சனிக்கிழமை சர்ப்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 28, 2024
பார்வையிட்டோர்: 2,178 
 

தனித்திருப்பவனின் சனி இரவு எப்படி இருக்கும்……தெரியுமா…?

அது போக போக வெறியேறும் பசித்த புலியின் சுயத்தின் இயல்பை பெற்றிருக்கும். அப்படித்தான் அந்த சனி இரவு என்னை ஆழம் பார்த்தது. நானுமற்று இருப்பதையே விரும்புகிறவன் என்றாலும்… சனியின் மாலைநிழல் கிறக்கத்தில் வைத்திருந்தது. தொடுவான சிந்தனையில் என்னை ஊற்றி நிழல் தேசம் சுமக்க வைத்திருந்தது. ஊதா நிறத்தின் வழியே நான் ஒரு கனவு கண்டு கொண்டிருப்பதைத்தான் விரும்பினேன். ஆனாலும்… அலைபேசியில் புள்ளியிட்ட ஒளி ‘கார்த்திக்கை அழை’ என்றது. 

கார்த்திக் எனது நண்பன். அடிக்கடி சண்டையிடும் நண்பன். ஆளுக்கொரு கருத்து கொண்டு அலையும் அதி வேக கத்திகள்தான் நாங்கள். மூன்றாம் முறைக்கு அலைபேசியை எடுத்து பேசியவன்.. பொய் சொன்னான். வேண்டுமென்றே என்னை விடுவிக்கும் செயல் அது. சரி. எல்லா பொய்களின் வழியிலும் என்னால் உண்மையை நெருங்கி விட முடியும் என்பது அவனுக்கும் தெரியும். ஆனாலும் ஆகாயத்தின் துண்டுகளில் அவனுக்கு வேறு நிறம். அமைதியாகி விட்டேன்.

அடுத்து மொட்டைமாடியில் நடை பழகினேன். மொட்டைமாடிக்கு நடை பழக்கினேன்……இதுதான் சரி. நிலாகூட வந்து விட்டிருந்தது. நிலவின் பின்பக்கம் காணும் ஆவலில் திரும்ப திரும்ப பறக்கும் பறவையை நான் அறிவேன். இடைச்செருகல் பற்றி யோசிக்காதீர்கள். அது என்னை பற்றியது.

நில்லாமை மட்டும் என்னுள்ளே என்னுள்ளே அலைபாய்ந்து கொண்டிருந்தது. 

அடுத்து, பிரசாத்துக்கு அழைத்தேன். அவன் சர்ச்சில் இருப்பதாக கூறினான். அவன் ஒரு தீர்க்கதரிசி. தீரா சுமைகளுடன் இருப்பவன். ஆனாலும் அவனும் ‘வரவில்லை’ என்று கூறியது……..எனக்கு வாயுடைந்த மது பாட்டிலின் தடுமாற்றத்தைத் தந்தது. 

கண்டிப்பாக வரமாட்டான் என்று தெரியும். ஆனாலும் கமலை அழைத்தேன். ம்ஹும்.. 8 முறை அழைத்தும் அலைபேசியை எடுக்கவே இல்லை. பிறகெப்போதாவது கூலாக கூறுவான். “நான் போனையே பாக்கலடா…….”

சரி, என்று நியந்தாவுக்கு அழைத்தேன். அழகாய் பேசி விட்டு அற்புதமாய் நழுவிக் கொண்டாள். மதுவுக்கு அழைத்தேன். தஞ்சாவூரில் இருப்பதாக கூறினான். தம்பி ராஜ்க்கு அழைத்தேன். தருமபுரி சென்று விட்டதாகக் கூறினான். ராஜ் பொய் சொல்ல மாட்டான். நிஜம் அவனை சுழற்றி அடிக்கும் வித்தையில் என் சனி இரவு அவனுக்கு ஒன்றுமே இல்லை.

நான் மரணித்து விட்டதை போல உணர்ந்தேன். 

யாருமற்று நிற்பது வார நாட்களுக்குப் பொருந்தும். சனிக்கும் ஞாயிறுக்கும் பொருந்தாது. விடுமுறையில் பேச எதிரே யாராவது வேண்டும். முத்தமிட யாராவது வேண்டும். புணர யாராவது வேண்டும். புணருதல் பற்றி பேசவாது யாராவது வேண்டும். சேர்ந்து குடிக்க யாராவது வேண்டும். சேர்ந்து சிரிக்க யாராவது வேண்டும். யாராவது….இந்த……..யாராவது வாழ்க்கை முழுக்க மாறிக் கொண்டே இருக்கும் கவிதை தாள்களின் நுட்பத்தில் கசங்கி இருப்பதும் கருத்தில் இருப்பதும் அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை போலத்தான். ஞான தரிசனம் எதிர் வீட்டு கொடியில் காயும் பெண்ணொருத்தியின் உள்ளாடை காணுகையில் கிடைத்தது. கிளம்பி விட்டேன். வண்டியில் எமனைப் போல அமர்ந்து கொண்டு கணுவாய் மெயின் சாலையில் அங்கும் இங்கும் அலையத் தொடங்கினேன்.

காந்தி வீதியில் மூன்றாம் சந்தில் ஒரு ஜோடி நின்று காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். போகையில்.. பளிச்சென்று தெரிந்த அந்த நெற்றியில் வட்ட பொட்டு மட்டும் பக்கென்று மனதுக்குள் ஒட்டிக் கொண்டது. காற்று வாக்கில் வந்த பேச்சில்…” உனக்கு எதுமே புரிய மாட்டேங்குது….!” மட்டும் அலைபாய்ந்தபடி காற்றின் தூரத்தில் சென்று சேர்ந்து காணாமல் போனது போல இருந்தது. நான் ‘மாங்கரை’யே சென்று விட்டேன். கிட்டதட்ட 20 கிலோ மீட்டர். அதற்கும் அப்பால் சென்றால் ‘ஆனைக்கட்டி’ தான். இரவின் படியில் யானைகளின் உலாவல் அதிகம் என்பதால் மதம் பிடித்தது மதம் பிடித்ததாகவே இருந்தும் திரும்பி விட்டேன். இரவு 8 மணியைத் தாண்டிய நேரத்தில் ஒடுக்கு விழுந்த நிலா ‘உவ்வே; என முகம் சுழிக்கும்படியாக குண்டும் குழியுமாக இளித்தது, நன்றாக தெரிந்தது.

திரும்பி வருகையில் அதே இடத்தில் அந்த ஜோடி இன்னும் சத்தமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் வண்டியை அனிச்சையாய் மெதுவாக்கினேன். அவர்கள் என்னைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை. காற்றில்லா தேசம் போல அங்கே புழுக்கம் நிறைந்திருந்தது. உள்ளிருந்து வெளி வரும் சாலைகளின் கண்களின் மச மசவென இரவு பூத்துக் கிடந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வீணா போன வாகனங்கள் தங்களை உருட்டிக் கொண்டிருந்தன. எப்போது வேண்டுமானாலும் மழை தரும் மேகம் வயிறு உப்பி மிதந்தது. 

அவன்…, “போடி திருட்டு முண்ட….”  என்றான். 

அவள், “என்ன சொன்ன…? என்ன சொன்ன…!” என்று அழுது கொண்டே நின்றாள். அது இயலாமையை வெளிக் கொணர்ந்தது,.

அதற்குள் நான், அவர்களை கடந்து முதல் தெரு நுழையும் இடத்துக்கு வந்திருந்தேன். பிறகு; சரி, எல்லாமே வழிப்போக்கம் என்று கணுவாய்க்குள் சென்று ‘கனகா’ பேக்கரியில் சுக்கு டீ குடிக்கத் தொடங்கினேன். நாலாபக்கமும் தானாக சுற்றும் கண்கள் சுக்கு டீ முடிக்கையில் அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் வந்து வேகமாய் சிமிட்டின. சிவப்பு சுடியில் வட்ட பொட்டில்…….’அட சற்று முன் குறுக்கு சந்தில் நின்று சண்டை போட்டு திருட்டு முண்ட என்று திட்டு வாங்கியவள்’ என்று ஒரே பார்வையில் கச்சிதமாக புலப்பட்டது.

மணியைப் பார்த்தேன். 9 தாண்டி இருந்தது. 

ஆள் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது. பேக்கரியில் இருந்து மெல்ல வெளியேறி, பூனை நடையில்…. கள்ள மௌனத்தோடு அவளை நோக்கி சென்றேன். சாலையில் அவள் மட்டும் நிற்பது போல நாய் கண்களில் பார்த்தேன். சுற்றிலும் ப்ளர் ஆகி ஆப்ஜெக்ட் மட்டும் வளைந்து வளைந்து நெளிந்து நெளிந்து கண்ணில் தெரிவது போன்ற கற்பனை, நொடி நேரங்களில் குதூகலப்படுத்தியது. அருகே சென்று பேருந்துக்கு நிற்பது போல… ஒரு பிக்பாக்கட்டின் உடல்மொழியில் நின்றேன். அவள் யாரோ என்று யாரையோ வழக்கமாக பார்க்கும் பார்வையை என் பக்கம் திருப்பி விட்டு மீண்டும் பொதுவாக ஒரு சூனியத்தில் அவளின் கண்களை குவியச் செய்தாள். முகம் அழுது வழிந்திருந்தது. கொஞ்சம் வீங்கி கூட இருந்தது. அடித்திருப்பான் போல. உதடும் தடித்திருந்தது. கடித்திருப்பான் போல.

கண் முட்டும் கண்ணீரை அவள் அடக்கிக் கொண்டே இருப்பதை உணர்ந்தேன்.

“இந்த வாழ்க்கை அப்டித்தான்……எங்கயோ கலர்புல்லா ஆரம்பிச்சு இப்டி எங்கயோ ஒரு முட்டு சந்துல நிக்க வெச்சிடும்….” பக்கென்று குரல் கேட்டவள் சற்று தள்ளி நின்றாள். ஒரு லூசைப் பார்ப்பது போன்று முகத்தை இழுத்துக் கொண்டு இருந்தது கண நேர பார்வை. கண்கள் சிமிட்டாத்தனம் பயத்தைக் காட்டியது.

“ஒன்னும் பயப்பட வேண்டாம்…… நீங்க சண்டை போட்டதை பார்த்துட்டுதான் இருந்தேன்…சொன்னா நம்புவீங்களான்னு தெரியல…. அவன் ஆள் சரில்ல… என்ன தான் கோபம் வந்தாலும் ஒரு பொண்ணை, ‘திருட்டு….’…சாரி…அப்டி சொல்லி திட்றதெல்லாம் டூ மச். பந்தா இருந்தா இப்டி தான் யார் வேணாலும் உதைப்பாங்க….பந்தாவா இருந்து பாருங்க… கிட்ட வர யோசிப்பாங்க…”

அவள் பயந்து கொண்டே சற்று தள்ளி நிற்பது போல தெரிந்தது. ‘யார்ரா இவன்….!’ என்பது போல முகம் சுருங்கிய பார்வை வெளிப்பட்டது.

“என்ன சண்டைன்னுல்லாம் கேக்க மாட்டேன். ஆனா…. எல்லா சண்டைக்கும் ஒரு அசல் வேணும்… போலித்தனம் கூடாது. அவன் மூஞ்சில போலித்தனம்தான் இருந்துச்சு. ஏன் உங்க மூஞ்சில கூட கொஞ்சம் போலித்தனம் இருந்ததை நான் பார்த்தேன். காதல்ங்கிறதே இங்க யாருக்கும் புரியல. எனக்காக வாழுன்னு சொல்றதா காதல். ம்ஹும்… உனக்காக வாழ்றேன்னு சொல்றதுதான் காதல்….”


“பறவைக்கு பறக்கத்தான் பிடிக்கும். பெண்ணுக்கு இஷ்டம் போல இருக்கத்தான் பிடிக்கும்…”

அவள் இப்போது கண்களைத் துடைத்துக் கொண்டு என்னை கவனிக்க ஆரம்பித்திருந்தாள். இடையே இருமுறை நகர்ந்து பயந்து அங்கிருந்து நடக்க எத்தனித்தபோது நான் ‘ஒரு அண்ணாவா சொல்றேன்…கேளு…” என்றேன். அதன் பிறகுதான் அமைதியானாள். அவளின் உடலின் படபடப்பு அடங்கியது. இனி இருப்பது உள்ளத்தின் படபடப்புதான். அடக்கி விடலாம்…

“யாருக்காவது தெரியுமா…. நாமதான் பொறப்போம்னு…? பொறந்திட்டோம்….! வாழ்றதுதான மரியாதை. பிடிச்ச வாழ்க்கைய அமைச்சுக்கறதுதான் ஒரு நல்ல வடிவமைப்பு. எல்லாத்துக்கும் எவனாவது வந்து எதாவது பண்ணிட்டே இருப்பான்னு நினைக்கறது சரியா…. ம்ம்ம்… அவனுக்கும் உனக்கும் என்ன பிரச்சனைன்னு தெரியல…ஆனா அதுக்கு இவளோ பீல் பண்ண வேண்டியது இல்லை. தப்பு உன் மேலன்னா போன் பண்ணி பேசு. அவன் மேலன்னா தூக்கி போட்டுட்டு சிரி….”

அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் அவளையேதான் பார்த்தேன். அந்த பாதி இருட்டுக்கு மீதி வெளிச்சம் அவள் முகம் என்று தோன்றியது. நீட்ட முகம். கொஞ்சம் சாய்ந்த மூக்கு. மேலுதடும் சற்று பெரியதுதான். அமுங்கி மேலெழுந்த சதை அடர்த்தி. கிட்டத்தட்ட ஒரு கொரியப் பெண்ணின் சாயல். காய்ந்த உதட்டில் சாயம் அப்பிய இரவு மினுங்கியது. 

“பயந்தா பஸ்ல ஏறி போ…… தைரியம் இருந்தா என் கூட வண்டில வா… எங்க போகணுமோ அங்க விட்டர்றேன். இதுவரைக்கும் திருட்டு முண்டைனு எந்த பொண்ணையும் நான் சொன்னது இல்லப்பா……” நான் கண்களில் தெளிவாக உள்ளத்தைக் காட்டினேன்.

அவள் யோசித்தாள், நகம் கடித்தாள். எட்டி எட்டி பார்த்தாள். பேருந்து வழி மறந்திருக்கும் போல…..ஒன்றையும் காணோம். நேரத்தை இடது கை தூக்கி டிக் டிக் டிக் என கண்கள் சுழற்றினாள். நல்ல நேரம்தான் என்பது போல எனக்குள் கொப்பளிப்பு.

“எப்பவுமே முதல்ல எடுத்த முடிவுதான் சரியா இருக்கும். நான் சொல்லவா… நான் அண்ணான்னு சொன்னதுமே உனக்கு என் மேல நம்பிக்கை வந்திருச்சு… அதுதான் நீ முதல்ல எடுத்த முடிவு. அதுக்கப்புறம்… சரியா தப்பா……..! யார் இவன்? ஏன் இப்டி பேசுறான்….!.ஏதாவது பண்ண திட்டம் வெச்சிருக்கானா…….நகை திருடறவனா…ரேப் பண்ணி கொல்றவனா…சைக்கோவா….இதெல்லாம் அதுக்கப்புறம் தோணுனது….. இல்லையா….?

நான் சிரித்துக் கொண்டு பார்த்தேன். அவள் சீரியஸாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் கிடையாது. முதல்ல தோணுச்சில்ல. அதுதான் சரி. நான் எல்லாருக்கும் பொதுவானவன். நலம் விரும்பி. சக உயிர் மீது அக்கறை உள்ளவன்…இதுதான் நிஜம். ஆமா உன் பேர் என்ன?” 

வாய் திறக்காமலே “வர்ஷினி” என்றாள். வர்ஷினி என்றால் தேவதை என்றேன். வாய் திறக்காமலே மெல்லிய புன்னகை. புள்ளி அளவு நம்பிக்கை கூட அந்த நேரத்துக்கு அவளுக்கு போதுமானதாக இருந்திருக்க வேண்டும். அதுதான் என் கணக்கும். கணக்கு தப்பவில்லை.

பைக்கில் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள். பைக் ஹாஸ்டலை நோக்கி நகர்ந்தது. 

“சனி இரவின் கொடுமை உனக்கு தெரியுமா வர்ஷினி” என்றேன்.

“காதலிச்சு பாருங்க…சனியின் கொடுமையே தெரியும்” என்றாள். பொம்மை படக்கென்று பேசினது போல… 

“பார்றா….!!!” என்றேன். இருவருமே சிரித்துக் கொண்டோம். 

“போற வழியிலதான் வீடு இருக்கு.. போயிட்டு, சாப்ட்டுட்டு போய்டலாம்….”  ஹெல்மெட் தாண்டி கத்திதான் பேச வேண்டி இருந்தது 

அவள் பேச்சற்று அமர்ந்திருந்தாள். 

“ஹெலோ வர்ஷினி மேடம்… என்ன சொல்லிட்டேன்னு இப்டி அந்நியன் மாதிரி யோசிக்கறீங்க…! வீட்ல உங்கள கடிச்சு எல்லாம் வெச்சிட மாட்டேன்…… வாங்க….  ரெண்டு பேரும் சேர்ந்துதான் சமைக்கணும்……சாப்ட்டு போங்க… இந்த உலகத்துல இன்னும் மிச்சம் இருக்கறது என்ன தெரியுமா……? சக மனுஷன் மேல வெச்சிருக்கற நம்பிக்கைதான். அதை நம்மள மாதிரி மனிதர்கள்தான் மீட்டெடுக்கனும். எல்லாரும் எப்பவும் கெடுக்கவா வாழ்ந்துட்டு இருக்கோம்…”

அவள் யோசித்து கொண்டிருக்க வேண்டும். பலத்த அமைதி.

“எப்பவும் கொலை பண்ற மூட்லயேவா இருப்பான் ஒருத்தன். நல்ல மனிதர்களோடு நட்பாகவும் பழகுவான் இல்லையா. அந்த நம்பிக்கை ஏன் போய்டுச்சு…. ஊடகம் பண்ணின நிறைய தப்புகள்ல மிக பெரிசு இதுதான். சக மனுஷன் மேல இருக்கற நம்பிக்கைய சிதைச்சது. அத மீட்டெடுக்கனும். அதுக்குத்தான்.. நான் இப்டி முன் பின் அறிமுகமில்லாதவங்களோட பழகி உடனே வீட்டுக்கும் கூட்டிட்டு போய் சாப்பாடும் போட்டு அன்பா அனுப்பி வைப்பேன். அதுக்கப்புறம் அவுங்க நட்பு காலத்துக்கும் கூண்டு கிளி மாதிரி நம்மள சுத்தி சுத்தி வரும். இந்த வாழ்க்கையில எத்தனை மனுஷங்கள சம்பாதிக்கறோம்ங்கிறதுலதான் இந்த வாழ்க்கை முழுசா இருக்கா அரை குறையா இருக்கான்னு இருக்கு. எனக்கு முழுசாத்தான் இருக்கு. இதுவரை இந்த மாதிரி 24 நண்பர்கள் எனக்கு கிடைச்சிருக்காங்க. நீங்க 25. ஸ்பெஷல். இன்னும் சொல்லப்போனா ஒவ்வொரு புது மனிதரோடும் பழகி அவங்களோட நம்பிக்கையை வாங்கும்போது எதையோ சாதிச்சிட்ட மாதிரி தோணும்.. இந்த உலகமே அன்பாலதான் சுத்துது. அதுக்கு நான்தான் அச்சாணிங்கிற மாதிரி ஒரு கெத்து. அது அப்டி இருக்கும்……”

அவள் என் முதுகில் ஒட்டி அமர்ந்ததை உணர முடிந்தது.

“கொலை கொள்ளை வன்புணர்வுன்னு நடக்காம இல்ல. ஆனா அதே நேரம்… வீதிக்கு நாலு பேர் நல்லவன் இருக்கான். அதுல நானும் ஒருத்தன்”  என்றபோது என் வீடு வனம் போல எங்களை உள் வாங்கிக் கொண்டது. அடர்ந்த வனத்தில் அற்புதக் குயிலோடு நான் உள்ளே ஒரு காட்டு ராஜாவைப் போல நடந்தேன். அடுத்த பத்து நிமிடங்களில் காட்டுக்குள் இல்லையில்லை வீட்டுக்குள் செட்டில் ஆகியிருந்தோம். 

சோறு குழம்பு பொரியல் என்று அந்த இரவை குக்கர் விசிலடித்துக் கொண்டாடியது.

அவளைப் பற்றி நான் எதுவும் கேட்கவில்லை. அவள் வீட்டை சுற்றி பார்த்தாள். அறை முழுக்க சுவரெல்லாம் மயக்க நிலையில் வரையப்பட்ட ஓவியங்கள் அவளை மயமயங்க செய்து கொண்டிருந்தது. வட்டமிட்டிருந்த ஓவியத்தில்… வட்டத்துக்குள் வட்டம் என வட்டம் சுருங்கி கொண்டே செல்கையில் அவளின் கண்களும் வட்டமிட்டுக் கொண்டே இருந்தன. அவளுக்கு ஓவியங்களுள் எதுவோ பிடித்திருக்க வேண்டும். கண்களை கசக்கிக் கொண்டேனாலும் அடுத்தடுத்த ஓவியங்களை பார்த்தாள். அவள் தலைக்குள் தூரிகையின் கரமுற கேட்டிருக்க வேண்டும். சோபாவில் அமர்ந்து எதிரே இருந்த குதிரையில் தலையில்லாமல் செல்லும் குதிரைக்காரன் ஓவியத்தை பார்த்தபடியே சரிந்து தூங்கி போனாள்.

வீட்டுக்குள் ரத்தம் பாய்ந்தோடும்… எதுவோ உடைத்துக் கொண்டு கதறி ஓடும் ரத்த சிவப்பில் வந்த எண்ணத்தை சற்று நேரம் தேங்க விட்டு விட்டேன். அது அறை முழுக்க ரத்தம் ஊற்றி என்னை மிதக்க வைத்துக் கொண்டிருந்தது. திக்கென்று விழுந்த நிலை ஒன்றில் எண்ணத்தை மாற்றினேன். வெள்ளி புறாக்கள்.. வீட்டுக்குள் நடமாடுவது போன்ற பிரமையில் சற்று முன் நடந்த வர்ஷினியின் நடை அத்தனை அழகாய் குதிரை நடையோடு ஒத்து போனது. தனித்தே கிடக்கும் என்னிரவுக்கு இவ்விரவு துணை கொடுத்திருக்கிறது. தேவதையைப் போல தூங்குபவளை தேவனைப் போல பார்ப்பது அத்தனை அலாதி.  புலியாக இருப்பினும் ஆசுவாசம் தேவை தான். நான் புலி வாயில் சிரித்துப் பார்த்தேன். 

விடிந்திருந்தது…

“நான் திருட்டு முண்டையா….”

ஒரு பக்கம் சிக்கன்…ஒரு பக்கம் மட்டன்… ஒரு பக்கம் முட்டை… வீடே கமகமத்தது. பெண் இருக்கும் வீடுதான் கோயில் ஆகிறது. 

“ஐயோ சாரி.. ரெம்ப நேரம் தூங்கிட்டேன் போல…தலைக்குள்ள எதுவோ அழுத்தற மாதிரி ஒரு பீல்…கண்ணு முழிக்கவே முடியல.. அதான்….” 

கூந்தலை அள்ளி கொண்டையிட்டுக் கொண்டே அருகில் வந்த வர்ஷினிக்கு முகம் பூத்திருந்தது. 

“இவ்ளோ நேரம் தூங்கினதுக்கு காரணம் நான் சொல்லவா……” என்றேன்.

பால்கனியில் எட்டிப் பார்த்தவள், என் பக்கம் திரும்பினாள்.

அது, ‘சொல்லுங்க’ என்பது போன்ற பாவனை.

“எங்கே நம்பிக்கை இருக்கோ அங்கே தூக்கமும் நல்லா வரும்…”

இருவருமே சிரித்துக் கொண்டோம். 

அவள் சமைக்க உதவி செய்கிறேன் என்று சமையலறைக்கு வந்தாள். நான் அவள் கைகளை பற்றி செல்லமாக இழுத்தபடியே சென்று, ” நீங்க போய் ஓவியங்கள் பாருங்க.. கெஸ்ட்ட வேலை செய்ய விடுவது நல்ல விருந்தோம்பல் இல்லை..” என்று கண்ணசைத்தேன்.

“நான் திருட்டு முண்டையா….”

அவள் ஆச்சரியத்தை பூட்டிக் கொண்டு, “நல்லா பேசறீங்க” என்றாள்…கண்கள் விரிய. 

“அதுதான் பிரச்சனையே வர்ஷினி…. அதுனாலதான் யாரும் என் கூட இருக்க மாட்டிக்கறாங்க. நான் ஓயாம பேசிட்டே இருக்கேன். ஓய்ஞ்சாலும் பேசிட்டே இருக்கேன். பேசுவது ஒரு குறுக்கு வெட்டு நீள் தோற்றம் எனக்கு. அதில் வண்ணங்களின் நகலில்தான் உங்களின் எல்லாக் கோடுகளும் இயங்குகின்றன. 

“நீங்க பேசறது தலை சுத்தற மாதிரி இருக்கு.. ஆனா நல்லா இருக்கு….” என்றாள்.

“போய் குளி… வானம் வசப்படும்” என்றேன்.

“நான் திருட்டு முண்டையா….”

“எப்பவுமே இங்க தனியாத்தான் இருப்பீங்களா…! சொந்தம்னு யாருமே இல்லையா…?” என்றாள். 

அவள் மனதுக்குள் நேற்றைய சண்டையும் அவனின் தொந்தரவும் அலைக்கலிப்பதை நான் உணர்ந்தேன்.

“இன்னும் அவனையே நினைச்சிட்டிருந்தா எப்டி..! பிடிக்கலயா போயிட்டே இருக்கனும் வர்ஷினி. இந்த பூமியில வாழ்றதே சவாலான விஷயம். அதுல தேவையில்லாத சுமைகளை தூக்கிட்டு ஏன் கஷ்டப்படணும்…என்ன கேட்ட….? எப்பவும் தனியாத்தான் இருப்பீங்களான்னு தான…ஆமா…! அந்த தனிமை தான் என்னை சுத்தி நின்னு பயப்படுத்துது. என்ன செய்ய. அந்த தனிமையோட வலி தான்…. என் வாழ்வு…ஹா ஹா ஹா ஹா……” என்று சிரித்தது, அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது போல…என்னையே குறுகுறுவென பார்த்தாள். 

“பயப்படாத…இன்னும் எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லை”  என்று குழம்பு சொட்டுகளை உள்ளங்கையில் விட்டு ருசி பார்த்தேன்.

“செம்ம…”  என்று சப்பு கொட்டிய போது அனிச்சையாய் அவளும் சப்பு கொட்டினாள்.

“நான் திருட்டு முண்டையா….”

“சரி கிளம்புங்க …” என்றாள்.

“எங்க…?” என்றேன்.

“எங்கய்யா… நெற்றி சுருக்கி கேட்டு விட்டு பதில் சொன்னாள்……”ஹாஸ்டல்க்கு……நாளைக்கு ஆபிஸ் போகணும்ல..”

“அதுக்கு எதுக்கு இன்னைக்கே ஹாஸ்டல் போகணும்.. நாளைக்கு கிளம்பி இங்கிருந்தே ஆபீஸ் போயிட்டு ஈவ்னிங் வழக்கம் போல ஹாஸ்டல் போய்டலாம்ல….!”என்றேன்.

அவள் யோசித்தாள். ஒரே முக பாவனையில் எல்லாவகையான யோசனையும் வந்து வந்து போனது.

“இல்ல.. ஒரு நாள்லயே இந்த வீடு கோவிலாகிடுச்சு…பார்த்தியா…! தேவதை இருக்க வேண்டிய இடம் ஹாஸ்டல் இல்ல… வீடுதான்….” என்று போது அவள் கண்களும் பனித்திருந்தன.

“சரி… இருக்கறேன்… ஆனா நைட்டுக்கு நான்தான் சமைப்பேன்…’ என்றாள்.

‘ஹே….’ என கத்திக் கொண்டே….ஹோம் தியேட்டரில் ‘சைக்கோ’ படம் போட்டு விட்டு அமர்ந்தேன். கோப்பையில் இரண்டாவது லார்ஜ் தள்ளாடியது போல நினைத்துக் கொண்டது.

“இந்த மாதிரி படமெல்லாம் லைட்டை ஆப் பண்ணிட்டு எல்லா திரையையும் இழுத்து விட்டுட்டு சத்தமில்லாம சத்தமா வெச்சி பாக்கணும். அதுவும் கையில் இப்படி ஒரு திராட்சை ரசத்தின் கூம்பு நினைவு இருந்தால்.. சொட்டும் ரசத்தின் உள்ளார்ந்த திக் திக் அப்டி இருக்கும்….”.என்றேன்.

அவள்,… “ஐயோ நீங்க பேசினாவே தலை சுத்தற மாதிரி இருக்கு….ஆனா, அது நல்லா இருக்கு…” என்றாள்.

படத்தில் குளித்துக் கொண்டிருக்கும் கதைநாயகியை ஒரு கை வெறித்தனமாக நச் நச் நச் நச் என்று குத்தும் உலக புகழ் வாய்ந்த காட்சி ஓடுகிறது. இசை, “டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங்” என்று கீச்சு குரலில் கத்துகிறது. அனிச்சையாய் அவள் என்னைப் பார்க்கிறாள். நானும் அவளை கண்கள் சிமிட்டாமல் பார்க்கிறேன்…

 “நான் திருட்டு முண்டையா….”

கதைநாயகி செத்து குப்புறக் கிடக்கிறாள். கொட்டிக் கொண்டிருக்கும் ஷவர் தண்ணீரோடு ரத்தம் கலந்து குளியலறை குழாயில் வட்டமிட்டு வட்டமிட்டு சுழன்று கொண்டே நுழைகிறது. எதுவோ எதையோ உரிவது போன்ற பிரமை. ஹிட்ச்காக்கின் கைகள் முதுகில் குத்த போகிறது போன்ற எண்ணம். குறியீடுகள் எங்கள் மத்தியில் ரத்தம் சொட்ட அலைவதாக இருந்தது.

“என்னை எதும் பண்ணிட மாட்டீங்கள்ல…?” வர்ஷினியின் குரல் கீச் கீச்சுக்கு மாறி இருந்தது. 

“எதும் பண்ணாம இருக்கணும்னா…!” என்று எழுந்து மெல்ல அவளருகே சென்றேன்..

உதடு பிதுக்கி… ஐயோ.. விட்ருங்க… பிளீஸ்…” நடுங்க ஆரம்பித்து விட்டாள்.

“ஹே…. லூசு……!”  என சொல்லி…,, ” ஹா ஹா ஹா”  என்று சிரிக்க.. அவள் எழுந்து என் மார்பில் குத்தினாள். முகம் இன்னும் நடுக்கத்தில்தான் இருந்தது.

“பயந்துட்டியா……?”

“பின்ன பயப்படாம… போங்க…!”

அவள் வேண்டுகோளுக்கிணங்க படம் மாற்றப்பட்டது……”பாண்டி நாட்டு தங்கம்”

“இன்னைக்கு ஆபிஸ்க்கு போய்த்தான் ஆகணுமா…?” என்று அவளுக்கு பல் தேய்த்து விட்டுக் கொண்டே கேட்டேன்.

“ஐயோ வ்வே… போக்… பாக்….”

“சரி சரி துப்பிட்டு சொல்லு…” 

“போகணும் தான….”

“இன்னைக்கு ஒரு நாள் லீவ் போடேன்… ப்ளீஸ்……..” என்று அவள் கால் விரல்களில் சொடக்கெடுக்க ஆரம்பித்தேன். 

“ஐயோ இதெல்லாம் எதுக்கு..! விடுங்க” என்று கால்களை குறுக்கினாள். நான் மீண்டும் இழுத்தேன். என் கண்கள் கெஞ்சியது.

 “என்ன நகம் இப்டி வெச்சிருக்க…?” என்றபடியே அவள் கால்களை எடுத்து மடி மீது வைத்துக் கொண்டு நகம் வெட்ட ஆரம்பித்தேன். 

“ஐயோ விடுங்க.. நான் பண்ணிக்கறேன்…” என்றாள்.

பல்லே விலக்கி விட்டாச்சாமா.. இதுல இது என்ன….. பேசாம இரு…..”  என்றபடியே தொடர்ந்து வெட்டினேன்.

“அது விளையாட்டுக்கு…” சமாளித்தாள். 

“நான் திருட்டு முண்டையா….”

“எல்லாமே விளையாட்டுக்குத்தான் வர்ஷினி…”முனங்கினேன். 

அவள் சோபாவில் சாய்ந்து கொண்டு கண்கள் மூடினாள். என் கைகள் அவள் கால்களை நீவி விட்டன. 

படக்கென்று தலை தூக்கி முன் நகர்ந்தாள்.

“ஒன்னும் இல்ல…. நீ கண்கள் மூடி சாய். வளைந்து நெளிந்து அலை அலையாய் மின்னும் பொன்னிற கணங்களின் உள் மடிப்பில்தான் இப்பிரபஞ்சம் அசைகிறது. அதன் சுவடுகளின் முக்தியில்தான் உன் பாதங்களின் வருடல் இருக்கிறது. உன் கால் விரல்களின் பிளவு இருக்கிறது. பூக்கள் மீதும் நடக்கக் கூடாத பாதங்களை வைத்துக் கொண்டா சாலையில் திருட்டு முண்டை என்று சொல்ல கேட்டாய்…”

“நான் திருட்டு முண்டையா….”அவள் முகம் இறுகியது. 

“கண்கள் திறவா நிலைக்குத்தான் நீ இருக்கிறாய். உடலால் வாழும் இவ்வாழ்வின் நிசப்தங்களை தட்டி எழுப்பத்தான் என் போன்ற தீர்க்கதரிசிகள் வந்திருக்கிறார்கள். நம்புவதில்தான் நீ உயிரோடு இருக்கிறாய்… சுவர் எல்லாம் சித்திரங்கள். காணும் உன் கண்களில்தான் அதன் தத்ரூபங்கள்…”

பாதங்களை வருடினேன். உடல் நெளிந்தாள். உள்ளமும் நெளிந்திருக்கும்.

“நீ எல்லாம் அரசி மாதிரி இருக்கனும் வர்ஷினி.. இப்போ கற்பனை பண்ணிக்கோ.. நீதான் அரசி.. நான் உன் அடிமை… இது உன் அரண்மனை.. நீ உன் அடிமையை என்னவெல்லாம் பண்ண நினைக்கறயோ அதையெல்லாம் பண்ணலாம். இப்போ ஏதாவது வேலை சொல்லேன்… நான் செய்வேன்….” என்றேன்.

என் குரல் அந்தகாரத்தில் இருந்து வந்தது போல அசரீரியின் ரூபத்தில் அந்த அறையில் சுழன்றது. அவள் எதையோ உணர்ந்தாள்.

அவளுள் ஒளிந்திருந்த எதுவோ விடுபட்டது போல கால்கள் விறைப்பானது.

சற்று நேரம் மௌனம். சித்திரங்கள் போல இருவருமே அவரவர் நிலையில் சத்தமில்லாமல் இருந்தோம். அந்த அறை எதையோ நிகழ்த்தியது. எங்கள் உடல் எதையோ இயக்கியது. 

“நான் திருட்டு முண்டை இல்ல….”

எல்லாவற்றையும் மாற்றி கலைத்தது போல…” சரி கால்களை பிடித்து விடு…”என்ற அவள் குரலுக்கு வேறு தொண்டை….

“இவ்ளோதான…”

பிடித்து விட ஆரம்பித்தேன். எங்கோ விட்டது எங்கோ தொடர்ந்தது போல இருந்தது. அதன் பிறகான பிடிப்புகள்.

முட்டிக்குக் கீழ் கெண்டைக் காலின் பருண்மை மெல்லிய காற்றைக் குடித்து உப்பி இருந்தது. பெரு விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே எண்ணையின் வழுக்கல்.. புதைந்து மீண்டெழும் சதையின் ரப்பர் தன்மை உள்ளூறும் ஓடும் பச்சை நரம்பின் வழியே வழக்கம் போல முறுக்கேற்றி அவளை கண்கள் மூட வைத்திருந்தது. 

“திருட்டு முண்டைன்னு அவன் சொன்னது எவ்ளோ பெரிய தப்பு….. இல்லையா… வர்ஷினி?”  என்றேன் கோபம் குதறும் குரலில்.

கண்கள் திறக்காமல், ” ம்ம்ம்ம்” என்றாள். பிசாசின் குரல் அப்போது.

“அவனை போட்டு அடி வர்ஷினி” என்றேன். 

“அடிக்கணும்….”  என்றாள். அவளின் கால் நரம்புகள் தடதடத்தன.

“அவனை உதை”  என்றேன்.

உதைத்தாள்…….. என்னைத்தான் உதைத்தாள்.  

நான் கீழே கிடந்தேன். என் முகத்தில் கழுத்தில் நெஞ்சில் என்று மாறி மாறி மிதித்தாள். 

“நீ தேவதை வர்ஷினி.. நீ அரசி.. நீ இவ்வுலகை சிருஷ்டிக்க வந்த சாமி…. நீ, நீ திருட்டு முண்டை இல்லை…அடி…. உதை.. மிதி… இன்னும் அடி.. ஆசை தீர அடி…” சொல்ல சொல்லவே விழித்துக் கொண்டாள்..

அவள் மயங்கி சரிந்தாள்.

குளித்து விட்டு ஈரக் கூந்தலோடு வந்தவளை பிடித்திழுத்து, ‘ வா…….’ என்று தலை துவட்டி விட்டேன்.  

அப்படியே கழுத்தில் இரு கைகளாலும் மலர்த்தி… விரல்களின் அணிவகுப்பில் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு வித தாள லயத்தோடு நீவி விட்டேன். அவள் கழுத்தை நீவுவதற்கு தகுந்தாற் போல அசைத்துக் கொடுத்தாள். அனிச்சையாய் என் கைகள் அவள் முதுகு சென்றது. வேண்டாம் என்பது போல பாவனையில் சற்று முன்னோக்கி நகர்ந்தாள். நான் வேண்டும் என்பது போல மீண்டும் பின்னோக்கி அவளை சரித்தேன்.

“அரசிகளுக்கு இதெல்லாம் பிடிக்கும்” என்றேன். “அடிமைகளுக்கு இது தான் பிடிக்கும்” என்றேன். படக்கென்று அத்தனை நெருக்கத்தில் திரும்பிய அவளின் கண்களில் கத்திகள் இரண்டு பளபளத்தன. அது என் கண்கள்.

சோறு ஊட்டி விட்டேன். முகத்துக்கு ஒப்பனை செய்து விட்டேன். அவள், வீட்டுக்குள் ஒரு அரசகுமாரியாக நடக்கத் தொடங்கினாள். எப்போதெல்லாம் தடுமாற்றம் வருகிறதோ அப்போதெல்லாம் அவளின் காதலனின் ஞாபகத்தை…..திருட்டு முண்டையை எடுத்து வீசினேன். அவள் அடங்கினாள். அவள் அவனையும் என்னையும் மாறி மாறி சிந்திக்கத் தொடங்கினாள். அவனை சாத்தான் என்றாள். என்னை அடிமை என்றாள். அவளே அவளை உயரத்தில் பார்த்தாள். அவள் மூளைக்குள் புழுக்களைக் கொட்டிக் கொண்டே இருந்தேன். அவளின் நடையின் நெளிவு சுளிவுகள் ஒரு அரசிக்கானதாய் ஆகி இருந்தது. நான் சொல்லாமலே அவள் நம்பினாள். 

அடுத்த நாளும் வந்தது.

“இந்த வாழ்வு வேலைக்கு போவதற்கா….? இன்னும் கொஞ்ச நேரம் சிரித்து பேசி மகிழ்வதற்கா…?” என்று கேட்டேன். அவளுக்கு தலை வாரிக்கொண்டே.

சூனியத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளுள் இருந்த அரசியின் சோம்பேறி மிருகத்தை எழுப்பி விட்டிருக்க வேண்டும் என் சொற்கள்.

“அரசிக்கு வேலை செய்யத்தான் இந்த அடிமை.. இன்னும் இரண்டு நாள் இங்கிருந்து இந்த அடிமையிடம் வேலை வாங்கினால் என்ன…. உன் அலுவலகத்தில் எத்தனை பேர் உன்னை அடிமை போல எத்தனை நாள் வேலை வாங்கி இருக்கிறார்கள். அதற்கெல்லாம் சேர்த்து இங்கே என்னிடம் வேலை வாங்கு அரசி. என்னை ஏவி விடு. என்னை அடி. நொறுக்கு. மிதி. உதை. என் மீது துப்பு. திருட்டு முண்டைக்கு எதிராக என்னை வசவு சொற்களால் நிறை…”

என் சொற்கள் புற்களைத்தாண்டி எழும் பனித்துளிகளால் நடுங்க வைத்தன. அவளை சூனியத்தில் இருந்து தன்னை வெளியே எடுக்க முயற்சிக்கவிடாதபடி நான் புழுவைப் போல அவள் முன்னால் படர்ந்தேன். என் மலையில் பனித்துளிகளுக்கு சிவப்பு நிறம் என்று மனதார உச்சரிக்கிறேன்.

“ஆமா அடிமை……எனக்கும்.. அப்டித்தான் தோணுது… இது நல்லா இருக்கு… உன் கூட பேசறதே போதையா இருக்கு.. மனசுக்குள்ள ரெக்கை முளைச்ச மாதிரி இருக்கு.. கிட்ட வா….” என்று என் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். நான் மறு கன்னத்தையும் காட்டினேன். அதிலும் அறைந்தாள். முதுகைக் காட்டினேன். உதைத்தாள். குப்புற விழுந்து எழுந்து கும்பிட்டேன். ஆசீர்வதித்தாள்.

அவளின் கண்கள் என் கண்களைக் காணுகையில் எல்லாம் அவள் சொக்கி சொக்கி போனாள். 

“உன் கண்ணுல பாம்பு விஷம் இருக்கு” என்றாள்.

“உன் கண்ணில் கிளியோபாட்ராவின் சாயல் இருக்கு” என்றேன். படக்கென்று கண்கள் முழுக்க திறந்து ஓடி சென்று கண்ணாடியைப் பார்த்தாள். கண்ணாடியும் பார்க்கும் அழுகி நீ” என்றேன். மார் குலுங்க சிரித்தாள். கண்ணாடிக்குள் பாம்பு கண்கள் என்னை சிமிட்டின.

எச்சில் துப்ப எழுந்தாள். ஆஹ் காட்டினேன். துப்பி விட்டு பலமாக சிரித்தாள்.

“இப்போதுதான் நீ முழு அரசி” என்றேன். கன்னத்தில் கைகள் பொத்தி தலை சாய்த்து கண்களை வேக வேகமாய் சிமிட்டி சிரித்தாள்.

“அவனை நினைத்து என்னை அடி” என்றேன்.. சவுக்கை கொடுத்து.

முதுகில் அடித்துக் கொண்டே வழியும் ரத்தத்தை நாவால் நக்கினாள்.

கிளியோபாட்ரா அப்படித்தான் செய்வாள் என்று சற்று முன் நான் சொன்னதன் விளைவு. 

அன்று மாலையே “என்னமோ தப்பா இருக்கு. நான் கிளம்பறேன்… என்னை விட்ரு” என்றாள். என் கண்களை பார்க்க மறுத்தாள்.

“அதெப்படி முடியும் அரசி..? அரசியை அடிமை எப்படி விட முடியும். இதுதான் உன் அரண்மனை.. அடிமைக்கு வரமே அரசியோடு இருப்பது தான். அரசிக்கு தவமே அடிமையோடு இருப்பது தான்…” 

என் கண்கள் அவள் கண்களை ஊடுருவியது. அவள் தலை சுற்றி சட்டென திரும்பி மீண்டும் சுதாரித்துக் கொண்டாள்.

“அதெல்லாம் வேண்டாம். நான் போகணும்…..”

அவள் கண்கள் கலங்கின.

“சரி போலாம். அதற்கு முன்னால் உன்னை திருட்டு முண்டை என்றவனை பழி வாங்கலாமா….?” என்றேன்.

‘பழி……’ என்ற போது அவள் கண்கள் மீண்டும் படபடப்புக்குள்ளானது. ‘எப்படி பழி வாங்குவது,.’ அவளின் உதடு முனகியது. எங்கோ சரிந்து பார்த்துக் கொண்டிருந்த அவள் பட்டென்று என் கண்களை ஆழமாகப் பார்த்தாள். கட்டம் சாதுர்யமாக கட்டப்பட்டு விட்டது.

“ஆம் அரசியே… அவனுக்கு படம் புகட்ட வேண்டும்… அவனை ஏதாவது செய்ய வேண்டும்… இங்கு எப்படியாவது வர வைப்போம்” என்றேன்.

அரசி…. மீண்டும் அரசியானாள். 

“அடிமையே நீ  திட்டமிடு…” என்றாள். அவள் இதயம் சிரித்ததை உணர முடிந்தது. அறைக்குள் இனம் புரியாத புழுக்கம் நிரம்பிக் கொண்டிருந்தது.

அன்றிவு வெகு நேரம் யோசித்த பின் ஒரு முடிவுக்கு வந்தேன்.

“டே காதலா… உன் காதலி வர்ஷினி இப்போ என்கிட்டதான் இருக்கா… வெரி சிம்பிள் . கற்பழிச்சு கொன்னு ரயில் ட்ரேக்ல…போட்ருவேன். விசாரணைன்னு வந்தா ஒரு காதலன்னா நீ மாட்டிக்குவா. கடைசியா உன் கூட தான் அவ பேசியிருக்கா. உன்னதான் சந்திச்சிருக்கா… உங்களுக்குள்ள அடிக்கடி சண்டை வந்துருக்கு…. இன்னும் சொல்ல போனா கேஸ சீக்கிரம் முடிக்க போலீஸ் உன்ன தான் மடக்கும். இப்போ கூட பாரு… அவ போன்ல இருந்து தான் பேசறேன். நான் பேசறேன்னு யாருக்கும் தெரியாது. அவ பேசினான்னு தான் பின்னால தெரிய வரும்…ஈஸியா மாட்டிக்குவ… அதனால, நான் சொல்றத மட்டும் கேளு.. இதுல இருந்து வெளிய வந்தார்லாம்….” என்றேன்… தீர்க்கமாக.

மறுபக்கம் காதடைத்து நின்றான் போல.. திக்கினான்.

அவனுக்கு ஒரு வேலை கொடுத்தேன். சரி செய்கிறேன் என்றான். 

“முடித்து விட்டு சொல். நேரில் சந்திப்போம். போலீஸ்… மற்ற எதற்கு சென்றாலும்.. நீயே உன்னை காட்டிக் கொடுத்துக் கொள்வதற்கு சமம். கவனம்….” என்றேன்…அலைபேசி அணைக்கையில்.

நேரத்துக்கு நேரம் வித விதமான உணவு.. மேசை நிறைத்தது. ஊட்டிய என் விரல்களை நாவால் தடவிப் பார்த்தாள். 

“நீ ரெம்ப  ஸ்வீட் அடிமை” என்று கண்ணடித்தாள். அவள் கண்களின் நரம்புகளை நீவி விட்டபடியே இருந்தன என் கண்கள்.

“தினமும் தக்காளி சோறு தான்.. இல்லனா தயிர் சோறு தான்..ஹாஸ்டல்ல…….! தெரியுமா….? என்று சாப்பிட சாப்பிட வார்த்தை குதப்பினாள். 

“அரசி கண் கலங்க கூடாது….” அவள் உண்ணுவதை ரசித்தேன்.

கண்கள் மூடி நின்று கால் மாற்றி காலை தூக்கி இறக்கினாள். அவள் உள்ளாடையை வாங்கி துவைக்கையில் பார்த்தேன்.. நாலைந்து ஓட்டைகளோடு இருந்தது உள்ளாடை. விரித்துப் பார்த்தேன். கீழே அமர்ந்திருந்த என் முகத்தில் துப்பி என்னை மேல் நோக்கி பார்க்க வைத்தாள்.

“வாங்கற 10000 ரூபாய் சம்பளத்துல பூ போட்ட ஜட்டியெலாம் போட முடியாது அடிமை” என்றாள். வெஞ்சினம் அவள் முகத்தில் அலை அலையாய் நெளிந்தது. ஏனோ அழுகையை அடக்கினாள்.

அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் பூ போட்ட நீல நிற உள்ளாடையை மாட்டி விட்டேன். ஒரு குழந்தையைப் போல குதூகலித்தாள். 

கதவு தட்டும் சத்தம் இருவரையும் ஒரு புள்ளியில் குவித்தது.

“அர்த்தத்தோடு என்னை பார்த்தாள்.

“ஆம்…., அவன் தான்” என்றேன்.

கதவு திறக்கையில் அவனோடு இன்னொருவனும் நின்றிருந்தான். இருவரையும் உள்ளே இழுத்து விட்டு கதவை அடைத்தேன். அந்த இன்னொருவன் என் பால்ய கால நண்பன் பச்சையப்பன். அவனை கண்டு பிடித்து இங்கே கொண்டு வருவது தான் காதலனுக்கு நான் இட்ட வேலை. பயத்தில் அந்த வேலையை சரியாகவே செய்திருக்கிறான் காதலன்.

பச்சையப்பனுக்கு என்னை கொஞ்ச நேரத்தில் அடையாளம் தெரிந்து விட்டது. ஓடி வந்து கட்டி பிடிக்க வந்தான். நான் எட்டி உதைத்தேன். கணத்தில் அரசிக்கு யோசனை. அவளின் காதலனுக்கு குழப்பம். கீழே விழுந்த பச்சைக்கு அதிர்ச்சி. எனக்கு கொண்டாட்டம். மின்விசிறி வேகமாய் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனாலும் கொப்புள சூட அறையெங்கும் தத்தளித்தது.

“உனக்கு ஞாபகம் இருக்கா பச்சை……?” நான் ஆரம்பித்தேன். எனது உடல் இறுகத் துவங்கியது. உள்ளத்தில் எதுவோ சொட்டுவதை உணர்ந்தேன். மூவருமே கவனித்தார்கள். மூன்று திசையின் மூச்சும் என் திசையில்தான் அனலடித்தது.

“ஒரு சனிக்கிழமை ராத்திரி நான் பாட்டுக்கு கோயில சுத்தி பம்பரம் விட்டுட்டு இருந்தேன். நீ என்ன பண்ணுன…? வா சைக்கிள்ல ஒரு ரவுண்ட் போலான்னு சொல்லி என்னை சைக்கிள் முன்னால உக்கார வெச்சிட்டு அப்டியே போன.. அப்டியே பேசிட்டே… ஊரைத்தாண்டி ‘இரட்டைக்கரடு காடு’ வரை போய்ட்டோம். அப்பறம் என்ன பண்ணுன…என்னை இறக்கி விட்டுட்டு, ‘விளையாட்டுக்கு தான்’  நீ திரும்ப வந்துட்ட. நான், நீ வருவ வருவன்னு பார்த்து பார்த்து……கடைசியில வழி தெரியாம பின்னால இருந்த காட்டுக்குள்ள போய்ட்டேன். அங்க ஒரு ஆம்பளையும் இன்னொரு ஆம்பளையும்……. புரிஞ்சுக்கோ பச்சை… அதை நான் பார்த்துட்டேன்…அவுங்க என்ன பண்ணுன்னாங்க…என்னையும் உள்ள இழுத்து போட்டு என் ட்ரெஸ்லாம் கழட்டி…புரிஞ்சுக்கோ பச்சை…”

மூவரும் என்னையே பார்த்தார்கள். நானும் கூட என்னைத்தான் பார்த்தேன்.

“அப்போ எனக்கு வயசு 11. கிட்டத்தட்ட சைல்டு அபியூஷ் தான் அது. அதுக்கப்பறம்… ஒவ்வொரு சனிக்கிழமையும் என்னை அந்த நினைப்பு தூங்க விடல..  அந்த ஆம்பளைங்கள்ல ஒருத்தன் தான் இவன்…” என்று பச்சையிடம் அரசியின் காதலனைக் காட்டினேன். ஒருகணம் அரசியும் பச்சையும் திகைத்து காதலனைப் பார்த்தார்கள். 

“இவன்னா இவன் இல்ல. இவன மாதிரி ஒருத்தன். இவுனுங்கெல்லாம் ஒருத்தன் தான். புரியுதா இல்லையா… இவனும் அவன் தான். அவன் தான் இவன். இன்னும் கேட்டா அந்த இன்னொருத்தனும் இவன் தான்……” பட்டென்று முடிவெடுத்தவனாய்  “டேய் காதலா நீ பச்சையை அடிச்சு கொல்லு…”என்றேன்.

அரசி தலையில் கை வைத்துக் கொண்டு சுழலும் கண்களோடு என்னைப் பார்த்தாள். நான் அர்த்தத்தோடு அவள் கண்களை ஊடுருவினேன். 

“ஆமா அடிமை சொல்றது சரி தான். அவனை அடிச்சு கொல்லு” என்று அவளும் கத்தினாள். பச்சைக்கு ஒன்றும் விளங்கவில்லை. மூவரையும் பயத்தோடு மாறி மாறி பார்த்தான்.

“மச்சான்….என்னடா என்னென்னமோ சொல்ற. அது எப்பவோ நடந்த விஷயன்டா…” பச்சை கிட்டத்தட்ட அழும் குரலில் தடுமாறி பின் வாங்கினான். ஒரே யோசனை அவன் உடலில்.

“எப்பவோ நடந்த விஷயம்தான். ஆனா அது இப்பவும் விஷம்….” என்றேன்.

“டேய் லூசுங்களா…….என்னடா நடக்குது இங்க…..கேனைங்க மாதிரி பேசிட்டு இருக்கீங்க…..!?” பேசிக் கொண்டே மூவரையும் மாறி மாறி பார்த்தான் காதலன். அவன் உடல்மொழி கோபத்தில் அசைந்தது.

“ம்ம்ம்…. நீ அரசியை திருட்டு முண்டைன்னு சொன்னீல்ல….அதுக்குத்தான் விசாரணை நடக்குது…!” என்றேன்… காதலனைப் பார்த்து.

“ஆம் அடிமை.. விசாரணைதான் இது…” என்றவள் காதலன் பக்கம் திரும்பி, ” டேய் காதலா அடிமை சொன்னது போல பச்சையை முதலில் அடித்துக் கொல்… பிறகு என்ன செய்வதென்று முடிவு செய்வோம்” என்றாள்.

“கண்கள் சுருக்கிய காதலன், ” வர்ஷினி…. உனக்கு என்னாச்சு… அவன்தான் லூசு மாதிரி பேசிட்டு இருக்கான்னா… நீயும் கிறுக்கி மாதிரி பிஹேவ் பண்ற….” என்று சொல்ல சொல்லவே, இரும்பு சேரை எடுத்து காதலனின் தலையில் பட்டீர் என்று அடித்து நொறுக்கினாள். தலை நொறுங்க சரிந்தான் காதலன்.

“லவ் பண்ணினா உடனே எல்லாத்தையும் திறந்து காட்டணுமா….எல்லாத்தையும் பண்ணனுமா….? அதுவும்…….ரோட்ல மரத்துக்கு பின்னால… ம்ம்ம்.. உன்ன நம்பித்தானே… இருந்தேன்… வாழ்க்கை முழுக்க ஹாஸ்டல் சோறே கதின்னு கிடந்தவளுக்கு உன்ன பார்த்த பின்னால தான் நம்பிக்கை வந்துச்சு…. வாழ, ஒரு ஆசையே வந்துச்சு… எல்லாத்தையும் கெடுத்துட்டியே நாயே…நான் திருட்டு முண்டையா….?!!!!!!! வாட்சப் சாட்டை வெளிய காட்டுவியா…முத்தம் குடுத்த போட்டோவை ஊருக்கே காட்டுவியா….? ..அப்டி இப்டி பேசினதை யு டியூப்ல போடுவியா… இப்ப போடுடா திருட்டு முண்டா…….”என்று கத்தியவள் என் பக்கம் திரும்பி…….” அடிமை, இவனை அடிச்சே கொல்லனும்” என்று மீண்டும் சேரை அடுத்து அவன் தலையில் இன்னும் பலமாக அடித்தாள். காதலன் மண்டை பிளந்து சரிந்தான். திருட்டு முண்டை சொன்ன வாய் முழுக்க இருட்டு ரத்தம்.

பச்சை செய்வதறியாது நின்றான். அவன் உடல் வேகமாய் நடுங்கியது. அவனின் நா வறண்டு மிரண்டது. கண்களில் சிமிட்டாத்தனம் திகைக்க செய்திருந்தது.

நான் என் கண்களை பச்சையின் மீது ஊர விட்டேன்.

“ஏன் பச்சை, அன்னைக்கு அப்டி பண்ணின…நாய்ங்க மாதிரி அவுனுங்க என்னை பிராண்டினாங்க தெரியுமா….எல்லாத்துக்கும் காரணம் நீ தான பச்சை…… உன்னை நம்பி வந்ததுக்கு பச்சை துரோகம் பண்ணிட்டியே பச்சை……ம்..உன்னையும் கொன்னாதான் பாவம் தீரும் பச்சை….” நான் அரசியின் கண்களை பார்த்துக் கொண்டே பேசினேன்.

“டே… கொலைகாரா… இப்பதான் எனக்கு எல்லாம் புரியுது…. இரட்டைகரடுல அந்த இரட்டை கொலையப் பண்ணுனது நீ தானா……. நீ திட்டம் போட்டு தான் இப்டி பண்ணிட்டு இருக்கியா…. மாட்னடா…. இப்பவே போலீசுக்கு போறேன்” என்று கதவு பக்கம் பாய்ந்தோடினான் பச்சை.

“அர…சி…”  கத்தினேன்.

அரசி அதே சேரை எடுத்து பச்சை மண்டையையும் பிளந்தாள். பச்சை மண்டையில் இருந்து சிவப்பு ரத்தம் அறை முழுக்க தெறித்து வழிந்தது. அறை சிவப்பு நிறத்தில் நெளிந்தது. 

“ரத்தம்தான் வாழ்வின் தீரா உண்மைகளை கொப்பளிக்கிறது….”என்றேன். 

“நீ பேசறது நல்லா இருக்கு” என்று பாதி சொருகிய கண்களோடு அரசி சிரித்துக் கொண்டேயிருந்தாள். 

விடிவதற்கு முன் அரசியை எங்கு வண்டியில் ஏற்றினேனோ அங்கேயே இறக்கி விட்டேன். அவளை அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த இருக்கையில் சாய்ந்து அமர வைத்தேன். அவள் தூக்க கலக்கத்தில் இருந்தாள். அவளுக்கு நன்றாக நினைவு வர அவளே அறியாமல் பாலோடு அவள் குடித்த தூக்க மாத்திரையின் தாக்கம் வடிய வேண்டும். அதற்கு இன்னும் சற்று நேரம் ஆகும். இரண்டு பேக்-களில் மடிந்து சிரமம் கொடுக்காமல் படுத்துக் கொண்டிருந்த பச்சையையும் காதலனையும் கணுவாய் கல்லுக்குழிக்குள் வீசி எறிந்தேன்.

எனக்கு தனிமை பிடிக்காது.  வாரம் ஒருத்தர் இப்படி அகப்பட்டுக் கொள்வது யாரின் தவமோ…எனக்கு வரம். வீட்டுக்குள் ரத்தம் சுத்தம் செய்தபடியே நிமிர்ந்த போது விடிந்திருந்தது. 

அது சனிக்கிழமை.

தனித்திருப்பவனின் சனி இரவு எப்படி இருக்கும். தெரியுமா…?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *