கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் கிரைம்
கதைப்பதிவு: February 5, 2024
பார்வையிட்டோர்: 10,024 
 

(1992ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40 | அத்தியாயம் 41-45

அத்தியாயம்-36

அந்தி சாயும் நேரம். விழுப்புரம் தாண்டி மதுராந்தகத்தை நெருங்கிக் கொண்டிருந்தேன். இன்னும் சென்னைக்கு ஐம்பது மைல் தூரம்தான் இருக்கும். முனிசிபல் விளக்குகள் எரிய ஆரம்பித்து விட்டன. பசுக்கள் மந்தை மந்தையாக வீடு திரும்பும் நேரம். சூரியன் மறைந்து பூராவும் இருட்டவில்லை. காரில் முன் விளக்குகளின் வெளிச்சமும் பிரகாசமாகத் தெரியவில்லை. இரண்டுங் கெட்டான் வெளிச்சம். இம்மாதிரியான நேரத்தில்தான் கார் விபத்துக்கள் நேரக்கூடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். திடீரென என் பின்புறமிருந்து, ”டேய்!” என்ற குரல் கேட்டது. 

அந்தக் குரலில் ஆணவமும் ஒரு மிருகத்தனமும் தொனித்தது. சட்டென்று திரும்பினேன். துணி மூட்டை போல் தொய்ந்து படுத்திருந்த திலீபன் தன் இடத்தில் எழுந்து உட்கார்ந்திருந்தான். அவன் தோற்றத்தில் பலவீனமில்லை. பயமில்லை. ஒரு மிருக பலம் இருந்தது. அவன் கண்கள் கறுத்திருந்தன. வெளுப்பான உதடுகள் இப்போது ரத்தச் சிவப்போடு காணப்பட்டன. உதடுகள் விலகிப் பற்கள் கோரப் புன்னகையோடு காட்சி அளித்தன. அன்றொரு நாள் நான் ராமலிங்கத்தோடு அடையாறு வீட்டிற்குப் போனபோது பார்த்த திலீபனின் அதே அலட்சியம் இன்று தெரிந்தது. 

“என்ன ராமநாதா! காரை இவ்வளவு மெல்ல ஓட்டுகிறாய்? வேகமாக ஓட்டக் கூடாது?” என்று சொல்லி ஒரே தாவில் பாய்ந்து முன் சீட்டிற்கு வந்துவிட்டான். ஓடும் காரிலேயே என்னை நகர்ந்து கொள்ளச் சொல்லிவிட்டு டிரைவிங் சீட்டில் உட்கார்ந்துகொண்டு அவன் காரை ஓட்ட ஆரம்பித்தான். 

ஸ்டியரிங் வீலை அனாயாசமாகப் பிடித்தபடி ஆக்ஸிலேட்டரை மிதிக்க ஆரம்பித்தான். கார் வேகமாகச் செல்ல ஆரம்பித்தது..திலீபன் என்னிடம் “பயப்படாதே ராமநாதா!” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தான். 

காரின் வேகத்தைக் காட்டும் மீட்டரில் 60, 70, 80 என்று அதிகமாகிக் கொண்டே சென்றது. அதோடு திலீபனின் சிரிப்பிலே ஒரு வெறியும் ஏறிக் கொண்டே சென்றது. 

ரோடில் எதிர்ப்புறம் வரும் வண்டிகள் என் பார்வையில் பறந்து மறைந்தன. திலீபன் காரை ஓட்டும் வேகம் எனக்கு நடுக்கத்தைக் கொடுத்தது. உளுந்தூர்ப்பேட்டையில், எழுந்து உட்காரக்கூட முடியாமல் சவம்போல் கடந்த திலீபனா இப்படிக் கார் ஓட்டுகிறான் என்று ஆச்சரியப்பட்டேன்.

முன்பு ஒரு தரம் நானும் திலீபனும் திருச்சியிலிருந்து உதக மண்டலத்திற்குக் காரில் சென்றதுண்டு. திலீபன் முதன் முறையாக உதகமண்டலத்திற்கு அப்பொழுது தான் பயணம் செய்தான். அந்தப் பயணத்தின்போது நான் சற்று வேகமாகக் கார் ஓட்ட நேரும் பொழுதெல்லாம் திலீபன் நடுங்குவான். ‘மெள்ள ஓட்டு! மெள்ள ஓட்டு! லாரியில் மோதிவிடப் போகிறாய்! எனக்குப் பயமாக இருக்கிறது!’ என்று கதறுவான். 

அந்தத் திலீபனா இவன்! திலீபன் இப்போது கார் ஓட்டிய விதம் எனக்கே குலை நடுக்கத்தைக் கொடுத்தது. சில மாதங்களில் எத்தனை மாறுதல்கள்! 

அன்று திலீபனுக்குக் கார் உறுப்புக்களின் பெயர்கூடத் தெரியாது. எது ‘கிளட்ச்’ எது ‘கியர்’ என்று தெரியாமல் இருந்தவன் இன்று என்னமாய்க் கார் ஓட்டுகிறான்! எப்போது கற்றுக் கொண்டான்? 

மாலைவேளையில் வண்டிகள் சாரிசாரியாகப் போகும் சாலையில் காரை இப்படியும் அப்படியும் ஒதுக்கி, வேகம் குறையாமல் ஓட்டினான். எனக்கு அச்சமாக இருந்தது. பாதையில் செல்பவர்கள் வெருண்டு ஒதுங்கினார்கள். 

“என்ன ராமநாதா. பேசாமல் மௌனமாக உட்கார்ந்திருக்கிறாய்?” என்று கார் ஓட்டியபடியே திலீபன் என்னைக் கேட்டான். 

“திலீபா! புரியாத விஷயங்கள் எனக்குத் திகைப்பூட்டும்போது நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது? சில மணிக்கு முன்னால் நீ சரியாக உட்காரக்கூட முடியாமல் சவம் போல் கிடந்தாய். இப்போது திடீரென்று எழுந்து உட்கார்ந்து கார் ஓட்டுகிறாய்!” என்று அவனைப் பார்த்தேன். 

அவன் கடகடவென்று சிரித் தான், என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி. அவன் என்னைப் பார்த்த விதம் முற்றிலும் புதுமையாக இருந்தது. அந்தப் பார்வை திலீபனின் பார்வைபோல் இல்லை.

“திலீபா! டாக்டர் நாதன் சொன்னதைப் பார்த்தால் நீ எழுந்து நடமாட இன்னும் ஒரு மாதமாவது ஆகும் என்று தோன்றியது. அதுவும் நல்ல உணவு. டானிக் சாப்பிட்டால் தான் முடியும் என்றார். ஆனால் நீயோ…” என்று சொல்ல ஆரம்பித்தேன். 

திலீபன் என்னை இடைமறித்து, “டாக்டர் நல்லவர்தான். ஆனால் மண்டு. மனிதன் உணவால் வாழ்வதில்லை. டானிக்குகளால் அவன் வாழ முடியாது. தேகம் பலம் அடைவதில்லை. மனிதன் மனத்தால், ஆசையால் வாழ்கிறான். மனமே அவனுக்குப் பலம் அளிக்கிறது. ஆசையே வாழ்விற்கு வேகம் தருகிறது. ஆசையை ஒழித்தவன் தான் சவமாகிறான். அவனைத்தான் – அந்தச் சவமாகும் நிலையைத்தான்- கௌதம புத்தன் நிர்வாண நிலை அடைவதாகக் குறிப்பிட்டான். ஆசை இருக்கும் வரை யாரும் மறைய முடியாது. ஆசை இல்லாவிட்டால் உலகம் இல்லை!” என்றான். 

”திலீபா! நீ சொல்வது ஒரு விபரீதமான தத்துவமாய் இருக்கிறதே! ஆசையை ஒழிப்பதுதான் இன்பத்திற்கு வழி என்று எல்லா மதங்களும் ஏகமனதாய்ச் சொல்கின்றன!” 

திலீபன் சிரித்தான். “எது இன்பம் என்று நிர்ணயித்த பின்பு தானே அதை நோக்கிப் பாதை போட முடியும்? ஒவ்வொருவனுக்கு ஒவ்வொன்று இன்பமாக இருக்கும். ஒன்றுமில்லாமல், சூனியம் என்ற சைபர் நிலையை லட்சியமாக வைத்து, புத்தன் பாதை வகுத்தான். பலத்தோடு ஆக்கி அழித்து நிற்கும் நிலை இன்ப நிலையா? இல்லை, ஒன்றுமில்லாமல் வெறும் சைபராக முடிவது லட்சிய நிலையா? புத்தன் துன்பம் இல்லாத ஒரு நிலையை இன்ப நிலை என்று நினைத்தான். இல்லாத ஒன்று இருக்கும் ஒன்றாகிவிட முடியுமா? முள் ஓரிடத்தில் இல்லை என்று சொல்வதிலிருந்தே அங்கு மலர் இருக்கிறது என்று அர்த்தம் கொள்ளச் சொன்னால் அது பொருந்துமா? கௌதம புத்தன் பாதிக்கிணறு தாண்டிய மேதை. ஆசை இல்லாவிட்டால் ஒன்றுமில்லை!” 

படபடவென்று பேசிவிட்டுத் திலீபன் நிறுத்தினான். 

திலீபன் பேசிய முறையிலும், பேசிய குரலிலும் எனக்கு ஏதோ மாறுதல் இருப்பதுபோல் தெரிந்தது. ஆனால் இன்னதென்று விளங்க வில்லை.திலீபனுக்குப் பதில் சொல்லாமலே நான் ரோடைப் பார்த்தபடி மௌனமாக இருந்தேன். திலீபனும் சிறிது நேரம் என்னோடு ஒன்றும் பேசவில்லை. பிறகு திடீரென்று திலீபன் என் பக்கம் திரும்பினான். என் பார்வை அவன் கண்கள் மீது சென்றது. அவன் கண்களில் ஏதோ மாறுதல் இருப்பதுபோல் தோன்றியது. 

திலீபன், “ராமநாதா! உடல் பலமிழந்து டாக்டர் வீட்டில் படுத்திருந்தபோது நான் ஏதாவது சொன்னேனா?” என்று கேட்டான். 

“எதைப்பற்றிக் கேட்கிறாய் திலீபா?”

திலீபன் தயங்கி விட்டுப் பிறகு தொடர்ந்து சொன்னான்: ”ஆனந்தியைப்பற்றி, மேஜரைப் பற்றித் தான் சொல்கிறேன். அவர்களைப் பற்றி நான் ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் – ஏதாவது அவதூறு சொல்லியிருந்தால்- அதைப் பொருட்படுத்தாதே. ஆனந்தி நல்லவள். மேஜர் அதைவிட நல்லவர். தவறெல்லாம் என்னுடையது. உனக்குக் கோபமிருந்தால் அதை என்னிடம் காட்டு. உன் குடும்பத்தில் நேர்ந்த குழப்பத்திற்கெல்லாம் நான் பொறுப்பாளி. என் மனநிலைதான் காரணம். மனித நிலையின் விளிம்பிலுள்ள ஹிப்நாடிக் ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டதே இவ்வளவுக்கும் காரணம். என்னைப் போன்றவன் சாதாரண மனிதனைப் போல் திருமணம் முதலிய மாமூல் விஷயங்களில் அக்கறை செலுத்தி இருக்கவே கூடாது. நீயும் சீதாவும் ஜோடியாக வாழ வேண்டியவர்கள். உங்கள் வாழ்வில் நான் குறுக்கிட்டுவிட்டது பெரும் தவறு. அதற்கு என்னை மன்னித்துவிடு!” 

கொஞ்ச நேரத்திற்குமுன்பு திலீபனே மேஜரையும் ஆனந்தியையும் திட்டி இருக்கிறான்- பலவீன நிலையில் படுத்திருக்கும் போது. இப்போது அவனே மேஜர் சார்பில் பேசுகிறானே! இவனை எந்தக் கணக்கில் வைப்பது என்று புரியாமல் தவித்தேன். சென்னை வந்ததும் எங்கள் நண்பரான டாக்டர் ஷண்முகசுந்தரத்திடம் இது பற்றிப் பேசவேண்டும், அவரிடம் இந்த விசித்திர மாறுதலைப் பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்தேன். அடுத்த வினாடியே என் அருகில் அமர்ந்திருந்த திலீபன் சிரித்தான்? தொடர்ந்து சிரித்தான். 

“ராமநாதா! என் உண்மை நிலையைப்பற்றி எந்த டாக்டரும் புரிந்து கொள்ள முடியாது.நாகரிக டாக்டர்கள் படித்ததெல்லாம் சிறிதளவுக்குத்தான். அவர்களுக்குப் புரியாத அவர்களது வைத்தியம் சாஸ்திரம் புரிந்துகொள்ள முடியாத, பிராந்தியங்களை எல்லாம் புரிந்துகொண்டவன் நான். தற்கால விஞ்ஞானிகளின் பெரும் தவறு என்ன தெரியுமா? அவர்களுக்குப் புரியாத விஷயத்தை, அவர்களால் நிர்மாணிக்க முடியாத விஷயத்தைப் பொய் என்று சொல்லிவிடுகிறார்கள். காலம், பரிமாணம் இரண்டுக்கும் உட்பட்டது அவர்களுடைய சிந்தனை எல்லாம், என்னை அவர்கள் ஒரு பைத்தியம் என்று தீர்மானிப்பார்கள். என்னைச் சங்கிலியால் கட்டிப் போடுவார்கள். எனக்கு மாத்திரை கொடுத்து வைத்தியம் செய்வார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான்!” 

“நான் நினைத்தது உனக்கு எப்படித் தெரிந்தது?” என்று கேட்டேன். 

திலீபன் ஒரு வினாடி பேசவில்லை. “எனக்கு அரை அடி தூரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் நீ சிந்திப்பது எனக்கு நீ சொல்லாமலே தெரிகிறது. உன்னுடைய டாக்டர் இதற்குத் ‘தாட் ரீடிங்’ என்ற ஆங்கிலப் பெயர் சொல்வாரே அல்லாமல் அதைப் புரிந்து விளக்க அவரால் முடியாது!” 

கார் சென்னை நகரினுள் பிரவேசித்தபடி இருந்தது. எங்கள் பின்னாலிருந்து ஒரு கார் எங்களைத் தாண்டிச் சென்றது. அந்தக் காரின் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியிலிருந்து அது மேஜராக இருக்குமோ என்று நினைத்தேன். அதே காரில் பின் சீட்டில் யாரோ படுத்திருப்பது போல் தெரிந்தது. படுத்திருந்தது யாராக இருக்கும்? ஆனந்தியாக இருக்குமோ என்று எண்ணினேன். அதற்கு மேல் எனக்கு எதையும் சிந்திக்கத் துணிவில்லை. நான் சிந்திப்ப தெல்லாம்தான் அருகில் இருக்கும் திலீபனுக்குப் புரிந்து விடுகிறதே! ஆகையால் மௌனமாக உட்கார்ந்திருந்தேன். திலீபனும் பேசாமல் கார் ஒட்டிவந்தான். முடிவில் நான் தான் மௌனத்தைக் கலைத்தேன்.

“திலீபா, நீ என்னோடு மாம்பலத்துக்குத்தானே வரப் போகிறாய்?”

திலீபன் யோசித்தான் ஒரு கணம். “இல்லை ராமநாதா, நான் இன்று வீட்டிற்கு வரவில்லை. அடையாறிலுள்ள மேஜர் வீட்டிற்குதான் போகப் போகிறேன். உன்னை உன் வீட்டில் இறக்கிவிட்டுச் செல்கிறேன்” 

காரை வேகமாகத் தியாகராயநகர் செல்லும் பாதையில் திருப்பினான். வீட்டை நெருங்கியதும் நான் இறங்கிக் கொண்டேன். திலீபன் காரை ஒட்டிச் சென்றான். என்னுடைய கார் அது. அதை அவன் ஓட்டிச் சென்றான். அவனைத் தடுக்க எனக்குத் தைரியம் இல்லை. இவன் குற்றுயிராகக் கிடக்கிறான் என்பதற்காகப் பல நூறு மைல்கள் கார் எடுத்து வந்து அதில் அவனை ஏற்றி எவ்வளவோ பாடுபட்டு வீடு கொண்டு வந்திருக்கிறேன். அதைக் கொஞ்சமும் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. இருந்தும் அவனிடம் ஏன் ஒரு வார்த்தை கூட எதிர்த்துப் பேசத் தோன்றவில்லை. பிரமித்துப் போன நிலையில் வீட்டுக்குள் நுழைந்தேன். 

என்னைப் பார்த்ததும் சீதா ஓடோடி வந்தாள். “அவர் எங்கே அத்தான்? கார் எங்கே அத்தான்! அவர் ஏன் வரவில்லை? அவருக்கு அபாயம் ஒன்றுமில்லையே! அவருக்கு….. அவருக்கு… அவர் உயிருக்கு…” என்று சொல்லி எதையோ நினைத்து வார்த்தையால் சொல்ல முடியாதவள்போல் நிறுத்தினாள். 

“அவன் உயிருக்கு ஆபத்தில்லை. அவன் சௌக்கியமாக இருக்கிறான். நம் எல்லோரையும் விட நல்ல நிலையில்தான் இருக்கிறான்”, என்று சலிப்போடு கூறினேன். 

“அவரை அழைத்து வருவதாகச் சொல்லிச் சென்றீர்களே? அவர் இனி நம்மோடுதான் இருப்பார் என்றெல்லாம் சொல்லிச் சென்றீர்களே? ஏன் அத்தான் அவர் இல்லாமல் வந்திருக்கிறீர்கள்? அவர் குற்றாலத்திலேயே இருக்கிறாரா? சென்னை வரவில்லையா?” என்று தொடர்ந்து கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள். 

அதோடு திலீபனின் தாயும், தன் மகன் வீடு திரும்பப் போகிறான் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்திருக்கிறாள். மீனாட்சி அம்மாளின் முகத்தில் உள்ள ஆவலைப் பார்த்தேன். வயது முதிர்ந்த தாய், இளம் பெண் சீதா என்ற இரண்டு ஜீவன்களும் தனக்காக எவ்வளவு துடிக்கின்றன என்று கொஞ்சமேனும் திலீபன் நினைத்தானா? இவர்களைப் பார்க்கும்போது திலீபனைப் படுத்த படுக்கையாக நோயோடாவது கொண்டு வந்திருக்கலாமே என்று தோன்றியது. 

“திலீபன் திரும்பிவிட்டான் சீதா. ஆனால் நம் வீட்டிற்குத் திரும்பவில்லை.அடையாறு வீட்டிற்குத்தான் சென்று விடடான்.” என்று கூறிவிட்டு நகர்ந்தேன். 

சீதா அப்படியே ஸ்தம்பித்து உட்கார்ந்துவிட்டாள். அன்றிரவு எட்டு மணி வரையில் சீதா ஒன்றும் பேசவில்லை. 

மணி எட்டு அடித்துச் சில வினாடிகளுக்கெல்லாம் எங்கள் வீட்டுக் கதவு மணி அடித்தது. நான் போய்க் கதவைத் திறந்தேன். அங்கு திலீபன் நின்று கொண்டிருந்தான். அவன் என்னிடம் காரின் சாவியைக் கொடுத்துவிட்டு, “காரைப் பத்திரமாகக் கொண்டுவந்துவிட்டேன் ராமநாதா!” என்று சொல்லி விட்டு, ஒருவிதமான விஷமப் புன்னகை யோடு சீதாவை ஒருமுறை பார்த்தான். தெருப் பொறுக்கிகள் ஒரு பருவப் பெண்ணைக் கெட்ட எண்ணத்தோடு பார்ப்பதுபோல் இருந்தது அப்பார்வை. 

வாயிலிருந்த சுருட்டை எடுக்காமல் புகைவிட்டப்படியே இருந்தான். “திலீபா, உட்கார்!” என்று சொன்னேன். 

அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஹாலை ஒருமுறை கண்காணித்தான். தன்னை ஈன்ற தாய் அங்கு நிற்பதைக் கூட நினைத்துப் பாராமல் சுருட்டைப் பிடித்தபடி நின்றான். அதைப் பார்த்ததால் உதடுகள் படபடவென்று துடித்தன. மெலிந்து போனவர்களுக்குக் கோபம் வரும்போது உடல் பெருங் காற்றில் வேர்ப்பலம் இல்லாத மரங்கள் ஆடுவதுபோல் ஆடுகிறது.

அத்தியாயம்-37

“திலீபா! திலீபா! உங்கப்பா சாகல்லேடா. அவர் மாதிரியே நீ ஆயிட்டேடா. நீ அவரே தான்! அவரே தான்!” என்று மீனாட்சி அம்மாள் அலறியபடி பாய்ந்து திலீபனைத் தன் பலம் கொண்ட மட்டும் அறைந்து விட்டாள். 

கணவன் வாழ்ந்த போது அவர் விளைத்த கொடுமைகளுக்காக அவரைக் கை நீட்டி அடிக்க முடியாத நிலையில் இருந்த மீனாட்சி அம்மாள் இப்போது அவர் தந்த மகனை அடித்துத் தன்னுடைய வாழ்நாள் ஆத்திரத்தை எல்லாம் தீர்த்துக் கொண்டாளோ என்று கூறும்படி இருந்தது அவள் செய்கை. திலீபன் இந்தத் தாக்குதலைச் சிறிதும் எதிர் பார்க்கவில்லை யாகையால் அறைகள் மழை போல் விழவும் அப்படியே நடுங்கியபடி நின்றான்.

திலீபனின் கண்களில் இருந்த பயங்கரக் கவர்ச்சி மறைந்தது. அந்தக் கண்களின் சக்தி எங்கோ மறைந்தது. அங்கு பீதியும் பயமும்தான் மிஞ்சி நின்றன. அவன் ஆணவமும் எக்காளமும் எங்கோ ஓடிப் போய்விட்டன. காட்டில் வேட்டைக்காரனது துப்பாக்கி சத்தம் கேட்டு மான் நடுங்கி ஓடுவது போல் வீட்டை விட்டு ஓடி விட்டான் 

மீனாட்சி அம்மாளுக்குக் கோபம் வரும் என்பதை அன்று தான் நேரில் பார்த்தேன் ‘இந்திர ஜாலங்களைப் புரியும் திலீபனின் மனோசக்தி தாயின் முன் கட்டுப்பட்டுக் கலங்கி நிற்குமா? திலீபனின் சக்திக்கும் ஒரு வரம்பு இருக்கிறதா?’ என்ற கேள்விகள் என் மனத்தில் எழுந்தன. 

அதே சமயத்தில் அவன் புகைத்த சுருட்டு – தரையில் கிடப்பதைப் பார்த்தேன் அது இன்னும் புகைந்து கொண்டிருந்தது. அதை எடுத்தெறியக் கையில் எடுத்தேன். அதிலிருந்து வந்த மணம் புகையிலையின் மணமாக இல்லை. மல்லிகையின் மணம் வீசியது. சுருட்டை வீட்டின் வெளிப்புறம் வீசி எறிந்தேன். 

தாயின் கரங்களால் அடிக்கப்பட்டு வெளியேறிய திலீபன் சில நாட்களுக்கு எங்கள் வீட்டுப் பக்கம் வரவில்லை. நாங்களும் அவனைப் பற்றிப் பேசுவதும் இல்லை. 

வாழ்க்கையில் எந்தவிதத் தாக்குதலும் பழகிவிடுகிறது. குடிப்பழக்கம் ஆரம்பிக்கும்போது உடல் அதை ஏற்க மறுக்கிறது. உடலில் கோளாறுகள் ஏற்படுகின்றன. தலை சுற்றல், வாந்தி. இவை, கெட்ட பழக்கங்களை உடல் ஏற்க மறுக்கிறது என்பதன் அறிகுறி. 

ஆனால் திரும்பத் திரும்பப் புகையிலையை உபயோகப்படுத்தும் போது உடலும் பழகிப் புகையிலையோடு ஒத்துப்போய்விடுகிறது. அப்புறம் பழக்கம் இல்லாத நிலை. வேதனை தரும் நிலையாகிவிடுகிறது. மனமும் அதே போல்தான் என்று நினைக்கிறேன். திலீபனின் திடீர் மாற்றங்கள், எங்கள் வீட்டில் பழகிப் போன விஷயமாகிவிட்டது. ஆனால் எனக்கு மட்டும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது. என் நண்பரும் பெரிய மனோதத்துவ வைத்தியருமான டாக்டர் சண்முகசுந்தரத்திடம் திலீபன் விஷயமாகக் கலந்து பேச நினைத்தேன். டெலிபோன் செய்து, அவரை அவருடைய மருத்துவமனையிலேயே சந்தித்தேன். ஆரம்ப முதல் திலீபனுக்கு நேர்ந்தவற்றை விளக்கமாகக் கூறினேன். அவர் குறுக்கிடாமல் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டார். 

முடிவில், ”நான் திலீபனைச் சந்தித்துப் பேச முடியுமா? அவனைப் பரிசோதிக்க முடியுமா?” என்று கேட்டார். 

“இப்போது அவன் வீட்டுக்கு வருவதில்லை, டாக்டர்.வந்தாலும் அவன் சிகிச்சைக்கு ஒத்துக் கொள்வானா என்று புரியவில்லை. நான் சொன்ன தகவல்களிலிருந்து, வைத்திய சாஸ்திர ரீதியாக அவனை எந்தக் கணக்கில் நீங்கள் வைப்பீர்கள் டாக்டர்? பைத்தியம் என்று சொல்வீர்களா?” என்று கேட்டேன். 

டாக்டர் சண்முகசுந்தரம் சில வினாடிகள் யோசித்தார். “மனக் கோளாறுகளைப் பொறுத்தவரையில் வைத்தியசாஸ்திரம் இன்னும் பால்ய நிலையிலேயேதான் இருக்கிறது. எல்லாமே தத்துவங்களும் ‘தியரி’களாகவும்தான் இருக்கின்றன. நீங்கள் சொல்லும் விவரங்களிலிருந்து பார்த்தால், திலீபன் இரண்டுவிதமாக மாறிமாறிக் காட்சி அளிக்கிறான். இரண்டு நிலைகளிலும் இரண்டுவித குண அமைப்போடு இருக்கிறான். ஒரு நிலை,பயந்து பச்சாதாபத்தோடு பண்பு நிறைந்தவனாக இருக்கிறான். இன்னொரு நிலையில் துணிவு, கோபம், இரக்க மின்மையோடு இருக்கிறான். அவனிடம் ஒருவிதமான குண அமைப்பு இருக்கும்போது இன்னொருவித குண நிலை தலை காட்டுவதில்லை. இரண்டு குண நிலையிலும் அறிவுக் குழப்பமோ, பிதற்றலோ இல்லை. அந்த அந்த நிலையில் ஆளும் குணத்துக்குத் தக்கவாறு இயங்குகிறான். அப்படித்தானே?” என்று நான் கூறிய விஷயங்களையே சுருக்கமாக மொத்தப்படுத்தி என்னைக் கேட்டார். 

“ஆம் டாக்டர். நீங்கள் சொல்வது சரி. ஒரு சிறந்த நடிகன் இரண்டு வேறுபட்ட பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அதில் ஈடுபட்டு நடித்தால் எப்படித் தோன்றுமோ அப்படித் தெரிகிறது. நடிகனுக்கு நாம நடிக்கிறோம் என்ற நினைப்பு அடிப்படையில் இருக்கும். திலீபனுக்கு அது இல்லை”. 

டாக்டர் சிரித்தபடி, “ராமநாதன்! சரியான வார்த்தைகள் கொண்டு விளக்கினீர்கள். திலீபன் பலவிதமான பாத்திரமாகக் காட்சி அளித்தால் அவனைப் பைத்தியம் என்று கூறலாம். ஆனால் அவன் மாற்றம் இரண்டு திட்டமான அமைப்புகளுக்குள் இயங்குவதால், அவனு டைய நிலையை ‘ஸ்ப்ளிட் பர்சனாலிடி’ அதாவது, ‘பிளவுபட்ட நபர்’ அல்லது ‘பிளவுபட்ட மனிதன்’ என்று தான் கொள்ளவேண்டும். ஒரே மனிதன் தன்னையே திடீரென்று வேறு மனிதனாக நினைத்துக்கொண்டு அதற்குத் தக்கபடி நடப்பான். ஒரே உடலில் இரட்டையர்களாக இருப்பான். அதில் ஒருவன் நல்லவனாகவும் மற்றவன் கெட்டவனாகவும் இருக்க முடியும். இவன் செய்தது அவனுக்கு ஞாபகம் இருக்காது. அவன் பங்கெடுத்துக்கொண்ட நிகழ்ச்சிகள் இவன் ஞாபகத்தில் நில்லாது. நான் டாக்டர் சண்முகசுந்தரம் என்று அறியப்படுவதும் நம்முடைய ஞாபசக்தியால் தானே? ஞாபகம் என்ற சக்தி மனித இனத்தைவிட்டு மறைந்துவிட்டால் உறவுகள், நட்புகள், நாகரீகம் ஒன்றுமே இருக்காது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் நாம் புதிய மனிதர்களாகப் பிறந்துகொண்டே இருப்போம். எல்லாவற்றையும் திரும்பத் திரும்பப் புதிதாகக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டிவரும். நேற்றுக் கற்றது நேற்றோடு. இன்று பயன்படாது. ஒரு மணி நேரத்துக்கு முன் பார்த்தவர்கள் முற்றிலும் புதியவர்களாகக் காட்சி அளிப்பார்கள். திரும்பவும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்.நியூட்டன் கண்டுபிடித்தது, சொல்லிச் சென்றது, கம்பன் எழுதியது ஒன்றுமே இருக்காது. தாய் யார்? தந்தை யார்? மனைவி யார்? மகன் யார்? என்றே அடையாளம் தெரியாமல் போய் விடும். பொதுவாக நம் இனத்துக்கு ஞாபகம் என்பது இருப்பதால்தான். குழப்பமில்லாமல் நாகரீகமாக வாழ முடிகிதுற. ஒவ்வொரு மனிதனுக்கும் பெயரும் உருவமும் தனிமை தருவதில்லை. அவனுடைய ஞாபகங்கள் தான் அவனைத் தனி மனிதனாக்குகின்றன. அவன் ஞாபகங்கள் மட்டுமல்ல. மற்றவர்கள் மனத்தில் அவனைப் பற்றி வைத்திருக்கும் ஞாபகங்கள்தான் அவனுக்குச் சமூகத்தில், உருவம், பெயர், அந்தஸ்து எல்லாம் தருகின்றன. நீங்கள் ராமநாதன், ஒரு வக்கீல், திலீபனின் சகோதரன் என்பதை என் ஞாபகங்கள் எனக்குச் சொல்கின்றன. திடீரென்று என் ஞாபகங்களும் மற்றவர் ஞாபகங்களும் சதிசெய்து உங்களை ஒரு கழுதை என்று நினைக்க வைத்தால் நீங்கள் எவ்வளவு தான் முயன்றாலும் உலகத்தின் பார்வையில் ஒரு வக்கீலாக, மனிதனாக உலாவ முடியாது. உலகம் உங்களைக் கழுதையாகத்தான் நினைக்கும். அழுக்கு மூட்டைகளை உங்கள் முதுகின் மேல் சலவைக்காரர் ஏற்றித்தான் செல்வார்,” என்று சொல்லிச் சிரித்தார்.

“அந்த நிலையை நினைக்கவே பயமாக இருக்கிறது சார்”, என்றேன். 

 “இது மட்டுமென்ன. எவ்வளவோ விஷயங்களை ஆராயாமல் அப்படியே எடுத்துக்கொண்டு விடுகிறோம். அதனால்தான் நிம்மதியாக இருக்கிறோம். உலகத்தில் உள்ளதை உள்ளபடியே ஆராயத் தொடங்கி’னால் எல்லாமே பயங்கரம்தான் அப்போதுதான் ஆண்டவனின் கருணை நமக்குப் புரியும். பூமி என்பது பல ஆயிரக்கணக்கான மைல் நீளமான ஒரு ஜ்வாலை. அதன்மீது சில நூறு மைல்களுக்குப் பொருக்குத் தட்டிய மணல் பரப்பே நாம் வாழும் இடம். அந்த மண் பரப்பின்மீது நாம் கட்டிடம் கட்டி வாழ்கிறோம். கலைகள் வளர்க்கிறோம். அழிக்கிறோம். நெருப்பை மூடி இருக்கும் அந்த மண் திரை உதிர்ந்தால் நாம் என்ன ஆவோம் என்று யாராலும் சொல்ல முடியாது. அது மட்டுமல்ல, இந்த பூமி ஒரு கோணத்தில் சாய்ந்து சுற்றுகிறது. அது நிமிர்ந்து விட்டால் என்ன ஆகும்! கடல் எங்கு? தரை எங்கு? சீதோஷ்ண நிலைதான் என்ன ஆகும்? பூமியின் மத்திய பாகத்தில் நிரந்தரக் கோடை காலமும் இதர பகுதிகளில் நிரந்தரக் குளிர்காலமும் ஏற்பட்டுவிடாதா? மனித வாழ்வே ஒரு மயிரிழையில் ஊசலாடுகிறது. நடந்த வரையில் நடேசன் கருணை என்று வாழ்கிறோம். எதிலுமே நமக்குத் தெரிந்ததைவிடத் தெரியாதது அதிகம், ராமநாதன். நம் பெரியவர்கள், ‘சிந்தையை அடக்கிச் சும்மா இரு’, என்று கூறிய பொன்மொழி தான் வாழ்வுக்கு உகந்த மொழி!” என்று டாக்டர் கூறி முடித்தார். 

தெளிவு தேடி டாக்டரிடம் போன நான் மிஞ்சிய குழப்பத்தோடு வீடு திரும்பினேன். 

திடீரென்று ஒரு நாள் திலீபன் வீட்டுக்கு வந்தான். கதவைப் பட படவென்று தட்டினான். நான் போய்த் திறந்தேன். அவன் வெளியே சோர்ந்துபோய் நின்று கொண்டிருந்தான். 

“அண்ணா! நான் வரலாமா?” என்று கேட்டான். 

அவனை உள்ளே வரச் சொன்னேன். 

உள்ளே நுழைந்த திலீபன் நேராகச் சென்று அவன் தாயின் பாதங்களில் விழுந்தான். மீனாட்சி அம்மாள் திகைத்து நின்றாள். அவள் அவனிடம் அன்பு வார்த்தைகளும் சொல்லவில்லை. அவனைத் திட்டவும் இல்லை. 

“அம்மா! நீங்க இப்போது என்னை மன்னிக்க வேண்டாம். மன்னிப்புக்கு உரிமையுள்ளவனான பின்பு மன்னித்தால் போதும்”, என்று சொல்லிவிட்டு வெளிப்புற அறையில் உட்கார்ந்து கொண்டான். 

சீதா. கந்தசாமி கோயிலுக்குச் சென்று அப்போதுதான் வீடு திரும்பி வந்தாள். அவள் திலீபனைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டாள். திலீபனும் அவளை நிமிர்ந்து பார்த்ததும் குழந்தைபோல் அழுது விட்டான். சீதா ஒன்றுமே பேசவில்லை. அவனைப் பார்த்தபடியே நின்றாள். 

“அத்தான்! பிரசாதம் வாங்கிக் கொள்ளுங்கள்”, என்று கூறி விபூதியையும் குங்குமத்தையும் அவன் முன்பு நீட்டினாள். 

திலீபன், “சீதா, பிரசாத்தைத் தரையில் வைத்துவிடு. உன் கை என் மீது படவேண்டாம். நான் தீண்டத் தகாதவன்.” என்று நடுங் கியபடியே சொன்னான். 

சீதா ஒன்றும் புரியாமல் ஒரு வினாடி நின்றாள். பிறகு பிராசதத்தைத் தரையில் வைத்தாள். 

திலீபன் விபூதியையும் குங்குமத்தையும் நெற்றியில் பூசிக் கொண்டான். ‘ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்! பராசக்தி, ஓம் சக்தி ஓம்சக்தி ஓம்! சுற்றி நில்லாதே போ, பகையே துள்ளி வருகுது வேல்!’ என்று முணு முணுத்தான். 

நான், “திலீபா! உனக்கு என்ன நேர்ந்திருக்கிறது? உண்மையை மறைக்காமல் சொல். நான் உனக்குத் துணையாக இருக்கிறேன்,” என்றேன். 

“என்னை ஒன்றும் கேட்காதே, அண்ணா! எனக்கு யாரும் துணையாக வர முடியாது. இது நானே தீர்மானம் செய்து முடிக்க வேண்டிய விஷயம்! என் தாயை மட்டும் நிராதரவாக விட்டு விடாதே. நான் அதிக நாள் உயிர்வாழ மாட்டேன்!” என்று சொல்லித் திலீபன் சீதாவைப் பார்த்தான். 

அவள் கண் கலங்கியபடி நின்று கொண்டிருந்தாள்

நான் சீதாவோடு தனிமையில் சில வார்த்தைகள் பேச வேண்டும், என்று கெஞ்சியபடி கேட்டான். நான் உடனே வெளியே வந்து விட்டேன். 

திலீபன் எப்போது எப்படி மாறுவானோ என்ற பயம் இருந்ததனால் கதவின் வெளியே மறைவில் நின்றுகொண்டே உள்ளே நடப்பதைக் கவனித்தபடி இருந்தேன். திலீபன், “சீதா! நீ எனக்கு ஓர் உறுதிமொழி தரவேண்டும். தருவாயா சீதா?” என்று கேட்டான். 

“என்ன உறுதி, அத்தான்?”

“நீ ராமநாதனை மணந்து கொள்ள வேண்டும்”. 

சீதா பேசாமல் இருந்தாள். திலீபன் தொடர்ந்து கூறினான்: “சீதா, நான் மீண்டும் திரும்பி வருவேன், உன்னை மணந்து வாழ்வேன் என்று கனவு காணாதே! எனக்கு விமோசனமே இல்லை!” 

“அப்படியென்றால் அத்தான், எனக்கும் விமோசனமே இல்லை! அத்தான் ராமநாதனை நான் அண்ணாவாகத்தான் நினைக்கிறேன். அவரை நான் என்றும் கணவராக நினைக்கவே முடியாது!” 

திலீபன் வாதாடினான். “இன்னும் சில மாதங்களில் நான் இறந்து விட்டால்? அப்போது?” 

“கல்யாணமே ஆகாத கைம் பெண்ணாக இருப்பேன்! ஆனால், அத்தான், அந்த நிலை எனக்கு வராது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கல்யாணம் என்பது மனிதர்கள் நடத்தும் சடங்கு. என் மனத்தில் உங்கள் மீது ஆசை ஏற்பட்ட நாள் முதல் இதுவரை எனக்கு உங்கள் மீது கோபம் வரவில்லை. அப்படிச் சிறிதும் மாறாத கற்பு நிலையில் நான் இருக்கும்போது, சாவு எப்படி அத்தான் உங்களை நெருங்க முடியும்?”

அத்தியாயம்-38

நான் சரியென்று ஒப்புக் கொண்டேன். இருவரும், என் தந்தை சபாபதி சாகும் போது குடி இருந்த சிறு வீட்டிற்கு வந்தோம். அந்த வீட்டில் இப்போது ஒரு பயில்வான் குடியிருந்தான். அவன் முதலில் எங்களை வீட்டினுள் அனுமதிக்கவே மறுத்தான். பிறகு திலீபன் அவனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்: “ஐயா, நாங்கள் இந்த வீட்டில் முன்பு குடி இருந்தவர்கள். பரணில் ஒரு சாக்கில், பழைய பேப்பர்களும் புத்தகங்களும் வைத்திருந்தோம். அதைப் பார்க்க வேண்டும்.” 

“அதையெல்லாம் கடையிலே கொண்டு போய்ப் போட்டாச்சு. இப்ப இங்கே ஒன்றும் கிடையாது!” என்று பதில் வந்தது.

இருவரும் ஒரு வினாடி திகைத்து நின்றோம். திலீபன் தன்னுடைய கடைசி நம்பிக்கையை இழந்தவன்போல் முணுமுணுத்தான். ”சரி, நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்”. 

நாங்கள் திரும்பும்போது பயில்வானின் மனைவி காய்கறிகளுடன் அங்கு தோன்றினாள். “இவங்க யாரு? இவுங்களுக்கு இன்னா வேணும்? சர்க்கஸ் கொட்டாய் வச்சு நடத்தறாங்களா?” என்றாள். 

பயில்வான் அவளிடம், “சும்மா உன் வேலையைப் பார்த்துட்டு விழுந்து கிடப்பியா? இவுங்களாவது சர்க்கஸ் கொட்டாய் வச்சு நடத்துறதாவது! நமக்கு முன்னாடி வாடகை கொடுத்துட்டு இந்த ஊட்லே குடி இருந்தவங்க!” என்றான். 

அவளுக்கு எங்கள் மீதிருந்த மதிப்பு மறைந்து விட்டது. “அய்யே! அம்புட்டுத்தானா! கண்ட்ராக்ட்டு ஆளுங்கண்ணு நெனச்சேன். இன்னா வேணுமாம் இவுங்களுக்கு?” 

“பரணிலே ஏதோ பழைய காயிதம் சாக்கிலே கட்டி வச்சிருந்தாங்களாம். அதைப் பார்க்கணுமாம். அதைக் கடையிலே போட்டுட்டேண்ணு சொல்லிட்டிருந்தேன்”

“மூதேவி, நீ எங்கே கடையிலே போய்ப் போட்டே? நானில்லே போட்டேன்? அதுவும் பெரிய பொத்தகம் மட்டும்தானே போட்டேன்?”

திலீபன் ஆவலோடு, “அப்படியானால் அந்தச் சாக்கிலிருந்த மற்றக் காகிதங்கள் இன்னும் இருக்காம்மா?” என்று மறுபிறவி கிடைததுபோல் ஆவலோடு கேட்டான்.

பயில்வானின் மனைவி எங்களை ஏற இறங்க பார்த்தாள். “இன்னா பணம் கொடுப்பீங்க மூட்டையைப் பார்க்க? அஞ்சு ரூபா தருவீங்களா?”

நான் சிரித்தபடி, “ஐந்து ரூபாய் என்ன, ஆளுக்குப் பத்துப் பத்து ரூபாய் தருகிறேன். மூட்டையைக் காட்டுங்கள்” என்றேன்.

பயில்வானின் மனைவி என்னை ஆச்சரியத்தோடு பார்த்தபடி, “ஏனுங்க, பழைய சாக்குக்கு ரெண்டு பத்து நோட்டை வீசறவங்களா இந்த வீட்லே குடியிருந்தீங்க!” என்றாள். 

இருவரிடமும் பத்து ரூபாயைக் கொடுத்தேன். மனைவி பத்து ரூபாயைத் தன் ரவிக்கைக்குள் செருகிக் கொண்டாள். பயில்வான் ஏணி கொண்டு வந்து மெள்ளப் பரணை நோக்கி ஏறினான். அவன் கால்கள் ஏணியில் ஏறும்போது தடுமாறின. அவன் மனைவி அவனைத் திட்டினாள். 

“நீ சுத்த கப்பைக் கல்லு! உன்னைக் கட்டிகிட்டதுக்கு அந்தத் தையல்காரனைக் கட்டிகிட்டு இருக்கலாம்!” 

பயில்வான் மேல் பரணிலிருந்து ஒரு பழைய சாக்கை எடுத்து வந்து கீழே இறக்கினான். அதைத் திலீபன் அவசர அவசரமாகப் பிரித்தான். அதிலுள்ள காகிதங்கள் நோட் புஸ்தகங்களை எடுத்துத் தரையில் கொட்டினான். தரையில் கொட்டப்பட்டிருந்த குவியல்களிலிருந்து ஒரு பழைய நோட் புஸ்தகத்தை எடுத்தான். எண்ணெய்க் கறை படிந்த அந்த நோட் புஸ்தகத்தில் சிவப்பு மையினால் வரையப்பட்ட சக்கரங்கள் இருந்தன. அந்தச் சக்கரங்களில் வடமொழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. சக்கரங்கள் முக்கோண வடிவாகவும், வட்ட வடிவாகவும் இருந்தன அந்த நோட் புஸ்தகத்தைத் திலீபன் சிறிது நேரம் படித்தபடி இருந்தான். படிக்கும்போது அவனுடைய முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. காகிதக் குவியலில் எதையோ தேடினான். மஞ்சள் துணி முடிச்சு ஒன்றை எடுத்தான். அதை அவசர அவசரமாகப் பிரித்தான். மஞ்சள் துணியின் நடுவே காரீயத் தகடு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. தகடு இரண்டு அங்குல நீளமும் ஓர் அங்குல அகலமுமாக இருந்தது. அதைத் திலீபன் எடுத்துப் பையில் போட்டுக் கொண்டான். அந்தப் பழைய நோட் புஸ்தகத்தை எடுத்துக் கொண்டான். 

“வா அண்ணா போகலாம்.”

இருவரும் தெருவுக்கு வந்தோம். 

“திலீபா, அது என்ன தகடு?” 

திலீபன் அழுதபடியே சிரித்தான். “அந்தத் தகடா? அது அப்பா எனக்கு வைத்துப்போன சொத்து!” என்று சொல்லிவிட்டு, “அண்ணா, நீங்கள் வீட்டுக்குப் போங்கள். நான் என் சிறைச்சாலைக்குப் போகிறேன்,” என்று வேறு திசையில் சென்றான். 

நான் நின்று கொண்டிருந்தேன், திலீபன் சென்ற திசையைப் பார்த்தபடி. 

திலீபன், சிந்தாதிரிப் பேட்டை வீட்டின் வெளிப்புறம் என்னைப் பிரிந்து சென்றபோது எனக்கு ஒரு விஷயம் தெளிவாயிற்று. 

தனது வாழ்க்கைப் பிரசினையை அவன் ஒருவன்தான் தீர்க்க முடியுமே தவிர, நானோ, என் பணமோ. போலீஸ் உதவியோ அதைத் தீர்க்க முடியாது. இப்படி திலீபன் நினைப்பதால்தான் அவன் என்னிடம் எந்தவிதமான விவரமும் கூறாமல், என் உதவியைக் கேளாமல், மனக்கசப்போடு, “என் சிறைச் சாலைக்கு நான் செல்கிறேன்,” என்று சொல்லிச் சென்றிருக்கிறான். 

அது என்ன விதமான சிறைச்சாலை! சுவர் இல்லாமல், இரும்புக் கம்பிக் கதவுகள் இல்லாமல், காவல் வார்டர், ஜெயிலர் இல்லாத ஒரு சிறைச்சாலையை அவனுக்கு ஏற்படுத்தியது யார்? அவன் ஒரு வீட்டில் அடைபட்டு இல்லை. நினைத்த இடத்திற்குச் செல்ல முடிகிறது. ஆனால் விரும்பியதை அவன் செய்ய முடிவதில்லை. சில சமயங்களில் அவன் எண்ணங்கள் அவனுடையதாக இல்லை. ஏன், பேச்சும் நடவடிக்கையும் கூட அவன் ஆளுகையை மீறி இயங்க ஆரம்பித்துவிடுகின்றன. 

எல்லோரையும் ஆட்டி இயக்கும் சக்தியை ஆண்டவன். பரம பிதா, அல்லா என்று மதத்துக்குத் தக்கவாறு கூறுவதுபோல் திலீபனை ஆட்டி வாட்டும் ஒரு தனிக் கடவுளும் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அந்தச் சக்திக்கு ஆனந்தி என்ற பெயர் இடுவதா, இல்லை. மேஜர் மாயநாதன் என்ற பெயரைச் சூட்டுவதா, இல்லை, இவைகளுக்குப் புறம்பாக ஒரு பெயர் இருந்து அதுதான் எனக்குப் புரியவில்லையா? திலீபனின் நிலை எதுவாயினும் அதைச் சமாளிக்க, சிந்தாதிரிப் பேட்டை பயில்வான் குடியிருக்கும் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற பழைய நோட்டுப் புத்தகம் உதவும் என்று திலீபன் நம்புகிறான் என்பது அவன் அந்த நோட்டுப் புத்தகத்தை அணைத்துச் சென்ற விதத்திலிருந்து தெளிவாயிற்று. 

“இதுதான் தந்தை எனக்கு விட்டுச் சென்ற சொத்து.” என்று அவன் சொன்னதிலிருந்து, எண்ணெய்க் கறைபடிந்த அந்த நோட்டுப் புத்தகத்தின் முக்கியத்துவம் புரிந்தது. அந்த வீட்டைத் திலீபனும், அவன் தாயும் காலி செய்தபோது அந்த நோட்டுப் புத்தகம், சாக்கு மூட்டையில் விட்டுச் செல்லப்பட்டதிலிருந்து, உபயோகமில்லாத பழைய பேப்பர் நிலையில்தான் அது இருந்திருக்க வேண்டும் என்று ஊகித்தேன். திடீரென்று, பின் நடந்த சில நிகழ்ச்சிகளினால், அந்தப் பழைய நோட்டுப் புத்தகத்துக்குத் திலீபனின் மனத்தில் அந்தஸ்து உயர்ந்திருக்க வேண்டும். இது குறித்து மீனாட்சி அம்மாளைக் கேட்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. 

வீடு திரும்பியதும் மீனாட்சி அம்மாளிடம் சக்கரங்கள், வடமொழி அட்சரங்கள் நிறைந்த புத்தகத்தைப் பற்றிக் கேட்டேன். என் தந்தைக்கும் அம்மாதிரி புத்தகத்துக்கும் பொருத்தம் இருக்க முடியும் என்றே என்னால் நம்ப முடியவில்லை. என் தந்தை எதிலும் நம்பிக்கை இல்லாது, மந்திரம் தந்திரம், கோவில் இவையெல்லாம் சோம்பேறிகளின் பிழைக்கும் வழி என்று சொல்பவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரிடம் இம் மாதிரி ஒரு நோட்டுப் புத்தகம் இருந்தது என்பதே பொருத்தமில்லாத செய்தியாகப்பட்டது. 

நான் இதைப் பற்றிக் கேட்ட தும் மீனாட்சி அம்மாள் யோசித்து விட்டுப் பதில் சொன்னாள்: ”அவர் கோவில் குளம் போகாதவராகத் தான் இருந்தார். பத்து வருஷங்களுக்கு முன் அவருக்கு நோய் வந்து மாதக் கணக்காகப் படுத்திருந்தார். நானும் திலீபனும் அவரைக் காப்பாற்றப்படாத பாடுபட்டோம். அப்போதுதான் பக்கத்துத் தெருவிலே ஒரு நாடி ஜோசியனிடம். அவர் ஜாதகத்தைக் காட்டினோம். ஜோஸ்யன் ஏதேதோ சொன்னான். ஒன்றும் நம்பும்படியாக இல்லை. பெரிய கதையாக இருந்தது. அவன் படித்த நாடியில் உங்கம்மா குடும்பத்தைப் பற்றியெல்லாம் கண்டிருந்தது. மாமா குடும்பத்திலே யாரோ ஒருத்தர் ஒரு பெண்ணை ஏமாற்றிப் பணம் சம்பாதித்தாராம். அதனாலே தான் உங்கம்மா கஷ்டப்பட நேர்ந்த தாம். உங்க மாமா குடும்பத்துப் பெண்கள் சிறிது கூட இன்பமே இல்லாமல் அழுவார்கள் என்றும். உங்கள் மாமாவின் மூதாதையரால் ஏமாற்றப்பட்ட பெண்தான் மறு பிறப்பில் உங்கப்பாவாகப் பிறந்தார் என்றும் எழுதியிருந்தது. சாந்தி செய்ய வேண்டும் என்று சொல்லி, நூறு இருநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு போனான். உங்கப்பா உடல் சரியான பிறகு அந்த ஜோசியனோடு சுற்றிக் கொண்டிருந்தார். அவன் தொடர்பினாலேதான் சக்கரம் மந்திரமெல்லாம் பற்றிப் படிக்க ஆரம்பித்தார். அதுக்கப்புறம் என்னை அடிக்கிறதைக்கூட ஓரளவுக்கு நிறுத்திக் கொண்டார்”, என்று சொன்னார். 

என் மாமா என்னிடம் சொன்ன அவர் குடும்ப சாபத்தைப் பற்றி நாடி ஜோசியத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது எனக்கு ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் கொடுத்தது. பகுத்தறிவுக்குப் பொருந்தாத விஷயமாகவும் இருந்தது. எது என்னவானாலும் என் தந்தை குறித்து வைத்திருந்த அந்த நோட்டுப் புத்தகம் வேதனைச் சுழலில் சிக்கிய திலீபனுக்கு உதவினால் சரி என்று இருந்தேன். 

இது நடந்த ஒரு வாரத்துக்கெல்லாம், திலீபன் என் வீட்டுக்கு வந்தான். இந்த முறை அவன் சிறிது தெளிவோடும் தைரியத்தோடும் காணப்பட்டான். சில வினாடிகள் என்னோடு பேசினான். 

ஆனால் அந்தச் சிறிய காலத்துக்குள் அவனுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பும் தைரியமும் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று அவன் நடத்தை வெளிப்படுத்தியது. 

“சீதாவை அழைக்கட்டுமா? அம்மாவை அழைக்கட்டுமா?” என்று கேட்டேன். 

திலீபன் தலையை அசைத்து விட்டான். 

“வேண்டாம் அண்ணா அம்மாவோடும் சீதாவோடும் பேசக் கூடிய தகுதி எனக்கு ஏற்படவில்லை. இந்த நிலையில், நான் அவர்களோடு பேச என்ன இருக்கிறது? நான் இங்கு வந்திருப்பதே அவர்களுக்குத் தெரிய வேண்டாம்!” 

“திலீபா, உனக்கு என்ன தான் நேர்ந்திருக்கிறது? ஏன் எல்லாவற்றையும் மூடி வைக்கிறாய்? மனத்திலிருக்கும் பாரத்தை நீ என்னோடு பகிர்ந்து கொள்ளக் கூடாதா? உனக்கு என்மீது நம்பிக்கை இல்லையா?” 

திலீபன் பதில் கூறவில்லை. அழுது விட்டான். 

”அண்ணா! எனக்குத் தெரியாத ஒன்றை எப்படி உனக்குக் கூற முடியும்? ஆனால் நான் இப்போதிருக்கும் நிலையில் சீதாவோடு நெருங்கிப் பழகுவது அவளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் தெரிகிறது. சீதாவை நெருங்க வேண்டும், அவளோடு பேசவேண்டும் என்று எனக்கு எவ்வளவு ஆசை. தெரியுமா? என் ஆசையெல்லாம் அடக்கி வைத்துக்கொண்டு வாழ்கிறேன். நான் இழந்துவிட்டதை நிரந்தரமாகத் திரும்பப் பெற்ற பின்புதான் அவளை நெருங்க வேண்டு மென்றிருக்கிறேன். என்னைப் பிரித்திருப்பது ஒருவித துக்கம். அதை விடப் பயங்கரமான துக்கம் அவ ளைச் சூழ்ந்துகொள்ளும், நான் அவளை இப்போது நெருங்கினால்!” 

திருச்சியில் மாமா இருக்கும் நிலையை விளக்கினேன். 

”அவர் எப்படிப் பித்தம் பிடித்தவர் போல் ஆகி விட்டார் தெரியுமா? அவர் வாழ்வு முடிவதற்குள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் அது உன் கையில்தான் இருக்கிறது. திலீபா!” 

“என் எதிரிகளின் முறைகளைக் கொண்டே அவர்களைத் தடுத்து நிறுத்தப் பார்க்கிறேன் அதில் நான் வெற்றி அடைந்து விட்டால், அன்னை பராசக்தியின் அருளால் அதில் வெற்றி கண்டு விட்டால், நான் மறுபடியும் பழைய திலீபன் ஆகிவிடுவேன். என்னை பற்றி எனக்கு அக்கறையில்லை அண்ணா. அம்மாவுக்காக, சீதாவுக்காக, சீதாவின் தந்தைக்காகத்தான் இவ்வளவு பாடுபடுகிறேன்!” என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறும்போது, அவன் படியில் நின்று என்னை ஒரு கேள்வி கேட்டான்: “அண்ணா, வடமொழி பாண்டித்தியம் உள்ள, மந்திரங்களை நல்ல முறையில் உச்சரிக்கும் ஒரு பண்டிதரின் பெயர் தெரியுமா?” 

“எனக்கு வடமொழியே தெரியாது. அதில் புலமை நிறைந்தவர்களைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? கேட்டு விசாரித்துச் சொல்கிறேன்” என்று சொன்னேன். திலீபன் யோசித்தபடி நின்றான். உடனே என்னை நோக்கி, “நாளை நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நான் திருவல்லிக்கேணியில் உள்ள சுப்பிரமணியசிவம் வீட்டுக்குப் போய் அவரிடம் மந்திரத்தின் உச்சரிப்பைக் கேட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். தயவு செய்து நீ சென்று அவரை எனக்காகக் காத்திருக்கும் படி சொல்லு. எனக்கு இந்த உதவியைச் செய்வாயா?” என்று கேட்டான். 

அத்தியாயம்-39

“நள்ளிரவா! எல்லோரும் தூங்கும் வேளையாயிற்றே. பக லில் போய் அவரைப் பார்க்கக் கூடாதா?” 

“நாளை நள்ளிரவு 12 மணி மிகமிக முக்கியம். அந்த வேளையில் தான் நான் அதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். முதல் முறையாக உச்சரிக்க வேண்டும்!” 

நானும் ஒப்புக் கொண்டேன் திருவல்லிக்கேணிக்குச் சென்று சிவத்தைப் பார்த்தேன். அவர் பெரிய குடும்பஸ்தர் வறுமையில் வாடிக் கொண்டிருந்தார். வீடு நிறைய நபர்கள் நிறைந்திருந்தனர் பருவமடைந்த கல்யாணமாகாத பெண்கள் மூன்று. தவழும் குழந்தை ஒன்று, பள்ளி செல்லும் பிள்ளைகள் இரண்டு. இரவு பன்னிரண்டு மணிக்கு முன்பின் தெரியாதவர்கள் தன் வீட்டுக்கு வருவதையே அவர் விரும்பவில்லை. அவருக்கு நூறு ரூபாய் முன் பணமாகக் கொடுத்து, பின் பணமாக இன்னும் நூறு ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி அவரைத் திலீபனின் திட்டத்துக்கு ஒப்புக்கொள்ள வைப்பதற்குள் பெரும் பாடாகிவிட்டது. 

மறுநாள் இரவு என்ன நடந்தது என்ற விஷயத்தை நான் திலீபனிடமிருந்து தெரிந்து கொள்ளவில்லை. இரண்டு நாள் கழித்து நான் நூறு ரூபாய் எடுத்துக் கொண்டு சிவத்தைப் பார்க்கச் சென்றேன். அவர் என்னைப் பார்த்தவுடனே ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்து விட்டார். “நீர் என்னய்யா மனுஷன் இந்த மாதிரி ஆளையா என் வீட்டுக்கு அனுப்புவது? சுத்த போக்கடா பயலாக இருக்கான்!” 

“என்ன நடந்தது? தயவு செய்து சொல்லுங்கள்”, என்று அவரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.

“காலிப் பயல்! நல்ல பிள்ளை மாதிரி விபூதியும் குங்குமமும் போட்டுக் கொண்டு வந்தான், தேங்காய் பழத்தோடு. நானும் அவனைக் கிழக்கே பார்த்து உட்காரச் சொன்னேன். உட்கார்ந்தான். அவன் காகிதத்திலே ஏதோ சக்கரமும் மந்திரமும் குறித்துக் கொண்டு வந்திருந்தான். அதைப் படித்து அவனுக்கே ஓதி வைத்தேன். அவனும் சாதுவா உட்கார்ந்து கேட்டுக்கொண்டான். அப்புறம் என் வீட்டிலேயே 108 தரம் ஜபம் பண்ண வேண்டும் என்றான். அதுக்கும் சரியென்றேன். இந்தச் சின்ன வீட்டிலே, நடு நிசியிலே, பெண்டுகள் இருக்கிற இடத்திலே உட்கார்ந்து ஜபம் பண்ணுவ தென்றால் சரிப்படாது என்று சொல்லி இருக்க வேண்டும். என் புத்தியை ஜோட்டால் அடிக்கணுமய்யா. ஜோட்டால் அடிக்கணும்! எழுந்து போகிறபோது பெரிய கலாட்டா பண்ணிவிட்டுப் போய் விட்டான்! என் முதல் பெண், கல்யாணம் ஆகாதவளை, ‘கூட வா’, என்று கூப்பிட்டான். என்ன சொக்குப் பொடி போட்டானோ தெரியவில்லை. அவளை அப்புறம் ரூம்லே போட்டுப் பூட்டும்படி ஆகிவிட்டது. அடக்க ஒடுக்கமாக இருந்த பையன், திடீரென்று மாறி விட்டான். கண் கோவைப்பழம் மாதிரி மின்னிற்று. வீடு பூராவும் மல்லிகைப் பூ வாசனை தாங்கவில்லை!” என்று கத்தியதும் ஓடி வந்துவிட்டேன். 


அன்று மாலை. 

மவுண்ட் ரோடில் புத்தகம் வாங்கச் சென்றபோது திலீபன் சிகரெட் பிடித்தபடி நிற்பதைக் கவனித்தேன். உடனே அவனிடம் நெருங்கி, “திலீபா, இது உனக்கே நன்றாக இருக்கிறதா? நல்லவன் போல் பேசி, சிவத்தின் வீட்டுக்கு என்னை அனுப்பினதால் அவரிடம் அரும்பாடு பட்டு உன் சார்பில் எல்லா ஏற்பாடும் செய்தேன். அவர் வீட்டில் இப்படியா நடந்து கொள்வது?!” என்று ஆத்திரம் தீரச் சொன்னேன். 

திலீபன் ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தான். “ராமநாதா! நீதானா என்னைச் சிவத்தின் வீட்டுக்கு அனுப்பியவன்! நீதானா நெருப்புப் போல் எரிக்கும் அந்தப் பாழாய்ப்போன மந்திரத்தை என்னைக் கற்றுக்கொள்ளும்படி செய்தவன்! உன்னை என்ன செய்கிறேன் பார்!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு என்னை அடிக்க வருபவன் போல் நெருங்கினான். 

இதைக் கேட்டதும் எனக்கு ஆத்திரம் வந்தது. “முட்டாள்! உளறாதே! சிந்தாதிரிப்பேட்டைக்கு என்னை அழைத்துப் போய் அந்தச் சக்கரங்கள் வரைந்த பழைய நோட் டுப் புஸ்தகத்தை எடுத்து வந்ததை மறந்துவிட்டாயா? திருவல்லிக்கேணி சாஸ்திரியார் விலாசத்தைச் சொல்லி என்னை அவர் வீட்டுக்கு அனுப்பியது நீ என்பதை மறந்து விட்டாயா?” என்றேன். 

அவன் முகத்தில் இருந்த கோபம் மறைந்தது. அதற்குப் பதிலாக அவன் முகத்தில் சூதும் சூழ்ச்சியும் கலந்த பார்வை படர்ந்தது. 

என்னைப் புன்முறுவலோடு நெருங்கி, “ராமநாதா. இப்போது எல்லாம் புரிகிறது! ஆமாம். சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து நோட்டுப் புத்தகம் எடுத்து வந்தேனா? அதில் சக்கரங்கள் வரைந்திருந்ததா? அது என்ன நோட்டுப் புத்தகம்? எப்படி இருக்கும்? அடையாளம் சொல்ல முடியுமா? எந்த மந்திரம் கற்றுக் கொள்ளச் சிவத்தின் வீட்டுக்குப் போனேன்? எனக்கு எல்லாம் திடீரென்று மறந்து போய் விட்டது!” என்று ஆவலோடு கேட்டான். 

டாக்டர் சண்முகசுந்தரம் சொன்னாரே, திலீபன் ஒரு பிளவு பட்ட மனிதன், ஸ்ப்ளிட் பர்சனாலிடி என்று? அது என் ஞாபகத்துக்கு வந்தது. திலீபன் ஒரு நிலையில் செய்யும் காரியங்களை வேறு நிலையில் இருக்கும்போது மறந்து விடுகிறான் என்பது தெளிவாயிற்று. 

என்னையுமறியாமல் என் மூளையில் ஓர் எண்ணம் எழுந்தது. அந்த நோட்டுப் புத்தகத்தைப் பற்றிய விவரம் இந்தத் திலீபனிடம் கூறியதே தவறு என்று பட்டது. அதைப் பற்றிய அதிகப்படியான விவரங்கள் ஒன்றும் இவனிடம் கூறக் கூடாது என்று தோன்றியது. 

“திலீபா, நீதான் என்னிடம் ஒன்றும் விளக்கமாகக் கூறவில்லையே. நான் எப்படிச் சொல்வேன்? எனக்கு ஒன்றும் புரியவில்லையடா,” என்று சொன்னேன். 

திலீபன் ஆக்ரோஷத்தோடு, “நீ பொய் சொல்கிறாய். உனக்கு எல்லாம் தெரியும். வேண்டுமென்றே நீ என்னிடம் சொல்ல மறுக்கிறாய்,” என்று கூறிவிட்டு மறைந்தான். 

எனக்கு மனமே சலித்துப் போயிற்று. ‘இனி வந்தால் அவனை எந்தவித நம்பிக்கையோ அன்போ காட்டி வரவேற்பதில்லை. அவன் பேசும் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை. ஒரு பைத்தியம் நம்மைப் புகழும்போது நாம் மகிழ்வதில்லை. ஒரு பைத்தியம் நம்மைத் திட்டும்போது நாம் வருந்துவதில்லை.திலீபனை ஒரு பைத்தியமாகவே நினைத்து இருந்துவிடுவது.’ என்ற முடிவுக்கு வந்தேன். நான் எதிர்பார்த்தபடியே திலீபன் ஒரு விடியற்காலை வேளையில், நிற்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் என்னைப் பார்க்க வந்தான். வெளியே இருந்தபடியே என்னை அழைத்தான். நான் போகாமல் இருந்தேன். அவன் கெஞ்சி அழைத்தான். 

அவன்முன் போய் நின்றேன். திலீபனின் முகத்தில் சிறு சிறு கோடுகளாக ரத்தக் கறைகள், காயங்கள் இருந்தன. 

“இவைகளைப் பற்றித்தானே நினைக்கிறாய்? காதல் போர்க்களத்தின் கறைகள்,” என்றான். 

”உன் விஷயத்தில் எதைப் பற்றியும் நினைப்பதில்லை. இனி நினைக்கப் போவதுமில்லை!” என்றேன். 

என்னுடைய உணர்ச்சியற்ற, இரக்கமற்ற பதில், அவனை அசத்தி விட்டது. 

“என்ன விசித்திர உலகம்! என்ன விசித்திரமான சகோதர பாசம்! எப்போது அன்பு பயன்படுமோ அப்போது காட்ட மறுக்கிறார்களே!” என்றான். 

என் மனத்தில் சிறிது கிலேசம் உண்டாயிற்று. அதை நான் காட்டிக் கொள்ளாமல், “உனக்கு உதவி தேவைப்படுமானால் செய்வேன். அதுவும் செய்யக்கூடிய உதவிதானா, அதனால் மற்றவர்கள் பாதிக்கப் படுவார்களா என்பதை உணர்ந்து கொண்டுதான் செய்வேன்”, என்றேன் உறுதியோடு. 

“அண்ணா, நான் என் எதிரிகளோடு போராடி வருகிறேன். அவர்களோடு நான் போராடுவதற்கு எனக்குத் தெம்பு ஏற்பட்டதற்குக் காரணம், நான் திருவல்லிக்கேணி சிவம் வீட்டுக்குப் போனதற்குக் காரணம், ஒரு நோட்டுப் புத்தகம் என்று நினைக்கிறார்கள் என் எதிரிகள். அதைத் தேடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அதன் இருப்பிடம் தெரியாது. ஏனென்றால், அதை அழித்துவிட்டேன் நான். சீக்கிரமே எனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்புகிறேன். சீக்கிரமே அவர்களுக்குப் பணம் கொடுத்து நிரந்தரமாக ஒழித்து விடலாம் என்றும் நினைக் கிறேன். நீ தேவைப்பட்டால் எனக்குப் பணம் கொடுத்து உதவ முடியுமா?” என்றான். 

“எவ்வளவு பணம் தேவைப்படும்?”  

“பத்தாயிரம் போதும்.” 

“என்னிடம் பத்தாயிரம் இல்லை. மாமாவிடம் போய் எப்படிக் கேட்பது?” என்று தயக்கத்தோடு சொன்னேன். 

திலீபனின் முகம் ஏமாற்றத்தால் களை இழந்தது. “இவ்வளவு துன்பம் கொடுத்த நான் உன்னிடம் பணம் கேட்கத் துணிவதே தவறு. வருகிறேன்.” 

எனக்கு வேதனையாக இருந்தது. “நில் திலீபா, நில்! சவுகார் பேட்டையில் எனக்குத் தெரிந்த சேட் ஒருவர் இருக்கிறார். அவரிடம் கடன் வாங்கித் தருகிறேன்”, என்றேன். 

திலீபன், “நடப்பது நடக்கட்டும். என் பொருட்டு நீ கடனாளியாக வேண்டாம், அண்ணா. என்னை மன்னித்துவிடு,” என்று சொல்லி விட்டு என் பதிலுக்குக்கூடக் காத்திராமல் சென்றுவிட்டான். 

திலீபன் என்னிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் கேட்டு விட்டுப் போன காட்சி என் கண் முன்னே நின்றது. ‘அண்ணா, என் பொருட்டுக் கடனாளியாக வேண்டாம்.’ என்று சொன்ன வார்த்தைகள் என் மனத்தில் மோதியபடி இருந்தன. 

திலீபனுக்காக எவ்வளவோ துன்பங்களை அனுபவித்துவிட்டோம் இதுவரை. ஏன் அவனிடம் இத்தனை கடுமையாக நடந்து கொண்டோம்? ‘திலீபா, பணம் தருகிறேன்,’ என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அவனுக்குப் பணத்தைச் சேகரித்து அனுப்பி இருக்கலாமே என்று தோன்றியது. 

வீட்டிலே சீதாவைப் பார்க்கும் போதெல்லாம் திலீபன் என்னிடம் பணம் கேட்டதையும் அதற்கு நான் கொடுத்த பதிலையும் அவளிடம் சொல்லி என் மனத்தின் வேதனைச் சுமையைக் குறைத்துக் கொள்ளலாமா என்றுகூட நினைத்தேன். ஆனால் சீதா என்னைக் கேவலமாக நினைப்பாள் என்ற பயம் என்னைத் தடுத்தது. சொல்லிவைத்தாற் போல் உதகமண்டலம் எஸ்டேட்டின் வருஷ லாபத் தொகை 35,000 ரூபாயை எடுத்துக் கொண்டு எஸ்டேட் கணக்கப்பிள்ளை என்னை வந்து சந்தித்தார். திருச்சியிலிருந்து மாமா அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்துவிடுமாறு சொல்லிவிட்டாராம். பணத்தைப் பெற்றுக் கொண்டதும், இந்தப் பணம் சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தால் திலீபனுக்குக் கொடுத்து உதவியிருக்கலாமே என்று நினைத்தேன். இபோதுதான் என்ன குறைந்துவிட்டது? அன்று மாலையே திலீபனை அடையாறில் சந்தித்துப் பணத்தைக் கொடுத்துவிடுவது என்று தீர்மானித்தேன். 

எஸ்டேட் கணக்கப் பிள்ளை உதகமண்டல எஸ்டேட் விவரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, பேச்சுவாக்கில் மேஜரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். அவருக்கு எந்த அளவுக்கு எங்கள் குடும்ப விவகாரத்தைப் பற்றித் தெரியும் என்று சரியாக விளங்கவில்லை. திலீபன் வீட்டை விட்டுச் சென்றது, சீதாவின் கல்யாணம் தடைப்பட்டது இவை மட்டுமே அவருக்குத் தெரிந்திருக்க முடியும். மேஜரும் ஆனந்தியுமே அதற்குக் காரணம் என்ற விவரங்கள் எல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க முடியாது. 

“ராமநாதன் சார், மேஜர் மாயநாதன் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருந்தார். அவர் பங்களாவைக் குறைந்தபட்ச விலைக்கு ஒரு துரையிடம் விற்றுவிட்டு அடுத்த ரயிலிலேயே கிளம்பிப் போய்விட்டார்”, என்றார். 

மல்லிகையம்மாள் வாழ்ந்த அந்த இல்லம். என் தாயின் முடிவில் பங்கெடுத்துக்கொண்ட அந்த வீடு. திலீபனின் வாழ்க்கையை மாற்றி அமைத்த அந்தப் பயங்கர பங்களா, இப்போது யாரோ வெள்ளையரின் கைக்கு மாறிவிட்டது என்பதைக் கேட்டதுமே எனக்கு அந்தத் துரை மீது பச்சாதாப உணர்ச்சி ஏற்பட்டது. 

“அந்த வீட்டைத் துணிந்து வாங்கிய துரை யார்?” என்று கேட்டேன். 

“யாரோ கல்கத்தாவில் ரயில் வேலையிலிருந்து ரிடையர் ஆன ஆபீசராம். அயலூர்க்காரன். ஆகையால் பணத்தைக் கொடுத்து வாங்கி விட்டான். பாவம். அவன் நன்றாக இருக்கவேண்டும்,” என்று பெருமூச்சு விட்டார் கணக்கப் பிள்ளை. 

அவர் சென்றதும் நான் பிற்பகல் உணவு அருந்திவிட்டுச் சிறிது நேரம் தூங்கப் போனேன். தூங்கி எழுந்ததும் கணக்கப் பிள்ளை கொடுத்த தொகையிலிருந்து பத்தாயிரம் எண்ணி எடுத்துக் கொண்டேன். பணத்தைக் கொண்டு போய்த் திலீபனிடம் கொடுத்துவிட்டு வருவது என்று வாசலுக்கு வந்தேன். அதே சமயத்தில் எங்கள் வீட்டு வரசலில் ஒரு ஜட்கா வந்து நின்றது. ஜட்கா வண்டியில் நம் வீட்டுக்கு யார் வரப் போகிறார்கள் என்று ஆச்சரியத்தோடு பார்த்த படி நின்றேன். வண்டியிலிருந்து திலீபன் இறங்கினான். அவன் கையில் நான் அவனுக்கு உதகமண்டலத்தில் கொடுத்த அதே தோல் பை. ‘ஆர்’ என்ற என் பெயரின் முதல் அட்சரம் பொறிக்கப்பட்ட பை. அவன் பலம் இழந்து வயோதிகன்போல் காணப்பட்டான். முதலில் நான் வாசலில் நின்று கொண்டிருப்பதைத் திலீபன் பார்க்கவில்லை. என்னை அவன் நிமிர்ந்து பார்த்ததும் அவன் உதடுகள் மகிழ்ச்சியால் அகல விரிந்தன. ஒரு கிழவனைப் போல் சிரித்தான். அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. 

என்னை நெருங்கியதும் அவன், “நன்றி ராமநாதா, நன்றி. நான் என்றென்றைக்கும் உனக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் வீடு திரும்பிவிட்டேன்,” என்று சொல்லி என்னை அணைத்துக் கொண்டான். பிறகு என்னைப் பார்த்து, “நீ ரங்கனிடம் கொடுத்து அனுப்பிய அந்தப் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து விடுதலை வாங்கிவிட்டேன். மேஜரும் ஆனந்தியும் என் வாழ்வை விட்டுச் சென்றுவிட்டார்கள்,” என்று வெளியூரில் படிக்கும் பிள்ளை பரீட்சை எழுதிவிட்டு விடுமுறைக்கு வீடு திரும்பும் குதூகலத்தோடு சொன்னான். “இன்று காலைதான் அவர்களை ரங்கூன் செல்லும் கப்பலில் ஏற்றி விட்டு வந்தேன். இனி நான் நிம்மதியாகத் தூங்கலாம். நிம்மதியாகச் சாப்பிடலாம். இழந்த வலிமையை. வருஷங்களை மீண்டும் பெறலாம். பத்தாயிரம் ரூபாய்க்கு நன்றி,” என மறுமுறை கூறியதும் என் குழப்பம் அதிகமாகியது. 

அத்தியாயம்-40

“பத்தாயிரமா ரூபாயா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.

“மறந்துவிட்டீர்களா அத்தான்? அன்று ரங்கனிடம் நீங்கள் பணம் கொடுத்தனுப்பியதை மறந்து விட்டாற்போல் பேசுகிறீர்களே!” என்று கூறிக் கொண்டே சீதா வந்து நின்றாள். 

அவள் காட்டிய ஜாடை, அவள் என்னைப் பார்த்த பார்வை, ‘பத்தாயிரம் ரூபாய் கொடுத்ததாக ஒப்புக் கொள்ளுங்கள்,’ என்று என்னைக் கெஞ்சுவதாக இருந்தது. 

இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று புரிந்து கொண்டு நானும், “ஆமாம், ரங்கனிடம் அனுப்பியதை நான் மறந்தே போனேன்.” 

உடனே திலீபன், “உன்னைப் போன்ற நல்லவர்கள் அவர்கள் செய்யும் நன்மையை மறந்துவிடுகிறார்கள். மற்றவர்கள் செய்யும் தீமையையும் மன்னித்து மறந்துவிடுகிறார்கள்,” என்று கூறிவிட்டுச் சீதாவைப் பார்த்தான். “சீதா! நான் அம்மாவைப் பார்க்கவேண்டும்!” என்று சொல்லி வீட்டினுள் சென்றுவிட்டான். 

சீதாவும், நானும் மட்டும் நின்று கொண்டிருந் தோம். சீதா தலை குனிந்தபடியே, “அத்தான், அவர் அன்று வீட்டு வாசலில் நின்றுகொண்டு உங்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது நான் வந்தேன். மறைவிலிருந்தபடி அவர் உங்களைப் பணம் கேட்டதையும் அதற்கு நீங்கள் சொன்ன பதிலையும் கேட்டேன். அவர் மனமுடைந்து. ‘என்பொருட்டுக் கடனாளியாக வேண்டாம்,’ என்று சொல்லிப் போனதையும் கேட்டேன். என் மனதில் ஏதோ ஒரு குரல் சொல்லியது. இம்முறை அவருக்கு உதவி செய்தால் அவர் தப்பி மீண்டுவிடுவார் என்று. ஆனால் அவருக்கு நான் பணம் கொடுத்தனுப்பியதாகத் தெரிந்தால், ஒருவேளை வாங்க மறுத்தாலும் மறுத்துவிடுவார் என்ற பயமும் இருந்தது. ஆகையால், ரங்கனைப் பிடித்து அவனிடம் நீங்கள் கொடுத்தனுப்பியதாகச் சொல்லி, பணத்தைக் கொடுத்தனுப்பினேன். உங்கள் பெயரை உபயோகப்படுத்தியதற்கு மன்னித்து விடுங்கள்”, என்றாள். 

“இவ்வளவு பெரிய தொகை உன்னிடம் ஏது சீதா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். 

அவள் வாய் திறந்து பதில் சொல்வதற்குள் அவள் தோற்றம் எனக்குப் பதில் அளித்துவிட்டது. அவள் காதுகளைப் பார்த்தேன். அவை மூளியாக இருந்தன. திலீபன் அவளை மணக்கப் போகிறான் என்று தீர்மானிக்கப்பட்ட நாள் முதல் சீதாவை உற்றுப் பார்ப்பதை நிறுத்தி விட்டதால், அவள் நகைகள் இல்லாமல் இருந்ததைக் கடந்த சில நாட்களாகக் கவனிக்க வில்லை. 

சீதா பூமியைப் பார்த்தபடியே, “என் வளையல்கள், வைர மாலை, தோடு எல்லாவற்றையும் கடையில் அடகு வைத்துவிட்டேன் அத்தான்”, என்றாள். 

என் உள்ளம் உணர்ச்சியால் குமுறியது. “நீ வீட்டை விட்டு வெளியே போய் எதுவும் வாங்கி அறியாதவளாயிற்றே சீதா! எப்படி அடகுக் கடையைக் கண்டுபிடித்தாய்?” 

“தேவை வழிகாட்டியது அத்தான். தயவு செய்து அப்பாவிடம் இதைச் சொல்லிவிடாதீர்கள். நான் அடகுக் கடைக்குச் செல்லும் நிலை வந்தது என்று தெரிந்தால், அப்பா இதயமே நின்றுவிடும் அத்தான்,” 

“வண்டிக்காரன் வீட்டிலே கூட அவன் மனைவியையோ, மகளையோ அடகுக்கடைக்கு அனுப்ப மாட்டார்கள். லட்சாதிபதி ராமலிங்கத்தின் மகள் நீ போகும்படி ஆயிற்றே சீதா!” என்று சொல்லும் போதே துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது. 

சீதாவும் கண்களைத் துடைத்த படியே உள்ளே சென்றாள். நான் பின்தொடர்ந்தேன். அங்கு திலீபன் அவன் தாயின் பாதங்களைத் தொட்டபடி தரையில் விழுந்துகிடந்தான். அவன் தாய் திக்பிரமை அடைந்தவள்போல் மகனைப் பார்த்தபடி நின்றிருந்தாள். 

அன்று முதல் வீட்டின் இருள் மறைந்தது. வாழ்வில் மறுபடி ஒளி வீசத் தொடங்கியது. திலீபன் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. சீதாவிடம் கூட அவன் பேசுவதில்லை. சீதாவும் அவனோடு பேசாமல் ஜாடை அறிந்து அவனுக்கு வேண்டிய உணவும் மருந்தும் அளித்து வந்தாள். திலீபனின் உடலில் சிறிது சிறிதாக மாறுதல் ஏற்பட்டு வந்தது. அவன் கண்களைச் சுற்றி இருந்த கரு வட்டம் மறைய ஆரம்பித்தது. அவன் தோள்கள் பழையபடி உருண்டு திரண்டு பலம் கொள்ள ஆரம்பித்தன. அவன் வெளியே அதிகம் போவதில்லை. 

ஒவ்வொரு ஞாயிறும் செவ்வாயும் கந்தசாமிக் கோயிலுக்குப் போய் வருவான். மற்றத் தினங்களில் காலை ஏழு மணியிலிருந்து பூஜை அறையிலேயே இருப்பான். உணவருந்தும் போது வெளியே வருவான். மறுபடியும் பூஜை அறைக்குச் சென்றுவிடுவான். அவனுடைய வைராக்கிய வாழ்வில்கூட உணவில் மட்டும் ஓர் அம்சம் விசித்திரமாயிருந்தது. பூண்டு சேர்த்த உணவையே அருந்திவந்தான். 

காலக்கிரமத்தில் பூஜை அறை யில் தங்கும் நேரம் குறைந்து வந்தது. ஆனால் அவன் உடலைச் சுற்றி ஒரு நூல் கயிற்றில் கோத்துத் தொங்க விடப்பட்ட காரீயத் தகடு மட்டும் இருந்தது. அதைப் பற்றி நான் கேட்ட போது திலீபன், ”இதுதான் சிந்தாதிரிப்பேட்டை வீட்டில் மஞ்சள் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த தகடு. மேஜரும் ஆனந்தியும் ஊரைவிட்டுச் செல்லும்வரை இதை நான் அடையாறு பிள்ளையார் கோவில் விக்ரகத்தின் அடியில் புதைத்து வைத்திருந்தேன். அவர்கள் போன பின்புதான் எடுத்து அணிந்து கொண்டேன்,” என்று கூறினான். 

திலீபனின் இளமையும், பலமும் திரும்ப ஆரம்பித்த பின்னர், அவன் சீதாவோடு பழையபடி பேச ஆரம்பித்தான். சிரிக்க ஆரம்பித்தான். சீதாவும் அன்று பூத்த மலர்போல் ஒளியோடு விளங்கினாள். அவள் மறுபடியும் கவர்ச்சியான உடை அணிய ஆரம்பித்தாள். அடகுக் கடையிலிருந்து மீட்கப்பட்ட நகைகள் மீண்டும் அவள் உடலை அலங்கரித்தன. 

நான் திலீபனிடம், “என்ன திலீபா! மாமாவுக்கு நான் கடிதம் எழுதிப் போடுகிறேன். மறுபடியும் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்கப் போகிறேன்”, என்றேன். 

திலீபன் யோசித்தபடி இருந்தான். ”பொறு அண்ணா. பொறு! புயல் ஓய்ந்துவிட்டது. உண்மை. ஆனால் இன்னமும் கப்பல் கரை வந்து சேரவில்லை”, என்றான். 

“கப்பல் எப்போது கரை சேரும்?” 

அதற்குத் திலீபன் பதில் ஒன்றும் சொல்லவில்லை. வேதனையோடு நின்றான். பிறகு திடீரென்று என் பக்கம் திரும்பி, “அண்ணா, உன்னிடம் ஒன்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அதை நீ எனக்குச் சத்தியம் செய்து தருவாயா? ஆண்டவன் முன் சத்தியம் செய்து தர்வேண்டும்,” என்று சொல்லி என்னை அழைத்துக் கொண்டு பூஜை அறைக்குச் சென்றான். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. “ஒருவேளை மறுபடியும் சுபாவம் மாறினால், மறுபடியும் இரக்கமற்ற பண்பற்ற திலீபனாக மாறினால்…” என்று சொல்லி நிறுத்தினான். 

“அது இனி ஏற்படப்போவதில்லையே!” என்றேன். 

திலீபன், “அது இனி ஏற்படாது. இருந்தாலும், அம்மாதிரியான ஒரு நிலை ஏற்பட்டால், நீ உடனே என்னை நல்ல பாதுகாப்புள்ள பைத்திய ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பூட்டி வைத்துவிட வேண் டும். கொஞ்சமும் இரக்கப்படக் கூடாது. இந்த விஷயத்தில் கொஞ்சம்கூட காலதாமதம் செய்யக்கூடாது. சீதா தடுத்தாலும், என் தாய் தடுத்தாலும் சரிதான். இன்னொன்று நான் மாறுபட்ட சுபாவத்தில் இருக்கும்போது, நீ என் கண்களைப் பார்த்து என்னுடன் பேசாதே. என் கண்களைப் பார்க்கவே பார்க்காதே. சத்தியமாக நீ நான் சொன்னபடி செய்வாயா? சத்தியம் செய்து கொடு அண்ணா. சத்தியம் செய்து கொடு”, என்று வற்புறுத்தினான். 

நானும் ஆண்டவன் சாட்சியாகச் சத்தியம் செய்து கொடுத்தேன். சத்தியம் செய்து கொடுத்தபின்பு அதற்குத் தேவை இருந்ததாகத் தெரியவில்லை. திலீபன் உடலும் மனமும் முன்னேறிக்கொண்டே வந்தன. அவன் வாழ்க்கையில் விபரீத நிகழ்ச்சிகள் நடந்து சென்றன என்றே யாராலும் சொல்ல முடியாத அளவிற்கு அவன் மாறிவிட்டான். வீட்டின் நிர்வாகத்தை அவனே ஏற்று நடத்த ஆரம்பித்தான். சீதாவோடு அடிக்கடி வெளியே சென்று வந்தான். ஆனால் அவன் கார் மட்டும் ஓட்டுவதில்லை. வீட்டு டிரைவர் தான் கார் ஓட்டிச் செல்வான். 

ஒருநாள் சீதாவும் திலீபனும் மாமல்லபுரத்திற்குப் பொழுதுபோக்காகப் பிக்னிக் சென்றார்கள். அவர்கள் திரும்பி வரும்போது இரவு மணி 9 ஆகிவிட்டது. சீதாவின் சிரிப்பொலி என் அறையில் கேட்டது. குதூகலத்தோடு காணப்பட்டாள். அவளும் திலீபனும் உணவருந்திவிட்டு மாடிக்கு வந்தனர். சீதா அவள் அறைக்குப் படுக்கச் சென்றுவிட்டாள். திலீபன் மட்டும் என் அறைக்கு வந்தான். நான் அவனைப் பார்த்தேன். “என்ன திலீபா. இன்று உன் முகத்தில் புது ஒளி காண்கிறதே!” என்றேன். 

திலீபன் சிரித்தான். ”உணவும் ஓய்வும் வெகு சீக்கிரத்தில் உடலை மாற்றி அதற்கு வலுவைக் கொடுத்துவிடுகின்றன. வலு ஏற்பட்டதும், உடல் தன்னை அழித்துக் கொள்ளத்தான் ஆசைப்படுகிறது. மிருக இச்சைகள் தானே எற்படுகின்றன. ஆக்க வேலை. அதைத் தொடர்ந்து அழிவு வேலை, மறுபடி யும் அழிந்த பகுதிகளைச் செப்பனிட்டு ஆக்கிக் கொள்வது, மீண்டும் அழித்துக் கொள்வது என்ற மீளாத ஒரு சக்கரம் உடலின் போக்கு,” என்று சொன்னான். 

“உன்னிடம் தத்துவம் பேச எனக்கு இப்போது உடலில் வலுவில்லை. நான் தூங்கப் போகிறேன்,” என்று சொல்லிவிட்டு நான் படுக்கையில் படுத்தேன். 

திலீபன் என்னைப் பார்த்து ஒருமுறை சிரித்துவிட்டுத் தன்னுடைய அறைக்குச் சென்றான். நான் விளக்கை அணைத்துவிட்டுப் படுத்து விட்டேனே தவிர, தூங்கவில்லை. ஏதேதோ சிந்தித்தபடி படுத்திருந்தேன். அறைக்கு வெளியே யாரோ நடந்து செல்லும் சப்தம் கேட்டு என் காதுகள் அந்தச் சப்தத்தைப் பின் தொடர்ந்தன. பிறகு சீதாவின் குரல் கேட்டது. திலீபன் குரல் கேட்டது. ஆனால் வார்த்தை ஒன்றும் விளங்கவில்லை. நான் எழுந்து அறைக்கு வெளியே வந்தேன். சீதாவின் அறை கதவு திறந்திருந்தது. அவர்கள் பேச்ச என் காதுகளில் விழுந்தது. “வேண்டாம் சீதா. வேண்டாம்.” 

“பரவாயில்லை. அன்று ஒரு நாள் நீங்கள் அழைத்தபோது நான் வந்திருந்தால், இவ்வளவு துயரமும் துக்கமும் வந்திருக்காதல்லவா?”

“ஐயோ சீதா! அன்று நான் உன்னை அடைந்திருந்தால் ஒரு புனிதமான பிரம்மசாரியாக, புது மலருக்கு வரும் புது வண்டாக இருந்திருப்பேன். இன்று மலர்தான் புதிது.. வண்டு… வண்டு.. சீர்கெட்ட வண்டு.” 

“என்றுமே நீங்கள் எனக்குப் புனிதமானவர்தான். நெஞ்ச நிறைந்தவர்தான்”. எனக்கு நிற்கவே கூச்சமாக இருந்தது. நிற்பது தவறாகவும் பட்டது. ஆனால் என்னை அறியாமல் என் கால்கள் நின்றன. என் கண்கள் அறையில் நடப்பதை ஆர்வத்துடன் கவனித்தன.

– தொடரும்…

– உடல் பொருள் ஆனந்தி, குமுதம் வார இதழில் (29-10-1992 முதல்) வெளியான தொடர்கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *