வினை – விதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 13, 2024
பார்வையிட்டோர்: 246 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அழகேசனுக்கு, ஆண்டுக்கணக்கில் உண்டு உடுத்து நடமாடிய அந்த அறை, இப்போது அசல் சிறை போலவே தோன்றியது. அவசர அவசியச் சூழல் போட்ட தடுப்புக்காவல் அறைபோல், அதிலிருந்து தப்பிக்க நினைத்தவர்போல் அங்குமிங்குமாய் சுற்றினார். சுவரோடு கவராக உள்ள அந்த டெலிபோனையே உற்றுப் பார்த்தார். கருநாகம் போல் வளைவு வளைவான கருப்பு ஒயர்கள் கவ்விப் பிடித்த அந்த டெலிபோனுக்குள், தனது மகன் ஒளிந்து இருப்பது போலவும், எப்போது வேண்டுமானாலும் அவன் வெளிப்படலாம் என்பது போலவும் அவருக்கு ஒரு பிரமை.

அழகேசன் பிரமை கலைந்தார். வழக்கமாக இந்த கிழமையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஒலிக்கும் டெலிபோன், இன்னும் ஒலி க்கவில்லை. ஒருவேளை, டெலிபோன் ‘என்கேஜ்டாக’ இருக்குமோ என்று சந்தேகப்பட்டு, அதன் குமிழை எடுத்து, காதிற்குக் கொண்டு போய், அதன் டயலிங்குரலை சரிபார்த்தார். பிறகு, அந்தக் குமிழை, மினி அம்மிபோல் இருந்தடெலிபோன் அடிவாரக்கருவியில் ஒரு குழவி போல பொருத்தினார். அப்புறம், அடியற்ற மரமாய் கட்டிலின் விளம்பில் இருந்து உள்நோக்கி நகர்ந்து, கால்களை நீட்டிப்போட்டு தலையை சுவரில் சாய்த்தார்.

அழகேசன், தனது வாழ்க்கையிலேயே இப்படி அந்த டெலிபோனுக்கு, எப்போதும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. ஒப்புக்கு பார்ப்பவர். இப்போது அதை மட்டுமே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்தச் சமயம் பார்த்து, டெலிபோன் ஒலித்தது. அது வெளிநாட்டுச் சத்தம் போல் ஊளையிடாமல், மணி மணியாய் அடித்தது. அதனால் அவநம்பிக்கை கொண்டாலும், ஒருவேளை, அமெரிக்கக் குரல் மாறியிருக்கலாம் என்ற அனுமானத்தோடு, வேக வேகமாய் எடுத்தார். ஆனாலும் ஏமாந்தார். அவர் மனைவிக்கு எங்கிருந்தோ ஒரு ‘கால்’. எதிர்முனைக்கு கேட்கும்படி ‘சோ’ போட்டார். அது, அந்த முனைக்காரிக்கு முத்தம் கொடுப்பதுபோல் ஒலித்திருக்க வேண்டும். அவள் வீட்டில் இல்லை. எப்போ வருவாங்கன்னு சொல்லமுடியாது’ என்று கூசாமல் பொய் சொன்னார்.

மகனிடம் பேசுகிறார் என்ற அனுமானத்தில், அவருக்கு ஒத்தாசையாக உள்ளே வந்த மனைவியை கையமர்த்தி, ” அந்தக் ‘கால்’ வந்துடட்டும்…” என்றார். அவளை, தோளை அழுத்தி உட்கார வைத்தார். பிறகு இன்னொரு டெலிபோன் சத்தம். ஓடிப்போய் பற்றப் போனார். உடனே அந்தம்மா, “டெலிவிஷன்ல வர்றடெலிபோன்” என்று சொல்லி, அந்த தொடரின் பெயரையும் சொன்னாள். வேறொரு சமயமாக இருந்தால், அந்தம்மாவின் பேசிய வாய் வாயடைத்துப் போகும்படி ஏசியிருப்பார். ஆனால் இப்போதோ, இவர், ஓடிப்போய் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒரு குமிழைத் திருகி, அதன் வாயைத்தான் அவரால் அடைக்கமுடிந்தது.

அழகேசனும் , மங்கையர்க்கரசியும் அந்த டெலிபோனையே அதிசயித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆயிற்று… ஒரு மணி நேரம் உற்றுப் பார்த்தாயிற்று. வழக்கமாக பேசுகிறவர்கள் கூட, பேசவில்லை. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்தம்மா, மடியில் வலது கையை ஊன்றி, உள்ளங்கையில் முகம் போட்டு, அச்சில் பொருத்தப்பட்ட பூமி உருண்டை பொம்மை போல் முகத்தை வைத்துக் கொண்டாள்.

அவர், “என்ன மங்கை இப்படி….?” என்று இழுத்து இழுத்துப் பேசினார். இந்த மாதிரி மனைவியிடம் அந்தக் காலத்தில் கூட, இப்படி அவர் குழைந்ததில்லை. உடனே அந்தம்மா, சுரைக்காய் கூடாய் சுருங்கிப்போன உடம்பை நிமிர்த்தியபடியே, ஒரு யோசனை சொல்ல முற்பட்டபோது, அழகேசன் பொத்தாம் பொதுவாய்ப் பேசினார்.

“ஆயிரம் இருந்தாலும், கவர்மென்ட் வேலை… கவர்மென்ட் வேலைதான் மங்கை. இதனாலதான் கழுதையை மேய்ச்சாலும், சர்க்கார் கழுதையா மேய்க்கணுமுன் னு சொல்லுவாங்க. பதவியிலி ருந்து ஓய்வு பெற்றதும், பத்து லட்சம் ரூபாய் வரைக்கும் சொளையாய் கிடைத்திருக்கும். மாசா மாசம் பென்ஷனும் வந்திருக்கும். ஆறாயிரம் ரூபாய்ல ஒரு ஹெல்த்கார்டு வாங்கிட்டால், அரசாங்க ஆஸ்பத்திரியிலேயே இலவச சிகிச்சை. மகன், மகள் பக்கத்தில் இல்லாத நாம், சாகும்போது கூட, அனாதையாச் சாகாம, டாக்டருங்க… நர்சங்க மத்தியில் சாகலாம். கடைசியில் புத்தியைக் கடன் கொடுத்துட்டேன்.”

மங்கையர்க்கரசிக்கு, அவர், தன்னைக்குறிவைப்பது புரிந்து விட்டது. முன்பெல்லாம் தாம் தூம்’ என்று குதித்திருப்பார். இப்போது அவர் நாக்கு கூட சுழல மறுப்பதை அறிவாள். அதேசமயம், தன்னையும் அவள் நொந்து கொண்டாள்.

கணவருக்கு அடங்கிப் போகவேண்டிய காலத்தில், இவரும் ஒரு அரசாங்க வேலையில் தான் இருந்தார். மகளும் மகனும் கல்லூரிப் படிப்புக்கு, திரளப்போன சமயம். இவருக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் பிடிப்புப் போக வரும். இந்தச் சமயத்தில், அலுவலகத்தில் இவரோடு தொடர்புகொள்ள வேண்டிய அவசியத்தில் இருந்த அரசு வாடிக்கைக் கம்பெனி ஒன்று, இவரது நேர்மையையும் திறமையையும் கண்டு, பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு நல்ல வேலையை கொடுக்க முன்வந்தது.

சம்பளம் ஐந்து மடங்கு பெருகப் போவதால் ஏற்பட்ட சபலம், அவரை, இந்தம்மாவிடம் ஆலோசனை கேட்க வைத்தது. இவளும், பையனை பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டியதையும், மகளை படிப்பின் மூலமோ அல்லது படித்த ஒரு மாப்பிள்ளை மூலமோ நல்லபடியாய் கரையேற்ற வேண்டிய அவசியத்தையும் கணக்கில் எடுத்து, அவரை கம்பெனி வேலையிலேயே சேரும்படி செய்துவிட்டாள். கை நிறையச் சம்பளமும், பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுகிற வசதியும் குடும்பத்திற்கு வந்ததில் அவருக்கும் ஆரம்பத்தில் மகிழ்ச்சிதான். ஆனாலும், அந்தக் கம்பெனி எல்லா அலுவரையும் போல் இவரையும், எந்தச் சமயத்திலும் கழுத்தைப் பிடித்துத் தள்ளலாம் என்கிற நிலைமை. கம்பெனி அவருக்கு வேலை போட்டுக் கொடுத்தது கூட, அந்த அரசாங்க அலுவலகத்திலிருந்து, அவரை நீக்குவதற்கு செய்யப்பட்ட தந்திரமாகவும் தோன்றியது. குறிப்பிட்டபடி சம்பள உயர்வும் கொடுக்கவில்லை.

இந்த வஞ்சக வலையிலிருந்து மீள முடியாமல், அழகேசன், சிலந்தி கவ்விய பூச்சியாய் துடித்தார். எப்படியோ ஒருவழியாய் கம்பெனி பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற பிறகுதான், மிச்சமாக ஒரு பைசாகூட தேறவில்லை என்பது அவருக்குப் புரிந்தது. வாயைக் வயிற்றைக் கட்டி சொந்தமாக கட்டிய வீட்டு வாடகையை வைத்து, வயிற்றுப் பிழைப்பை ஓட்டி விடலாம் என்றாலும், நல்லது கெட்டதுக்கு அமெரிக்க மகன் கையை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம்.

இந்தக் கட்டாயத்தின் நிர்ப்பந்தத்தால், துக்கத்தை உருவகப்படுத்துவதுபோல் தோன்றிய அந்தக் கருப்பு டெலிபோனை அழகேசன் பரிதாபமாகவும், மங்கையர்க்கரசி கோபங் கோபமாகவும் பார்த்தார்கள். ‘கோளாறு டெலி போனில்தான் இருக்கும்; மகனிடம் இருக்காது’ என்பது அவள் கட்சி. ‘மகனிடம் மட்டுமே கோளாறு என்பது அழகேசன் கட்சி. இப்படியாக இரண்டு மணி நேரம் கட்சி பிரிந்து ஒன்றாக இருந்தவர்களுக்கு ஒன்று புரிந்துவிட்டது. அன்று இந்தியச் சனி. அவனுக்கோ, அமெரிக்க ஞாயிற்றுக்கிழமை. இவர்களுக்குப் பகல். அவனுக்கு இரவு. பேசுவதாக இருந்தால், இந்நேரம் பேசியிருக்க வேண்டும். இப்போது மனைவியோடு தூங்கிக் கொண்டிருப்பான். ஆனாலும் அவனிடம் பேசியாக வேண்டுமே….

மங்கையர்க்கரசி, கணவர் மறுத்துவிடக்கூடாதே என்ற பயத்தோடு ஒரு யோசனை சொன்னாள்.

“நாமே போன்ல பேசிடுவோமே…?”

“எப்படிம்மா முடியும்? நம்மக்கிட்ட எஸ்.டி.டி. கூட கிடையாதே.”

“உங்களுக்கு ஞாபகம் இருக்குதா? ஜோசியம் குறித்துக்கொடுத்த கல்யாணத் தேதியை அவன் கிட்ட சொல்றதுக்காக, அடுத்த தெருவுல ஐ.எஸ்.டி. வைத்திருக்கிற சின்னத்தம்பிகிட்ட பேசி, அவன் தன்னோட டெலிபோன் மூலம் கனெக்ஷன் வாங்கி உங்களுக்குக் கொடுத்தானே…”

அழகேசன் மனைவிக்குப் பதில் ஏதும் சொல்லாமல், சின்னத்தம்பிக்கு டெலிபோனை சுழற்றினார். பல சுற்றுகளுக்குப் பிறகு, இறுதிச் சுற்றாக சின்னத்தம்பியின் குரல் கேட்டது. இவரின் கோரிக்கைக்கு, அவன் உடன்பட்டான். உடனே அழகேசனும், மகனிடம் எப்படிப் பேசுவது என்று மனதில் ஒத்திகை நடத்தினார். அந்தக்காலத்தில், பிள்ளைகளையும் மனைவியையும் திட்டும்போது, இப்படி ஒத்திகை பார்க்காதவர்தான். இப்போதோ எமனுக்கு அடமானம் வைக்கப்பட்டவர்போல் தவித்தார். பிள்ளைகளுக்கும் அவர்களைப் பெற்றவளுக்கும் பிச்சை கொடுப்பதுபோல் எக்காளமாய் பணம் கொடுத்தவர், இப்போது தொழிலுக்குப் பழக்கப்படாத பிச்சைக்காரன் போல் கூசினார்.

இதற்குள், சின்னத்தம்பியின் டெலிபோன் குரல் கண்டங்களைக் கடந்து, அமெரிக்காவில் கிடக்கும் இளங்கோவின் குரலை இழுத்துப் பிடித்து, இந்த வீட்டு டெலிபோனுக்குள் ரசமாற்றம் செய்தது. ஆனாலும், ஒலித்துவிட்டு மீண்டும் ஊமையானது. அது, மீண்டும் ஒலிக்கும் என்பதை அனுபவத்தால் தெரிந்து வைத்திருந்த மங்கையர்கரசி, கணவருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தாள்.

“அவனோட ஒய்புதான் மொதல்ல எடுப்பாள். அவள்கிட்ட நான் பேசத் தயராய் இல்ல. போன தடவை, அவள் பேசின டோனே சரியில்ல. அமெரிக்கா போனாலும், மருமகள் என்கிறவள்களோட புத்தி மாறாது போலிருக்கு. அப்படி என்ன பெருசாய் கேட்டேன்? அமெரிக்காவுல லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிற என் பையனுக்கு, கல்யாணச் செலவையாவது ஏத்துக்கங்கன்னு சொன்னேன். அப்படியும் அவளோட அப்பா, அந்த செலவையும் நம்ம தலையில் கட்டிட்டதால் அவரை லேசாய் சத்தம் போட்டேன். அதை மனசில கருவிக்கிட்டு, ஒங்க மருமகள், என்கிட்ட பேசுற டோனே திமிராய் இருக்குது.”

“அதுக்கு நான் என்னம்மா செய்யமுடியும்? நானே நொந்து போயிருக்கேன்.”

“அதுக்கு ஒரு வழி இருக்கு. டெலிபோன்ல அவள்தான் முதலி ல் வருவாள். அவள் கிட்ட பேசிட்டு, நம்ம பையன் லைன்ல வரும்போது, எங்கிட்ட கொடுங்க. நீங்களும் அவன்கிட்ட ஏதாவது பேகங்க. அவன் குரலைக் கேட்டதும், ‘இந்தா ஒன் அம்மான்னு , ஒங்களுக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரி வழக்கமா, டெலிபோனை எங்கிட்ட கொடுப்பீங்களே… அப்படி கொடுக்காமல், அவன்கிட்ட ரெண்டு வார்த்தை நல்லபடியாய் பேசுங்க.”

அழகேசன், சுருண்டு போனார். மனைவியை மலங்க மலங்கப் பார்த்தார். மாணவியாய் நடந்தது கொண்டவள், ஆசிரியையாய் நடந்து கொள்வதில் லேசான வருத்தம். ஆனாலும், அவள் சொல்வது நியாயம் என்ற யதார்த்தம். மீண்டும் டெலிபோன்குரலிட்டது. அவர், டெலிபோனை தயங்கித் தயங்கி எடுத்தார். அது காதில் உரசியபோது, அவரது மகனே ஹலோ என்றான். அசல் அமெரிக்கன் கூட அப்படி உச்சரித்திருக்கமாட்டான். உடனே இவர், “நான்தாண்டா அப்பா பேசுறேன்” என்றார். அதேவேகத்தில் அவனும் கேட்டான்.

“சொல்லுங்கப்பா”

‘எப்படி இருக்கீங்கப்பா’ என்று எல்லா பிள்ளைகளையும் போல கேட்காமல், அவன் அப்படி பிசினஸ் லைக்காய் கேட்டதில், அழகேசனுக்கு சொற்தடை ஏற்பட்டது. வாலில்லாத ஒரு பூச்சி, தொண்டைக்குள் போவது போலவும், தலையில்லா ஒரு புழு வாய்க்குள் நெளிவது போலவும் தோன்றியது. ஒரு அந்நியனிடம் பேசுவதுபோல் சொல்லுங்கப்பா’ என்று சொல்கிறவனிடம், சொல்லும்படியாய் என்ன பேசமுடியும்? ஆனாலும், அவர்சொல்லி வைத்தார். முன்பின் பழக்கமில்லாதவர்கள், அறிமுகம் செய்யப்படும் போது, பொதுப்படையாக பேசுவோமே – சீதோஷ்ண நிலை, பந்த ஊழல், கிரிக்கெட் என்று – அப்படிப்பட்ட குரலில் பேசுவதற்காக பேசுவதுபோல் பேசினார். அது, ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்பதற்கு முன்பு, குடு குடுப்பை ஆட்டுவானே, அப்படித்தான் அவருக்கு உறைத்தது.

“வேலையெல்லாம் எப்படிடா இருக்குது?”

அமெரிக்க மகன் பதிலளிக்க முயற்சித்தபோது, அவனை இருமல், மொழி மறித்ததுபோல் தோன்றியது. அந்த ஒரு கணத்தில் அழகேசனின் மனம், வாய்க்காலை உடைத்த நீர்போல, பயிர்களுக்குப் பாயாமல், காய்ந்து போன நிலத்தின் இடுக்குகளில் தாவுவதுபோல் தோன்றியது.

அப்போது, கணிப்பொறி பட்டப் படிப்பில், தனித்துவமாய் மதிப்பெண்கள் வாங்கிக் கொண்டிருந்த அந்தக் காலத்து இந்தியனான இளங்கோவை, ஒரு தனியார் கம்பெனி, கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி, எடுத்த எடுப்பிலேயே பதினைந்தாயிரம் சம்பளம் வழங்க முன்வந்தது. நாட்டில் ஐந்தாண்டுத் திட்டம் மெள்ளமாக போனாலும், அதே காலக்கட்டத்தில் இவன் சம்பளத்திட்டம், நாற்பதாயிரத்தை தொடும் என்றும் தெரிவித்திருந்தது.

அழகேசன், அந்த நல்ல செய்தி வந்த, அந்த ஒரு நாளில் கடுகடுப்பாக இல்லை. யாரையும் எடுத்தெறிந்து பேசவில்லை. பிள்ளையை, பெற்றவன் போல் பார்த்தார். ஆரம்பத்தில் வாமனமாய்க் குழைந்து, இப்போது விகவரூபம் எடுத்திருக்கும் தனது கம்பெனியை இனிமேல் எதிர்த்துப் பேசலாம் என்ற நம்பிக்கை. சொந்தமாக ஒரு வீடு கட்டி, ஓய்விற்குப் பிறகும் ஒரு வீட்டுக்கார பாஸோ அல்லது மேடமோ இல்லாமல் நிம்மதியாகக் காலத்தைக் கழிக்கலாம் என்ற மனக்கணக்கு . கூடவே, பிளஸ் டூ முடித்த மகளை, இவனை மாதிரி ஒருகணிப்பொறி என்ஜினீயரின் தோளில் ஏற்றி, மகளை ஆனந்தப் பரவசமாய் பார்க்கலாம் என்ற இன்னொரு மனக்கணக்கு. ஆனால் இளங்கோ, அத்தனை கணக்குகளையும் பொய்மைப்படுத்த முயற்சித்தான். ஜி.ஆர்.ஏ. பரீட்சை எழுதி அமெரிக்காவில் மேற் கொண்டு படிக்க தகுதி பெற்றுவிட்டானாம். மூன்று அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்திருக்கிற தாம். ஆனாலும் உதவிப்பணம் கிடைக்குமா என்பதை உடனடியாய் சொல்ல முடியாதாம். இவனே, பணத்தோடு போகவேண்டுமாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஆறுலட்சம் ரூபாய் தேவைப்படுமாம்.

அழகேசன், அவனிடம் நயந்து பேசினார். உள்நாட்டு வேலையே உசத்தி என்றார். இதையே, மனைவியையும் பேசும்படி கூறினார். மங்கையர்க்கரசியும் பேசினாள் – மகனுக்கு ஆதரவாய். வங்கிக் கடன் வாங்கலாமே’ என்று வக்காலத்து வாங்கினாள். அழகேசன், மனைவியை மட்டுமல்ல, மகனையும் நோக்கி கை ஓங்கினார். கனவுகள் பொய்த்த நனவுத் தளத்தில் அவர், ருத்ரதாண்டவமாய் குதித்தார். வங்கிக்கடன் வாங்கப்போவதில்லை என்று தனது சாவின் மீது சத்தியம் செய்தார். ஆனாலும் பயல், கடப்பாரையாய் கிடந்தானே தவிர அசையவில்லை. ஒரு மாதத்தில், அவர் கண் முன்னாலேயே பணக்கார நண்பர்கள் மூலமும், அம்மாவின் மௌனச் சம்மதத்தின் அடிப்படையிலும், அமெரிக்கா போய்விட்டான். எம்.எஸ். படிப்பையும் முடித்துவிட்டு, இப்போது ஆறாயிரம் டாலர் மாதா மாதம் வாங்குகிறான்.

அழகேசன், அவன் அமெரிக்கப் படிப்பிற்கு ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல் இருந்தோமே என்று இப்போது ஒரு துரும்பாய் சிறுமைப்பட்டார். அவனது அமெரிக்க வழியில், சாலை மறியல் செய்து, தாதாவாய் நடந்துகொண்ட தந்தைக்கு, மகனின் வேலையைப் பற்றிக் கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது, என்றும் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டார். இந்தச் சமயத்தில் அழகேசனின் காலமான தந்தை, இவரின் கண்களில் வந்து விரலாட்டுவதுபோல் தோன்றியது. சுழலப்போன நாக்கை பிடித்திழுப்பதுபோல் ஒரு வலி. பெற்ற தந்தையை சரியாக கவனிக்க முடியாத, தான், மகனிடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்று மனதுக்குள்ளேயே ஒரு கேள்வி.

அந்தக் கேள்வி விடையில்லாமலே முற்று பெறும்படி, அமெரிக்க மகன் ஏதோ பதிலளிக்கிறான். இவருக்கு, அவன் சொற்கள் கேட்கிறதே தவிர, அவற்றின் பொருள் புலப்படவில்லை . சர்வ வல்லமையுள்ள மேலதிகாரியிடம் பேசும்போது, எப்படிக் கூனிக் குறுகி நிற்பாரோ, அப்படி நின்றார். அப்போது வேர்த்தது போலவே, இப்போதும் வேர்த்தது. இது புரியாமல் அமெரிக்க மகன், அப்புறம்பா…’ என்றான். அழகேசனுக்கு ஒரு சந்தேகம். அப்புறம் அப்பா’ என்கிற வார்த்தைகளை ஒட்ட வைத்துப் பேசுகிறானா அல்லது வேலைக்காரனிடம் பேசுவதுபோல் பேசுகிறானா என்கிற சந்தேகம். ஆனாலும் தான் பேசுவது தனக்கே புரியாமல் பதிலளித்தார்.

“அப்புறம் எப்படிடா பொழுது போகுது?”

அந்தக் கேள்வியை வரவேற்பதுபோல், அவன் உற்சாகமாக, நயாகரா நீர்வீழ்ச்சி, ஜிம், பனிச்சறுக்கு, தமிழ்ச்சங்கம் போன்ற வார்த்தைகளை கொட்டிக் கொண்டே இருந்தான். அழகேசனுக்கு மேலும் ஒரு சந்தேகம். ‘ஒங்களால் கொடுக்க முடியாததை நான் அனுபவிக்கிறேன்’ என்று குத்திக் காட்டுகிறானோ…?

அதற்குள், அந்த அமெரிக்க மகனுக்கு இன்னொரு தொடர் இருமல்.

தந்தைகாரருக்கு, இன்னொரு நினைவு பூதாகரமாய், அவர் அகத்தையும் புறத்தையும் ஆக்கிரமித்தது.

இளங்கோ ஒன்பதோபத்தோ படித்த காலம். பள்ளிக்கூடத்தின் சார்பில் சுற்றுலா போகவேண்டுமாம். அவனது கல்வி நிலையம் ‘கொழுத்த பள்ளிக்கூடம் என்பதால், அவர்கள் கேட்ட தொகையிலும்

கொழுப்பேறியிருந்தது. அப்போதுதான் அழகேசன், ஜி.பி.எப்., தீபாவளி அட்வான்ஸ், ஸ்கூட்டர் அட்வான்ஸ், பொங்கல் அட்வான்ஸ் என்று அத்தனை அட்வான்சுகளுக்கும், அசல் சம்பளத்தில் பாதியை பறிகொடுத்த நேரம். அந்த இயலாமையில் வீட்டுக்கு வந்தவர், அங்கே இருந்த இளைத்தவர்களிடம் கோபமாக எகிறினார். அந்தச் சமயம் பார்த்து, மகனின் சுற்றுலா தேவையை, இதே இந்த மங்கையர்க்கரசி உணர்த்தியபோது, இவர், தகப்பன் கோவணத்தில் இருக்கிறானாம்; மகன் இழுத்து மூடப்பா என்றானாம்’ என்று ஒரு கிராமப் பழமொழியை இளக்காரமாக சொன்னார். உடனே இந்த இளங்கோ, அப்போது அப்பாவிடம் இருந்து வணம் வாங்கிக் கொடுப்பதாக வாக்களித்த அம்மாவை முதுகைப் பிடித்து தள்ளினான். வலிக்காத தள்ளல். இந்தம்மா கூட சிரித்தாள்.

என்றாலும் இந்த அழகேசனோ, பையன் மேல் பாய்ந்தார். ‘அம்மாவை தள்ளுவியா… தள்ளுவியா…’ என்று அவனை புரட்டி எடுத்தார். தடுக்க வந்த மனைவியை கீழே தள்ளிப்போட்டார். மீண்டும் மகனை அடித்தார். அவர் அடித்த தோரணை, அம்மாவை அப்படி தள்ளியதற்காக இல்லை என்பது போலவும், அவன் சுற்றுலாவிற்கு போகக்கூடாது என்பது போலவும் தோன்றியது. அதுவரை, அவர் வீட்டுக்குள் வரும்போதும் போகும்போதும், அவர் இடுப்பைக் கட்டிக்கொண்டு ‘அப்பா அப்பா’ என்று கொஞ்சுகிறவன்தான்.

அன்று முதல் ஒதுங்கிக் கொண்டான். அவர் சாலையில் வரும்போது, எதிர்ப் பக்கமாக நடப்பான். வீட்டுக்குள் இருக்கும்போது, ஒரு அறைக்குள் முடங்கிக் கொள்வான். அவருக்கும் அலுவலக நெருக்கடிகளில், இது ஒரு பெரிய காரியமாகத் தெரியவில்லை .

இந்தப் பகையை மறந்து, அவன் பழையபடி மகனாகப் போனவேளை. வீட்டுக்கு முன் உள்ள மைதானத்தில், பொழுது போக்காக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த அழகேசன், அவனிடம் ‘எலக்ட்ரிசிடி பில் கட்டிட்டியா? என்று நேரிடையாகக் கேட்டார். காலையில் அவன் அப்படிக் கட்டவேண்டும் என்று மனைவியிடம் பணம் கொடுத்துவிட்டுப் போனவர். தந்தையோடு, நான்காண்டு களாக பேச மறுத்து, அதேசமயம் மனதுக்குள் மருவிக் கொண்டிருந்த இளங்கோப்பையன், தந்தையிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்த மகிழ்ச்சியில் – ஒருவேளை, அவரே முதலில் பேசிவிட்ட வெற்றிப் பெருமிதத்தில், அம்மா பணம் தரல. அதனால்…….’ என்கிற நான்கு வார்த்தைகளை தந்தையிடம் பேசுவதாக தனக்குள் பேசிக்கொண்டு பின்னர், ‘கட்டல’ என்று ஒற்றைச் சொல்லை உதிர்த்தான். அழகேசன், அது இல்லாத ஈசனானார். மகன் மேல் பாய்ந்து, அவனைக் கீழே தள்ளினார். அவன் சட்டைக் காலரைப் பிடித்து தூக்கி நிறுத்தி, குஸ்திப் பயில்வான்கள் துணியிடப்பட்ட மணற்பொம்மைகளை குத்துவார்களே, அப்படிக்குத்தினார். அவன் கிரிக்கெட் ஸ்டெம்ப் மீது விழுந்தான். அந்தக் குச்சிகள் போலவே கிடந்தான். மங்கையர்க்கரசி ஓடி வந்தாள். கணவன், பகிரங்கமாகத் தன்னையும் ஏசலாம் என்பது தெரிந்தும், அவரை ஆங்காரமாகப் பார்த்தாள். ‘இது ஒரு தகப்பன் செய்கிற காரியமா?’ என்றும் கண்களில் புனலும், வாயில் அனலும் கனக்கக் கேட்டாள்.

பழைய நினைவுகளில் மூழ்கி, முத்தில்லாத சொத்தைச் சிப்பிகளை எடுத்துக் கொண்டிருந்த அழகேசனை, மகன் எதிர்முனையில் உசுப்பினான். ‘எதாவது விசேஷம் உண்டாப்பா…?’

அழகேசன், குழந்தையாய் குழைந்தார். என்ன விசேஷம்… மகனின் தயவு இல்லையென்றால், இழவு விக்ஷேந்தான். எப்படியோ கேட்கப்போனார். அந்தச் சமயம் பார்த்து, ஏற்பது இகழ்ச்சி என்று, வள்ளல்களிடம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட ஒளவையின் பள்ளிக்கூட வாசகம் இப்போது மரண வாசகமாக ஒலித்தது. ஆபத்துக்கு பாவமில்லையென்று , பாவப்பட்ட மனிதராய் சொல்ல வேண்டியதை சொல்லப் போனார். அதற்குள், தோழனோடாயினும் ஏழமை பேசேல்’ என்று அதே ஒளவை அவரது வாயைப் பொத்துகிறாள். ஆனாலும், அவர் பேசுகிறார். ‘எனக்கு’ என்கிற வார்த்தை உனக்கு’ என்று துவங்குகிறது. பைபாஸ் சர்ஜரி’ என்கிற வார்த்தை சர்ஜரிபைபாஸ் ஆகிறது. ஆபரேஷன்’ என்கிற வார்த்தை ‘ஆப் ஆகிறது.

அவரது தடுமாற்றத்தை கண்ட மங்கையர்க்கரசி, அவரது நடுங்கும் கையில், நடுக்கமெடுத்த டெலிபோனை லாகவமாய் பற்றினாள். கட்டிலில் உட்கார்ந்தபடியே மகனிடம், உரிமைக்குரல் கொடுத்தாள்.

“ஏண்டா … என் சுகம் கிடக்கட்டும். நீ ஏண்டா இருமுற? டாக்டர்கிட்ட போக வேண்டியதுதானே. இங்க மாதிரி முடியாதா? முன்கூட்டியே சொல்லிட்டுதான் போகணுமா. என்ன அமெரிக்காவோ…. சரி கஷாயம் வச்சாவது குடிக்கிறது..? இதுகூட ஒன் பொண்டாட்டிக்கு வச்சுக் கொடுக்க தெரியாவிட்டா என்னடா அர்த்த ம்…”

மகன்காரன், மீண்டும் இருமியபோது, தாயக்காரி, கணவனை பார்த்து பாவம் பிள்ளைக்கு உடம்புக்கு சரியில்லயாம்’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் மகனிடம் உரையாடினாள்.

“ஏண்டா …. அப்பாகிட்ட, ‘சுகமா இருக்கீங்களான் னு கேட்டியா? அவர் சுகமாய் இல்லாததுனாலதான் இப்படிப் பேசுறேன். அவருக்கு இருதயத்துல கோளாறு. பைபாஸ் சர்ஜரி செய்யணும். இரண்டு லட்ச ரூபாய் தேவையாம். என்னடா இது… எவ்வளவு டாலர் அனுப்பணுமுன்னு கேட்கிற…? நீ படிச்சவன்தானா? நீயே டாலர்ல கணக்குப் போட்டுக்கோ. ஆமாம், உடனே அனுப்பு. உன் பெண்டாட்டிய நான் விசாரிச்சதாச் சொல்லு என்னடா…. அப்பா உடல்நிலையைப் பற்றி விவரமாச் சொல்லணுமா?”

கட்டிலில் உட்கார்ந்திருந்த மங்கையர்க்கரசி. தலையை நிமிர்த்தி நிமிர்த்தி, பின்னர் கம்பீரமாய் எழுந்து மகனிடம் விலாவாரியாய் விளக்கிக் கொண்டிருக்கிறாள். அவளது ஒவ்வொரு அங்குல நிமிர்வும், அழகேசனின் மேனியை ஒவ்வொரு அடியாய் தாழ்த்திக் கொண்டிருக்கிறது.

– வாசுகி 1995

– தராசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, கங்கை புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *