமோதரன் விம்மி விம்மி அழத் தொடங்கினான். “அம்மா! நான்…வார மாட்டேன்! நீயும் குப்பைக்காரியாக வேண்டாம்; நான் இன்று முதல் சமத்தாகப் பள்ளிக் கூடத்திற்குப் போகிறேன். ஏம்மா! எல்லார் வீட்டிலும் பையன்களுக்கு அப்பா இருக்கிறார் ; சம்பாதிக்கிறார். நம்ப அப்பா எங்கே! ஏன் அவர் சம்பாதிக்காமல் நீ சம்பாதிக்கிறாய்?” என்றான். 

பொன்னம்மா:- அப்பா! உனக்கு இக் கேள்வி கேட்பதற்கு அறிவு வர இத்தனை வருடங்களாயிற்றா! நீ பண்ணிய பெரும் பாவமும், நான் செய்த கர்மமும் ஒன்று கூடி உன் தந்தையை உலகினின்று ஒட்டி விட்டது. அவர் இறந்ததனாலேயே நான். பட்ட துன்பம் சகிக்கொணாது. உன் பொருட்டு படாத கஷ்டங்களைப் பட்டும் நீ தத்தாரியாய் – தறிதலையாய் – சோதாவாகி விட்டால் என் வயிறு எவ்விதம் எரியும். அதை நீ அறிய வேண்டாமா! நீ நல்ல புத்திசாலி யாய் சத் சகவாஸத்துடன் பிரகாசித்தால்தான் என் மனம் சந்தோஷ மடையும். இல்லையேல் நான் சொல்லாமல் கிணற்றிலோ, குளத்திலோ விழுந்து உயிர் துறக்க வேண்டியது தான். உன் விதிப்படி உனக்கு நடக்கட்டும். இதுதான் என்னுடைய தீர்மானம். அதை வெளியிட வேண்டாம் என்று எண்ணி இருந்தேன்; இன்று கூறிவிட்டேன்” என்றாள். 

இதுவரையில் ஏதோ மாதிரி இருந்த தாமோதரனுக்குச் சற்று விசனமும், மனத்தில் அவனை யறியாத உணர்ச்சியும் உண்டாயிற்று. தாயை வணங்கி தான் இனி படிப்பதாகக் கூறி வாக்குக் கொடுத்தான். பொன்னம்மாள் சொல்ப சந்தோஷ மடைந்தவளாய் அவனை தர்ம பள்ளிக் கூடத்தில் சேர்த்தாள்; பையன் அன்று முதல் முன் போல மோசம் செய்யாது, விடாமல் படித்து வந்தான். எனினும் சினேகிதர்களுடன் சுற்றுவதை மட்டும் விடவில்லை. பொன்னம்மாள் எத்தனையோ சிரமப்பட்டு 8 வகுப்பு வரையில் அவனைப் படிக்க வைத்தாள். அதற்குமேல் ஒரு வருஷம் அவன் தோல்வி யடைந்து விட்டதால் அவனை இலவசமாகச் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்கள். பணங் கட்டினால் படிக்கலாம். பணம் கட்ட வகை யில்லாமையினால் நிறுத்தி விட்டாள். 

தாமோதரனுக்குத் தன் தாயாரிடத்து அன்பு மட்டும் குறையவில்லை. எனினும் நாம் முன்பு கதை யாரம்பத்தில் கூறியபடி துஷ்ட சகவாஸத்தை விடாமலிருந்தான். அவர்களுடன் சேர்ந்து செய்த வேலையில் கிடைக்கும் பணத்தை அவர்களைப்போல துர்வினியோகம் செய்யாமல் தாயாரிடத்தில் தான் வேலை செய்து சம்பாதித்ததாகக் கூறிக் கொடுத்து வந்தான். பொன்னம்மாளும் அது விஷயத்தில் மிகுந்த சந்தோஷமே அடைந்திருந்தாள். 

தான் செய்யும் தொழில் அக்கிரமம் என்பதை தாமோதரன் அறிவான். இருப்பினும் ஜீவனோபாயம் நடக்கும் வழி அதுவாகி விட்டதால் அந்தத் தொழில் விவரத்தைத் தாயாருடன் கூறாது அடியோடு ஒளித்து விட்டான். 

ஒரு தினம் பொன்னம்மாள் கடைக்குச் சென்று திரும்பி வருகையில் தாமோதரன் அந்த சோதாக்களுடன் திரிவதைக் கண்டு விட்டாள். “ஐயோ! இன்னும் இவன் இவர்களை விடவில்லையே! என்ன செய்வேன்? இந்தச் சோதாக்களுடன் திரிந்தவாறு எப்படி சம்பாதிக்கிறான்; அவர்களின் சகவாஸத்தின்படி மோசமாகச் சம்பாதிக்கிறானோ!” என்று சிந்தித்தாள்; பிறகு வீட்டிற்குப் போய் விட்டாள். 

அன்று தாமோதரன் வந்ததும் “அப்பா! தாமோதரா! நான் ஒவ்வொரு தினமும் உனக்குச் செய்யும் உபதேசமெல்லாம் விழலுக் கிறைத்த நீர்போலாய்விட் டதே! சோதாக்களின் சகவாஸம் உதவாதென்று உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கிறேன். அவற்றைக் கேளாது நீ இன்னும் அவர்களுடனேயே இன்று கூடத் திரிந்ததை நான் கண்ணால் கண்டேனே! தாமோதர ! அவர்களெல்லாம் கொலைக்கும் அஞ்சாத பாதகர்கள். அவர்களுக்கு அக்கிரமத்தைத் தவிர வேறு தெரியவே தெரியாது. அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் விஷம் போன்றதே யாகும். அவர்களை உலகத்தோர் இழிவாகக் கூறுவதைக் கேட்க என்ன வெறுப்பாக விருக்கிறது. அந்த கோஷ்டியில் நீயும் கூடி இருந்தால் உன்னையும் அது பாதிக்காதா! ஐயோ! நான் எண்ணி எதிர்பார்த்ததெல்லாம் வீணாகி விட்டதே!” என்று பொன்னம்மாள் கண்ணீர் விட்டாள். 

தாமோ:- ஏனம்மா நீ விசனிக்கிறாய் ? நான் நம் குடும்பத்தை சம்ரக்ஷிக்க வில்லையா ! நான் சம்பாதிக்காமல் சோம்பேறியாகத் திரிய வில்லையே! அவர்களை நீ ஏன் நிந்திக்கிறாய்? இத்தனை நாளாக நாம் சாப்பிடுவது அவர்களால்தான் என்ற ரகஸியத்தை நான் இன்றே கூறுகிறேன். வயிற்றுப் பிழைப்பு நடத்துவதற்கு ஆதாரம் வேண்டாமா? இக்காலத்தில் எத்தனையோ படித்தவர்களெல்லாம் வேலை கிடைக்காது திண்டாடுகிறார்கள்! என்னைப்போல சொல்ப படிப்பாளிகளின் பாடு எப்படியாவது?. அம்மா! இந்த விஷயமெல்லாம் ……” என்று இழுத்துக் கூறி முடிப்பதற்குள் பொன்னம்மாள் அலறியவளாய் “ஐயையோ! குடி கெட்டுவிட் டதே! அடே பாவி! நீ ஏதோ தொழில் செய்து சம்பாதிப்பதாகச் சொன்னதெல்லாம் சுத்தப் புளுகா! அவர்களுடன் சேர்ந்து திருடியும், கேவலமான தொழிலைச் செய்தும் இவ் விதம் நீ வயிறு வளர்க்காவிடில் பிராணனை விட்டிருக்கலாமே! உம். இனி உனக்குச் சொல்வதும், இந்த சுவருடன் சொல்வதும் ஒன்றேயாகும். எத்தனை குடிகளைக் கெடுத்தும், கற்புள்ள மங்கைகளின் வயிறை எரித்தும், அவர்கள் மனந்தவிக்கச் சாபமிட்டுத் தாக்கியும் சம்பாதித்து வந்த பொருளும் – அதனால் தின்ற சோறும் – நரகலுக்கு ஒப்பானதே யாகும்: நரகலைத் தின்று வயிறு வளர்த்தாயிற்றே யன்றி வேறு இல்லை. நான் முன் செய்தபடி என்னுயிரை மாய்க்க வேண்டியதுதான் மிச்சம்” என்று ஏதேதோ திட்டினாள். 

தாமோதரனுக்கு மீண்டும் குழப்ப மேற்பட்டது. அவன் முன்பு சிறுவனாக விருந்தான்: இப்போது பெரிய ஆண்பிள்ளை யாகிவிட்டான். ஆதலால் கவலை யதிகரித்து விட்டது. தன் தாயார் சொல்வதெல்லாம் ஒரு சமயம் பார்த்தால் சரியாயும் ஒரு சமயம் பார்த்தால் குற்றமாயும் தோன்றுகிறது. இதற்குத் தான் என்ன செய்வது. நமக்காக அந்த அம்மாள் பட்ட சிறுமையை எண்ணிப் பார்த்தால் தான் தன் சரீரத்தை அந்த அன்னைக்குச் செருப்பாகத் தைத்துப் போட்டாலும் போதாது என்ற எண்ணமும் உதிக்கிறது. தன் தாயாருக்கு விஷயம் தெரிந்துவிட்ட பிறகும் தான் அவளுக்கு விரோதமாக நடந்தால் ஒருகால் அவள் உயிரை விட்டுவிடுவாளோ! என்ற பயமும் பாதிக்கின்றது. 

ஒரு விதமும் தோன்றாமல் அச்சமயம் வேறு எந்த விதமான பதிலும் கூறாது மவுனமாகவே சென்று விட்டான். 

அன்று பொன்னம்மாள் வீட்டில் சமையலே செய்ய வில்லை: இந்த மகனைத் தான் எவ்விதம் திருத்தக்கூடும் என்கிற ஓர் பெரிய யோசனையிலேயே மூழ்கித் தன் போக்காக அழுதவாறு படுத்திருந்தாள்: பிறகு ஒரு தீர்மானத்திற்கு வந்தாள். அந்த சோதாக்களைப் பற்றி யார் யார் என்ன விதமாகத் திட்டுகிறார்கள் என்பதைக் கண்ட டறிந்து தாமோதரனையும் ரகஸியமாக உடனழைத்துச் சென்று நேரிலேயே காட்டி “அப்பா! பேமானிகளின் பவிஷைப் பார்த்தாயா! அவர்களுக்குள்ள மரியாதை யன்றோ உன்னையும் சாரும்! இந்த உத்தமியின் வயிறெரிய இவள் புருஷனுக்கு தாசி வீட்டுப் பழக்கத்தை உண்டாக்கி குடியைக் கெடுத்ததன் விபரம் பார்த்தாயா! இந்த அம்மாள் இனி என்ன செய் வாள்? உங்களைச் சாபமிட்டுத் திட்டி விட்டுத் தன் பிராணனை மாய்த்துக் கொள்வதாகக் கூறியதைக் கேட்டாயா! இந்த உத்தமி அனாயாஸ மரணம் அடைந்தால் அந்த பாபம் யாரைச் சேருமென்று நினைக்கிறாய்? அவை முற்றும் உங்க ளையே சாரும். மனித சமூகத்தில் நீங்கள் பகிரங்கமாகக் கொலை செய்யவில்லை என்று நினைத்து நீங்கள் இறுமாப்பு அடையலாம். ஆனால் கடவுளின் முன்னிலையில் நீங்கள் கொலையாளிகளே யாவீர்கள். அவரிடத்தில் மறைக்கவும் உங்கள் சாமர்த்தியத்தைக் காட்டவும் ஒருகாலும் முடி யாது. இப்படிப்பட்ட கொடுமைகள் எத்தனை இடங்களில் செய்திருப்பீர்கள் என்பதை நீயே சிந்தித்துப் பாரு” என்று கூறி, அடுத்தடுத்து சில சம்பவங்களை நேரிலேயே காட்டினாள். தாமோதரனை வெளியி லனுப்பாமல் காவலிருப்பது போல விருந்து அவனை வீட்டிலேயே மடக்கிப் போட்டு நற்புத்திகளைப் புகட்டினாள்; உபதேசங்களைச் செய்தாள்: தன் மகன் நல்வழிப்பட்டால்தான் தான் ஜீவிப்பது; இல்லையேல் மரிப்பது என்ற உறுதியைக் கூறிவிட்டாள். 

தாமோதரனின் மனம் இரு வகையிலும் செல்லாது குழம்பி நின்றது. தாயாரின் உயிரைக் காப்பாற்ற வேண்டுவதே தன் கடமை என்றதைமட்டும் அவன் தீர்மானமாகக்கொண்டான். தன்னுடைய சினேகிதர்களோ நிமிடத்திற்கு நிமிடம் வந்து கூப்பிடுகிறார்கள்; தாயாரோ கண்டித்ததுடன் அவர்களின் நேசத்தினால் விளையும் கேட்டை விளக்கிக் காட்டியும் இருப்பதால் அவன் முகம் மாறுதலையே அடைந்தது. ஆதலால் இனி தான் பிச்சை எடுத்தேனும் நன்மார்க்கத்தில் ஒழுகுவதாகத் தாயாருக்குச் சத்தியம் செய்து கொடுத்தான். அதன் பிறகே பொன்னம்மாளுக்கு மனது சற்று நிம்மதியாயிற்று. 

ஒரு தினம் பொன்னம்மாள் தன் மகன் ஜீவனத்திற்கு வகை தெரியாமல் தவிப்பதைப் பார்த்துக் கண் கலங்கினாள்: எந்த விதம் ஜீவனத்திற்கு ஆதாரம் கிடைக்குமென்று ஏங்கினாள். தன் பாட்டனாரின் பூர்வீகமான பட்டிக்காட்டிற்குச் சென்றால் வயலில் உழும் வேலையாவது ஏதேனும் கிடைக் கமோ என்கிற எண்ணம் உண்டாகியது. ஆதலால் தாமோதரனையும் உடனழைத்துக் கொண்டு கால் நடையாகவே நடந்து அந்த கிராமத்தை யடைந்தாள். 

தன் பாட்டனாரின் வம்சமே விளங்காமல் பூண்டற்று விட்டதால் அவருடைய வீட்டில் அன்னியர் வாசம் செய்து கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் இவளுடைய பாட்டனார் நாட்டு வைத்தியம் செய்யும் முறையில் மிகவும் பிரக்யாதியுடன் விளங்கினாரெனினும் அவருடைய காலத்திலேயே அவருக் கேற்பட்ட கஷ்டம், நஷ்டம், தேக அசவுக்யம் முதலிய பல விதமான தொந்திரவால் வைத்தியத் துறையில் உழைக்கக் கூடாமல் போய்விட்டது. அதை அப் படியே விட்டுவிட்டார்கள்: அக்காலையில் பொன்னம்மாள் மிகவும் சிறியவளாகையினால் ஏதோ கனவு கண்டதுபோல நினைவிருந்தது. பொன்னம்மாளின் தாயார், பாட்டி முதலியோர்கள் சிறிய வயதில் இறந்து விட்டதனாலேயே பொன் னம்மாள் நாத்தியிடம் நலிய நேர்ந்தது. 

அந்த கிராமத்திற்குச் சென்றதும் பொன்னம்மாளுக்குத் தான் பாலியப் பருவத்தில் இந்த வீட்டிற்கு வந்திருந்ததும் விளையாடியதும் சகலமும் நினைவிற்கு வந்தது. அந்த வம்சத்திற்குத் தன்னை யொருத்தியைத் தவிர வேறு லாது போய்விட்டதே! கடன்காரர்களின் தொல்லையினால் கொஞ்சம் நஞ்சம் இருந்த பூமியும் வீடும் போய்விட்டதே! என்று எண்ணி விசனித்தாள். அவ்வீடு முற்றும் சுற்றிப் பார்த்தாள். 

தன் பாட்டனாரின் தகரப்பெட்டி யொன்று அங்கு ஓட்டையாகிக் கிடந்ததாக அவ் வீட்டுக்காரர்கள் கொண்டு வந்து “இதுதான் இந்த வீட்டுக்காரரின் பெட்டியாம்; அவருக்கு எதோ கெட்ட வியாதி வந்து இறந்துவிட்டாராம்! அவருடைய ஒலைச் சுவடிகளும், சில கந்தைத் துணிகளும் இதில் கிடக்கின்றன. இதை எடுத்து நெருப்பில் போட்டு நினைத்தோம்; அதற்குள் இவ்வூர் மணியக்காரர் அதைத் தடுத்ததோடு ‘கிழவரின் பேத்தி ஒருத்தி இருக்கிறாள்; அவளிடம் அதைக் கொடுப்பதுதான் நியாயம்’ என்று கூறினார். நீங்கள் யார், எங்கே இருப்பது என்கிற விவரமே தெரியாம லிருந்ததால் இதைப் பரண்மீது போட்டுவிட்டோம். குப்பைக்குக் கூட உதவாத சாமான்கள்தான் அதிலிருக்கின்றன. என்று” கூறினார்கள். 

அதைக் கேட்ட பொன்னம்மாவுக்கு மிக்க விசன முண்டாகிவிட்டது. ‘இப்படி வமிசமே இல்லாது போய் விடுமா! ‘ என்று வருந்தியவாறு அப்பெட்டியை அப்படியே எடுத்துக்கொண்டாள். அங்கு வேலைக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமோ என்று அலைந்ததெல்லாம் வீணாயிற்று. “இங்கிருப்பவர்களுக்கே வேலை யகப்படாமல் தத்தளிக்கையில் வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்கு எவ்விதம் வேலை கொடுக்க முடியும்? விளைவு வாசி ஒன்றுங்கிடையாது. கிஸ்தி கட்டுவதற்கும் திண்டாட்டமாக இருக்கிறது” என்று கூறியனுப்பிவிட்டார்கள். 

பொன்னம்மாள் தன் போதாக் காலத்தை எண்ணி மீண்டும் தன்னிருப்பிடம் வந்து சேர்ந்தாள். தான் கொண்டு வந்த பெட்டியை முழுதும் கிளறிப் பார்த்தாள். அதில் கிழிந்துபோன புத்தகங்களும், ஒலைச் சுவடிகளும் கிடந்தன! அவைகள் புராண விஷயமான புத்தகங்கள். அப்பெட்டியை முற்றுங் கிளறுகையில் அதன் அடிப்பாகத்தில் ஏதோ ஒரு விதமான மேடு தட்டுபட்டது. அதிலிருந்து அப்பெட்டியில் கள்ள அறை இருப்பதாகத் தெரிந்துகொண்டு தன் வீட்டுக் கதவைத் தாளிட்டுக்கொண்டு அதை நன்றாகக் கவனிக்கத் தொடங்கினாள். 

பெட்டியை நாற்புறமும் திருப்பியும் ஆட்டியும் பார்த்து அந்த கள்ள அறையைத் திறந்துவிட்டாள். அதற்குள் பணமிருக்குமோ என்கிற பேராவலுடன் திறந்தாள். இவள் எண்ணியபடி இல்லாது ஒரு கவரும் காகிதமும் இருந்ததைக் கண்டாள். பெரிய ஏமாற்றத்தை யடைந்து அதைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினாள். அது ஓர் பெரிய மகா யோகியினால் கூறப்பட்ட அவுடதங்கள் செய்யும் முறைகளும், மூலிகைகளின் பெயர்களும், அவை எங்கெங்கு கிடைக்கும் என்றதும் விவரமாக எழுதிய கடித மென்பதை யறிந்தாள்! அதைப் படித்ததும் முதலில் பொன்னம்மாளுக்குச் சந்தோஷமே உண்டாகவில்லை. “ஆமா! இந்த ஆகாத காரியத்திற்கு இத்தனை பந்தோபஸ்தும், கவரும் எதற்கு?” என்று வெறுப்புற்றுக் கூறியவாறு அப்படியே போட்டுவிட்டாள். பிறகு சற்று நேரங் கழித்து அதைக் கவனித்தாள். அதோடு மற்றொரு கடிதமிருந்தது. அது பின் வருமாறு:- 

“இந்த அவுடத முறைகள் சாமானிய அல்பர்களால் தயார் செய்யப்பட்டவையல்ல! இவை மகா யோகி யொருவரால் தயார் செய்தவை! அந்த யோகி இவற்றைத் தாமே கண்டுபிடித்துக் கையாண்டு வந்தார்! அவருடைய காலத்திற்குப் பிறகு இவற்றை யோர் அறிவற்ற பெண்மணி தன் வசமடைந்தாளாதலால் இவற்றின் மகிமையை உணராது அசட்டையாய்ப் போட்டு விட்டாள். நான் அக்காலை நாட்டு வைத்தியம் செய்து கொண்டிருந்ததால் அந்த அம்மாள் வீட்டிற்கு வைத்தியம் செய்யும் முறையில் சென்றேன்; அப்போது மேற்படி பரம அவுடதங்களின் முறைகளடங்கிய காகிதம் இருந்ததைக் கண்டு அம்மாளிடம் கேட்டு பெற்றுக்கொண்டு வந்தேன்! இந்த மருந்துகளைத் தயார் செய்வதற்குள் எனக்குப் பலவிதமான கஷ்டங்களும் நஷ்டங்களும் வந்துவிட்டன. நானாக ச்வாதீனமாய் எந்த காரியத்தையும் செய்ய முடியாத விதமாய் வியாதியும் வந்துவிட்டது. பிறரைக் கொண்டு இதைத் தயார் செய்ய எண்ணினேன். அந்த மனிதன் என்னையே மோசம் செய்துவிடவும், தானே அதன் லாபத்தை யடையவும் எண்ணினான். உடனே நான் கண் விழித்துக்கொண்டேன். எனக்கு ஒரு கால மில்லாவிட்டால் ஒரு காலத்திலாவது கஷ்டம் விடியாதா, அப்போது செய்துகொள்ளலாம் என்று நான் இக்காகிதத்தை உடனே ஒரு பெட்டிக்குள் கள்ள அறையில் பத்திரப்படுத்திவிட்டேன்! அதை என்னிடம் இருப்பதை யறிந்த மேல்படி ஆசாமி அதைத் தான் பெறுவதற்கு எத்தனையோ முயற்சி செய்தான். என்னைப் பல விதத்திலும் மிரட்டிப் பார்த்தான். ஒன்றிற்கும் நான் அசையவில்லை. இந்த முறை இந்தப் பாவியைத் தவிர வேறு யாரிடம் கிடைத்தாலும் எனக்குச் சம்மதந்தான். அவனுக்குக் கிடைக்கக் கூடாதென்று எனக்குத் தோன்றிவிட்டது. அவனால் எனக்கு எப்போது என்ன தீங்கு நேருமோ என் பயம் என்னைச் சூழும்படியாக அவன் செய்துவிட்டான். ஆதலால் இக்கடிதத்தையும் எழுதி வைக்கிறேன். இது யாரிடம் அகப்பட்டாலும் என் சந்ததியாரில் யாரேனும் இருப்பின் அவர்களிடம் சேர்ப்பிக்கவும். ஒருவருமே இல்லையெனில் இதைக் கண்டு எடுக்கும் யாராயினும் இந்த மருந்துகளைத் தயார் செய்யும் முன்பு “ஜெயவீர யோகியார்” என்றவரே இதைக் கொடுத்தவராதலால் அவருடைய ஞாபகச் சின்னமாக அவரை ஆவாஹனம் செய்து, பூஜை பண்ணி அதற்கு மேல் ஆரம்பித்துச் செய்யவேண்டும். இது முக்கியமான வேலை என்பதை மறக்கவேண்டாம். எனக்கு அதற்குள் சரியாகிவிடின் நானே இவற்றைச் செய்வதில் தடை இல்லை. ஆண்டவனருள் எப்படியோ! 
சாமிநாதன் வைத்தியன்.” 

என்றதைப் படித்ததும் பொன்னம்மாளுக்கு ஒரு புதிய உணர்ச்சி வந்தது. அவளுடைய சிறிய பிராயத்தில் கண்ட பாட்டனாருடைய உருவம் எதிரில் தோன்றி காட்சி கொடுப்பதுபோன்ற தோற்றம் உண்டாகியது. அவளையறியாது பழங்கதைகளை எண்ணியும், கடிதத்தைப் படித்த மனோ வேகத்திலும், உருவத்தைக் கண்ட உணர்ச்சியிலும் அப்படியே கலக்கமும், குழப்பமும் அடைந்து ப்ரமைகொண்டு விழுந்துவிட்டாள்.

– தொடரும்..

– ஜெயஸஞ்ஜீவி (துப்பறியும் நாவல்), முதற் பதிப்பு: 1934, ஜகன்மோகினி காரியாலயம், சென்னை. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *