ஒரு தற்கொலையும் இரண்டு காரணங்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 10,184 
 

நரேஷ் தற்கொலை செய்து கொள்வான் என்று எனக்கு முன்பே தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரமாக செய்து கொள்வான் என்றுதான் தெரியவில்லை.

ஒரு வெளிநாட்டு வங்கியில் அவன் கடன் வாங்கியிருந்தான். இந்த‌ விஷயம் எனக்குத் தெரியும். எனக்கு மட்டுமில்லாமல் இந்தத் தெருவில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும். அதை வங்கி என்றும் சொல்ல முடியாது. நிதி நிறுவனம் மாதிரிதான். எப்படியாவது செல்போன் எண்ணைக் கண்டுபிடித்து ஒரு பெண் மிக நைச்சியமாக பேசுவாள். கொஞ்சம் ஏமாந்த சோனகிரியாக சிக்கிக் கொண்டால், ஆளுக்குத் தகுந்த மாதிரி கடன் தருவார்கள். கடன் தருவது என்பதை விட தலையணை வைத்து அமுக்குவது என்று சொல்லலாம். கடனைக் கொடுத்துவிட்டு கழுத்தில் துண்டு போட்டு மிரட்டி வாங்கும் வகையறா. நரேஷ் அவர்களிடம் மூன்று மாதம் முன்பாக பதினெட்டாயிரம் ரூபாய் கடனாக‌ வாங்கினான்.

மூன்று வயதில் ஒரு பையன், ஒரு வயதில் ஒரு பெண்தான் நரேஷ் குடும்பம். மனைவி ஏதோ மில்லுக்கு வேலைக்கு போகிறாள். குழந்தைகளை அவளின் அம்மா வீட்டில் விட்டிருக்கிறார்களாம்.

கடன் வாங்கி ஒரு மாதம் வட்டி சரியாகக் கட்டிவிட்டான் போலிருக்கிறது. அடுத்த மாதத்தில் இருந்து அக்கப்போர்தான். காலையில் பல் துலக்குகிறார்களோ இல்லையோ, கழுத்தில் மப்ளர் மாதிரியான துண்டை போட்டுக்கொண்டு ஏஜென்ஸிக்காரர்கள் வந்துவிடுகிறார்கள். வங்கி பணம் கொடுப்பதோடு சரி. வசூலிக்கும் பொறுப்பு ஏஜன்ஸிக்கு.

கந்துவட்டிக்காரர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை இந்த ஏஜன்ஸிக்காரர்கள். அந்த வீதி அகலறும்படி கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்கள். ப‌த்து நிமிட‌த்தில் கூட்ட‌ம் சேர்த்தும் விடுவார்க‌ள்.டிவியைத் தூக்குவோம், பிரிட்ஜை தூக்குவோம் என்று ஆர‌ம்பித்த‌வ‌ர்க‌ள் இப்பொழுது எல்லாம் ஆளைத் தூக்குவோம் என்றுதான் பேசுகிறார்க‌ள்.

இவ‌ர்க‌ளோடு ஒரு மாதம் இழ‌வெடுத்த‌ க‌ண‌வ‌னும்,ம‌னைவியும் அத‌ன்பிற‌கு ஒவ்வொரு நாளும் விடிந்தும் விடியாம‌லும் முக‌த்தை தொங்க‌ப்போட்டுக் கொண்டு வீதியில் யாரிட‌மும் பேசுவ‌தில்லை. தேற்றுப‌வ‌ர்க‌ளும் ஒருத்த‌ரும் இல்லை என்ப‌தும் கார‌ண‌ம். “ப‌தினெட்டாயிர‌ம் கூட‌ க‌ட்ட‌ கையாலாக‌த‌வ‌னுக்கு எதுக்கு பொண்டாட்டி புள்ளை” என்று சைக்கிள் க‌டை மாரிய‌ப்ப‌ன் பேசிய‌தாக‌வும் அத‌ற்கு ம‌ட்டும் ந‌ரேஷின் ம‌னைவி அவ‌னோடு ச‌ண்டைப் போட்ட‌தாக‌வும் சொன்னார்க‌ள்.

இந்த ச‌னிக்கிழ‌மை காலை ப‌தினோரு ம‌ணிக்கு எல்லாம் ந‌ரேஷ் தூக்கில் தொங்கிவிட்டான். வீதியே திர‌ண்டு விட்ட‌து. இப்பொழுது ஆளாளுக்கு ப‌ரிதாப‌ப் ப‌ட்டார்க‌ள். ந‌ரேஷின் ம‌னைவி க‌த‌றிக் கொண்டிருந்தாள். குழந்தைகளும் பாட்டி வீட்டில் இருந்து வந்துவிட்டார்கள். கூட்டத்தில் எல்லோரும் நிதி நிறுவ‌ன‌ம் ப‌ற்றி பேசிக் கொண்டிருந்தார்க‌ள்.

இதுதான் ச‌மய‌ம் என்று பேச நான் ஆர‌ம்பித்தேன். இர‌ண்டு பிள்ளைக‌ளை வைத்துக் கொண்டு ந‌ரேஷின் ம‌னைவி வாழ்நாள் முழுவ‌தும் க‌ஷ்ட‌ப்ப‌ட‌ வேண்டியிருக்கும். ஏதாவ‌து செய்தால் தேவ‌லாம் என்று ஆர‌ம்பித்தேன்.

ந‌ரேஷின் ச‌ட‌ல‌த்தை வைத்துக் கொண்டு போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ அவ‌னின் ம‌னைவி உட்ப‌ட‌ பெரும்பாலானோர் ஒத்துக் கொண்ட‌ன‌ர். சடலத்தை புதைத்துவிட்டு அப்புறம் கவனிக்கலாம் என்று சொன்னவர்களையும் கூட்டத்தில் யாரோ வாயை அடைத்துவிட்டார்கள்.

ப‌ட்டேல் சாலையில் இருக்கும் நிறுவ‌ன‌த்திற்கு ஆம்புலன்ஸில் சடலத்தை எடுத்துக் கொண்டு போன‌ போது நிறுவ‌ன‌த்தை மூடி இருந்தார்க‌ள். ஏற்க‌ன‌வே த‌க‌வ‌ல் தெரிந்து சில‌ர் வீட்டிற்கு கிள‌ம்பிவிட்ட‌தாக‌வும், சில‌ர் அலுவலகத்திற்குள் அம‌ர்ந்து கொண்டு வெளியில் பூட்டிக் கொண்ட‌தாக‌வும் சொன்னார்க‌ள்.

எது எப்ப‌டியோ உட‌ன் வ‌ந்த‌வ‌ர்க‌ள் க‌ண்ணாடி பெய‌ர்ப்ப‌ல‌கைக‌ள், பூச்செடிக‌ள் என‌ அனைத்தையும் நொறுக்க‌ ஆர‌ம்பித்துவிட்டார்க‌ள். உள்ளுர் தொலைக்காட்சி, போலீஸ் என அந்த இடம் ப‌ர‌ப‌ர‌ப்பாகிவிட்ட‌து. இது சற்றே ‘சென்ஸிடிவ்’ விஷ்யம் என்பதாலும், கூட்டத்தைமிரட்டினால் விபரீதம் ஆகிவிடலாம் என்பதாலும்,போலீஸூம் கூட்ட‌த்தை விட்டுவிட்டார்க‌ள். அந்தக் கட்டிடமே ஒரு வழிக்கு வந்திருந்தது.

மூன்று மணி நேரத்திற்குப் பின்பாக நிதி நிறுவ‌ன‌த்தின் ஆட்க‌ள் போலீஸ் ப‌ந்தோப‌ஸ்துட‌ன் வ‌ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் நடந்த தவறுகளுக்கு ம‌ன்னிப்பு கேட்ப‌தாக‌வும், நரேஷ் குடுமபத்துக்கு ப‌த்து இல‌ட்ச‌ம் வ‌ரை ப‌ண‌ம் த‌ருவ‌தாக‌வும் பேரம் பேசினார்க‌ள்.

இரண்டு மணி நேர பேச்சு வார்த்தைக்குப் பிறகு‌ இரு குழ‌ந்தைக‌ளுக்கும் த‌லா ஏழ‌ரை இல‌ட்சம் ரூபாயை நிர‌ந்த‌ர‌ நிதியில் வைக்க‌ வேண்டும் என்றும், ந‌ரேஷின் ம‌னைவி பெய‌ரில் ஐந்து இலட்ச‌ம் ரூபாய் த‌ர வேண்டும் என்றும்‌ முடிவு எட்ட‌ப்ப‌ட்ட‌து. சாவை மீறிய‌ ச‌ந்தோஷ‌ம் எல்லோருக்கும் ப‌ட‌ர‌த்துவ‌ங்கிய‌து.
_____________
நான் இந்த‌த் தெருவிற்கு குடி வ‌ந்து எட்டு மாத‌ங்க‌ள் ஆகிற‌து. திரும‌ண‌ம் ஆகாத‌வ‌னுக்கு வீடு த‌ருவ‌தில்லை என்ற‌ அம‌லாக்க‌ப்ப‌டாத‌ ச‌ட்ட‌த்தின் கீழ் எல்லோரும் ம‌றுத்துவிட‌, ந‌ரேஷின் வீட்டு ஓன‌ர் ம‌ட்டும் அவ‌ர்க‌ளின் அருகில் இருந்த‌ ஒரு போர்ஷ‌னைக் கொடுத்துவிட்டார். ஆஸ்பெஸ்டாஸ் கூரைதான் என்றாலும் மின்சார‌ வ‌ச‌தி இருக்கிற‌து. நான் ட்யூப்லைட் வைத்துக் கொள்ள‌வில்லை.

க‌க்கூஸ் என‌க்கும், ந‌ரேஷ் வீட்டிற்கும் த‌னித்த‌னி. ஆனால் பாத்ரூம் ஒன்றுதான். காலையில் ஐந்திலிருந்து ஆறு ம‌ணி வ‌ரைக்கும் த‌ண்ணீர் வ‌ரும். வாளிகளில் பிடித்து நிர‌ப்பி வைத்துக் கொள்ள‌வேண்டும். ஏமாந்துவிட்டால் குளிப்ப‌த‌ற்கு ம‌ட்டும‌ன்று வேறு எத‌ற்குமே த‌ண்ணீர் இருக்காது. ச‌னி,ஞாயிறு ஊருக்குப் போனால் தண்ணீருக்கு வேண்டியே ஞாயிறு இர‌வு வ‌ந்து சேர்ந்துவிடுவேன்.

இரண்டு மாதங்களில் என‌க்கும் ந‌ரேஷின் ம‌னைவிக்கும் ப‌ழ‌க்க‌ம் வ‌ந்துவிட்ட‌து. ப‌ழ‌க்க‌ம் என்றால் உங்க‌ள் ம‌ன‌தில் என்ன‌ தோன்றுகிற‌தோ அந்த‌ப் பழ‌க்க‌ம்தான். கொஞ்ச‌ நாட்க‌ளில் எல்லாம் ந‌ரேஷ் க‌ண்டுபிடித்துவிட்டான் போலிருக்கிற‌து. அவ‌ளைத் திட்டியிருக்கிறான்.

இதை நரேஷ் வெளியில் யாரிட‌மும் சொல்வ‌தில்லை. என்னிட‌ம் கூட‌ காட்டிக் கொள்ள‌வில்லை. தினமும் காலையில் நானும் அவனும் தண்ணீர் பிடிக்கும் போது வழக்கம் போலவே தான் பேசினான். அவ‌ள் என்னிட‌ம் சொன்ன‌ போதெல்லாம் அவ‌னைக் க‌ண்டு கொள்ள‌ வேண்டாம் என்று தைரிய‌மூட்டி என் தேவையை நிறைவேற்றிக் கொண்டேன்.

வெளியிலும் சொல்ல‌த் துணிவில்லாத‌வ‌ன்,முரட்டுத் தனமாக அவளையோ என்னையோ மிரட்டத் தெரியாதவன், அவ‌னாக‌வே வாழ்க்கையை முடித்துக் கொண்டான்.

எல்லோரும் கடனுக்காக இறந்தான் என்று நினைக்கிறார்க‌ள். நான் என்னால் இற‌ந்தான் என்று நினைக்கிறேன். இற‌ந்த‌வ‌னைத் த‌விர்த்து யாராலும் கார‌ண‌ம் க‌ண்ட‌றிய‌ முடியாது என்ப‌தால் நீங்க‌ளும் ஒரு கார‌ண‌த்தை க‌ண்டுபிடித்துக் கொள்ளுங்க‌ள். கார‌ண‌ம‌ற்ற‌ சாவு மிக‌க் கொடூரமானதும், துக்க‌க‌ர‌மான‌தும் இல்லையா?

– அக்டோபர் 30, 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *