பகைவர்கள் செய்த உதவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 19,805 
 

மலையடிவாரத்தில் இருந்த அந்த ஊரின் ஒதுக்குப்புறமாய் அழகான ஒரு குளம் இருந்தது. அந்த குளத்தில் எண்ணற்ற மீன்களும், தவளைகளும், மற்றும் பல வகையான பூச்சி இனங்களும் வாழ்ந்து வந்தன.

அந்த ஊர் மலை அடிவாரத்தில் இருந்ததால் குளமானது மலை அடிவாரத்தை ஒட்டியே இருந்தது. அதனால் மழை காலங்களில் மலையிலிருந்து பெரும் நீர் இந்த குளத்திற்குள் பாய்ந்து குளத்தை நிரப்பி விடும். அது மட்டுமல்ல, வெயில் காலங்களில் கூட அந்த மலையில் இருக்கும் “ஊற்றிலிருந்து” கொஞம் கொஞ்சமாய் தண்ணீர் அந்த குளத்திற்குள் வந்து விழுவதால், பெரும்பாலும், அந்த குளம் வற்றுவதில்லை. இதனால் அங்கு வசிக்கும் உயிரினங்கள் நிம்மதியாய் வாழ்ந்து வந்தன.

அந்த குளத்தை நம்பி அதை சுற்றிலும் விவசாய நிலங்கள் இருந்தன. அந்த குளத்தில் தண்ணீர் எப்பொழுதும் இருப்பதால் நிலத்தடி நீர் நன்கு ஊறி அந்த ஊரில் இருக்கும் கிணறுகளில் கூட தண்ணீர் வற்றாமல் இருக்கும்.அதனைக்கொண்டு குளத்திற்கு சற்று தள்ளி இருக்கும் விவசாய நிலங்கள் கூட பாசன வசதிகளை பெற்று கொள்ளும்.

அந்த குளத்தின் கரை ஓரங்களில் எப்பொழுதும் கொக்குகளும், நாரைகளும் ஒற்றைக்காலில் தவம் இருந்து கரை ஓரம் ஒதுங்கி வரும் மீன்களை லபக்கென கவ்விக்கொண்டு பறந்து விடும். அதனால் எப்பொழுதும் குளத்தை சுற்றி பறவைகள் இருந்து கொண்டே இருக்கும்.

ஒரு நாள் அந்த குளத்தருகே நான்கைந்து பேர் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

இந்த இடம் பூராவையும் வாங்கிட்டோமே, அப்ப இந்த குளம் இப்பொழுது நமக்கு சொந்தமா? என்று அதில் வெளுப்பாய் வேட்டி சட்டை அணிந்த ஒருவர் கேட்டார்..

ஐயா இந்த குளம் அரசாங்கத்துக்கு சொந்தமானதா இருக்குது, ஆனா அதை சுத்தி இருக்கற இடமெல்லாம் நாம் வாங்கி விட்டோம், பக்கத்தில் இருப்பவர் அவர் காரியதரிசியாக இருக்க வேண்டும், அவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

சரி அப்ப அதை விட்டுட்டு மத்த இடத்துல நம்ம கட்டிட வேலை எல்லாம் ஆரம்பியுங்க, சொல்லிவிட்டு விறு விறுவென கார் ஏறி பறந்து விட்டார்.

இந்த குளத்தை சுற்றியுள்ள பறவைகளும், மீன்களும் இதை எதை பற்றியும் அறியாமல் மிக சந்தோசமாய் இருந்தன.

ஒரிரு மாதங்கள் ஓடியிருக்கும், அந்த குளங்களை சுற்றிலும் ஆட்கள் கூட்டம் அதிகமாக ஆரம்பித்து விட்டது. அந்த இடத்தில் பெரிய ஹோட்டல் ஒன்று கட்டப்போவதாகவும், அதனால், அந்த இடத்தில் பிரமாண்டமாக ஒரு கட்டிடம் வரப்போவதாகவும், அதை கட்டுவதற்காக கட்டுமான பொருட்கள் அந்த இடத்தை சுற்றிலும் போடப்பட்டு காவலும் போடப்பட்டது. கட்டிட வேலை செய்ய ஆட்களும் அங்கு குடியமர்த்தப்படனர்.

இதனால் அந்த இடம் சந்தடியால் சூழப்பட்டு, அந்த குளத்தை சுற்றியுள்ள பறவகளுக்கும், உயிரினங்களுக்கும், பெரும் துனபமாகி விட்டது.

அது மட்டுமல்ல அங்கு குடியமர்த்தப்பட்டிருந்த பணியாட்கள், குளிப்பதற்கும், மற்றும் பலவித வேலைகளுக்கு குளங்களை உபயோகப்படுத்த ஆரம்பித்ததால், குளம் கொஞ்சம் கொஞ்சமாக மாசு சேர ஆரம்பித்து விட்டது.

மீன்களும் அந்த சோப்பு நுரையாலும், மற்றும் அழுக்குகளாலும், மூச்சு திணற ஆரம்பித்து விட்டது.

அவைகள் ஒன்று கூடி இந்த பிரச்சினையை பற்றி பேசின.இனிமேல் இந்த குளம் நமக்கு பாதுகாப்பானதல்ல. ஆகவே நாம் இங்கிருந்து வெளியேற முயற்சிக்க வேண்டும் என்று ஆலோசித்தன.

ஆனால் எப்படி இங்கிருந்து போவது, என்று புரியாமல் விழித்தன. திடீரென்று ஒரு மீன் யோசனை சொன்னது, நாம் ஏன் நாரை கொக்குகளிடம் உதவி கேட்க கூடாது?

அது எப்படி? அவைகள் நமது பகைவர்கள் அல்லவா? மற்றோர் மீன் சொன்னது.

பகைவர்கள்தான், மறுக்கவில்லை, ஆனால் இந்த ஆபத்தான தருணத்தில் நாம் அனைவரும் இன்னும் கொஞ்ச நாட்களில் மூச்சு திணறி இறக்க ஆரம்பித்தால், பாதிக்கப்போவது நாம் மட்டுமல்ல அவர்களூம்தானே? நாம் உயிருடன் இருந்தால் தான் அவர்களுக்கு இங்கு வேலை?

அதுவும் சரிதான், சரி யார் பேசுவது?

ஒரு மீன் அதற்கான பொறுப்பை எடுத்துக்கொண்டது. மறு நாள் அந்த மீன் ஒரு நாரையிடம் தங்களுடைய பிரச்சினையை பற்றி சொல்லி, அதனால் உங்களுக்கும் இனிமேல் உணவு பஞ்சம் வரும் என்று சூசகமாக உணர்த்தியது.

நாரை நாளை மற்ற நாரைகளுடனும், கொக்குகளுடனும் பேசி விட்டு சொல்வதாக கூறி சென்றது.

நாரைகளும், கொக்குகளும் கூடி பேசின. ஆம் உண்மைதான் இப்பொழுதே அந்த குளத்துக்கு செல்ல முடிவதில்லை. எல்லா இடங்களிலும் மனிதர்கள் அசிங்கம் செய்து மாசு படுத்தி விட்டார்கள். முன்னெல்லாம் கரையோரம் நின்றால் பளிங்கு போல அதன் தரை தெரியும், இப்பொழுதோ? வாயை குமட்டுவது போல சைகை செய்தது.

சரி நாம் அந்த மீன்களை எப்படி காப்பாற்றுவது?

ஒரு நாரை சொன்னது இங்கிருந்து சற்று தூரத்தில் ஒரு குளம் இருக்கிறது. அது நடு காட்டுக்குள் இருக்கிறது, அங்கு கொண்டு போய் விட்டு விடலாம், பாவம் அவைகள் பிழைத்துக்கொள்ளட்டும். மனிதர்களால் தொல்லை இருக்காது.

எல்லா நாரைகளும், கொக்குகளும் ஒப்புக்கொண்டன. பகலில் இந்த பணியை செய்யக்கூடாது. மனிதர்களால் நமக்கு துன்பம் வரலாம், அதனால் பொழுது சாய்ந்த் வேளையில் இந்த வேலையை ஆரம்பிப்போம். உதவிக்கு நம்முடைய எல்லா நாரைகளையும், கொக்குகளையும் கூப்பிட்டுக்கொள்ளலாம். அனைத்து சரி என்றன.

மறு நாள் பகலில் அன்று மீனிடம் பேசி நாரை குளத்துக்கு வந்து தகவல் சொல்லி விட்டது. இன்று மாலை எங்கள் ஆட்கள் இங்கு வருவார்கள் தயாராய் இருங்கள்.

அதே போல் அன்று மாலை கடந்து மெல்லிய இருள் பரவிய வேளையில் ஆயிரக்கணக்கான நாரைகளும், கொக்குகளும் குளத்துக்கு வந்து அங்கிருந்த மீன்கள் மட்டுமல்ல, தவளை,மற்றும் அனைத்து பூச்சிகளையும் கவ்விக்கொண்டு பறந்து சென்று நடுக்காட்டில் இருக்கும் குளத்தில் விட்டு விட்டு மீண்டும் மீண்டும் வந்து எடுத்து சென்றன.

குட்டீஸ் ஒரு வேடிக்கை அதை ஒரு சில மனிதர்கள் கண்டு விட்டு அடேயப்பா “பார் இன்று கொக்குகளுக்கும், நாரைகளுக்கும் நல்ல வேட்டை” எத்தனை நாரைகள்? எத்தனை கொக்குகள்? மீன்களையும், மற்றைவைகளையும் கவ்வி செல்கின்றன?

அவர்களுக்கு தெரியுமா இவைகள் மீன்களுக்கும்,மற்றவைகளுக்கும் உதவிதான் செய்கின்றன என்று?

மறு நாள் காலை அந்த குளத்தில் ஒரு ஜீவராசிகள் கூட இல்லை, அவைகள் அப்படியே கொக்குகள், நாரைகளின் உதவியால் வேறோர் குளத்திற்கு சென்று நிம்மதியாய் வாழ ஆரம்பித்து விட்டன.

மனிதர்கள் ஜீவராசிகள் உயிர் வாழாத அந்த குளத்தை முடிந்தவரை நாசம் செய்து காலப்போக்கில் அங்கு குளம் ஒன்று இருந்ததா? என்று கேட்கும் அளவில் செய்து விட்டனர்.

குட்டீஸ் நீங்களாவது எதிர்காலத்தில் மனிதர்களிடமிருந்து இயற்கையை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *